Thursday, January 30, 2014

டங்டங் டிகடிக டங்டங்

டங்டங் டிகடிக டங்டங்


                திடுக்கிட்டு எழுந்தேன். டக் டக், டக் டக் என்று ஒரே சீரான ஒலி வீட்டின் மேற்புறத்தில் கேட்க, எனது எல்லாப் புலன்களும் விழித்துக் கொண்டன. டிங் டங் டிங் டங் என்ற சத்தம் கேட்க, அதிர்ந்து திரும்பிப்பார்த்தேன். எங்கள் வீட்டுப் பழைய பெண்டுலம் கடிகாரம் 2 தடவை அடித்து ஓய்ந்தது. ஓ இரவு 2 மணி ஆகி விட்டது.
          டக்டக் டக்டக் என்று மறுபடியும் அதே ஒலி. நான் முன்ஹாலில் மரக்கட்டிலில் படுத்திருக்க, என் தம்பிகள் மனோவும், பாசுவும் கீழே படுத்திருக்க, என் அம்மா மறுபுறம் படுத்திருந்தார். உள்ளிருந்த ரேடியோ ரூமில் இருந்த இரும்புக் கட்டிலில், என் அப்பா படுத்திருந்தார். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
          உன்னிப்பாக கவனித்த போது, வீட்டின் மேல்புறத்தில் மொட்டை மாடியையும், எங்கள் வீட்டையும் இணைக்கும் கதவில்தான் சத்தம் கேட்டது. ஒரு வேளை பேயாக இருக்குமோ? என்ற பயம் வர, இருக்காது இது திருடன்தான் என்று பட்சி சொன்னது.. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்கு நான்தான் பெரியவன். சாகசங்கள் செய்யத்தூண்டும் டீனேஜ் பருவம். என்ன செய்தாலும் அதுவரை அப்பாவின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் தான் ஆளாகினேன் தவிர பாராட்டு, ம்ஹீம் மருந்துக்கூட கிடைக்கவில்லை.
          முந்தின நாள் படித்த முத்து காமிக்சின் "மஞ்சள் பூ மர்மத்தில்" சாகசங்கள் செய்யும் லாரன்ஸ் & ஜூடோ டேவிட் கண்முன் தோன்றி உற்சாகப்படுத்தினர்.
          ஒரு முறை என்னைக் கிள்ளிப் பார்த்து, அது கனவல்ல என்று உறுதி செய்து கொண்டேன்.
          மறுபடியும் சத்தம் கேட்டது. நிச்சயமாய் யாரோ திருடன் மொட்டைமாடியின் கதவைத் திறக்க முயற்சி செய்கிறான். நிசப்தமான இரவில் அந்தச் சத்தம் பெரிதாகவே கேட்டு என்னுடைய இதயத்துடிப்பை அதிகரித்தது.
          அப்பாவை எழுப்பலாமா? என்று ஒரு நினைவு தோன்ற, என்னுள் இருந்த சாகச வீரன், வேண்டாம் என்று தடுத்து சொந்தமாய் ஏதாவது முயற்சி செய்யத்தூண்டினான்.
          நான் மெதுவாகக் கட்டிலிலிருந்து இறங்கி துப்பறியும் சங்கர்லால் எப்படி தன் "ரப்பர் நடையணிகள்" மூலம் சத்தம் செய்யாமல் நடப்பாரோ, அப்படியே முன்னங்கால்களால் நடந்தேன். படுத்திருந்த அம்மாவின் பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியிலிருந்த (Easy chair) கம்பை உருவினேன். எவ்வளவு முயன்றும் சத்தம் கேட்காமல் எடுக்கமுடியவில்லை.
          கொஞ்சம் நேரமாக மேலிருந்து சத்தம் கேட்கவில்லை. நான் கம்பை எடுக்க எழுப்பிய சத்தத்தில் ஒருவேளை திருடன் உஷாராகி விட்டானோ? என்ற சந்தேகம் எழுந்தது.
