Thursday, January 24, 2019

மானம் காத்த முல்லைத்தீவு மன்னன் !!!!!!!!!!


படித்ததில் பிடித்தது

பாயும் புலி பண்டாரக வன்னியன்

 கலைஞர் மு.கருணாநிதி ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Add caption
கலைஞர் கருணாநிதி எழுதிய இந்தப் புதினத்தை பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதுதான் கலைஞர் அவர்கள் தன் நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். தென்பாண்டிச் சிங்கம், ரோமாபுரிப்பாண்டியன், பொன்னர் சங்கர் போன்ற அவர் எழுதிய வரலாற்று நவீனங்களில் ஒன்றுதான் பாயும்புலி பண்டாரக வன்னியன்.
முல்லைத்தீவில் உள்ள  பண்டாரக வன்னியன் சிலை

கலைஞர் கருணாநிதியை எனக்குப் பிடிக்கும். பெரியார் வழியில் அண்ணாவிடம் பெற்ற அவருடைய சுயமரியாதைக் கொள்கை, சமூக நீதியில் பற்று, மதச் சார்பின்மை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை அவரின் ஆகச்சிறந்த கொள்கைகள். அதே போல அவருடைய பேச்சு, நகைச்சுவை ஆற்றல், எழுச்சியூட்டும் திரைப்பட வசனங்கள் ஆகியவை எல்லோரையும்  கவருபவை. முரசொலியில் “தம்பிக்கு எழுதிய கடிதங்கள்” என்ற பகுதியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நெஞ்சுக்கு நீதி இலக்கியத்தரம் வாய்ந்த அரசியல் வரலாறு.
ஆனால் அவரின் கவிதைகள் மற்றும் வரலாற்று நவீனங்கள் கல்கியின் வரலாற்றுக் காவியங்களான பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் ஆகியவற்றுக்கு ஒப்பிட முடியாது. கல்கிக்கு அடுத்த படியாக வரலாற்று நவீனங்கள் எழுதிப் புகழ்பெற்ற சாண்டில்யன் கூட ஒரு படி கீழேதான். அதற்கும் அடுத்தபடிதான் கருணாநிதியின் "பாயும் புலி பண்டாரக வன்னியன்".
இந்த நாவல் இலங்கையில் முதன் முதலில் ஆங்கிலேயருக்கு சுதந்திரக் குரல் எழுப்பிய "குலசேகரம் வைரமுத்து" என்ற பண்டாரக வன்னியன் என்ற அரசனின் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டது.
விக்ரமராஜசிங்கன்
இவன் இலங்கையின் தமிழர் பகுதியான முல்லைத்தீவை ஆண்டு வந்தவன். ஆங்கிலேயர் கொழும்புப் பகுதியை போர்த்துக் கீசியரை வென்று ஆக்ரமித்ததில் இருந்து இலங்கையின் மற்ற பகுதிகளையும் தங்களது ஆளுகையில் கொண்டுவர முயன்றனர். அவர்களுக்கு தீராத தலைவலியாக இருந்தது முல்லைத்தீவும் கண்டியும். இவ்விரண்டுமே சுதந்திர பகுதிகளாக இருந்ததோடு இதனை ஆண்டு கொண்டிருந்தவர்கள் பண்டார வன்னியன் மற்றும் விக்ரம ராஜசிங்கன் என்ற ஒரு தமிழ் மன்னர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம ராஜசிங்கன் மதுரை நாயக்க மன்னர்களின் பரம்பரையில்  பிறந்தவன். இவன் கண்டியை ஆண்ட ராஜாதி ராஜ சிங்காவின் மகன். ராஜசிங்காவின் 2 மனைவிகளுக்கு  பிறந்த கண்ணுச்சாமி, முத்துச்சாமி என்பவர்கள் பதவிக்கு போட்டி போட்டதில் கண்ணுச்சாமிக்கு பதவி கிடைத்தது. இந்தக் கண்ணுச்சாமியின் பட்டப்பெயர்தான் விக்ரமராஜசிங்கன்.
பதவி கிடைக்காத வெறுப்பில் முத்துச்சாமி ஆங்கிலேயருடன் சேர்த்து காட்டிக் கொடுத்து வீணாய்ப்போனான்.
இந்த மாதிரி மிகவும் அறியப்படாத சில வரலாற்று நிகழ்வுகளை இந்தப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பண்டாரக வன்னியின், கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை மற்றும் மருது பாண்டியர்களோடு தொடர்பில் இருந்தவன், மாவீரன். ஒரு சிறிய பகுதியை ஆண்டாலும் உயிருக்குத் துணிந்து மானமே பெரிது, அடிமை வாழ்வு வாழ்வதற்குப் பதில் உயிரைக் கொடுக்கலாம் என்று நினைத்து வாழ்ந்தவன். இளவயதிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து போரில் வீர சொர்க்கம் அடைந்தவன்.
ஊமைத்துரை வெள்ளையத்தேவனின் தூதுவனாக, சுந்தரலிங்கம் என்பவன் முல்லைத்தீவுக்கு வருவதில் கதை ஆரம்பிக்கிறது. அங்கேயுள்ள வற்றாப்பனை  கண்ணகி கோவிலில் நடக்கும் விசாகத்திருவிழாவிற்கு சுந்தரலிங்கம் வந்து சேருகிறார்.
மேலும் பல வரலாற்றுப் பாத்திரங்களான காக்கை வன்னியன், பிலிமதளா, பியசீலி, குருவிச்சி நாச்சி, பேட்ஜ், மெக்டோவல் ஆகியோரை கதைக்களத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, வற்றாப்பனை, கரிக்கட்டு மூலை ஆகிய ஊர்களும் கதையில் வருகின்றன.
வரலாற்று நிகழ்வுகளை சுவைபடச் சொன்னது மட்டுமல்லாது எழுத்தில் கொஞ்சம் காமரசம் தூக்கலாகவே இருக்கிறது. ஆனாலும் வேண்டுமென்று திணித்தது போல்  தெரியவில்லை.
எழுத்து நடை கதைவசனம் போல் இருக்கிறது.  கலைஞரின் சிறப்பம்சமான அடுக்கு மொழி நடை, கவிதை நடை,  உரைநடையிலும் வெளிப்படுவது சிறப்பம்சம்.
குரங்கு சிரங்கு, வாடகை வனிதை, விழிகளில் கசியும் விஷம் போன்ற  சொல்லாடல்களை மிகவும் ரசித்தேன்.
எனக்கென்னவோ கலைஞர் சிறிது அவசரகதியில் எழுதினாரோ என்றும் தோன்றுகிறது. நிதானமாக ஒருவேளை எழுதியிருந்தால் சிறந்த கலைப்படைப்பாக உருவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனாலும் அவருக்கிருந்த வேலைப்பளுவில் பலதளங்களிலும் செயலாற்றியது வியப்பைத் தருகிறது.
கலைஞரின் உரைநடை, இலங்கையின் வரலாறு போன்றவற்றை விரும்புபவர்கள் இந்த நாவலைப் படித்து மகிழலாம்.
முற்றும்

முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி  நிமித்தமாக  மெக்ஸிகோ சிட்டிக்கு செல்வதால் வரும் வாரத்தில் (ஜனவரி 28 முதல் பெப்ருவரி 1 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

Tuesday, January 22, 2019

ராமனாக வாழ்ந்து அனுமாரான குரங்கு !!!!!!
வேர்களைத்தேடி பகுதி 34
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2018/11/blog-post_26.html

தேவதானப்பட்டியில் பொதுவாக குரங்குகள் இல்லை. இதை இங்கு நான் சொல்லும்போது என்னைப்போன்று அங்கிருந்த குரங்குகளைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் தேவதானப்பட்டி,  வனப்பகுதிகளின் பக்கத்தில் இருப்பதால் மான், நரி, குரங்கு, கழுதைப்புலி, சிறுத்தை, முயல், பன்றி, காட்டெருமை , கேளையாடு, ஓநாய் போன்ற பல மிருகங்கள் பக்கத்து வனங்களில் இருந்தன. மஞ்சளாறு வனம், முருகமலை, கும்பக்கரை மலைப்பகுதி, கொடைக்கானல், காட்ரோடு என்ற பல பகுதிகளில்  அவை இருந்தன.
கூட்டமாக வாழும் குரங்கு, யானை ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்குமாம். அவற்றை மீறுபவைகளுக்கு தண்டனை என்னவென்றால் கூட்டத்திலிருந்து தனித்து விடப்படுமாம். அப்படி தனிமைப் படுத்தப்பட்ட ஒற்றை யானை எப்போதும் கோபமாக இருக்கும் . குரங்கும் அப்படித்தான்.
அப்படி ஒரு குரங்கு துரத்தப்பட்ட நிலையிலோ அல்லது வழி தவறியோ தேவதானப்பட்டிக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அது கோபமாக இருக்கவில்லை, யாருக்கும் பயப்படவுமில்லை, யாரையும் பயமுறுத்தவும் இல்லை. அப்படி சகஜமாக எல்லோருடனும் பழகி கலந்துவிட்டது. அதற்குப் பொருத்தமாக யாரோ ராமன் என்ற பெயரும் சூட்டினார்கள். இந்தப் பெயரைக் கேட்டதும் மூன்றாம் பிறையில் 'ஆடுறா ராமா ஆடுறா ராமா' என்ற காட்சி உங்களுக்கு வரத்தவறினால் நீங்கள் அந்தப்படத்தை இதுவரையில் பார்க்கவில்லை  என்ற மாபெரும் குற்றத்தைச் செய்திருக்கிறீர்கள்.
தேவதானப்பட்டி மெயின்ட்ரோட்டில் காவல் நிலையம் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலிலும் அதன் எதிரே இருந்த அரச மரத்தடியிலும் தான் அதன் வாசம். முதலில் அதனைப் பார்த்துத் தயக்கமும் பயமும் அடைந்த என்னை மாதிரி சிறுவர்களும் அப்புறம் அதனிடம் பழகி விட்டோம். பிள்ளையார் கோவிலில் கிடைக்கும் தேங்காய், வாழைப்பழம், பிரசாதம் என்று உணவுக்கு எந்தப்பஞ்சமும் இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ராமன் வளர்ந்து வந்தான். பெயர் ராமன் என்று வைத்ததால் அது ஆண் குரங்குதான் என்று தெள்ளத் தெளிவாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஹிஹி.
Thanks Reutrs
கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் இல்லாத சமயத்தில் பசி எடுத்தால் பெட்டிக்கடைக்குச் செல்வான்,  நிற்பான். கடைக்காரர் உடனே ஒரு வாழைப்பழத்தை தாரிலிருந்து பிய்த்துத்தருவார். அதனை நன்றியுடன் வாங்கிக் கொண்டு நகர்ந்து விடுவான்.  முறுக்கு  போன்ற எந்த தின்பண்டங்கள் கொடுத்தாலும் தட்ட மாட்டான் .அதோடு எவர் கையில் இருப்பதையும்  தட்டிப்பறிக்கமாட்டான் , ஒருபோதும் திருடவும் மாட்டான் . பசியெடுத்தால் தவிர இப்படி கடைக்குப் போவதில்லை. திரும்பத்திரும்ப ஒரே கடைக்கும்   போவதில்லை என அவனுக்கு சில நல்ல பழக்கங்களும் இருந்தன. கடைக்காரர்களும் அன்புடனே கவனித்தார்கள்.
பெயர் ராமன் என்றும் ராமனுக்கு உதவிய அனுமான் என்றும் கதைகள் சொன்னாலும், இந்த ராமனுக்கு பிள்ளையார், முத்தாளம்மன், கொண்டைத்தாத்தா, கிருஷ்ணன் மற்றும் அய்யப்பன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. பெட்டிக்கடை வைத்திருக்கும் முஸ்லிம்  கடைகளிலும் அவனுக்கு அன்பும் அனுசரணையும் உண்டு. எங்கள் கிறித்தவ ஆலயத்திற்கும் ஓரிறு முறை வந்து தலை காட்டியிருக்கிறான்.
எனவே அவனுக்கு ராமன் என்ற பெயர் மட்டுமல்ல ரஹீம் மற்றும் ராபர்ட் என்று எந்தப்பெயர் வைத்தாலும் பொருத்தம் தான். மிருகங்களுக்கு ஏது சாதியும் சமயமும் எல்லாம். எல்லோருடனும் பிரியமுடனே பழகி வந்தான்.
சில சமயங்களில் அவனுக்கு யாராவது நாமம் போடுவது உண்டு. அது அவனுக்கு அழகாகவும் பொருத்தமாகவும் இருந்தது. அவன் சாதுவாகவே இருந்து எல்லோரின் அன்பைப் பெற்றவனானான்.
வாழைப்பழம் மட்டுமல்ல அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் கொய்யாப்பழம், மாங்கனி, சப்போட்டா,  பிளம்ஸ் என்று பல பழங்கள் அவனுக்கு கிடைக்கும்.  மேலும் வேர்க்கடலை, கப்பக்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்றவையும் அவனுக்கு விருப்பமான உணவுகள் தான். இதுதவிர அவனுக்கு யாரோ காப்பி வாங்கிக்  கொடுக்க அதனையும் பழகிவிட்டான். அவனுக்கென்று சிரட்டைகளை ரெடி பண்ணி டீக்கடைகளில் வைத்திருப்பார்கள். பதமாக ஆற்றித்தருவார்கள். அதனை அவன் நன்கு உட்கார்ந்து ருசி பார்த்து உறிஞ்சிக்குடிக்கும் அழகே தனிதான். யாரோ அவனுக்கு சட்டை தைத்தும் போட்டுவிட்டார்கள். அவன் அழகு அதனால் கூடிப்போனது.
Thanks Google 
           
