Monday, November 4, 2013

போர்ட்டரிக்கோ பயணம் பகுதி - 1 : வண்டுகளும் மண்டுகளும் !!!!!!!

 
   2013 கோடைகாலம் முழுவதும் சிற்றுலாக்கள் பல போய்க்கொண்டிருந்தாலும், ஒரு சுற்றுலாவாக எங்கேயாவது தூரமாய்ப்போக வேண்டும் என்று மனைவி பிள்ளைகள் நச்சரித்ததால், போர்ட்டரிக்கோ போகலாம் என உச்சரித்தேன். மூன்று மாதத்திற்கு முன்னாலேயே திட்டமிட்டு, நான்கு பேருக்கும் விமான டிக்கட்டுகளும், ஹோட்டல் புக்கிங்கும் எக்ஸ்பிடியாவில் வாங்கினேன். (Expedia.com).
        கொஞ்சம் சல்லிசாய்க்கிடைக்குமென்பதால், டைரக்ட் ஃபிளட் எடுக்காமல், நடுவில் ஒரு ஸ்டாப் எடுத்தோம். ஜான் கென்னடி விமானநிலையத்தில் ஜெட்புளு பிடித்தோம்.

 ஃப்ளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேவில் ஸ்டாப் பண்ணிய சமயம் சும்மா அலையும்போது , "ஹெல் கிச்சன்" பார்த்தேன். டிவி ஷோ போல் இல்லாமா நிதானமாத்தான் வேலை செய்து கொண்டு இருந்தாய்ங்க.ஒரு மணிநேர இடைவேளை விட்டு அடுத்த ஜெட் புளு எடுத்து, ஆகஸ்ட் 8, 2013 சனிக்கிழமை, இரவு  9 மணிக்கு  தலை நகர் சேன் வானுக்கு ( San Juan)  வந்து சேர்ந்தோம்.
        பைகளை பேக்கேஜ் கிளைமில் பொறுக்கிக்கொண்டு வெளியே வர, பேய்லெஸ் (Payless) வாடகைக்கார் கம்பெனி வேன் தயாராய் காத்துக் கொண்டிருந்தது. ஒரு பதினைந்து நிமிட பயணத்தில், ரென்டல் கார் வந்து சில ஃபார்மாலிட்டீஸ் முடித்து 'கியா' வாடகைக்காரை எடுத்தோம். ஜிபிஎஸ்ஸில் ஹோட்டல் அட்ரசை போட்டு தட்டித்தடவி "எல் கனேரியோ பொட்டிக்" ஹோட்டலுக்கு (EL CANARIO Boutique) வந்து சேர்ந்த போது இரவு 11.00 மணி. அந்த ஏரியாவே ஒளிரும் விளக்குகளால் மின்னி, எங்கும் துள்ளல் இசை வெடித்துக் கொண்டிருந்தது. ஆஸ்ஃபோர்ட் அவனிடா போர்டோரிக்கோவில் ஒரு முக்கிய தெரு.
        ஹோட்டல் ரிஷப்ஷனில் நுழைந்து புக்கிங்கும் கன்ஃபர்ம் செய்துவிட்டு, காரை எங்கு நிறுத்த வேண்டும் என்று கேட்டேன். "ஓ கார் பார்க்கிங் இங்கே இல்லை" என்று கூலாக சொன்னார், அந்த முதிர்ந்த முன் அலுவலக பொறுப்பாளர்.
        “ஐயையோ இப்ப காரை என்ன செய்வது", என்று கேட்ட போது, “தெருவில் நிறுத்தலாம், ஆனால் நள்ளிரவு 12 மணிவரை காசுகள் போடவேண்டும். ஒவ்வொரு மணிக்கும் எக்ஸ்பயர் ஆகும் முன் போய் போய் காசு போடவேண்டும். அது தலைவலி.  “பக்கத்தில் மேரியட் ஹோட்டலில் நிறுத்தலாம். நான் ஒரு ஸ்லிப் தந்தால், இரவு பார்க்கிங் $18 டாலர் மட்டுமே”, என்றார். 18 டாலரா? இதுக்கு நியூயார்க் பரவாயில்லையே என்று நினைத்தேன்.இந்தப்பகுதியில் எங்குமே ஹோட்டல்களில் பார்க்கிங் கிடையாது. இருந்தாலும் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அப்புறம் வேறு வழியின்றி  மேரியட்டில் நிறுத்திவிட்டு  கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு சாப்பிட வெளியே வந்தோம். மணி  நள்ளிரவு12.
        ஆனால் எல்லா ரெஸ்டாரன்ட்டுகளும் திறந்திருந்தன, நிறைந்திருந்தன. வழிந்திருந்தன, தள்ளாடின. சிக் என்று உடையுடுத்தி, நள்ளிரவுப்பட்டாம்பூச்சிகள், பறந்தும் மிதந்தும் அலைந்தன. வண்டுகளும் பின் தொடர்ந்தன. கேட்டால் இதுதான் ஐலன்ட் கல்ச்சராம். நான் ஒருவன்தான் மண்டு மாதிரி குடும்பத்தோடு போயிருந்தேன். 
Cover Photo
        மேரியட்டுக்கு முன்னால், கையில் மெனுகார்டுடன் ஒரு பெண், என் முன் வந்து "பியன் வெனிடாஸ்" என்றாள். அவள் அணிந்திருந்த டி சர்ட்டில் "BUNS" என்று எழுதியிருந்தது பார்த்து கொஞ்சம் மிரண்டு போய்விட்டேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்த ரெஸ்டாரண்ட் பேர் "பன்ஸ்"என்பது. பிறகு அங்கேயே சென்று பர்கர்களும், சாண்ட்விச்சும், சாலடும் ஆர்டர் பண்ணி, வெளியே ஓபன் ஏரில் இருந்த டேபிளில் உட்கார்ந்தோம். கடல்காற்று சிலுசிலுவென்று அடித்தது. எங்கே கடல்? என்று விசாரித்ததில், எங்கள் ஹோட்டலுக்கு நேர் பின்புறம் இருக்கிறதென்று அறிந்து உற்சாகமடைந்தோம். கையில் கொடுத்திருந்த பேஜர் கிர்ரிக்க, என் பெண்கள் போய் உணவை    எடுத்துக்கொண்டு வந்து, டேபிளில் விரித்து வைத்து விட்டு பானங்கள் கொண்டுவர திரும்ப உள்ளே போனார்கள். நானும் என் மனைவியும் பர்கரை எடுத்து கடிக்க, திடீரென்று அடித்த காற்று டேபிளில் இருந்த மீதி இரண்டு ஐட்டங்களையும், சாலடையும் அள்ளி கீழே எரிந்தது. அடுத்த இலக்கு தக்கையாக இருக்கும் நானாக இருக்குமோ என்று பயந்து உள்ளே போனோம். உள்ளே இடமில்லையாதலால், ஒருவழியாக நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்.
        "பீச்சுக்கு போலாமா?" என்றாள் என் மனைவி, ரொமான்டிக் பார்வையுடன். மணி 1.15 .  என் பிள்ளைகளும் தலையாட்ட, ஒரு 5 நிமிடம் திறந்திருந்த வால்கிரீன் கடையின் எதிர்ப்புறம் நடந்தால், ஆரவாரிக்கும் அலைகளுடன் அட்லாண்டிக் பெருங்கடல், தன் வெண்ணுரைகளால் வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது. ஒன்றறை மணிக்கும் கடற்கரையில் ஒண்டுற ஜோடிகள் நிறைந்து உப்புக்காற்றுடன் உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்தனர். "சரி சரி வாங்க போலாம், காலையில் வரலாம்" என்று சொல்லி ரூமுக்கு திரும்பினோம். வழியில் மழை பிடித்துக்கொண்டது. பூமழை தூவி வரவேற்கும் போர்ட்டோரிக்கோவுக்கு வந்தனம் கூறி ரூமுக்கு திரும்பினோம்.

        ரூம் ஏசி விர்ரிட்டு ஜில்லிட, தூக்கம் கண்களை தள்ளிட, வெளேர் மெத்தை எம்மை உள்ளிட...........

3 comments:

 1. ஜில்லிட, தள்ளிட.... உள்ளிட....

  அட அட அட..... :)

  பயணம் இனிதே துவங்கிட!

  நானும் தொடர்ந்து படித்திட!

  துள்ளுது மனமும் தொடர்ந்திட!

  ReplyDelete
 2. நீங்களும் இங்கு வந்திட , கருத்துக்கள் எழுதிட, நானும் நன்றிகள் சொல்லிட , அடடா டா

  ReplyDelete
 3. இடையிடையே வரும்
  லொல்லு வரிகள் சுவாரஸ்யம்..
  தொடர்கிறேன்
  குறிப்பாக பனியனில் இருந்த ஹோட்டல் பெயர்

  ReplyDelete