Wednesday, May 1, 2013

"ஆன்ச்சி மின்" எழுதிய இரட்டை நாவல்கள்



எம்ப்ரஸ் ஆர்கிட் (EMPRESS ORCHID)


            19ஆம்  நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் “ச்சிங் டைனாஸ்டி” (Qing  Dynasty)-யில், சகல அதிகாரங்களுடன் விளங்கிய “ஆர்க்கிட்” என்ற பேரரசியின் வரலாற்றுப்புதினம்தான்( Historical Fiction) இந்தப்புத்தகம். “யெகோநளா” (Yehonala) வம்சத்தில், சீனாவின் வறண்ட ஒரு பகுதியின், ஆளுநராகிய விளங்கிய ஒருவரின் மகளாக பிறந்து, அவளது சிறு வயதில் தந்தையை மட்டுமல்லாது, சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து, தாய், தங்கை, தம்பியுடன், பீகிங்கிற்கு அகதியாக வருவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
            அவள், ஒரு இளம் அழகிய பெண்ணாக உருவெடுத்து, சிறுசிறு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றியதோடு, மிகச்சிறு வயதில் முதிர்ச்சியையும். நல்ல அனுபவத்தையும் பெறுகிறாள்.
            இதற்கிடையில் பேரரசராக பொறுப்பேற்கும் சியன் ஃபெங் (Hsein  Feng) கிற்கு, பெண், மன்னிக்க, பெண்கள் தேடும் படலம் ஆரம்பிக்கிறது. நாடெங்குமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களில் தேர்வு செய்து, இருநூறாக வடிகட்டி அதில் வரும் நான்கு பேரில் ஒருவராக இவள் தேர்ந்தெடுக்கப்படும் அதிசயம் நடக்கிறது. ஆனாலும்  மூத்த பேரரசியின்  (Dowager Empress- Step mother of the Emperor)   ஆலோசனைப்படி இன்னொரு பெண் ( Lady Nuharoo) பேரரசியாக முடிசூட்டப்பட, மற்ற மூவரும் துணைவிகளாக  (concubine) ஆக்கப்படுகின்றனர். அவர்களில் இரண்டாம் நிலையில் இருக்கிறாள் நம் 17 வயது கதாநாயகி. இருநூறில் மற்ற அனைவருமே அடுத்த நிலையில் துணைவிகளாக, விலக்கப்பட்ட நகருக்கு வருகிறார்கள்.
            தன்னுடைய சர்வைவல் போராட்டத்தில், தாயின் உடல்நிலையைக் காரணம் காட்டி, வெளியே வரும் ஆர்க்கிட், ஒரு விலைமாதின் மேற்பார்வையில் சரசக்கலை  பயின்று, அதன் மூலம் பேரரசரை மயக்குவதோடு, ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள். பேரரசருக்கு பிறக்கும் ஒரே மகன் இவன்தான்.
அதன் பின்னர் சுகவீனப்படுகிற தம் கணவனுக்கு நிர்வாகத்தில் உதவும் வகையில் உயர்கிறாள். தம் மகனை வளர்ப்பதோடு, தன்னுடைய நிலையை தக்க வைக்க படாதபாடு படுகிறாள். அப்போது பேரரசர் அவளையும் “பேரரசி” நிலைக்கு உயர்த்துகிறார்.

