Thursday, August 29, 2013

யாரடி நீ மோகினி? Part 1: மோகினிப்பிசாசு


மோகினிப்பிசாசு சுத்துதுன்னு ஹாஸ்டல் பூரா ஒரே புரளி. நள்ளிரவில் வெள்ளை உருவமொன்று சலங்கை சத்தத்தோடு ஹாஸ்டலைச்சுத்தி உலவுவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். தென்னந்தோப்புக்கு மறுபக்கமிருந்த பெண்கள் ஹாஸ்டல் வரை இது பரவிவிட்டது. பசங்களுக்கு ஒரே பயம். ஏனென்றால் கிட்டத்தட்ட அனைவருமே சலங்கை சத்தத்தை கேட்டதோடு சிலபேர் மோகினியைப்பார்த்தும் பலபேர் பார்க்காமலும் பார்த்த மாதிரி கதைகட்டி கூடிக் கூடி அதைப் பற்றி பேசினர். மாலை வந்தால் ரூமைவிட்டு வெளியே வரவே பயந்தனர். இரவில் பாத்ரூம் வந்தா என்ன செய்யறதுன்னு, நைட் சாப்பாட்டைக்கூட குறைச்சிட்டாய்ங்க. ராத்திரி வந்தா போர்வையை போத்திக்கிட்டு நெருக்க நெருக்கமா படுத்தாய்ங்க.
ஆனா எனக்கு மட்டும் பயமேயில்லைங்க. ஏன்னு கேக்கறீங்களா ? ஒங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒன்னும் வீரதீரனுமில்லை, வஸ்தாது ஒடம்புமில்லை. அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அதே என்புதோல் போர்த்திய ஒடுங்கிய உடம்பு. அப்ப சதை? ம்ஹும் அதை மட்டும் கேக்காதீங்க. எனக்கு அழுவாச்சி வந்துறும். பின்ன எப்படி எனக்குப் பயமில்லைன்னு கேக்குறீங்களா? நாங்கதாங்க  அந்த மோகினிப் பிசாசு. ஒன்னும் ஆச்சரியப்படாதீங்க, கொஞ்சம் பொறுமையாக்கேளுங்க.
"டேய் நாமளே ஒயின் தயாரித்தால் 
என்ன?" திடீரென்று ஒரு நாள் ஆறுமுகம் கேட்டான். சும்மார்றா  அதெல்லாம் வேலைக்காவாது" இது நான். நான் காந்திகிராமத்தில் பிளஸ்-2 படிக்கும்போது ஹாஸ்டலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் உண்டு. ஒரு புறம் முதிர்ந்த நீண்ட தென்னை மரங்கள், மறுபுறம் ஹைபிரிட் குட்டை மரங்கள். சிறிது ஏறினாலே பறித்துவிடலாம். சுற்றிலும் தோட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலோ என்னவோ என் பள்ளியின் பெயர் “தம்பித்தோட்டம்”. 
இரவு நேரங்களில் சைலன்ட் ஸ்டடி நடக்கும் போது நழுவி, வாட்ச்மேன் கண்களுக்குத்தப்பி, சாப்பிடும் எளனியும், வழுக்கையும் ஆஹா இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று இளநீராவது சாப்பிட்டால்தான் திருப்தி. இந்த ஆறுமுகம் பய ரொம்ப மோசம். திருட்டு எளனி சாப்பிட்டதோடு வாட்ச்மேன் தாத்தாட்ட போய் சாதுவாக "தாத்தா எவனோ களவாணிப்பயக நேத்து எளனி சாப்பிட்டுட்டு மட்டையைப் பரப்பி வச்சிருக்காய்ங்க" என்று கம்பிளைன்ட் செய்வான். நான் ஆறுமுகம் மற்றும் ஜோசப்தான் கூட்டாளிங்க. எல்லா திருட்டு வேலைக்கும் ஆறுமுகம் ஐடியா கொடுப்பான். ஜோசப் நடைமுறைப்படுத்துவான். நான் சைலன்ட் பார்ட்னர்.
அப்பதான் இந்த ஐடியாவை ஆறுமுகம் சொன்னான். "சரிடா செஞ்சு பார்த்திரலாம்ன்ட்டு"  ஜோசப் சொன்னான். நாங்க மூனுபேரும் ஒரு வாரமா பிளான் செஞ்சு, தென்னந்தோப்புல மோகினி சுத்தறதா வதந்தியைக் கிளப்பினோம். அதை உண்மையாக்க சனிக்கிழமை ஃப்ரீ டைம் விடும்போது, சின்னாளபட்டி சந்தையிலே மாட்டுச்சலங்கையை வாங்கிவந்தான் ஜோசப். எல்லாரும் தூங்கினப்புறம், ஆறுமுகம் கைலியைப்  போர்த்திக்கிட்டு சலங்கையை ஆட்டிக்கிட்டே ஹாஸ்டலைச் சுத்தி வந்ததோடு வாட்ச்மேன் தாத்தா குடிசையையும் சுத்தி வந்தான். ஹாஸ்டல் மொத்தமும் பயத்துல நடுங்கிட்டு இருந்துச்சு. தெரியாம நைட்ஷோ போவதுகூட நின்னுபோச்சு. வாட்ச்மேன் தாத்தா முதல்ல தைரியமா இருந்தாலும், அவர் பொண்டாட்டி ரொம்ப பயந்து, அவரையும் வெளியே விடல.