இது தவிர யாரோ சில மோசக்காரர்கள் அவனுக்கு சாராயத்தை பழக்கிக் கொடுத்துவிட்டார்கள். அதிலிருந்து மாலையானால் கொஞ்சம் மயக்கத்துடன் சுருண்டு படுத்துவிடுவான். நாங்கள் கூட  உடம்பு சரியில்லை யென நினைத்தோம் . ஆனால் இந்த விஷயம் பல நாட்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது. ஓரிருமுறை பீடி குடித்தும் பார்த்திருக்கிறேன் . இப்படி நல்ல குணங்களுடன் இருந்த குரங்கை சில மானிட மிருகங்கள் மாற்றி விட்டன .
இப்படி ஊர் மக்களோடு ஒன்றாக இணைத்து அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
இரவில் கண்மண் தெரியாமல் வந்த லாரியொன்றில் அடிபட்டுச் செத்துப்போனான் ராமன் . குடி மயக்கத்தில் லாரியில் அடிபட்டிருக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள்.
ஊரெங்கும்  இதே பேச்சு, ஊரே சோகமாகி விட்டது.  அதன்பின்னர் கிருஷ்ணன் கோவில் மக்கள் அதனை நன்கு அலங்கரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்து சிறிய பாடை ஒன்று செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று குளக்கரையில் இருந்த அய்யப்பன் கோவிலின் எதிரே புதைத்தார்கள். மூன்றாம் நாள் பால் கூட ஊற்றினார்கள் என்று கேள்விப்பட்டேன்.
சிறிது நாட்கள் கழித்து ஊரில் எல்லோரிடமும் வசூல் செய்து சதுரமாக இடுப்பளவு உயரத்தில் ஒரு கல்லறையையும் கட்டி இப்போது அதனை வழிபடுகிறார்கள்.
அய்யப்பன் கோவில் முன்னால் அந்த அனுமார் கோவில் இன்னும் இருக்கிறது. நீங்கள் தேவதானப்பட்டிக்குப்போனால் அங்கு இந்தக்கோவிலைப்  பார்க்கலாம். ராமனை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகிவிடுகிறது.
 அடுத்த வாரம் வாருங்கள் கும்பக்கரைக்குப் போவோம்.

-தொடரும்.

Thursday, January 17, 2019

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரியம் வளர்கிறதா? தேய்கிறதா?

தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?

               பொங்கல் திருநாளை முன்னிட்டு அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சியான tamerica.tv யில்   சிறப்பு பட்டிமன்றம்  நடந்தது .வாஷிங்டன் பகுதி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் அகத்தியன் பெனடிக்ட் அவர்கள் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
 தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?  என்ற தலைப்பில்  நடந்த இந்த நிகழ்ச்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம் .Monday, January 14, 2019

கரும்பு சாப்பிடுவது எப்படி?


பொங்கல் சிறப்புப்பதிவு -2
இதன் முந்திய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2019/01/blog-post_10.html

