Monday, November 11, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 2 : பான்சே நகரத்தில் பரதேசி !!!!!!!!!!!!!

ஆகஸ்ட் 4, 2013 ஞாயிற்றுக்கிழமை
        காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்து, ஓசி பிரேக்ஃபாஸ்ட் 10 மணிக்குள் முடிந்துவிடும் என நினைவு வந்து வேகமாக இறங்கினோம். எளிமையான இங்கிலிஷ் பிரேக்ஃபாஸ்ட்டை விரைவில் முடித்து, காரை எடுத்துக் கொண்டு, பக்கத்து நகரான "பான்சே" (Ponce)க்கு கிளம்பினோம். ஒரு இரண்டு மணி நேரப்பயணத்தில், குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை ஆகிய அனைத்தையும் பார்த்து அதிசயத்த வண்ணம் நகருக்குள் நுழைந்தோம்.
        பான்சே  ஒரு அழகான சிறிய கடற்கரை நகரம். அதன் சிகரத்தில் உள்ள "குருசெட்டா  எல் விஜியா" (cruseta El Vigia) என்ற இடத்திற்குச்சென்றோம். (நண்பர்களே, ஏற்கனவே சொல்லியது போல் ஸ்பானிஷ் உச்சரிப்பு முற்றிலும் வேறாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வாசித்த இடங்களை அப்படியே தமிழில் எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்திலும் இனிமேல் பிராக்கெட்டில் எழுதுகிறேன்.)
        போர்ட்டரிக்கோவில் இருக்கும் எல்லாத்துறைமுகங்களுக்கும் முதலில் கடல் வழி வரும் எதிரிகள் மற்றும் கடற்கொள்ளைக்காரர்கள் மூலமாக எந்நேரமும் ஆபத்து வரும் என்பதால் பான்சே நகர தலைவர்கள், இந்த உயரமான சிகரத்தில் எப்போதும் இருக்கும்படி ஆட்களை நியமித்தனர்.  இவர்கள் வேலை என்னவென்றால், மேலிருந்து கடலை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். எதிரிகள் அல்லது கொள்ளைக்கார கப்பல்கள் எதையாவது பார்த்தால், சிலுவை வடிவத்தில் இருக்கும் உயர்ந்த கம்பத்தில் கொடியேற்ற வேண்டும். அந்தக் கொடியின் கலரை பார்த்து தலைவர்கள் தங்கள் காவல்படையை உஷார்ப்படுத்துவர். கி.பி.17 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை இது பயன்பட்டிருக்கிறது.
        அதன் நினைவாக இப்போது உள்ள அரசாங்கம், அங்கு சிலுவை வடிவத்தில் கான்கிரீட்டில் உயரமான வாச் டவர் ஒன்றைக்கட்டியுள்ளனர். எலிவேட்டர்  மூலமாக மேலே போனால், முழு நகரமும் கடலும் நன்றாக தெரிந்தது.
அதன் அருகில் சற்று மேட்டுச்சரிவில் "ஜப்பானியத் தோட்டத்தை அமைத்து, போன்சேக்கள், சிறுசிறு ஓடைகள் மண்டபங்கள்

 மற்றும் நீரூற்றுகளை அமைத்துள்ளனர். நாங்கள் போன நாள் மாலை, அங்கு திருமணம் ஒன்று நடக்கவிருந்ததால், அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
        அதனை முடித்து, மலைச்சிகரத்தில் இன்னும் மேலேறிச் சென்றால் கேஸ்டில்லோ செர்ராலெஸ் (Castillo Serralles) என்ற 1930ல் கட்டப்பட்ட கோட்டை வீடு(Castle House) வருகிறது. அதிலே ஹுவான் செர்ராலெஸ் (Juan Serralles) குடும்பத்தினர் வசித்து வந்தனர். “ஸ்பானிய மொராக்கன்” கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. மிகப்பெரிய வயலில் கரும்புத்தோட்டம் போட்டு, அதனருகில் சர்க்கரை ஆலை மற்றும் ரம் தொழிற்சாலை அமைத்து பெரும் பொருள் ஈட்டி வாழ்ந்த பணக்காரக் குடும்பம். 2.5 ஏக்கரில் வீடு அமைப்பு, பூந்தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம், அலங்காரங்கள் வழக்கம்போல் ஆச்சரியமூட்டியது.

 பெருமூச்சு விடுவதைவிட வேறென்ன செய்ய முடியும். அவர்கள் வாழ்க்கையின் சிறு திரைப்படமும் காட்டப்பட்டது.

        பார்த்து முடித்து, சாப்பிடச் சென்றோம். "பிட்சா ஹெவன்" என்ற உணவகத்தில் நன்றாக இருக்குமென்று சொன்னார்கள். பேர்தான் பிட்சா என்றாலும் போர்ட்டரிக்கன் உணவு வகைகள் அங்கு கிடைக்குமென்றார்கள்.

        பருத்த சரீரத்துடன் ஓடிவந்த 'லியோனார்டோ' வரவேற்று உட்கார வைத்தான். ஆங்கிலம் சுத்தமாகத்தெரியவில்லை. நல்லவேளை மெனுகார்டில் ஸ்பானிஷ் கீழ் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது. ரைஸ் & பீன்ஸ் என்றதைப் பார்த்ததும், அதுதான் வேண்டும் என்றாள் என் மனைவி, சோத்தைப் பார்த்தாள் விடுவாளா?. என் பெரிய மகள், "பீஃப் ஸ்டேக்கும்", சின்னவள், "சிக்கன் சம்திங்கும் ஆர்டர் பண்ணினார்கள். நான் கசாவா ஃபிரை (அதான் பாஸ் நம்மூர் கப்பக்கிழங்கு)

 மற்றும் சாலட் ஆர்டர் பண்ணேன். விலை மிகவும் அதிகமென்றாலும் உணவு நன்றாகவே இருந்தது. ஒரு பண்டம் $18 முதல் $20 வரை.

