Friday, November 22, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 4: பாறை மேல் பரதேசி !!!!!!!!!!!!!


    போர்ட்டோரிக்கோ தீவு, கடலில் தொடர்ந்து நிகழ்ந்த எரிமலைகளால் உருவானது. அதனால் இங்கு வாழும் பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் எல்லாமே கடலில் நீந்தியும் பறந்தும் இங்குவந்து சேர்ந்தவையாம். அதனால்தான் இங்கு அவை அதிகமில்லை. இங்கு வசிக்கும் பெரிய பாலூட்டிகள், எலிகள், வவ்வால்கள் மற்றும் கீரிப்பிள்ளைகள் மட்டுமே   என்று சொன்னார்கள்  .
ஒரு மேட்டில் ஏறி சிறிது இறங்கியவுடன், நம்மூர் பண்ணைக்காடு (கொடைக்கானல் போகும் வழி) போல் ஒரு இடம் வர, அங்கே பச்சை இளநிகள் பரப்பி வைக்கப்பட்டிருக்க, நிறுத்து நிறுத்து என மனைவி சொல்ல ஓரங்கட்டினேன். வெட்டிய இளநிகளில்  உறிஞ்சு குழல்களை இட்டு (அதாங்க பாஸ் ஸ்ட்ரா) மனைவியும் பெண்களும் சாப்பிட்டனர். “எங்கூரிலெல்லாம் நாங்கள் அப்படியே தூக்கித்தான் குடிப்போம்”, என்றபடி நான் முயற்சிக்க, பாதி இளநீர் டிசர்ட்டில் கொட்டி, தொப்பையை நனைக்க, மீதி நீர் மூக்கு வழியாக வந்து வழிந்தது. மனைவி அவளுடைய நெற்றியையும் என்னுடைய தலையையும் ஒரே நேரத்தில் தட்டி, “இனிமேல் வாய்வழியாக குடியுங்கள்” என்று சொல்ல சிறிது அசடும் சேர்ந்து வழிந்தது.

        மீண்டும் பயணம் தொடர ஒரு அவசர சரிவில் அதிசய அருவி கொட்டியது. நம்மூர் கொடைக்கானல் “வெள்ளி நீர்விழ்ச்சி” (Silver Cascade) போலவே இருந்தது. கொட்டிக் கிடந்த பாறைகளில் பட்டுத் தெரித்து நுரைத்து விழுந்த சிற்றருவி பாட்டிசைத்து பாடத்தூண்டியது. இதுவும்  ஒருவகை “ராக்” மியூசிக்தாங்கோ. சில துள்ளும் இளைஞர்கள், கைகளில் அள்ளும் காதலிகளை வழிநடத்தி, மேலேறிச் சென்று தண்ணீரில் நனைந்தனர். திடீரென்று தோன்றிய உத்வேகத்தில் மனைவி தடுத்ததையும் மீறி பாறைகளில் தவ்வித்தவ்வி கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்தாலும் உயரே போய் நீரைத் தொட்டேவிட்டேன்.  அங்கிருந்து கீழே பார்த்து, ஆச்சரியத்துடனும் சற்றுப் பதட்டத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த மனைவி பிள்ளைகளை பார்த்து கையை அசைத்தேன். ஏதோ சாதனை செய்தது போன்ற பெருமையில் கீழே பார்த்தால் ம்ஹீம் ஐயையோ இறங்குவது பெரும் சோதனையாகிவிடும் போலிருந்தது.
        மக்களே மறந்துவிட்டால் திரும்பவும் நினைவு படுத்துகிறேன். இந்த மாதிரி கடினப் பாறைகள் வழி ஏறுவது எப்பவுமே கொஞ்சம் எளிது, இறங்குவது மிகக்கடினம். ஒரு வழியாக உட்கார்ந்தும், தேய்த்தும் வழுக்கியும் சறுக்கியும் கீழே வந்து சேர்ந்தபோது சட்டை முழுவதும் நனைந்திருந்தது. நீரினால் அல்ல வியர்வையால். காலில் அடிப்பகுதியில் ஒரு விழுப்புண் வேறு பட்டு தீயாய் எரிந்தது.
Yokahu Observation Tower
 ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் பயணம் தொடர, இப்போது உயரமான ஒரு ஆப்சர்வேஷன் டவர் வந்தது. இந்த மாதிரி சுழலும் படிகளில், ஏறுவதுதான் கடினம், தலையும் சேர்த்து சுழலும். ஆனால் இறங்குவது கொஞ்சம் இலகுவாக இருக்கும். படிக்கட்டுகள் என்பதால் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்துகொள்ள, ஒருவழியாக மேலேறினோம். அந்த மாதிரி ஒரு பசுமைக்காட்சியினை நான் வேறெங்கும் கண்டதில்லை. ஒரு தேர்ந்த தோட்டக்காரனால் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம் போல் காடுகளும் மலைகளும் பலவித பச்சை நிறங்களாய் பரவசப்படுத்தியது.
        கீழிறங்கி வந்தால், சாரல் சிலுசிலுவென்று பிடித்துக்கொண்டது. ரெய்ன் ஃபாரஸ்ட் அல்லவா, ஓடி மறையத் தேடாமல், அப்படியே ஆனந்தமாய் நனைந்தோம்.
எல் யங்க்கி காடுகள் பற்றிய  மேலும் சில ஆச்சரியமூட்டும் உண்மைகள் கீழே.
1) கி.பி.1876-ல் ஸ்பெயின் நாட்டின் அரசர், அல்ஃபோன்சோ XII (King Alfonso XII) தான், இந்த மழைக்காடுகளைப் பிரித்து குடியிருப்புகள் வராமல் ரிசர்வ் காடுகளாக ஆக்கினார். காடுகளின் முக்கியத்துவத்தை அந்த நாளிலேயே அரசர்கள் அறிந்திருந்தது அதிசயம்தான். எனவே மேற்கத்திய ஹெமிஸ்பியரில் (West Hemisphere)இதுதான் மிகப்பழமையானது.
2) அமெரிக்க ஆக்ரமிப்புக்குப் பின்னர் 1903-ல் 65950 ஏக்கர் பரப்பளவுள்ள இது ரிசர்வ் காடுகளாக தொடர்ந்தது. 1906-ல் இது தேசியக்காடுகளாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்களால் "எல்  யங்க்கி  தேசியக் காடுகள்" (El Yunque National Forest) என பெயர் மாற்றப்பட்டது.
3) 200 வகையான தாவர வகைகள் இருக்கும் இந்தக் காட்டில், 23 வகைகள் உலகில் வேறெங்குமே இல்லாத வகைகள் ஆகும்.
4) நான்கு வகையான பாம்புகள் இங்கு இருந்தாலும் ஒன்றுக்குக்கூட விஷத்தன்மை கிடையாது.( தப்பிச்சேன்டா சாமி , பாம்புகளுக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு .அந்தக்கதைய இன்னொரு நாளைக்கு சொல்றேன் .)
5) இங்கு தங்கம் கிடைப்பதாகச் சொல்வது உண்மைதான் என்றாலும், ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்தால் $2 டாலர் மதிப்புள்ள தங்கம் மட்டுமே கிடைக்குமாம். எனவே நாட் வொர்த் இட்  .
        இன்னும் உள்ளே பார்ப்பதற்கு பல இடங்கள் இருந்தாலும், போதும் பசிக்கிறது, திரும்பலாம் என மனைவி சொல்ல, அப்படியே கீழிறங்கி மெதுவாக திரும்பினோம். 
வரும் வழியில் காட்டில் விளைந்த கினிப்பா (Quenepas) பழங்கள் கிடைத்தன. உள்ளே பழுப்பு  நிறத்தில் சதை அதிகமாக இருக்காது. வாயிலிட்டு சுவைத்தால் ஒரு புளிப்பும், இனிப்பும் கலந்த சுவை இருக்கும்.
வழியில் ஒரு சைனீஸ் கடையில் இருந்த ஸ்பானிஷ்காரியிடம், நயன மற்றும் சைகை பாஷையில் எதையோ ஆர்டர் செய்து எப்படியோ சாப்பிட்டுவிட்டு, ரூமுக்கு திரும்பின கையோடு, உடை மாற்றி பீச்சுக்குச் சென்றோம்.

        வெப்பம் 90 டிகிரி  இருந்தாலும் வெயில் அவ்வளவாக தெரியவில்லை. தினமும் மாலையிலும் இரவிலும் மழை பெய்தது. துரத்தும் மழையல்ல தூவும் மழை.
        அன்று மாலை ஏதாவது இந்திய உணவகத்திற்குப் போகலாம் என்றேன். 'மும்பை' என்று ஒரு இடம் இருப்பதாக அனிஷா கண்டுபிடித்துச் சொன்னாள். சரி என்று கிளம்பி, ஊரையே சுற்றியடித்து ஒரு இடத்தில் நுழையும் போது, எதிரே வந்த போலீஸ் கார் டுயூக்கியது, “காப்”பும் கையைக் காட்ட, நம்மைத்தான் என்று ரூத் சொன்னாள். என்னவாக இருக்கும் என்று கார் கதவைத் திறந்து சிறிது பதட்டத்துடன்  ஓலா என்றேன்.

பயணங்கள் முடிவதில்லை++++++++++++

பின்குறிப்பு  :
நண்பர்களே அடுத்த வாரம் முழுவதும் அலுவலக வேலையாக மெக்சிகோ போகிறேன் என்பதால் திங்கள் கிழமையின் பதிவு இன்றைக்கே வந்துவிட்டது. வியாழன் பதிவு வராது.மீண்டும் டிசம்பரில் சந்திக்கிறேன்.

   

6 comments:

  1. எல் யங்க்கி காடுகள் பற்றிய தகவல்களுக்கு
    நன்றி...

    சிரமம் இருந்தாலும் பயணம் தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. பல தகவல்கள்... தொடரட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. படங்களுடன் சொல்லிப் போனவிதம்
    உடன் பயணிக்கும் அனுபவம் தருகிறது
    தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ரமணி உங்கள் ஆதரவுக்கு நன்றி.

      Delete