எச்சரிக்கை: நீங்கள் எழுபது வயதிற்கு மேற்பட்டவரா? செயற்கைப் பற்தொகுப்பைப் பயன்படுத்துபவரா? அல்லது மிகவும் இனிப்பானவரா? இந்தப்பதிவு உங்களுக்கானதல்ல. மீறிச்சாப்பிட்டு பல் விழுந்தாலோ, தாடை உடைந்தாலோ, சுகர் ஏறினாலோ அது கம்பெனியைச் சார்ந்ததல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Add caption
கரும்புகளில் பலவகை உண்டு. ராமர் கரும்பு, பீச்சிக்கரும்பு அல்லது கருப்புக்கரும்பு, ஆலைக்கரும்பு, கம்பெனிக்கரும்பு ஆகியவை அவற்றுள் சில . ராமர் கரும்பு, ராமர் நாமம் போல கணுக்களைக் கொண்டு லேசான கிரே மற்றும் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் எளிது. அவ்வளவு இனிப்பாக இருக்காது. ஆனால் இவற்றை BJP ஆட்சி வந்தும் கூட இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை.
பீச்சிக்கரும்பு
ஆலைக்கரும்பு என்பது அதே வண்ணத்தில் சிறிது குட்டையாகவும், விட்டம் சிறிதாகவும் இருக்கும். இதனைக் கடித்துச்   சாப்பிடுவது கடினம். இளைஞர்களுக்குக் கூட பல் உடைந்துவிட வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் கரும்பு ஜூஸ் கடைகளில் இதனைத்தான் பயன்படுத்துவார்கள் .  இவற்றை வயலிலேயே தற்காலிக ஆலை அமைத்து வெல்லம் செய்வார்கள்.
ஆலைக்கரும்பு
கம்பெனிக் கரும்பு என்பது தமிழக மெங்கும் உள்ள சர்க்கரை ஆலைகளின் மேற்பார்வையில் அவர்களே கொடுத்த கரும்பை நட்டு விளைவித்து அவர்களுக்கே கொடுத்துவிடுவது. டன்னுக்கு இவ்வளவு என்று விலை கிடைக்கும். இந்தக் கரும்பையும் கடித்துச் சாப்பிடுவது கடினமான காரியம்தான்.
இதனை எல்லாவற்றையும் நான் அனுபவித்தவன் என்ற முறையில் என் பேச்சை கேட்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவற்றுள் கடித்துச் சாப்பிடுவதற்கெனவே விளைவிக்கப்படும் கரும்பு பீச்சிக்கரும்பு அல்லது கருப்புக் கரும்பு. பொங்கல் சமயத்தில் ஏராளமாக வரும் . கரும்பு சாப்பிடவில்லை என்றால் அது பொங்கலே கிடையாது.
முதலில் கரும்பை எப்படி வாங்க வேண்டும்? என்று பார்ப்போம்.
1)   கரும்பு நல்ல திடமானதாக திரமானதாக தரமானதாக இருக்க வேண்டும். அவைதான் நன்கு விளைந்தவையாகும்.
2)   கணுக்களின் இடைவெளி அகலமானதாக இருக்க வேண்டும்.
3)   கரும்பின் தோகைகள் புதிதாக, செழிப்பானதாக, பச்சைப் பசேல் என்று இருக்க வேண்டும்.
4)   நிறம் நல்ல அடர் கருப்பாக இருக்க வேண்டும். கருஞ்சிவப்பு நிறத்தை தவிர்க்கவும்.
5)   உடனே சாப்பிடுவதென்றால் மட்டுமே தோகைகளை நீக்கி வாங்க வேண்டும்.
6)   வெட்டித் துண்டுகளாக வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். உடனே சாப்பிடவில்லையென்றால் காய்ந்து விடும் அல்லது சிவப்பு பூத்து சுவை குன்றிவிடும்.
7)   தோகையின் உடன் கீழே இருக்கும் கொழுத்தாடையைச் சாப்பிடக் கூடாது.
8)   அடிக்கரும்பின் வேர் இருக்குமென்பதால் அதனை நீக்கி அடியின் ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டிவிட வேண்டும். ஏனென்றால் கரும்பில் சுவை மிகுந்தது அடிக்கரும்பு தான்.
9)   கரும்பை வெட்டும்போதும் துண்டு போடும்போதும் இரு கணுக்களின் இடையே வெட்ட வேண்டும்.
10)               சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது சாப்பிடுவதற்கும், டயட்டிற்கு எளிதாகவும்  இருக்கும்.
கரும்பை எப்போது சாப்பிடலாம்?
1)   காலையில் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்திலோ அல்லது மதிய உணவிற்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்திலோ சாப்பிடலாம்.
2)   சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துச் சாப்பிடலாம்.
3)   உணவு உண்பதற்கு சற்று முன்பதாகவோ  சற்று பின்பதாகவோ உடனேயே கரும்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உண்டு முடித்து சிறிது இடைவெளிவிட்டுச் சாப்பிட்டால் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
கரும்பை எப்படிச்சாப்பிட்ட வேண்டும் ?   
1)   கரும்பை ஜூஸ் பிழிந்து சாப்பிடுவதை விட , முடியுமென்றால் கடித்துச் சுவைத்துச் சாப்பிடுவதே சிறந்த முறை.
2)   கணுக்களில் நடுவிலே வெட்டியிருப்பதால் ஒரு முனையில் கடித்து தோலோடு உரித்து இழுத்து பற்களுக்குக்கிடையே வைத்து சாறு பிழிந்து சாப்பிடுவது நல்லது.
3)   இதன் மூலம் பற்கள் உறுதிப்படும், பற்கள் நாவு மற்றும் ஈறுகள் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் கூட போய்விடும்.
4)   தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவது ஆப்பிள் கொய்யா போன்ற பழங்களை தோல் நீக்கிச் சாப்பிடுவதற்கு சமம். அப்படிச்செய்யாதீர்கள்.
5)   கணுக்களில் பல்லால் கடிக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முடியவில்லையென்றால் கூச்சமோ வெட்கமோ படாது கணுப்பகுதியை வெட்டி எறிந்து விடுவது உத்தமம். பல் உடைந்து, ஈர் கிழிந்து வாய் ரத்த வெற்றிலை போடுவதை விட இது பரவாயில்லை.
6)   மென்று உறிஞ்சியவுடன் சக்கையைக் கவனமாகத் துப்பி விட வேண்டும். இல்லையெனில் தொண்டையில் மாட்டி சோக் ஆவது ஜோக் அல்ல.
7)   போட்டிக்குச் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று முழு சவளத்தையும் ஒரே மூச்சில் சாப்பிடக் கூடாது. வயிறு உப்பி , வாய் புண்ணாகிவிடும்.
8)   சிறிய துண்டுகளாக இடைவெளி விட்டுச் சாப்பிடுவது அவசியம்.
எப்படி சாப்பிடக்கூடாது?
1)   வாயில் ஏற்கனவே புண்களோ கொப்புளங்களோ இருந்தால் கரும்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2)   சாப்பிட்டபின் வாயில் உள்ள சிறு சக்கைத் துகள்களை எங்கிருந்தாலும் தோண்டியெடுத்து துப்பிவிடுதல் நலம். ஒன்றிரண்டு உள்ளே சென்றுவிட்டால் மரணபயம் தேவையில்லை. அது அடுத்த நாள் வந்துவிடும்.
3)   கரும்பு சாப்பிட்டபின் வாயைக் கழுவுகிறேன் பேர்வழி என்று தண்ணீரில் கொப்பளித்தால் வாய் வெந்து கொப்பளித்துவிடும் . ஜாக்கிரதை அதோடு கரும்பு சாப்பிட்டவுடன் மறந்து கூட தண்ணீர் குடிக்கக் கூடாது.
4)   லேசாக உதடுகளை நனைத்து துடைத்துக் கொள்ளலாம்.
5)   உடம்பிலோ ஆடையிலோ பட்டால் பிசுபிசுக்கும். தரையில் பட்டாலும் உடனே துடைத்து விடுவது நல்லது.
6)   கரும்பில் அஸ்கார் பிக் என்ற அமிலத்தன்மை இருப்பதால் இப்படி ஏற்படுகிறது.
7)   வெளிநாட்டுத் தமிழர்கள் டப்பாக்களில் அடைத்துவரும் கரும்பை பூஜைக்கு வேணுமென்றால் பயன்படுத்தலாம். சாப்பிட்டு விடாதீர்கள் தயவு செய்து கேவலமாய் இருக்கும்.
இன்னொரு இனிப்பான செய்தி, கரும்பு விளைவிப்பதில் இந்தியாவுக்கு உலகின் இரண்டாம் இடம். முதலிடத்தில் இருப்பது பிரேசில்.

