Thursday, June 13, 2013

காஸ்டில்லோ தியேட்டரில் நடந்த கள்ளக்காதல்- பகுதி 2


ஒருமுறை நான் காந்திகிராமம், தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்துக்கொண்டிருக்கும்போது (சேகரு சும்மா கிண்டல் பண்ணாத, நீ என்ன அங்க படிச்சியா? வீட்டிலேர்ந்து சுதந்திரம் கிடைச்சதுன்னு , சும்மா ரெண்டு வருஷம் அப்படியே ஓட்டினையே) நானும் ஆறுமுகமும் ஒரு சனிக்கிழமை யாருக்கும் தெரியாமல் நழுவி, மாட்னி ஷோவுக்கு போனோம். கமல்ஹாசன் நடித்த "மன்மதலீலை" என்று நினைக்கிறேன், சின்னாளபட்டி ராயல் டாக்கீஸில் ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளை முடிந்து உள்ளே செல்லும்போது போட்ட படம், வேறு ஒன்றாக இருந்தது.  கலரும் ஒருமாதிரி வெளிர் சிவப்பாக இருந்தது. உற்றுப்பார்த்ததும் தெரிந்துவிட்டது, அது சிவப்பாக இருந்த நீலப்படம்.
தியேட்டர் ஒரே நிசப்தமாயிருக்க, நான் ஆறுமுகம் கையைப்பிடித்து "டேய் வாடா போயிரலாம்" என்றேன். "சும்மாயிர்ரா" என்று என்னை அதட்டிய ஆறுமுகம் திறந்த வாயை மூடவில்லை. பார்க்கவும் முடியாமல், பார்க்காமலிருக்கவும் முடியாமல், ஆறுமுகத்தை விட்டுவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தபோது அந்த பிட் முடிந்து படம் ஆரம்பித்தது.( அதாவது சேகரு ,இராசலீலை முடிந்து , மன்மத லீலை ஆரம்பித்ததுன்னு சொல்றே: மகேந்திரா உனக்கு குசும்புடா ) ஒரு பத்து நிமிடம்தான் ஓடியிருக்கும். வேர்த்து விறுவிறுத்துப்போன நாங்கள் இருவரும், மீதிப்படத்தைப் பார்க்காமல் கிளம்பி ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். "டேய் ஆறுமுகம் யார்ட்டயும் சொல்லிராத, மானம் போயிரும்" என்று சொன்னதை மீறி, யார்ட்டயும் சொல்லிராதன்னு சொல்லி சொல்லியே பலபேர்ட்ட சொல்லிட்டான். அன்று மாலை உணவின்போது பலபேரைக்காணாத வார்டன், அட்டன்டென்ஸ் எடுக்க, அனைவரும் மாட்டிக்கொண்டனர். மாட்டினதுக்கு கவலைப்பட்டத விட, அன்று மாலை பிட் படம் ஓடலையேன்னு கவலைப்பட்டவனுகதான் அதிகம். இந்தப்பாவத்தை நினைத்து, அன்று இரவு காய்ச்சலில் விழுந்த நான், மூன்று நாள் ஸ்கூலுக்கு மட்டம்.அதன் பின்னர் யாரோ கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்து “ராயல் டாக்கீஸ்” சில மாதங்களாக பூட்டப்பட்டது.
இப்ப, காந்திகிராமம், சின்னாளபட்டியிலிருந்து மீண்டும் நீயூயார்க் வருவோம். திகைப்போடும் தவிப்போடும் நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அந்த இருவரும் படுக்கையிலிருந்து எழுந்தனர். ஆரம்பமானது நாடகம் (Play என்பதை தமிழில் எப்படிச்சொல்ல?). அந்தக் கதையை சுருக்கமாக சொல்கிறேன்.