          சிறிது நேரம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருக்க, டொக் டொக் டொக் டொக் என்று சத்தம் மறுபடியும் தெளிவாகக் கேட்டது.கம்பை இறுக்கப்பிடித்துக் கொண்டு உஷாராக நின்றேன். இறங்கி வந்தால் ஒரே போடு. அதோடு மேலிருந்து வைக்கோல் கொத்து கொஞ்சம் கீழே விழுந்தது. "சுசி, நம்ம சேகர் ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளைடி", என்று என் அப்பா பெருமையாக என் அம்மாவிடம் சொல்வது போல் வந்த கற்பனை மகிழ்ச்சியையும் புன்முறுவலையும் வரவழைத்தது.
          "சேகர் உனக்கு என்னடா பரிசு வேணும்னு”, எங்கப்பா கேட்டால், “இந்த கோகுலம் பத்திரிகைக்கு சந்தாதாரர் ஆக்கிவிடுங்கள்," என்று கேட்க முடிவு செய்தேன். ஆமாம் ஒவ்வொரு தடவையும் முத்துரெங்கனிடம் ஓசி வாங்க வெட்கமாக இருக்கிறது.
          அதோடு தேவதானப்பட்டி போலிஸ் சப் இன்ஸ்பெக்டர், என் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது, ஊர் மக்கள் என் அப்பாவைப் புகழ்வது. என்று வித விதமான கற்பனைகள் வந்து போயின. அது என்ன ஒரு திருக்குறள் வருமே, அவசரத்துக்கு ஞாபகம் வரமாட்டேங்குது. இவன் தந்தை என்னோற்றான் என்று, சரி அத விடு.
          மீண்டும் டக் டக் என்று ஒலி கேட்க, நான் சற்றே மாடிப்படிகள் ஓரத்தில் நகர்ந்து வாகாக நிற்க முயன்றேன். கைகளில் வேர்த்து ஈரமாகி ஈஸிசேர் கம்பில் பிசுபிசுவென ஒட்டியது.
          அப்போது பட்டென ஏதோ உடைந்ததுபோல் ஒரு சத்தம். என் தம்பிகள் இருவரும் சிலிர்த்து அலறி எழுந்தனர், கையில் ஓங்கிய கம்புடன் என்னைப் பார்த்து அவர்கள் மேலும் அலற, எங்கம்மா எழுந்து ,"ஏசுவே ஏசுவே என்னாச்சு" என்று கத்த, "என்னடாது சத்தம்”, என்று உறுமிக் கொண்டு வந்தார் "எம்டன்" அப்பா. அவர்  வந்து லைட்டைப் போட்ட பின்தான் தெரிந்தது, படியருகில் குடிக்க வைத்திருந்த மண்பானைத்தண்ணீரை நான் தெரியாமல் தட்டி விட்டிருக்கிறேன் என்று. அந்த ஜில் தண்ணி உருண்டோடி என் தம்பிகளின் தலையணையையும் பாயையும் நனைத்ததால் அவர்கள் எழுந்துவிட்டிருந்தனர்.
          கம்பும் கையுமாக நின்ற என்னைப் பார்த்து என் அப்பா ஒன்றும் புரியாமல், "என்னாச்சுரா?”, என்று கேட்டார்".
          "உஷ் சத்தம் போடாதீங்க என்று லைட்டை ஆஃப் செய்தேன். என் தம்பிகள் அம்மாவிடம் ஒண்ட, என் அப்பாவிடம் குசுகுசுன்னு மேலே திருடன் இருப்பதைச் சொன்னேன். அவர் மெதுவாக உள்ளே சென்று பீரோவில் பத்திரமாய் வைத்திருந்த தன் பிரத்யேக, பளபள எவரடி எவர்சில்வர் டார்ச் லைட்டை எடுத்து வந்து மேலே அடித்தார்.
          அங்கே பார்த்தால் ஒரு மாடப்புறா உட்கார்ந்து கொண்டு மரக்கதவில் தன் அலகால் கொத்திக் கொத்தி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அலகை சுத்தம் செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அதன் கூட்டிலிருந்துதான் வைக்கோல், குப்பையெல்லாம் விழுந்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன். (ஓஹோ .இந்த பட்சி சொன்னதுன்னு சொன்னியே அது இந்தப்பட்சிதானா)
 