 தொடரும் >>>>>>>>>>

Monday, August 26, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 3 : மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி $$$$$$$$$$

John D Rockefeller .

நுழைவதற்கு முன் ராக்கஃபெல்லர் குறித்த சில அதிசயமான உண்மைகளை கீழே புல்லட் பாயிண்ட்டில் தருகிறேன்.
1) ஜான் டேவிசன் ராக்கஃபெல்லர் ஜூலை 8, 1839ல் ரிச்ஃபோர்டு, நியூயார்க் என்ற டத்தில் பிறந்தார்.
Eliza Davison Rockefeller


2) அப்பா பெயர் வில்லியம் ஏலி ராக்கஃபெல்லர், ஒரு சாதாரண சேல்ஸ் ரெப் . அதனை சாக்காக வைத்து குடும்பத்தினரைக் கவனிக்காது, பல நாட்கள் பல பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டதால், குடும்பப்பொறுப்பு மற்றும் ஆறு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தது அம்மா எலிசா.

3) இரண்டாவதாக  பிறந்த, ஜான் டி ராக்கஃபெல்லர் தன் அம்மாவுக்குத் துணையாக வான்கோழி வளர்த்தும், உருளைக்கிழங்குகள் மற்றும் தின்பண்டங்கள் விற்றும் உதவினார்.

4) சிறு வயதிலேயே ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கடைப்பற்றிய ராக்கபெல்லர் ஓகாயோவில் பள்ளிப்படிப்பு முடித்து, அதன்பின் புக் கீப்பிங் முடித்தார்.

5) கடைசி வரை மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் அவரை அண்டவே இல்லை. அவர் மகனும் அப்படித்தான்.

6) 1855-ல் தனது 16-ஆவது வயதில் உதவிக்கணக்காளராக, தனது முதல் வேலையை ஆரம்பித்து நாள் முழுவதும் உழைத்தார். முதல் சம்பளம் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் மட்டுமே.

7) 1859-ல் சிறிது சிறிதாக தொழில் செய்ய ஆரம்பித்தார். பின்னர் 1866-ல் தன் சகோதரர் வில்லியம் ராக்கஃபெல்லரோடு இணைந்து, 
கிளீவ்லண்டில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை  உருவாக்கினார்.

8) ஜூன் மாதம் 1870-ல் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சில வருடங்களில் அது அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.

9) போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் வாங்கி, தன்  நிறுவனத்தோடு சேர்த்ததால், இது தனிப்பெரும் (Monopoly) நிறுவனமாக உயர்ந்தது.

10) ஆலயத்திற்கு தன்  வருமானத்தில் 10 சதவீதத்தை கொடுத்ததோடு, பல சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டு வாரிக்கொடுத்த வள்ளல் இவர்.


அவர் ஆரம்பித்த பொது நிறுவனங்கள்:

v  சிகாகோ பல்கலைக்கழகம்
v  ராக்கஃபெல்லர் பல்கலைக்கழகம்
v  சென்ட்ரல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம்
v  ஜெனரல் எடுகேஷன் போர்டு
v  ராக்கஃபெல்லர் ஃபெளண்டேஷன்

11) ராக்கஃபெல்லர் குடும்பத்தின் மொத்த மதிப்பு $663.4 பில்லியன் டாலர்கள் (2007 மதிப்பின்படி) பில் கேட்ஸின் மதிப்பு $46 பில்லியன் மட்டுமே (2007 டாலர் மதிப்பின்படி)உலகின் முதல் பணக்காரரை விட இவர்கள் சொத்து ,எத்தனை மடங்கு அதிகம் பாருங்க

12) 1937ல் தன்னுடைய 97-வது வயதில் ராக்கஃபெல்லர் மரித்தார்.

13) ராக்கஃபெல்லர் குடும்பம் சமுதாயப்பணிக்காக வருடத்திற்கு 50 மில்லியனும் அவர்கள் ஃபெளண்டேஷன் மூலமாக வருடத்திற்கு சுமார் 170 மில்லியனும் செலவழிக்கிறார்கள்.

மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி .

இன்னும் வரும் !!!!!!!!!!!!

Thursday, August 22, 2013

இருபதாவது இல்லத்தரசி


            வரலாற்றுப்புதினங்களில் என்னுடைய விருப்பம் அதிகமாக வளரத்துவங்கிய போது, தற்செயலாக நம்மூர் "ஐயங்கார் வீட்டு அழகு" பொண்ணு ஒருவர் மொகலாய வரலாற்றை நாவலாக எழுதி பிரபலமடைந்ததை அறிந்து தொடர்பு கொண்டேன். அப்பொழுது நான் பகுதிநேர VJவாக பணியாற்றிய, நியூயார்க்கில் இயங்கிய "திராவிடியன் தொலைக்காட்சி"யில் ஒரு நேர்முகம் நடத்தலாம் என்று அவர்களிடம் சொன்னேன். உடனே அப்போது எழுதி வெளியிடப்பட்டிருந்த தன்  இரண்டு புத்தகங்களை தன் பப்ளிஷர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார்.
Indu Sudaresan

            அவர் பெயர் இந்து சுந்தரேசன்.(
http://www.indusundaresan.com) இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்து பின்னர் இங்கேயே 'சியாட்டில்' நகரில் தன குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

            அவர் எழுதிய முதல் புத்தகம் "The Twentieth Wife". "அட்ரியாபுக்ஸ்" நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இப்புத்தகம் இங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மெஹ்ருன்னிஷாவின் குடும்பம் ஒரு நாடோடியாக இந்தியாவில் நுழைவதில் ஆரம்பிக்கும் இந்த நாவலில், மொகலாயச் சக்ரவர்த்தியான அக்பரின் கடைசிகாலம், அவரின் மூத்தமகன் ஜஹாங்கீர் பொறுமையில்லாது அரியணையைக்கைப்பற்ற எடுத்த தோல்வியுற்ற முயற்சிகள், பின்னர் மெஹ்ருன்னிஷாவின் மேல் காதல், மொகலாய அந்தப்புரத்தின் அழகிகள், அதன் கடுமையான சட்டதிட்டங்கள் என அழகிய தடையில்லாத ஆங்கிலத்தில் அருமையாக எழுதப்பட்டதைப்படித்து அசந்துவிட்டேன். மிகவும் பெருமையாக உணர்ந்தேன். ஆங்கில எழுத்தாளர்களுக்கு சற்றும் குறையாத நடை, விவரணைகள், குழப்பமில்லாத தெள்ளிய நீரோடை போன்ற கதையமைப்பு, வரலாற்று நிகழ்வுகள், என அதிக ஆராய்ச்சியுடன் எழுதப்பட்ட இந்த நாவல் உலகத்தின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் இந்து இந்த நூல்களுக்கு பல அவார்டுகளை அள்ளியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டது,"The Feast of Roses", என்பது. இந்த நாவலில் பேரரசராக முடிசூட்டப்பட்ட ஜஹாங்கீர் எப்படி தடைகளை மீறி மெஹ்ருன்னிஷாவை திருமணம் செய்கிறார், மெஹ்ருன்னிஷா எப்படி "நூர்ஜஹான்" என்ற பட்டத்துடன் செல்வாக்குப் பெற்றார், ஜஹாங்கீரின் மகன் நூர்ஜஹானின் மருமகளை திருமணம் செய்தது. பின்னர் அவன் ஷாஜஹான்  என்ற பட்டத்துடன் பேரரசரானது, அவன் மனைவி அர்ஜுமன்ட், மும்தாஜ் என்ற பெயரில் பிரபலமடைந்தது, ஆகியவை வருகின்றன.

            தன் மூன்றாம் நாவலில் ( Shadow Princess) தாஜ்மஹால் கட்டப்பட்ட கதை, ஷாஜஹானின் மகன்களுக்குள் நடந்த வாரிசுப் போட்டி, அதன்பின் அவுரங்கசீப் பட்டத்துக்கு வருதல் ஆகியவை வருகின்றன.
            உலகின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த மூன்று நாவல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பலரின் ஆசைக்கிணங்க (நான் கூட மொழிபெயர்க்க ஆசைப்பட்டேன்) இப்போது வானதி பதிப்பகத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.
            மொழிபெயர்த்தவர் வேறு யாரும் இல்லை. இந்துவின் அன்னை, 'மதுரம் சுந்தரேசன்' அவர்கள். மொழி பெயர்ப்பில் எந்த அனுபவமுமில்லாத இவருக்கு "இருபதாவது இல்லத்தரசி" முதல் முயற்சி. இந்த முயற்சி பாராட்டப்படக்கூடியது என்றாலும், பல இடங்களில் திக்கித்திணறிச் செய்த நேரடி மொழி பெயர்ப்பில் (Literal Translation) குழப்பியடித்திருக்கிறார். ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்க்காமல், அதன் சாரத்தை உணர்ந்து அதனைத் தன்னுடைய மொழியில் கொடுத்திருந்தால், மூலநூலின் அழகு கெடாதிருந்திருக்கும். அவரது அனுபவமின்மை பல இடங்களில் வெளிப்படுகிறது. அதனை எடிட் செய்தவர்கள், எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது ஆச்சரிய மூட்டுகிறது.

            ஆனால் அவரது இரண்டாவது மொழிபெயர்ப்பான "இதய ரோஜா" வில் அந்தப்பிரச்சனை வெகுவாக குறைந்துள்ளது. இப்பொழுது மூன்றாவது நாவலும் “நிழல் இளவரசி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி வந்திருக்கிறது. வாங்கிப்படிக்க வேண்டும். 

