Showing posts with label FETNA 2018. Show all posts
Showing posts with label FETNA 2018. Show all posts

Thursday, September 6, 2018

பாதியில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி !!!!

சங்கங்களின் சங்கமம்

                                      
FETNA -2018 பகுதி 6
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_30.html
மாலையில் சங்கங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் வந்திருந்த அனைத்து சங்கங்களும் தங்களுடைய பேனர்களை பிடித்து ஆட்டபாட்டத்துடன் ஊர்வலமாய் வந்தனர். நியூயார்க் தமிழ்ச் சங்கத்திலிருந்து அதில் பங்கு கொண்டோம். அப்போதுதான் இத்தனை தமிழ்ச் சங்கங்களிலிருந்து இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.
பூழிப்பாவை நாடகம்

பூழிப்பாவை நாடகம் துவங்கும்போது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் நவீன நாடகம் என்பதன் அறிமுகமோ அனுபவமோ பெரும்பாலோருக்கு இல்லை. இதன் வடிவம் கிட்டத்தட்ட ஒரு நவீன ஓவியம் போன்றது. பார்ப்பவரின் கற்பனைத்திறனுக்கும் சவால் விடுவதுதான் இரண்டு வடிவங்களும். பார்க்கிறவரின் கற்பனைத்திறனும் படைப்பவரின் கற்பனைத்திறனும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் போது தான் அதன் பொருள் என்னவென்று விளங்கும். தமிழ்ச்சங்க நண்பர்களுடன் உட்கார்ந்து   இருந்தேன்.
என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் இருந்த நாங்கள்  அனைவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தோம்.  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது. நடிகர்களின் நடிப்பு ஒரு உயிர்ப்புத் தன்மையுடன் இருந்தது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம்.
சஞ்சய் சுப்ரமணியன்
அது முடிந்தபின் கர்நாடக இசைக் கலைஞரான சஞ்சய் சுப்ரமணியனின் தமிழிசைக் கச்சேரி நடந்தது. அரங்கில் கொஞ்சப்பேரே இருந்தாலும் இருந்தவர் அனைவரும் நன்கு ரசிப்பவராகவே தெரிந்தது. கூட்டமில்லாத நிலையினை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சஞ்சய் அவர்கள் நல்ல இசையினை அனுபவித்துக் கொடுத்தார். ஆனால் தமிழிசை என்றிருந்தாலும், பெரும்பாலும் பக்தியிசைப் பாடல்களாவே இருந்தன . சரியாக இரவு 11 மணிக்கு அவர் பாதி பாடிக் கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கிகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் கடைசிப் பாடலை ஒலிபெருக்கி இல்லாமலேயே பாடி முடித்தார். அமெரிக்காவில் நேரக்கட்டுப்பாடு மிக முக்கியம். நியுஜெர்சியில் நடந்த இளையராஜா நிகழ்ச்சியிலும் இப்படித்தான் சரியாக 10 மணிக்கு எல்லாவற்றையும்  நிறுத்திவிட்டார்கள். எல்லோரும் திகைத்து நிற்க மனோ வந்து குட்நைட் சொன்னபோதுதான் கச்சேரி முடிந்துவிட்டது என்று தெரிந்தது. இதனைப்பற்றி ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
சஞ்சய் சுப்பிரமணியத்தின் இசையோடு ஃபெட்னா 2018 இனிதே நிறைவு பெற்றது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை (Federation of Tamil Sangams of North America) வின் 31-ஆவது ஆண்டுக் கூடுகை இதுவாகும். ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்தக் கூடுகை. இது தவிர மாதாந்திர இலக்கியக் கூட்டம் தொலைபேசியில் கான்ஃபிரன்ஸ் அழைப்பாக நடக்கும். இந்த ஆண்டு ஃபெட்னா வை பொறுப்பேற்று நடத்தியவர்கள் டல்லாஸ் டெக்சஸில் செயல்படும் மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கம். இதற்கு பக்கத்திலுள்ள கீழ்க்கண்ட மற்ற சங்கங்கள் உதவியாக இருந்தன.  
1)   டல்லஸ்  தமிழ் மன்றம்.
2)   சான் ஆன்டானியோ  தமிழ்ச்சங்கம்.
3)   ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்.
4)   கிரேட்டர் ஹியூஸ்டன் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி.
5)   பாரதி கலை மன்றம் மற்றும் ஹியூஸ்டன் தமிழ்ப்பள்ளி.
6)   மெட்ரோபிளக்ஸ் தமிழ் அக்காடெமி.
7)   காப் பெல் தமிழ் மையம்.
8)   பிளானோ தமிழ்ப்பள்ளி.
9)   கொங்கு தமிழ்ப்பள்ளி.
10)               வித்யா விகாஸ் பள்ளி.
11)               பாலா தத்தா தமிழ்ப்பள்ளி.
12)               அவ்வை தமிழ் மையம்.
13)               இலங்கைத் தமிழ் சங்கம்.