நியூயார்க்கில் கரும்பு கிடைக்கும் இடங்கள்
1)   பெல்ரோஸ் அல்லது ஹிக்ஸ்வில்லில் இருக்கும் நமது தமிழ்க்கடையான மகாராஜாவில் கிடைக்கும் . இல்லையென்றால் அதன் உரிமையாளர் திருச்சிக்கார செந்திலிடம் முறையிடுங்கள். தேவைப்பட்டால் திட்டுங்கள்.
2)   நமது பிள்ளையார் கோவிலின் அருகேயுள்ள கிஸ்ஸனா புலவர்ட்டில் உள்ள கொரியன் கடையில் கருப்பு  கரும்பு கிடைக்கும். (அங்கே போய் கிஸ்ஸனா என்றால் என்ன என்று கேட்பதைத் தவிர்க்கவும். கொரியனும் மார்ஷியல் ஆர்ட்டில் சளைத்தவர்களல்ல. சிறிது கற்றுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
3)   ஃபிளஷிங்  மெயின் ஸ்டிரீட்டின் அருகே இருக்கும் நூலகத்தின் அருகே மேலேறிச் செல்லும் சாலையில் உள்ள சீனக்கடையில் கரும்பு கிடைக்கும். வெட்டித் துண்டுகளாக வாங்கிச் செல்வது நல்லது. ஏனென்றால் முழுக்கரும்பையும் கொண்டு செல்கிறேன் பேர்வழி என்று சீனப் பெண்  அல்லது ஆணின் சப்பை மூக்கி மேலும் சப்பையாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் , உங்கள் முகம் சப்பையாவது உறுதி. கரும்பே பிரம்பாகிவிடும் அபாயமும் உண்டு. அதோடு வெட்டித்தரும் சீனாக்காரனுக்கோ அல்லது அங்கு வேலை செய்பவனுக்கோ குறைந்தபட்சம் ஒரு டாலர் தராவிட்டால், அவன் பார்க்கும் கீழ்த்தரமான பார்வையில் பொங்கல் மங்கலாகிவி விடும் .
4)   எவ்வளவு முயன்றும் கரும்பு கிடைக்காவிட்டால் யூ டியூப்பில் கரும்பு சாப்பிடுவதைப் பார்த்து வெர்ச்சுவலாக உண்ணத்தலைப்படலாம்.
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Thursday, January 10, 2019

பொங்கல் சாப்பிடுவது எப்படி?


பொங்கல் சிறப்புப்பதிவு -1

           
             கிறிஸ்மஸ்  மற்றும் புத்தாண்டு முடிந்த கையோடு அவசரமாய் பொங்கல் வந்து விடும்  என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த ஆண்டு ரொம்பவும் சீக்கிரமாய்  வருவது போல் தெரிகிறது .பொங்கல் பண்டிகை மட்டுமல்ல எந்தப் பண்டிகையிலும் நன்றாக சாப்பிடுவது என்பது முக்கியமான மகிழ்ச்சி தரும் விஷயம். இப்போதெல்லாம் பெரும்பாலானவர் பசிக்கும் சாப்பிடுவதில்லை ருசிக்கும் சாப்பிடுவதில்லை. ஏதோ நேரத்திற்குச் சாப்பிட வேண்டுமே என்று அவசர அவசரமாக ஏதோ கடைமைக்குச் சாப்பிடுகிறோம். அதோடு இது எவ்வளவு கலோரி, சுகர் பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்று பயந்து சாப்பிடுபவர்களும் ஏராளம்.
ஆனால் உணவை தேவைப்படும் அளவுக்கு குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் அளவோடு, நிதானமாக, பசித்து, ரசித்து, ருசித்துப் பின் புசித்தோமென்றால் உணவே மருந்தாகும். இல்லையெனில் மருந்தே உணவாகி விடக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மெதுவாக,  மென்று நிதானமாக சாப்பிட்டோ மென்றால் சீரணக்கோளாறு ஏன் வரப்போகிறது? .
பொங்கல் பண்டிகையில் முக்கியமான உணவு இனிப்புப் பொங்கல் மற்றும் வெண்பொங்கலை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறேன் கேளுங்கள்.
என்ன இனிப்புப் பொங்கல்னு சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறுதா? மனுசனுக்கு நாவடக்கம் வேணும். இல்லேன்னா சீக்கிரம் வேறு ஒரு அடக்கம் நடந்திரும். அதான் டாக்டர் சொல்லியிருக்கார்ல, அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப் போடணும். பேசாம   வெண் பொங்கலுக்கு மாறிடுங்க.
 கடந்த சனிக்கிழமையில் ஃபிளஷிங்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் உணவகத்திற்குச் சென்றிருந்தேன்.  அங்கே கைமணக்க நெய்மணக்க சூடான வெண்பொங்கலில் சட்னி மற்றும் சாம்பாரை ஒருங்கிணைத்து ஐவிரல் இணைத்துப் பிசைந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளைக் காரர்களை சட்டை செய்யாது கவளங்களை அமைத்து கபக்கினேன். தொட்டுக் கொள்வதற்கு ஆமை வடைகள். அமெரிக்கன் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட இந்த காம்பினேஷன் அபாரமானது. நீங்களும் இந்த கூட்டமைப்பை சாப்பிட்டுப்பாருங்கள்,  உங்களுக்குப் பிடிக்கும். ஆமை வடை என்று மதுரையில் அழைக்கப்படும் பருப்பு வடை இந்தக் கூட்டணிக்கு மிகவும்   அவசியம்.
இதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதனை கொஞ்சம் விளாவாரியாகப் பார்ப்போமா?

 முதலில் பொங்கல் சூடாக இருக்க வேண்டும். அதிலுள்ள நன்கு வெந்த மிளகுகளை சிலர் பொறுக்கி எடுத்து ஒதுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் அது பொங்கலே இல்லை. வெறும் சோறு. ஒரு காலத்தில் நம்மூர் மிளகுக்கு ஐரோப்பாவில் எடைக்கு எடை  தங்கம் கொடுத்திருக்கிறார்கள். மிளகு என்றால் சும்மா இல்லை. மிளகுக்காரம்  மற்ற காரங்களை விட மேலானது உடம்புக்கு நல்லது. தொண்டைச்செருமல் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை சரி செய்துவிடும். சீரணத்திற்கும் நல்லது. அதோடு வெண்பொங்கலில் கருப்பு நட்சத்திரங்களாய் பள பளக்கும் மிளகை எடுத்துப்போட எப்படித்தான் உங்களுக்கு மனசு வருதோ? மிளகை முழுதாக  போடப் பிடிக்கவில்லை என்றால் லேசாக மிக்சியில் பொடித்துப் போடலாம்.
அதில் உள்ள முந்திரிப்பருப்புகள் வெந்திருக்கக் கூடாது. இலேசாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புகளை பொங்கல் மேல் தூவியிருக்க வேண்டும். பொங்கலைச் சாப்பிடும் போது  முந்திரிப்பருப்பின் மொறுமொறுப்பு கூடுதல் சுவையைக் கொடுக்கும். அதற்காக முந்திரிப்பருப்பை அள்ளிப் போடக் கூடாது. கிள்ளித்தான் போட வேண்டும். அதிகம் போட்டால் பொங்கலின் சுவையைக் கெடுத்துவிடும்.
Image result for ஆமை வடை

பொங்கல் ரொம்பவும் குழையவும் கூடாது, விரைவிரையாக இருக்கவும் கூடாது. இரண்டுக்கும் நடுவில் இருக்க வேண்டும். ரொம்பவும் குழைந்தால் அது கூழ் போல் ஆகிவிடும். நம்போல் இளைஞர்களுக்கு (?) அது சரிவராது.
பொங்கல் சூடாக இருக்க வேண்டும் எனச்சொன்னேன். கையைச் சுட வேண்டும் ஆனால் நாவைச்சுட்டுவிடக் கூடாது அந்த மாதிரி பக்குவத்தில் சூடு இருக்க வேண்டும். அப்புறம் ஒரு வாரம் எந்த சுவையும் தெரியாது.
பொங்கலில் இஞ்சி சேர்ப்பார்கள். இதுவும் ஜீ ரணத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இஞ்சியை சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுபவர்கள் இஞ்சி தின்ற எதுவோ போல் ஆகிவிட வாய்ப்புண்டு. இஞ்சியை மிகச் சிறிதாக நறுக்கிச் சேர்த்தால் அது பொங்கலோடு நற்சுவையைத் தரும். பெரிதாகப் போட்டால் அது சுவையைக் கெடுத்து வாயையும் கெடுத்துவிடும், ஜாக்கிரதை.  
முதலில் சட்னியை எப்படிச் சேர்ப்பது என்று சொல்கிறேன். சட்னியில் பலவகைச் சட்னிகள் உள்ளன, பொட்டுக்கடலை தேங்காய், வேர்க்கடலை, புதினா, தக்காளி, மிளகாய், காரச்சட்னி என பலவகைகள் உண்டு. கவனமாக கேளுங்க பொங்கலுக்கு பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தவிற வேறெதையும் சேர்த்தீங்க  அம்புட்டுத்தான் வாயே கெட்டுறுங்க .
முதலில் தேவையான அளவு பொங்கலை எடுத்து  தட்டில் போட்டு, அதன் மைய பகுதியில் சிறிய குளி ஒன்றை அமைத்து, தேங்காய்ச்சட்னி கெட்டிச்சட்னி அல்லது பக்குவமாக கரைக்கப்பட்ட சட்னியை அதில் ஊற்ற வேண்டும். நிறைய ஊற்றக் கூடாது கவனம். பின்னர் அதனை பொங்கல் முழுவதும் பரவும்படி பிசைய வேண்டும். கவனம் பிசையும் போது உள்ளங்கையில் படக்கூடாது. அந்த சட்னி தாளிக்க உதவும் முழு உளுந்தம்பருப்பும்  ஊறிவிடாமல் மொறுமொறுவென்று இருந்தால் இன்னும் சிறப்பு.
   அடுத்தது சாம்பாரை எப்படிச் சேர்க்க வேண்டுமென சொல்கிறேன். சாம்பாரில் பொதுவாக இரண்டு வகைகளில் விடுதிகளில் சமைப்பார்கள். சாதத்திற்கு ஒன்றும் சிற்றுண்டி அதாவது இட்லி / தோசைக்கு வேறொன்றும்  இருக்கும். இதில் எந்த வித சாம்பாரையும் சேர்த்துக் கொள்ளலாம். சட்னி ஊற்றிப் பிசைந்த பொங்கலில் கொஞ்சம் பெரிய குழி அமைத்து சாம்பாரை தளதளவென்று ஊற்றிப் பிசைய வேண்டும். இப்போது சட்னி சாம்பார் இணைந்த பொங்கல் சமவிகிதத்தில் கலந்திருக்கும். கையில் பிசைந்தால் மட்டுமே இது உத்தமம். இல்லையென்றால் ஒவ்வொரு கவளமும் வேறுவேறு சுவை தந்து சலித்துவிடும். 
பக்கத்தில் மிதமான சூட்டில் ஆமை வடைகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஆமை வடை சூடாக இல்லையென்றால் மைக்ரோவேவில் சூடுபடுத்தும் தப்பைச் செய்துவிடாதீர்கள். ஆமை வடை மெதுவடையாகி சொதப்பிவிடும். சிறிய கிரில் இருந்தால் அதில் சூடு பண்ணுங்கள். இல்லை எனில் தவா அல்லது தோசைச் சட்டியிலும்  சூடு பண்ணலாம். ஏனென்றால் மொறு மொறுப்பு மிக மிக முக்கியம்.
இப்போது ஒரு கவளம் பொங்கலை வலது கையால் எடுத்து வாயில் வைத்து மெதுவாக மென்று தின்று விழுங்கியவுடன், இடது கையில் இருக்கும் ஆமை வடையை ஒரு கடிகடித்து மென்று விழுங்கவும். கவனம் ஸ்பூனில் சாப்பிடுவது அதுவும் பொங்கலன்று சாப்பிடுவது சட்டப்படி குற்றம். இப்படியே மாற்றி மாற்றி சுவையுங்கள். பொங்கலின் மணமும் குணமும் சுவையும் பெரிதும் கூடும் என்பதில் சந்தேகமில்லை. கவனம் அளவு முக்கியம். கை மணக்க நெய் மணக்க வாய் மணக்க சாப்பிடுங்கள் .பொங்கலைக் கொண்டாடி மகிழுங்கள் . சாப்பிட்டு முடித்து கூச்சப்படாது விரல்களை ஒவ்வொன்றாக வாயில் நுழைத்து சுத்தப்படுத்தலாம். அதன் சுவை தனி.   ஆனால் மீண்டும் முகர்ந்து பார்க்கவேண்டாம் .கை மணக்க நெய்  மணக்க என்று சொன்னது தப்பாகி வேறெதுவோ மணக்க வாய்ப்பிருக்கிறது கவனம் . எனவே நாவால் ஏற்கனவே சுத்தப்படுத்திவிட்டாலும் கைகளை நன்றாக கழுவிவிடுவது உத்தமம் .
இப்போது ஆசைப்படுபவர்களுக்காக இனிப்பு பொங்கல் சாப்பிடுவது  எப்படி என்று சொல்கிறேன் ஓகேவா.

இப்படி வெண்பொங்கலை சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து ஒரு சிறிய தேக்கரண்டியில் கவனம்அன்னக்கரண்டி  அல்ல தேக்கரண்டியில் பாதியளவு இனிப்புப் பொங்கலை எடுத்து லேசாக நுனிநாக்கில் சுவைத்து ஒரு 15 நிமிடம் செலவழித்து சிறிது சிறிதாக உண்ணுங்கள். சுகருக்கும் நல்லது பிகருக்கும்  நல்லது .பொங்கலோ பொங்கல்.
அடுத்த பகுதியில் கரும்பு சாப்பிடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
தொடரும்Thursday, January 3, 2019

ஒரு பாடலை எப்படிக் கேட்பது?முத்தமிழில் ஒரு தமிழ் இசைத் தமிழ். இயல், இசை, நாடகம் என்று சொல்லும்போது, இயலிலிருந்து பிறந்தது இசையென்றும், இசையிலிருந்து வந்தது நாடகம் என்றும் சொல்லலாம். இயலும் இசையும் சேர்ந்ததுதான் நாடகம். பேச்சும் எழுத்தும் இயல் அதாவது கவிதை கட்டுரை கதைகள், நவீனங்கள், பேச்சு, உரை ஆகியவை இயலில் அடங்குபவை. பாடல், இசை, செய்யுள் என்பவை இசையில் உள்ளவை. நாடகம் என்பது தெருக்கூத்திலிருந்து வந்தது. திரைப்படம் என்பது நாடகத்தின் நவீன வடிவம் என்று சொல்லலாம்.
இசை, பாடல் என்று சொல்லும்போது அதில் பலவகை இருக்கின்றன. கர்நாடகம், இந்துஸ்தானி, மெல்லிசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை போன்றவை நமக்குத் தெரிந்த சில வடிவங்கள். மேற்கத்திய இசையிலும், பாப், கன்ட்ரி, ஜாஸ், ராக் & ரோல், ரெகே, ராப், ராக், மெட்டல் போன்ற பல வகைகள் இருக்கின்றன.
Add caption
         இதில் நமக்குப் பிடித்த ஒன்று திரையிசை, நாடகத்தின் நவீன வடிவம் தான் திரைப்படம் என்று முன்னரே சொன்னேன். முற்கால நாடகங்களில் வசனங்களை விட பாட்டுக்கள் நிறைய இருக்கும். பாடல் வழியாக உரையாடுவது, செய்திகளைச் சொல்வது, காதலை உணர்த்துவது ஆகியவை நடக்குமென்பதால் அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
P.U.Chinappa 
           ஹரிச் சந்திரா, வள்ளி திருமணம். பக்தப்பிரகலாதன் போன்ற இதிகாசக்கதைகள் நாடகத்திலிருந்து திரைப்படமானதால் அம்மாதிரி திரைப்படங்களிலும் பாடல்கள் நிறைய இருந்தன. நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும், பாடவும் தெரிந்திருக்க வேண்டும், எனவே ஆரம்பக்காலத்தில் திரைப்படங்களிலும் அவரவர் பாடல்களை அவர்களே பாடினார்கள் . S.G. கிட்டப்பா, P.U. சின்னப்பா, T.R. மகாலிங்கம், தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் இதற்கு உதாரணம். பிறகு பின்னணிப்பாடகர்கள் வந்தபோது இந்த முறை மாறிப்போனது.
தியாகராஜ பாகவதர்
மைக் இல்லாத காலகட்டங்களில் தெருக்கூத்து மற்றும் நாடகங்களில் பாடுபவர்கள் எல்லா மக்களுக்கும் கேட்க வேண்டுமென்பதால் பெருங்குரலெடுத்து (High pitch) பாடுவார்கள். அதாவது எட்டுக்கட்டை, ஒன்பது கட்டை என்று சொல்வார்கள். சினிமாவிலும் ஆரம்பத்தில் இதுவே பிரதி பலித்தது. பின்னர் அதுவும் மாறி மெல்லிசையாக ஆனது.
திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. 60, 70 பாடல்களிலிருந்து 6, 7 என்று குறைந்து அதன்பின்னர் 5,3,2 என்று   குறைந்து விட்டது. வெறும் பாடல்களினால் படங்கள் ஓடியது என்ற நிலைமை மாறி, இந்தப் பாடல் இந்த இடத்தில் தேவையில்லை என்று தோன்றும் வரைக்கும் வந்துவிட்டது.
இப்போதுள்ள நாளைய தலைமுறையான சிறுவர் சிறுமியர் மற்றும் இதற்குப்பின் பிறக்கும் பிள்ளைகள் திரையிசையை விரும்பிக் கேட்பார்களா என்பது  சந்தேகம் தான்.
ஆனால் நேற்றைய மற்றும் இன்றைய தலைமுறை , M.S. விஸ்வநாதனிடம் ஆரம்பித்து இளையராஜாவிடம் நீண்ட நெடுங்காலம் தஞ்சமடைந்திருந்து பின்னர் A.Rரகுமானை ஆரத்தழுவி அரவணைத்து வாழும் காலமிது. மேடைகளிலும் போட்டிகளிலும் இவை மீண்டும் மீண்டும் ஒலித்து உலகளாவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.   
“என்னடா நீட்டி முழக்கிக்கிட்டே இருக்க, சீக்கிரம் பாயிண்ட்டுக்கு வாடா பரதேசி”, என்று சொல்லும் உங்கள் குரல் காதில் ஒலிக்கிறது.
