Monday, June 17, 2013

மெக்சிகோ பயணம் 16: முரட்டுக்காளையுடன் நடந்த மூர்க்கச்சண்டை


                 அது காளையா இல்லை குட்டி யானையா என்று யோசிப்பதற்குள் ஒருமுறைப்போடு, மூக்கை விரைத்துக்கொண்டு, புஸ்புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு, வாலை பின்னால் உயர்த்திக் கொண்டு பாயுதய்யா காளை. இதோடு ஒப்பிட்டால் நம்மூர் காளையெல்லாம் ரொம்ப ஏழை பாஸ் .
                 வந்த ஜோரில் நின்றிருந்த உதவியாளர்களை நோக்கிப்பாய அவர்கள் வெடுக்கென்று ஓடி வட்டத்தின் நாலாபுறத்தில் இருந்த பாக்ஸ்களின் மர மறைப்பு களுக்குப்பின் மறைந்தனர். மடேர் மடேர் என்று காளை அந்த மர மறைப்புகளை முட்டியது, என் அடிவயிற்றைப் பிசைந்தது. நல்ல வேளை நல்ல உயரத்தில் உட்கார்ந்திருந்தேன் .மீண்டும் அங்குமிங்கும் ஓடியும், கம்பீரமாய் நிமிர்ந்து சவால் விடுவதைப்போல் பார்த்தது. மெதுவாக நோட்டம் பார்த்த ஆறு உதவியாளர்களும் இரண்டிரண்டு பேராக பிரிந்து, கையில் ஒரு கலர் துணியுடன், அங்குமிங்கும் போக்குக் காட்டுவதும், துரத்தினால் மறைப்புக்குப்பின் மறைவதுமாக சிறிது நேரம் சென்றது.
மீண்டும் மீண்டும் சீண்டி, ஒரு ஏமாந்த சந்தர்ப்பத்தில் தங்கள் கையில் இருந்த சிறிய கிரிக்கெட் ஸ்டம்ப் போல் இருந்த கூர்மையான ஆயுதத்தை கழுத்தில் இருந்த திமிலில் லாவகமாக குத்தினர். பல திசைகளிலுமிருந்தும் வந்து ஆளுக்கொன்றாக ஆறு ஸ்டம்புகளை குத்திவிட்டனர். அவையனைத்தும் கழுத்தில் இருந்து தொங்கியதோடு ரத்தம் வழியத் தொடங்கியது.
          அதற்குள் ஒரு குதிரை வீரன், கையில் நீண்ட ஈட்டியுடன் வந்தான். குதிரைக்கு இருபுறமும் மிகக்கெட்டியாக மெத்தைபோல் மறைப்பு இருந்தது, நம்மூர் பொய்க்கால் குதிரைபோல் தெரிந்தது. அதனைப் பார்த்த காளை, ரத்தம் சொட்டினாலும் கொஞ்சமும் வேகம் குறையாமல் பாய்ந்து வந்து குதிரையை முட்டியது. மறைப்புகள் இருந்ததால் குதிரை தப்பித்தது. இல்லைன்னா அதன் கதி அதோகதிதான். பல குதிரைகள் மாடு முட்டி குடல் தள்ளி உயிரை விட்டதும்   உண்டாம். அது முட்டிய வேகத்தில் குதிரை வீரன் தன் கையில் இருந்த ஈட்டியால் குத்த முயன்றான். ஆனால் காளை முட்டிய வேகம் தாங்காமல் குதிரை அப்படியே மடங்கி கீழே விழ, கூட்டத்தின் ஆரவாரம் அடங்கி நிசப்தமாயிற்று. அடுத்து என்ன நடக்கப்போகிறதென்ற திகில் சூழ்ந்தது. காளையும் மீண்டும் பாய்வதற்கு சீறியது. குதிரை பயந்து போய் சிறுநீர் கழித்து ஏராளமான சாணியைப் போட்டது.

        அப்போது இன்னொரு குதிரை வீரன் வேறு புறத்திலிருந்து வந்து “ஹோஹோ” வென்று சத்தம்போட, காளை அவனை நோக்கி திரும்பியது. முட்டுவதற்கு நாலுகால் பாய்ச்சலில் ஓடி அருகில் வரும்போது, சட்டென்று குதிரையை வேறுபுறம் திருப்பி, தன் பலமனைத்தையும் கையில் கொண்டு வந்து ஈட்டியை ஓங்கி குத்தி ஆழமாக சொருகினான். திடுக்கிட்டுப்போன காளை சற்றே மிரண்டு தள்ளாடியது. அதற்குள் சுதாரித்து எழுந்த முதலாவது குதிரை வீரன், மிக விரைவாக வர, காளை அந்தக் குதிரையை முட்ட சற்றும் தளராமல் திரும்பியது. இந்த முறை ஏமாறாமல், அவன் தன்  பங்குக்கு ஈட்டியை கழுத்தில் குத்தி இறக்க, கூட்டத்தில் ஆகாகாரம்  (ரொம்ப நாள் ஆசை இந்த வார்த்தையை பயன்படுத்துவது) எழுந்தது. குதிரை வீரர்கள் வெற்றிக்கையசைப்புடன் உள்ளே திரும்பினர்.
Fabian Barba

