Monday, January 11, 2021

லஞ்ச் காசும் லஞ்சக் காசும் !

பரதேசியின் வாகனங்கள் பகுதி -2

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/1.html

 இதுவரை நான் வளர்ந்த ஊரான தேவதானப்பட்டியில் ஒரு நாள் கூட ஓட்டாத என் சைக்கிள் வாகனத்தை, பக்கத்து ஊரான பெரியகுளம், படித்த ஊரான மதுரை,(ஆனால் படித்து முடித்த பின்தான்) முதல் வேலை கிடைத்த சாட்சியாபுரம், சிவகாசி, 2-ஆவது வேலை செய்த வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, அதன் பின் சென்னையில் செய்த இரு வேலைகள் என சைக்கிள் வாகனம் கைகொடுத்தது, மன்னிக்க கால் கொடுத்தது. என் வாழ்க்கை உருண்டோட சக்கரம் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

சென்னையில் முதல் வேலை மாமாவின் கன்ஸ்ட்ரக்சன்  கம்பெனியில் சூப்பர்வைசர். இரண்டாவது வேலை அரசினர் மருத்துவ மனையோடு இணைந்திருந்த சைக்கியாட்ரிக் டிபார்ட்மென்ட்டல் நடந்த ICMR (Indian Council of Medical  Research) நடத்திய பிராஜெக்ட்டில் டேட்டா கலெக்ஷன் வேலை. இது WHO  என்ற வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் நிதியில் நடந்தது. கீழ்ப்பாக் கார்டனில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த போது தான் இந்த இரண்டு வேலை, செய்தேன். பின்னர் மனிதவளமேம்பாட்டு வேலைகளில் இருந்த ஆர்வம் காரணமாக அதனைவிட்டுவிட்டு இன்ட்டர் கிராப்ட்டில் சேர்ந்தேன். மாமா வீட்டிலிருந்து  சைக்கிளில் வந்து ஆற்காடு  சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, அங்கிருந்து நேராக ஒரு பஸ்ஸில் பாரிமுனை சென்று, என் அலுவலகத்திற்கு நடந்து சென்றுவிடுவேன். என்னுடைய அலுவலகம் ஆர்மேனியின் தெருவிலும் இன்னொரு யூனிட் பிராட்வே அருகில் இருந்த டேவிட்சன் தெருவில் மினர்வா தியேட்டர் அருகிலும் இருந்தது.  இந்த இரண்டு அலுவலகங்கிலும் எனக்கு  இருக்கைகள்  உண்டு . இங்கு  வேலை செய்த ஆண்டு 1988 முதல் 1992 வரை .

பேச்சிலர் வாழ்க்கை தொடர்ந்த போது என் அம்மா, "தம்பி உனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கோயேன்" என்று சொன்னார்கள். "ஸ்கூட்டரா அது வேண்டாம்மா, அது எனக்குப் பிடிக்காது" என்றேன். "அப்ப உனக்குப்பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள் ,நான் பணம் தருகிறேன்." என்று சொன்னார்கள்.

சிறு வயதில் புல்லட் எனக்குப் பிடித்திருந்தாலும் அதனை ஓட்டும் அளவுக்கு மனதில் தைரியமில்லை, உடலில் வலுவுமில்லை என நினைத்து முதலில் TVS போன்ற மொபெட் வாங்கலாம் என முடிவு செய்தேன். ஷோ ரூமுக்குச் சென்றபோது TVS 50 ஐ விட புதிதாக வந்திருந்த TVS சேம்ப் பார்க்க நன்றாக இருந்தது. அப்போது பாரிமுனையில்    இருந்த "இன்ட்டர்கிராப்ஃட் செளத் எக்ஸ்போர்ட்ஸ்" என்ற கம்பெனியில் மனிதவளத்துறையில் "பெர்சனல் (Personnel) ஆஃபிசராக சேர்ந்த சமயம்.   

என் மகன் ஒரு ஆஃபிசரா(?) ஆயிட்டான்ற ஒரு சந்தோஷத்தில் எங்கம்மா எனக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டாங்க. 

.
டி.வி. எஸ் சேம்ப் ஒரு நல்ல வண்டி. குறைந்த செலவு, பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கும். டி.வி.எஸ் சேம்ப் வாங்கியவுடன் வீட்டிலிருந்தே வண்டியை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலை வழியாக நேராகச் சென்று, சென்ட்ரல் ஸ்டேஷன் தாண்டிச் சென்று அப்படியே பாரிமுனை செல்வது என் வழக்கம். மிக மெதுவாகத்தான் செல்வேன். அதாவது மிகமிக மெதுவாகத்தான் செல்வேன். இடதுபுற ஓரம்தான் செல்வேன். ஆரம்பத்தில் சில சைக்கிள்காரர்கள் என்னை முந்திச் சென்றிருக்கிறார்கள். ஏன்  சில சமயம் நடந்து போகிறவர்கள் கூட கடந்து போயிருக்கிறார்கள். அதனைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் நான் பாட்டுக்கு தேமேன்னு ஓட்டிச் சென்ற முதல் நாள் சென்ட்ரல் ஸ்டேஷனைத் தாண்டும் போதுஒரு டிராஃபிக் போலீஸ் வழிமறித்தார். லைசென்ஸ், RC புக் எல்லாம் செக் செய்தபின், "எவ்வளவு பணம் வச்சிருக்க?" என்றார்.

“எதுக்கு சார்?”

“ஃபைன் கட்டறதுக்கு?”

“எதுக்கு  ஃபைன் சார்?”

"எப்பா ஸ்பீடா வந்துட்டு எதுக்கு ஃபைன்னு கேக்கிற"

"என்னாது ஸ்பீடா வந்தேனா? நடக்கிறவன் கூட என்னை முந்திப் போனான், என்ன சார் சொல்றீங்க?"

"சரி சரி வளவளன்னு பேசாதே, சார்ஜன்ட்ட போனா நூறு ரூபாய்க்கு மேல ஆகும்".

"என்ன சார் நான் ஸ்பீடா போகவேயில்லியே"

"சரி, இருக்கறத கொடுத்துட்டு போ"

பாக்கெட்டில் கையில் விட்டால் லஞ்ச்சுக்கு வச்சிருந்த 10 ரூபாய் பணம் இருந்தது, லேசாக வெளியே தெரிந்தவுடன் அதனைப்பறித்துக் கொண்டு "போ தம்பி, பாத்துப்போ" என்று சொன்னார், அந்தத் திறமையான, நியாயமான, நேர்மையான போலீஸ்காரர். இது என் முதல் நாள் அனுபவம். வழிப்பறிக் கொள்ளை என்பது இதுதானோ? நானும் நொந்து கொண்டே சிறிது தூரம் உருட்டிக் கொண்டு போய், அப்புறம் மெதுவாக ஏறி ஓட்டிக் கொண்டு ஒரு மணி நேரம்  தாமதமாய்ப் போய்ச் சேர்ந்தேன். அன்னைக்கு சனிக்கிழமை.

அடுத்த வாரம் திங்கட் கிழமை இன்னும் கொஞ்சம் சீக்கிரமாய்க் கிளம்பினேன். சென்ட்ரல் நெருங்கியவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. மூளையில் உதித்த பதற்றம் முதலில் என் கண்களுக்கு டிரான்ஸ்பர் ஆக, பிறகு அங்கிருந்து வந்து அதன் மூலம் நான் பிடித்திருந்த ஹேண்டில் பாருக்கு வந்து, அங்கிருந்து சக்கரங்களுக்கு வந்து, அதன் பின் வண்டி, நான் இரண்டும் இலேசாக நடுங்க ஆரம்பித்தோம். ஓட்டிக் கொண்டு சென்றாலும் உருட்டிக் கொண்டு செல்வதைப் போல்தான் தெரிந்தது.

மீண்டும் அதே இடம். ஆனால் வேறொரு போலீஸ்காரர் நிறுத்தினார். உடனே வண்டியின் சாவியை எடுத்துக்  கொண்டார்.

"லைசென்ஸ் RC புக் எடுப்பா" மறுபடியுமா? என்று நினைத்துக் கொண்டு எடுத்துக் கொடுத்தேன்.

"புது லைசன்ஸா"

"ஆமா சார்"

"பார்த்து வரணும்"

"சரி சார்"

"எவ்வளவு வச்சிருக்க?"

"எதுக்கு சார்?"

"இல்ல சார்ஜன்ட்ட போனா ஃபைன் எகிறும்".

"எதுக்கு சார் ஃபைன்?"

"என்னப்பா தம்பி தெரியாதமாதிரி கேக்குற, ரெட் லைட்ல வந்தியே"

"இல்லியே சார் நான் கிரீன்லதான் வந்தேன், அதுவும் ரொம்ப   மெதுவா வந்தேன்"

"சரி சரி ஒரு அம்பது ரூபாவைக் கொடுத்துட்டு நகரு"

"சார் நேத்தே கொடுத்திட்டேன்?

 என்னப்பா கதை விட்ர, யார்ட்ட கொடுத்த    எதுக்கு கொடுத்த  ?"

"நான் 10 கிலோ மீட்டர் ஸ்பீட்ல வந்ததை ஓவர்ஸ்பீட்ன்னு ஒரு போலீஸ்காரர் சொல்லி என்னோட லஞ்ச் காசைப் லஞ்ச காசாய்ப்  புடிங்கிட்டார். நேத்து கடன் வாங்கி லஞ்ச் சாப்பிட்டேன்".

"யாருப்பா அவர்? சரி அத விடு, காலைவெயில் கடுமையாய் இருக்கு, பக்கத்து கடையில ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு போ", நான் நடக்கத்தொடங்க, “தம்பி கொஞ்சம் நில்லு எத்தனைன்னு கேட்காமயே போற”தலைகளை எண்ணிவிட்டு “மொத்தம் ஏழு வாங்கிட்டு வா”.

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது

"சார் என்ட்ட அவ்வளவு காசில்ல"

"சரி எவ்வளவு இருக்கு?”

எல்லாப் பாக்கெட்லயும் செக் செஞ்சு, "சார் இவ்வளவுதான் இருக்கு”, என்று ஒரு 2 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டினேன்.

"பரவாயில்லை”, என்று சொல்லிவிட்டு ஆனால் அந்த 2 ரூபாயையம் புடுங்கிவிட்டுத்தான் சாவியைக் கொடுத்தார்.

அடுத்த நாள் என்ன நடந்ததுன்னு, அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

- தொடரும்.

 

 


10 comments:

 1. என்ன சார் படிச்சது அமெரிக்கன் காலேஜ்ல போலீஸ்காரன் புடிச்சதும் குட் மார்னிங்க் வாட்ஸ் யுவர் நேம் என்று கேட்டு இருந்தால் போலீஸ்காரன் பதிலுக்கு எஸ் சார் என்று சொல்லி உங்களுக்கு ஃபேண்டா வாங்கி கொடுத்து அனுப்பி இருப்பாருல....

  ReplyDelete
  Replies
  1. அந்த விவரம் உடனே தோணலை மதுரை, ஆனா அதற்கப்புறம் எப்படி சமாளிச்சேன்னு அடுத்த பதிவில் சொல்றேன் .

   Delete
 2. ஓ...  நல்லவேளை நான் சென்னையில் வண்டி ஒட்டவில்லை!   மதுரையில் ஒட்டியதோடு சரி!

  ReplyDelete
  Replies
  1. அப்ப மதுரையிலே இந்த தொல்லை இல்லியா ஸ்ரீராம் ? எப்படி இருக்கும் அங்க எல்லாருமே மாமன் மச்சான்தானே.

   Delete
 3. Replies
  1. என்னத்தை சொல்றது போங்க , ஆமா நம்மூர்ல எப்படி ?

   Delete
 4. அனைத்து விதிகளும் பணம் பறிக்கத்தானே மக்களுக்காக அல்லவே

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க அன்பு

   Delete
 5. நம் போலீஸ் காரர்கள் மனிதாபிமானமாக ஒரே பிடியாகப் பிடிக்காமல் இருப்புக்குத் தகுந்தாற்போல இறங்கிப் போகும் பெருந்தன்மை பிரமிப்பூட்டுகிறது..

  ReplyDelete