Tuesday, November 17, 2015

என் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 1.

Add caption
"நிறுத்துங்க நிறுத்துங்க", என்று சொல்லிக்கொண்டே பைக்கில் இருந்து குதித்துவிட்டாள் என் மனைவி ரூத். நான் கிட்டத்தட்ட விழுந்துவிட்டேன். ஆனாலும் சமாளித்து பிரேக் போட்டு நிறுத்தி திரும்பிப்பார்த்தால், என் மனைவி கையில் ஒரு அழகான நாய்க்குட்டி.
அப்போதுதான் எங்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. திருவான்மியூரில் தனிக்குடித்தனம். பழைய மகாபலிபுர ரோட்டில் உள்ள சோழிங்க நல்லூரில் இருக்கின்ற MTL என்ற எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் கம்பெனியில் பெர்சனல் ஆஃபிசர் வேலை (Personnel officer). அடையாருக்கு அடிக்கடி வருவோம். சில நேரத்தில் மாலை வேளைகளில் அடையாறு பேக்கரிக்கு வந்து கேக், தின்பண்டங்களை வாங்கிச்செல்வோம். அங்கு சமோசாபஃப் போன்றவை கூட மிக நன்றாக இருக்கும். அப்படி வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போதுதான் இது நிகழ்ந்தது.
அந்த நாய்க்குட்டி குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு முனகிக் கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் கொழு கொழுவென்று இருந்த உடம்பில் ஒரு சில இடங்களில் சாம்பல் நிற தீற்றுக்கள். பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல் தெரிந்தது. சாதாரண மாங்கிரல் (Mongrel) தான் ஆனால் அழகாய் இருந்தது.
பேக்கரியிலிருந்து வெளிவந்து பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்து சில அடிகள் போவதற்குள் இந்த குட்டி நாய் இருபுறமும் அசைந்து அசைந்து தன்னுடம்பைத் தூக்க முடியாமல் சிற்றோட்டம் ஓடி குறுக்கே வந்ததை லாவகமாக தவிர்த்து, பைக்கைத்திருப்பும்போது அதனைப் பார்த்துவிட்ட என் மனைவி, தவ்விக்குதித்து அதனைக் கையில் எடுத்துவிட்டாள். என்னுடைய கவாசாக்கி பஜாஜ் பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டுப் பார்த்தேன்.
"ஏங்க இதை நாம வீட்டுக்கு எடுத்துப்போலாமா", என்று கேட்டாள்.
Add caption
ஆனால் அப்படி எடுத்துப்போக முடியுமா? யாருடைய நாயோ இது, திருடிச்செல்வதைப் போல் எப்படி எடுப்பது? தயங்கி நின்று கொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருந்த பெட்டிக்கடையில் இருந்த பெண், "இந்த நாய்க்குட்டி வேணுமா?" என்று கேட்டாள், "ஆமாம்" என்று என் மனைவி சொன்னதும் "தாராளமாக எடுத்துச் செல்லுங்கள்", என்றாள். அதோடு அந்தக் குட்டியின் தாய், அந்தப் பெட்டிக்கடையின் பின்னால்தான் 2 பெண்குட்டி 3 ஆண்குட்டிகள் என ஐந்து குட்டிகள் போட்டதாகவும் சொன்னாள். அந்த தாய் நாய் அடுத்த நாளே வண்டியில் அடிபட்டு செத்துப் போனதாகச் சொன்னாள். "அப்புறம் நான்தான் எல்லாத்துக்கும் பால் ஊத்தி வளர்த்தேன். ஆண் நாய்க்குட்டிகளை போட்டிபோட்டுட்டு எடுத்துப் போயிட்டாங்க ஆனா பெண்குட்டிகளை எடுக்க யாருமில்லை. அந்த ரெண்டு பெண்குட்டிகளில் ஒண்ணுதான் இது", என்றாள்.
"அப்ப இன்னொன்று எங்கன்னு" கேட்டேன் ஆவலை அடக்க முடியாமல். "அது என்ட்ட இருக்கு”,ன்னு சொல்லி கவிதான்னு கூப்பிட்டாள். பின்னாலிருந்து ஒரு ஐந்து வயதுப் பெண், இன்னொரு நாய்க்குட்டியைக் கையில் தூக்கிக் கொண்டு வந்தாள். அந்த இரண்டும் ஒரே அச்சில் வார்த்தது போல் ஒரே மாதிரி இருந்தன.
நாய்களில் கூட ஏன் பெட்டைக்குட்டிகளை வேணான்னு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை .காரணம்   தெரியாமலேயே நானும் “பெட்டை நாய் வேணாம்”னு என் மனைவிட்ட சொன்னேன். சொல்லிவிட்டு வண்டி பக்கத்தில் நகர, என் மனைவியும் நாய்க்குட்டியை ஏக்கத்தோடு கீழே இறக்கிவிட்டுவிட்டு வந்தாள். என்ன ஆச்சரியம் அந்த நாய்க்குட்டி என் மனைவி கூடவே பின்னால் ஓடிவந்துவிட்டது.
அவள் என்னைக் கெஞ்சும் முகத்தோடு பார்க்க, நான் நாயைப்பார்க்க, நாய் எங்கள் இருவரையும் பார்த்து முனகி, செல்லக்குரைப்பு குரைத்தது. புதுமனைவி சொல்வதைத் தட்டமுடியுமா? (இப்போது பழைய மனைவி ஆனாலும் தட்டமுடியவில்லை என்பது வேறு கதை !!!!!) சரியென்றதும், அவள் முகம் அபரிமிதமாக மலர்ந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
பெட்டிக்கடைப் பெண்ணும் "எடுத்துட்டுப் போங்க, அழகான நாய்"  என்று சொல்ல, எடுத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தோம். அப்புறம்தான் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.
பால் ஊற்றி வைத்தாள், குடிக்கவில்லை. சாதம் வைத்தாள் சாப்பிடவில்லை. எங்கள் இருவருக்குமே எந்த முன் அனுபவமும் இல்லை. அதன்பின் என் மனைவி பக்கத்து வீட்டு அக்காவைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.
பிறகு, அந்த அக்கா, என்னன்னவோ பண்ணிப் பார்த்துவிட்டு ம்ஹீம் தெரியல, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். நான் உடனே கடை வீதிக்குச் சென்று அலைந்து திரிந்து, நாய் பிஸ்கட் வாங்கி வந்து கொடுத்தேன். ம்ஹீம் அதையும் சாப்பிடவில்லை. அதன்பின்னர் நாங்கள் இருவரும் முடிவு செய்து, நாய்க்குட்டியை திரும்பவும் எடுத்துக்கொண்டு அந்தப் பெட்டிக்கடைப் பெண்ணிடமே சென்றோம்.
அந்தப்பெண் சொன்னாள், “தாய் நாய் செத்துப்போனதால் இந்த குட்டி நாயை நாங்கள் செல்லமாக வளர்த்துவிட்டோம். அது ஃபீடிங் பாட்டிலில்தான் பால்குடிக்கும்”, என்றாள்.
நானும் என் மனைவியும் வரும் வழியில் ஃபீடிங் பாட்டில் வாங்கிக் கொண்டுவந்து பாலை புகட்டினால், கால் லிட்டர் பாலை உறிஞ்சி தள்ளிவிட்டது. பாவம் பசி போலிருக்கு.
சுஜாதாவின் ஒரு நாவலில் வரும் கேரக்டரை அதற்கு பெயராக வைத்து ஜீனோ என்று கூப்பிட்டேன். ஜீனோ மிகவும் சுட்டியாக இருந்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டில் தனியாக இருக்கும் என் மனைவிக்கு ஜீனோ துணையாக இருப்பதை எண்ணி நான் மகிழ்ந்தேன்.
நான் அலுவலகம் முடிந்து வந்தவுடன் என் காலைச்சுற்றி வந்து கால்வழியே ஏற முயற்சிக்கும். எனக்கு நாய்களைக் கொஞ்சிப் பழக்கமில்லை  என்பதால் தூக்கமாட்டேன்.
என் மனைவி அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாடும் பழக்கிவிட்டாள்.
ஜீனோ வந்து ஒரு வாரமாகிவிட்டது. அதுவும் நன்கு பழகிவிட்டது. ஜீனோ என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் குடுகுடுவென்று ஓடிவரும். படுக்கையில் கூட எங்கள் அருகில் காலடியில் படுத்துக் கொள்ளும். குறிப்பாக என்னோடு ரொம்பவும் ஒட்டிக்கொண்டது.
நன்றாக கொழு கொழுவென்று வளர்ந்து வந்தது. ஒரு நாள் மாலை வீட்டிற்கு வந்தால் ஜீனோவைக் காணோம்.

- தொடரும்

17 comments:

 1. அண்ணே.. கண்ணாலம் ஆனா புதுசுல பைக்கில் சட்டென் பிரேக் போட்டீங்கள.. நம்பவே முடியலண்ணே ..

  ReplyDelete
  Replies
  1. தம்பி என்னோடது அர்றேன்ஜிடு மேரேஜ்.

   Delete
 2. It is interesting. I will also be moved easily on pups.
  Waiting for 2nd part soon.

  ReplyDelete
 3. படத்தில் இருப்பது நீங்கள் சொன்ன நாயா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை , இது சும்மா கூகுளில் எடுத்தது .

   Delete
 4. நான் இப்போது கடந்த இரு வருடங்களாக நாய் வளர்த்து வருகிறேன். நான் வீட்டில் இருக்கும் போது எனக்கு வாலாகத்தான் அது இருக்கிறது. இரவில் தூங்கும் போது அது என் கூடதான் ஒரே பெட்டில் தூங்கும். இந்த நாய்க்குட்டிகளின் அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை

  ReplyDelete
 5. ஆல்பியின் அலப்பறைகள் தொடற வாழ்த்துக்கள். :) ஆரம்பமே அருமை..

  ReplyDelete
 6. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

  ReplyDelete
 7. பழைய மனைவி ஆனாலும் தட்டமுடியவில்லை/// அடடா..
  இனிய ஜீனோ....தொடர்ந்து வளரட்டும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே .

   Delete
 8. இன்னொரு குட்டியுடன் சேர்ந்தே இருந்திருந்தால் துணையாக இருந்திருக்கும்....

  சுவாரஸ்யமான எழுத்து....

  ReplyDelete
  Replies
  1. அது சரி அவ்வளவுதான் கதை முடிஞ்சிருக்கும் , அடுத்த பகுதியில் தெரியும் கார்த்திக் சரவணன்.

   Delete
 9. நாய்க்குட்டி - உங்களைத் தொடந்து வந்த நாய்க்குட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நானும் தொடர்கிறேன் உங்கள் பதிவை!

  ReplyDelete