Tuesday, May 28, 2013

மெக்சிகோ பயணம் 13: உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிரை எடுத்திட்டாய்ங்க

Emperor Maximillian       மெக்சிகோ சுதந்திரம் பெற்று, குடியரசாகி இருந்தாலும், அதிலுள்ள மக்களில் இருபிரிவு இருந்தனர். பழங்குடி மக்களும் சுதேசிகளும் குடியரசை ஆதரித்தாலும், அங்கேயே வாழ்ந்து, பழந்தின்று கொட்டைபோட்ட ஸ்பானிஷ் மேற்குடியினரும், பெருந்தன நிலக்கிழார்களும் மீண்டும் அரசாட்சியினையே விரும்பினர். எனவே இருவருக்கும் எப்போதும் மோதல் இருந்து கொண்டே இருந்தது. இருவருக்கும் தனித்தனி ராணுவமும் இருந்தது.
      இதற்கிடையே ஆஸ்திரிய நாட்டின் அரசவம்சத்தில் பிறந்து, ஆர்ச் டியூக் பதவியிலிருந்த, ஃபெர்டினன்ட் மேக்ஸிமிலியனை தங்களது பேரரசர் ஆகவேண்டுமென, மெக்சிகோவின் முடியாட்சியை விரும்பும் "Monarchist" சிலர் கேட்டனர். அவர்களுக்கு ஐரோப்பா முழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தலைமை தேவைப்பட்டது. இது நடந்தது 1859ல். அப்போது அவர் ஆஸ்திரிய நாட்டின் ராணுவத்தின் "கமாண்டர் இன் சீஃப்" ஆக பெரிய அந்தஸ்தில் இருந்ததால் அதனை தவிர்த்துவிட்டார். அதே கோரிக்கை மீண்டும் 1861ல் எழுந்த போதும், மறுத்துவிட்டார்.
      ஆனால் விதி அவரை விடவில்லை. மோனார்கிஸ்ட்டுகளுடன் இணைந்து ஃப்ரென்ச் ராணுவம், சுதேசிகளை முறியடித்து மெக்சிகோ சிட்டியை ஆக்ரமித்தது. அப்போது ஃபிரெஞ்ச் நாட்டை ஆண்ட மூன்றாவது நெப்போலியனும் இணைந்து கேட்டுக்கொண்டதால், கி.பி. 1863ல் மெக்சிகோவின் பேரரசராக, மேக்சிமிலியன் ஒத்துக்கொண்டார். அதன் மூலம் ஆஸ்திரியாவில் இருந்த அவருடைய பட்டம் மற்றும் பதவிகளை துறக்க நேர்ந்தது.
      1864, ஏப்ரல் மாதம் அவருடைய அரண்மனை இருந்த மிராமேர் என்ற இடத்தைவிட்டு எஸ். எம். எஸ். நோவாரா என்ற கப்பலில் மெக்சிகோவுக்கு பயணப்பட்டார். அவருக்குத் துணையாகவும், பாதுகாவலாகவும், ஆஸ்திரிய போர்க்கப்பலான SMS பெலோனா , ஃபிரென்ச் போர்க்கப்பலான தீமிஸ் , இம்பீரியல் யாட் ஃபாண்டசி  ஆகியவை துணைக்கு வந்தன . இந்த முயற்சிக்கு அப்போது இருந்த  போப்பாண்டவர் பயஸ் IX  என்பவரின் ஆசியும் இருந்தது. வழியில் வந்த, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்த ஜிப்ரால்டர், விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி, மேக்சிமில்லியனின் கப்பல் கடக்கும்போது, பீரங்கிகளை வெடித்து மரியாதை செலுத்தியது.

       இதனையெல்லாம் பார்த்து மிகவும் மகிழ்ந்த மேக்ஸிமிலியன், மிகுந்த உற்சாகத்துடன் தன் மனைவியுடன் வெரகுருஸ் என்ற இடத்தில் கி.பி.1864 மே மாதம் 21ஆம் தேதி இறங்கினார். அரசாட்சியினை விரும்பும் மக்கள் திரளாகக்கூடி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். செப்பல்டப்பெக் கோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லமாயிற்று.


ஆனால் பெனிட்டோ ஜுவாரஸ்-ஐ  பிரசிடண்ட்டாக கொண்டு இயங்கிய சுதேசி அரசாங்கம், அவரை மன்னராக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதனால் ஒரு நாட்டில் இரண்டு அரசாங்கம் இருக்கும் நிலைமை , மேக்ஸிமிலியனுக்கு பெரும் தலைவலியாய்  இருந்தது. தொடர்ந்து மோதல்கள் இருந்துகொண்டே இருந்ததால் முடிசூட்டக்கூட அவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

President Benito Juarez

    “என்னுடைய ஆட்சியை, ஏற்றுக்கொண்டால் பொதுமன்னிப்பு கொடுத்து பிரதமராக ஆக்குவேன்” என்று மேக்ஸிமிலியன் கொடுத்த வாக்குறுதியை ஏற்க பெனிட்டோ மறுத்துவிட்டார்.
       இதற்கிடையில் மேக்சிமிலியன் பலவிதமான் சீர்திருத்தங்களை நாட்டிலே ஏற்படுத்தினார். பெனிட்டோ ஏற்படுத்திய பல மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டார். குறுகிய காலமாகிலும் ,சிறுபான்மை மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தார்.
ஆனால் குடியாட்சியைச்சேர்ந்த பெனிட்டோ, பேரரசரின் விசுவாசிகளை பிடித்துகொல்ல ஆரம்பித்தார். மேக்சிமிலியனும் வேற வழியின்றி அதே தவறைச் செய்தார்.
அப்போதுதான் அமெரிக்கா (வழக்கம்போல் )மூக்கை நுழைத்து, பெனிட்டோவுக்கு உதவ முன்வந்தது. அத்தோடு மூன்றாம் நெப்போலியனை தன்  ஃபிரெஞ்ச் துருப்புகளை திரும்ப அழைத்துக்கொள்ள நிர்ப்பந்தித்தது.
அமெரிக்க உதவியோடு குடியரசுப்படைகள் வெல்வது நச்சயம் என்ற நிலை வந்தபோது, மேக்சிமிலியனின் விசுவாசிகள் பலர் அவரைவிட்டு விலகிச்சென்றனர். இறுதியாக 1866ல் நெப்போலியனும் தன் படைகளை திரும்ப அழைத்ததோடு, மேக்சிமிலியனையும் ஆஸ்திரியாவுக்கே திரும்புமாறு வேண்டினார்.
ஆனால் தன் விசுவாசிகளை கைவிட்டு ஓடுவதற்கு மேக்சிமிலியன் மறுத்துவிட்டார்.
      மேக்சிமிலியனின்  மனைவி கரோல்ட்டா (Her Imperial Majesty Empress Carolta) ஐரோப்பாவுக்கு திரும்பி பல நாடுகளில் உதவி கேட்டார். ஒருவரும் உதவி செய்ய முன்வராததால் அவர் மெக்சிகோ திரும்பவேயில்லை.

Empress Carolta

    மேக்சிமிலியனின்  8000 விசுவாசப்படைகள் அவரைக்காத்து நின்று முற்றுகையை சிலகாலம் சமாளித்தது. இதற்கிடையில் வழக்கம்போல் ஒரு எட்டப்பன் கதவைத்திறந்துவிட, குடியரசுப்படைகள் உள்ளே புகுந்து, எதிர்ப்போரை அழித்து மேக்சிமிலியனை  சிறைப்பிடித்தது.
      பல  நாட்டு மன்னர்களும், தலைவர்களும் மேக்சிமிலியனை கொல்லவேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தும், அவை அனைத்தையும் புறக்கணித்த பெனிட்டோ ஜுவாரஸ், மேக்சிமிலியனுக்கு   மரண தண்டனை  கொடுத்தார் . மேக்சிமிலியனை ,1867 ஜூன் 19ம் தேதியன்று சுட்டுக்கொன்றனர். Viva Mexico, Vivala Independence என்று சொல்லி உயிரைவிட்டார். அவரோடு கொல்லப்பட்ட இரண்டு விசுவாச தளபதிகளான மிகுவேல் மிராமன், லியனார்டோ மார்கஸ் ஆகிய இருவரும், Long Live  the Emperor என்று சொல்லி உயிரைவிட்டனர்.

      அத்தோடு மெக்சிகோவின் முடியாட்சி முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்தது.
அவருடைய உடல் எம்பாம் செய்யப்பட்டு பல நாட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த அடுத்த வருடம் ஆஸ்திரிய அரசு வில்கெம்  என்ற தனது அட்மிரலை அனுப்பி அவரது உடலை பெற்றுக்கொண்டது எந்தக்கப்பலில் முடிசூட தயக்கத்தோடு வந்தாரோ அதே கப்பலான SMS  நோவாரா என்ற கப்பலில் அவருடைய பூத உடல் ஆஸ்திரியாவுக்கு திரும்பி , வியன்னாவில் உள்ள அரசவம்ச கல்லறையில் 1868 ஜனவரியில் புதைக்கப்பட்டது.
        அவருடைய இறப்பை இறுதிவரை ஒத்துக் கொள்ளாத அவர் மனைவி, மனம் பிறழ்ந்து இத்தாலியில் உள்ள மிரமேர் கோட்டையிலும், பெல்ஜியத்தில் மெய்ஸூவில் இருக்கும் கோட்டையிலும், தனியாக தன் எஞ்சிய வாழ்க்கையைக்கழித்து ஜனவரி 1927ல் இறந்து போனார்.
இப்படி சும்மா இருந்தவரை உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ஆசைகாட்டி அழித்தது சமுதாயம்.எம்ப்பெரர் மேக்ஸிமிலியன் வாழ்ந்த அந்த கோட்டையை பார்க்கப்போவது ஒரு புல்லரிப்பைத்தந்தது .வாருங்கள் கோட்டைக்குப் போவோம்.

இன்னும் வரும் ...........

4 comments:

  1. அட்டகாஷ் அன்பு சார்.

    சூப்பரான கட்டுரை.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் ஆல்ஃபி சார் . இம்மாதம் லயன் காமிக்ஸ் சில் வெளிவந்திருக்கின்றன ஓரு கதையில் மெக்சிகோ நாட்டின் உள்நாட்டு புரட்சி பற்றி வருகிறது . ஆனால் மேக்சிமிலியன் மரணம் பற்றி குழப்பம் உங்கள் இந்த பதிவு மூலம் தீர்ந்தது . தங்களுக்கும் லிங்க் தந்த நண்பருக்கும் நன்றி சார் .

    ReplyDelete