Thursday, May 21, 2015

தங்கக் கொள்ளையரும் நவஜோ வீரர் டெக்ஸ் வில்லரும் !!!!!!

 கார்சனின் கடந்த காலம்

முத்து/ லயன் காமிக்ஸ்களுக்கு  உலகமெங்கும் தீவிர ரசிகர்கள் உண்டு. அவர்களில் அடியேனும் ஒருவன். முத்து காமிக்ஸ் என்ற பெயரில் முதலில் வெளிவந்த போது பொறுப்பாசிரியராக முல்லை தங்கராசன் இருந்த காலத்திலிருந்து (1972 முதல் ஜூன் 1974 வரையில்) இந்தப் புத்தகங்களை தொடர்ந்து படித்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுள் நானும் ஒருவன் என்பதை ஏற்கனவே சிலமுறை உங்களிடம் சொல்லியுள்ளேன். முத்து காமிக்ஸின் நிறுவனர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களின் பின் அவர் மகன் விஜயன் தலையெடுத்த பிறகு லயன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வந்தது 'திகில் காமிக்ஸ்'. அந்த வரிசையில் இப்போது புதிதாக வருவது 'சன்ஷைன் லைப்ரரி' (Sun Shine Library) என்ற புதிய வடிவில் வெளிவரும் வண்ணமிகு கிராபிக் நாவல்கள். அப்படி சமீபத்தில் வெளிவந்த முழு நீளச் சித்திரக்கதைதான் "கார்சனின் கடந்த காலம்".
முத்து காமிக்ஸில் முதலில் வலம் வந்த சூப்பர் ஹீரோக்களான, இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ/ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், ஆகியோருக்கு அடுத்த வரிசையில் வரும் முக்கியமான ஜோடி டெக்ஸ் வில்லரும் (இரவுக்கழுகார்) கிட் கார்சனும். 1948-ல் இத்தாலியில் வெளிவந்த காமிக்ஸ்தான்  இதன் மூலம்.
 அமெரிக்காவில் ஆங்காங்கு பரவலாக  வசித்துவந்த செவ்விந்தியர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு புதிய எதிர்காலத்தை நாடி அலை அலையாக ஏராளமான ஐரோப்பியர்கள் முடிபுகுந்தனர். வந்தேறிய வெள்ளைக்காரர்களை, பூர்வகுடிகளான சிவப்பிந்தியர் எதிரிகளாகப் பார்த்து கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அவர்களால் நவீன ஆயுதங்களை எதிர்த்து நிற்கமுடியவில்லை. அதோடு அவர்கள் சிறிய குழுக்களாக தனித்தனி தலைவர்கள் கீழ் வாழ்ந்து வந்தனர். காலக்கிரமத்தில் செவ்விந்தியர் எதிர்த்து அழிந்துபட்டனர். சிலர் ஆதரித்து இணைந்தனர், சிலர் நாகரிக வாழ்வைத் தழுவி, இப்போது பெரும்பாலும் ஒன்றாக கலந்துவிட்டனர்.
முக்கியமாக மிட்வெஸ்ட் மற்றும் டெக்சஸ், அரிஜோனா பகுதியில் இருந்தனர். அங்கே சிறுசிறு நகரங்கள் எழுந்த போது, அமெரிக்க அரசாங்கம் அந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக ஷெரிஃப்களை நியமித்தது. அதோடு ஒவ்வொரு பகுதிக்கும் ரேஞ்சர்களை நியமித்தது. கைத் துப்பாக்கியை கண நேரத்தில் எடுத்து சுட வல்லவர்கள் இவர்கள். சட்டத்தின் காவலர்களாகவும், மக்களின் பாதுகாவலர்களாகவும், கொள்ளைக்காரர்களை பிடிக்கவும் இவர்கள் பயன்பட்டார்கள்.
இந்த வரிசையில் 'wild west' என்ற பகுதியின் ஹீரோக்களாக சிலகாலம் வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் குதிரை வீரன் கிஸ்கோகிட் மற்றும் பாஞ்சோ.

