Monday, November 18, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 3: மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் !!!!!!!!!!

பீச்சென்றால் கூட தெரியவில்லை, டிப்டாப்பாக உடுத்தி கறுப்புக்கண்ணாடி போட்டிருந்த போலிஸ்காரர்களுக்கும் கூட தெரியவில்லை. எனவே  சிறிது அலைந்து திரிந்து, கண்டுபிடித்து எப்படியோ போய்விட்டோம்.
        அங்கே போனால் நகரின் பாதிக்கூட்டம் அங்கேதான்  இருந்தது. போர்ட் வாக் (Board Walk) முழுவதும் துள்ளிசை வெடிக்க, உற்சாக பானங்கள் அருந்திய மக்கள் ஆடித்தள்ளிக்கொண்டிருந்தனர். கேட்டால், அதேதான், "ஐலண்ட் கல்ட்சர்". மெரேன்கேயும் சல்சாவும் நெளிந்தன.

              சல்சா டான்சை பார்க்க இந்த வீடியோவை க்ளிக்கவும். 

            http://www.youtube.com/watch?v=rlxNnP-hKtA

        ஒருபுறம் பெரிய பெரிய மீன்களுக்கு, சிறிய மீன்களை உணவாக அளிக்கும் காட்சி, உயரத்தில் இருந்து மீன்கள் கீழே விழுமுன், அதனை அபகரிக்கும் சீகல் பறவைகள், மீன்கள் நழுவவிடுவதை கடத்தும் வாத்துக்கள் என அந்த துறைமுகப்பகுதி ரம்மியமாக இருந்தது.
La Guancha Paseo Tablado Photo, Ponce, Puerto Rico
        அடுத்த பக்கத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஏறினால், கடலும் கரையும் துள்ளியமாகத்தெரிந்த பறவைக்கண் (Birds Eye) காட்சி.
        அதன் மறுபுறத்தில் அதிக ஆர்ப்பாட்டமில்லாத கடல், எனக்குக்கூட இறங்குவதற்கு தைரியத்தைக் கொடுத்தது.
 தெளிந்த கடற்கரை, வெண் மணல், நுரைத்த சிற்றலைகள், மறையும் சூரியன், மாலை வெய்யில் என கவிதை எழுதத் தோன்றிய மனதை கட்டுப் படுத்திக்கொண்டு, சிறிது இருட்டியதும் கிளம்பினோம்.
 டிராப்பிக்கல் பகுதி  என்பதால் 7 மணிக்கெல்லாம் நன்றாக இருட்டிவிட்டது.
        போகும் வழியில் மனைவி கேட்டாள். இரவு உணவுக்கு என்ன வேண்டும், "தக்காளி சாதமா, புளி சாதமா பூண்டுக் குழம்பா?", என்று. கிண்டல் செய்து கடுப்பேத்துகிறாள் என்று நினைத்து கம்மென்று இருந்துவிட்டேன். ஆனால் வீட்டிற்குப்போய் குளித்துவிட்டுத்திரும்புவதற்குள் ஆச்சரியம் காத்திருந்தது. மணமணக்கும் சூடான பொன்னி சாதமும் ருச்சி கலவைகளும் ரெடியாக இருந்தன. எப்படியோ கடத்திக்கொண்டு வந்திருந்தாள். ஒரு சிறிய ரைஸ்குக்கரும் கொண்டு வந்திருந்தாள். தக்காளி பேஸ்டை சூடாகப் பிசைந்து, ஒரு விள்ளலை வாயிலிட, ஆஹா என்று இருந்தது. நீங்களே சொல்லுங்க, வாதம் வந்து படுத்தாலும்  சாதம் இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா? பிள்ளைகள் மட்டும் வெளியே போய் 'சுஷி' சாப்பிட்டு வந்தார்கள்.
ஆகஸ்ட் 5, 2013 திங்கள் கிழமை
        அடுத்த நாள் சற்று விரைவாகவே எழுந்து, எழுப்பி, கிளம்பி -கிளப்பி - சென்ற இடம் "எல் யங்க்கி" (EL Yunque) மழைக்காடுகள் (Rain Forest). ஒரு மணி நேர தூரத்தில் இருந்தது. போகும் வழியில் படக்கென்று பிரேக் போட்டு, ஓரங்கட்டியதில் லேசான கிறக்கத்தில் இருந்த மனைவி பிள்ளைகள் திடுக்கிட்டு எழுந்தனர். வேறு ஒன்றும் இல்லை. பாதையோரத்தில் பழக்கடை பார்த்த பரவசத்தில் தான் அந்த தீடீர் நிறுத்தம். மாம்பழம், அன்னாசி, சப்போட்டா, நேந்திரன் என்று பலவகை பழங்கள். காத்திருக்க முடியாமல், ஒரு வாசனை மிக்க (நியூயார்க்கில்  கிடைப்பவை வாசமற்றவை) மாம்பழத்தை நறுக்கி வாயில் போட்டால், ஆஹா ஆஹா நம்மூர் மல்கோவா போலவே இருந்தது. என் மனைவி, என் சர்க்கரை அளவை ஞாபகப்படுத்தாமல் இருந்திருந்தால், முழு பழத்தையும் சாப்பிட்டு, என் முழு பலத்தையும் இழந்திருப்பேன்.  எல்லா வகைகளிலும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு பயணம் தொடர்ந்தது.ஒரு பழமே பழம் சாப்பிடுகிறது”,  என்று மனைவியின் கிண்டல் வேற.
காடுகள் உருவானது, வளர்ந்தது, எப்படி பராமரிக்கப்படுகிறது என விளக்கும் சிறிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, காட்டின் மேப்பைப் பெற்றுக்கொண்டு, காரை மீண்டும் எடுத்தோம். அடர்ந்த பசுமைக்காடுகள், நீண்டு உயர்ந்த மரங்கள், சில்லிட்டு ஓடும் சிற்றோடைகள், திடீர் நீர்வீழ்ச்சிகள், நீர்த்துளிகளால் கர்ப்பமுற்ற சிலுசிலுக்காற்று  என் வேறு உலகமாய் இருந்தது.


