Thursday, June 20, 2013

என் இடுப்பு சைஸ் கடுப்பு ஏத்துகிறது மை லார்ட்


ஜீரோ சைஸீக்காக மாடல்கள் பல அக்ரோபேட்டிக் பண்ணும் பொழுது, என் இடுப்பு சைஸ் குறைந்து கொண்டே போவது எனக்கு தலைவலி, இல்லை இல்லை இடுப்பு வலியைக்கொடுக்கிறது. கல்யாணமான புதிதில் பூரிப்பாலோ அல்லது வேறு எதனாலோ, 34 சைஸிக்கு பெருகிய என் இடுப்பை மிகவும் கஷ்டப்பட்டு 32க்கு கொண்டு வந்தேன். இதற்கு பல பேண்ட்டுகளை தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
அப்புறம் நான் இனிப்பான மனிதனாக ஆனதால் (அதான் பாஸ் சர்க்கரை நோய்) நடந்த ஒரே நல்ல விஷயம் இடுப்பு சைஸ் 30 ஆனதுதான். துக்கமும் சந்தோஷமும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை பாஸ். உற்சாகத்துடன் என் வார்ட்ரோபை 30 சைஸுக்கு மாற்றி, 32 சைஸ் பேண்ட்டுகளை "சால்வேசன் ஆர்மிக்கு" நன்கொடையாக அளித்தேன்.
இப்போது இன்று காலை தோன்றியது, லுக்ஸ் லைக் அந்த 30 சைஸும் குறைவது போல் தெரிகிறது. என் இடுப்பு சைஸ் கடுப்பேத்துகிறது மை லார்ட். கொடி  இடை ஒரு பெண்ணுக்கு இருந்தால் ரசிக்கலாம், அதே ஆணுக்கு இருந்தால்? (நன்றாக புசிக்கலாம் சேகர், சாப்பிட்டு ஒடம்பைத்தேத்து). இதிலே பிரச்சனை என்னன்னா நன்றாக சாப்பிட்டால் எனக்கு ஒடம்பு குறைகிறது. ஏனென்றால் சுகர் ஏறுகிறது. குறைவாகச் சாப்பிட்டால் சுகர் குறைகிறது, தொப்பை ஏறுகிறது. டயட்டீசியனிடம் கேட்டால் 250 கிராம் அரிசி சாதம் 150 கிராம் பருப்பு என்று சொல்கிறார்கள்.( ஓ அளவோடு சாப்பிடனும்கறது இதான் போல) இதெல்லாம் வேலைக்கு ஆவுமா? தராசும் கையுமாவா அலைய முடியும்.
ஒரே வருஷத்தில் ஸ்வீட் பர்சனாயும் ரொம்ப பவர்ஃபுல் பெர்சனாயும் (கண்ணாடியைச்சொல்றேன் பாஸ் )ஆயிட்டேன். போன நூற்றாண்டில் எனக்கு  சுகர் கண்டுபிடிக்கப்பட்டது ஞாபகம் வருகிறது. என் ஃபார்மஸிஸ்ட் தம்பி பாஸ்கரிடம் சென்று “எனக்கு அடிக்கடி பசிக்கிறது, நன்றாகச் சாப்பிட்டாலும் ரெண்டு மணிநேரத்தில் பசிக்குது” என்றேன். "பசிச்சா நல்லா சாப்பிடு, நல்லதுதானே" என்றான். அப்புறம் என்ன யோசிச்சானோ, "எதுக்கும் இன்னைக்கு ராத்திரிக்கு மலர் ஹாஸ்பிடலுக்கு வா செக் பண்ணலாம்னு" சொன்னான். அங்கு தான் அவன் Pharmacist, அன்னைக்கு அவனுக்கு நைட்டூட்டி.
அப்போதெல்லாம் இரவில் சோறு சாப்பிடுவதை விட்டு விட்டு, நல்லதுன்னு வெறும் பழங்களை சாப்பிடுவேன். அன்றைய தினம் ஒரு முழு பங்கனப்பள்ளி மாம்பழம், ஒரு சாத்துக்குடி, ரெண்டு புள்ளி வாழைப்பழங்கள் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு என்னோட கவாசாக்கியில் மலருக்கு போனேன். ரெண்டு மூனு டெஸ்ட் பண்ண டாக்டர், "ஐயா நீர் எப்படி நடமாடுகிறீர்? உம் சுகர் 500க்கும் அருகில் அல்லவா இருக்கிறது." என்றார், "இப்படியே விட்டால் ஸ்ட்ரோக் வந்துவிடும், கெட் யுவர் செல்ஃப் அட்மிட்டட்" என்றார். எனக்கு நம்பிக்கையில்லை. "நாளை வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, அடுத்தநாள் காலை