          "என்னை முறைத்துப் பார்த்த என் அப்பா, “சரிசரி எல்லாம் படுங்க”, என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். முறைத்துப்பார்த்தாரா இல்லை கேவலமாக பார்த்தாரா  என்று இருட்டில்  சரியாகத் தெரியவில்லை (ரொம்ப முக்கியம்)

        என்னுடைய வீரத்தைக்காட்ட முயன்று இப்படி விகாரமாகப் போச்சேன்னு மனம் குன்றிப்போச்சு. ராத்திரிபூரா தூங்காம, காலைல வெள்ளன எழுந்துரிச்சு, என் தம்பிகள்ட்ட, "யாருக்கும் சொல்லாதீங்க", என்று சொல்லிவைச்சேன். குளிச்சுட்டு தலைதுவட்டிக் கொண்டே வந்தபோது பேச்சுக்குரல் கேட்டது. தன் வீட்டில் காய்த்த முருங்கைக்காய்களை வாத்தியார் வீட்டுக்கு கொடுக்கும் நோக்கத்தில் வந்த மகேந்திரனிடம் என் அம்மா விலாவரியா நடந்ததை சொல்லிட்டிருந்தாங்க. நீங்களே சொல்லுங்க பின்ன எப்படி மகேந்திரன் என்னை மதிப்பான்?.

முற்றியது 

Monday, January 27, 2014

தலைவனும் தலைவியும் !!!!!!!!!!!

தலைவனும் தலைவியும் !!!!!!!!!!!

அடியேன் எழுதிய   கவிதை ஒன்று நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.படித்து  உங்கள்  கருத்துக்களை சொல்லுங்களேன் .
 கவிதை வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://venkatnagaraj.blogspot.com/2014/01/17.html

காரைக்குடி பயணம் பகுதி 2: மருதுபாண்டியர்கள் மன்னர்களா ? இல்லையா ?


   திருப்பத்தூர் வந்து மெயின்ரோடு அருகிலேயே இருந்த ஓட்டலுக்கு மன்னிக்க பழக்கதோஷம், ரெஸ்டாரன்டுக்குப் போனோம். ஒரு பெரிய ஹால் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தது. இடம் கிடைக்க பத்து நிமிடங்கள் ஆயிற்று. சர்வர் விரலை உள்ளே விடாமல் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார் (ஹும் பார்றா திருந்திட்டாங்களா?) ."என்ன இருக்கு", என்ற  எட்வினின்  வழக்கமான கேள்விக்கு, “இட்லி, தோசை, ஊத்தாப்பம், பூரி, வடை பொங்கல்", என்று அடுக்கினார். வாயில் நீர் ஊற, "ஒவ்வொரு வகையிலும் ரெண்டு கொண்டு வா", என்று சொல்லி............... சாப்பிட ஆசையிருந்தது. ஹும், அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே.  இந்த பாழாய்ப்போன வயிறு ரெண்டு இட்லிக்கே ஃபுல் ஆயிடுது. பூரி சாப்பிட்டு நாளாச்சுன்னு நெனைச்சு எனக்கு பூரிக்கிழங்கு ஆர்டர் செய்தேன். பூரிக்கிழங்கை பார்த்தவுடன் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். எப்படின்னு கேட்கறீங்களா? வெங்காயம் விலை அதிகம்னா, கிழங்கு அதிகமாயிருக்கும். கிழங்கு விலை அதிகம்னா, வெங்காயம் அதிகமாயிருக்கும், வெரி ஸிம்ப்பிள்.
        உண்டு முடித்து எட்வின், வட்ட கப்பில் டிகிரி காஃபி சாப்பிட்டார். எனக்கு அந்தப் பழக்கமில்லாததால் (காஃபி டீயும் குடிக்க மாட்டியா, நீயெல்லாம் உயிரோடு இருந்து என்ன செய்ய என்று மதுரைத்தமிழன் கூறுவது காதில் விழுகிறது) கவனமாக வாங்கிய பிஸ்லரி தண்ணீரை குடித்துவிட்டு வெளியே வந்தோம்.
        "அண்ணே இங்கே ஒரு கோவில் ரொம்ப விசேஷமாமே, போலாமா?”, என்றேன்.
        "ஆல்ஃபி கோயிலுக்குப் போக நேரமில்லை, இன்னும் ஏராளமாகப் பார்க்க வேண்டியிருக்கு", என்றார். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து, ஆடுபோல தலையாட்டிவிட்டு பின் சென்றேன். கார், ஸ்வீடிஸ் காம்ப்பெளன்டிற்கு வந்து சேர்ந்தது. கொஞ்சம் நடந்து உள்ளே சென்றால் "மருதுபாண்டியர் நினைவுச் சின்னம்" வந்தது.
யார் இந்த  மருதுபாண்டியர்கள் ?