நம் வாசகர்கள் முடிந்தால் மூலநூலான ஆங்கிலத்தில் வந்தவற்றைப் படிக்கலாம். அல்லது தமிழில் வெளிவந்த நூல்களைப் படிக்கலாம்.
            இதில் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், இந்துவின் இந்த நாவல்களைத்தழுவி “மல்லிகா”   என்ற தலைப்பில் எபிக் டிவியில் ஒரு தொலைக்காட்சி சீரியல் வரவிருக்கிறது.
Indu-Sundaresan-author-of-the-book-The-Twentieth-wife-along-with-the-cast-of-the-show
           
 இந்து சுந்தரேசன் மேலும் பல புத்தகங்கள் எழுதி அழியாப் புகழ் பெற பரதேசியின் வாழ்த்துக்கள்.
Indu Sundresan


Monday, August 19, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 2 : கலை மாளிகையா? கனவு மாளிகையா ?


       வீட்டுக்குள் ஒரு அமானுஷ்ய அமைதி இருந்தது. உலகெங்கிலும் இருந்து, பலவிதமான கலைப்பொருள்களை கண்ணை மூடிக்கொண்டு , கரன்சிகளைக்கொட்டி வாங்கி ,வீட்டின் பல இடங்களில் வைத்திருந்ததனர். அவற்றில் குறிப்பாக சீனாவின் "டங் டைனாஸ்டி" (13 ம் நூற்றாண்டு ) யைச் சேர்ந்த கலைப்பொருட்கள். உலகின் தலை சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் ,சிலைகள் ,சிற்பங்கள், 2000 வருட பழைய கலைப்பொருட்கள்அழகாக வைக்கப்பட்டிருந்தன . 
Rockefeller Junior

வீட்டைக்கட்டுவதற்கே ஜான் டி ராக்கஃபெல்லர் கொஞ்சமே செலவு செய்திருந்தாலும், அவர் மகன், வீட்டை அழகுபடுத்துவதற்கு அதைவிட பலமடங்கு அதிகம் செலவு செய்தாராம் .
       அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வெள்ளி, பீங்கான் தட்டுகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பீங்கான் பாத்திரங்கள், இங்கிலாந்திலிருந்தும், மேற்கு ஜெர்மனியில் இருந்தும் பிரத்யேக ஆர்டராக செய்யப்பட்டு அவற்றில் JDR என்ற இனிஷியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன .
       ராக்கஃபெல்லரின் அழகான அலுவலக அறையைப் பார்த்தோம் . அவர் ஓய்வு பெற்ற பிறகு, சுமார் 40 வருடங்கள் பல்வேறு சாரிட்டிகளுக்கு உதவுவதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார். அலங்காரமான கூடத்தில் ஒரு மிகப்பெரிய பிக்காசோ ஓவியம் இருந்தது .வீட்டுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் ஒன்றையும் படம் எடுக்க முடியவில்லை. தரையை மெத்து மெத்தென்ற பெர்சியன் கார்ப்பட்டுகள் அலங்கரித்தன. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறைஇருந்தது ."என்ன கிச்சன் இவ்வளவு சிறிதாக இருக்கிறதே "என்று நினைத்த போது, நினைவை அறிந்தவர் போல ரான் சொன்னார், “இது கிச்சன்  இல்லை, இது பட்லர்களின் ஓய்வு அறை”, என்று.வேலையில்லாத சமயத்தில் அங்குமிங்கும் நடமாட அனுமதியில்லை என்பதால், இந்த காத்திருப்பு அறையில் இருப்பார்களாம். அங்கே ஒரு சிறிய கேபினட்டில் பல எண்கள் இருந்தன .ஒவ்வொரு எண்ணும் வீட்டின் பல பகுதிகளை மற்றும் ரூம்களைக்குறிக்கும். அதில் லைட் எரியும் போது, உதவி தேவைப்படுவதை அறிந்து பட்லர்கள் அங்கு செல்லவேண்டும். அந்த அறையில் ஏகப்பட்ட கப் சாஸர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன.  பெரிய விருந்துகள் நடக்கும்போது பயன்படுத்தப்படுமாம். அதோடு நிறைய அவன்கள் இருந்தன. உணவுப்பண்டங்கள் சிறிய லிப்ட் மூலம், டைனிங் ஹாலுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். குடும்ப டைனிங் ஹாலை கடந்து வந்தால் ,

 பின்புறமுள்ள பகுதி, கூரை முதற்கொண்டு கண்ணாடியில் செய்யப்பட்டு லெளஞ் போல இருந்தது . அதன் பின்னால் மாபெரும் ஹட்சன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .
Nelson Rockefeller

     ஜுனியரின் மகன் நெல்சன் ராக்கஃபெல்லர், மூன்றாவது பிள்ளையாக இருந்தாலும், மிகுந்த சூட்டிகையாக இருந்ததால், அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவர் பல பேரின் கோரிக்கைக்கு இணங்க அரசியலில் இறங்கி, மாபெரும் நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக இருமுறையும், அமெரிக்க நாட்டின் துணை அதிபர் (Vice President) ஆக ஒருமுறையும் இருந்தபடியால், இந்த வீடு அவருக்கு தன்னுடைய சகோதர சகோதரிகளால் ஒருமனதாக அளிக்கப்பட்டது. அவர் தன்  பங்குக்கு, தன் அம்மா போல் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களில் கவரப்பட்டு, வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதுமாக, ஓவியங்களாலும் பிகாசோ டேப்பஸ்டிரியாலும் அலங்காரம் பண்ணியுள்ளார்.
 அவருடைய அம்மாவைப்பற்றிச்சொல்ல வேண்டும், அவர் பெயர் ஆபி ஆல்ட்ரிச் ராக்கஃபெல்லர். 