ராயப்பேட்டை எம்வி டயாப்படிக் சென்டருக்குப்போனேன். அங்கு ஒரு நாள் முழுவதும் பல டெஸ்ட்டுகள் செய்து (Glucose tolerant Test) confirmed Diabetes என்று உறுதியுடன் கூறினார்கள். ஆஹா, வேணாம்னு நெனைச்ச சொத்தை எங்கப்பா என்ட தள்ளிட்டாரேன்னு ஒரே  துக்கமா இருந்துச்சு. அங்கிருந்த பலபேரில் நான்தான் இளையவன்னு நெனைச்சா, வெக்கமாகவும் இருந்துச்சு. இவ்வளவு சீக்கிரம் வரனுமா ? இப்பதானே முப்பது முடிஞ்சுச்சு என நினைத்தேன்.
அங்கே ஒரு ரூமுக்கு கூட்டிட்டுப்போய் கிளாஸ் எடுத்தார்கள்.ரொம்ப ஆறுதலாப்பேசினாங்க. சுகர் வந்தா ஒன்னும் பிரச்சனையில்லை. நல்லா சாப்பிடலாம்னு சொன்னாங்க. என்னது நல்லா சாப்பிடலாமா, என்று எழுந்து உட்கார்ந்தவனிடம். "ஆமாம் இனிமேல் நீங்க 3 தடவை இல்ல, நாலுமுறை சாப்பிடலாம்" (சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி வாய்சில் படிக்கவும்) என்று சொன்ன அந்த டயட்டீசியன் ஒல்லியோ ஒல்லி (கடுமையான சுகர் இருக்குமோ?). "ஏய் இது நல்லா  இருக்கே" என்று பார்த்தபோது சொன்னார்கள், “இதுவரை ஆறுவேளை சாப்பாட்டை மூனுவேளையில் சாப்பிட்டீர்கள், இப்போது 2 வேளை சாப்பாட்டை நாலு தடவையாக சாப்பிட வேண்டும்". “ஓ கதை அப்படி போகுதா?” என்று தொய்ந்து உட்கார்ந்தேன். மறுபடியும் "ஒன்னும் கவலைப்படாதீங்க, சுகர் கஷ்டமேயில்லை, உங்களுக்கு எதெல்லாம் ரொம்ப ஆசையோ, எதெல்லாம் ரொம்ப பிடிக்குமோ " என்று ஆரம்பித்தபோது இத இத இத இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று உற்சாகமாய் நிமிர்ந்தபோது, "அதெல்லாம் சாப்பிடக் கூடாது" (மறுபடியும் இமான் அண்ணாச்சி) என்று சொன்னபோது, என் உற்சாகம் முற்றிலும் வடிந்து, தக்கையாக உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் எப்போதோ படித்த ஜோக்கும் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. சுகர்பேஷன்ட்டிடம்  டாக்டர் "இனிமேல் ஒரு சப்பாத்தி ஒரு கப் காய்கறி ஒரு கப் வெஜிடபிள் சூப் இவை மட்டும்தான் மதிய நேரத்தில் சாப்பிடவேண்டும்" என்று சொன்னபோது  அந்த அப்பாவி பேஷண்ட் கேட்டானாம், "அதுசரி டாக்டர், இது பிஃபோர் மீல்சா, ஆஃப்டர் மீல்சா என்றானாம். அந்த நெலமை எனக்கும் வந்துவிட்டதே என்று மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆயிருச்சு அதற்கு பிறகு ஒரு பத்து வருஷம் .( சாரி பாஸ் இந்த பிளாஷ் பேக் வியாதி விடமாட்டேங்கு.)
சரி கதைக்கு வருவோம். என் முப்பது சைஸ் குறைந்தால், என் 30 சைஸ் பேண்ட்டை என்ன செய்வது என்பதைவிட, புதுபேண்ட் வாங்கப்போகும் செலவை நினைத்தால் தலையே சுத்துது. இனிமேல் நம் சைஸ் அடல்ட் சைஸ் அல்ல, பாய்ஸ் செக்சனில்தான் ஒளிந்து ஒளிந்து பேண்ட் தேட வேண்டும். சரி விடு, கேட்டா என் மகனுக்குன்னு சொல்லிறவேண்டியதுதான். இப்ப இங்க உள்ள டீனேஜ் பசங்க,பேன்ட்டை புட்டத்துக்கு கீழேதான் போடுகிறார்கள்.எப்படித்தான் நடக்கிறார்களோ? .என் நிலையும் இப்ப கிட்டத்தட்ட அந்த நிலைதான் .