        பலர் நினைப்பதுபோல மருதுபாண்டியர்கள், மன்னர் பரம்பரையில் உதித்தவர்கள் அல்லர். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் படைகளுக்கு தளபதியாக இருந்த, உடையார் சேர்வைக்கு பிறந்தவர்கள்தான் பெரிய மருதுவும் சின்ன மருதுவும். களரி வித்தையில் கற்றுத்தேர்ந்த இருவரும் போர்க்கலையில் சிறந்து விளங்கியதால், ராமநாதபுரம் ராஜா, முத்து விஜய ரகுநாத சேதுபதி இவருக்கு கொடுத்த பட்டம்தான் "பாண்டியர்" என்பது.

        இவர்களுடைய திறமையைக் கேள்விப்பட்ட சிவகங்கை மன்னர் முத்து வடுக நாதத்தேவர், தன்னுடைய படைக்குத் தலைமை தாங்க இவர்களை அனுப்பும்படி ராமநாதபுரம் மன்னரிடம் வேண்டுகோள் விடுக்க, அவரும் அனுப்பி வைத்தார்.
        கி.பி.1722-ல் சிவகங்கைப் படைகளுக்கும் ஆங்கிலேயப்படைகளுக்கும் நடந்த போரில் மன்னர் முத்து வடுகநாதத்தேவர் கொல்லப்பட, அவர் மனைவி ராணி வேலு நாச்சியாருடன் தப்பிய மருதுபாண்டியர், மைசூர் மன்னர் ஹைதர் அலியின் பொறுப்பில் இருந்த திண்டுக்கல் கோட்டையில் அடைக்கலம் புகுந்தனர்.

        ஆங்கிலேயர் உதவியுடன் சிவகங்கையை ஆக்ரமித்திருந்த ஆற்காடு நவாப் அங்கு எட்டு வருடங்களாக இருந்தும், மக்கள் வரிகட்ட மறுத்தனர். இந்த சமயத்தில் ஹைதர் அலி உதவியுடன் 12,000 வீரர்களோடு வந்த மருதுபாண்டியர், ஆற்காட்டின் படையை தங்கள் அதிரடித்தாக்குதலால் முறியடித்து விரட்டியடித்தனர். பின்னர் ராணி வேலு நாச்சியாரை ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். எதிர்த்து வந்த ஆங்கிலப் படையையும் கொல்லங்குடியில் முறியடித்தனர். இது நடந்தது 1789-ல். மருது பாண்டியரின் வீரத்தையும், நேர்மையையும், ஆட்சிப்பொறுப்பையும் கவனித்த ராணி வேலு நாச்சியார், தனக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால்   நாட்டின் எதிர் காலப்பாதுகாப்பு கருதி ஆட்சிப்பொறுப்பை மருதுபாண்டியரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். நாச்சியாரின் உயில்படி, அவரின் மறைவுக்குப் பின்னர், பெரிய மருது அரசராக முடிசூட்டிக்கொள்ள சின்ன மருது சமஸ்தானத்தின் திவான் ஆனார். கி.பி.1783 முதல் 1801 வரை அவர்கள் பொறுப்பில் சிவகங்கை வளமையும் செழுமையும் அடைந்தது.
        கி.பி.1799-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின், அங்குமிங்கும் ஓடித்திரிந்த அவர் தம்பி ஊமைத்துரை, மருதுபாண்டியரிடம் அடைக்கலம் புகுந்தார். இதனைச் சாக்காக வைத்து பெரும் படையுடன் வந்த ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்தனர். பல இடங்களில் நடந்த போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தது. ஆனாலும் சோழபுரத்தில் 1801-ல் நடந்த இறுதிப் போரில் மருதுபாண்டியர் முறியடிக்கப்பட்டு, திருப்பத்தூர் கோட்டையில் தம் மொத்தக் குடும்பத்துடனும்  எஞ்சிய மெய்க்காப்பாளர்களுடனும் (சுமார் 500 பேர்) .தூக்கிலிடப்பட்டனர். அந்த இடத்தில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம்தான் திருப்பத்தூரில் நான் பார்த்தது. சாவிலும் மன்னிப்பு கேட்காமல் ,கம்பீரமாகச் செத்த அந்த மாவீரர்களின் சிலைகள் அவர்களின் அழியாப்புகழை பறைசாற்றியது.
A
        அதே வளாகத்தில் பூட்டப்பட்டு கிடந்த ஒரு பழைய கட்டிடத்தைப் பார்த்தேன். "இதுதான் பழைய ஸ்வீடிஷ் மருத்துவமனை"என்றார் எட்வின். இது சிவகங்கை ராஜா வழங்கிய இடத்தில், சேவை மனப்பான்மையுடன் ஸ்வீடன் நாட்டிலிருந்து 1909-ல் வந்த கண் மருத்துவர் Dr. F. குகல்பெர்க் ( Dr.F.Kugelberg )என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்வீடனிலிருந்து பல டாக்டர்கள் வந்து சேர்ந்து கொள்ள இது சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் முதற்கொண்டு பல பணக்கார செட்டியார் குடும்பங்கள் இவர்களுக்கு உதவி செய்ய, இதே காம்ப்பெளண்டில் ஒரு நர்சிங் கல்லூரியும் பார்வையற்றோர் பள்ளியும் ஆரம்பித்து நடத்தப்பட்டன.