ஜுனியரின் மனைவியான இவர் அவரைத் திருமணம் செய்யும் போது, அப்போதிருந்த ஒரு செனட்டராக இருந்த தந்தையின் ஒரே வாரிசாக இருந்ததால், ஜுனியரைக் காட்டிலும் அதிகமான சொத்தோடு, இக்குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இனம், இனத்தோடும், பணம் பணத்தோடும் தான் சேரும் என்பது எவ்வளவு உண்மை. ஜுனியர், பழம் கலைப்பொருட்களை (Antiques) சேகரித்துக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி  ஆபி, மாடர்ன் ஆர்ட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். நியூயார்க்கில் உள்ள MOMA என்று அழைக்கப்படுகிற (Museum of Modern Art) மிகப்பெரிய மியூசியத்தை நிறுவி தன்னுடைய விலையுயர்ந்த, மிகப்பிரபலமான ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்களை நன்கொடையாகவும் அளித்தார். தாயின் வழியில் தனயன் நெல்சனும் மாடர்ன் ஆர்ட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
    மேலே உள்ள பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால். கீழ்ப்பகுதியின் ஓவியங்களை பார்த்து முடித்து வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். தோட்டமா அது?

தொடரும்>>>>>>>>>>>>>>


Wednesday, August 14, 2013

தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்.

கடந்த வாரம் சுற்றுலா சென்று இருந்ததால் நமது பகுதி வெளிவரவில்லை. மன்னியுங்கள் நட்பூஸ்.

தாய்  மண்ணை விட்டு வந்து, பல ஆண்டுகள்  ஆனாலும் அந்த மண்ணை மறக்கமுடியாமலும், மீண்டும் சென்று மிதிக்கமுடியாமலும், அமெரிக்க மண்ணை துறக்க முடியாமலும், அதிக இருமனப்பட்ட வாழ்க்கைதான், புலம்பெயர்ந்த எங்கள் வாழ்க்கை. யாரைக்கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். டாலரைத் துரத்தி துரத்தி நாங்கள் என்னதான் இங்கே சாதித்தோம்? என்று கேள்வி கேட்டால், ஒரு வெற்றுப் பார்வையும் பெருமூச்சும்தான் வெளிப்படும். எனவே இங்கே எங்காவது இந்திய அடையாளங்களைப் பார்த்தால் மனது குதூகலிக்கும்.

நம்மூரில் மழை பெய்தால், நம் சாக்கடைகள் நிரம்பி தண்ணீர் முழங்காலுக்கு வந்துவிடுமல்லவா ?. ஆனால் இங்கே பேய் மழை பெய்தால் கூட, ஒரு சொட்டு தேங்காது.காரணம் பாதாள சாக்கடைகள். 

பெரிய பெரிய இரும்பு மூடிகள் Made in India என்று இருக்கும். ஜாக்கிரதையாக மிதித்து விடாமல் தாண்டிச் செல்வேன்.

நியூயார்க் Midtownனில்  உள்ள என் அலுவலகம் இருக்கும், Broadway க்கு அருகில் இருக்கிறது, ஒரு மூன்று ஸ்டார் ஹோட்டல் .கொரியன் கடைகள் அதிகமாக இருப்பதால் அதற்கு  ‘கொரியன் வே' என்று பெயர்.  அந்தப்பக்கம் தினம் போகும் எனக்கு பார்க்கும்போதெல்லாம் பரவசமூட்டுவது, பட்டொளி வீசிப்பறக்கும் நம் இந்திய தேசிய மூவர்ணக்கொடி.

 அந்த ஹோட்டலின் உரிமையாளர் நிச்சயமாக இந்தியராகத்தான் இருக்க வேண்டும்.நண்பர் வனராஜ் இங்கே வந்திருக்கும்போது,தெரிந்தோ  தெரியாமலோ இங்குதான் இருமுறை       தங்கினார். 

பல ஹோட்டல்களும் மோட்டல்களும் இங்கு இந்தியருக்குச்சொந்தம். குறிப்பாக ஸன்ட் சிங் சட்வால் என்ற பஞ்சாபி இந்தியர் பல முக்கிய ஹோட்டல்களுக்கு சொந்தக்காரர். டெமாக்கிரட் கட்சியை சேர்ந்த இவர் 'கிளின்டன்' அதிபராக இருந்தபோது, அவரின் முக்கிய டோனர் ஆவார்.
ஹிலரிக்கும் அவர்தான்.