வந்திருந்த முக்கிய விருந்தினர்கள்.
1)   முனைவர் மருதநாயகம் தமிழ்ப் பேராசிரியர்.
2)   திரு மம்மது - இசை ஆய்வாளர்.
3)   பேராசிரியர் ஞான சம்பந்தன்.
4)   சுப வீரபாண்டியன்.
5)   பூவுலகு சுந்தர்ராஜன்.
6)   எழுத்தாளர் சு.வெங்கடேசன்.
7)   திருமதி ரேவதி - இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்.
8)   Dr. சுந்தர பாலசுப்ரமணியம் - திருமூலர் பிரணாயாமா.
9)   இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
10)               நடிகர் கார்த்தி.
11)               இசையமைப்பாளர்  ஹிப் ஹாப் ஆதி.
12)               பாடகர்கள் கார்த்திக், சக்திஸ்ரீ, டிரம்ஸ் சிவமணி.
13)               ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது மற்றும் இளையராஜா.
14)               கவிஞர் அறிவு மதி.
15)               கவியமூர்த்தி, ஐ.பி.எஸ்.
16)               பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.
17)               கர்நாடக இசைப்பாடகர் சஞ்சய் சுப்ரமணியம்.
18)               நடனத்தாரகை - நர்த்தகி நடராஜ்.
19)               நாட்டுப்புற இசைக்கலைஞர்கள்  முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த்.
20)               மணல் மகுடி இயக்குநர் முருகபூபதி.
21)               தமிழிசைப் பாடகர்கள். ஆக்காட்டி ஆறுமுகம், அந்தோணி தாசன். மற்றும் சுகந்தி கருப்பையா.
22)               முனைவர் G விஸ்வநாதன், வேந்தர் VIT பல்கலைக்கழகம்.
23)               நடிகர்கள் ஆரி, வைபவ்.
24)               உலகத்தமிழ் அறிஞர்கள் Dr. கார்கா சட்டர்ஜி, Dr. ஃபிரான்சஸ் ஹாரிசன், பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் முனைவர் சுபாஷினி.

பேரவை நிகழ்வில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை கீழே தருகிறேன்.
1)   முக்கிய அரங்கில் தஞ்சைப் பெரியகோவிலை பிரமாண்டமாக வடிவமைத்தது மிகவும் சிறப்பு.
2)   உணவு ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. குறிப்பாக ஒவ்வொரு நேரமும் மதுரை, தஞ்சாவூர், சென்னை உணவு என்று அசத்தினர். 
3)   ஒளி,ஒலி அமைப்புகள் மிகச்சிறப்பாக இருந்தன.
4)   கவிஞர் அறிவுமதியின் வரிகளுக்கு நர்த்தகி நடராஜன் அவர்கள் நடனமும், திருக்குறள் நடனமும், '' பாடல் நடனமும் மிகவும் நன்றாக இருந்தன.
5)   தமிழில் கையழுத்துப் போட்டு நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை நல்ல ஐடியா.
6)   வந்திருந்த விருந்தினர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட தின்பண்டங்கள், பழங்கள் அடங்கிய பை நல்ல முயற்சி.
7)   சிறுவர் சிறுமியர் மற்றும் பதின்ம பிள்ளைகளை விழா முழுவதும்  அறிவிப்புகள் செய்யப்பயன்படுத்தியது சிறப்பு.
8)   மிகவும் சிறப்பாக நடந்த TEF Talk நிகழ்ச்சி நன்றாக அமைந்தது.
9)   வரவேற்பு அமைப்புகள் மற்றும் ஃபோட்டோ பூத்கள் நன்றாக இருந்தன.
10)               சு.வெங்கடேசன், கலியமூர்த்தி ஐ.பி.எஸ், ஹிப்ஹாப் தமிழா ஆகியோரின் உரை மிகவும் அருமையாக இருந்தன.
குறையென்று சொன்னால், ஏராளமான நிகழ்ச்சிகள் இருந்ததால் எந்த நிகழ்ச்சியையும் முழுமையாக நடத்த முடியாமல் நேரத்தட்டுப்பாடு இருந்தது. அதனைத் தவிர டல்லஸ், டெக்சஸில் நடந்த ஃபெட்னா பேரவை நிகழ்ச்சி ஒரு சிறப்பு மாநாடு என்பதில் சந்தேகமில்லை.
- முற்றும் .

