Monday, June 2, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -பகுதி 3 புளு மாஸ்க்கும் புளி மாஸ்க்கும் !!!!!!!!!!!

ஏப்ரல்  26, 2014 சனிக்கிழமை திடீரென்று போன் அடித்தது எங்கோ தொலைவில் கேட்டது. சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் அடித்தபோது அது என்னுடைய போன் என்று அறிந்து எழுந்து படக்கென்று எடுத்து ஹலோ என்றேன். "என்னங்க  இன்னும் எந்திரிக்கலையா?", என்றாள் என் மனைவி. ஆயிரம் மைல்கள் தள்ளியிருந்தாலும்  அன்புத் தொல்லைகள் ஒழிவதில்லை. "மணி 6.30 ஆயிருச்சே, ஏழு மணிக்கு டூர் கம்பெனி வந்துருவானே", என்றாள். அங்கிருந்து  துல்லியமாக மணியைத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்ற ஆச்சரியத்தோடு, "நல்லவேளை எழுப்பின, இதோ போய்  ரெடியாகிரேன்", என்றேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது. "ஏய் உனக்கு இப்ப இரவு மணி 12  (ஏப்ரல் 25, 2014) இல்லையா? இன்னும் தூங்கலையா ?" என்றேன். "எங்க நீங்க இல்லாம தூக்கம் வரல", என்றாள். "எனக்கும்தான் இங்கு தூக்கம் வரலன்னு" ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, எழுந்து மடமடவென ரெடியானேன்.  
ரிஷப்ஷன் சென்று, டூர் ஆட்கள் வந்தால் சொல்லச்சொல்லிவிட்டு கீழேயுள்ள  ரெஸ்டாரண்ட் சென்றேன். காலையில் பிரேக்ஃபாஸ்ட் இலவசம். வெவ்வேறு  ஆலிவ் காய்கள், அழகாக நீள்வட்டத்தில் வெட்டப்பட்டிருந்த வெள்ளரிக்காய்கள், தக்காளி சிலைஸ்கள், பட்டர் ரோல், ஒரு சிறிய உருண்டையான பிரட் ஆகியவற்றை ஒரு 15 நிமிடத்தில் அசுர சாதனையாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ரிஷப்ஷன் வரும்போது மணி காலை 7.15. பரவாயில்லை முக்கா மணிநேரத்தில் குளித்துக் கிளம்பி காலை உணவும் முடித்துவிட்டேன். அதுவரை யாரும் வரவில்லை.
7.30க்கு டூர் கம்பெனிக்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. ஐயையோ எல்லா டூரையும் இவங்கிட்டதானே புக் செய்திருக்கிறேன். ஒரு வேளை ஏமாற்று  வேலையாக இருக்குமோ என மனம் பதைபதைத்தது.
ஒரு 7.50க்கு சர்ரென்று ஒரு வேன் வந்து நின்று, அதிலிருந்து சூட் அணிந்த டிரைவர் இறங்கி என் பெயரைச் சொன்னதும், "நான்தான்", என்று எழுந்து கைகுலுக்கிவிட்டு வேனில் ஏறினேன். நான் மட்டும் தான் இருந்தேன். டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாததால், நான் கேட்ட எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. "நோ இங்லிஸ்", என்ற பதிலைத்தவிர.
சுமார் 40 நிமிடப் பயணத்தின்பின் இருவர் ஏறினர். "ஹலோ ஐ ஆம் 'உர்ஸ்' (URS) ஐம் யுவர் கைட்”,என்றான் அதிலொருவன். கையில் ஒரு நீளமான குடை  வைத்திருந்தான். மேகமாக இருந்தது. மழைவந்து நம்ம டூரைக் கெடுக்கப் போகிறது என்று கலக்கமாக இருந்தது.
Urs

போகும் வழியில் ஆங்காங்கே சிதிலமடைந்த சுவர்கள் இருந்தன. கோட்டைச்சுவர்கள் போல இருந்தன. என்னவென்று கேட்டால் உர்ஸ் சொன்னான், "அவைதான் கான்ஸ்டான்டிநோபில்  நகரத்தின் பழைய கோட்டைச்சுவர்", என்று. "ஆட்டமன் சுல்தான்கள் வந்து இடித்துத்தள்ளிவிட்டனர்", என்றான். கான்ஸ்டான்டிநோபில்  கிழக்கத்திய ரோமப்பேரரசின் (Eastern Roman Empire)  தலைநகராக விளங்கிய ஊர். ரோமப்பேரரசர் கான்ஸ்டான்டைன் அவர்களால்  நிறுவப்பட்டது.  சுல்தான்கள் வந்து பிடித்தவுடன் இஸ்தான்புல் என்று மாற்றிவிட்டனர் .