பலமுறைத் தாக்குதலில், சற்றே சோர்வடைந்த காளை நடுவிலே நின்று கொண்டிருக்கையில், உள்ளே நுழைந்தார் ஃபேபியன் பார்பா  (Fabian Barba). அரங்கு நிறைந்த கரகோஷம். (நன்றி, அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது). கையில் படபடத்த ஒரு பெரிய சதுர துணியுடன், காளையை நெருங்க, காளை சற்று நேரம் முறைத்துவிட்டு பாய்ந்தது. மிக லாவகமாக துணியைச்சுற்ற, காளையும் துணியை முட்டித்தோற்றது. ஒருமுறை இருமுறை அல்ல, பலமுறையும் இதேதான் நடந்தது. முட்டாள் காளை பக்கத்தில் இருக்கும் ஆளை விட்டுவிட்டு துணியையே முட்டி முட்டி தவித்துப்போனது. ஒவ்வொரு முறையும் காளையின் முட்டுதலிலிருந்து தப்பிக்கும் போதும்  சபை ஆரவாரித்தது. சில சமயம், உடம்புக்கு மிக அருகில் முட்டவந்து, துணியை சுழற்றி தப்பித்தது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    சற்று நேரத்தில் காளை தவித்துப்போக இசை உச்சஸ்தாயியை அடைய, ஃபேபியன் பாக்சைத் திரும்பிப் பார்க்க, ஒரு உதவியாளன் வாளுடன் ஓடிவந்தான். ஒரு கையில் வாளுடனும், மற்றொரு கையில் சதுர துணியுடனும் மீண்டும் காளையை நெருங்கி, உசுப்பேற்றி உசுப்பேற்றி, ஏமாந்த ஒரு சமயத்தில் தன் கூரான வாளை கழுத்தில் குத்தி, இறுக்கி இறக்கினார். முழுவாளும் உள்ளே போய்விட மாடு தள்ளாடியது.

அது நேராக இதயத்தை கிழிக்குமாம். தன்னுடைய வாளை மீண்டும் உருவி எடுத்து, காளையை உற்றுப்பார்த்து விட்டு, கையை அசைத்து பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு பாக்சுக்கு திரும்பினார். மற்ற இரு வீரர்களும் அவரை கட்டித் தழுவி வாழ்த்தினர்.
காளை தலை சுற்றி தள்ளாடி, முன்னங்கால் மடங்கி கீழே விழுந்து உயிரை விட்டது. ஓடிவந்த உதவியாளர்கள், காளை செத்துவிட்டதை உறுதி செய்துவிட்டு ஒரு விசிலடித்தவுடன், ஒரு குதிரைவண்டிபோல் ஒன்று வர அதன் பின்பகுதியில் காளையின் கால்களை பிணைத்து அப்படியே தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார்கள். அடப்பாவி மக்கா.

              எனக்கு அதுவரை தெரியாது, காளை அந்த இடத்திலேயே கொல்லப்படுமென்று . கம்பீரமாக வந்த காளை, தன் மொத்த எனர்ஜியையும் இழந்து, கால் மடங்கி விழுந்து உயிர்விட்டது மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் எனக்கு கண்ணீரையும் வரவழைத்தது.
இதேதான் நடக்குமா என்று பக்கத்தில் கேட்டபோது ஆம்  என்றார்கள். என்ன ஜென்மங்கள், “சான்ட்விட்சுகளை மென்றுகொண்டே சாவைக் கொண்டாடுகிறார்களே, குளிர் பியர்களை உறிஞ்சிக் கொண்டே, கொல்வதை ரசிக்கிறார்களே”, என்று நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
             நான் நம்மூர் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போல் இதுவும் ஒன்று என்று வந்துவிட்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டேன். பணியாளர்கள் சிறு தள்ளு வண்டியில் வந்து ரத்தம் தோய்ந்த மணலை அப்புறப்படுத்தி வேறு மணல் கொட்டி, மீண்டும் கோடுகளை திருத்தினர்.
                அதற்குள் இசை முழங்க, இரண்டாவது வீரர் டேவிட் மோரா நுழைந்தார். என்னது முதலிலேயே நுழைகிறாரே என்று பார்த்தால் காளை ஓடிவரும் திட்டி வாசலுக்கு நேர் எதிரே துணியை கையில் ஏந்தி, முட்டிபோட்டு காத்திருந்தார்.
போய்விடலாம் என்று எழுந்த நான், இதனைப்பார்த்ததும் சரி என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று திரும்பவும் உட்கார்ந்தேன்.


அடுத்த பகுதியில் நிறைவு பெறும்>

6 comments:

  1. டிவி மற்றும் நியூஸ் சேனலில் காளை சண்டையை பார்த்து உள்ளேன். எனக்கும் கடைசியில் காளையை கொன்று விடுவார்கள் என்று தெரியாது. வீரருக்கு அடி ஒன்றும் படாதா..??

    ReplyDelete
  2. சமயத்தில் வீரர்களின் உயிர் போவதும் உண்டு ராஜ் .

    ReplyDelete
  3. Alfy! Somewhere I heard that certain spare part of the killed bull is served as a delicacy in restaurants there. Is it true? - Syed

    ReplyDelete
  4. Yes Syed, you are ight.
    I heard the bulls are butchered and served at restaurants and some of the meat is sold to the public by the butcher.the hides are sent to a tanner and sometimes the skulls are sent to a taxidermist to be mounted.nothing is wasted and even the testicles are a delicacy.

    ReplyDelete
    Replies
    1. Thanks Alfy! I am reminded of a joke. A person goes into a restaurant and orders for a "certain spare part" of the bull. When served, he is surprised to see that the size of the part is too small. He asks the waiter who replies, "do you think it is the bull who loses all the time?". Have fun - Syed

      Delete