மீண்டும் 2019 ஆம் ஆண்டு சிகாகோவில் நடக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் பெட்னா 2019ல் சந்திப்போம்.

Thursday, August 30, 2018

அசத்திய அந்தோணிதாசனும் சொதப்பிய கார்த்திக்கும் !!!!


FETNA -2018 பகுதி 5.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_23.html
அல்லது தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் கவிதைகளை மட்டும் நான் உன்னிப்பாக கவனித்திருக்கலாம்.
ஹார்வர்டு தமிழ் இருக்கையின் வெற்றிவிழா நடந்தது. உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அதிசயங்கள் நடத்தலாம் என்பது இதன் மூலம் விளங்கியது. இந்தக்குழு இதோடு விடுவதாய்த் தெரியவில்லை.  உலகின் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களியும் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டுத்தான் ஓய்வார்கள் போலத்தெரிகிறது. இதோ அடுத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தமிழ் இருக்கை அமைக்க உழைக்கத் துவங்கிவிட்டனர். இதில் முக்கியமான பணியாற்றிய மருத்துவர் ஜானகிராமன் மற்றும் மருத்துவர் சுந்தரேசன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.    
சிறிய வயதிலேயே தன்னுடைய முதல் நாவலான காவல் கோட்டத்திற்கு சாகித்ய அக்காடெமியின் விருது பெற்ற சு.வெங்கடேசன் கீழடி அகழ்வாராய்ச்சியைக் குறித்தும் தொன்மையான தமிழர் வரலாறு எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கினார். வெளிநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பதோடு வெளிநாடு வாழ் தமிழரின் கடமை முடிந்துவிடாது என்பதை உணர்த்தும் போக்கில் அந்த உரை அமைந்தது. தமிழகத்திலும் ஒரு கண் இருக்க வேண்டும்.  இந்த நாவலைப் படித்து நான் எழுதிய உரையைப் படிக்க இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
இதற்கிடையில் பக்கத்தில் நடந்த இணை நிகழ்வில் திரு. மம்மது அவர்களின் இசை உரையும் நாடகம் பற்றிய பேராசிரியர் ஞானசம்பந்தனின் உரையும் கேட்டு மகிழ்ந்தேன். தமிழிசை மற்றும் கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற மம்மது தன்னுடைய பேத்தி பாடல்களைப் பாட அதனின் ராக தாளங்களை விவரித்துப் பேசினார்.
இவரும் பேராசிரியர் மருதநாயகமும் ஃபெட்னா முடிந்த கையோடு நியூயார்க் வந்து நியூயார்க் தமிழ்ச்சங்கம் ஏற்பட்டு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இது எங்களுடைய ஆலயமான இம்மானுவேல் லுத்தரன் திருச்சபையின் அரங்கில் நடந்தது.
பின்னர் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. பாடகர் கார்த்திக், டிரம்ஸ் சிவமணி மற்றும் பாடகி சத்திஸ்ரீ கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி, பிரபலமான பேஸ் கிட்டார் வாசிக்கும் கீத் பீட்டர்ஸ் இதற்கு வாசித்தது ஆச்சரியம் அளித்தது.
திரும்பிப்பார்த்தால் அரங்கு முதன்முறையாக நிரம்பி வழிந்தது. எந்த இணை நிகழ்வும் இல்லாமல் இளைஞர், சிறியவர்கள் தவிர இதற்கென்றே வந்தவர்கள் போல ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
பாடகர் கார்த்திக்கின் எனர்ஜியை நான் நேரில் சிலமுறை பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகள் முன்பு சென்னை காமராஜர் அரங்கில் லஷ்மண் ஸ்ருதி அவர்கள் வழங்கிய "சென்னையில் திருவையாறு" என்ற நிகழ்ச்சியில் கார்த்திக் வழங்கிய கர்நாடக இசைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவரது ஆலாபனை மிக நீண்டது. அதன்பின்பு நியுஜெர்சியில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெகுவாக ரசித்தேன். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
ஆனால் இந்த முறை கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி என்னைக் கவரவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் சில வருடங்களுக்கு முன்னர் பாடிய அதே பாடல்களை அதே ஸ்டையில் பாடியதால் வெறுத்துவிட்டேன். அவர் பாடிய பாடல்கள் மட்டுமல்ல சில  பழைய பாடல்களும் அதே பாடல்கள் வந்தன. ஓகே கண்மணியில் வந்த சினாமிக்கா தவிர எல்லாம் பழையன. சக்திஸ்ரீ யாவது வேறு பாடல்கள் பாடுவாரென நினைத்தால் அவரும் அதே பாடல்களை பாடியதால் அயர்ந்துவிட்டேன்.
ஆனால் சிறப்பம்சமாக டிரம்ஸ் சிவமணி வந்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவர் கொண்டு வந்திருந்த பல இசை கருவிகளை வாசித்து அசத்தி விட்டார். இத்தனை தோல் கருவிகளை எப்படிக்கொண்டு வந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது. சிவமணியும் இல்லையென்றால் சுத்தப்போர்தான். ஆனால் கார்த்திக் சக்திஸ்ரீ இசை நிகழ்ச்சியை முதன்முறையாகப் பார்த்தவர்கள் மிகவும் ரசித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
அந்தோணிதாசன்
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 1, 2018 காலையில் ஃபெட்னா அமைப்பின் நிர்வாகக்குழு கூடியது. அதில்  அடுத்த தலைவராக வாஷிங்டன் DC பகுதியைச் சேர்ந்த சுந்தர் குப்புசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலோ சண்டை சச்சரவோ இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