        சுதந்திரத்திற்குப்பின் இந்த நிறுவனங்கள் தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை (TELC)யிடம் ஒப்படைக்கப்பட்டனவாம். அவர்களும் நம்மூர் டாக்டர்களை வைத்து ஆரம்பித்ததில் சிறப்பாகவே  நடத்தினர்.  கருணாநிதி, ஜெயலலிதா அரசியலைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் தொழில்முறை அரசியல்வாதிகள். ஆனால் ஆண்டவன் பேரைச்சொல்லி ஆலயத்தில் நடக்கிற அரசியல் அதைவிட அசிங்கம். திறமையற்ற நிர்வாகம் மற்றும் உள்குத்து அரசியலால் இந்த சிறப்பு வாய்ந்த நிறுவனங்கள் மூன்றும் ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன.

        சோலைபோல மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில் ஸ்வீடன் நாட்டு மருத்துவர்கள் தங்கியிருந்த மாபெரும் பங்களாக்கள் பாழடைந்து கிடந்தன. உள்ளே சென்றால் சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் அதன்பின் இருந்த வரலாற்று மனிதர்களை உள்ளடக்கிய கல்லறையும் இருந்தது.  ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் வழிபாடு நடக்கிறதாம்.

கனத்த மனதுடன் காரில் ஏறி உட்கார்ந்து,” அடுத்து எங்கே” என்றேன் ? “நேராக கரைக்குடிதான்”, என்றார் எட்வின் .

தொடரும்>>>>>>>>>>>>>>>>

Thursday, January 23, 2014

வஞ்சனை செய்வாரடி, வாய்ச்சொல்லில் வீரரடி !!!!!!!!!!!!!


கண்ணதாசனின் 'வனவாசம்' 

        கண்ணதாசனின் வாழ்க்கை  திறந்த புத்தகம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்த அளவுக்கு திறந்த புத்தகம் என்பதை 'வனவாசத்தை' வாசிப்பதின் மூலம் அறிந்து கொள்ளலாம். மறுவாசிப்பிலும், மர்ம நாவலைப்போல் ருசித்தது. பலர், இன்னும் இருக்கும் இந்த அரசியல் தலைவர்களை போற்றியும் அடி பணிந்தும் வணங்கும் சமயத்தில் இவர்களை எல்லாம் தோலுரித்துக் காட்டுகிறார் கவிஞர். திராவிட இயக்க முகமூடியில் இருக்கும் இவர்கள் எல்லோரும் வேஷதாரிகள் என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறார்.

