Thursday, June 12, 2014

கார்த்திக்குடன் “ஒரு மாலை இளவெயில் நேரம்” !!!

அன்னையர் தினத்தை முன்னிட்டு நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் பிரபல பாடகர் கார்த்திக் அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சியை மே 11, 2014, ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரோடு இணைந்து பாட வளர்ந்து வரும் பாடகி "ஷக்தி ஸ்ரீ” வந்திருந்தார். 

இசைக்குழுவும் சென்னையிலிருந்து வந்திருந்தனர். எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு டிக்கட்டுகளை ஆன்லைனில் வாங்கியிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தை முடித்துவிட்டு கிளம்பும்போது, என் மகள்கள் தாங்களும் வருவதாகச் சொல்லவே, சரி போய் டிக்கட் வாங்கிக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டோம். அங்கே போனால் கூட்டம் அலைமோதியது. என்ன இது தமிழ்நாட்டில் பாதி அமெரிக்காவுக்கு வந்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு ஏகப்பட்ட கூட்டம்.
டிக்கட்டுகள் சோல்டு அவுட் என்றார்கள். என் பிள்ளைகளை என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுது ஒருவர் வந்து என்னிடம் ரெண்டு டிக்கட்டுகள் இருக்கின்றன என்றார்.
அடப்பாவிகளா இங்கயுமா பிளாக்கில் டிக்கட் விற்கிறார்கள் ? என்று கலவரப்பட்டபோது, என் முகத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார்  "என்னுடைய நண்பர்கள் இருவர் வரவேண்டியது, அவர்கள் வரமுடியவில்லை அதனால் தான்", என்று. அந்த டிக்கட்டு உரிய காசுகளைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.

4 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி 4.40க்கு தான் வழக்கம்போல் ஆரம்பிக்கப்பட்டது. நியூஜெர்சியின் தமிழ்ப் பிள்ளைகள் இன்வொக்கேஷன் பாடலாக பாரதியின் "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே" என்று பாடினர். இந்நாடே என்றால் இந்தியாவா? அமெரிக்காவா என்று கேட்கத்தோணியது.
அதன்பின் வந்த இன்னொரு குழு அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு மெட்லியாக சில பாடல்கள் பாடினார்கள்.
தமிழ்ச்சங்கத்தலைவர் கவிதா ராமசாமி கவிதையில் வரவேற்புரை ஆற்றியபின், பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் அவர்களை மேடைக்கு அழைத்து விருதுகொடுத்து கெளரவப்படுத்தினார்கள். 

பாடச்சொல்லி ஆடியன்ஸ் வற்புறுத்த "குறையொன்றுமில்லை" என்ற MS.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பாடலை, இசைக்கருவிகள் உதவியின்றி பாடினார், அருமையாக இருந்தது.
அதற்கப்புறம் ஒரு பரதநாட்டியம், இன்னொரு சோலோ என்று போய்க் கொண்டிருக்க பொறுமையிழந்த ஆடியன்ஸ் “கார்த்திக் கார்த்திக்” என்று கத்த ஆரம்பித்தனர்.
புரிந்துகொண்ட துணைத்தலைவி உஷா மற்றவற்றை நிறுத்திவிட்டு கார்த்திக்கை வரவழைத்தார். அதற்கு முன் அவருடைய இசைக்குழு வந்தது. பெரும்பாலும் தெரிந்த முகங்களாகவே இருந்தது.
Karthik  Music Experience
சுந்தர் கீபோர்டு, விஜய்- லீட் கிடார், கீத் பீட்டர் - பேஸ் கிட்டார், தயா - டிரம்ஸ் மற்றும் விக்ரம் - பெர்கஷன். இவர்களோடு அவர்களுடைய செளண்ட் இன்ஜினியர் வினயும் வந்திருந்தார்.

அறிமுக இசையை அவர்கள் வாசித்தபின், கார்த்திக் துள்ளிக்குதித்து உள்ளே வந்தார். இப்போது இன்னும் டிரிம்மாக இளமையாக இருந்தார்.
வந்தவுடன் அறிமுகப்பேச்சு எதுவும் இல்லாமல், ஸ்வரங்களைப் பாட ஆரம்பித்து, சிறிது நேரத்தில் சுரங்களின் ஆரோகன அவரோகனங்களை பாடி பின்னிப்பெடலெடுக்க ஆரம்பித்தார். இசைக்குழுவினர் அருமையாக பேக்கப் செய்ய, அநாயசமான அசுர சாதகம் என்று சொல்லலாம். சுரம் முடித்து மகாகணபதி பாடும்போது, கர்நாடகமும் வெஸ்டர்னும் இணைந்து, முதல் பாட்டிலேயே ஹை ரேன்ஜ் பாடி, தான் ஒரு தேர்ந்த பாடகர் என்பதை நிரூபித்தார். அவர் கையசைவில் சுரங்கள் தடதடத்து துள்ளி விழுந்தன.

அது முடிந்தவுடன், ஆடியன்சின் அப்லாசை வாங்கி நன்றி சொல்லி, வணக்கம் சொல்லி ஆரம்பித்த அடுத்த பாடல்" ஒரு மாலை இளவெயில் நேரம்" ஒரு வித்தியாச அனுபவம். அடுத்த அவர் பாடிய பெஹல்கா என்ற இந்திப்பாடலை பாடி பின்னர், ஒரு ஊரில் என்ற பாடல் வந்தது. கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் இசைவெளி வர, வந்த அடுத்த பாடல் கார்த்திக்கு பிலிம்ஃபேர் அவார்ட் கிடைத்த, "விழி மூடி யோசித்தால் முன்னால் வருவேன்" என்ற பாடல், அடுத்து வந்த 'அசிலி பிசிலி' பாட்டுக்குப்பின் ஒரு மாறுதலுக்காக "ஆஹா மெல்ல நட மெல்ல நட", என்ற TMS -ன் குரல் கார்த்திக் குரலில் வந்து கைதட்டல்களை அள்ளியது. பாட்டின் இசையில் கிட்டத்தட்ட சரோஜாதேவி மாதிரியே உடையணிந்த ஒரு பெண்மணி எழுந்து அதே பழைய அசைவில் ஆட ஆரம்பித்தார். அதைப்பார்த்த கார்த்திக் அவர்களை மேடைக்கு வரச்சொல்லி சைகை செய்ய, ரசிகர்களின் ஆரவாரத்தோடு அவர் மேடையேறினார். பாட்டு மேலும் களைகட்டி 'ஆடலும் பாடலும்' ஆனது.
A.R.ரகுமானின் பல பாடல்களுக்கு வாசித்த கீத் பீட்டர் தன் பேஸ் கிடாரில் சில பிட்களை வாசித்தார். அவர் வாசிக்க வாசிக்க ஆடியன்சே என்ன பாடல்கள் என்று   கண்டுபிடித்தனர் . 
“என்றென்றும் புன்னகை” மற்றும் “தேரடி வீதியில் தேவதை வந்தால்” என்ற இரு பாடல்களுக்கும் மேலும் பலர் எழுந்து ,ஆட கார்த்திக் அனைவரையும் மேடைக்கு அழைக்க மேடை அல்லோல கல்லோலமானது.

அப்புறம் எல்லோரையும் கீழிறங்கச் சொல்லிவிட்டு அன்னையருக்கு ஒரு சமர்ப்பணமாக "உயிரும் நீயே, உடலும் நீயே" என்ற பாடலைப் பாடி முடித்தபின் சக்தி ஸ்ரீ வர, கார்த்திக் உள்ளே சென்றுவிட்டார்.
'நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்', “எங்க போற ராசா”, “பல்லாங்குழி” ஆகிய பாடல்களை நன்றாகப் பாடினார். மற்றபடி அவர் பாடிய மற்ற பாடல்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக ஹைபிச்சில் ஹெட் வாய்ஸ் வரும்போது குரல் செழு மையிழந்தது. "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" பல இடங்களில் Flat ஆய் இருந்தது.
இடைவேளைக்குப்பின் கார்த்திக் வந்தபின்தான் மீண்டும் களைகட்டியது. வேறு உடையில் வந்து அவர் பாடிய "ஓம்கார நாதானு" என்ற சங்கராபரணப் பாடல் தேனாக இனித்தது.
“சித்திரம் பேசுதடி”, “மாடி மேல் மாடி வைத்து”, “நிலவே என்னிடம்”, போன்ற பழைய பாடல்களும் மிக நன்றாக வந்தன. முகமது ரஃபியின் குரலில் பாடிய பாடல்களும் கார்த்திக்குக்கு பொருந்தி வந்தன. 
மறுபடியும் வந்த சக்தி ஸ்ரீ – “லுங்கிடான்ஸ்”, “ரிங்க ரிங்கா” போன்ற குத்துப்பாடல்களை பாட முயற்சி செய்தார். இசை நன்றாக இருந்ததால் திரும்பவும் கும்பல் ஆட ஆரம்பித்தது. அஜீத்  ஆட்டம்  பார்த்திருக்கிறேன் ,  அமலா ஆட்டம்  பார்த்திருக்கிறேன். ஆனால் அன்றுதான் ஒரு அட்டார்னி  ஆட்டம் பார்த்தேன். தமிழ்ச்சங்க தலைவர் கவிதாவைத்தான் சொல்கிறேன். ஒரு கட்டத்தில் கவிதா ஆட ஆரம்பிக்க, கணவர் ஓடிவந்து இணைந்து கொண்டார்.  
குறையென்று சொன்னால், டூயட் பாடல் ஒன்றுகூட பாடவில்லை. பெண் குரலுக்கு கூட இன்னொருவர் இருந்திருக்கலாம்.
கார்த்திக்கின் குரல் இனிமையும் அருமையும், ஸ்டேஜ் பிரசென்சும், மேடைக்கச்சேரிக்கு அட்டகாசமாக அமைந்தன. ஒரு இனிய மாலை வேளையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.  நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்திற்கு   வாழ்த்துக்கள் .

  

Monday, June 9, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி பகுதி-4 சுல்தானின் ஆயா !!!!!!!!!!!

File:Hagia Sophia Mars 2013 01.jpg
Aya Sofia

புளி மாஸ்க், சாரி புளு மாஸ்க்கைவிட்டு வெளியே வந்தால் அங்கே ரோமப் பேரரசின் மிச்சங்கள் இருந்தன. 

1500 வருட பழைய ஸ்தூபி ஒன்று அங்கிருந்தது. ரோமப்பேரரசின் சமயத்தில் அந்த இடம் ஒரு பந்தய மைதானமாகத் திகழ்ந்ததாம்.


போகும் வழியில் ஒரு மார்பிள் மண்டபம் அழகிய விதானத்துடன் இருந்தது. ஆட்டமன் சுல்தானுக்கு ஜெர்மன் பேரரசர் பரிசாக வழங்கியதாம். சிறுசிறு பகுதிகளாக மிகப்பத்திரமாக கப்பலில் எடுத்துவரப்பட்டு, இங்கே கொண்டுவந்து பொருத்தப்பட்டதாம்.