        வழியில் பெரிய பெரிய “மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்”,விண்ணோடும் முகிலோடும் முட்டின. நம்மூரில் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களா" இவை என்று நினைத்தால், இவை வேறு சாதி. இவற்றில் புல்லாங்குழல் செய்தால், நம்மூர் பீமன் கூட வாசிக்க முடியாது.
        இதுல இன்னொரு ஆச்சரியம் என்னன்னா? சில வகை ஊர்வன, பறப்பன மற்றும் புழுபூச்சிகள் தவிர இவ்வளவு பெரிய காட்டில் உறுமுபவை, கர்ஜிப்பவை, பிளிறுபவை என்று ஒரு மிருகமும் இல்லை. ஏனென்று கேட்டோம்.

பயணம் தொடரும் !!!!!!!!!!!!!!!   

        

11 comments:

 1. படங்களோடு கூடிய உங்களின் தெளிவான எளிமையான பதிவுஇடங்களை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது. பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மதுரைத்தமிழன் .

   Delete
 2. வாதம் வந்து படுத்தாலும் சாதம் இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா?
  முடியாது முடியாது சாதம் இல்லைன்ன சாகவும் தயாராக இருப்பவர்கள்தாம் நாம்

  ReplyDelete
  Replies
  1. முற்றிலும் உண்மை மதுரைத்தமிழன் .

   Delete
 3. என்ன நண்பரே படங்கள் எல்லாம் அருமை. சிலு சிலு குலு குலு என்ற படங்களை எல்லாம் சென்சார் பண்ணிட்டீங்களா மனைவிக்கு பயந்து அல்லது கேமராவில் படம் பிடிக்காமல் மனதில் படம் பிடித்து வைத்து நீங்கள் மட்டும் தனிமையில் ரசிக்கிறீர்களா? அது நியாமில்லை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. அவை மனதில் படம் பிடித்து வைத்து , கனவில் மட்டுமே ரசிப்பவை .

   Delete
 4. பாட்டு வரிகளுடன், அருமையான படங்களுடன், இனிமையான பயணம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி நண்பரே,
   கொஞ்ச நாளாய் காணோமே என்று நினைத்தேன்.

   Delete
 5. அருமையான படங்கள்...... மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் எங்களையும் இழுக்கிறது அங்கே!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி,வெங்கட் நாகராஜ்.

   Delete
 6. மிகவும் இரசித்துப் படித்தேன்
  இடையே வந்த் "சாதம் வாதம் "
  மற்றும்" பீமன் கூட " முதலான
  சொற்கோர்வைகள் பாயாசத்து
  முந்திரி வகை

  ReplyDelete