நான்காவது நாளில் முக்கிய நிகழ்வாக பிரபல நாட்டுப்புறப்பாடகர்கள் ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் அந்தோணிதாசன் அளித்த இசை நிகழ்ச்சி பட்டையைக் கிளப்பியது. நாதஸ்வரம் இல்லாமல் சீவாளி போன்ற ஒன்றை வாயில் வாசித்தது சோபிக்கவில்லை. நாதஸ்வரமும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்தோணிதாசன் பாடி மிகப்பிரபலமடைந்த சொடக்கு மேலே சொடக்கு போடுது என்ற பாடலையும் பாடினார். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கலியமூர்த்தி  அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.

Image result for kaliyamoorthy ips
கலியமூர்த்தி 
இன்னொரு அதிரவைத்த நிகழ்ச்சி நர்த்தகி நடராஜ் அவர்களின் பரதநாட்டியம். வெகு சிறப்பாக இருந்தது. அவர் நாட்டியத்திற்கு வந்த கதை நெகிழ வைக்கும் கதை.
Related image
நர்த்தகி நடராஜ்
அடுத்து மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக முருக பூபதியின்மணல் மகுடி நாடக நிலம்” வழங்கிய பூழிப்பாவை நடைபெற்றது. தெரு நாடகம் (Street Theater) அடிப்படையில் 80 களில் நான் நிஜ நாடக இயங்கங்களில் பெரிதும் கலந்து கொண்டு இருக்கிறேன். இப்போது அது மிகச்சிறப்பான வடிவத்தில் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதனைப்பற்றி இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
தொடரும்

Thursday, August 23, 2018

சுப வீரபாண்டியனின் பேச்சும் ஞான சம்பந்தனின் வீச்சும் !!!!!