புளு மாஸ்க்குக்குப் பின்புறம் அதனைக்கட்டிய சுல்தான் அகமதின் நினைவிடம் இருந்தது. அது பராமரிப்புக்காக மூடப்பட்டிருந்ததால் உள்ளே செல்லமுடியவில்லை.
இன்னும் கொஞ்சம் தள்ளிச்சென்றால் 1400 களில் கட்டப்பட்ட சுல்தான் மனைவிகள் குளிக்கும் "டர்க்கிஷ் பாத்" வந்தது. அங்கே அவர்கள் சும்மா உட்கார்ந்திருக்க பணிப்பெண்கள் 'பபிள் பாத்" என்னும் முறைப்படி செத்துப்போன செல்களை தேய்த்து எடுத்துவிட்டு பளபளப்பைக் கூட்டுவார்களாம். 
இன்று ஒரு தனியாரின் பராமரிப்பில் 'பப்ளிக் பாத் ஹவுஸ்', ஆக இருக்கிறது. உள்ளே போய் விசாரித்தேன். இஸ்தான்புல் இளசுகள் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தன. ஆனால் ஆண்களுக்கு ஆண்கள்தான் குளிப்பாட்டுவார்களாம். ஒரு மணி நேரத்திற்கு 150 டாலர்கள் ஆகும் என்றார்கள்.இது பொதுவாக ஹமாம் என்று அழைக்கப்படுகிறது நம்மூர் ஹமாம் சோப்பு பெயர்   இதிலிருந்து வந்திருக்குமோ?
அதற்குள் 'உர்ஸ்' என்னைத்தேடி வந்துவிட்டான். குழுவினர் கூடவே இருக்கும்படி வேண்டினான். எனவே 'டர்க்கிஷ் பாத்' ஆசையைக் கைவிட்டு அவன் பின்னால் சென்றேன்.
அடுத்தபடியாக இன்னொரு மாபெரும் கட்டிடத்தின் அருகில் வர, அட இதென்ன இன்னொரு பள்ளிவாசலா? என்று நினைத்தேன். புளு மாஸ்க்கைவிட உயரமாகவும் அகலமாகவும் பழமையாகவும் இருந்தது. "இது தான் ஆயா சோஃபியா", என்றான். என்னது சுல்தானின் ஆயாவுக்கு இவ்வளவு பெரிய இடமா? ஆனால் முஸ்லிமில் "சோஃபியா" என்றா பெயர் வைப்பார்கள் ? என்று நினைத்துக் கொண்டேன்.
Hagia Sophia interior
ஆனால் அவன் விளக்கிச் சொல்லும் போதுதான் தெரிந்தது. 'அயா சோஃபியா' என்றால் துருக்கியில் 'புனித ஞானம்' என்பது, அதாவது ஆங்கிலத்தில் 'ஹோலி விஸ்டம்' என்பது. அதற்கப்புறம் அவன் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது. அது மாஸ்க் இல்லையாம், ரோமப் பேரரசர் கட்டிய தேவாலயமாம்.
அப்போதுதான் ஞாபகம் வந்தது, இஸ்தான்புல்லின் பழைய பெயர் கான்ஸ்டான்டிநோபில் என்பது. இதனை தலைமையிடமாகக் கொண்டு அரசாண்ட ரோமப்பேரரசரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே சென்றால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பைஜான்டின் பேரரசு (Byzantine Empire)
பைஜான்டின் அல்லது “கிழக்கு ரோமப்பேரரசு” பலநூறு வருடங்கள் இங்கு செழுமையான ஆட்சியைக் கொடுத்திருக்கிறது. இந்த இடத்தின் பழைய பெயர் பைஜான்டின் என்பதால் இங்கு ஆட்சி செய்த பேரரசை 'பைஜான்டின் பேரரசு' என்று வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கிறார்கள்.
கி.பி.285ல் ரோமப்பேரரசர் டியோக்லெடியன் (Emperor Diocletian Reign 284-305), நிர்வாகக் காரணங்களுக்காக ரோமப்பேரரசை மேற்குப்பகுதி மற்றும் கிழக்குப்பகுதி என்று  இரண்டு பிரிவாகப் பிரித்தார். அதன் பின்னர் கி.பி. 324 லிருந்து 330-க்குள் பேரரசர் முதலாம் கான்ஸ்டான்டைன் (Emperor Constantine R 306-337) அவருடைய தலைநகரத்தை ரோமிலிருந்து பைஜான்டியத்திற்கு மாற்றினார். 
Constantine
எனவே அதன்பின் அது "கான்ஸ்டான்டிநோபிள்" என்று வழங்கப்பட்டது. அதாவது கான்ஸ்டான்டைனின் நகரம் என்று பொருள். நோவ ரோமா (New Rome) என்றும் அழைக்கப்பட்டது. இந்த கான்ஸ்டான்டைன் தான் முதன்முதலில் கிறிஸ்துவத்தைத் தழுவியதால், கிறிஸ்தவம் பேரரசின் அதிகாரபூர்வ மதமாயிற்று. கிறிஸ்துவத்திற்கு ஒரு பெரிய அடையாளத்தையும் உருவையும் அது கொடுத்தது. டிரினிட்டி (Trinity) என்று சொல்லக்கூடிய மூவொரு கடவுளின் தத்துவம், நிசேயா விசுவாசப்பிரமாணம் (Nicene Creed),ஆலய வழிபாட்டை சனிக்கிழமையிலிருந்து  ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்தது என பல மாற்றங்கள் செய்யப்பட்டது இவரது ஆட்சியில் தான்.
அவரையடுத்து ஆண்ட பேரரசர் ஹெராகிலியஸ் (Emperor Heraclius R 610-641) அவர்களின் ஆட்சியில் அதிகாரப்பூர்வ மொழியாக லத்தீனிலிருந்து மாறி கிரேக்க மொழி ஆயிற்று. 

அதற்கப்புறம் வந்த பேரரசர் ஜஸ்டினியன் (Emperor Justinian R 527-565) ஆட்சியில் பரந்துவிரிந்து மிகப்பெரிய பேரரசாக விளங்கியது. அதிலிருந்து பதினைந்தாவது நூற்றாண்டு வரை ஆட்சி தொடர்ந்தது. 12ஆவது நூற்றாண்டுக்குப் பின்னர் சிறிது சிறிதாக அழியத் தொடங்கிய பேரரசு, 1453-ல் ஆட்டமன் துருக்கியர்களுடன் தோற்றவுடன் முற்றிலுமாக அழிந்தது. அதன் பின்புதான் கான்ஸ்டான்டி நோபில், இஸ்தான்புல் என்று மாற்றப்பட்டது.
ஹாகியா சோஃபியா
கிரேக்க மொழியில் Hagia Sophia அல்லது துருக்கி மொழியில் Ayasofya  என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் கட்டடம், ரோமப்பேரரசர் ஜஸ்டினியன் அவர்கள் ஆட்சியில் கி.பி.532 - கி.பி. 537ல் கட்டப்பட்ட, கிரீக் ஆர்தொடாக்ஸ் பேராலயம் (Greek Orthodox Basilica) ஆகும். பேரரசர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இந்த பேராலயத்தில்தான்  வழிபட்டுவந்தனர். அவர்கள் உட்கார்ந்து பங்குகொள்ள தனித்தனியிடங்கள் இருந்தன. அது மட்டுமல்ல, முடிசூட்டிக்கொள்ளுதல் (Coronation) போன்ற முக்கிய நிகழ்வுகளும் இங்குதான் நடத்தப்பட்டன.
ஆனால் 1453-ல் ஆட்டமன் துருக்கியரால், கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ந்தபின், சுல்தான் மெஹ்மது II-ன் உத்தரவின் படி இது ஒரு மாஸ்க்காக மாற்றப்பட்டது. கிறிஸ்தவ மதச்சின்னங்கள் திருவுருவங்கள் எல்லாம், சாந்து பூசி மறைக்கப்பட்டன. 1931ல் துருக்கி குடியரசு நாடாக ஆனபின், இது மூடப்பட்டு பின் 1935ல் மியூசியமாக்கப்பட்டு பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
269 அடி உயரமும் 240 அடி அகலமும் கொண்ட இந்தக் கட்டடத்தை எப்படி 1500 வருடங்களுக்கு முன்னால் கட்டினார்கள் என்பது ஆச்சரியமூட்டியது.

மூன்று நிலைகளாகக் கட்டப்பட்ட இந்தப் பேராலயம் இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது. உள்ளே கட்டட வேலைப்பாடுகள், காரைகளை பெயர்த்தெடுத்தபின் வெளிப்பட்ட ஓவியங்கள் என அதிசயமாக இருக்கும் இந்தப் பேராலயத்தின் மாடலில் தான் மற்ற அனைத்து   இஸ்லாமிய  தொழுகையிடங்களும்  கட்டப்பட்டன.

அதில் ஒரு இடத்தில் இதுதான் மையப்பகுதி  என்று காண்பித்தான்  உர்ஸ் . அந்த இடத்தில் செல் போன் காமெராவை   வைத்து  படம் எடுத்தால் முழு  விதானமும் வந்தது.   
 இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கிய இந்த ஆயா சோபியா பார்க்கவேண்டிய ஒரு இடம்
வாருங்கள் மதிய உணவுக்குச் செல்லலாம் என்றான் உர்ஸ்.

-தொடரும்.

Thursday, June 5, 2014

அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தாயா தந்தையா?

Mrs Umayal Muthu 
    கடந்த மே  மாதம் 10 ஆம் நாள் ,2014 அன்று   தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய திருமதி உமையாள்   முத்து ஆச்சி  அவர்கள் தலைமையில் நடந்த அன்னையர் தின சிறப்பு பட்டிமன்றத்தில் “அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தந்தையே”   என்று அடியேன் பேசிய  பேச்சின் முழு உரையை இங்கு தருகிறேன்
நடுவர் உள்ளிட்ட அவைக்கு என் பணிவான வணக்கம்.
நடப்பது தாய் தினக் கொண்டாட்டம். பட்டிமன்ற நடுவராக வந்திருப்பது ஒரு தாய்க்குலம். தீர்ப்பு எதிர்ப்பக்கம் சாதகமாகவும் எங்களுக்குப் பாதகமாகவும் போய்விடுமோ என்று எங்கள் அணியினர் சந்தேகப்பட்டனர். நான் சொன்னேன், “கவலைப்படாதீங்க, நடுவராக வந்திருப்பவர் தாய்க்குலம் என்றாலும், மெத்தப்படித்தவர், ரொம்ப நல்லவர், எதையும் சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்புச் சொல்வதில் வல்லவர். தன் இனத்துக்கும் குலத்துக்கும் சார்பாக தீர்ப்புச்சொன்னால் அது ஒரு தலைப்பட்சமான தீர்ப்பாக அமைந்துவிடும் என்று அவருக்குத் தெரியாதா?”, என்று கேட்டேன். என்ன சரிதானா நடுவர் அம்மா?
எதிர்க்கட்சியைப் பாருங்க, தாய்க்குலத்துக்குப் பேச எங்கள் தந்தைக்குலம் தான் அதிகமா வந்திருக்கு. இல்லேன்னா அவர்கள் வீட்டுக்குத்திரும்பிப் போக முடியாது நடுவர் அவர்களே. எனவே அவர்கள் தாய்க்குலத்துக்கு நயந்து பேச வரவில்லை, அவர்கள் பயந்து பேச வந்திருக்காங்க.  
எனக்கு முன்பு பேசிய எதிர்க்கட்சி நண்பர்கள், ஏதோ தந்தை அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை எல்லாமே தாய்தான்  என்று பேசினார்கள்.
உங்களுக்குக் கருக்கொடுத்தவர் தந்தை, உருக்கொடுத்தவர் தந்தை. இப்படி கருவாய், உருவாய், நிழல் தரும் தருவாய் ன் உங்களை திருவாயும் ஆக்கியவர் தந்தைதானே. இல்லையெனில் நீங்கள் தெருவாய் அல்லவா போயிருப்பீர்கள்?.  
தலைப்பை நன்றாக கவனியுங்கள், அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிக பங்கு பெறுவது யார்? என்பது தானே கேள்வி. ஒரு வேளை இந்தியாவில் வேறுமாதிரி இருக்கலாம். அதுவும் இப்ப எப்படின்னு தெரியல. ஆனா இங்க நாங்கதானே எல்லாம்.
பத்துமாதம் சுமந்தேன் பத்து மாதம் சுமந்தேன் என்கிறார்கள். சமீபத்தில்தான் தெரிந்தது, அது பத்து மாதம் இல்லையாம். 9 மாதம்தானாம். இப்படித்தான் இந்த தாய்க்குலம் எல்லாத்தையுமே கூடக் கூட மிகைப்படுத்திச் சொல்லி கடுப்பேத்துகிறார்கள், மை லார்ட்.
குழந்தையைச் சுமப்பது அவர்கள்தான், ஆனால் அப்போது அவர்களையும் சேர்த்து சுமப்பது நாங்களல்லவா. பிரசவ வேதனையில் அவர்கள் துடிக்கும்போது, சொந்தக்காரக்கள் கூட யாருமில்லாமல் அதைவிட அதிக வேதனையை அனுபவிப்பவர்கள் நாங்கள்தானே.
வயிற்றிலிருந்து வந்தவுடன், நாங்கள் எங்கள் கையில் வாங்குவதோடு சரி. அப்புறம் இறக்கிவிடுவதேயில்லை. வயிற்றில் சுமந்தவர்கள் அவர்கள், ஆனால் குழந்தைகளை எங்கள் தோளிலும் மாரிலும் போட்டு வளர்ப்பவர்கள் நாங்கள் அல்லவா.
அவர்கள் பால் கூட கொடுப்பதில்லை, நாங்கள்தான் கொடுக்கிறோம் என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இப்பல்லாம் யார் பால் கொடுக்கிறார்கள் பம்ப்தானே நடுவரே. எனவே நாங்கள் தாயுமானவர்கள்.
எங்கள் மாரில் மட்டுமல்ல காரில்போட்டு வளர்ப்பதும் நாங்கள் தான். ஸ்கூலில் அட்மிஷன் வாங்குவது, ஸ்கூலில் விடுவது, பிக்கப் செய்வது, ஹோம் வெர்க் செய்வது எல்லாமே நாங்கள் தானே. எத்தனை தடவை “work from Home” போட்டுவிட்டு பேபி சிட்டிங் பண்ணியிருக்கிறோம்.
கார் ஓட்டப்பழகக் கூடாதா? என்று என் மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவள் சொல்கிறாள். வீட்டிலேயே "லிவ் இன் டிரைவர்  இருக்கும் போது எதற்குப் பழக வேண்டும் என்கிறாள். Full Service -free யாக வரும்போது, எதுக்கு Self Service என்கிறாள். நீங்களே  கேளுங்கள் இது  நியாயமா? பேட்டா கூடத்தருவதில்லை நடுவர் அவர்களே. கேட்டால் காலிலுள்ள பேட்டாவை காண்பிக்கிறாள். அதுவும் நான் வாங்கிக்கொடுத்தது.
பட்டிமன்றத்தலைப்பைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி ஞாபகத்துக்கு வருது.
முட்டை  முதல்ல வந்துச்சா? இல்லை கோழி முதல்ல வந்துச்சா? தந்தையா இல்லை தாயா என்று பார்க்கும்போது, கடவுள், ஆதாம் எனும் தந்தையைத்தானே முதல்ல படைச்சார். எங்கள்  விலாவில் ஒரு எலும்பை உருவித்தானே தாயாகிய ஏவாளைப் படைத்தார். அப்ப இருந்தே கொடுத்துக் கொடுத்துத்தானே நாங்க குறைஞ்சு போயிட்டோம். அப்ப உருவி எடுத்ததிலிருந்து இன்னக்கிவரை எங்களை ஒண்ணுமில்லாம உருவிவிட்டுட்டாங்க நடுவர் அம்மா?  
இதெல்லாம்  தெரிஞ்சும் தெரியாத மாதிரி நீங்க முகத்தை வச்சிருக்கீங்க.
பிள்ளைகளுக்கு சோறாக்குவது நாங்கதானென்னு சொல்லுறாங்க. சோறாக்குவது அவங்களா இருக்கலாம்.  ஆனா சோறூட்டுவது நாங்கதானே. அதுக்கு மேல பாத்திரம் வேற விளக்கனும். நடுநடுவில் பிள்ளைகளுக்கு டயப்பர் சேஞ்ச் பண்ணனும். நீங்களே சொல்லுங்க சமையல் பன்றது கஷ்டமா அல்லது பாத்திரம் கழுவுது கஷ்டமா? நாங்க பாத்திரத்தை கழுவி வைக்க, அவர்கள் எங்கள் ஆத்திரத்தை கழுவிக்கழுவி ஊத்தறாங்க நடுவரே. 
எப்பவாச்சும் உடம்பு சரியில்லாம ஒரு ரசம் வைக்கச்சொன்னா, அது கூட தெரியல, ரசம் விஷம் மாறி இருந்தாலும் "ஆசம்" என்று சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்க.
அதோட இப்ப புதுசாக் கல்யாணமா வீட்டுல, சமையலும் நாங்கதான் கழுவுறதும் நாங்கதான். நழுவுறது மட்டும் தான் அவங்க.
அதனால நீங்களே பாருங்க, எங்களுக்கு  கொடி இடையா ஆயிப்போச்சு, ஆனா அவுங்களுக்கு தடி இடையா ஆயிப்போச்சு.
நாங்களும் உயிரைக்கையில பிடிச்சுட்டுதான் இங்க வந்திருக்கோம். கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல நாங்க என்ன சுகத்தைக் கண்டோம். பழிபாவம் எல்லாம் எங்க மேல. அவுங்களுக்கு எப்பவும் பாராட்டு வேணும். இதான் எங்க நெலமை.
எனவே உண்மை நிலையை தைரியமாச் சொல்லிட்டேன். பெத்துக் கொடுக்கிறது தான் அவங்க, வாழ்க்கையை கத்துக் கொடுக்கிறது நாங்கதான், ஏன் பிள்ளைகளுக்கு சொத்துக் கொடுக்கிறதும் நாங்கதான்.  
அதனால் சத்தான அனுபவம் உள்ள உமையாள் முத்து, முத்தான தீர்ப்பை வழங்குவார் என்ற நம்பிக்கையில், வாய்ப்புக் கொடுத்த தமிழ்நாடு அறக்கட்டளை நண்பர்களுக்கு நன்றி கூறி அமைகிறேன். நன்றி வணக்கம்.


Monday, June 2, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -பகுதி 3 புளு மாஸ்க்கும் புளி மாஸ்க்கும் !!!!!!!!!!!

ஏப்ரல்  26, 2014 சனிக்கிழமை திடீரென்று போன் அடித்தது எங்கோ தொலைவில் கேட்டது. சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் அடித்தபோது அது என்னுடைய போன் என்று அறிந்து எழுந்து படக்கென்று எடுத்து ஹலோ என்றேன். "என்னங்க  இன்னும் எந்திரிக்கலையா?", என்றாள் என் மனைவி. ஆயிரம் மைல்கள் தள்ளியிருந்தாலும்  அன்புத் தொல்லைகள் ஒழிவதில்லை. "மணி 6.30 ஆயிருச்சே, ஏழு மணிக்கு டூர் கம்பெனி வந்துருவானே", என்றாள். அங்கிருந்து  துல்லியமாக மணியைத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்ற ஆச்சரியத்தோடு, "நல்லவேளை எழுப்பின, இதோ போய்  ரெடியாகிரேன்", என்றேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது. "ஏய் உனக்கு இப்ப இரவு மணி 12  (ஏப்ரல் 25, 2014) இல்லையா? இன்னும் தூங்கலையா ?" என்றேன். "எங்க நீங்க இல்லாம தூக்கம் வரல", என்றாள். "எனக்கும்தான் இங்கு தூக்கம் வரலன்னு" ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, எழுந்து மடமடவென ரெடியானேன்.  
ரிஷப்ஷன் சென்று, டூர் ஆட்கள் வந்தால் சொல்லச்சொல்லிவிட்டு கீழேயுள்ள  ரெஸ்டாரண்ட் சென்றேன். காலையில் பிரேக்ஃபாஸ்ட் இலவசம். வெவ்வேறு  ஆலிவ் காய்கள், அழகாக நீள்வட்டத்தில் வெட்டப்பட்டிருந்த வெள்ளரிக்காய்கள், தக்காளி சிலைஸ்கள், பட்டர் ரோல், ஒரு சிறிய உருண்டையான பிரட் ஆகியவற்றை ஒரு 15 நிமிடத்தில் அசுர சாதனையாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ரிஷப்ஷன் வரும்போது மணி காலை 7.15. பரவாயில்லை முக்கா மணிநேரத்தில் குளித்துக் கிளம்பி காலை உணவும் முடித்துவிட்டேன். அதுவரை யாரும் வரவில்லை.
7.30க்கு டூர் கம்பெனிக்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. ஐயையோ எல்லா டூரையும் இவங்கிட்டதானே புக் செய்திருக்கிறேன். ஒரு வேளை ஏமாற்று  வேலையாக இருக்குமோ என மனம் பதைபதைத்தது.
ஒரு 7.50க்கு சர்ரென்று ஒரு வேன் வந்து நின்று, அதிலிருந்து சூட் அணிந்த டிரைவர் இறங்கி என் பெயரைச் சொன்னதும், "நான்தான்", என்று எழுந்து கைகுலுக்கிவிட்டு வேனில் ஏறினேன். நான் மட்டும் தான் இருந்தேன். டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாததால், நான் கேட்ட எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. "நோ இங்லிஸ்", என்ற பதிலைத்தவிர.
சுமார் 40 நிமிடப் பயணத்தின்பின் இருவர் ஏறினர். "ஹலோ ஐ ஆம் 'உர்ஸ்' (URS) ஐம் யுவர் கைட்”,என்றான் அதிலொருவன். கையில் ஒரு நீளமான குடை  வைத்திருந்தான். மேகமாக இருந்தது. மழைவந்து நம்ம டூரைக் கெடுக்கப் போகிறது என்று கலக்கமாக இருந்தது.
Urs

போகும் வழியில் ஆங்காங்கே சிதிலமடைந்த சுவர்கள் இருந்தன. கோட்டைச்சுவர்கள் போல இருந்தன. என்னவென்று கேட்டால் உர்ஸ் சொன்னான், "அவைதான் கான்ஸ்டான்டிநோபில்  நகரத்தின் பழைய கோட்டைச்சுவர்", என்று. "ஆட்டமன் சுல்தான்கள் வந்து இடித்துத்தள்ளிவிட்டனர்", என்றான். கான்ஸ்டான்டிநோபில்  கிழக்கத்திய ரோமப்பேரரசின் (Eastern Roman Empire)  தலைநகராக விளங்கிய ஊர். ரோமப்பேரரசர் கான்ஸ்டான்டைன் அவர்களால்  நிறுவப்பட்டது.  சுல்தான்கள் வந்து பிடித்தவுடன் இஸ்தான்புல் என்று மாற்றிவிட்டனர் .

வண்டி சிறிது  தொலைவு கடந்து  ஒரு ஹோட்டலின் முன் நின்றது. ஒரு எட்டு வெள்ளைக்காரர்கள் வந்து ஏறினார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாக்காரர்களுக்கு இவ்வளவு உயரம் எங்கிருந்துதான் வந்ததோ? ஆனால் பேசுவதற்கு துணை கிடைத்தது. சிறிது தொலைவு சென்று இஸ்தான்புல் சுல்தானாமேட்டில் வண்டி நுழைந்தது. தெருக்களில் கல்பதிக்கப்பட்டு  குறுகலாக இருந்தது. அங்கிருந்து ஒரு 15 நிமிடத்தில் ஒரு பிரமாண்டமான பள்ளிவாசல் வந்தது. அதுதான் புளு மாஸ்க் (Blue Mosque) என்றார்கள். அதுவரை அவ்வளவு பெரிய தொழுகையிடத்தை நான் பார்த்ததில்லை. அது போல டிசைனையும் பார்த்ததில்லை.
உர்ஸ் இறங்கிச் சென்று ஒரு இடத்தில் நின்றுகொண்டு தன்னுடைய குடையை விரிக்காமல் உயர்த்திப் பிடித்தான். அப்போதுதான் தெரிந்தது, அவன்  மழைக்காக குடையை எடுத்துவரவில்லை, எங்களுடைய அடையாளத்துக்காகத்தான் என்று. ஆம் அங்கு  வந்த கூட்டத்தைப் பார்த்தால், நிச்சயமாக தவறவிட்டுவிடுவோம். நல்ல ஐடியா தான்.
"இதுதான் புளி மாஸ்க்" என்றான் உர்ஸ். என்னடாது புளுமாஸ்க் என்றுதானே சொன்னார்கள் என்று யோசிக்கும்பொழுது, புளு என்பதைத்தான் புளி மாஸ்க் என்று உச்சரிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.  வார்த்தையின் கடைசியில் e  வருகிறதே அதனால்  போலும்.

ஆட்டமன் சுல்தான்களில் சுல்தான் அஹமது-I என்பவரால் 1609-ல் ஆரம்பிக்கப்பட்டு 1616-ல் கட்டி முடிக்கப்பட்டது  இந்தப் பள்ளிவாசல்.  இஸ்தான்புல்லில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் பல்வேறு சுல்தான்களின் தனிப்பட்ட வெற்றிக்குப் பின்னர் அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டு வந்த பணத்தால்   கட்டப்பட்டவை.ஆனால் இது பெர்சியாவில் நடந்த சண்டையின் தோல்விக்குப் பின்னர் அல்லாவின் கோபத்தைத் தணிக்கும் வண்ணமாக கட்டப்பட்டதாம். பக்கத்தில் உள்ள ரோமப் பேரரசர் கட்டிய ஆலயத்திற்கு இணையாக அதே வடிவத்தில் கட்டப்பட்டது.
பைஜான்டிய பேரரசர்களின் அரண்மனை இருந்த இடத்தில் இது கட்டப்பட்டது. உள்ளே நீல நிற செராமிக் டைல்களால் அலங்கரிக்கப்பட்டதால் "புளு மாஸ்க்" என்று அழைக்கப்படுகிறது.  சுல்தான் அகமதுவால் கட்டப்பட்டதால் 'சுல்தான் அகமது மாஸ்க்' என்றும் அழைக்கப்படுகிறது
ஒரு பெரிய விதானத்தையும் (Dome), எட்டு சிறிய விதானங்களையும், ஆறு மினாரேட்டுகளையும் உடையது இது. உர்ஸ் சொன்னான், “மினாரேட்டுகளில் ஒரு பலகணி இருந்தால் அது மக்கள் கொடுத்த பணத்தில் மக்களால் கட்டப்பட்டது. இரண்டு பலகணி இருந்தால் அது மக்களின் பயன்பாட்டுக்காக உள்ளூர் அரசாங்கம் கட்டியது. மூன்றும் அதற்கு மேலும் மினாரேட்டுகள் இருந்தால் அது சுல்தான்களின் உத்தரவில் கட்டப்பட்டது", என்றான்.
காலணிகளுடன் உள்ளே அனுமதி கிடையாது என்பதால் சிறிய பாலித்தீன் பைகளைத் தருகிறார்கள். அதற்குள் நம் ஷூக்களை கழற்றி உள்ளே போட்டு கையில் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றோம்.
உயரமான விதானத்துடன் மாபெரும் தூண்களுடன் மிகப் பிரமாண்டமாக இருந்த இந்த தொழுகையிடம்தான் சுல்தான்கள் தொழுகை செய்யுமிடமாக இருந்திருக்கிறது. இன்னும் இங்கு தொடர்ந்து தொழுகை நடைபெறுகிறது. 10,000 பேர் ஒரே சமயத்தில் தொழும் வசதி உடையது.
மேலிருந்து கனமான வட்டமான இரும்புக்கிராதிகள்  தொங்குகின்றன. அதில்தான் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் மெழுகு வர்த்திகள் பொருத்தி வைக்கப்பட்டனவாம்
போப் பெனடிக்ட் (XVI) 2006-ல் இங்கு வந்து தொழுதிருக்கிறார். சுவர்கள் குரான்களின் வசனங்களாலும் 5 விபாக்களின் பெயர்களினாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. அதற்கு மிகவும் அருகிலேயே "அயா சோஃபியா என்ற" ஹாகியா சோஃபியா" இருந்தது, வாருங்கள் போவோம்.

தொடரும்.

Thursday, May 22, 2014

புத்தகத்திருடி (Book Thief)

(துருக்கி) இஸ்தான்புல்லுக்கு போக டர்க்கிஷ் ஏர்லைன்ஸில் ஏறி உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, எதிரே உள்ள டிவியில் மேய்ந்ததில் கண்ணில் தென்பட்ட படம் புக் தீஃப். 
Brian Percival
பிரையன் பெர்சிவல் (Brian Percival) என்பவரால் இயக்கப்பட்ட இந்தப்படம் ,இதே தலைப்பில் வந்த நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது.
Novel

தலைமறைவான கம்யூனிஸ்ட் தாய்க்குப்பிறந்த படத்தின் கதாநாயகி லீசல், ஜெர்மனியின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு எளிய குடும்பத்திற்கு தத்துப் பெண்ணாக வருகிறாள். ஹிட்லர் தலைமையில் நாஜிகள் ஆண்ட காலமது. யாரும் வெளிப்படையாக எந்தக் காரியங்களையும் செய்துவிட முடியாது. வரும் வழியில் தன் தம்பியை இழந்ததால் மிகுந்த சோகத்துடனேயே இருக்கிறாள்.  
Sophie Nelisse
புதுத்தந்தை ஒரு வழியாக அவளிடம் நெருங்கிவிட புதுத்தாய் கொஞ்சம் கண்டிப்பானவராக நடந்து கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்பாவுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை. அம்மா பக்கத்து வீட்டுத்துணிகளை துவைத்து தேய்த்து தருபவள்.

பக்கத்து வீட்டுப்பையன் அவளிடம் நண்பனாக தீவிர முயற்சியெடுக்கிறான். புத்தகங்கள் மேல் அதிக விருப்பமுள்ள பெண்ணுக்கு ஹிட்லரால் புத்தகங்கள் தடைசெய்யப்படுகின்றன. குவியலாக வைத்து கொளுத்தப்பட்ட புத்தகங்களில் யாருக்கும் தெரியாமல் ஒரு புத்தகத்தை மறைத்து எடுக்கும்போது அந்த ஊரிலுள்ள ஒரு சீமாட்டி பார்த்து விடுகிறாள். அவள் வீட்டுக்கு ஒரு நாள் லீசல் அயர்ன் செய்த துணிகளை எடுத்துச்செல்லும்போது, லீசலை அழைத்து சென்று, தன் கணவரின் பெரிய  நூலகத்தைக் காட்டி , அவளை அங்கு வரும்போதெல்லாம் படிக்க அனுமதிக்கிறாள். ஒரு கட்டத்தில் கணவருக்குத் தெரிய வர. அவர் தம் மனைவியைக் கண்டித்து, பெண்ணை இனிமேல வரவிடாமல் தடுத்துவிடுகிறார்.  ஆனால் அவள் யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக அடிக்கடி   வந்து புத்தகங்களை படிக்கிறாள்.

இதற்கிடையில் ஒரு கட்டத்தில் லீசலின்  (Liesel Meminger) வளர்ப்புத்தந்தைக்கு பெரும் உதவி செய்த ஒரு யூதரின் மகனுக்கு உதவ வேண்டிய கட்டாயம் நேர்கிறது. உயிருக்குப்போராடும் நிலையில் வந்து சேர்ந்த அவனை இவர்கள் மூவரும் மறைத்து வைத்துக் காப்பாற்றுகிறார்கள். மறைத்து வைத்த தம் புத்தகங்களை அவனுக்கு வாசித்துக் காண்பிப்பதின் மூலம், அவள்மேல்  அவனுக்கு ஒரு  சகோதர  அன்பு ஏற்படுகிறது. ஆனால் சூழ்நிலை காரணமாக அவன் வெளியேற நேர்கிறது. அப்போது அப்பாவை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அழைத்துப்போய் விடுகின்றனர். நல்ல வேளை சில மாதங்களுக்குப் பின் உயிரோடு திரும்ப வருகிறார்.
அதன்பின் உலகப்போர் கடுமையாகப்பரவ பெண்ணின் கிராமத்தில் குண்டு மழை பொழிகிறது. தன் வளர்ப்புத்தந்தை, தாய் மற்றும் தன் பக்கத்து வீட்டு நண்பனையும் அதில் இழந்துபோகும் அவள் முற்றிலும் தனிமையாக்கப்படுகிறாள். இதற்கிடையில் போரில் தோற்ற ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதால் நாடு ஹிட்லரின் பிடியிலிருந்து விடுபடுகிறது.  
சிறிது நாட்களில் ஊரைவிட்டுப்போன யூதன் திரும்பிவருகிறான். அந்தச் சிறுபெண்ணை தன்னிடம் ஏற்றுக்கொள்கிறான். அதோடு படம் முடிகிறது.
இயல்பான நடிப்பில் ஒவ்வொருவரும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். மிகையான நடிப்பு, மிகையான மேக்கப், மிகையான வசனங்கள், திணிக்கப்பட்ட காட்சிகள் என்று எதுவுமில்லாமல் சுவாரஸ்யமாய் நகரும் காட்சிகள் அபாரம்.
இதைப்போன்ற   படங்களை பார்க்கும்போது தமிழ் சினிமா யதார்த்தத்தை விட்டு இன்னும் தொலைதூரத்தில் தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது.
19மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் மொத்த வசூல் 77 மில்லியன் டாலர். 
John Williams 
ஆஸ்கர் விருது பெற்ற ஜான்வில்லியம்சின் இசை, ஒரு தென்றல் போல தழுவுகிறது. இந்தப்படத்திற்கும் அக்காடெமி, கோல்டன் குளோப் மற்றும் BAFTA ஆகிய நாமினேஷன்ஸ் கிடைத்தது. ஜான் வில்லியம்ஸ் அதிகமான ஸ்டீபன் ஸ்பீர்பெர்க் படங்களுக்கு இசையமைத்தவர்.

லீசலாக நடித்த சோஃபி நெலிசி (Sophie Nelisse) அவருடைய பிரமாதமான நடிப்பிற்காக கீழ்க்கண்ட இரண்டு விருதுகளைப் பெற்றார். இவர் கனடாவைச் சேர்ந்தவர்.
1) Hollywood Film Festival Spotlight Award.
2) The Satellite Newcomer Award
3) Phoenix Film Critics Award
Geoffrey Rush
தந்தையாக நடித்த ஜியாப்ஃரி ரஷ் (Geoffrey Rush) பெயர்  'ரஷ்' என்றிருந்தாலும், மிக நிதானமாக நடித்து பல நாமினேஷன்ஸ் பெற்றார்.


சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

அறிவிப்பு:
நண்பர் இசையமைப்பாளர் இரா. பிரபாகர் அவர்களும் அவர் மனைவியும் மதுரையிலிருந்து வந்திருப்பதால்   அடுத்த வாரம் , நம்ம ப்ளாகுக்கு விடுமுறை.