        எங்கள் பக்கத்தில் இருந்த  ஒரு ஆரஞ்சு பிழியும் மெஷின் ஆச்சரிய மூட்டியது. ஆன் செய்தால் ஸ்டாக் செய்து வைக்கப்பட்டிருக்கும் சாத்துக்குடிகளில் ஒன்றை மட்டும் லாவகமாக உருட்டி எடுத்து கீழே கொண்டுவந்து, இரண்டாக நறுக்கி, இருபுறமும் அனுப்பி, பிழிந்து சாரை கீழே அனுப்பிவிட்டு, தோலை இருபுறமும் துப்பியது. அதனைப்பார்க்கவே ஆரஞ்ச் ஜுஸ்  ஆர்டர் பண்ணினோம்.

        உண்டு முடித்து வெளியே வந்தால் தெருவில் நடமாட்டம் எதுவும் இல்லை. நாங்கள் சாப்பிட்ட கடை தவிர்த்து எல்லாக்கடைகளும் அடைத்திருந்தன. எல்லாம் எங்கே முடங்கினார்கள் என்று யோசித்தபடி அடுத்த ஸ்டாப்பான கத்தீட்ரலுக்குப்போனோம்.

 ஊரின் மொத்த ஜனமும் அங்குதான் இருந்தது. ஆலயம் நிரம்பி வழிய, வளாகம் முழுவதும் நடந்து கொண்டிருந்த கார்னிவல் கொண்டாட்டங்களால் களை கட்டியிருந்தது.

        நியோ கிளாசிக்கல் ஸ்டைலில் கட்டப்பட்ட இந்த கத்தீட்ரல் 300 வருட வரலாறு கொண்டது. ஸ்பானிய காலனி மக்களுக்காக 1670ல் சிறிய சேப்பலாக கட்டப்பட்ட இந்த ஆலயம், 1692ல் ஸ்பெய்ன்  அரசர், கார்லஸ் II ( Carlos II)  இட்ட அரசாணைப்படி விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் 1835-ல் மேலும் பெரிதுபடுத்தப்பட்டு பேராலயமாக உருவாக்கப்பட்டது. இங்கிருக்கும் மாபெரும்  பைப் ஆர்கன் மிகப்பெரிய இசைமேதை - Juan Morel Campos வாசித்த பெருமை பெற்றது. உள்ளே சென்று வழிபட்டுவிட்டு, வழியில் இருந்த 100 வருட பழமையான ஃபயர் ஹவுசையும் பார்த்துவிட்டு காருக்குத் திரும்பினோம்.

        அங்கிருந்து "லா குவாச்சா" (La Guacha) என்ற கடற்கரைக்கு வழி கேட்டால் ஒருவருக்கும் விளங்கவில்லை.

 பயணங்கள் முடிவதில்லை >>>>>>>



Thursday, November 7, 2013

சூப்பர் சிங்கர்களுடன் பரதேசி


        
வடஅமெரிக்காவின் முதல் தமிழ்ச்சங்கமான "நியூயார்க் தமிழ்ச்சங்கம்" தீபாவளித்திருநாளை கொண்டாடும் வண்ணமாக "சூப்பர்சிங்கர்" மெல்லிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அக்டோபர் 26, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஃபிளஷிங்-ல் உள்ள ஹிண்டு  டெம்பிள் ஆடிட்டோரியத்தில் வைத்து நடத்தது. 3.30 மணிக்கே நான் சென்றாலும் வழக்கத்திற்கு மாறாக அரங்கு நிறைந்திருந்தது.
        விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர்சிங்கர்' இசைப்போட்டி உலகமெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒன்று.
        அதனுடைய முதல் சீசனில் வென்ற 'நிகில் மேத்யூ' இரண்டாம் சீசனில் வென்ற "சாய் சரண்" மற்றும் ஜூனியரின் இரண்டாவது சீசனில் முதல் ஐந்து இடங்களில் வந்த பிரகதி மற்றும் யாழினியும் வந்திருந்தனர். இவர்களோடு தன்யஸ்ரீயும் வந்திருந்தாள். இசைக்கு உறுதுணையாக, சென்னையிலிருந்து "கணேஷ் கிருபா" இசைக்குழுவினர் நான்குபேர் வந்திருந்தனர்.
        உள்ளே நுழையும்போதே மங்களமான மஞ்சள் நிறத்தில் நிகழ்ச்சி நிரலை நீட்டினார்கள். அதிலே ஆச்சரியமாக ஒவ்வொரு நிகழ்வுக்கும் நேரம் போடப்பட்டிருந்தது. அதோடு ஒவொரு நிகழ்வுக்கும்  கால அளவும் போடப்பட்டிருந்தது.ஆஹா சூப்பர்!!!!! என்று பெருமிதத்துடன் உட்கார்ந்தோம். எவ்வளவு முயன்றும் 3.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது, பல்வேறு காரணங்களால் 4.45 மணிக்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. அட்லீஸ்ட் நிகழ்ச்சி நிரலில் நேரம் போடாமலிருந்திருக்கலாம் என்று நினைத்தேன்.
        ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, முடி கலைந்து வந்தவர், சுதிகலைந்து பாடினார். பாட்டுக்குத் தேவையான ஆதார சுதி, சேதார சுதி ஆகி நாராசமாய் ஒலித்தது. "வாழ்த்துதுமே"-வின் அவரோகணம் ஆரோகணமாகி தேய்ந்து ஒலித்து ஓய்ந்து போனது.
        அதன்பின் அமெரிக்க தேசிய கீதத்தைப் பாடிய "லாரன் ஜோசப்" 

எனும் சிறு பெண் சிறப்பாகப்பாடி கைதட்டதல்களை   அள்ளினாள். அமெரிக்க தேசிய கீதத்தை இவ்வளவு இனிமையாக நான் எங்கும் கேட்டதில்லை. அந்தப் பெண்ணே பின்னர் நடந்த பாட்டுப் போட்டியின் பைனல்சில், “மெலடி சிங்கர்” பட்டம் வென்றாள்.

        சம்பிரதாய வரவேற்பு மற்றும்  அறிமுகப்படலங்கள் முடிந்தவுடன், சாய்சரண் உள்ளே வந்து தன்னுடைய வெற்றிக்கு உதவி, 65 லட்சம் பெறுமான அபார்ட்மெண்டை வாங்கிக்கொடுத்த, "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற T.M செளந்தரராஜன் பாடிய திருவிளையாடல் பாட்டை கணீரென்று பாடினார். செளந்தரராஜனின் ஏழுகட்டை வெங்கலக்குரல் யாருக்கும் வராதென்றாலும், சாய்சரண் தன் சொந்தக்குரலில் அந்தப்பாடலை பாடி அப்ளாஸ்  அள்ளினார். அது ஒரு சிறப்பான ஆரம்பமாக அமைந்தது. 
      தொகுத்து வழங்கிய இலங்கைத்தமிழ் சகோதரர் அந்தக்கால இலங்கை வானொலியின் KS.ராஜா, BS.அப்துல்ஹமீது ஆகியோரை நினைவு படுத்தினார். இவர்களை அறியாதவர்கள், இதனை ரசிக்கவில்லை (நியோயோர்க்  த்த்தமிழ்ச்ச் சங்காம்)
        அடுத்துவந்த பிரகதி இன்னும் உயரமாய் வளர்ந்து இன்னும் அழகாக மின்னினார். "நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிரிக்கேன்" என்ற A.R.ரஹ்மான் பாடலை அருமையாய்ப் பாடினார்.

 முகத்தில் ஒரு புன்முறுவல் கடைசிவரை உறைந்திருந்தது, மேடைக்கு அழகு சேர்த்தது .பிரகதி சிறிது உச்சரிப்பில் கவனம் செலுத்தினால், இன்னும் மேலே வர வாய்ப்பிருக்கிறது. என்ற
        அதற்குப்பின் வந்த "நிகில் மேத்யூ”, விழி மூடி யோசித்தால் முன்னே வருவேன் அங்கே அங்கே என்ற பாடலை பாடினார். மிகச்சிறந்த பாடகரான நிகில் மேத்யூவின் குரல் அன்று என்னவோ எடுபடவில்லை. காரணம் சவுண்ட் சிஸ்டம் ஆக இருக்கலாம். ஆரம்பித்தில் இருந்தே தகராறு பண்ணிக்கொண்டிருந்து முகம் சுளிக்க   வைத்தது.


        பலத்த கரதோஷத்துடன் யாழினி வந்து ஞானப்பழத்தை பிழிய, அவளுடைய வயதுக்கு அவளுக்கு அசாத்திய திறமைதான். ஒரு சில இடங்களில் ஹைபிட்ச் எட்டமுடியவில்லை என்றாலும், சிறு பிள்ளைகள் செய்யும் குறை எப்போதும் பெரிதாகத் தெரியாது என்பதால் கைதட்டை அள்ளினாள். அவள் அபிநயித்து பாடிய "பட்டத்துராணி"யும்  சூப்பர் ஹிட்.
        தன்  முதல்பாடலான மரங்கொத்திப் பறவையில் பாடிய "டங் டங் டிகடிக  டங் டங்" என்ற பாடலை சாய்சரண் யாழினியுடன் இணைந்து பாடியது சிறப்பாக அமைந்தது. கணேஷ் கிருபாவின் தபேலா வாசிப்பவர் தன் டேப்பை எடுத்துக்கொண்டு வாசித்துக்கொண்டே வலம்  வந்தது வேடிக்கையாக இருந்தது. அவரைச்சுற்றி பல சுதிகளில்  "கர்ணங்கள்" சூழ்ந்திருந்தாலும், அவர் சட்டைக்குள் இருந்தது கடமல்ல அவர் தொப்பை என்பது எழுந்த போதுதான் தெரிந்தது.

 ஆனால் இரு தொடைகளையும் தொப்பையையும் பயன்படுத்தி வாசித்த கடல் படத்தில் வரும் 'மூங்கில் தோட்டம்' சூப்பர் ஹிட். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வழக்கமாக கீபோர்டு வாசிக்கும் விஜயன்தான் எல்லாப் பாடல்களுக்கும் எல்லாக் கருவிகளையும் கீபோர்டிலேயே வாசித்து அசத்தினார். அதோடு இடைவேளைக்குப்பின் தன் இரண்டு கீபோர்டுகளில் இரண்டு கைகளால் “பளிங்கினால் ஒரு மாளிகை”, “அவளுக்கென்ன  அழகிய முகம்” ஆகிய  இரண்டு பாட்டுகளை ஒரே நேரத்தில் வாசித்தது ஒரு ஆச்சரிய உண்மை.

        குள்ளஸ்ரீ என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் தன்யஸ்ரீயும் பல டூயட் பாடல்களில் இணைந்து பாடினார்.
 அவருடைய குரலும் எனக்குப் பிடித்த குரல்களில் ஒன்று.    என்ன காரணத்தாலோ கணேஷ் கிருபா இசைக்குழுவின் தலைவர் கணேஷின் முகத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈயாடவில்லை. ஜெட் லாகா அல்லது கான்ஸ்டிபேஷனா  என்று தெரியவில்லை.
        இறுதியில் ஐந்துபேரும் வந்து அதிவேக ஐட்டம் பாடல்களை மெட்லியாகத் தொகுத்துப்பாட, வந்த சிலர் ஆடுவதாக நினைத்துக்கொண்டு கைகால்களை அஷ்டகோணலாக அசைக்க,   இசை நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.
        மொத்தத்தில் நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் மனதில் நிறைந்த ஒரு பொன்மாலைப்பொழுது.


                உள்ளே நுழையும்போது மஞ்சள் நிறத்தில் நிகழ்ச்சி நிரல் கொடுத்து மங்களகரமாக வரவேற்றபடியே, வெளியே போகும்போது மஞ்சள் நிற லட்டு கொடுத்து வழி அனுப்பிவைத்தனர். அன்று போல் என்றும் தன்னலமற்ற சேவை செய்து வரும் M.N.கிருஷ்ணன், காஞ்சனா, ராதாகிருஷ்ணன், ஆல்பர்ட் செல்லத்துரை அவர் மனைவி இந்திரா ஆல்பர்ட், வனஜா பார்த்தசாரதி  இன்னும் பலரின் தமிழ்ச்சேவை மேன்மேலும் வளரவும், தொடரவும் இந்தப் பரதேசியின் வாழ்த்துக்கள். 

Monday, November 4, 2013

போர்ட்டரிக்கோ பயணம் பகுதி - 1 : வண்டுகளும் மண்டுகளும் !!!!!!!

 
   2013 கோடைகாலம் முழுவதும் சிற்றுலாக்கள் பல போய்க்கொண்டிருந்தாலும், ஒரு சுற்றுலாவாக எங்கேயாவது தூரமாய்ப்போக வேண்டும் என்று மனைவி பிள்ளைகள் நச்சரித்ததால், போர்ட்டரிக்கோ போகலாம் என உச்சரித்தேன். மூன்று மாதத்திற்கு முன்னாலேயே திட்டமிட்டு, நான்கு பேருக்கும் விமான டிக்கட்டுகளும், ஹோட்டல் புக்கிங்கும் எக்ஸ்பிடியாவில் வாங்கினேன். (Expedia.com).
        கொஞ்சம் சல்லிசாய்க்கிடைக்குமென்பதால், டைரக்ட் ஃபிளட் எடுக்காமல், நடுவில் ஒரு ஸ்டாப் எடுத்தோம். ஜான் கென்னடி விமானநிலையத்தில் ஜெட்புளு பிடித்தோம்.

 ஃப்ளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேவில் ஸ்டாப் பண்ணிய சமயம் சும்மா அலையும்போது , "ஹெல் கிச்சன்" பார்த்தேன். டிவி ஷோ போல் இல்லாமா நிதானமாத்தான் வேலை செய்து கொண்டு இருந்தாய்ங்க.ஒரு மணிநேர இடைவேளை விட்டு அடுத்த ஜெட் புளு எடுத்து, ஆகஸ்ட் 8, 2013 சனிக்கிழமை, இரவு  9 மணிக்கு  தலை நகர் சேன் வானுக்கு ( San Juan)  வந்து சேர்ந்தோம்.
        பைகளை பேக்கேஜ் கிளைமில் பொறுக்கிக்கொண்டு வெளியே வர, பேய்லெஸ் (Payless) வாடகைக்கார் கம்பெனி வேன் தயாராய் காத்துக் கொண்டிருந்தது. ஒரு பதினைந்து நிமிட பயணத்தில், ரென்டல் கார் வந்து சில ஃபார்மாலிட்டீஸ் முடித்து 'கியா' வாடகைக்காரை எடுத்தோம். ஜிபிஎஸ்ஸில் ஹோட்டல் அட்ரசை போட்டு தட்டித்தடவி "எல் கனேரியோ பொட்டிக்" ஹோட்டலுக்கு (EL CANARIO Boutique) வந்து சேர்ந்த போது இரவு 11.00 மணி. அந்த ஏரியாவே ஒளிரும் விளக்குகளால் மின்னி, எங்கும் துள்ளல் இசை வெடித்துக் கொண்டிருந்தது. ஆஸ்ஃபோர்ட் அவனிடா போர்டோரிக்கோவில் ஒரு முக்கிய தெரு.
        ஹோட்டல் ரிஷப்ஷனில் நுழைந்து புக்கிங்கும் கன்ஃபர்ம் செய்துவிட்டு, காரை எங்கு நிறுத்த வேண்டும் என்று கேட்டேன். "ஓ கார் பார்க்கிங் இங்கே இல்லை" என்று கூலாக சொன்னார், அந்த முதிர்ந்த முன் அலுவலக பொறுப்பாளர்.
        “ஐயையோ இப்ப காரை என்ன செய்வது", என்று கேட்ட போது, “தெருவில் நிறுத்தலாம், ஆனால் நள்ளிரவு 12 மணிவரை காசுகள் போடவேண்டும். ஒவ்வொரு மணிக்கும் எக்ஸ்பயர் ஆகும் முன் போய் போய் காசு போடவேண்டும். அது தலைவலி.  “பக்கத்தில் மேரியட் ஹோட்டலில் நிறுத்தலாம். நான் ஒரு ஸ்லிப் தந்தால், இரவு பார்க்கிங் $18 டாலர் மட்டுமே”, என்றார். 18 டாலரா? இதுக்கு நியூயார்க் பரவாயில்லையே என்று நினைத்தேன்.இந்தப்பகுதியில் எங்குமே ஹோட்டல்களில் பார்க்கிங் கிடையாது. இருந்தாலும் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அப்புறம் வேறு வழியின்றி  மேரியட்டில் நிறுத்திவிட்டு  கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு சாப்பிட வெளியே வந்தோம். மணி  நள்ளிரவு12.
        ஆனால் எல்லா ரெஸ்டாரன்ட்டுகளும் திறந்திருந்தன, நிறைந்திருந்தன. வழிந்திருந்தன, தள்ளாடின. சிக் என்று உடையுடுத்தி, நள்ளிரவுப்பட்டாம்பூச்சிகள், பறந்தும் மிதந்தும் அலைந்தன. வண்டுகளும் பின் தொடர்ந்தன. கேட்டால் இதுதான் ஐலன்ட் கல்ச்சராம். நான் ஒருவன்தான் மண்டு மாதிரி குடும்பத்தோடு போயிருந்தேன். 
Cover Photo
        மேரியட்டுக்கு முன்னால், கையில் மெனுகார்டுடன் ஒரு பெண், என் முன் வந்து "பியன் வெனிடாஸ்" என்றாள். அவள் அணிந்திருந்த டி சர்ட்டில் "BUNS" என்று எழுதியிருந்தது பார்த்து கொஞ்சம் மிரண்டு போய்விட்டேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்த ரெஸ்டாரண்ட் பேர் "பன்ஸ்"என்பது. பிறகு அங்கேயே சென்று பர்கர்களும், சாண்ட்விச்சும், சாலடும் ஆர்டர் பண்ணி, வெளியே ஓபன் ஏரில் இருந்த டேபிளில் உட்கார்ந்தோம். கடல்காற்று சிலுசிலுவென்று அடித்தது. எங்கே கடல்? என்று விசாரித்ததில், எங்கள் ஹோட்டலுக்கு நேர் பின்புறம் இருக்கிறதென்று அறிந்து உற்சாகமடைந்தோம். கையில் கொடுத்திருந்த பேஜர் கிர்ரிக்க, என் பெண்கள் போய் உணவை    எடுத்துக்கொண்டு வந்து, டேபிளில் விரித்து வைத்து விட்டு பானங்கள் கொண்டுவர திரும்ப உள்ளே போனார்கள். நானும் என் மனைவியும் பர்கரை எடுத்து கடிக்க, திடீரென்று அடித்த காற்று டேபிளில் இருந்த மீதி இரண்டு ஐட்டங்களையும், சாலடையும் அள்ளி கீழே எரிந்தது. அடுத்த இலக்கு தக்கையாக இருக்கும் நானாக இருக்குமோ என்று பயந்து உள்ளே போனோம். உள்ளே இடமில்லையாதலால், ஒருவழியாக நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்.
        "பீச்சுக்கு போலாமா?" என்றாள் என் மனைவி, ரொமான்டிக் பார்வையுடன். மணி 1.15 .  என் பிள்ளைகளும் தலையாட்ட, ஒரு 5 நிமிடம் திறந்திருந்த வால்கிரீன் கடையின் எதிர்ப்புறம் நடந்தால், ஆரவாரிக்கும் அலைகளுடன் அட்லாண்டிக் பெருங்கடல், தன் வெண்ணுரைகளால் வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது. ஒன்றறை மணிக்கும் கடற்கரையில் ஒண்டுற ஜோடிகள் நிறைந்து உப்புக்காற்றுடன் உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்தனர். "சரி சரி வாங்க போலாம், காலையில் வரலாம்" என்று சொல்லி ரூமுக்கு திரும்பினோம். வழியில் மழை பிடித்துக்கொண்டது. பூமழை தூவி வரவேற்கும் போர்ட்டோரிக்கோவுக்கு வந்தனம் கூறி ரூமுக்கு திரும்பினோம்.

        ரூம் ஏசி விர்ரிட்டு ஜில்லிட, தூக்கம் கண்களை தள்ளிட, வெளேர் மெத்தை எம்மை உள்ளிட...........

Thursday, October 31, 2013

ராயல் அஃபயர் (A Royal Affair)

        2012ல் வெளியாகி பாராட்டுகளைக்குவித்த இந்த டேனிஸ் மொழிப்படம் ஒரு வரலாற்றுச்சித்திரம் (Historical Drama). போடில் ஸ்டீன்சென் (Bodil Steensen) எழுதிய பிரின்சஸ் ஆஃப் பிளடெட் (Princess of blodet ) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
King Christian VII
        





















 18-ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்ட ஏழாவது கிறிஸ்டியன் (King Christian VII) சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவன். நாட்டை ஆள அடுத்த வாரிசு வேண்டுமே என்று நினைத்த டேனிஷ் அரசவை, அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரசர், ஜார்ஜ் III அவர்களின் தங்கை, இளவரசி கேரலின் மெட்டில்டாவுக்கு மணம் முடித்து வைத்தது. வந்த ஒரு சில நாட்களில், தன் கணவனின் குரங்கு சேட்டைகளைப் பார்த்து நொந்துபோகிறாள் அரசி. இவ்வாறிருக்க நாட்டின் தேவைப்படியும் சட்டப்படியும் ஒரே  ஒரு முறை அவர்கள் படுக்கையில் இணைய, அரசி கர்ப்பமடைகிறாள்.
caroline matilda of wales
        
இதற்கிடையில், அரசனை குணப்படுத்தவும், அரசிக்கு உதவவும் ஸ்ட்ருவன்சீ  (Johann Friedrich Struensee) என்ற மருத்துவர் அரசு மருத்துவராக (Royal Physician) நியமிக்கப்படுகிறார். சிவப்புச் சிந்தனையில் வளர்ந்திருந்த அந்த மருத்துவருக்கு  நாட்டின் நிலைமையையும், அரச குடும்பத்து அவலங்களையும் தெரிந்துகொள்ள வெகு நாட்கள் தேவையிருக்கவில்லை. அரசரின் பெயரில் ஆட்சி நடத்துவது அரசவைப் பிரபுக்கள்தான் (Royal Court) என்றும் தெரிந்துவிடுகிறது.
        அரசரின் உற்ற தோழனாக ஆகிற மருத்துவர் சில சீர்திருத்தங்களை செய்ய அரசனை பயன்படுத்துகிறார். தனிமையில் வாடி நொந்துகொண்டிருந்த அரசிக்கு மருத்துவரிடம் காதல் பிறந்து, கள்ளத் தொடர்பு ஆரம்பிக்கிறது.
        அரசனின் உதவியால் முழு அரசவையைக் கலைத்துவிட்டு, அரசனின் பெயரில் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிய மருத்துவர், பல சீர்திருத்தங்களை அரசியின் ஆலோசனையோடு நடைமுறைப்படுத்துகிறார். இதற்கிடையில், அவர்களின் கள்ளத் தொடர்பு அரசல் புரசலாக வெளியே தெரிய, விழித்துக் கொண்ட பிரபுக்கள் ஒன்று சேர்ந்து, அதைச்சாக்காக வைத்து மருத்துவருக்கு மரண தண்டனை கொடுத்து அரசியை நாடு கடத்துகின்றனர். சீர்திருத்தங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் சுரண்டலில் ஈடுபடுகின்றனர்.
        மருத்துவருக்கும் அரசிக்கும் பிறந்த 2ஆவது பெண் குழந்தையும் முதலில் பிறந்த ஆண் குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது.
        அரசி தன்னுடைய சூழ்நிலையையும், எதனால் இந்தத் தொடர்பு ஏற்பட்டது என்பதனையும் விளக்கி எழுதி, சிறிது வயதுக்கு வந்த பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.
Frederick V1 of Denmark
        அரசியின் மூத்தமகன் அதனை முற்றிலும் புரிந்து கொண்டு, அப்பாவான அரசரை தன் வசப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நாட்டைத்திருத்த முயல்கிறான். அத்தோடு திரைப்படம் முடிகிறது. தன் பதினாறாவது வயதில் முடிசூட்டிக் கொண்ட அவன் ஃபிரடெரிக் VI   என்ற பெயரில் நீண்ட அரசாட்சி செய்து, ஸ்ட்ருவன்சி கொண்டுவந்த அனைத்து சீர்திருத்தங்களையும் மீண்டும் கொண்டுவந்ததோடு, மேலும் பலவற்றைச் செய்து அழியாப்புகழ்பெற்றான் என்பது வரலாறு.
        நிக்கோலஜ் ஆர்செல் (Nikolaj Arsel) இயக்கிய இந்தப்படத்தில் மேட்ஸ் மிக்கேல்சென் (Mads Mikkelsen) ஸ்ட்ருவன்சியாகவும், அலிசியா விக்கன்டர் (Alicia Vikander) கேரலினாவாகவும், மிக்கல் ஃபோல்ஸ்கார்ட் (Mikkel Folsgaerd) கிறிஸ்டிய னாகவும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர்.  இம்மூவரும், அப்படியே அந்தக் காலக்கட்ட சூழ்நிலையை தம்முடைய இயல்பான நடிப்பினால் கண்முன் கொண்டு வருகின்றனர். திரைக்கதை அமைக்க பத்து வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப்படம் ஜென்ட்ரோப்பா (Zentropa) என்ற புகழ்வாய்ந்த தயாரிப்பாளரின் முயற்சியில் டென்மார்க், ஸ்வீடன் மற்றும் செக் குடியரசின் கூட்டுத் தயாரிப்பில் 46 மில்லியன் டேனிஷ் குரோனர் செலவில் எடுக்கப்பட்டது.
        இங்கிலாந்து விமர்சகர் மார்க் கெர்மோட் (Mark Kermode) அவர்களால் 2012-ன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட இப்படம் பல விருதுகளை குவித்தது.
1.  பெர்லின் திரைப்படவிழாவில் மிக்கேல் ஃபோல்ஸ்கார்ட் (கிறிஸ்டியன் VII ஆக நடித்தவர்) சிறப்பு நடிப்புக்கான சில்வர் பேர் (Silver Bear) பெற்றார்.
2.  நிக்கோலஜ் அதே விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றார்.
3.  2012 டால்லஸ் ஃபோர்ட் வெர்த் -திரைப்பட விமர்சகங்களின் கூட்டமைப்பின் "சிறந்த வெளிநாட்டு மொழிப்பட" விருது.
4.  2012 ஃபீனிக்ஷ் திரைப்பட விமர்சகர்களின் கூட்டமைப்பில் "சிறந்த காஸ்ட்டியூம் டிசைன்" விருது.
5.  சிறந்த ஆடையமைப்புக்காக மானன் ரஸ்மியூசன் விருது (Manon Rasmussen) பெற்றார்.
6.  2012 -வாஷிங்டன் டி.சி - சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்
7.  2013 -ஆஸ்கார் அவார்டு - நாமினேட்டட்
8.  2013 -கோல்டன் குளோப் அவார்ட் - நாமினேட்டட்.

        -- திரைப்பட ரசிகர்கள் கண்டிப்பாய் பார்த்து மகிழ வேண்டிய படம்.

இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...

 இந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.

Monday, October 28, 2013

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...


ஆப்பிள் பிக்கிங்



        தொழிலாளர் தினம் (Labor Day) செப்டம்பர் 2, 2013 திங்களன்று வந்தது. மூன்று நாளில் லீவில், அங்கே இங்கே போகலாம் என்று யோசித்து எங்கும் போகாமல் 2 நாட்கள் ஓடிவிட்டது. திடீரென்று ஞாயிறு இரவுதான்  ஆப்பிள் பிக்கிங் ஞாபகம் வந்து, காலையில் எழுந்து கிளம்பினோம்.
        முழுக்குடும்பமும் 2 வண்டிகளில். இந்த சமயம் நான் என் பெரிய ரதத்தை எடுத்துக்கொண்டேன். (மதுரைத்தமிழனுக்கு மட்டும்தான் ரதம் எடுக்க முடியுமா? நாங்களும் எடுப்போம்ல).

        லாரன்ஸ் ஃபார்ம் என்ற அந்த பழத்தோட்டம் நகருக்கு வெளியில் அப்ஸ்டேட்டில் ஒருமணி நேரத்தொலைவில் இருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை தாண்டி, நியூஜெர்சி மாநிலத்தின் ஒரு பகுதியை கிராஸ் செய்து பயணம் செய்தால், ஒரு குன்றுகள் சூழ்ந்த பகுதியில் வந்தது.
        ஏற்கனவே பலசமயம் அங்கு வந்திருந்தாலும், எங்களில் சிலருக்கு அதுதான் முதல் தடவை. பார்க்கிங் செய்துவிட்டு பழவேட்டைக்குக் கிளம்பினோம்.நாங்கள் வருவது முன்னரே தெரிந்ததோ என்னவோ, "பழங்களில் ஒன்றிரண்டு சாம்பிள் மட்டும் சாப்பிடவும். வாங்கப்போவதில்லை என்றால் பறிக்க வேண்டாம்" என புதிதாக போர்டு ஒன்று முளைத்திருந்தது.
        மேப்பை எடுத்துக்கொண்டு சென்றபோது முதலில் வந்தது, “மெக்கின்டோஷ்” ஆப்பிள் தோட்டம். செவ்வரி ஓடிய பச்சை நிறத்தில் காய்த்துத்தொங்கியது. எல்லாமே குட்டை மரங்கள்.

 பறிக்காமலே மரத்திலேயே ருசிபார்க்கும் அளவுக்கு பக்கத்தில் தொங்கின. கடித்தால் புளிப்பு உச்சிக்கு ஏறியது. என்னடாது நமக்கு வயசாயிப் போச்சா, பல் இவ்வளவு கூசுகிறதே என்று கவலையில் "ஙே" (நன்றி ராஜேந்திரகுமார்) என்று முழித்துக் கொண்டு நின்றேன். அப்போது தற்செயலாய் சிறிய சக்கர வாகனத்தில் ரோந்து வந்த இளைஞன், அவை இன்னும் பழுக்கவில்லை என்று சொன்னான். அப்பாடா இது பல் பிரச்னையில்லை என்று தெரிந்து மகிழ்ச்சியுடன் கடந்து சென்றேன்.

        அடுத்து வந்தது திராட்சைத் தோட்டம். நான்கைந்து வகைகள் இருப்பதாக மேப் சொன்னது. அபிஷா  உள்ளே சென்று மறைந்திருந்த திராட்சைக் கொத்துகளை கிள்ளி வந்தாள்.

 பச்சை மற்றும் கறுப்பு நிறத்திராட்சைகள், லேசாக சாம்பல் பூத்து இருந்ததை, துடைத்துவிட்டு உண்டேன். விதை இல்லேன்னா இன்னும் நல்லாருக்கும் என நினைத்துக் கொண்டேன். இந்த விவசாய விஞ்ஞானிகள்  எப்படியெல்லாம் நம்மை சுகவாசிகளாக ஆக்கிவிட்டார்கள் பாருங்கள்.

        அதற்கடுத்த பகுதியில் வரிசை வரிசையாக காய்கறித்தோட்டம் இருந்தது. லாரன்சில் மட்டுமே காய்கறித்தோட்டம் உண்டு. வெள்ளை, பச்சை மற்றும் ஊதா நிற முட்டைக்கோஸ்கள், ராட்சத கத்தரிக்காய்கள், காலிஃபிளவர்கள், லேட்டூஸ்  மற்றும் பிராக்கோலி இருந்தன. இதில் கத்தரிக்காய் தவிர எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடலாம் என்றாலும், பிராக்கோலி மட்டும் கிள்ளிச்சாப்பிட்டேன்.

        அதன் பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த பீச் மரங்கள். விரைந்து சென்றால் மரத்தில் மருந்துக்குக் கூட ஒரு பழம் இல்லை. எல்லாமே உதிர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு குட்டை மரத்தின் அடியிலும் ஐம்பதுக்கும் மேல் கொட்டிக்கிடந்தன.

 என்னடா இது, இலையுதிர்க்காலம் என்றுதான் நினைத்தேன் இது பழமுதிர்க்காலம் என்று அப்போதுதான் தெரிந்தது. கீழே இருந்த பழங்களும், ஃபிரெஸ்ஸாக இருப்பது போல் தெரிந்து எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு விரைந்து வந்த ரூத், "பேசாம வாங்க அது வேணாம்" என்றாள். இந்த இருபது வருட மணவாழ்க்கையில், என் இல்லத்தில் நடப்பது மட்டுமின்றி, உள்ளத்தில் இருப்பதையும் கண்டு பிடித்து விடுகிறாள் என் மனைவி. விடுதலை வேட்கையில் என் தோள்கள் தினவெடுத்தாலும், “கனவோடு நிறுத்திக்கொள் கணவா”, என்பதைப்போல் என் மனைவி பார்க்க, ஒரு சிங்கம் ஆடாக மாறி பிராக்கோலி மேயச் சென்றது.

        பிராக்கோலி தோட்டத்தின் முடிவில் மக்காச்சோளத் தோட்டம் (Sweet Corn) இருந்தது. நன்கு விளைந்த ஒன்றிரண்டினை என் மனைவி சோகை நீக்கித்திர, கடித்தால் பால் இறங்கியது. வயிற்றில் திராட்சைச்சாறில் பிராக்கோலி மிதக்க, சோளச்சாறு இனிப்பாய் இறங்கிக் கலந்து வயிற்றை நிரப்பியது. மறுபுறம் புடுங்கினால்   என்ன செய்வது என்ற பயமும் அவ்வப்போது  வந்து சென்றது.

        மறுபகுதியில் ஏசியன் பேர் (Asian Pear) என்று சொல்லக்கூடிய நம்மூர் பேரிக்காய்கள் இருந்தன. தவ்விப்பார்த்தேன். ம்ஹூம் எட்டவில்லை. மறுபடியும் முயற்சி செய்ய குதிங்காலில் மளுக்கென்றது. "சீச்சி இந்தப்பழம் புளிக்கும்" என்று வந்துவிட்டேன்.

        அதன் பக்கத்தில் வகை வகையான தக்காளி, பீன்ஸ், நம்ம ஊர் கத்தரிக்காய், குடைமிளகாய், ஸ்குவாஷ், பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய் (பேர் தெரியலை) ஆகியவை இருந்தன.
        ஸ்ட்ராபெர்ரி சீசன் முடிந்துவிட, ராஸ்பெர்ரி இருந்தது. ஆனால் என்னைப்போன்ற நரிகள் வருமென்பதால், வேலி போட்டு வைத்திருந்தார்கள். விலை அதிகமல்லவா, செர்ரிப்பழங்களும் அப்படியே.
        கடந்துபோனால், இன்னும் பலவித ஆப்பிள்கள் இருந்தன. மனமிருந்தாலும் வயிற்றில் இடமில்லை. அந்த வகைகள் ரெட் டெலிசியஸ், ரெட் ஜானத்தன், கோல்டன் டெலிசியஸ் கேலா (Gala), எம்ப்பயர், ஃபியுஜி (Fuji), கிரானிஸ்மித் etc.

     ஒரு சுற்று முடித்து அழகிய தடாகத்திற்கு வந்து சேர்ந்தோம். அழகிய வெள்ளை அன்னங்களும் வாத்துகளும் மிதக்க, கரையில் சிறு சிறு கூண்டுகளில், கோழிகள், வான்கோழிகள், ஒரு மயில், ஆடுகள் ஆகியவை இருந்தன.

கரையிலே பெட்ஷீட்டை விரித்து, “வாங்க சாப்பிடலாம்” என்று சொன்னார்கள். கட்டுச்சோறின் மணம் நாசியைத் துளைத்தாலும், வயிறு கும்மென்று இருந்ததால் கம்மென்று இருந்துவிட்டேன்.

        குதிரை வண்டியில் ஒரு ரைட் போய்விட்டு, வாங்கிய காய்கறி பழங்களுக்கு பணம் செலுத்திவிட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டோம். சில நிமிடங்களில் மிளகாய் பஜ்ஜி சூடாக வந்து சேர்ந்தது. ஆஹா ஆஹாஹாஹாஹா.

Thursday, October 24, 2013

தமிழா தமிழா நாடும் உன் நாடே !!!!!!!!!!!!

பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்




        "பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்" என்ற தேவநேயப்பாவாணர் இயற்றிய அரிய புத்ததத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஆலயத்தின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் முனைவர் சுந்தரமணி லூயிஸ் சைமன் அவர்கள் கொடுத்தார்.
        "மொழி ஞாயிறு" என்ற பட்டம்பெற்ற தேவநேயப் பாவாணர் கி.பி.1902ல் சங்கரன் கோவிலில் பிறந்து 1981ல் மறைந்தவர். 35 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கும் இவரை "தனித்தமிழ் இயக்க"த்தின் தந்தை எனலாம். பல தமிழ் வார்த்தைகளின் மூலத்தையும் வேரையும் ஆராய்ந்து சொல்லகராதி அமைத்தவர். தமிழ், உலகின் மிகப்பழைய "இயல் மொழி" என்பதோடு "தொல்மொழி" என்று தன் ஆராய்ச்சியால் நிரூபித்தவர். அவர் எழுதிய "இசைக்கலம்பகம் " மற்றும் வெண்பாக்கள் அவருக்கு "செந்தமிழ்ச்செல்வர்" என்ற பட்டத்தை வாங்கித்தந்தது (1979 - தமிழ்நாடு அரசு)
        சென்னையிலுள்ள மாவட்ட தலைமை நூலகத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அந்தப்புத்தகத்தில்  நான் தெரிந்து கொண்ட வியக்க வைக்கும் உண்மைகள்.
இந்திய நாகரிகம் தமிழர் நாகரிகமே !
        வேத ஆரியர், மேலை ஆசியாவினின்று இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு.2000-1500. அவர்கள் ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளாய் இருந்தனர். அவருக்கு இலக்கியமோ, எழுத்தோ இல்லை. பேசிய மொழி கிரேக்க மொழிக்கு இணையாகவும், பழம் பாரசீகத்திற்கு நெருங்கியதாகவும் சொல்வளமற்று இருந்தது. இந்தியாவுக்கு வந்தபின்தான் அவர்கள் “இருக்கு” வேதத்தை படைத்தனர். அவ்வேத மொழி வட இந்திய பிராகிருதத்தையும் திராவிடத்தையும் தழுவியது.
        இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரோடு தொடர்பு கொண்டு பண்டைத்தமிழ் நூல்களையெல்லாம் மொழி பெயர்த்துக் கொண்டனர் அதோடு பண்டைத்தமிழ் நூல்களையும் வரலாற்றையும் அழித்ததும் அவர்களே.

தமிழர் தோற்றம்
        முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்கு முன்னரே தமிழ் தோன்றியது.    தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்கு முன். தமிழ் இலக்கணம் தோன்றியது கி.மு.10000 ஆண்டுகட்கு முன்.
தமிழர் நாகரிகம்
        கி.மு.3000 லேயே ஆடை நெய்து உலகத்தவர்க்கு ஏற்றுமதி செய்தவர் தமிழர். (Mohenjo - Daro and the Indus civilization by Sir John Marshal)
பொருள் இலக்கணம்
       தமிழன் பொருள் இலக்கணம் ஆரிய வருகைக்கு 8000 வருடங்கள் முற்பட்டது.
உதட்டுச்சாயம்
        உதட்டுக்குச் செஞ்சாயம் ஊட்டியது முதன்முதலில் தமிழ்ப்பெண்களே.
        இலவிதழ்ச் செவ்வாய் (சிலப்பதிகாரம் 14:136)
        கொவ்வைச் செவ்வாய் (திருவாசகம் 6:2)
        துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவகசிந்தாமணி-550)

பரிசம் (Dowry)
        மணமகன் அல்லது அவன் வீட்டார் மணமகளுக்கு பரிசம் கொடுப்பது பண்டைய தமிழர் வழக்கம்.மணமகள் மணமகனுக்கு பரிசும் கொடுப்பது பிற்காலத்தில் வந்த அநாகரிக மானங்கெட்ட ஆரியர் வழக்கம்.

இந்தி மொழியின் மூலம் தமிழ்
        வடநாட்டுப் பழந்திரவிடமாகிய திரிமொழியே பிராகிருதமென்றும் சூரசேனிப்பிராகிருத வழிவந்த சிதை மொழியே இந்தி என்பதை ஆதாரங்களுடனும் விளக்குகிறார் ஆசிரியர். பல சமஸ்கிருத சொற்களின் மூலமும் தமிழே என் விளக்குகிறார்.

சிவன் வந்த கதை
ஐந்திணைத் தெய்வங்கள்
        குறிஞ்சி - சேயோன்
        முல்லை - மாயோன்
        பாலை - காளி
        மருதம் - வேந்தன்
        நெய்தல் – வாரணன்

        சேயோன் என்றால்  சிவந்தவன் என்று பொருள். முருகன், வேலன் குமரன் என்ற பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் திரிபு. பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கி தந்தையும் மகனுமாக ஆக்கிவிட்டனர். சிவன் என்று ஆரியத்தெய்வம் எதுவுமில்லை.

தமிழில் இருந்த வந்த ஆங்கிலப் பெயர்கள்.
நாவாய் - Navy
சீலை - Sail
கட்டுமரம் - Catamaran
அரிசி - Rice
நங்கூரம்  - Anchor
இஞ்சி - Ginger
திப்பிலி - Pepper
பருத்திக்கொட்டை - Cotton
நாரத்தம் - Narange - Orange
தேக்கு - Teak
கோழிக்கோடு துணி - Calico
காசு - Cash
அம்மே - Mummy
அப்பா - Pappa
அரசன்/ராயன்/ராயலு/அரையன் - Royal

தமிழரின் வான நூல் திறமை (Astrology)
        ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாட்கிழமைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர் தமிழரே.
      
        பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்
        பாவாணர் தமிழ்க்களஞ்சியம்-26
        வெளியீடு -      தமிழ்மண் அறக்கட்டளை
                        பெரியார் குடில்
                        பி-11 குல்மோகர் குடியிருப்பு
                        35 செவாலிய சிவாஜி கணேசன் சாலை
                        தியாகராயர் நகர் சென்னை -600017.

                        www.tamilmann.in.