ஒரு பாடலை எப்படிக் கேட்பது என்று சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ சென்றுவிட்டேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவில் இருக்கும்போது இளையராஜா கோலோச்சிய காலம்.
"என்னடா எண்பதுகளில் தொடக்கம் முடக்கம்ணு சொல்லிக்கிட்டு, ஏன் சரியான ஆண்டை சொல்லிற வேண்டியது தானே?"
“யாருன்னு தெரியல ஆனா  நல்லாத்தான்யா கேள்வி கேக்கிறிங்க. சரிப்பா சொல்லிர்றேன், 81 ஜூனில் ஆரம்பிச்சு 84 ஏப்ரல்ல என்னோட இளங்கலைய முடிச்சேன்”. இப்ப திருப்திதானே. வயசைக் கண்டுபிச்சிட்டியோன்னோ? .
நாங்கள் புதிதாக பாடல் ஹிட்டானால், அதனை இசைக்குழுவில் பாடுவதற்கு குழுவாக உட்கார்ந்து பயிற்சி செய்து பழகுவோம். அப்போது பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்போம்.
முதலில் என்ன சுருதி என்று பார்ப்போம். அந்த சுதியில் எங்களுடைய பாடகர்கள் பாடமுடியுமா என்று கேட்டு, சிறிதளவு கூட்டியோ அல்லது குறைத்தோ சுதியை அமைத்துக் கொள்வோம். இல்லேனா சுதியே சதியாயிடும்.  அதற்கப்புறம் என்ன குரல் என்று பார்ப்போம். பொதுவாக யேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற மலையாளக் குரலில் பாட ஒருவனும், எஸ்பிபி குரலில் பாட ஒருவரும், இளையராஜா குரலில் பாட ஒருவரும், மலேசியா குரலில் பாட ஒருவரும் டி. எம். எஸ் குரலில் பாட இருந்தனர். ஆனால் பெண் குரல்களில் எல்லாப் பாடகிகளுக்கும் ஒரே பெண்தான். பெரும்பாலும், வெளியிலிருந்துதான் கூப்பிடுவோம். மேடைக்கச்சேரிகளில்  ஒரு பெண் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியினிமித்தம் பாடுவது அவ்வளவு சிறப்பாய் இல்லா விட்டாலும்  வெளியிலிருந்து கூப்பிடுவோம் .அம்மாவால் பத்திரமாய் அடைகாக்கப்படும் ஒரு தளிர் பெண்ணும் கூட வருவாள் .அதோடு அச்சு அசலில் ஜானகி குரலில் பாட அருமையான பையன் ஒருவன் இருந்தான். அவர்கள் பாடலைக் கேட்கும் போது பாடகரின் நுணுக்கம், அணுக்கம், சங்கதி, எந்த இடத்தில் மூச்சை எடுப்பது என்பவற்றைப் பார்த்துக் கொள்வார்கள்.
கீபோர்டு அல்லது ஆர்கன் வாசிப்பவன் ஆர்கன் லீட் மற்றும் கார்டு புரகெரசன் (chord progression) பார்த்துக் கொள்வான். லீட் கிட்டார் வாசிப்பவன், கிட்டார் லீடு எங்கெல்லாம் வருகிறது என்று கேட்டு வாசித்துப் பழகுவான்.
அதுபோலவே பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார் வருவதை அந்த இருவரும் பார்த்துக் கொள்வார்கள். இளையராஜா பாடல்களில் பேஸ்  கிட்டார் இசையே லீட் போல வரும். இதுதவிர புல்லாங்குழல், கிளாரினெட், ஷெனாய்,  பெல்ஸ், கீபோர்டு லீடு, சின்தசைசர் போன்றவை எங்கெல்லாம் எப்படியெல்லாம் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இவற்றை முடித்துவிட்டால் ஸ்கின் செக்சன் அதாவது தோல் கருவிகள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று கேட்க வேண்டும். டிரம்ஸ், தபேலா, டிரிப்பிள் காங்கோ, தும்பா, கடசிங்காரி,  மிருதங்கம், டோலக் , பேங்கோஸ், பம்பை, உடுக்கை ஆகியவையே இவை.
இவைகளோடு டைமிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்   என்று சொல்லக்கூடிய தாளம், மொராக்கோஸ், கப்பாஸ், ஜால்ரா டாமரின் போன்ற இசைக்கருவிகளும் எங்கே வருகின்றன என்று தனியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை இதற்காக பாடலைப் பலமுறை கேட்க வேண்டிய திருக்கும், ஒவ்வொரு  முறையும் வேறுவேறு கருவிகளையும் கேட்பதற்கு காதுகளை பழக்கப்படுத்த முடிந்தால் மட்டுமே இசையை நன்கு ரசிக்க முடியும்
இப்படியெல்லாம்தான் இசை உருவாகிறது. எனவே இனிமேல் ஒரு பாட்டைக் கேட்கும்போது ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனித்துக் கேட்டுப்பாருங்கள். இன்னும் நன்றாக ரசிக்கலாம். இசை மட்டுமே இசைப்பவர்க்கும் , பாடுபவர்க்கும் , கேட்பவர்க்கும் ஒருங்கே இன்பமளிக்கும் ஒன்று. இசையால் வசமாகா இதயமுண்டோ? .
முற்றும்.

பின்குறிப்பு .வேலைப்பளு மற்றும் விடுமுறை காலங்கள் என்பதால் இந்தப்பக்கம் வரமுடியவில்லை .இனிமேல் பரதேசியின் பிறாண்டல்கள் தொடரும். நண்பர்கள் அனைவருக்கும் என்னுடய இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .