ஆட்டுக்குட்டி முட்டையிட்டு !!!!!!!!!!!! (மீள் பதிவு )
எச்சரிக்கை: சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.
வேர்களைத்தேடி பகுதி –46
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
"தம்பி சேகப்பா, போடா சீக்கிரம் போய் மட்டன் வாங்கிட்டு வந்துரு", என்றார் அப்பா ஒரு சனிக்கிழமை காலை வேளையில். நான் ஆறாவது படிக்கும் சமயம் அது. கடைக்குத் தனியாகச் சென்று மட்டன் வாங்கும் அளவுக்கு என்னைப் பெரிய பையனாக மதிக்கிறார் என் அப்பா என்று சிறிது மகிழ்ச்சியாக இருந்தாலும், காலையில் எழுப்பி விடுகிறார்களே என்ற சிறிது எரிச்சலும் வந்தது.
கீழத்தெருவுக்கு போகும் வழியில் கறிக்கடைகள் இருந்தன. அதில் முதல்கடை ரஹீம் கடை. எப்போதும் என் அப்பா அங்குதான் வாங்குவார். தேவதானப்பட்டி முழுவதற்கும் அது ஒன்றுதான் கறிக்கடைகள் இருக்கும் இடம். ஒரு நாலைந்து கடைகள் தான் இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கறி கடைகள் கிடையாது. வீட்டுக்கு வீடு கோழி வளர்க்கும் போது, யாரு கடையில் போய் வாங்குவார்கள். முழுக் கோழியை வாங்கி அதனை அடித்து என் அம்மாவுக்கு சமைக்கத் தெரியாது. எங்கள் வீட்டில் 'லெகான்' கோழிக்கறி வாங்குவதென்றால், பக்கத்து டவுணான பெரியகுளத்திற்குத் தான் போக வேண்டும். எனவே எங்கள் வீட்டில் வாரமிருமுறை, சமயங்களில் மூன்று முறை (புதன்,சனி,ஞாயிறு) எப்போதும் ஆட்டுக்கறிதான்.
மாட்டுக்கறி, மூச், அது தெற்குத் தெருவில்தான் விற்கும் என்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ, அதைச் சாப்பிட்டும் பழக்கமில்லை. அது இன்றுவரை தொடர்கிறது.
ஒரு மஞ்சள் பையையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு கிளம்பும் போது, "சேகப்பா பார்த்து வெள்ளாடுதான் வாங்கனும், வாலை இழுத்துப்பார்", என்றார். சரிப்பா என்று சொல்லிவிட்டு வெளியே சென்றேன்.
என் அப்பாவும் அம்மாவும் பாசமாக கூப்பிடும் போது 'சேகப்பா' என்பார்கள். ராஜசேகர் என்னும் என் பெயரை (மாறிப்போன என் பெயரின் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_17.html ) சுருக்கமாக 'சேகர் என்பதோடு'அப்பன்' என்று விகுதி சேர்வதுதான் 'சேகப்பன்'. கோவம் வந்தால் என் அப்பா 'படவா ராஸ்கல்'என்றும் என் அம்மா "நீசப்பய", என்றும் செல்லமாகவும் (?) கூப்பிடுவார்கள். அய்யய்யோ கதை டிராக் மாறுது.
நான் ரஹீம் கடைக்குச் சென்றபோது, அப்போது தான் 'அஜரத்' வந்து பிஸ்மில்லா சொல்லி,ஆட்டை கழுத்தில் அறுத்து, ஒரு அலுமினியக் கோப்பையில் அதன் ரத்தத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். ரத்தப் பொரியல் இருமலுக்கு நல்லது என்று என் ஆயா எப்போதாவது செய்வார்கள். இட்லியில் தொட்டுச் சாப்பிடுவோம். அப்ப சாப்பிட்டதோடு சரி . அதன் பிறகு சாப்பிடவே இல்லை.
ஏற்கனவே அறுக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டு, தொங்கிக் கொண்டிருந்த சற்றே பெரிய சைஸ் ஆட்டில், ஒரு சிறுவன் கறுப்புக் கலர் வாலை வைத்து தைத்துக் கொண்டிருந்தான். இதைத்தான் சொல்லி, எங்கப்பா எச்சரித்திருந்தார்.
என்னைப்பார்த்துவிட்டு ரஹீம் பாய், "வாங்க தம்பி, வாத்தியாரு இன்னிக்கு வரலியா என்றார்". "இல்லை பாய், அதான் நான் வந்திருக்கேன்ல," என்றேன். “ ஒரு அஞ்சு நிமிஷம் பொறு இதோ ஆயிருச்சு”, என்று சொல்லி, ஆட்டைத் தொங்க விட்டு, கை முஷ்டியால் தோலை அப்படியே உரித்தெடுத்தார். ஆட்டை இரண்டாக வகுந்து, “சார் வீட்டுக்கு தொடைக்கறிதான் தரனும்”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
“பாய், வெள்ளைதானே”, என்றேன். வெள்ளை என்றால் வெள்ளாடு. "என்ன தம்பி உன் கண் முன்னாலதான வெட்டினேன்”, என்றார். தோலை உரித்தபின் வெள்ளாட்டுக்கும், செம்மறியாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. ஆனால் சாப்பிடும் போது எனக்கு இன்னும் வித்தியாசம் தெரிந்துவிடும். வெள்ளாட்டைவிட செம்மறியாடு சற்றே விலை குறைவு. பெரும்பாலானோர் வெள்ளாடுதான் கேட்பார்கள் என்பதால் தான், இந்த வாலை வெட்டி தைக்கும் வேலை.
வெட்டிய கறியை வாங்கிக் கொண்டு, வீடு திரும்பினேன் . எதற்காக வெள்ளாடுதான் (Goat)தான் சாப்பிடனும்னு சொல்றார்னு யோசித்துக் கொண்டே நின்ற போது, அப்பா தம்பிகளுக்கும் கோமனம் கட்டிவிட்டு, மணப்பலகையில் உட்கார வைத்து, நல்லெண்ணெயை தலையிலும் உடம்பிலும் நல்ல அரக்கப் பறக்க தேய்த்துவிட்டார். 'நல்லெண்ணெய்' கண்ணில் வழிந்து எரிச்சலைக் கூட்டி 'கெட்டெண்ணெய்' ஆனது. தலைக்குப் போடப்போகும் சீயக்காய் பொடியை (எங்கம்மா அரைத்தது) நினைத்தால் பகீரென்றது. கண்கள் விஜயகாந்த் போல ஆகிவிடும்.
ஒரு வழியாகக் குளித்து முடித்து, பள்ளிக்குக் கிளம்பும் முன் (அப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும்) கொஞ்சம் தயக்கமாய் இருந்தாலும் என் அப்பாவிடம் கேட்டேன், "அப்பா எதுக்கு வெள்ளாடுதான் சாப்பிடனும் ? ", எனக்கேட்டபோது, அருமையாக விளக்கினார் ஆசிரியர் அல்லவா.
"சேகர், வெள்ளாடு என்பது மிகவும் புத்திசாலியான மிருகம், காட்டில் எவ்வளவு தூரம் சென்றாலும், தனியாகவே வீடு வந்து சேர்ந்துடும். அதோடு எதை சாப்பிடனும் எதை சாப்பிடக் கூடாதுன்னு அதுக்கு நல்லாவே தெரியும். அதனால கண்டதைச் சாப்பிட்டு Sick ஆவாது. ஆனா செம்மறியாடு (Sheep) அப்படியில்லை. அதுக்கு அவ்வளவு அறிவில்லை. தனியாப்போனா அவ்வளவுதான், காணாமப்போயிடும். தனியா வீட்டுக்கு வரவும் தெரியாது. அதுமட்டுமில்லை, எதை சாப்பிடனும் எதை சாப்பிடக்கூடாதுன்னும் தெரியாது. கண்டதைச் சாப்பிட்டு, உடம்பும், வயிறும் சரியில்லாமப்போய் செத்துப் போயிறும். Sheepக்குத் தான் Shepherd தேவை. Goatherd ன்னு சொல்றதிலையே", என்று சொன்னார். ஐந்து அறிவுக்குள்ள இத்தனை வித்யாசம் இருக்கான்னு நினைச்சேன். அது சரி ஆறு அறிவுக்குள்ளும் எத்தனை வித்யாசம் பார்க்கிறோம் .
அடிக்கடி காணாப் போற நம்மள மாதிரி ஆட்கள் இருக்கிறதாலதான், இயேசுநாதர் எப்பவும் ஒரு Lamb -ஐ துக்கி வச்சிருக்கார்னு நெனைக்கிறேன்.
“அதோடு செம்மறியாடு அடிக்கடி செத்துப் போயிரதால சிலசமயம் கறிக்கடைக் காரர்கள் அதை யாருக்கும் தெரியாமல் விற்பதுமுண்டு, அது நோயால் செத்திருக்கும் என்பதால் பிரச்சனை வரும்", என்றும் சொன்னார்.
ஓ இதில இவ்வளவு பிரச்சனை இருக்கா என்று நினைத்துக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை வெள்ளாட்டுக்கறிதான் சாப்பிடுவது. ஆனால் மட்டன் (Mutton) என்பது பொதுவான பெயர்.செம்மறி ஆட்டோட இளம் குட்டிக்கு Lamb என்று பெயர். Goat ஓட இளம் குட்டிக்கு Baby Goat -ன்னு பேர் . அதிலும் பெண் ஆட்டைவிட ஆண் ஆடுதான் நல்லா இருக்கும் - கெடாக்குட்டினு சொல்வாங்க. மாட்டோட இளம் குட்டிக்கு veal என்று பெயர். ஆனால் வீலென்று கத்திக் கொண்டு நான் விலகி விடுவேன்...
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் செம்மறியாடு தான் வெள்ளையாக இருக்கும். வெள்ளாடு பெரும்பாலும் கறுப்பாகத்தான் இருக்கும். கறுப்பாக இருக்கும் ஆடை எதுக்கு வெள்ளாடுன்னு சொல்றாங்கன்னு புரியலயே, தலையே சுத்துது.
தொடரும்
ReplyDeleteநான் கறிக்கடைக்கே போனது இல்லை அங்கே சென்று வாங்கிவருவது எனது அண்ணந்தான்.. முதல் முறையாக கடந்த சனிக்கிழமை பதிவுலக நண்பரை வீட்டிற்கு அழைத்து இருந்தேன் அவ்ருக்காக மட்டன் செய்து போடலாம் என்று நினைத்து மட்டன் வாங்க கான் பாபா ஹலால் மீட் கடைக்கு சென்றேன் அந்த கடையில் Goat meat, Lamb meat என்று போட்டு இருந்தது.. நான் வாங்க போனதோ Mutton ஒரே குழப்பமாக இருந்தது கடைசியில் எந்து டில்லிக்கார நண்பணுக்கு போன் செய்து டேய் நம்ம இண்டியால மட்டன் என்று சொல்லி வாங்குவோமே அது என்ன மீட்ட் என்று கேட்டு கடைசியில் அவன் சொன்னப்படி கோட் மீட் வாங்கி சமைத்து கொடுத்தேன்....பாவம் அந்த நண்பர் நிலமை எப்படி இருக்கும் என்ற நிலமை தெரியவில்லை LOL
நல்ல வேளை கோட் மீட் வாங்கினீங்க .இல்லைனா இந்தப் பரதேசி பயபுள்ளை சாப்பிட்டிருக்காது .
Deleteஆனா அட்டகாச விருந்து கொடுத்து அசத்தீட்டீங்க .வயிறு முட்ட சாப்பிட்டுட்டு , நான் நியூ ஜெர்சியிலுருந்து நியூயார்க் வந்து சேரத்துக்குள்ள அய்யய்யோ , தூங்கியும் தூங்காமேயும் உயிரோட வந்து சேர்ந்ததே அந்த ஆண்டவன் கருணை சாமி .அறுசுவை உணவுக்கும் அதை விட அதிகமாக பரிமாறப்பட்ட அன்புக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நண்பரே.
//சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.//
ReplyDeleteஇல்லை இல்லை படிக்கவில்லை.
வெள்ளையாய் இருப்பதுதான் வெள்ளாடு என்று அல்லவா நினைத்தேன். இல்லையா?
சரி... நீங்கள் போனபோது கருப்பு வாழை வைத்துத் தைத்துக்கொண்டிருந்தான் என்கிறீர்களே.. அப்போ அது வெள்ளாடு இல்லை என்றுதானே அர்த்தம்? பின்னே ஏன் வாங்கினீர்கள்?
வெள்ளாடுதான் கருப்பாக இருக்கும் அதனால்தான் , செம்மறியாட்டு வாலில் வெள்ளாட்டு வாலைக்கட்டி விற்பார்கள்
Deleteஇவ்வளவு விசயம் இருக்கிறதா...?
ReplyDeleteதிண்டுக்கல் காரருக்கு தெரியாத விடயமா ? நாகல்நகர் முத்து கறிக்கடையில் போய் விசாரிங்க பாஸ் .
Delete