கல்லூரி பட்டமளிப்புக்கு முன் நடைபெறும் பிராம் (Prom) என்ற நிகழ்ச்சியில் தற்செயலாக சந்தித்துக் கொண்ட 17 வயது பெண்ணும் , 25 வயது ஆணும் ஆகிய இந்த இருவரும், அன்றைய இரவில் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். (அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமப்பு). ஒருவரைப்பற்றி மற்றொருவர் ஒன்றும் தெரியாத நிலையில் அடுத்த நாள் எழுகின்ற வேளையில், நாடகம் துவங்குகிறது. பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் முயற்சியில், அவர்களின் பல்வேறு முரண்கள் வெளிப்பட்டு, சிறுசிறு சண்டைகள் பின்னர் சமாதானங்கள் நிகழ அப்படியே அவரவர் ஊருக்குத் திரும்புகிறார்கள். இது நடப்பது 1968-ல்.
திரும்பவும் முன்னேற்பாடோ, திட்டமிடுதலோ இல்லாமல் அடுத்த வருடம் அதே நாளில் அதே ஊரில் அதே ஹோட்டலில் அதே ரூமில், மறுபடியும் சந்தித்துக்கொள்ள 'அதே' நடக்கிறது. காலையில் அவர்களுடைய கனவுகள் எதிர்காலத் திட்டங்கள், வெற்றிதோல்விகள் மாறிய எதிர்பார்ப்புகள் எல்லாம் சிறு சிறு சண்டைகளோடு விவாதிக்கப்படுகின்றன. இப்படி 2011 ஆம் ஆண்டு அவர்களின் அறுபது வயது வரை  இந்த NSA (No Strings Attached) சந்திப்பு விடாமல் தொடர்கிறது. (டேய் சேகரு இதெல்லாம் நடக்குமா? அடேய் மகேந்திரா வந்து பார் இதுவும் நடக்கும், இதுக்கு மேலயும் நடக்கும்) இதற்கிடையில் இந்த இருவருக்கும் திருமணமாகி (தனித்தனியே) பிள்ளைகள் பிறந்து வளர, அந்தப்பையன் மாவட்ட அரசு வழக்கறிஞனா உயர, அந்தப்பெண் பலவேலைகள் செய்து, இறுதியில் தனது கனவான "எழுத்தாளர்" ஆகிறாள். இதே அனுபவத்தை புத்தகமாக வெளியிட, அது சூப்பர் டூப்பர் பெஸ்ட் செல்லர் ஆகி, ஓவர்நைட்டில் அவளை பிரபலப்படுத்துகிறது. அந்தப் புத்தகத்தின் பெயர்தான்,  " Plenty of time". இதற்கிடையில் பிள்ளைகள் பெரிதாகி செட்டிலாகிவிட, ஆணுக்கு டைவர்ஸ் ஆகி தனியே இருக்க, அவர்களுடைய கடைசி சந்திப்பில்  உண்மையாகவே இருவரும் இணைந்து, கறுப்பின மக்களுக்கு உதவுவதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார்கள். 
Jackie Alexander

இந்தக்கதையினை விட, என்னைக் கவர்ந்தது காட்சி அமைப்புகள்தான். நாடகம் முழுவதும் இரண்டே கதாபத்திரங்கள்தான். அந்த நடிகரின் பெயர் ஜாக்கி அலெக்சாண்டர் . அவரேதான் இந்த நாடகத்தை டைரக்ட்டும் செய்திருந்தார் .நடிகையின் பெயர் டிரேசி டோல்மையர் .
Traci Tolmeir

இருவரும் தத்ரூபமான மிகைப்படுத்தலில்லாத நடிப்பில் அசத்துகிறார்கள். ஓரிருமுறை அசைவ முத்தமிட்டுக் கொண்டதை விட விரசக்காட்சிகள் எதுவுமில்லை. அதுதவிர காட்சிகள் நடப்பது ஒரே ரூமில் இருந்தாலும், Props என்று சொல்லக்கூடிய பொருள்கள் மாறிக்கொண்டே வேறுவேறு காலகட்டங்களை உணர்த்துகிறது. உதாரணமாக பழைய காலத்து டயல் போன், பின்னர் பேஜர், கார்டுலஸ் போன், அதன்பின் செல்போன், என்பது ஒரு உதாரணம். அதே மாதிரி, கடைசி சந்திப்பில் லேப்டாப். அவர்களுடைய உடைகளும்  மேக்கப்பும் கச்சிதமாக இருந்தது. இருவரும் தேர்ந்த நடிகர்கள். இவற்றுள் நம்மூர் படைப்பாளர்கள் கற்றுக்கொள்ள ஏராளமாயிருக்கிறது. ஒரு இனிய மாலை அனுபவமாக  இந்த நாடகம் நினைவில் நிற்கும். என்ன அடுத்த பிளேக்கு டிக்கெட் புக்  பண்ணவா ?

முற்றியது >>>>>



6 comments:

  1. திரைக்கதையில் பாக்கியராஜை மிஞ்சுவீர்கள் போல இருக்கு. அருமையான எழுத்து. சுவாரசியமான வார்த்தைகள். போட்டு தாக்கு அல்பி..

    ReplyDelete
  2. டேய் பள்ளி்க்கூடக் கதையைச் சொல்லவே இல்ல.... சரி, வருவோம் மேட்டருக்கு..நாடகத்தை விமர்சிப்பற்கு நீ போட்ட பீடிகை, ரொம்ப நல்ல இருக்கு..கவனத்தை ஈர்த்தது! எனக்கு மட்டுமே தெரியும் உன் தைரியத்தைப் பற்றி..நீ தான் தைரியமான கேரக்ட்ரை உருவாக்கி, கனவு காண்பவனாச்சே...அந்த சேகரோட உண்மை யான பெயர் என்ன? ராஜசேகர் சொல்லாதே

    ReplyDelete
  3. Beautiful. U have taken us to US Alfy. We are enjoying your narration.

    ReplyDelete
    Replies
    1. Thanks Inba, pls plan a visit and I will take you in person

      Delete