"வனவாசத்திலிருந்து சில ஹைலைட்ஸ்"
1.  1965-ல் வெளியாகி அதன்பின் வானதி பதிப்பகத்தால் 37 முறை மறுபதிப்பு செய்யப்பட்டு, இப்போது கண்ணதாசன் பதிப்பகத்தால் மேலும் நான்குமுறை பதிக்கப்பட்டிருக்கிறது.
2.  எட்டாம் வகுப்பை மட்டுமே முடித்தவர் கண்ணதாசன் என்றால் நம்ப முடிகிறதா?.
3.  பத்திரிக்கைகளில் உதவி ஆசிரியராகவும், ஆசிரியராகவும், சம்பளம் சரியாக கிடைக்காமல் பல நாட்கள்  பட்டினியுமாயிருந்திருக்கிறார்.
4.  வயது வந்தபின் பெற்றோர்களினால் இன்னொரு குடும்பத்திற்கு தத்து கொடுக்கப்படுகிறார். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குடும்பத்தில் இது வழக்கமான  ஒன்றாம்.
5.  விலைமாதர் கலைமாதர் என்று பணம் பறிக்கும் பல மாதர்களிடம் ஏமாந்தும் பெண்களை எப்படித்தான் புகழ்ந்து பாட்டுகள் இயற்றினாரோ.
6.  அதன்பின் புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் சேர்ந்துகொண்டது.
7.  நடிகர் டி.வி. நாராயணசாமி அவர்கள் மூலம்தான் இவருக்கு முதன்முதலாக "சுயமரியாதை இயக்கம்" அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது திராவிடர் கழகம் ஒன்றாக இருந்த சமயம்.
8.  ஒரு ஆரிய திராவிடப்போராட்டமாக பார்ப்பனருக்கு எதிராகவே பேசி இயக்கம் வளர்ந்தது.
9.  அப்போது அண்ணாத்துரை அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்டு மனதைப்பறிகொடுத்து இயக்கத்தில் இணைந்தவர் கவிஞர். குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் வெகுநேரம் கழித்து வருவதை ஒரு டெக்னிக்காகவே அண்ணா பின்பற்றியதை பின்னர் கண்ணதாசன் சாடுகிறார். அதோடு கொள்கைகள் நிறைவேறும் என்ற எந்த நம்பிக்கையுமில்லாமல், வெறுமனே தொண்டர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காகவே பல மேடைப்பேச்சுகள் பேசப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பின்னர் பதவிகள் வந்ததும் கைவிடப்பட்ட 'திராவிடநாடு' கோரிக்கை முக்கியமான ஒன்று.
10.              புரட்சி இயக்கம்போல் காட்டப்பட்டு, சுயநல இயக்கமாக மாறியதை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விளக்குகிறார் கவிஞர்.
11.              கொள்கைகளுக்காக அல்ல, வெறும் புகழுக்காகவும் செல்வாக்குக்காகவும் தானும் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் பட்டதைச் சொல்வதுதான் கண்ணதாசனின் இந்த 'வனவாசம்'.
12.              சேலம் மாடர்ன் தியேட்டரில் வேலையில் இருந்தபோதுதான் எம்.ஜி.யார், எம்.ஜி.சக்ரபாணி,  நெடுஞ்செழியன் ஆகியோர் தொடர்பு கவிஞருக்கு கிடைத்தது.

13.                எம்.ஜி.சக்ரபாணிதான் கருணாநிதியை அறிமுகப்படுத்துகிறார். அவருடைய எழுத்துத் திறமையிலும் பேச்சுத்திறமையிலும் வியந்த கண்ணதாசன் அதன்பின் அவருக்கு மிகவும் நெருங்கிய தோழனானார்.
14.              ஆனால் கொஞ்ச காலத்திலேயே கருணாநிதியின் சுயநலம் வெளிப்பட இருவரும் வெவ்வேறு அணியில் இருக்கிறார்கள்.