அந்த ஹோட்டலில் அமெரிக்கக் கொடிக்கு இணையாக நமது கொடி பறக்கும். இங்கே எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. எங்கெல்லாம் வேறு நாட்டுக் கொடிகள்  பறக்கிறதோ, அங்கே அமெரிக்க நாட்டுக் கொடியும் பறக்க வேண்டும்.
அமெரிக்கர்கள் தங்கள் கொடிக்கு மிகுந்த மரியாதை தருபவர்கள். பலர் வீடுகளின் முன் நட்சத்திரகொடி பறக்கும். எல்லா பொது நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மட்டுமல்லாமல் தேவாலயங்களில் கூட அமெரிக்கக்கொடி இருக்கும்.
            நமதுஇந்தியக்கொடியைப் பார்த்ததும், என்னுடைய பள்ளி நாட்கள் ஞாபகம் வரும். நான் 1 முதல் 8 வரை படித்த தேவதானப்பட்டி, இந்து நடுநிலைப்பள்ளியில், ஒவ்வொரு திங்கள் கிழமை காலையும் பள்ளி துவங்குவதற்கு முன் கொடியேற்றம் நடக்கும். போடி ஜமின்தார் கட்டிய அரண்மனைச்சத்திரத்தில் தான் அப்போது பள்ளி நடந்தது. பள்ளிக்கு முன்னால் இருக்கும் சிறிய மைதானத்தின் நடுவில் உள்ள கொடிக்கம்பத்தில் நடக்கும் மாணவர் அசெம்பிளியில் மூவர்ணக்கொடி ஏற்றப்படும். வகுப்பு தலைவர்களின் தலைமையில் ஒவ்வொரு வகுப்பாக வரிசையில் வந்து கூடுவர். ஆசிரியர்களும் இருப்பர். இருபுறமும் இரு எட்டாம் வகுப்பு மாணவர்கள் (என் அப்பாதான் வகுப்பாசிரியர்) சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் அசெம்பிளி ஆரம்பமாகும். ஒருவன் அசெம்பிளி நடத்த இன்னொருவன் உரையாற்ற வேண்டும். தலைமை மாணவன் பரேட் செய்து வழிநடத்த, இந்திய உறுதிமொழி ஏற்க வேண்டும். "இந்தியா என் தாய் நாடு, இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர். என் தாய் நாட்டை நான் நேசிக்கிறேன்" என்று போகும் உறுதிமொழி. அதன்பின் போகன்வில்லா காகிதப்பூக்களை உள்ளே வைத்து மடித்து உயர்த்தப்பட்ட தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்பட, அனைவரும் சல்யூட் செய்வார்கள். கிருஷ்ணன் கோயில் வழுக்குமரம் தான் திருவிழா முடிந்ததும் கொடிமரமாகும். அதன்பின்னர், மகாகவி பாரதியார் எழுதிய “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் “என்ற பாடல் பாடப்படும் (http://www.youtube.com/watch?v=83OTliJtTGA)
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. "பட்டொளி வீசி பறக்குது பாரீர்", என்று பாடும்பொழுது, நான் எப்பொழுதும் அண்ணாந்து கொடியைப் பார்ப்பேன். அது பறக்காமல் தொய்ந்து கிடக்கும்போது மனசுடைந்து போவேன்.அது நன்கு பறக்கும்போதெல்லாம், மனசு குதூகலமாகி இன்னும் உரக்கப்பாடுவேன். "பட்டொளி வீசி பறக்குது பாரீர்".
சுதந்திர நாளும் வந்தது.என்னுடைய முறை. வகுப்பின் முதல் மாணவன் (சத்தியமா, நம்புங்க) என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. நேதாஜி அவர்களைப்பற்றி நான் பேசுவதாக முடிவு செய்து, நன்றாக தயார்செய்து வைத்திருந்தேன். வீராவேசமாக பேசி அசத்தி விடவேண்டும் என நெட்டுறுப்போட்டு வைத்திருந்தேன். "ஸ்டாண்ட் அட் ஈஸ்", இப்பொழுது சேகர் உரையற்றுவார், என்று சொன்னதும், டிசம்பர் மாச சில்லிப்பிலும் வேர்த்துக்கொட்டியது. நேதாஜி பற்றிப்பேச ஆரம்பித்த நான், தாத்தாஜி போல நடுங்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்த எல்லாம் மறந்துபோய், முழித்தபோது என் பித்தாஜி வேறு முறைத்தார். எனக்கு என் இயலாமையை நினைத்து ஆத்திரம் வந்ததோ என்னவோ, மூத்திரம் வந்து விட்டது.
என் வாயினுள் இருந்த நாக்கு எங்கோ காணாப்போய்விட்டது. ஏதோ முணுமுணுத்துவிட்டு நான் நிறுத்திவிட, எல்லோரும் அமைதி காத்தனர். நான் மெதுவாக நழுவி, உள்ளே கழிப்பறைக்கு ஓடும்போது தான் பிறருக்கு தெரியும், நான் பேசி முடித்துவிட்டேன் என்று. அதன் பின்னர் தேசீய கீதம் பாடும் போது, என் டிரவுசரில் சிந்தியவற்றை கழுவிவிட்டு நிமிர்ந்தால், யார் பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அந்த என் குல எதிரி ராகவன் பார்த்துவிட்டான். பயபுள்ள சொன்னான் "டேய் சேகர் அருமையா இருந்துச்சு, ஆனா ஒன்னுமே கேக்கலன்னு". ஹிஹ்கே, ஹிஹ்கேஹே நான் பேசுனது எனக்கே கேட்கல அப்புறம் அவனுக்கு எப்படி கேட்டிருக்கும்.
             என்னுடைய இரண்டாவது முறை வந்தபோது, “டேய் நான் பேசல, அசெம்பிளி நடத்துறேன்”, என்றேன். கொடிதனை தயார்செய்து, அட்டென்ஷன், ஸ்டாண்ட் அட் ஈஸ், ஸ்கூல் சல்யூட், ஸ்கூல் டிஸ்பர்ஸ், ஆகிய வார்த்தைகள்தான். எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாகவே ஆரம்பித்தது. கொடியேற்றம் வந்தது. தலைமை ஆசிரியர் வந்து கொடியைச் சுண்ட, கொடி விரியவில்லை. மீண்டும் சுண்ட, கொடி மேலும் இறுகியது. எனக்கு மட்டும்தான் தெரியும் என்ன நடக்கிறது என்று. 'உருவாஞ்சுருக்கு' சரியாக போடாததால் வந்த தொல்லை. மீண்டும் ஒருமுறை வேகமாக சுண்ட, கயிறு அறுந்து கொடி  கீழே விழுந்தது. பலபேர் கொல்லென்று சிரிக்க,
எங்கள் HM, ராமு வாத்தியார், ,என்னைப்பார்த்த பார்வையில் கோபமும் பரிதாபமும் கலந்து இருந்தது. என் அப்பா பக்கம் நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. ராகவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான். பலாக்கொட்டை முத்தலிப் வந்து மடமட வென்று கொடியை சரிசெய்து மேலே அனுப்ப, ராமு வாத்தியார் கொடியை ஏற்றினார். கொடி அழகாக விரிந்து காகிதப்பூக்களை விரித்து சிரித்தது. ரசித்துக்கொண்டிருந்த, நான் அடுத்து சொல்ல வேண்டியதை மறந்து நிற்க அடுத்த பக்கத்தில் பேசுவதற்கு தயாராய் இருந்த ஜெயலட்சுமி எனக்கு நினைப்பூட்ட, அவசரத்தில் "ஸ்கூல் சல்யூட்” என்று சொல்லவேண்டிய இடத்தில், "ஸ்கூல் டிஸ்பர்ஸ்" என்று சத்தமாக சொல்ல, சிறுபிள்ளைகள் நகர, ஆசிரியர்கள் திகைக்க, மீண்டும் கழிவறைக்கு ஓடினேன்.


சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் 

நண்பர்களே.

Thursday, August 1, 2013

கர்ப்பவதிகளும் புஷ்பவதிகளும்


சப்வேயில் பயணம் செய்வது அனுதினமும் ஒரு புதிய அனுபவம். குறிப்பாக நான் வசிக்கின்ற, குயின்ஸ் பகுதியிலிருந்து, மேன்ஹாட்டனுக்கு வேலைக்குச்செல்லும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது நடக்கும். அது சுமார் ஒரு மணி நேரப்பயணம்.
முதலாவது அதிசயம், ஒவ்வொருவரும்  வித்தியாசமானவராய் இருப்பர். இனம், நிறம், மொழி, நாடு, உடை, முடி, கண்கள், உதடுகள் என எல்லாமே வேறு வேறு.
·         ஐபாடில் பாட்டின் ட்யுனையும்,  பிரேக்ஃபாஸ்ட்டையும், ஒரே சமயத்தில் மெல்லும் மக்கள்.
·         பலவித சாதனங்களை வைத்துக் கொண்டு, வயதைக்குறைத்துக்காட்ட மேக்கப் போட்டுத்தோற்கும் நடுத்தர யுவதிகள்.
·         புத்தகப்பைகளோடு தூங்கிவழியும் மாணவர்கள்.
·         தங்கள் ஹோம் வொர்க்கை அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கும் புத்தம் புதுப்பூக்களாய் டீனேஜ்ஜர்கள்.
·         எக்ஸாமுக்கோ, குவிஸ்ஸுக்கோ தயார் பண்ணிக் கொண்டிருப்பவர்கள்.
·         நியூஸ் பேப்பர்  அல்லது புத்தகங்களில் மூழ்கிப்போகும் மக்கள்.
·          கிண்டல்களை ஒதுக்கிவிட்டு, "கின்டில்களில்" (Kindle) ஆழ்ந்திருக்கும் பெண்கள்.
·         செல்போன்களில் பாட்டுக்கேட்டுக் கொண்டே, கேம்ஸ் விளையாடும் ஆட்கள்.

·         பபிள்கம் தீர்ந்ததால் தோழிகளின் உதடுகளை மெல்லும் உற்சாக இளைஞர்கள்.
இதெல்லாம் காலை சீன், மாலை சீன் வேறு மாதிரி ஆயிரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கியிருந்தாலும், அவர்கள் எந்தப்பக்கம் ஏறினாலும் இடம் கொடுக்க வேண்டும் என்பது மரபு.  அது போல சீனியர் சிட்டிசன்களுக்கும், கர்ப்பவதிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். இதிலே வயதானவர்கள் அல்லது அதுபோல தோன்றுபவர்களுக்கு சீட் கொடுக்கும் போது, பலர் அதை மறுத்துவிட்டு, வீம்புக்கென்றே நின்று வருவார்கள். சில பேர் இன்சல்ட்டாகவும் எடுத்துக்கொள்வார்கள் .ரொம்ப முடியாவிட்டாலொழிய அவர்கள் சீட்டை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது ஒரு ஆச்சரிய உண்மை. அதேபோல்தான் கர்ப்பவதிகளும், அவர்களே கேட்கமாட்டார்கள். நாமேதான் கொடுக்கவேண்டும்.

அன்று ஒருநாள்  ஒரு நிறைமாத கர்ப்பிணி நடுவில் ஏற, நான் ஒருவன்தான் பார்த்தது போல இருந்தது. மற்றவர்கள் அனைவரும் கவனிக்காது, அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். நடுவில் சில புஷ்பவதிகள் ஏற (அதான் நம்ம டீனேஜ் பெண்கள் பாஸ்)  , உடனே இடம் கொடுத்து எழுந்தனர்  சில BJP ஆட்கள் ( பயங்கர ஜொள்ளு பார்ட்டிகள்  பாஸ் ). எனக்கு கோபம் கோபமாய் வந்தது. வந்த கர்ப்பிணிக்கு இடம் கொடுக்காமல், என்னது எல்லோரும் இப்படி  இருக்கின்றனரே  என்று. அப்புறம்தான் எனக்கு உரைத்தது, பார்த்த நான் அல்லவா இடம் கொடுக்க வேண்டும். படக்கென்று எழ, ஒரு நன்றிப்பார்வையுடன் அந்தப்பெண் உட்கார்ந்தாள். பாருங்கள், எப்போதும் பிறர்தான் செய்யவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு தவறு. அப்போதுதான் இடம் கிடைத்து உட்கார்ந்தேன். பரவாயில்லை என்ன செய்வது.
புஷ்பவதிகள் வந்தால் இடம் கொடுக்கும் அளவுக்கு நான் இளங்குமரனுமல்ல, கர்ப்பவதிகள் வந்தால் இடம் தரமுடியாத அளவுக்கு நான் பழங்கிழவனுமல்ல.
ஆனால் இதில ஒரு பெரும் பிரச்சனை ஒன்றிருக்கிறது. நேற்று சற்று முன்னரே கிளம்பியதால் உட்கார இடம் கிடைத்தது. உட்கார்ந்து அப்துல்கலாமின் "திருப்பு முனையை" திருப்பியபோது, நிமிர்ந்து பார்த்தால், ஒரு ஆப்பிரிக்கப்பெண் அருகில் வந்து நின்றாள். இந்த ஊரில்தான் வயசும் தெரியாது சைஸ்ஸும் தெரியாது, கர்ப்பிணி போல் இருந்தது. ஆனால் வயிறு பெருத்தவர்களெல்லாம் கர்ப்பிணிகள் அல்லவே. பக்கத்தில் இருந்த அனைவரும் அவரவர் செயல்களில் பிஸியாக இருந்தனர்.

எப்படியய்யா கண்டுபிடிப்பது?. கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். எப்படிக்கேட்பது என்று சந்தேகமாக இருந்தது. "ஆர் யு பிரக்னன்ட்?, இல்லை" டஸன்ட் செளன்ட் குட். நிமிர்ந்து பார்த்து சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை. அவள் வயிறையே உற்றுப்பார்க்க, அவள் என்னை முறைத்தாள். அதோடு புருவங்களை உயர்த்தி என்னவென்று கோபமான நயன பாஷையில் கேட்க, நான் தலை குனிந்தேன்.
"இதென்னடா வம்பா போச்சு", என்று நினைத்துக்கொண்டே புத்தகத்தை படிக்க முயன்றேன், முடியவில்லை. சரி கேட்டுவிடுவோம் என நிமிர்ந்தால், அவள் என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள்.
குட்டைப் பாவாடை என்பதால் அவளது பருத்த மற்றும் கருத்த தொடைகள் என்னை வருத்த ஆரம்பிக்க, என் சிறுத்த தொடைகள் வழக்கம் போல்  நடுங்க ஆரம்பிக்க, மீண்டும்  நிமிர்ந்து பார்த்தேன். "Whats up?" என்றாள், சத்தமாக. தவறி என்  மடியில் உட்கார்ந்தால் , நான் நொடியில் காலி.

அப்போதுதான் பார்த்தேன், அவளுடன் வந்த கணவனோ காதலனோ அந்தப்பக்கம் நின்றிருந்தான். என்ன? என்று  இவளைப்பார்த்து சைகையில் கேட்டான். அவன் சைஸ், இந்தப் பெண்ணைவிட ரெண்டு மடங்கு சைஸில் இருக்க, எனக்கு நல்ல AC-யிலும் வேர்த்துக்கொட்டியது. அப்போது லெக்சிங்டன்  வர என் ஸ்டாப் இன்னும் பல ஸ்டாப்புகள் தள்ளி இருந்தாலும், டக்கென்று என் பொருட்களை வாரிக்கொண்டு இறங்கிவிட்டேன். ஆபிஸுக்கு Late -ஆன Alfy -யாக போனால் பரவாயில்லை as long as I don’t become Late Alfy என்பதால்.