Showing posts with label நேதாஜி பார்த்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label நேதாஜி பார்த்ததில் பிடித்தது. Show all posts

Monday, December 23, 2019


போர்க் குதிரையின்  சாகசங்கள் !
 பார்த்ததில் பிடித்தது.
வார் ஹார்ஸ் -2011

Image result for war horse movie

            சமீபத்தில் நெட்ஃபிலிக்சில் பார்த்த அருமையான ஒரு படம் இது. என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு என்னுடைய ரசனை பிடிபட்டிருக்கும். வரலாற்று சம்பந்தமான படங்கள், பீரியட் படங்கள், போர் பற்றிய படங்கள்/ ஸ்பை மற்றும் திரில்லர் படங்கள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. எல்லாமே இதற்குள் அடங்கி விட்டது என்றே நினைக்காதீர்கள். இதனுள் அடங்காத எத்தனையோ உண்டு. ரொமான்ஸ், ஃபேண்டஸி, தற்காலிக டிராமா, ஹாரர், காமடி, குடும்ப சென்ட்டிமெண்ட் படங்கள் சுத்தமாக பிடிப்பதில்லை. அதனால் தான் தமிழ் படங்கள் பார்ப்பது நின்று போனது. எப்போதாவது கிரிட்டிக்கள் அக்கெளைம்ய்டு படங்கள் வந்தால் பார்ப்பது மட்டும் தான் தொடர்கிறது.
          மிருகங்களை வைத்து இராம நாராயணன் டைரக்ட் செய்து வெளிவந்த பல படங்களை சிறு வயதில் பார்த்து நொந்து நூலாகியிருக்கிறேன். ஆனால் வார் ஹார்ஸ் என்ற இந்தப் படம் அவற்றுள் மிக மாறுபட்டது. அதோடு இயக்கியது ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என்றால் பார்க்காமல் விடுவேனா? அதுவும் முதலாம் உலகப்போர் நடந்த சமயம் என்பது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
          வார் ஹார்ஸ் என்ற இந்தப்படம் 1982ல் மைக்கேல் மார்பர்கோ (Michael Morpurgo) என்பவர் இதே தலைப்பில் எழுதிய நாவலின் திரை வடிவம். டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ் இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை டிசம்பர் 2009ல் வாங்கியபின்  மே 2010ல் இதனை ஸ்பீல்பெர்க் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இவர் இரண்டாம் உலகப்போரின் பின்னனியில் நிறையப்படம் இயக்கியிருந்தாலும், முதலாம் உலகப் போரின் பின்னனியில் இயக்கிய முதற்படம்  இதுதான்.


          தேவான், இங்கிலாந்தில்  1912ல் பிறக்கும் இந்தக்குதிரை வளர்ந்து ஏலத்திற்கு வரும்போது டெட் நர்ரகாட்   என்ற விவசாயியும் அங்கே இருக்கிறார். தன்னுடைய நிலச் சொந்தக்காரரும் அங்கு வர ஏற்கனவே நல்ல உறவில் இல்லாத இருவருக்கும் போட்டி ஏறபட்டு அந்த விவசாயி அதிக விலை கொடுத்து அந்தக்  குதிரையை வாங்கி விட நேர்கிறது. மனைவியிடம் அதற்காக திட்டும் விழுகிறது. ஆனால் அவர்களுடைய ஒரே பையன் ஆல்பர்ட் அந்தக் குதிரையின் மேல் பிரியமாகி அதற்கு ஜோயி என்று பெயரிட்டு பராமரிக்கிறான். ஆனால் விவசாயத்தில்  நஷ்ட மடைந்த நர்ரகோட், போர் காலத்தில் குதிரையை விற்றுவிடுகிறார். ஆல்பர்ட் மனமுடைந்து போகிறான். அந்தக்குதிரை எங்கெல்லாம்  போய் போரிலிருந்து எப்படியெல்லாம் தப்பித்து மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஆல்பர்ட்டிடம் வந்து சேர்கிறது என்பது தான் கதை. மீதியை சின்னத்திரையில் காண்க.
          பீரியட் படம் அதுவும் வார் படம் என்பதால் ஏகப்பட்ட நடிகர்கள். லீட் கேரக்டரில் நடித்துள்ள அனைவரும் குறிப்பாக குதிரையும் அநாயசமாக நடித்திருக்கிறார்கள்.
66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 178 மில்லியன் கல்லாக் கட்டியது.
          146 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் டச்ஸ்டோன் பிக்சர்ஸ், டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர் டெய்ன் மென்ட்,  ஆம்பிலின்   என்டர் டெய்ன்மென்ட், தி கென்னடி/ மார்ஷல் கம்பெனி ஆகியோர் தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டூடியோ மோஷன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபுயூட் செய்ய கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25,  2011-ல் ரிலீஸ் செய்யப்பட்டது.
          லீ ஹால் மற்றும் ரிச்சர்ட் கர்ட்டிஸ், திரைக்கதை எழுத ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியிருக்கிறார். ஜனுஸ் காமின்ஸ்கி ஒளிப்பதிவு செய்து, மைக்கேல் கான் எடிட் செய்திருக்க ஜான் வில்லியம்ஸ் இசையமைத்திருக்கிறார்.
எமிலி வாட்சன், டேவிட் தூலிஸ், பீட்டர் முலன் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.
           மூன்று மாதங்க்களுக்கு மேல் பயிற்சி கொடுக்கப்பட்டு 14 வெவ்வேறு குதிரைகளில் வெவ்வேறு பருவ வயதாக ஜோயி என்ற கேரக்டராக நடித்திருக்கின்றன. இது தவிர போரில் 280 குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் படத்தின் மேல் வெளிவந்த 218 விமர்சனங்களில் 76% இதனைப் பாராட்டித்தள்ளி விட்டன.
          ஸ்பீல்பெர்க் படமென்றாலே விருதுகளுக்குப் பஞ்சமிருக்குமா என்ன? அவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.
         ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டது. ஆனால் வென்ற விருதுகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
1)   2011 அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் அவார்ட்ஸ் – 2011ன்  சிறந்த படம்.
2)   2012 BMI பிலிம் 2டி அவார்ட்ஸ் – சிறந்த இசையமைப்பு சிறந்த ஒளிப்பதிவு.
3)   59வது மோனன் செளன்ட் எடிட்டர்ஸ் கோல்டன் ரீல் அவார்ட்ஸ் – சிறந்த ஒலிக்கோர்வை
          பீரியட் பிலிம், வார் பிலிம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.

முற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய  கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.




Thursday, March 14, 2019

பிலிப்பைன்சை ஆக்கிரமிக்க போட்டிபோட்ட ஸ்பெயினும் அமெரிக்காவும் !!!!!!


பார்த்ததில் பிடித்தது

1898 அவர் லாஸ்ட் மென் இன் தி பிலிப்பைன்ஸ் (1898 Our Last Men in the Philippines)         

                     
          பிலிப்பைன்ஸ் தேசம் நூறாண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டு இருந்தது. இங்கிலாந்துக்கு அடுத்த படியாக அதிக காலனிகளைக் கொண்டது ஸ்பெயின். அமெரிக்கா, கனடா தவிர பல வட அமெரிக்க தென் அமெரிக்க நாடுகளை ஸ்பெயின் பிடித்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. அந்த ஸ்பானிய கலோனிய ஆட்சியை எதிர்த்து பிலிப்பைன்சின் புரட்சிப்படை 1896ல் தன் கலகத்தை ஆரம்பித்தது.  
          போர்ட்டரிக்கோவை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய ஆட்சியை முறியடித்து அமெரிக்கா அதனைப் பிடித்துக் கொண்டது. எனவே ஸ்பானிய அமெரிக்க சண்டை ஆரம்பித்தது. பிலிப்பைன்சிலும் அமெரிக்கப்படை, ஸ்பானிய ஆதிக்கத்தை எதிர்க்க, பிலிப்பைன்சின் புரட்சிப் படை அமெரிக்கப் படையோடு கைகோர்த்தது. இந்தக் கூட்டு எதிர்ப்பை சமாளிக்க முடியாத ஸ்பெயின் 1897ல் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இதற்கு முன்னர் சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க லூட்டினன்ட் யோசே மோட்டாவின் தலைமையில் 50 காசோடர்களை பேலர் என்ற இடத்திற்கு அனுப்பியது. இது நடந்தது செப்டம்பர் 1897ல்.
Add caption
          பேலர் என்ற இந்த இடம் லஜான் என்ற இடத்தின் கிழக்குக் கடற்கரையில் மணிலாவிலிருந்து சுமார் 225 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை நகரம். இந்த நகரத்தை கடல்வழி அணுகுவதுதான் சுலபம். நிலவழி மிகவும் ஆபத்தான காடுகள் சூழ்ந்த பகுதி. 
          இந்த 50 பேர் கண்காணிப்புத் தளங்கள் அமைத்து அந்த வழியே யாரும் புகுந்துவிடாதபடி பாதுகாத்தார்கள். ஆனால் அக்டோபரில் அவர்களுடைய நிலைகள் புரட்சிப்படையால் தாக்கப்பட்டு அதில் லூட்டினன்ட் மோட்டா உட்பட ஏழுபேர் உயிரிழக்க, பலபேர் காயமுற்றனர்.
          பின் வாங்கிய மீதப்பேர்  பாலரில் இருந்த ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் நுழைந்து அதையே கோட்டைபோல் அமைத்துக் கொண்டனர். சுற்றிலும் குழி வெட்டி அரணமைத்து இரவும் பகலும் விழிப்புடன் காவல் காத்தனர். புரட்சிப் படை அவர்களை முற்றுகையிட்டது. இது ஜூலை 1  1898ல் ஆரம்பித்து ஜூன் 1899 வரை ஒரு வருடகாலம் நீடித்தது.
          ஸ்பானிய படை அமெரிக்கப்படையுடன் சமாதானம் செய்து கொண்டு தன் படைகளை பிலிப்பைன் நாட்டிலிருந்து விலக்கிக் கொண்டனர். புரட்சிப் படைகளுக்கு உதவி செய்ய வந்த அமெரிக்கப்படை பிலிப்பைன் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டது. அதனால் பிலிப்பைன் நாட்டுப் புரட்சிப் படைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கும் சண்டை ஆரம்பித்தது.
          இது எதுவுமே தெரியாமல் வெளியுலகிலிருந்து முற்றிலுமாக வெட்டப்பட்ட நிலையில் பாலரில் உள்ளே ஸ்பானியர் இருந்தனர்.
          பலமுறை பல பேர் எடுத்துச் சொல்லியும், பத்திரிகைகளை அனுப்பியும், உள்ளே நோயால் உணவின்மையால் வாடி பலபேர் மடிந்தும் சரணடையாமல், எஞ்சிய ஸ்பானியப் படை உள்ளே தாக்குப் பிடித்தது. ஏனென்றால் உள்ளே பொறுப்பில் இருந்த மார்ட்டின் செரெசோ (Martin Cerezo) எதையும் நம்பத்தயாரில்லை.  ஒரு கட்டத்தில் உணவு சேமிப்பும் தீர்ந்துவிட ஆலய வளாகத்தில் பயிரிட்டுக்கிடைக்கும், பூசணிக்காய், இலை, ஆரஞ்சுகள், வாழைத்தண்டு, பெப்பர், தக்காளி ஆகியவற்றை உண்டு சமாளித்தனர். அதன்பின் அதுவும் முடிந்து போய் நீர் எருமைகளைக் கொன்று சாப்பிட்டனர். தோலை காலணி யாக்கிப் பயன்படுத்தினர். பின்னர், தெருநாய்கள், பூனைகள், ஊர்வன காக்கைகள் ஆகியவற்றையும் உண்ண ஆரம்பித்தனர்.
Martin Cerezo)
          கடைசியில் மார்ட்டினின் நெருங்கிய நண்பன் பத்திரிக்கையில் கொடுத்த  விளம்பரத்தைப் பார்த்துத்தான் சரணடைய ஒப்புக் கொண்டான். ஆலயத்தில் நுழைந்த போது 50 பேர் இருந்தனர். 11 மாத முற்றுகையில் 14 பேர் வியாதியால் இறந்தனர். 2 பேர் காயங்களால் இறந்தனர். நான்கு பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதில் 2 பேர் பிடிக்கப்பட்டு எதிர் அணிக்கு உதவியதால் உள்ளேயே தூக்கிலிடப்பட்டார்கள். வெளியே வரும்போது 30 பேர் தன் இருந்தனர்.
          அப்போதிருந்த பிலிப்பைன் நாட்டின் முதல் ஜெனரல் எமிலியோ அகினல்டோ அவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல் நண்பர்களாக கருதவேண்டும் என்று சொன்னதால் அவர்கள் வெளியே வரும்போது மரியாதை செலுத்தப்பட்டது.
          மூன்று மாதம் கழித்து அவர்கள் பார்செலோனா வந்து சேர்ந்தபோது வெற்றி வீரர்களாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மார்ட்டின் இதனை புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம்தான் இது. 2016 டிசம்பரில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் அலெயாண்ரோ ஹெர்னன்டலே, இயக்கியவர் சால்வடோர் கேல்வோ. மார்டினாக லுயிஸ் டோசர் அற்புதமாக நடித்திருக்கிறார்.
பீரியட் சினிமாக்கள் மற்றும் வரலாற்றை ரசிப்பவர்களுக்கு இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-முற்றும்.


Thursday, November 29, 2018

ஈராக் போர் பற்றிய திரைப்படம் மணல் கோட்டை


பார்த்ததில் பிடித்தது
சேன்ட் கேஸில்
Sand Castle 2017 poster.jpg
"மனக்கோட்டை கட்டாதே" என்று சொற்றொடரை பலமுறை கேட்டிருக்கின்றேன். "மணல் கோட்டை நிற்காது" என்று சொல்வதையும் கவனித்திருக்கிறோம். Sand Castle அதாவது "மணற் கோட்டை" என்ற பெயர் கொண்ட இந்தத்திரைப்படம் என் ஆர்வத்தைத் தூண்டியதால் நெட்பிலிக்சில் இதனை சமீபத்தில் பார்த்தேன்.
எனக்குப் பிடித்த திரைப்படங்கள்  மற்றும் புதினங்களில் முதலிடம் பிடித்திருப்பது வரலாறு, மற்றும் வரலாற்றைத் தழுவிய நவீனங்கள். இரண்டாவது இடம் பீரியட் படங்கள் மற்றும் வார் மூவீஸ் என்றழைக்கப்படும் போர் சார்ந்து எடுக்கப்பட்டவை. மூன்றாவது வகையில் திரில்லர் என்று சொல்லப்படும் திகில் கதைகள் (பேய்ப்படங்களைத் தவிர்த்து). இதுதவிர, காதல், சென்டடிமென்ட் என்று வேறு எதையும் எனக்குப் பிடிப்பதில்லை. ஏலேய் (பரதேசி உனக்கு வயசாகிப் போச்சுடோய்) அதனால்தானோ என்னவோ எந்தத் தமிழ்ப் படத்தையும் என்னால் முழுதாகப்பார்க்க முடியாமல் 5-10 நிமிடங்களில் “தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே" என்ற நிலைக்குப் போய் விடுகிறேன். ஒன்றிரண்டு படங்கள் விதிவிலக்கு.
அப்படிப் பார்த்த ஒரு படம் தான் Sand Castle. ஈராக்கில் நடந்த யுத்தத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையும் கருத்து வேறுபாடுகளும் உண்டு. அமெரிக்காவுக்கு இது தேவையில்லாத வேலை என்று பலர் சொல்லலாம். நான் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் ஈராக்கில் அமைதி திரும்புவதற்காக பல அமெரிக்க வீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வை எடுத்துக்காட்டுவதே இந்தப்படம்.
தன்னுடைய படிப்புக்குப் பணம் தேவைப்படுவதால் ஆர்மி ரிசர்வில் சேர்ந்த மேட் என்ற ஒருவனை மையப்புள்ளியாக வைத்து திரைப்படம் ஆரம்பிக்கிறது. இவனுக்கு ஒரு வருமானம் தேவைப்பட்டது. ஆனால் போர்முனைக்குச் செல்வதில் விருப்பமில்லை ஏனென்றால் உயிர் மீது பயம். தலையில் தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டும், கையில் கட்டுப் போட்டுக் கொண்டு நடித்து போர் முனைக்குப்  போவதில் இருந்து விலக்குப் பெற முயன்றும் ஒன்றும் உதவவில்லை. அவன் எங்கே போக மிகவும் பயந்தானோ அங்கேயே அதாவது ஈராக்கின் தலைநகர் பாக்தாத்துக்கு  அனுப்பப்பட்டான். வந்து இறங்கியவுடனே யுத்தத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு ஆனால் தப்பித்துவிடுகிறான்.
சில நாட்கள் கழித்து பாக்குபா என்ற ஊருக்கு இவனுடைய குழு அனுப்பப்படுகிறது. அங்கே சமீபத்தில் நடந்த போரில்  ஊரின் தண்ணீர் டேங்க் உடைந்துவிட அந்தப் பாலைவன ஊர் நீரில்லாமல் தவித்து வந்தது. பொதுமக்களிடம் நற்பெயரைப் பெற, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒரு குழுவை அங்கே அனுப்பினார்கள். அங்கே இயங்கிய ஒரு இஞ்சினியர் குழுவோடு வேலை செய்வதும் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதும் இவர்களின் வேலை. அதோடு அங்கிருந்த நீரை லாரி டேங்க்களில் நிரப்பி பக்கத்து ஊருக்கு குடிநீரும் வழங்க வேண்டும்.
இவர்கள் முயற்சியை தடுக்க நினைத்த உள்ளூர் தீவிரவாதிகளின் தொல்லை ஒருபுறம். ஊரிலிருந்து இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களை அவர்கள் கொல்ல இந்தப்பணி மேலும் கடினமாகிறது.
பின்னர் இதையெல்லாம் எப்படி சமாளித்தாள், நீர் டேங்கை சரி பண்ண முடிந்ததா? எவ்வளவு உயிர்பலி நடந்தது? கதாநாயகன் தப்பித்தானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
Image result for chris roessner
Chris Roessner
ஏப்ரல் 2017-ல் நெட்பிலிக்சில்  வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியவர் ஃபெர்னான்டோ   கொய்ம்பரா (Fernando Coimbra). எழுதியவர் கிறிஸ் ரோஸ்னர் (Chris Roessner) ,அருமையான இசையைக் கொடுத்தவர் ஆடம் பீட்டர்ஸ். 
A young, Caucasian man with short, dark hair and facial stubble wearing a black shirt speaks into a microphone against a grey and blue background.
Nicholas  Hoult
அப்பாவி சோல்ஜராக நிக்கலஸ் ஹொல்ட் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய சார்ஜன்ட்டாக கிளன் பாவல் நடித்திருக்கிறார்.. இது தவிர லோகன் மார்ஷல் கிரீன் மற்றும் ஹென்ரி காவில்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதில் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இதை எழுதிய கிரிஸ் ராஸ்னர் அவர்களின் சொந்த அனுபவம் இது. ஆமாம் அவர் ஈராக் போரின் போது அங்கிருந்த ஒரு கிராமத்திற்கு நீர் கொடுக்கும் விதத்தில் ஈடுபட்ட நடந்த நிகழ்வுகளை எழுத அந்த தனிப்பட்ட அனுபவம் தான் இந்தப் படத்தின் கருவாக அமைந்தது.
பெரிதாக பாராட்டப்படவில்லை யென்றாலும்  இதுபோல் போர் சம்பந்தப்பட்ட (War movie)  திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர்களும், போரின் போது ஈராக்கில் நடந்த உண்மை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பார்க்கலாம்.
முற்றும்

முக்கிய அறிவுப்பு :

கீர்த்தனை பாடும்  நிகழ்ச்சிக்காக மூன்று நாள் பயணமாக கனடா செல்கிறேன் .கனடா நண்பர்கள் வாருங்களேன் சந்திக்கலாம் .




Thursday, October 18, 2018

ஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் !


Six days ver6.jpg
அந்த ஆறு நாட்கள்
பார்த்ததில் பிடித்தது.
Six days
1980ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஈரானைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய ஆறு பேர் லண்டனில் உள்ள ஈரானின் எம்பஸியை ஆக்ரமித்து அதிலிருந்த 26 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். சலீம் என்பவரின் தலைமையில் இயங்கிய இந்தக்குழு ஈரானில் அடைபட்டிருக்கும் 91 அரேபிய கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதிகளை ஒவ்வொருவராகக் கொல்வோம் என்று எச்சரித்தான். இந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட படம்தான் 6 Days.
சீஃப் இன்ஸ்பெக்டர் மேக்ஸ் வெர்னன்  தலைமையில் பக்கத்துக் கட்டிடத்தில் ஒரு குழு இயங்கி சலீமிடம் தொலைபேசியில் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்கள். உள்ளே இருந்த பிணைக்கைதிகளோடு அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும் சேர்த்து உணவினை அனுப்புகிறார் மேக்ஸ். இங்கிலாந்தின் அதிகாரிகளோடு ஒத்துழைக்க மறுத்த ஈரான் அரசாங்கம் திவீரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் அவர்களுடைய கோரிக்கை BBC -யில் ஒலி பரப்பப்பட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை வைத்தான் சலீம்.
இறுதியாக சலீம் இரண்டு பஸ்களைக் கேட்டு, அவர்களை பத்திரமாக விமானமேற்றி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இப்படியே நாட்கள் கடந்துபோக சுகமில்லாதிருந்த ஒரு பிணைக்கைதியை விடுதலை செய்தார்கள். ஆனால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு மேலும் பொறுக்காத அதிரடிப்படை பின்புறமாக உள்ள கட்டிடத்திலிருந்து உள்ளே நுழைந்தார்கள். எப்படிச் சண்டையிட்டார்கள்?  பிணைக் கைதிகள் எல்லோரும் காப்பாற்றப்பட்டனரா? தீவிரவாதிகளுக்கு என்ன ஆயிற்று என்பவற்றை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
Image result for Kate Adie
Kate Adie
இந்த நிகழ்வு முழுவதையும் தொடர்ந்து ஒலிபரப்பிய BBC ரிப்போர்ட்டர் கேட் ஆடி (Kate Adie) இதன்பின் மிகவும் பிரபலமானார்.
இந்தப் படத்தை  பிரிட்டிஷ் - நியூசிலாந்து கூட்டுத் தலைமையில் ஜெனரல் ஃபிலிம் கார்ப்பரேஷன், xyz  ஃபிலிம்ஸ், மற்றும் நியூசிலாந்து   ஃபிலிம் கமிஷன் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்தன. நியூசிலாந்தில் நவம்பர் 2017ம் இது வெளியிடப்பட்டது. இதற்கு திரைக்கதை அமைத்தவர் கிளன் ஸ்டாண்ட்ரிங் (Glen Standring) இயக்கியவர் டோவா ஃபிரேசர் (Toa Fraser)

Mark Strong (Berlin Film Festival 2011).jpg
Mark Strong
மேக்ஸ் வெர்னன் ஆக மார்க் ஸ்ட்ராங்கும், கேட் ஆடியாக ஆபி கார்னிஷ் -ம் (Abbie Cornish) சலீமாக பென் டர்னரும் ( Ben Turner) நடித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.
-முற்றும்.
 

Thursday, August 16, 2018

வாட்ஸாப்பில் கலைஞர் !

 கலைஞர் அவர்கள் மறைவுக்குப்பின் நெட்டிசன்கள் ஓவர் டைம் செய்து வெளியிட்ட நெகிழ்வான மீம்ஸுகளில்  சிலவற்றை உங்களுக்கு தொகுத்துத்
  தந்துள்ளேன்.

Add caption
Image result for karunanidhi in whatsapp

Image result for karunanidhi in whatsapp

Image result for karunanidhi in whatsapp












Thursday, June 28, 2018

பகத்சிங்கை கொன்ற காந்தி ?

Image result for the legend of bhagat singh

தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் 
பார்த்ததில் பிடித்தது 
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத் சிங் ஒரு முக்கிய இடத்தைப்பிடித்தவர். அவருடைய புரட்சி வரலாறு ரத்தத்தில் சூடேற்றி தேசிய உணர்வூட்டும் ஒன்று. அவரின் வரலாற்றைப் படித்திருந்தாலும் தி.லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற  இந்தத் திரைப்படம் அதனை அப்படியே நேரில் பார்ப்பது போல கண்முன்  கொண்டுவந்தது. நெட்ஃபிலிக்சில் காணக்கிடைக்கிறது. நல்ல வசதியான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பகத்திங். அவர் தந்தையின் கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெரிய பால் பண்ணையும் இருந்தது.
          சின்னவயதில் அவர் கண்முன்னே வெள்ளைக் காரர்களால் நடத்தப்பட்ட அக்கிரமங்கள் அவர் மனதை மிகவும் பாதித்தது. அதன்பின் ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவரால் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட படுகொலை அவர் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி புரட்சி விதையை விதைத்தது.

          சிறு வயதிலிருந்தே மகாத்மா காந்தியால் கவரப்பட்டிருந்த பகத்சிங்  அவர் அறிவித்த "ஒத்துழையாமை இயக்கத்தில்"  பெரிதும் ஈர்க்கப்பட்டு தீவிரமாக பங்கு கொண்டார். மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த அந்தப்புரட்சி மகாத்மா காந்தியால் பாதியில் கைவிடப்பட்டதால் பகத்சிங்  மிகவும் நொந்துபோனதோடு அதுவே அவர் காந்தியை விட்டு விலகிச் செல்வதற்கும் வழிவகுத்தது.  
          மனதில் எழுந்த புரட்சித்தீயால் "ஹிந்துஸ்தான் குடியரசு இயக்க”த்தில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாக செயல் பட ஆரம்பித்தார்.  
          அந்த சமயத்தில் பஞ்சாபின் சிங்கம் “லாலா லஜபதிராவ்” பிரிட்டிஷ் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பகத்சிங்கை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. எனவே பகத்சிங் தன் நண்பர்களான சிவராம், ராஜகுரு, சுக்தேவ் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து சான்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
          பின்னர் போலீசாரிடம் பிடிபட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கிருந்தபடியே புரட்சியை வளர்த்தார். ஆங்கிலேயர் இந்தியருக்கு எதிரான ஒரு சட்டத்தை பார்லிமென்ட் பில்டிங்கில் நிறைவேற்ற முயன்ற போது இந்தியரின் எதிர்ப்பைக் காட்ட, தன் நண்பன் பட்டுகேஸ்வர் தத் என்பவரின் மூலம் குண்டுகளை வீசினார்.     ஆனால் மக்களுக்கும் கூடியிருந்த அதிகாரிகளுக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் காலியாக இருந்த பெஞ்சுகளை நோக்கியே குண்டுகள் எறியப்பட்டது. அவரும் கைதுசெய்யப்பட்டார்.  இந்த நிகழ்வு பகத்சிங்கை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. குறிப்பாக இளைஞர்கள்  தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பகத்சிங்கை மிகவும் கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் காந்தியின் புகழுக்கு இணையாகப் பேசுமளவுக்கு பகத்சிங்கின் பிரபலம் உயர்ந்தது.
          லாகூர் ஜெயிலில் இருந்தபோதும் சுதந்திர போராட்ட வீரர்களை ஜெயிலில் ஒழுங்காக நடத்த வேண்டும் என்று அவர் தன் நண்பர்களோடு 63 நாட்கள் உண்ணாவிரம் இருந்தார்.      சாண்டர்ஸ் கேசில் பகத், சிவராம் & சுக்தேவ் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
          இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் காந்தி நினைத்திருந்தால் இவர்களின் விடுதலையை நிபந்தனையாக வைத்து விடுதலை செய்திருக்கலாம். முழு இந்தியாவும் இதனை எதிர்பார்த்தது. ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர் தவிர மற்றவர்களை விடுதலை செய்யக்கோரினார் காந்தி. இதற்கு இந்தியா முழுவதும் எதிர் ப்பு கிளம்பியது. பொதுமக்கள் சிறையை உடைத்து உள்ளே புகுந்துவிடுவார்கள் என்ற நிலைமை ஏற்பட்டதால் விதித்த நாளுக்கு முன்னதாகவே மார்ச் 23 1931ல் அதிகாலை நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Image result for bhagat singh

          நாடே சோகத்தில் மூழ்கியது. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை  கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?” என்று பாடிய பாரதியின் பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
          2002ல் வெளிவந்த இந்தப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இசை.
என்று தேசிய திரைப்பட விருது, பிலிம் ஃபேர் விருது, ஜீ சினி விருது போன்ற பல விருதுகளை வென்றது.          பகத்சிங்காக இளவயது அஜய் தேவ்கன் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இதற்கு அருமையாக இசையமைத்தவர் நம் இசைப்புயல் A.R.ரகுமான் அவர்கள். பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். அதோடு இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் தமிழரான K.V.ஆனந்த் அவர்கள். இப்போது பிரபல இயக்குனராகவும் மிளிர்கிறார்.
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்


முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா  நிகழ்வில்  ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில் 
பங்கு கொள்கிறேன்  .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.அதனால் அடுத்த வாரம் பதிவுகள் எதுவும் வராது மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள்  சந்திக்கலாம் . 


Image result for fetna convention
Add caption

Thursday, February 15, 2018

நேதாஜி செய்த தவறு !!!!!

Bosefilm.jpg

பார்த்ததில் பிடித்தது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி ஃபர்காட்டன்  ஹீரோ
            இந்தப் படத்தை ஏற்கனவே நான் பார்த்திருந்தாலும் நெட் ஃபிலிக்சில் மீண்டும் கண்ணில் தட்டுப்பட்டதால் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் உட்கார்ந்து பார்த்து முடித்தேன். சிறிது நீளமான திரைப்படம் என்றாலும் அவசியமாய் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சப் ஹெட்டிங் அல்லது குளோஸ்டு கேப்ஷன் (CC) இருப்பதால் இந்தி தெரியாதவர்களும் பார்க்கலாம்.
          நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய விடுதலைக்காக தான்   வகுத்துக் கொண்ட பாதையில் தளராது நடைபோட்டு இறுதிவரை போராடிய மாவீரர். அவர் பெயரைச் சொன்னாலே பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கியது. இந்திய நாடெங்கும் மட்டுமல்ல, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் என்று பல நாடுகளில் அறியப்பட்டவராக இருந்தார். அவர் பெயர் சிலருக்கு அச்சத்தையும் பலருக்கு மரியாதையையும் ஊட்டியது.  
Image result for netaji subhash chandra bose

          காங்கிரஸ் கட்சியின் மீதும் காந்தி நேரு ஆகியோரின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களையோ காங்கிரஸ் பெரியக்கத்தையே அவர் ஒருபோதும் தரக்குறைவாகப் பேசியதுமில்லை. விமர்சித்ததும் இல்லை. தன்னுடைய படைப்பிரிவுகளுக்கு காந்தி நேரு எனப் பெயர் சூட்டியதிலிருந்து அதனை அறிந்து கொள்ளலாம் ஆனால் அவர்களின் மிதவாத கொள்கைகளினால் சுதந்திரம் தள்ளிப்போகிறது. அதனை  பிரிட்டிஷார் பலவீனமாக நினைத்துக்கொண்டு சுதந்திரம் தரமறுக்கிறார்கள் என்று நினைத்தார். போர் தொடுத்து  விரட்டினால் மட்டுமே பிரிட்டிஷாரை துரத்த முடியும் என நம்பினார். அதற்கான காரியங்களை தன் உயிரைப்பணயம் வைத்து நிறைவேற்ற முயன்று, அதே முயற்சியில் தன் இன்னுயிரையும் துறந்த உன்னதத்தலைவர் அவர்.     அவர் எடுத்த சில தவறான முடிவுகளாலும், உலகப் போரின் திசை மாறிப்போனதாலும் அவர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை.
Image result for netaji subhash chandra bose

          பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் ஒரு கோல்டு வார் இருந்தது. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பிரிட்டன், பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
          நேதாஜிக்கு  வேறு வழியின்றி ஜெர்மனியிடம் செல்ல வேண்டிய நிலைமை. ஆனால் ஜெர்மனி ஒரு பைத்தியக்கார சர்வாதிகாரியான ஹிட்லர் கையில் இருந்தது. போஸ் அவர்கள் ஹிட்லரைப் பார்த்தும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
          போஸ் சற்றும் எதிர்பாராத விதமாக ஜெர்மனி ரஷ்யாவைத் தாக்கியது. அதற்கு ஜெர்மனியில் இருந்த இந்திய போர்க்கைதிகள் சுபாஷின் தலைமையில் உதவ வேண்டும் என்றும் எதிரிபார்த்தது.  நல்லவேளை அப்படி ஒரு தவறை அவர் செய்யவில்லை.
          ஜெர்மனியின் உதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர் பர்மாவுக்குக் கிளம்பினார். நல்லவேளை ஹிட்லர் அவரைச் சிறைப்படுத்தவில்லை. ஆனால் அங்கிருந்த  இந்திய போர்க்கைதிகள் 5000 பேரை அப்படியே விட்டுவிட்டு வரவேண்டிய  நிலைமை.
          ஆனால் ஜப்பானின் உதவி கிடைத்தது. எனவே இந்தியா தேசிய ராணுவம், பர்மா சிங்கப்பூர் பகுதிகளில் ஜப்பானின் உதவியோடு பல பிரிட்டிஸ் பகுதிகளில் முன்னேறியது.
          இதற்கிடையில் ஜப்பான் முட்டாள்தனமான ஒரு  காரியம் செய்தது. அது அதிகபட்ச திமிர்த்தனத்துடன் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரைத் தாக்கியது. அது சிங்கத்தின் பிடரியை உலுப்பிய கதையாகிவிட்டது. அது வரை நடுநிலை காத்த அமெரிக்காவும் போரில் குதித்தது. அது பிரிட்டனுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
          ஜப்பானில் நாகசாகி, ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் போட்டதோடு ஜப்பானின் பெருமை முற்றிலுமாக அழிந்து  போக அவர்கள் சரண்டர் ஆகி எல்லா நிலைகளிலுமிருந்தும்  பின்வாங்கி தங்கள் நாட்டுக்குள் முடங்கினர். இன்றுவரை அவர்கள் ராணுவத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டு தங்களுடைய உள்நாட்டு வளர்ச்சியில் மட்டுமே கருத்தில் கொண்டு வெகு சீக்கிரம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைலில் உலகத்தில் தலைசிறந்து விளங்குகிறார்கள்.
          திடீரென்று முற்றிலும் மாறிப்போன சூழ்நிலையில் இந்திய தேசிய ராணுவம் வேறுவழியின்றி பின்வாங்கி சரண்டராக, போஸ் அவர்களின் முயற்சி வெறும் கனவாக முடிந்தது.
          ஜப்பானின் விமானத்தில் சென்ற அவர் விபத்தில் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய முடிவு இன்றைய நாள்வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது.
          ஆனாலும் போஸ் அவர்களின் பெருமுயற்சியும் நம் நாட்டின் விடுதலைக்கு ஒரு பெரும் காரணமாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுவும் அவர் மறைந்த  இரண்டு வருடங்களுக்குள் கிடைத்தது.
          இயக்குநர் ஷியாம் பெனகலின் உன்னத வரலாற்றுப் படைப்பு இது. ஆனால் வழக்கம்போல இந்தப் படத்திற்கும் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக தன் தலைவர் ஒரு ஆஸ்திரியப் பெண்ணை மணந்தது போல் காட்டப்பட்டதற்கும், அவர் தைவானில் விமான விபத்தில் இறந்ததுபோல் காட்டப்பட்டதற்கும்  கல்கத்தாவில் செயல்பட்ட  ஃபார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.  எல்லாக் கட்சியினரும்  தங்கள் தலைவரை ஆதர்ஷ தலைவராக ஏற்றுக் கொள்ளும்போது அவரும் எல்லா ஆசாபாசங்களும் உள்ள ரத்தமும் சதையிலுமான மனிதர் என்பதை ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எனவே போஸ் அவர்களின் சொந்த ஊரான கல்கத்தாவில் திரையிடப்படவில்லை.
Image result for shyam benegal
Shyam Benegal
          அதோடு படத்திற்கு இன்னொரு முக்கியமான ஒன்று A.R. ரகுமானின் இசை. படத்தின் தரத்தை  வெகுவாக கூட்டுவதில் இசை பெரிதும் உதவுகிறது.
          2004ல் லண்டன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட இந்தப்படம் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுப் படம் என்ற நர்கிஸ் தத் விருதையும், சிறந்த கலை அமைப்புக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
Image result for Actor sachin khedekar
Sachin Kedetkar
           சச்சின் கெடெக்கர் சுபாஷ் ஆக தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஏதோ ஒன்று குறைவாகவே தெரிந்தது.
          30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட 2 1/2 மில்லியன் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
          இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வரலாறு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு. படத்தின் தலைப்பில் மறந்து போன நாயகன் (Forgotten Hero)  என்று வருகிறது. மறக்கக்கூடிய மனிதரா அவர்?

-முற்றும்.