இப்படியே கவலைபட்டபடியே, பெல்ட்டை இறுக்கி கட்டிக்கொண்டே, ஆபிசுக்கு கிளம்பினேன். பஸ்ஸில் போய் சப்வே பிடிக்க நேரமாகிவிடும்  என்பதால் கேப் எடுக்கலாம் என்று நினைத்து, சட்பின் புலவாடுக்கு  போனேன். இங்கே டாலர் கேப் என்ற சிஸ்டம் இருக்கிறது, நொடிக்கொருமுறை வரும். 2 டாலர் கொடுத்தால், E-train ஸ்டாப்பில் இறக்கி விடுவார்கள். நம்மூர் ஷேர் ஆட்டோபோல்.
இங்க வந்த புதிதில் அமெரிக்க சைஸ்களை பார்த்து அதிர்ந்துவிட்டேன் மெகா சைஸ் மட்டுமல்ல, பிரமாண்டமான சைஸ்களும் உண்டு. ஒபேசிட்டியை ஒரு நோயாக அறிவிக்கும் அளவுக்கு இங்கு சைஸ்கள் பெரிசு .பிளஸ் சைஸ் என்று சொல்வார்கள், அதாவது XL, மற்றும் XXL ஐவிடப் பெரியவை. இவர்களுக்கென்றே தனிக்கடைகள் உண்டு.

டாலர் கேபில் இருந்த நைஜீரிய முஸ்லீம் டிரைவருக்கு "அஸ்ஸலாமு அலைக்கும்" சொல்லி, பின் பகுதியில் முதல் ஆளாக ஏறி உட்கார்ந்தேன். அடுத்த ஸ்டாப்பில் நிக்குதை யா ஒரு மாபெரும் உருவம். அந்தப்பெண் (?) ஆள்காட்டி விரலைத்தூக்க, (அது கையா இல்லை உலக்கையா )நைஜீரியனும் நிறுத்த, எனக்கு படபடப்பு அதிகமானது அந்த ஆப்பிரிக்க அமெரிக்க பிரமாண்டமான கூட்டுத்தயாரிப்பு , மிகவும் சிரமப்பட்டு, குனிந்து, தன்னை பின்புறம் திணிக்க, அந்த படை நடுங்கும் சைஸுக்கு, என் இடை நடுங்க, கூடவே சேர்ந்து என் தொடை நடுங்க, படக்கென்று என் இடதுபுறக் கதவைத்திறந்து வெளியேறினேன். 2 டாலர் போனாப்போகுது, என் தொடை தப்பியது தொம்பிரான் புண்ணியம் என்று வீட்டுக்கு நடையைக்கட்டினேன். (சேகரு, இதுக்கு இன்னொரு தலைப்பு தோணுது , "ஒடுங்கிய இடையும் , நடுங்கிய  தொடையும் ",எப்படி இருக்கு? சும்மாரு மகேந்திரா கோவத்தை கிளப்பாத )

மத்தேயு 6:25 ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்தாகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும், சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?.

6 comments:

 1. நல்ல படத்தெரிவுகள் சகோதரம்...ஹ..ஹ..

  அன்புச் சகோதரன்
  2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

  ReplyDelete
 2. " இப்ப இங்க உள்ள டீனேஜ் பசங்க,பேன்ட்டை புட்டத்துக்கு கீழேதான் போடுகிறார்கள்.எப்படித்தான் நடக்கிறார்களோ? .என் நிலையும் இப்ப கிட்டத்தட்ட அந்த நிலைதான் ."---- இந்த சீக்கொன்ஸ் சூப்பர்டா......பைபில் கோட்டிங் அவசியமா?

  ReplyDelete
 3. //என் இடை நடுங்க,
  கூடவே சேர்ந்து என் தொடை நடுங்க,//

  super sire sema writing

  ReplyDelete
 4. நன்றி பாவா ஷரீப்.

  ReplyDelete