 அதன்பின் அறிமுகப்படுத்தப்பட்ட வீரர்தான் செவ்விந்தியக் குழுவில் புகழ்பெற்ற ஒரு பழங்குடியினர் ஆன நவஹோக்களின் (NAVAJO-இந்தப்பெயர் நமது காமிக்ஸில் 'நவஜோ' என்ற குறிப்பிடப்பட்டிருக்கும்)   தலைவர்களுள் ஒருவரான 'இரவுக்கழுகு' என அழைக்கப்படும் டெக்ஸ் வில்லர் தான் நம் கதையின் ஹீரோ. அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் இன்னொரு வீரர் கிட் கார்சன், இருவரும் டெக்சஸ் ரேஞ்சர்கள்தான். நம்மூரில் இருக்கும் ஃபாரஸ்ட் ரேஞ்சர்கள் போன்றவர்கள். 
Tex Villar
குறிப்பாக இந்த நாவலில் இரவுக்கழுகாகும் அவர் மகனும் கிட் கார்சனை நோக்கிச் செல்லும் பயணத்தில் கிட் கார்சன் இளமைப் பருவத்தில் நடத்திய ஒரு சாகச நிகழ்வை தன் மகனிடம் கதைபோல் சொல்லிக் கொண்டு வருகிறார். பின்னர் அவர்கள் கார்சனிடம் இணைந்து திரும்பவும் ஒன்று சேர்ந்து தங்கக் கொள்ளையர்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை. 
'சன்ஷைன் லைப்ரரி' வெளியீடான இந்த நாவல் உயர்தர வளவளப்பான லித்தோ பேப்பரில் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு சிவகாசியிலிருந்து நியூயார்க் வந்து சேர்ந்தது.
Bonelli2
Gian Luigi Bonelli
இந்தக் கதையை எழுதியவர்  Gian Luigi Bonelli. இதற்கு அருமையான ஓவியங்கள் தீட்டியவர் Aurelio Galleppinni.
Aurelio Galleppinni
   இதில் முத்துகாமிக்சுக்கு என்ன பெருமை என்றால், மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு மற்றும் எடிட்டிங். அதுமட்டுமல்ல சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதன் உரிமையாளர் விஜயன் சிறந்தவர்தான். அவர்தான் மொழிபெயர்க்கிறார் என்று நினைக்கிறேன். அதையும் புத்தகத்தில் குற்ப்பிட்டால் நலமாய் இருக்கும். 
நமது பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். தமிழ் மொழியில் ஆர்வம் பிறப்பதோடு, இந்தப் புத்தகங்கள் அவர்களுடைய கற்பனை வளத்தையும் வளர்க்கும். அதோடு கேட்ஜெட்டுகளுக்கு அடிமைகளாக ஆவதையும் தடுக்கும்.
என்னுடைய கற்பனையில் கொஞ்சம் தொப்பி வைத்து ஒரு நல்ல அரபுக்குதிரையில்  ஏறினால் நானும் கிட்டத்தட்ட டெக்ஸ் வில்லர் போலதான் இருப்பேன்
“ஏலே சேகரு  வேணாம்  , ஒத்தக்கையன்னு பாக்கிறேன் , உன்னைப்பார்த்தா
டெக்ஸ் வில்லர் மாறியா தெரியுது எக்ஸ் வில்லன்    மாறியில்ல தெரியுது”.
“அடப்பாவி இந்த மகேந்திரன் எங்க இருந்து வாரான்னே  தெரியமாட்டேங்குதே”

- முற்றும்.

10 comments:

 1. பழைய நினைவுகளை புரட்டி விட்டீர்கள்...ராணி காமிக்ஸ்'ம் இதோடு சேரும் என்று நினைகிறேன்.. எங்கள் வீட்டில் இந்த காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க மாட்டார்கள்.. வருடத்தில் இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு ஊருக்கு எங்க உறவினர் வீட்டிருக்கு போகும்போது அனைத்தையும் உட்கார்ந்து படித்து விடுவேன்..
  மிக நன்றி..

  ReplyDelete
  Replies
  1. நான் முத்து காமிக்ஸின் தீவிர ரசிகன் என்பதால் பிறவற்றை படிப்பதில்லை .எப்போதாவது படிக்க நேர்ந்தாலும் , இவற்றின் தரத்தை ஒப்பிடும்போது அவை கிட்டே வரமுடியாது . தங்களின் பகிர்வுக்கு நன்றி நண்பா .

   Delete
 2. // கேட்ஜெட்டுகளுக்கு அடிமைகளாக ஆவதையும் தடுக்கும் // ரைட்டு...

  ReplyDelete
  Replies
  1. உண்மை உண்மை உண்மை தனபாலன் .

   Delete
 3. //எக்ஸ் வில்லன் மாறியில்ல தெரியுது// அப்பாடா X- வில்லனா ? இல்ல X-(வில்)லனா

  ReplyDelete
  Replies
  1. அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தமிழ் தெரியாது கவிஞரே

   Delete
 4. நீண்ட காலத்திற்குப்பிறகு காமிக்ஸ் பதிவு அருமை

  ReplyDelete
  Replies
  1. அன்பு,உங்கள் அன்புக்கும் வருகைக்கும் நன்றி .

   Delete
 5. அருமையான பதிவு.

  தவறாக நினைக்கவில்லை என்றால், ஒரு திருத்தத்தை சுட்டிக்காட்டலாமா?

  //முத்து காமிக்ஸ் என்ற பெயரில் முதலில் வெளிவந்த போது பொறுப்பாசிரியராக முல்லை தங்கராசன் இருந்த காலத்திலிருந்து (1974-1975) இந்தப் புத்தகங்களை தொடர்ந்து படித்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுள் நானும் ஒருவன் என்பதை ஏற்கனவே சிலமுறை உங்களிடம் சொல்லியுள்ளேன். முத்து காமிக்ஸின் பின் அவர் மகன் விஜயன் தலையெடுத்த பிறகு லயன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வந்தது 'திகில் காமிக்ஸ்'.//

  ஐயா,

  முல்லை தங்கராசன் அவர்கள் முத்து காமிக்சின் பதிப்பாசிரியராக இருந்தது ஜனவரி 1972 முதல் ஜூன் 1974 வரையில்.

  அவர் மகன் விஜயன் என்று படிக்கும்போது, முல்லை தங்கராசனின் மகன் விஜயன் என்று பொருள் வருகிறது. ஆனால் முத்து காமிக்சின் நிறுவிய ஆசிரியர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களின் மகன் விஜயன் என்று சொல்வது தானே சரி?

  //அவர்தான் மொழிபெயர்க்கிறார் என்று நினைக்கிறேன்.//

  இல்லை. மற்ற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கும், பிறகு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மாற்றப்படுகிறது. (பெரும்பாலும்) இதைச் செய்பவர் திரு கருணை ஆனந்தம். திரு விஜயன் அவர்களும் பல கதைகளுக்கு செய்து வருகிறார்.

  ReplyDelete
  Replies
  1. விஸ்வா, நீங்க காமிக்ஸில் கிங்குன்னு எனக்கு நல்லாவே தெரியும் .
   தவறை சுட்டிக்காட்டுவதற்கு எப்போதுமே தயங்கவேண்டாம். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. தவறான அர்த்தம் வருவது போல்தான் தெரிகிறது
   உங்கள் அனுமதியோடு தவறுகளை திருத்தி விடுகிறேன் .

   Delete