15.              இதற்கிடையில் EVK சம்பத்தின் (நம்ம ஏடாகூட இளங்கோவனின் அப்பா) தொடர்பு கிடைக்க, அவருடைய எளிமையும் நேர்மையும் கண்ணதாசனை கவர சம்பத்தின் தலைமையை ஏற்கிறார். மதியழகன், க.ராஜாராம் ஆகியோரும் இந்த அணியில் இருக்க, திமுக இரண்டு அணியாக பிரிகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் அடுத்த அணி. இதிலே அதிக எண்ணிக்கையில் பலம் வாய்ந்த அணி சம்பத்தின் அணி.
16.              அடுத்து கல்லக்குடி போராட்டம். போராட்டக்காரர்கள் மூன்று குழுவாக முறையே கருணாநிதி, இராம சுப்பையா மற்றும் கண்ணதாசன் தலைமையில் பிரிக்கப்பட்டு, அணி அணியாக ரயில் நிலையம் சென்று 'டால்மியாபுரம்' என்ற பெயரின் மேல் கல்லக்குடி என்ற போஸ்டரை ஒட்டவேண்டும். கருணாநிதி தலைமையில் இருந்த முதல் அணியில் யாரும் கைது செய்யப்படவில்லையாதலால், எந்தவித முன்திட்டமும்  இல்லாமல், கருணாநிதி ஒரு நான்கு பேரை கூப்பிட்டுக்கொண்டு தண்டவாளத்தில் படுக்க, உடனடியாக கைது செய்யப்படுகிறார். சிறிது இடைவெளிவிட்டு வந்த இரண்டாவது குழுவும் ரயிலின் முன் படுக்க, உடனே அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இது நடந்தது காலை 9.45 மணிக்கும்  11 மணிக்கும். கண்ணதாசன் தலைமையில் அடுத்த குழு 1.30 மணிக்கு அடுத்த ரயிலை மறிக்க வர, அங்கே ஏராளமானோர் கூடி பதட்டம் அதிகரிக்க, போலிசார் கலெக்டர் ஆகியோர் கடுங்கோபத்தில் இருக்கின்றனர். கூடியிருந்த அனைத்து தொண்டர்கள், ரயிலில் வந்தவர்கள் என 500 பேருக்கு மேல் தண்டவாளத்தில் உட்கார, தடியடி மற்றும் துப்பாக்கிசூடு நடந்து கண்ணதாசன் மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி உள்ளிட்ட மற்றோர் விரைவில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் கண்ணதாசன் குழுவினர் சுமார் 2 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் கல்லக்குடி போராட்டத்தின் புகழ் முழுவதும் கருணாநிதிக்கே சென்றது. திமுக மீட்டிங்குகளில் ஒலிக்கும் , " கல்லக்குடி கொண்ட கருணாநிதி   வாழ்கவே”,ஞாபகம் இருக்கிறதா?
17.              சென்னை மாநகராட்சி தேர்தலில் உயிரைக்கொடுத்து வேலை செய்த கண்ணதாசன் உள்ளிட்டோர் ஒதுக்கப்பட, கடற்கரையில் நடந்த வெற்றிவிழாவில், அண்ணாத்துரை, கருணாநிதியை பாராட்டி கணையாழி கொடுக்க கண்ணதாசன் நொந்து போகிறார். கூட்டம் முடிந்தபின் அண்ணாத்துரையிடம் “ஒரு சொல் பாராட்டுக்கூட இல்லையே”, என்று கேட்டதற்கு அண்ணா சொன்னாராம் " நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு, அடுத்த மீட்டிங்கில் உனக்கும் போட்டுவிடுகிறேன்," என்றாராம். இதுதான் கணையாழியின் ரகசியம்.

18.              இருமுறை நடந்த பொதுக்குழுவில், அண்ணாத்துரை, சம்பத்தின் கையைப்பிடித்து அழுது கெஞ்சி மீண்டும் பொதுச்செயலாளர் ஆனாராம். பின்னர் வேலூரில் நடந்த பொதுக் குழுவில் அண்ணாத்துரை, சம்பத்தை ஓரங்கட்ட சதி செய்கிறார். கருணாநிதியும் அப்போது இருந்த நடிகர்களும் கலாட்டா செய்ய திட்டமிடுகின்றனர். அண்ணாவுக்கு ஆபத்து என்று கதை கட்டப்பட்டதால் ஒரே பரபரப்பு நிலவியது. "உனக்காவது சொத்து சுகம் இருக்கிறது, எங்களுக்கு அரசியலைவிட்டால் வேறு தொழில் என்ன இருக்கிறது”, என்று அன்பழகன் சம்பத்தைக் கேட்டாராம். அன்று பொதுக்குழுவில் ஐம்பதுக்கும் மேல் ஆதரவாளர் துணையிருந்தும் சம்பத் விட்டுக் கொடுத்ததால், ஓரங்கட்டப்பட்டு அரசியலில் காணாமல் போனார். கண்ணதாசனும் அதிலிருந்து அரசியலைவிட்டு முற்றிலும் ஒதுங்கினார்.
       
        இத்தகைய பொய்த்தலைவர்கள்தான் இன்னும் நம் தமிழினத்தலைவர்கள் என்றால் நம் தலையெழுத்தை என்னவென்று சொல்வது. பாரதியின் பாடல்தான் ஞாபகம் வருகிறது.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமன்றி
வஞ்சனை செய்வாரடி, வாய்ச்சொல்லில் வீரரடி.