வண்டி சிறிது  தொலைவு கடந்து  ஒரு ஹோட்டலின் முன் நின்றது. ஒரு எட்டு வெள்ளைக்காரர்கள் வந்து ஏறினார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாக்காரர்களுக்கு இவ்வளவு உயரம் எங்கிருந்துதான் வந்ததோ? ஆனால் பேசுவதற்கு துணை கிடைத்தது. சிறிது தொலைவு சென்று இஸ்தான்புல் சுல்தானாமேட்டில் வண்டி நுழைந்தது. தெருக்களில் கல்பதிக்கப்பட்டு  குறுகலாக இருந்தது. அங்கிருந்து ஒரு 15 நிமிடத்தில் ஒரு பிரமாண்டமான பள்ளிவாசல் வந்தது. அதுதான் புளு மாஸ்க் (Blue Mosque) என்றார்கள். அதுவரை அவ்வளவு பெரிய தொழுகையிடத்தை நான் பார்த்ததில்லை. அது போல டிசைனையும் பார்த்ததில்லை.
உர்ஸ் இறங்கிச் சென்று ஒரு இடத்தில் நின்றுகொண்டு தன்னுடைய குடையை விரிக்காமல் உயர்த்திப் பிடித்தான். அப்போதுதான் தெரிந்தது, அவன்  மழைக்காக குடையை எடுத்துவரவில்லை, எங்களுடைய அடையாளத்துக்காகத்தான் என்று. ஆம் அங்கு  வந்த கூட்டத்தைப் பார்த்தால், நிச்சயமாக தவறவிட்டுவிடுவோம். நல்ல ஐடியா தான்.
"இதுதான் புளி மாஸ்க்" என்றான் உர்ஸ். என்னடாது புளுமாஸ்க் என்றுதானே சொன்னார்கள் என்று யோசிக்கும்பொழுது, புளு என்பதைத்தான் புளி மாஸ்க் என்று உச்சரிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.  வார்த்தையின் கடைசியில் e  வருகிறதே அதனால்  போலும்.

ஆட்டமன் சுல்தான்களில் சுல்தான் அஹமது-I என்பவரால் 1609-ல் ஆரம்பிக்கப்பட்டு 1616-ல் கட்டி முடிக்கப்பட்டது  இந்தப் பள்ளிவாசல்.  இஸ்தான்புல்லில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் பல்வேறு சுல்தான்களின் தனிப்பட்ட வெற்றிக்குப் பின்னர் அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டு வந்த பணத்தால்   கட்டப்பட்டவை.ஆனால் இது பெர்சியாவில் நடந்த சண்டையின் தோல்விக்குப் பின்னர் அல்லாவின் கோபத்தைத் தணிக்கும் வண்ணமாக கட்டப்பட்டதாம். பக்கத்தில் உள்ள ரோமப் பேரரசர் கட்டிய ஆலயத்திற்கு இணையாக அதே வடிவத்தில் கட்டப்பட்டது.
பைஜான்டிய பேரரசர்களின் அரண்மனை இருந்த இடத்தில் இது கட்டப்பட்டது. உள்ளே நீல நிற செராமிக் டைல்களால் அலங்கரிக்கப்பட்டதால் "புளு மாஸ்க்" என்று அழைக்கப்படுகிறது.  சுல்தான் அகமதுவால் கட்டப்பட்டதால் 'சுல்தான் அகமது மாஸ்க்' என்றும் அழைக்கப்படுகிறது
ஒரு பெரிய விதானத்தையும் (Dome), எட்டு சிறிய விதானங்களையும், ஆறு மினாரேட்டுகளையும் உடையது இது. உர்ஸ் சொன்னான், “மினாரேட்டுகளில் ஒரு பலகணி இருந்தால் அது மக்கள் கொடுத்த பணத்தில் மக்களால் கட்டப்பட்டது. இரண்டு பலகணி இருந்தால் அது மக்களின் பயன்பாட்டுக்காக உள்ளூர் அரசாங்கம் கட்டியது. மூன்றும் அதற்கு மேலும் மினாரேட்டுகள் இருந்தால் அது சுல்தான்களின் உத்தரவில் கட்டப்பட்டது", என்றான்.
காலணிகளுடன் உள்ளே அனுமதி கிடையாது என்பதால் சிறிய பாலித்தீன் பைகளைத் தருகிறார்கள். அதற்குள் நம் ஷூக்களை கழற்றி உள்ளே போட்டு கையில் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றோம்.
உயரமான விதானத்துடன் மாபெரும் தூண்களுடன் மிகப் பிரமாண்டமாக இருந்த இந்த தொழுகையிடம்தான் சுல்தான்கள் தொழுகை செய்யுமிடமாக இருந்திருக்கிறது. இன்னும் இங்கு தொடர்ந்து தொழுகை நடைபெறுகிறது. 10,000 பேர் ஒரே சமயத்தில் தொழும் வசதி உடையது.
மேலிருந்து கனமான வட்டமான இரும்புக்கிராதிகள்  தொங்குகின்றன. அதில்தான் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் மெழுகு வர்த்திகள் பொருத்தி வைக்கப்பட்டனவாம்
போப் பெனடிக்ட் (XVI) 2006-ல் இங்கு வந்து தொழுதிருக்கிறார். சுவர்கள் குரான்களின் வசனங்களாலும் 5 விபாக்களின் பெயர்களினாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. அதற்கு மிகவும் அருகிலேயே "அயா சோஃபியா என்ற" ஹாகியா சோஃபியா" இருந்தது, வாருங்கள் போவோம்.

தொடரும்.

5 comments:

 1. அப்பாடி எத்தனை பெரிய இடம்.... 10000 பேர் ஒரே சமயத்தில் தொழுகை செய்யலாம் என்பதை படிக்கும்போது மலைப்பு......

  பகிர்வுக்கு நன்றி.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete