Monday, June 3, 2013

மெக்சிகோ பயணம் 14: கோட்டையை யாருப்பா ஒளிச்சு வச்சது ?


                கோட்டைக்குச் செல்லும்வழி மிகவும் அகலமானதாகவும், இருபுறமும் மரங்கள் அடர்ந்தும் காணப்பட்டது. தூரத்தில் கோட்டை சிறிதளவு தெரிந்தது .வாசலில் உயரமான கப்பில் பைன் ஆப்பிள், தர்ப்பூசனி, வெள்ளரிக்காய், கேண்டலுப்,ஹனி டியூ ஆகியவற்றை வெட்டி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று வெள்ளையாக, நான் இதுவரை பார்த்தறியாத ஒன்றாக இருந்தது. என்னவென்று கேட்டேன்.அவர்கள் சொன்னது புரியவில்லை. ஆனாலும் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று வாங்கினேன். எது எடுத்தாலும் 10 பீசோக்கள். வாங்கிச் சாப்பிட்டால், இலேசான இனிப்புடன் நீர்ச்சத்து அதிகமாக, அந்த பசி நேரத்தில் அமிர்தமாக இருந்தது. எப்போதோ எங்கேயோ சாப்பிட்டமாதிரி இருந்தது .பார்க்கிங்  கிடைக்காததால்,  டேனியல் காரிலேயே தங்கிவிட்டான்.

                நுழைவாயிலில் உள்ளே செல்லும்போது, படை பரிவாரத்தோடு, கம்பீரமான அரபுக் குதிரையில் ஆரோகணித்துச் செல்வதுபோல், நினைத்துக்கொண்டு ("நான் கிருஷ்ணதேவராயன்" படித்த எபக்ட் போல ) உற்சாகமாக உள்ளே சென்றேன். வழியில் ஒரு பெரிய சதுக்கம் வந்தது.


 அருகில் வந்ததும் கோட்டை கொஞ்சம் கூட தெரியவில்லை. சதுக்கத்தையும், நீருற்றையும் கடந்து சென்றால், இரு பாதைகள் சென்றன. அதில் ஒன்றில் பெரிய கூட்டம் சென்று கொண்டிருந்தது. ஆடு மந்தையோடு செல்வதுபோல், அவர்களைப்பின்பற்றி சென்றேன். பாதையின் இருமருங்கும் நெருக்கமாக சிறுகடைகளும் தள்ளுவண்டிகளும் இருந்தன. ஆண், பெண், குடும்பங்கள், குழந்தைகள், காதலர்கள் என கோலாகலமாக மகிழ்ச்சியுடன் சென்றனர். ஒருபக்கம் பேட்டரி இரயில் மக்களை ஏற்றிக்கொண்டு  போய்க்கொண்டிருந்தது. 

ஒரு முக்கால் மணிநேரம் நடந்தபின்னும் கோட்டை வருவதாகத்தெரியவில்லை. யாரிடம் கேட்டாலும் உதட்டைப் பிதுக்கினார்கள் மொழிப்பிரச்சனைதான். தவறான வழி என்று பட்சி சொன்னது.
                கோட்டையும் கண்ணுக்குத் தெரியவில்லை. கோட்டை குட்டையாக இருக்குமோ?. ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா? என்று நடுத்தெருவில் கூவாத குறை. இறுதியில் ஒருவன் சிக்கினான். அவனிடத்தில், “கோட்டை எங்கே?” என்று கேட்டபோது, “அது இந்த வழியில் இல்லை, திரும்பிப்போ, ஆனாலும் இன்று மூடியிருக்கிறது, மதியம் 3 மணிக்குமேல் தான் திறக்கிறார்கள், புது பிரசிடன்ட் இங்கே பல நாட்டு விருந்தினர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கிறார்” என்றான். “இது என்ன வழி, எல்லோரும் எங்கே போகிறார்கள்” என்றேன். இது சும்மா பொழுதுபோக்கு கடைவீதி, தொடர்ந்து நடந்தால் நகரின் அடுத்த பகுதி வந்துவிடும் என்றான். சரிதான் போங்க.
                          மணி 1 ஆகி பசி வயிற்றைக்கிள்ளியது.திரும்பி நடையோ நடை நடந்து கோட்டைக்குச் செல்லும் குறுக்கு வழியில் நடந்தேன். ஃபெடரல் போலிசியோவால் தடுக்கப்பட்டேன். அனுமதியில்லை என்றார்கள். நம்பினால் நம்புங்கள், கோட்டை (Castle) கண்ணுக்கு தெரியவேயில்லை. உயரமான மரங்கள் அடங்கிய காடுதான் தெரிந்தது. இந்த கேசில் மேக்சிமிலியனை மட்டுமல்ல என்னையும்தான் ஏமாற்றிவிட்டது என்று நினைத்துவிட்டு வெளியேபோக நடையைக்கட்டினேன்.
                    மறுபடியும், அதே கடையில் அந்த வெள்ளை காய் அல்லது பழத்தை எனக்கும் டேனியலுக்கும் இரண்டு வாங்கிக்கொண்டு காருக்குச்சென்றால், டானியல் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பி கப்பைக் கொடுத்து, “இது என்ன காயா இல்லை பழமா ?” என்றேன். “அது காயுமல்ல பழமுமல்ல ஒரு வகைக் கிழங்கு, ஜிக்கமோ என்று பெயர்” என்றான். அப்போதுதான் தேவதானப்பட்டி சந்தையில் எப்போதாவது விற்கும் பூமிக்கிழங்கு ஞாபகம் வந்தது. ஆனால் அது யானைக்கால் போல பெரிதாக இருக்கும்(டேய் சேகரு, உனக்கு வேற உருவகமே  கிடைக்கலியா ?) . மேலே கொஞ்சம் கொஞ்சமாய் சீவி தருவார்கள். அது பூமியில் இருக்கும் இடம், குரங்குகளுக்குத் மட்டுமே தெரியும் என்பார்கள். இதுவும் அதன் ஜாதிதான். ஆனால் இங்கே சிறிய சைசில் அல்லது ஒரு பெரிய சைஸ் டர்னிப்போல இருந்தது. “கேசில் உள்ளே பார்க்க முடியவில்லை” என்றதும், “நினைத்தேன்”, என்றான். “3 மணிக்கு திறப்பார்களாம், ஆனால் நான் காளைச் சண்டைக்கு போக வேண்டுமே”, என்றேன். “ஓ, வெல்  நெக்ஸ்ட் டைம் தென்”, என்றான்.
                 "டேனியல்", தயக்கத்துடன் கூப்பிட்டேன். என்ன? என்றான். “நான் உங்கள் நாட்டு சலவைக்காரி ஒருத்தியைப் பார்க்க வேண்டும்” என்றேன். என்ன? என்று திரும்பி உற்றுப்பார்த்தான். “அப்படிப்பார்க்காதே, ஒரு விஷயம் இருக்கிறது” என்றேன். “லெட்ஸ் ஸி”  என்றான். “ஓகே குட்” என்றேன். “நோ நோ இத வேற லெட்டஸ்ஸி” என்றான்.
                 மணி 2 ஆகியிருந்தது, 3 மணிக்கு மெக்ஸி டூர் ஆட்கள் வத்துவிடுவார்கள். டேனியலிடம் சொல்லி சீக்கிரமாக என் ஓட்டலுக்குத் திரும்பச் சொன்னேன். ஓட்டலுக்கு வந்து சேரும்போது மணி 2.30. டேனியலிடம் விடைபெற்று, இன்னொரு டீல் போட்டேன். வேறென்றுமில்லை, நாளைக்காலையில் ஏர்போர்ட்டில் இறக்கிவிட வேண்டுமென்று. அதோடு சலவைக்காரிகளை சந்திக்க வேண்டுமே.
                      வேகமாக ரூம் சென்று முகம் கழுவி, கீழிறங்கி ரெஸ்டாரண்டுக்கு வந்தேன். மணி 2.45 அதிக கூட்டமில்லை. ஆனால் ஒரு ஐம்பது ஐட்டங்களை பரப்பி வைத்து லஞ்ச் பஃபே என்றார்கள். பழக்கமானவை போல் தெரிந்த சில ஐட்டங்களை எடுத்து வைத்துக்கொண்டு வாயில் வைக்குமுன், “தயகாரஜான்” என்று கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஒருவன் கூவினான். என் அப்பா பெயரை அமெரிக்காவில் பலபேர் உச்சரிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள். ஆனால் இவன் கொலை செய்ததுபோல் ஒருவரும் செய்ததில்லை. நான்தான்  என்றேன்/ போகலாமா? என்றான். அடப்பாவி ஒரு கவளம் கூட வைக்கவில்லையே, “நீயும் வந்து சாப்பிடு”, என்றேன். “சாப்பிட்டுவிட்டேன்” என்றான். “சரி ஒரு அரைமணி நேரம் தா”, என்றேன். “பத்து நிமிடம்”, என்று சொல்லி அகன்றான்.
                   அவசரமாக சாப்பிட்டதில் வயிறும் நிறையவில்லை மனமும் நிறையவில்லை. கொஞ்சம் பழங்களை மட்டும் எடுத்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. நிறையப்பேரை பிக்கப் செய்யவேண்டியதிருக்கும் என்று நினைத்தபடி ஏறினேன். தடதடத்து வேன் கிளம்பியவுடன், கேட்டபோது நான் மட்டும்தான் என்றான். என்னை ஆல்ஃFரட் என்று அழைக்கும்படி சொல்லிவிட்டு, அவன் பெயர்கேட்டேன், கார்லோஸ் என்றான். லேட்டாகிவிட்டதா என்று கேட்டதற்கு “இல்லை உன் ஷோ 4.30 மணிக்குத்தான்” என்றான். அடப்பாவி, இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால் கொஞ்சம் கூட சாப்பிட்டிருப்பேனே என்று நினைத்து வயிறு எரிந்தேன்.
               மூன்றரை மணிக்கு ஸ்டேடியம் சென்றடைந்தோம். “இது மூன்று மணிநேர ஷோ”, என்று சொல்லி டிக்கட்டை கையில் கொடுத்து “எப்போது வரவேண்டும்” என்றான்.” ஷோ ஏழரைக்கு முடியுமென்றால், நீ ஒரு எட்டு மணிக்கு வா” என்றேன். “அஃப்கோர்ஸ் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், முழுவதையும் பார்த்துவிட்டுத்தான் வருவேன்” என்றேன். “சரி எஞ்ஜாய் திஷோ” என்று சொல்லிவிட்டு அகன்றான்.
வெறும் பிக்கப் டிராப் போல இருக்கிறது. என்னுடைய கேள்விகளை எல்லாம் யாரிடம் கேட்பது என்று நினைத்தபடி, அரங்குக்கு சென்றேன். காளைச்சண்டையை நேரில் பார்க்கப்போவதை நினத்தால் , என் தோள்கள் தினவெடுத்துத்துடித்தது .( என்னது தோள் தினவெடுக்குதா , அங்க வெறும் தோல்தான இருக்கு ?என்னமோ இவனே காளையைப் பிடிப்பது போல ரொம்ப பண்றானே )



இன்னும் வரும் >>>>>>

Friday, May 31, 2013

கொலையா ? தற்கொலையா ?

சுஜாதா எழுதிய "ஜோதி"


            கொஞ்சம் இடைவெளிக்குப்பின், புதுமை எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'ஜோதி' என்ற குறுநாவலை படித்தேன், முதல் முறையாக. இது எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை. ஏனெனில், என்னுடைய வீட்டு நூலகத்தில் அநேகமாக சுஜாதா எழுதிய எல்லாப் புத்தகங்களும் இருக்கின்றன. (டேய் சேகரூ, அத்தனை புத்தகங்களை வைத்து என்ன பூஜை செய்றியா, எல்லாருக்கும் படிக்கக்கொடு: மகேந்திரா, எனக்குக்கூட சும்மா வைத்திருப்பதற்கு வருத்தம்தான், யார் இப்பல்லாம் தமிழ் படிக்கிறாய்ங்க, அதுவும் இங்க நியூயார்க்கில்)
            'ஜோதி' தினமணிக்கதிரில் வெளிவந்தது. எந்த வருடம் என்று தெரியவில்லை இப்போது கிழக்கு பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எனக்குத் தெரிந்து சுஜாதாவின் எந்த புத்தகமும் போர் அடித்ததில்லை. அது நாவலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரையாகவோ, கேள்வி பதிலாகவோ எதுவாக இருந்தாலும், சுவாரஸ்யம் மட்டும்  குறைந்ததில்லை. என்னுடைய வாசிப்புப்பரிணாமத்தில், அம்புலி மாமா, வாண்டு மாமா, கோகுலம் பத்திரிகை (இப்போதும் வருகிறதா?) முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ், தமிழ்வாணன் ஆகியவற்றுக்குப்பிறகு வந்த சுஜாதா (70 களிலிருந்து) இன்றுவரை அதே இடத்தில் இருக்கிறார்.  அதன்பின், புதுமைப்பித்தன், சா.கந்தசாமி,அசோகமித்திரன்  லாசாரா ,இந்திரா  பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன் , கி .ரா . சுந்தர ராமசாமி ,ஜெயமோகன்,சாரு நிவேதிதா என்று என் வாசிப்புத்தளங்கள் விரிந்தாலும்,  இன்றும் என்னை விடாதது சுஜாதாவும், காமிக்ஸ் புத்தகங்களும் மட்டும்தான்   .
இது சுமார்தான், சரக்கு தீர்ந்திருச்சு, சுஜாதாவுக்கு வயசாயிருச்சு என்று ஒருபய நாக்கு மேல பல்லைப்போட்டு சொல்ல முடியாத அளவுக்கு இறுதிவரை வாசிப்பு இன்பத்தைக் கொடுத்தவர், கொடுப்பவர் சுஜாதா.
அவருடைய திணிக்கப்படாத இயல்பான புதுமையும், நகைச்சுவை உணர்ச்சியும் எப்போதும் மேலோங்கி இருக்கும் கிண்டலும், அவருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக்கொடுத்தது. இருந்தாலும், தமிழ் கூறும் நல்லுலகம் அவரை இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும்.

அவரால் பாதிக்கப்படவில்லை என்று அவருக்குப்பின் வந்த எந்த எழுத்தாளரும் சொல்லமுடியாது. நிறையப்பேர் அதைப்போல் முயற்சி செய்து குப்பைகளாக எழுதிக்குமித்தனர். குறிப்பாக ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார் இவர்களைச் சொல்லலாம்.
சரி 'ஜோதிக்கு' வருவோம். மறுபடியும் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும், ஊகிக்க முடியாத முடிவுள்ள கதை இது. நான் கதைச்சுருக்கம் சொல்லப்போவதில்லை, ஏனென்றால் நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்பதற்காக.
முதல் அத்தியாயத்திலேயே ஒரு வாசிக்கத்தூண்டும் ஆர்வத்தைத் தூண்டியிருப்பார். "ஆம்புலன்ஸ் வந்தபோது அந்தப்பெண் இறந்து போயிருந்தாள்". இந்த ஒரு வரிதான் முதலாவது அத்தியாயம். கேள்விகளை எழுப்பவைக்கும் இந்த முதல் அத்தியாயம் மட்டுமின்றி, "என்னதான் நடந்தது ?" என்று இறுதியில் கேள்வியினை எழுப்பி, முடிவினை நமது ஊகத்திற்கே விட்டுவிட்டிருக்கிறார். இது அவருடைய தலையாய உத்தி.
இன்னொரு ஆச்சரியப்படும் சிறப்பம்சம் என்னவென்றால், சுஜாதாவின் எந்தப்புத்தகத்திலும், எந்த ஒரு இடத்திலும் அநாவசிய வசனிப்போ, வார்த்தைகளோ இருக்காது. ஒரு வார்த்தை கூட தேவைக்கு அதிகமாக இருக்காது. சிறுகதையை இழுத்து நாவலாக்குவதோ, தொடர்கதைகளில் அநாவசிய ஆச்சரியங்களை அள்ளித்தெளிப்பதோ அவருடைய படைப்புகளில் எப்பொழுதும் இருந்ததில்லை.
                அதோடு ஒரு நாவலின் மூலமாகவே, திணிக்கப்படாமல், மேதாவித்தனம் காட்டும் முயற்சியில்லாமல் பல உலக புத்தகங்களையோ, எழுத்தாளர்களையோ, விஷயங்களையோ அள்ளித்தெளித்திருப்பார்.  அவருடைய தனிப்பட்ட வாசிப்பு, பல தளங்களின் அறிவு ஆங்காங்கே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவருடைய ஞாபகசக்தியும்  அபாரமானது. “ஜோதி”யிலும் இடையில் வெகு இயல்பாக ,நீட்ஷே, டெனிஸ் ராபின்சன், Sex and the single girl, கலீல் கிப்ரான் என்று தெளித்திருப்பார் .
கல்யாணமான புதிதில், சில சமயம் மாலைவேளையில் சுஜாதாவின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து கீழே வைக்கமுடியாமல் தொடர்ந்து நேரம் போவது தெரியாமல் படித்து 2 மணிக்கும் 3 மணிக்கும் தூங்கப்போக, என் மனைவிக்கு “சுஜாதா” மேல் ஆத்திரமும் பொறாமையும் வந்து என்னை பிலுபிலுவென்று பிடித்துவிட்டு, கோபித்துக்கொண்டு என் மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
சுஜாதாங்கிறது பொம்பளையில்லை, ஆம்பளை எழுத்தாளர்னு அவளுக்கு புரிய வைத்து வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் போதும் போதும்னு ஆயிருச்சு. ஆனால் இப்போது அவளும் சுஜாதாவின் ரசிகை.
சுஜாதா, நீங்க எங்கயும் போகலை, ஆத்மார்த்தமா உங்க புத்தகங்கள் மூலமா எப்போதும் எங்களோடுதான் இருக்கீங்க.



Tuesday, May 28, 2013

மெக்சிகோ பயணம் 13: உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிரை எடுத்திட்டாய்ங்க

Emperor Maximillian



       மெக்சிகோ சுதந்திரம் பெற்று, குடியரசாகி இருந்தாலும், அதிலுள்ள மக்களில் இருபிரிவு இருந்தனர். பழங்குடி மக்களும் சுதேசிகளும் குடியரசை ஆதரித்தாலும், அங்கேயே வாழ்ந்து, பழந்தின்று கொட்டைபோட்ட ஸ்பானிஷ் மேற்குடியினரும், பெருந்தன நிலக்கிழார்களும் மீண்டும் அரசாட்சியினையே விரும்பினர். எனவே இருவருக்கும் எப்போதும் மோதல் இருந்து கொண்டே இருந்தது. இருவருக்கும் தனித்தனி ராணுவமும் இருந்தது.
      இதற்கிடையே ஆஸ்திரிய நாட்டின் அரசவம்சத்தில் பிறந்து, ஆர்ச் டியூக் பதவியிலிருந்த, ஃபெர்டினன்ட் மேக்ஸிமிலியனை தங்களது பேரரசர் ஆகவேண்டுமென, மெக்சிகோவின் முடியாட்சியை விரும்பும் "Monarchist" சிலர் கேட்டனர். அவர்களுக்கு ஐரோப்பா முழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தலைமை தேவைப்பட்டது. இது நடந்தது 1859ல். அப்போது அவர் ஆஸ்திரிய நாட்டின் ராணுவத்தின் "கமாண்டர் இன் சீஃப்" ஆக பெரிய அந்தஸ்தில் இருந்ததால் அதனை தவிர்த்துவிட்டார். அதே கோரிக்கை மீண்டும் 1861ல் எழுந்த போதும், மறுத்துவிட்டார்.
      ஆனால் விதி அவரை விடவில்லை. மோனார்கிஸ்ட்டுகளுடன் இணைந்து ஃப்ரென்ச் ராணுவம், சுதேசிகளை முறியடித்து மெக்சிகோ சிட்டியை ஆக்ரமித்தது. அப்போது ஃபிரெஞ்ச் நாட்டை ஆண்ட மூன்றாவது நெப்போலியனும் இணைந்து கேட்டுக்கொண்டதால், கி.பி. 1863ல் மெக்சிகோவின் பேரரசராக, மேக்சிமிலியன் ஒத்துக்கொண்டார். அதன் மூலம் ஆஸ்திரியாவில் இருந்த அவருடைய பட்டம் மற்றும் பதவிகளை துறக்க நேர்ந்தது.
      1864, ஏப்ரல் மாதம் அவருடைய அரண்மனை இருந்த மிராமேர் என்ற இடத்தைவிட்டு எஸ். எம். எஸ். நோவாரா என்ற கப்பலில் மெக்சிகோவுக்கு பயணப்பட்டார். அவருக்குத் துணையாகவும், பாதுகாவலாகவும், ஆஸ்திரிய போர்க்கப்பலான SMS பெலோனா , ஃபிரென்ச் போர்க்கப்பலான தீமிஸ் , இம்பீரியல் யாட் ஃபாண்டசி  ஆகியவை துணைக்கு வந்தன . இந்த முயற்சிக்கு அப்போது இருந்த  போப்பாண்டவர் பயஸ் IX  என்பவரின் ஆசியும் இருந்தது. வழியில் வந்த, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்த ஜிப்ரால்டர், விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி, மேக்சிமில்லியனின் கப்பல் கடக்கும்போது, பீரங்கிகளை வெடித்து மரியாதை செலுத்தியது.

       இதனையெல்லாம் பார்த்து மிகவும் மகிழ்ந்த மேக்ஸிமிலியன், மிகுந்த உற்சாகத்துடன் தன் மனைவியுடன் வெரகுருஸ் என்ற இடத்தில் கி.பி.1864 மே மாதம் 21ஆம் தேதி இறங்கினார். அரசாட்சியினை விரும்பும் மக்கள் திரளாகக்கூடி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். செப்பல்டப்பெக் கோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லமாயிற்று.


ஆனால் பெனிட்டோ ஜுவாரஸ்-ஐ  பிரசிடண்ட்டாக கொண்டு இயங்கிய சுதேசி அரசாங்கம், அவரை மன்னராக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதனால் ஒரு நாட்டில் இரண்டு அரசாங்கம் இருக்கும் நிலைமை , மேக்ஸிமிலியனுக்கு பெரும் தலைவலியாய்  இருந்தது. தொடர்ந்து மோதல்கள் இருந்துகொண்டே இருந்ததால் முடிசூட்டக்கூட அவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

President Benito Juarez

    “என்னுடைய ஆட்சியை, ஏற்றுக்கொண்டால் பொதுமன்னிப்பு கொடுத்து பிரதமராக ஆக்குவேன்” என்று மேக்ஸிமிலியன் கொடுத்த வாக்குறுதியை ஏற்க பெனிட்டோ மறுத்துவிட்டார்.
       இதற்கிடையில் மேக்சிமிலியன் பலவிதமான் சீர்திருத்தங்களை நாட்டிலே ஏற்படுத்தினார். பெனிட்டோ ஏற்படுத்திய பல மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டார். குறுகிய காலமாகிலும் ,சிறுபான்மை மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தார்.
ஆனால் குடியாட்சியைச்சேர்ந்த பெனிட்டோ, பேரரசரின் விசுவாசிகளை பிடித்துகொல்ல ஆரம்பித்தார். மேக்சிமிலியனும் வேற வழியின்றி அதே தவறைச் செய்தார்.
அப்போதுதான் அமெரிக்கா (வழக்கம்போல் )மூக்கை நுழைத்து, பெனிட்டோவுக்கு உதவ முன்வந்தது. அத்தோடு மூன்றாம் நெப்போலியனை தன்  ஃபிரெஞ்ச் துருப்புகளை திரும்ப அழைத்துக்கொள்ள நிர்ப்பந்தித்தது.
அமெரிக்க உதவியோடு குடியரசுப்படைகள் வெல்வது நச்சயம் என்ற நிலை வந்தபோது, மேக்சிமிலியனின் விசுவாசிகள் பலர் அவரைவிட்டு விலகிச்சென்றனர். இறுதியாக 1866ல் நெப்போலியனும் தன் படைகளை திரும்ப அழைத்ததோடு, மேக்சிமிலியனையும் ஆஸ்திரியாவுக்கே திரும்புமாறு வேண்டினார்.
ஆனால் தன் விசுவாசிகளை கைவிட்டு ஓடுவதற்கு மேக்சிமிலியன் மறுத்துவிட்டார்.
      மேக்சிமிலியனின்  மனைவி கரோல்ட்டா (Her Imperial Majesty Empress Carolta) ஐரோப்பாவுக்கு திரும்பி பல நாடுகளில் உதவி கேட்டார். ஒருவரும் உதவி செய்ய முன்வராததால் அவர் மெக்சிகோ திரும்பவேயில்லை.

Empress Carolta

    மேக்சிமிலியனின்  8000 விசுவாசப்படைகள் அவரைக்காத்து நின்று முற்றுகையை சிலகாலம் சமாளித்தது. இதற்கிடையில் வழக்கம்போல் ஒரு எட்டப்பன் கதவைத்திறந்துவிட, குடியரசுப்படைகள் உள்ளே புகுந்து, எதிர்ப்போரை அழித்து மேக்சிமிலியனை  சிறைப்பிடித்தது.
      பல  நாட்டு மன்னர்களும், தலைவர்களும் மேக்சிமிலியனை கொல்லவேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தும், அவை அனைத்தையும் புறக்கணித்த பெனிட்டோ ஜுவாரஸ், மேக்சிமிலியனுக்கு   மரண தண்டனை  கொடுத்தார் . மேக்சிமிலியனை ,1867 ஜூன் 19ம் தேதியன்று சுட்டுக்கொன்றனர். Viva Mexico, Vivala Independence என்று சொல்லி உயிரைவிட்டார். அவரோடு கொல்லப்பட்ட இரண்டு விசுவாச தளபதிகளான மிகுவேல் மிராமன், லியனார்டோ மார்கஸ் ஆகிய இருவரும், Long Live  the Emperor என்று சொல்லி உயிரைவிட்டனர்.

      அத்தோடு மெக்சிகோவின் முடியாட்சி முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்தது.
அவருடைய உடல் எம்பாம் செய்யப்பட்டு பல நாட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த அடுத்த வருடம் ஆஸ்திரிய அரசு வில்கெம்  என்ற தனது அட்மிரலை அனுப்பி அவரது உடலை பெற்றுக்கொண்டது எந்தக்கப்பலில் முடிசூட தயக்கத்தோடு வந்தாரோ அதே கப்பலான SMS  நோவாரா என்ற கப்பலில் அவருடைய பூத உடல் ஆஸ்திரியாவுக்கு திரும்பி , வியன்னாவில் உள்ள அரசவம்ச கல்லறையில் 1868 ஜனவரியில் புதைக்கப்பட்டது.
        அவருடைய இறப்பை இறுதிவரை ஒத்துக் கொள்ளாத அவர் மனைவி, மனம் பிறழ்ந்து இத்தாலியில் உள்ள மிரமேர் கோட்டையிலும், பெல்ஜியத்தில் மெய்ஸூவில் இருக்கும் கோட்டையிலும், தனியாக தன் எஞ்சிய வாழ்க்கையைக்கழித்து ஜனவரி 1927ல் இறந்து போனார்.
இப்படி சும்மா இருந்தவரை உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ஆசைகாட்டி அழித்தது சமுதாயம்.எம்ப்பெரர் மேக்ஸிமிலியன் வாழ்ந்த அந்த கோட்டையை பார்க்கப்போவது ஒரு புல்லரிப்பைத்தந்தது .வாருங்கள் கோட்டைக்குப் போவோம்.

இன்னும் வரும் ...........

Thursday, May 23, 2013

வெளியரங்கமான அந்தரங்கங்கள்


கவிஞர் கண்ணதாசனின் "அரங்கமும் அந்தரங்கமும்"


"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போகிறது என்ற நினைப்புதான் இருந்தது, இப்புத்தகத்தை நான் வாங்கும்போது.
ஆனால் இது முற்றிலுமாக வேறு. கண்ணதாசன் இப்படி ஒன்றை எழுதினாரா? என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் எழுதிய, "சேரமான் காதலி", அர்த்தமுள்ள இந்து மதம்  போன்ற பல புத்தகங்களை நான் படித்துள்ளேன். அவற்றில் பல என் நூலகத்திலும் இருக்கிறது.
நான் நினைத்ததுபோலவே இது அவரின் சொந்த அந்தரங்கங்களை அல்ல அவர் நாளும் கூடிப்பேசி பழகிய பலரின் அந்தரங்கங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
1978ல் ராணி பத்திரிகையில் தொடராக வந்தபோது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு போற்றிய ஒரு மாபெரும் கவிஞன், தன்னுடைய சொந்த குடும்பவாழ்க்கையில் நொந்த மனிதராகவும், தன் இளம்பிராயத்து காதலை என்றும் மறக்க முடியாது கோப்பையில் வெந்த மனிதராகவும்  இருந்த ஒரு சில சம்பவங்களைத் தவிர, மற்ற அனைத்தும் கூட இருந்தவர்களின் ஏடாகூடல்கள்.
அநேக  இடங்களில் தான் கற்றுத்தேர்ந்த, அனுபவத்தில் உணர்ந்த வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளை தத்துவங்களாக உதிர்க்கும் கவிஞர், அப்பொழுதே புரையோடிப்போன சமூகத்தின் அவல நிலைகளுக்கான காரணங்களை அலசுகிறார்.
தங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையில் (Public Life) முகமூடி அணியாத நபர்கள் மிகச்சிலர்தான். அவர்களில் கண்ணதாசன் மிக முக்கியமானவர். தயக்கம், மூடநம்பிக்கை, போலி கெளரவம், பயம், முகஸ்துதி செய்தல் என்ற எதுவும் இல்லாமல், திறந்த  புத்தகமாக இருப்பது சாதாரண மனிதர்களுக்கே கடினம். அதிலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர் அப்படி இருக்கிறார், இருந்தார் என்றால் அது ஆச்சரியமூட்டும் உண்மை.
இந்தப்புத்தகத்தில் ,அன்றைய நாளில் இருந்து மறைந்த, இப்பொழுது இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற சிலரின் பொய்முகத்தை தோலுரித்துக் காட்டுகிறார் கவிஞர்.
தன சுய நலத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தாங்கள் மனைவிகளை பிறர் படுக்கைக்கு பலி கொடுத்தவர்கள், கணவன் வேறு ஒருவரைத் தேடியதால், தானும் சோரம் போன மனைவிகள், பம்பாயில் நடக்கும் கீ எக்ஸ்சேஞ்சில் சகஜமாக பங்குகொள்ளும் நம் தமிழ்நாட்டு பிரமுகர்கள், என்று பலரின் முகமூடிகளை உரித்துக்காட்டுகிறார்.
ஒன்றைக் கண்டிப்பாக சொல்லவேண்டும், இவை எல்லாம் இருந்தாலும், இது  ஒரு கிசுகிசு அல்லது ஒரு மஞ்சள் புத்தகத்தை படிப்பது போல் அல்லாமல், ஒரு தேர்ந்த மர்ம நாவலைப்படிக்கும் உணர்வைத்தான் எனக்குத்தந்தது .
ஒரு உயர்ந்த போலிஸ் அதிகாரி, சாதாரண வக்கீலாக இருந்து அரசாங்க தலைமை வக்கீலாக உயர்ந்த ஒருவர், தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு தேர்ந்த அரசியல்வாதி, ஒரு சமூக சேவகி, நடிகராக இருந்து தலைவராய் உயர்ந்த ஒருவர் ஆகியோரைப் பற்றித்தான் இதில் அதிகம் இருக்கிறது.
ஆவி or ஜூவியில் இப்படி ஒரு தொடர் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்தப்பட்டது ஞாபகம் வருகிறது.
இவர்களெல்லாம் யார் என்று அறிய உங்கள் மனம் துடிக்கிறதா? புத்தகத்தை வாங்கிப்படித்துப் பாருங்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையா. என்னைக் கேளுங்கள். 

Tuesday, May 21, 2013

மெக்சிகோ பயணம் 12 : எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எய்ட்ஸா?


     டிசம்பர் 2, 2012

      நேற்று போட்ட டீல்படி டேனியல், காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். நானும் அதற்கு முன்பே விரதம் முறிக்கும் காலை உணவை (அதாங்க பிரேக் ஃபாஸ்ட்) முடித்து காத்திருந்தேன். தன்னுடைய கருப்பு கலர் ஃபோர்டில், ஒரு கருப்பு கலர் டி ஷர்ட் போட்டுக்கொண்டு , இந்த கருப்பு கலர்  ஆளை ( நாந்தேன் )கூப்பிட வந்திருந்தான் . “ஓலா அமிகோ” என்று கைகுலுக்கி முன்பகுதியில் அமர்ந்தேன். “இன்று ஞாயிற்றுக்கிழமை டிராஃபிக் அவ்வளவாக இருக்காது” என்றபடி பறந்தான். வழியெங்கும் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சான் ஏஞ்சல் செல்வதாக திட்டம். “எவ்வளவு நேரமாகும்” என்று கேட்டபோது அரை மணி நேரம் ஆகுமென்றான். “அப்படியென்றால் ஒரு மணி நேரம் தானே?” என்று சிரித்தேன். அவன் சிரிக்காமல்,“ இன்று அப்படியாகாது” என்றான். வெளியே லேசான குளிர் இருந்தது.
அந்தச்சமயத்தில் வலதுபுறம் வரிசையாக மோட்டல்கள் வந்தன. அவனிடம் விசாரிப்பதற்கு முன், வழியில் ஒரு பெண், காரின் முன்பகுதியில் ஏறி நின்றுகொண்டு கையாட்டிக் கொண்டிருந்தாள். கொடுமை என்னவென்றால், வெறும் ஜட்டி பிரா மட்டுமே அணிந்திருந்தாள். அதிர்ந்து போனேன்? “அழகான மாடல் போன்றிருக்கும் இவள் ஏன் இங்கு இப்படி அலங்கோலமாக நிற்கிறாள்?” என்று கேட்டேன். டானியல் சொன்னான், “இதுதான் பிக்கப் ஏரியா, இங்கு பிக்கப் செய்துவிட்டு, பக்கத்திலிருந்த மோட்டலுக்கு செல்வார்கள்”. இந்தப்பகுதி மோட்டல்களில் நாள் கணக்கில் மட்டுமல்லாது மணிக்கணக்கிலும் அறைகள் கிடைக்குமாம்.
ஏய் ஏய் உங்க கற்பனைக்குதிரைகளை நிறுத்துங்க. டேனியலிடம் நான் போட்ட டீல் இதில்லை. இன்று காலையில் மெக்ஸி டூரில் நான் ஏதும் புக்பண்ணவில்லையாதலால் டேனியலும் இன்று காலை ஃப்ரீயாய் இருந்ததால், சில பார்க்கத்தவறிய இடங்களை அரைநாளில் பார்த்துவிடலாம் என்று அவனிடம் பேரம்பேசி தனியாக அமர்த்திக்கொண்டேன். அதுதாங்க டீல். வேறொன்னுமில்லை என்னை நம்புங்க.
         இந்த புராதன தொழில் ,இவ்வளவு ஓபனாக நடக்கிறதே, என்று நினைத்த வண்ணம் டேனியலிடம், "அது சரி இதெல்லாம் எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எய்ட்ஸா? என்றேன், டேனியல் பலமாக சிரித்து (அப்பாடா சிரித்துவிட்டான்), “எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றான். “ஏஞ்சல் பகுதின்னு சொல்லிட்டு , இப்படி சாத்தான் பகுதிக்கு கூட்டிட்டு வரியேன்னு” கேட்டேன்.நல்லவேளை சாமி நான் லுத்தரன், மார்மன் அல்ல என்று நினைத்தபடி, " கண் போன போக்கிலே கால் போனாத்தான தப்புன்னிட்டு ,இன்று ஞாயிற்றுக்கிழமை, சர்ச்சுக்கு காரை விடு, முதலில் , கருமம் , இந்தப்பாவத்தைஎல்லாம் தொலைக்க வேண்டும் " என்று சொன்னேன். இன்று நிறைய சர்ச்சுக்குப் போகிறோம் என்றான். சோதனைக்கென்றே ஒவ்வொரு  தெரு  முனையிலும் ஓரிருவர் நின்றிருந்தனர் .  விரைவாக கடந்து ,சான் ஏஞ்சல் என்ற கலோனியல் பகுதியில் இருந்த பிரமாண்டமான சர்ச்சுக்கு சென்றோம்.

 இங்குள்ள சர்ச்சுகள் எல்லாமே பெரிது மிகப்பெரிது. மிக அழகாக தங்க நிறத்தில் (தங்கம்தானோ?) அலங்கரிக்கப்பட்ட ஆல்டர் முன் முழங்காற்படியிட்டு ஜெபித்து, மனசு லேசானபின் எழுந்து திரும்பினேன்.

சான் ஏஞ்சல்
    மெக்சிகோ நகரின் அருகில் உள்ள சான் ஏஞ்சல்  என்பது ஒரு காலத்தில் ஸ்பானிஷ் காலனி. ஹிஸ்பானிக்ஸ் வருவதற்கு முன்னால் இது ஆஸ்டெக் மக்கள் வசித்த
டெனிட்லா என்றழைக்கப்பட்ட ஒரு கிராமம். ஸ்பானிஷ் குடியேறிய பின்னர், 1617-ல் இங்கே எல் கார்மன் என்ற கான்வென்ட்  உருவானது . சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த கான்வென்ட்  ஒரு கோட்டையாக உருவெடுத்தது. அமெரிக்கர்களோடு சண்டையும் இங்கேதான்  நடந்தது. இப்போது இது ஒரு மியூசியம்.

     சான் ஏஞ்சல் பகுதி முழுவதும் பல பழைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அனுமதி இலவசம். உள்ளே பல படங்கள், ஓவியங்கள், ராணுவ தளவாடங்கள், போர் வாள்கள், துப்பாக்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. போர்க்காலத்தில் பயன்படுத்திய பீரங்கிகள்,


 பாதாள அறைகள், சுரங்கங்கள் ஆகியவை இருந்தன. பாதாள அறைகளில் இருந்த மம்மிகளைப் பார்க்க, அன்று காவலிருந்த செக்யூரிட்டி மம்மிகள்  அனுமதிக்கவில்லை.

      இந்தப் பகுதிகளில் எரிமலைகள் இருந்து வெடித்ததாம். அதிர்ச்சியுடன் எப்போது என்றபோது 2000 வருடங்களுக்கு முன் என்றனர். அப்பாடா தப்பித்தேன் என்று நினைத்து, காருக்குத் திரும்பினோம்.
அங்கிருந்து நேராக மெக்சிகோ சிட்டி டெளன் டவுனுக்கு சென்று பார்க் செய்துவிட்டு (எச்சரிக்கை :காரில் ஏதும் வைக்கவேண்டாம்), சிறிது தூரம் தெருக்களை தாண்டி நடந்தவுடன் மாபெரும் சதுக்கம் வந்தது. நடுவில் ஏராளமான வெற்று இடத்தின் நடுவில் மெக்சிகோவின் கொடி உயரமாய் பறக்க, அதன் ஒரு பகுதியில் இருந்தது மெட்ரோபாலிடன் கதீட்ரல்.

 இதுவே மெக்சிகோவின் பழமையானதும் (கி.பி.1573) பெரிதானதும்  ஆகும். இதுதான்  மெக்சிகோவின் ரோமன் கத்தோலிக்க ஆர்ச் டயோசிஸின் தலைமையகமும்  ஆகும்.  ஸ்பெயினில் உள்ள காதிக் கதீட்ரல்களின் அடிப்படையில் ஸ்பானிஷ் ஆர்க்கிடெக்ட் "கிளாடியோ டி ஆர்ஸ்னிகா" (Claudia de Arciniega) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

        நான்கு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் பிரமாண்டமான தூண்களையும் சிலைகளையும் பல ஆல்டர்களையும் உடையது. இதில் உள்ள இரண்டு மணிக்கோபுரங்களில் 25 மணிகள் உள்ளன. பெல் டவருக்கு ஒரு வழிகாட்டி அழைத்துப்போக, ஸ்பைரல் படிக்கட்டுகளில் ஏறி ஏறி ஏறி ஏறி தலை கிறுகிறுத்துப்போனது.
       மெக்சிகோ டெளன் டவுனில் உள்ள பல கட்டிடங்களைப் போலவே கத்தீட்ரலும் சிறிது சிறிதாக புதைந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு புதைகிறது என்பதைக்கண்டுபிடிக்க பெல் டவரிலிருந்து ஒரு உருளையில் ஒரு உருக்குக் கம்பியை கட்டி வைத்திருந்தனர். அதன் மறுபகுதியில்  ஒரு துளை அமைக்கப்பட்டு கீழே கீழே தரையில் புதைக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு 5 செ.மீ புதைகிறதாம்.

கதீட்ரலில் இரண்டு பெரிய ஆல்டர்களும் 16 சிறிய சேப்பல்களும் உள்ளன. ஒவ்வொரு சிறிய ஆல்டரும் ஒவ்வொரு புனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளே நடந்த வழிபாட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
          அங்கிருந்த 18 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய இரண்டு ஆர்கன்கள் சிறப்பு வாய்ந்தவை. கிரிப்ட் என்று சொல்லப்படுகிற, பாதாள அறையில் பல முந்தைய ஆர்ச் பிஷப்புகள் புதைக்கப்பட்டிருந்தனர்.
1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயில் பெரும் பகுதி அழிந்து பின்னர் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது என்று சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சுவடும் தெரியவில்லை.
 ஸ்பெயின் படையை வழிநடத்திவந்த ஹெர்னன் கார்டஸ், ஆஸ்டெக் பேரரசை முற்றிலுமாக முறியடித்ததின் ஞாபகமாக, அவர்களுடைய போர்க்கடவுளின் ஆலயமான டெம்ப்லோ மேயரை (Templo  Mayor) அழித்து, அதே கற்களை பயன்படுத்தி அதன்மேலேயே கட்டப்பட்டது தான் இந்த கதீட்ரல். அடப்பாவிகளா வெற்றிச்சின்னமாக , அமைதிச் சின்னமான ஆலயத்தையா கட்டுவது ?நல்லவேளை ஆஸ்டெக் மக்களில் இன்று கர சேவகர்கள் இல்லை. தப்பித்தது மெக்சிகோ சிட்டி.
      டெம்ப்லோ மேயரின் சில பகுதிகளை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அது கதீட்ரலுக்கு பின்புறத்தில் இருக்கிறது. அதன் பல நிலைகளையும் சென்று பார்த்தேன்.
கதீட்ரலுக்கு அருகில் உள்ள வெட்ட வெளியில், புராதன உடையணிந்த ஒரு ஆஸ்டெக் பழங்குடி ஆள் ஒருவர் ஒருவித டிரம்மை தொடர்ந்து அடித்து ஒலியெழுப்ப, 

இன்னொருவர் சாமியாடி, வரிசையாக வந்தவர்களுக்கு தலையில் இறகுக்குவியலை வைத்து மந்திரித்தார். “போகிறாயா?” என்று டேனியல் கேட்க, “ஐயா ஆள விடு, ஏற்கனேவே காலையில் இருந்து மந்திருச்சி விட்ட மாதிரித்தான் இருக்கேன்” என்று சொல்லி நகர்ந்தேன். 
       ஆலயத்தின் அருகில் பலர் பெட்டி போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு விசையைச் சுற்ற அதில் இசைப்பாடல் வந்தது. இனிமையாக இருந்தது. அவர்கள் கிட்டே போனால் இசையை நிறுத்திவிட்டு காசு கேட்டனர். காசு கொடுக்க இசை தொடர்ந்தது. நான் சுற்றலாமா? என்று டேனியல் மூலம் கேட்டபோது அவன் மறுத்துவிட்டான். (அவனோ பிச்சைக்காரன் ,நானோ பரதேசி)

கதீட்ரலின் அருகிலேயே மற்றொருபுறம் "நேஷனல் பாலஸ்" இருந்தது. அங்குதான் பிரசிடன்ட் ஆபிஸ் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. அங்குள்ள ஒரு மியூசியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மெக்சிகோ ஓவியரான Diego Rivera வின்,  ஓவியங்கள் நிறைய இருக்கின்றனவாம். அன்று அனுமதியில்லை.
அதனை முடித்து, அங்கிருந்து சப்பல்டெபக்  கோட்டைக்குச் சென்றோம். (Chapultepec Castle). இங்குதான் பேரரசர் மேக்சிமிலியன் தங்கியிருந்தாராம். மேக்சிமிலியன் வெளியிட்ட சில நாணயங்கள் என்னிடத்தில் உண்டு. மேக்சிமிலியன் கதை மனதை உருக்கும் ஒரு சோகக்கதை.

இன்னும் வரும் …….

Friday, May 17, 2013

பேர் போன கதை -தாத்தாவின் அதே அவஸ்தை பேரனுக்கு


Social Security Card sample
நியூயார்க் புது நண்பர் :  ஹலோ தியாகராஜன்  How are you?.
ஆல்ஃபி : நல்லாயிருக்கேன், ஆனா என் பெயர் தியாகராஜன் இல்லை.
என்ன அது உங்க பெயர் இல்லையா? உங்க லாஸ்ட் நேம் என்ன?
“தியாகராஜன்”.
என்னங்க குழப்புறீங்க. அப்ப  அது யார் பெயர்?
அது என் அப்பா பெயர்
அப்ப  உங்க பெயர் என்ன?


“ ராஜசேகரன் “
ராஜசேகரனா, சொல்லவேயில்லை? அப்ப  ஆல்ஃபிரட் ?

அது என் first name

ஆல்ஃபி ?

அதுவும் என் பெயர்தான்
ஐயையோ, என்னங்க இடியாப்பச் சிக்கலா இருக்கு. உங்க உண்மையான பெயர் என்ன?
T.A. ராஜசேகரன்
இப்ப ?
ஆல்ஃபிரட்  தியாகராஜன்.
அப்ப  ராஜசேகரன்?.
அது என் மிடில் நேம் ஆயிருச்சு. அதனால் வெறும் R னு சுருங்கியிருச்சு.
உங்கப்பா ஒரு இந்துவா? 
இல்லை கிறிஸ்தவர்தான்.
அப்ப  எப்படி தியாகராஜன்?
உங்களுக்கு டைம் இருந்தா சொல்றேன்.
சரி சுருக்கமா சொல்லுங்க.

ஆச்சுவலா, என் முப்பாட்டன் சந்தியாகு.
ஐயா ஆளவிடு, போன நூற்றாண்டு கதையெல்லாம் எடுத்தா, ரொம்ப கஷ்டம், நான் அழுதுருவேன்.
     இல்ல சுருக்கமா சொல்றேன். என் தாத்தா பேர் “செபஸ்டியான்”. அவரோட மாமா சந்தியாகு, சமூகப்பணி செய்யும்படி, என் தாத்தாவை தேவதானப்பட்டி அனுப்பினார். அங்கு சென்று பள்ளி ஒன்றினை ஆரம்பித்து, பல சமூக மாற்றங்களை செய்தார். ஊருக்கு வரும் வெள்ளைக்காரர்களிடம் சரிக்கு சரிஆங்கிலம் பேசி ஊருக்கு பல நன்மைகளை செய்தார் ."பெரிய வாத்தியார்" என்று அவரை அழைத்த ஊர் மக்களுக்கு அவர் பேரை சரியாக உச்சரிக்க தெரியாமல் 'செவத்தியான்' என்று அழைத்தார்கள். முதலில் கோபத்தை வரவழைத்தாலும், என்ன செய்வது என்று இருந்துவிட்டார். அதனால் மக்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக இருப்பதற்காக, பிறந்த மூன்று மகன்களுக்கும், ஜெயராஜன், தியாகராஜன் மற்றும் ஜீவராஜன் என்று பெயர் சூட்டினார்.

என் அப்பா, அவருக்குப் பிறந்த மூன்று மகன்களுக்கும், ஒரு ஆங்கில மற்றும் ஒரு தமிழ்ப்பெயரை சூட்டினார். எனவே என் பெயர் T.A.ராஜசேகரன் ஆயிற்று. அதாவது, T.ஆல்ஃபிரட் ராஜசேகரன். என்னை வீட்டில் “சேகர்” என்றும் பள்ளியில் “ராஜசேகரன்” என்றும் கூப்பிட்டனர். எங்கப்பா அம்மா "சேகப்பன்" என்று கூப்பிட்டனர்.
  இதற்கிடையில்,காந்திகிராமம் ,தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் +1 சேர்ந்தேன். அங்கே என் வகுப்பறையில் இன்னொரு ராஜசேகரன் இருந்ததால், என்னை ஆல்ஃபிரட் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து என்னை இஷ்டத்துக்கு பல பேரிட்டு கூப்பிட்டனர்.
பலபேரா?
ஆம், Albert, Albred, Albret, Alfret, Alfert, Alferd, மற்றும் Alfraud என்று கூட கூப்பிட்டனர்.


ஷ் அப்பாடா, இப்பவே கண்ணைக்கட்டுதே? அப்புறம் 'ஆல்ஃபி'ன்னு எப்ப வந்துச்சு?
    அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த போது, அங்கிருந்த பிற நாட்டு நண்பர்கள், என்னை Alfy என்று கூப்பிட ஆரம்பித்து அதுவே இன்றுவரை நிலைத்துவிட்டது.

அப்ப Alfred Thiagarajan?
     US  வரும்போது பாஸ்போட்டில் இனிஷியல் எக்ஸ்பேன்ட் பண்ணி “தியாகராஜன் ஆல்ஃபிரட் ராஜசேகரன்” என்று இருந்தது. இங்கே சோஷியல் செக்யூரிட்டி கார்டுக்காக ஃபர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம் என்று கேட்டார்கள். எனவே ஃபர்ஸ்ட் நேம் ஆல்ஃபிரட் என்றும் லாஸ்ட் நேம் தியாகராஜன் என்றும் மிடில் இனிஷியல் R  என்றும் ஆகிவிட்டது. இங்க லாஸ்ட் நேம் வைத்துத்தான் கூப்பிடுகிறார்கள் என்பதால், என் தாத்தா பட்ட அவஸ்தையை நான் பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கே தமிழ்
  மக்கள் ஆங்கிலப் பெயரில் தடுமாறியது போல, இங்கே ஆங்கில மக்கள் என் தமிழ்ப் பெயரில் தடுக்கி விழுகிறார்கள் .
இந்த பேர் போனவன்னு சொல்றது இதைத்தானா?. நல்லவேளை வேறு பெயர்கள் எதுவும் இல்லை.
இதோட முடிச்சிட்டீங்க.

 இல்ல இல்ல நிறைய பட்டப்பெயர் இருக்கு. கவிப்பித்தன், ஊமை, புல்தடுக்கி, புலவர், ஒல்லிப்பிச்சா அப்புறம் இப்ப பரதேசி.
இந்தப் பேர் போதுமா ? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

இல்லை, பாணன் என்று ஒரு புனை பெயர் இருக்கு. அத ஏன்  வச்சேன்னா?
ஐயா ஆள விடு சாமி.
(விரைந்து எழுந்து ஓடுகிறார்)

 

Wednesday, May 15, 2013

மெக்சிகோ பயணம்-11 : கமல்ஹாசனுக்கே கத்துக்கொடுப்பாய்ங்க போல இருக்கு

Xochimilco River


     சாப்பிடுவதற்கு பெரிய ஹோட்டல் போக வேண்டுமா? அல்லது பாரம்பர்ய ரோட்டுக்கடையா? என்று கேட்டான். சுத்தம் சுகாதாரமாய் இருக்கும் எந்த இடத்திலும் சாப்பிடலாம் என்றேன்.
     அரை மணி நேரத்தில் போய்  விடலாம் என்று சொல்லிவிட்டு, சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பின்னர், ஒரு மார்க்கெட்டுக்குச் சென்றோம். புரிந்துவிட்டது மெக்சிகோவில் 1/2 மணிநேரம் என்றால் 1மணிநேரம் ஆகுமென்று. சாட்சாத் நம்மூர் சைதாப்பேட்டை மார்க்கெட் போலவே இருந்தது.
     வேகவைத்த கப்பைக்கிழங்கை, வெட்கத்தைவிட்டு வாங்கிக்கொண்டேன். உள்ளே, உள்ளே,உள்ளே நுழைந்து பார்த்தால், பலசிறிய உணவகங்களும் பலவிதமான பண்டங்களும் சுடச்சுட உடனடியாக கண்முன்னால் செய்து தந்தனர்.
Xochimilco Market


    இரு அழகிய விடலைப்பெண்களும், ஒரு பையனும் கூவிக்கூவி அழைத்தனர். டானியல் அவர்களைத்தவிர்த்து, அதன் பக்கத்து கடைக்கு ஒரு வயதான தம்பதியிடம் அழைத்துச் சென்றான். (ரசனையில்லாதவன்).
     டேனியல் என் முகத்தைப் பார்த்து, “இங்கே தான் நன்றாக இருக்கு”மென்று சொன்னான். (கண்டு புடிச்சுட்டான் போல) அவன் சொன்னது போலவே அந்த விடலைக்கடைக்கு யாரும் போவதாகக் காணோம். அந்த வி.பையன் திரும்பி அந்த வி.பெண்களில் ஒருவரை முத்தமிடத் தொடங்கினான். மெக்சிகோ இதுலேயும் நன்றாகவே முன்னேறியிருந்தது. கமல்ஹாசனுக்கே கத்துக்கொடுப்பாய்ங்க போல இருக்கு.
    எனக்கு ஒன்றும் தெரியாதென்பதால், டேனியலை ஆர்டர் செய்யச் சொல்லிவிட்டு, உயர்ந்த ஸ்டூல்களில் அமர்ந்தோம். ஒரே நேரத்தில் அந்த ஒரு கடையில் அதிகபட்சம் நான்குபேர்தான் உட்காரமுடியும். எங்கள் கண்முன்னால் ஒரு சிறிய தோசைச்சட்டியில் ரொட்டிகளைச்சுட்டு தந்தார்கள். மக்காச்சோள ரொட்டி, ஆனால் பச்சை நிறத்தில் இருந்தது. எனக்கு வெஜிடேரியன் போதுமென்றதால், ஒருவகைப் பூக்களால் செய்த கூட்டு கொடுத்தார்கள். அந்த காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. இரண்டே ரொட்டிகளில் வயிறு திம்மென்றாயிற்று, டேனியல், அதே ரொட்டிக்கு போர்க் கிரேவி தொட்டுச் சாப்பிட்டான். சாப்பிட்டான் , சாப்பிட்டான்  சாப்பிட்டுக்கொண்டே  இருந்தான் . சரியான பாம்பு  வயிறான் போல இருக்கு.
    பக்கத்துக்கடையில் முத்தம், மொத்தமாகவும் சற்றே சத்தமாகவும் இருந்தது. வரவர அறுவெறுப்பாயிருந்தது. ஒரு அளவு வேண்டாம், பசியெடுத்தால் சாப்பிட வேண்டியதுதானே என கோபம் கோபமாய் வந்தது. அதனால்தான் அங்கு யாரும் போகவில்லை என நினைத்தேன்  (சரி விட்றா விட்றா உனக்கேன் இவ்வளவு கோபம்?. இல்லை மச்சான் ஒரு நாகரிகம் வேணாம்? பப்ளிக் பிலேஸ்ல).
     உண்டு முடித்து Xochimilco ஆற்றுக்குச் சென்றோம். சோஷிமில்கோ என்பது மெக்சிகோவின் ஃபெடரல் மாவட்டங்களான 16 மாவட்டங்களுள் ஒன்று. ஸ்பெயினின் ஆக்ரமிப்புக்கு முன்பே, இங்கிருந்த பெரிய ஏரியோடு இணைந்து, மெக்சிகோ பள்ளத்தாக்கின் பல பகுதிகளை இணைக்கும் வண்ணம், வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. 110 மைல்கள் நீளமுள்ள இந்த வாய்க்கால்கள் ஆங்காங்கே சிறுசிறு தீவுகளை (Chinampas) உண்டாக்கின. அப்போது போக்குவரத்திற்கு பெரிதும் பயன்பட்ட இவை, இப்போது, வெனிஸ் நகரத்தில் உள்ள கொண்டலா  (Gondola) போல பல உல்லாசப்படகுகள் (Trajineras) செல்லும் உலக ஹெரிடேஜ் இடமாகும்.

     பார்க்கிங் லாட்டில் இடம் இல்லாததால் அங்கிருந்த சிறுசிறு உணவங்களின் முன்னே  இருந்த இடங்களும் கார்கள் நிறுத்துமிடமாக மாறி காசு வாங்கிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு பெரிய கார்னிவல் நடப்பது போல், நடைபாதையெங்கும் பெட்டிக்கடைகளும், ரோட்டோரக் கடைகளும் நிறைய முளைத்திருந்தன. ஒரு சந்தில் படக்கென திரும்பியதும், ஏராளமான படகுகள் நீரை மறைத்து நின்றிருந்தன.
    டேனியல் மெக்சி டூர் நிறுவனத்தின் ஆளைக் கண்டுபிடித்து, முகமன் கூறி என்னை அறிமுகம் செய்தான்.  வாருங்கள் ஆல்ஃபிரடோ (?) என்று கைகுலுக்கிய தண்டுவலித்து முண்டு கட்டியிருந்த இறுகிய கைகளிலிருந்து, விண்டு விடுமென்று என்னுடைய என்புதோல் போர்த்திய கைகளை லாவகமாக தப்பித்துப்பின்பற்றினேன்.
     பல படகுகளின் வழியே நடந்து எங்கள் படகுக்குச் செல்லுமுன் எனக்கு இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. சதா ஆடும் படகுகளில் ஓடும் அந்த ஆளை சற்று நேரத்தில் தேடும் நிலை வந்துவிட்டது. (ஏய் வந்துட்டான்யா வந்துட்டான்யா ஒரு பழைய கவிஞன்).

     படகுகளை தாண்டி தாண்டிச் செல்வது பெரிய சாகச சர்க்கஸ் ஆக இருந்தது. எதுக்கு ரிஸ்க்கஸ் என்று அப்படியே ஒரு படகின் நடுவில் இருந்த பெஞ்ச்சில்  உட்கார்ந்துவிட்டேன். சிறிது நேரத்தில் டேனியல் தேடிக்கொண்டு வந்தான். “என்னாச்சு?” என்று சிரித்தான். “ஐயா சாமி, நட்டாத்துல விடறது என்பது இதானா? எங்கூடவே வாப்பா” என்றேன். படகுவிட்டு படகு தாண்டும் இடங்களில் மட்டும், வெட்கத்தைவிட்டு (உயிர் அதைவிட முக்யம்ல) அவன் கட்கத்தைப்பிடித்துக் கொண்டு நடந்து நடந்து கடந்து கடந்து, ஒரு ஐம்பதுக்கும் மேல் கடந்த பிறகுதான், சிறிது இடைவெளியில் நீர் தெரிந்தது. படகுகள் விடுவதற்கு ஒரு அளவில்லையா என்று டேனியலைக் கடிந்து கொண்டு (அட முட்டாளு  டேனியல் மெக்சிகோவின் இளவரசனா!), எங்களுக்கான படகில் ஏறினோம்.
     ஆறு முழுவதும் அலங்கரிக்கப்பட்ட படகுகள் மிதந்தன. ஒவ்வொரு படகிலும் ஆட்டமும் பாட்டமுமாக ஒரே அமர்க்களம்தான் போங்க. இதுல நடுநடுவே "மாரியாச்சி" பாடகர்கள் குழு தனிப்படகுகளில் அருகில் வந்தது. ஒரு 100 பீசோ கொடுத்தால் உங்களுக்காக இரண்டு மூனு பாடல்கள் பாடுவார்கள்.
     இந்த மரியாச்சி என்பது (ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்யா - ஆர்வம் இருப்பவர்களை மட்டும்தானே படிக்கச் சொல்றேன். - இந்த மைண்ட் வாய்ஸ் மகேந்திரன் தொல்லை வேறு), ஒருவிதமான மெக்சிகன் ஃபோல்க் இசை, இரண்டு நூற்றாண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்கிறது. யூடியூபில் தேடினால் கேட்கக்கிடைக்கும். (www.youtube.com/ watch?v =tmUJyeJehsM).
Mariachi Singers

     பியர்களை குடித்துக்கொண்டும் (நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே) அதிரடி இசைக்கு துடித்துக்கொண்டும் இருந்தனர். தண்ணி மேலே படகு, படகு மேலே தண்ணி (எப்பூடி). உள்ளேயும் தண்ணி , வெளியேயும் தண்ணி. படகிலும் தண்ணியிலும் மிதந்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்தபோது, ஏதோ வேறு உலகத்திற்கு வந்ததுபோல் இருந்தது.
T

     படகுப்பயணம் முடித்து திரும்பும்போது, சல்லிசாக கிடைத்த இளநீரை பருகிவிட்டு (டேஸ்ட்டு  வேஸ்ட்டு, நம்மூர் போல இல்லிங்கோ) நிற்கும் போதுதான் ஞாபகம் வந்தது. நாளைமாலைதான் அடுத்த எங்கேஜ்மென்ட் என்று. டேனியலை ஒரு ஓரமாகத் தள்ளிக்கொண்டுபோய், “நீ நாளைக்காலைல ஃப்ரீயா” என்று கேட்டேன். “ஆம், ஏன்?” என்று வினவியபோது, காதோடு கதைபேசி ஒரு டீல் போட்டேன். அத  அப்புறமா சொல்றேனே.