Fetna – 2018 பகுதி 4
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post.html
Image result for fetna 2018 dallas

வெள்ளியன்று நிகழ்ச்சிகள் முடிந்து சனிக்கிழமை காலை கிளம்பி ரெடியாகி அரங்குக்குச் சென்றோம். அருமையான காலை உணவு முடிந்து அரங்கில் அமர்ந்தோம். அரங்கு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. வட்ட மேஜைகள் அகற்றப்பட்டு வெறுமனே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பேரவையின் ஆண்டு விழாவின் பொதுநாளான அன்று மிகத்திரளான தமிழ் மக்கள் வந்திருந்தனர். மொத்த எண்ணிக்கை 5500ஐத்  தாண்டி விட்டது என்று யாரோ சொன்னார்கள். அன்றைய நாளில் நடந்த நான் ரசித்த முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறேன் .
இந்தியாவிலிருந்து வந்திருந்த நாதஸ்வர தவில் குழு மங்களகரமான துவக்கத்தைக் கொடுத்தார்கள். அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்தும் அமெரிக்க தேசிய கீதமும் பாடி  முடித்தனர்.
அது முடிந்தபின் திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி நடந்தது. ஓதப்படக் கூடிய ஓதப்படவேண்டிய  ஒன்றுக்கான எல்லாத்தகுதிகளும் திருக்குறளுக்கு நிச்சயமாக உள்ளது தானே.
Chair / Co-Chair person
செந்தாமரை பிரபாகர்
Fetna அமைப்பின் தலைவர், செந்தாமரை பிரபாகர் முகமலர்ச்சியுடன் வரவேற்புரை ஆற்றினார். செந்தாமரையல்லவா மலர்ச்சியில்லாமல் இருக்குமா? அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பியும் வரவேற்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். அடுத்து நர்த்தகி நடராஜ் அவர்களின் பயிற்சியில் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் திருக்குறள் நடனம் ஆடி அசத்தினர். இதுவரைக்கும் இப்படியொன்றை நான் பார்த்ததில்லை. அற்புதமாக இருந்தது. பிள்ளைகளின் திறமை மட்டுமல்லாமல் பயிற்சியாளரின் திறமையும் அங்கே ஒருங்கே வெளிப்பட்டது. அதோடு திருக்குறளுக்கு ஆடியது மேனியை சிலிர்க்க வைத்தது.
Chair / Co-Chair person
கால்டுவெல் வேள்நம்பி
சிறப்பாக வந்திருந்த விழா மலர் வெளியீடு முடிய, கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த தம்பதியினர், முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த் குழுவினர் வந்து மரபு சார்ந்த பறை, பம்பை சிலம்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி  அருமையான நிகழ்ச்சியொன்றை நடத்தினர். Fetna முடிந்த கையோடு பல ஊர்களுக்கும் இவர்கள் சென்று பறை பயிலும் பட்டறைகளை நடத்தினர். நியூயார்க்கிலும் நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள் முயற்சியாலும், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் ஆதரவிலும் ஒரு பயிற்சிப் பட்டறை இங்கும் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்னால் இதில் பங்கு கொள்ள முடியவில்லை. என்னவோ தெரியவில்லை. அமெரிக்காவெங்கும் பறை கற்றுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. குறிப்பாக நியூயார்க், நியூஜெர்சி, கனக் டிக்கட், வாஷிங்டன் ஆகிய ஊர்களில் குழுக்களும் இருக்கின்றன. அருமையாக வாசித்து அசத்துகிறார்கள்.
பறை என்பது தாழ்த்தப்பட்டவர்களின் இசைக்கருவி என்ற தவறான எண்ணம் நீங்கி தமிழரின் பாரம்பரிய இசைக் கருவி என்று மாறி அதனைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வது அமெரிக்கத் தமிழர் மத்தியில் தான் அதிகம் காணப்படுவதாக தெரிகிறது.
Chair / Co-Chair person
பழனிச்சாமி
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சுப. வீரபாண்டியன் தலைமையில் கருத்துக்களம் நடந்தது. அடியேனும் இதில் கலந்து கொண்டேன். மகளில் மரபு  மற்றும் மழலையர்  மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்புகளில் இரண்டு அணிகளாக மொத்தம் 10 பேர் உரையாற்றினோம். உரையாற்றுபவர்களை  ஏற்கனவே தேர்ந்தெடுத்து அதற்கு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பழனிச்சாமி என்ற நல்ல ஒரு நெறியாளரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் எங்களை எல்லாம் மிகவும் பொறுமையாக வழி நடத்தி, ஆலோசனைகளைச் சொல்லி நெறிப்படுத்தி வந்தார். ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமை இரவும் 9 மணிக்கு தொலைபேசியில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. பல ஊர்களிலிருந்தும்  ஏன் கனடாவிலிருந்தும் கூட இதில் மொத்த பத்துப்பேரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். நான் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல முறை கலந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் பழனி பரவாயில்லை என்று சொன்னது என்னை குற்றப்படுத்தி நெகிழவைத்து விட்டது. பேசிய பலரும் சங்க காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எடுத்துப்பேசி அசத்தினர். ஆனால் சுப வீரபாண்டியன் அவர்களின் தொகுப்புரை மிகவும் அருமை. ஒரு தேர்ந்த பேச்சாளிக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவர் பெயரையும் ஞாபகம் வைத்து அவர்களுடைய  கருத்துகளுக்கான மாற்றுக்  கருத்துகளை நாசூக்காக வைத்ததாகட்டும், பிற்போக்குச் சிந்தனைகளை விட்டு முற்போக்காக எப்படி வரவேண்டும் என்று சொன்னதாகட்டும், நேரத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சொல்ல வேண்டியவற்றை அருமையாக தொகுத்துச் சொல்லியும் அற்புதமாக இருந்தது. தாம் கொண்ட திராவிட சிந்தனைகளிலிருந்து வழுவாது ஆனால் வேறு எவரையும் புண்படுத்தாது இவர் பேசியபோது இவரை மாதிரியான ஒரு தலைவர் அல்லவா நமக்கு இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் கூட சில நிமிடங்கள் பழகியதும் மேடையைப் பகிர்ந்து கொண்டதும் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பென்று நினைக்கிறேன். 

பேசிய கடைசிப் பேர்களில் ஒருவனாக இருந்தாலும் பழனி சீக்கிரமாகப் பேசி முடிக்க வேண்டியதாலும், என் உரை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது என் கருத்து. ஏற்கனவே தயாரித்திருந்த உரையில் நேரக் கட்டுப்பாடு கருதி எங்கே வெட்ட வேண்டும் எங்கே ஒட்ட வேண்டும் என்று உடனுக்குடன் முடிவு செய்வது ஒரு கலை தான்.

அதன்பின் வெவ்வேறு தமிழ்ச் சங்கங்களிலிருந்து சிறப்பு நிகச்சிகள் நடத்தப்பட்டன. மதிய நிகழ்வுகளில் முக்கியமாக  பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தமிழன்பன் தலைமையில் நடக்க வேண்டிய ஒன்று அவர் வந்து சேர முடியாதலால் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். தமிழன்பன் ஏற்கனவே சொல்லியிருந்த தலைப்புகளில் கவிதைகள் எழுதப்பட்டு தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் மட்டுமே அரங்கேறின.    

கவியரங்கத்தில் ஞானசம்பந்தன் பேசிக் கொண்டே இருந்தார். பல சமயங்களில் அவர் பேசியது சுவையாக இருந்தாலும் சிரிப்பை வரவழைத்தாலும், தொட்டுத்தொட்டு நான்ஸ் டாப்பாக போய்க் கொண்டிருந்தது எல்லோரையும் அயர வைத்துவிட்டது. கவியரங்கத்தில் பேசுவதும் காணாத ஒன்றுதான்.
நிறைய கவிதைகள் சிறப்பாக இருந்தன குறிப்பாக அல்லது வழக்கம்போல் மகேந்திரன் பெரியசாமி மற்றும் கனிமொழி ஆகியோரின் கவிதைகள் சுவையாக இருந்தன.
Image result for fetna 2018 dallas

-தொடரும்.

Thursday, August 2, 2018

தமிழில் இத்தனை தொழில் முனைவர்களா?



Fetna – 2018 பகுதி 3
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_26.html

2017 ஆகஸ்ட் மாதமே, 2018-ன் Fetna திருவிழா, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லஸ் பெருநகரில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டேன். அதனைக்குறித்து தமிழ்ச்சங்க விழாக்களில் தொடர்ந்து அறிவித்துக் கொண்டு இருந்தனர்.  நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்புக்கு வந்தபின் வரும் முதல் Fetna  என்பதால் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து 2017 செப்டம்பர் மாதமே நான்கு விமானப்பயணச் சீட்டுகளையும் தங்குவதற்கு விடுதிகளையும் புக் செய்தேன். Fetna எப்போதுமே ஜூலை மாதம் 4ஆம் தேதி  வரும் அமெரிக்க சுதந்திர நாளை ஒட்டி வரும் விடுமுறை வார இறுதியில் குறைந்த பட்சம் 3-அல்லது நான்கு நாட்கள் நடக்கும் என்பது உங்களில் பலபேருக்குத் தெரிந்திருக்கும்.
டல்லஸ் நகருக்கு இதுவரை நான் சென்றதில்லை என்பதால் இதனை 2018-ன் குடும்ப சுற்றுலாவாகவும் ஆக்க முடிவு செய்து ஃபெட்னா   மூன்று நாள் தவிர இன்னுமொரு மூன்று நாட்கள் அங்கு தங்கி டல்லஸ் நகரைச் சுற்றிப்பார்த்து விட்டு வருவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் இறுதியில் என் மனைவி வரமுடியாத சூழ்நிலையில் நானும் என் இரு மகள்களும் மட்டும் கிளம்பினோம்.
டல்லஸில் இருக்கும் ஃபிரிஸ்கோ என்ற (Frisco) பகுதியில் இருக்கும் டாக்டர் பேப்பர் ஏரினா (Dr.Pepper Arena) என்ற அரங்கத்தில் முக்கிய நிகழ்வுகளும் அதன் பக்கத்தில் இருக்கும் எம்பஸி சூட்டில் (Embassy Suite)  மற்ற இணை நிகழ்வுகளும் நடைபெறும் வண்ணம் திட்டமிட்டிருந்தனர். நாங்கள் தங்கியது அரங்கின் நேர் எதிரேயுள்ள “ஹில்டன் கார்டன்” என்ற ஹோட்டலில், ஜூன் 28 2018 அன்று இரவே சென்று சேர்ந்தோம். 
ஜூன் 29 வெள்ளிக்கிழமை காலை தமிழ் தொழில் முனைவோர் கூட்டம் காலை முதல் மாலை வரை நடந்தது.

அரங்கின் முன்னே மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க அமைப்பினர் சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சந்தனம் கற்கண்டோடு பன்னீர்  தெளித்து வரவேற்றனர். ஃபெட்னா விழாவிற்கு வந்திருந்த நன்கொடையாளர்களை, மாபெருங் கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல், கொடை வள்ளல் மற்றும் வள்ளல் என்று அவரவர் நன்கொடையின் அளவைக் குறித்து பிரிக்கப்பட்டு பேட்ஜ்களை கொடுத்திருந்தனர்.நான் கொடை வள்ளல் இல்லையென்றாலும் கடை வள்ளல் என்று மகிழ்ந்திருந்தேன்.  ஆகா பேகன்,பாரி ஓரி, நள்ளி ஆகிய வள்ளல்களை அடுத்து இந்த ஒல்லிதான்  அடுத்த வள்ளல் என்று பெருமையோடு அணிந்து ராஜநடை நடந்து கம்பீரத்துடன்  (?) நடந்து சென்றால் அதுதான் கடைசி கேட்டகிரி போல. கடைசி வள்ளல் கேட்டகிரியில் ரிஜிஸ்டர் செய்திருந்தேன் என்று பின்னர்தான் தெரிந்தது.
டாக்டர் பெப்பர் ஏரினா மிகப்பெரிய அரங்கம். அருமையான மேடை அற்புதமான ஒலி / ஒளி அமைப்பு. மேடையின் இருபுறமும் இருபெரிய டிவிக்கள் அதன் மேலேயும் 4 டிவிக்கள், பின்புறம் பிரமாண்டமான எல்சிடி திரையென்று ஆற்றா டிஜிட்டலாக இருந்தன. அதனை ஆப்பரேட் செய்வதற்கு குறைந்தபட்சம் 5 பேர் தங்கள் லேப்டாப் சகிதமாக ஹெட்போனுடன் அமர்ந்திருந்தனர்.
நுழைந்தவுடன் சுடச்சுட இட்லி, வடை, பொங்கல் என்று காலை உணவு தயாராக இருந்தது. தினமும் ஓட்மீலைத்தின்று அல்லது விழுங்கி ஓடாய்த்  தேய்ந்து போயிருந்த இந்த காய்ஞ்ச மாடு ஒரே பாய்ச்சல் பாய்ந்தது. சுகரையும் ஃபிகரையும் மறந்து ஒரு வெளு வெளுத்தேன்.
இலேசான மயக்கத்தில் உட்கார்ந்திருந்த நான் சுற்றிப் பார்த்தபோது தான்  முன்னால் இருந்த நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின்  முன்னாள் இந்நாள் தலைவர்கள் பலபேரைப் பார்த்தேன். அப்புறம் சேர்ந்து உட்கார்ந்து கொண்டோம். வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்க தேசிய கீதமும் பாடி முடித்தவுடனே  தூத்துக்குடியில் உயிர்நீத்த நம் தமிழ் உறவுகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தி முடித்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