Portrait of the Empress Orchid

“விலக்கப்பட்ட நகரில்” (Forbidden City) சிறுபான்மை மஞ்ச்சூரிய இனத்தவர், பெரும்பான்மை சீனர்களை பல நூற்றாண்டுகளாக ஆண்டு வருகின்றனர்.
     விலக்கப்பட்ட நகரின் அமைப்பும், பிரமாண்டமும், நாகரிகமும், ஆடம்பரமும் நம்மை வியக்க வைக்கிறது. நம் தமிழ் அரசர்கள் வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் ஒன்றுமேயில்லை.இந்த நகரில் பேரரசர் தவிர வேற எந்த ஒரு ஆணும் இராத்தங்க முடியாது. இந்த முழு நகரமும் ஏறத்தாழ இரண்டாயிரம் அலிகளால் நிர்வகிக்கப்படுகிறது. தலைமை அலி, அதிக அதிகாரம் பொருந்தியவராய் இருக்கிறார்.
     இதற்கிடையில், இங்கிலாந்து, ரஷ்யா, ஃபிரான்சு (1860) ஆகியோர் சீனாவின் எல்லைப்புறங்களில் தொல்லை கொடுத்து, விலக்கப்பட்ட நகர் வரை முன்னேற, பேரரசர் தன் பரிவாரங்களோடு  தப்பி, தன்னுடைய கோடை அரண்மனையில் தஞ்சம் புகுகிறார். அவமானத்தால் குறுகிப்போகும் பேரரசர் சியன் ஃபெங் தன் இளம் வயதான 31 வயதில் இறந்துபோக, அவருடைய மகன் டுங் சி (Tung Chih) தன் ஐந்தாவது வயதில், பேரரசாக, மூத்த பேரரசி நுகரூ (Empress Nuharoo) மற்றும் பேரரசி ஆர்க்கிட் (Empress Tzu His alias Lady Yehonala) இருவரும் கோ-ரீஜன்ட் (Co-Regent) ஆக நியமிக்கப்படுகின்றனர்.இதிலே வேடிக்கை என்னவென்றால், சீனர்கள் வெள்ளைக்காரர் களை காட்டுமிராண்டிகள்(barbarians) என்று சொல்லுகிறார்கள்.
பேரரசின் சகோதரர் இளவரசர் கங் (Prince Kung) மற்றும் தளபதி யுங் லு (General Yung Lu) உதவியோடு வெள்ளைக்காரர்களோடு உடன்பாடு செய்து, ஏராளமான பணம் கொடுத்து அனுப்பி விட்டதோடு, தலைமை அமைச்சர் செய்யும் சதியையும்  முறியடித்து, விலக்கப்பட்ட நகருக்கு திரும்புவதோடு இந்தப் புத்தகம் முடிவு பெறுகிறது.


தி லாஸ்ட் எம்ப்ரஸ்  (The Last Empress)



     இது ஆன்ச்சி மின் எழுதிய பார்த்து ரசித்த இரட்டை நாவலின் இரண்டாவது புத்தகம். தலைப்பைப் பார்த்ததும், நம்மில் பலபேர் பார்த்து ரசித்த "தி லாஸ்ட் எம்பரர்" திரைப்படம் ஞாபகம் வரும். அதிலே முதல் பகுதியில் தாராளமான படுக்கையில் ஏராளமாய்ப்படுத்துக்கொண்டு, அடுத்த பேரரசரை அறிவித்துவிட்டு  செத்துப்போகும் பேரரசிதான் இந்த நாவலின் கதாநாயகி. நமக்கு ஏற்கனவே அறிமுகமான் எம்ப்ரஸ் ஆர்க்கிட்.
   டுங் சீ (Tung Chih) அழகுப்பெண்களை மணந்தும், ஏராளமான துணைவிகள் இருந்தும், விலைமாதரிடம் சென்று சீசீவேலைகள் செய்து சீக்குகள் வாங்கி,  சின்ன வயதிலேயே ( 19 வயது) சீரழிந்து  செத்துவிட, ஆர்க்கிட் தனது தங்கை மகனான குவாங் சு (Emperor Guang Hsu) வை பேரரசராக்குகிறார்.
     சீனா அப்போது பறந்து விரிந்த பகுதியாக, வியட்நாம், பர்மா, கொரியா, நேபாளம், மஞ்சூரியா  மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை  ஆண்ட செல்வச் சிறப்பு மிகுந்த நாடாக விளங்கியதால், பல நாடுகளுக்கு அதன் மேல் ஒரு கண். குவாங் சூ பயந்த சுபாவமுள்ள நோஞ்சானாக இருந்தபடியால், ஆர்க்கிட் தான் தொடர்ந்து அரசாங்கத்தை கவனிக்க வேண்டியதிருக்கிறது. அப்போது பேரரசி நுகாரூ  இறந்துபோவதால் எல்லாமே ஆர்க்கிட் தலைமேல்.
     இதற்கிடையில், இளவரசர் செங் தலைமையில் பாக்சர்ஸ் என்று சொல்லப்படும் மஞ்சூரிய இளைஞர்களும், ஜெனரல் டுங் குவான் (Tung  Kuvan) தலைமையில் உள்ள முஸ்லீம் வீரர்களும் இணைந்து, தலைநகரில் உள்ள வெள்ளைக்கார தூதர்கள் தங்கியிருக்கும் பகுதியை தாக்க ஆரம்பித்தனர். இதுதான் சாக்கென்று பிரிட்டிஸ், பிரெஞ்சு, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மன், இத்தாலி, டச்சு, ஆஸ்டிரியன், ஹங்கேரியன், பெல்ஜியம் மற்றும் அமெரிக்க படைகள் (August, 14, 1900) இலகுவாக சீனப்படைகளை முறியடித்து முன்னேறி, விலக்கப்பட்ட நகரை ஆக்ரமிக்க, மறுபடியும் பேரரசர் பரிவாரங்கள் ஆறு மாதம் அகதிகளாக சுற்றித்திரியும் அவலம் ஏற்படுகிறது.
அதன் பின்னர், ஏராளமான உரிமைகளையும் செல்வங்களையும் விட்டுக்கொடுத்து, பன்னாட்டு ராணுவத்தை வெளியேற்றிவிட்டு மீண்டும் விலக்கப்பட்ட நகரில் பிரவேசிக்கிறது பேரரசரின் பரிவாரங்கள்.
Portrait of the Empress Orchid

            தொடர்ந்து பேரரசர் நோய் வாய்ப்பட்டு, தம் 38 வயதில் பொசுக்கென்று உயிரைவிட, பேரரசி ஆர்கிட்டின் முழு கட்டுப்பாட்டில் சீனப்பேரரசு மீண்டும் வருகிறது.
இப்படியாக, மூன்று பேரரசர்களை பார்த்ததோடு, நான்காவது ஒரு பேரரசரை (Aisin-Gioro Puyi) நியமித்துவிட்டுத்தான் அவர்களின் உயிர் பிரிகிறது. அவரே சீனப்பேரரசின் கடைசி அரசர். அவருடைய வரலாறை "Last  Emperor" படத்தில் பார்க்கலாம். கடைசியில் ஒரு தோட்டக்காரராக ஆகி, சாதாரண குடிமகனாக இறந்து போகிறார்.
இந்தப்புத்தகங்களை படிக்கும்போது, சீனப்பேரரசு எவ்வளவு பெரிய தேசமென்றும், எப்படியெல்லாம் கோலோச்சினார்கள்  என்றும் பெரிய ஆச்சரியங்களை நமக்கு தருகிறது.
இவ்விரண்டையும் படித்துவிட்டு, பின்னர் “Last  Emperor”  திரைப்படத்தை மீண்டும் பார்த்தேன். ஒரு பெரிய வரலாற்றை அறிந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது.
தற்சமயம் சீன ராணுவம், திபெத்தைப் பிடித்துக் கொண்டது. இந்திய எல்லைப்பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமித்து வைத்துள்ளது. அருணாசலப்பிரதேசத்தை உரிமை கொண்டாடுகிறது. தலாய் ஓபாமாவுக்கு அபயமளித்தது  அவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு தொடந்து உதவி வருகிறது. போதாக்குறைக்கு இப்போ லடாக் பகுதியையும் பிடித்து வைத்துள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது, வரலாறு திரும்புகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.


Anchee Min (born January 14, 1957) is a Chinese-American painter, photographer, musician, and author who lives in San Francisco and Shanghai. Min has published a memoir, Red Azalea, and six historical novels. Her fiction emphasizes strong female characters, such as Jiang Qing, the wife of Chairman Mao Zedong, and Empress Dowager Cixi, the last ruling empress of China. (www.ancheemin.com)

No comments:

Post a Comment