Fetna வின் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பி வரவேற்புரை ஆற்றினார். 
பல பேர் தொடர்ந்து உரையாற்றினார்கள். பதின்ம வயதுப் பிள்ளைகள் வந்து அவர்களை அறிமுகப்படுத்திச்சென்றனர். பேசியவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்களை கீழே தருகிறேன்.
அருள் முருகன் - CEO  11-11 ventures
காஞ்சனா ராமன் - CEO  Avion Networks  
ராம் நாகப்பன் –  CIO BNY Mellom
முரு. முருகப்பன் -CIO BNSF
அருள்பாண்டியன் - Founder :Signal  Corps Recordings
இதில் அருள் பாண்டியன் தன்னுடைய இசைக்காக கிராமி விருது  வாங்கிய இளைஞர் மிகவும் பெருமையாக இருந்தது.
பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கும் தமிழர்களில் இத்தனை தொழில் முனைவர்கள் அதுவும் அமெரிக்காவில் இருந்தது பெரும் மகிழ்ச்சியைத்தந்தது.
          அதிமுக அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் வரவில்லை. அவருக்குப் பதிலாக அவரின் மனைவி ஹேமலதா பாண்டியன் வந்து உரையாற்றினார். பாண்டியராஜனும், மு.க. ஸ்டாலினும்  நல்லவேளை வரவில்லை. வந்தால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வெளியே சிலர் காத்திருந்தனர்.
இந்தச் சிறப்பு நிகழ்வில் பிரபுதேவா "உங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. அவரும் வரவில்லை. ன் வரவில்லை என்ற அறிவிப்பும் இல்லை.

நடிகர் கார்த்தி வந்து அகரம் அமைப்பினைப் பற்றி ஒரு நெகிழ்வான உரையாற்றினார். அவர் காட்டிய வீடியோவும் அகரம் செய்யும் உதவிகளைக் கோடிட்டுக் காட்டியது. அதுதவிர சிக்காகோ காங்கிரஸ்மேன்  ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.
அன்று மாலை '' என்ற சிறப்புப் பாடலுக்கு டல்லஸ் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த குழுவினர் அழகிய நடனம் ஆடினர். மேலும் தமிழ்ப் பாடல்களுக்கு  அமெரிக்கப் பெண்கள் ஆடிய நடனமும் நன்றாகவே இருந்தது.

அதன்பின் ஹிப் ஹாப் தமிழா வந்து ஒரு பொறுப்பான உரையாற்றி ஆச்சரியப்படுத்தினர்.
இப்படியாக TEF Talk  என்னும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்த  உணவு ஏற்பாடுகள் பற்றி தனியாகச் சொல்கிறேன்.
-தொடரும். 
Photo Courtesy : Fetna 2018