Thursday, August 6, 2015

ஷேவிங் செய்த திருவள்ளுவர் !!!!!!!!!!!!!!!

கடந்த வாரம் ஜூலை 25&26 தேதிகளில் மேரிலாண்டில் நடைபெற்ற 7ஆம் உலகத்தமிழ் ஒற்றுமை மாநாட்டில்  நடந்த பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசிய பேச்சை கீழே கொடுத்துள்ளேன்
பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும்  தமிழ் அறிஞர்களோடு 

தலைப்பு:தமிழ் இலக்கியங்கள் காட்டும் பண்பாடு இன்றைய வழிகாட்டுவதில் சமூகத்திற்கு - நடுநிலையே.
நடுவர் : பேராசிரியர் முனைவர் உலகநாயகி, தமிழ் துறைத்தலைவர் , ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை
நடுவர் பேராசிரியர் உலக நாயகி உள்ளிட்ட அவைக்கு என் பணிவான வணக்கம்.
என்னுடைய ஒரு பக்கம், இலக்கியங்களால் சமூகம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்ற மாயக்கனவில் மகிழ்ந்திருக்கும் மக்கள். இன்னொரு பக்கம் இலக்கியங்களை குற்றம் கூறியே பேர் வாங்கிவிடலாம் என்ற நக்கீர நினைப்பில் நனைந்து கொண்டிருக்கும் மக்கள்.
நான் இலக்கியங்களை குறை கூற வரவில்லை.
நான் பேச வந்திருப்பது இலக்கியங்கள் அப்படியே தான் இருக்கின்றன சிறப்பாகவே இருக்கின்றன. அதனால் சமூகத்திற்கு வளர்ச்சியும் இல்லை தளர்ச்சியும் இல்லை. ஏன்னா அத பயன்படுத்தினாத்தானே ?.
1981ஆம் ஆண்டு, அப்போதுதான் +2 முடித்திருக்கிறேன். நான் வாங்கின மார்க்குக்கு எனக்கு பிளாட் ஃபார்ம் சீட்டு கூட கிடைக்காது. ஆனால் என்னுடைய அப்பா எப்படியோ யாரைப்பார்த்தோ எனக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் BSc  சிறப்புக்கணிதம் வாங்கிவிட்டார். இந்தக் கணக்கோடு எனக்கு எப்போதும் பிணக்கு. இந்த சூத்திரம்னு சொன்னாவே எனக்கு வந்துரும், கொஞ்சம் பொறுமை, தப்பா எடுக்காதீங்க ஆத்திரம். எனக்கோ தமிழ் பயில ஆசை கன்னித்தமிழ் மேல் காதல் அதுவும் ஒருதலைக்காதல். அந்த ஆசையோடு கணிதத்திலிருந்து கன்னித்தமிழுக்கு மாறிவிடலாம் என்று நான் சென்று பார்த்து அப்போதைய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

“ஐயா ரொம்ப மகிழ்ச்சி, போய்க் கொஞ்சம் பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டு  முடிவெடுங்கள் என்று சொன்னார். அங்கே போய்ப் பார்த்த பாடத்திட்டங்களில் நன்னூல் சூத்திரம் என்று ஒன்று இருந்தது. எனக்குதான் சூத்திரம் என்றால் ஆத்திரம். ஆம் அதேதான் வந்ததால் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்துவிட்டேன். அப்புறம் தான் தெரிந்தது இலக்கியம் முழுவதும் ஒரே கணக்கு, நாலடியார், குறுந்தொகை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினொன் கீழ்க்கணக்கு.
அப்போது தமிழ் இலக்கிய மாணவர் ஒருவர் என்பின்னால் ஓடி வந்தார். “என்ன கணிதத்திலிருந்து தமிழ் படிக்க வருகிறீர்களா?”, என்றார். ஆம் என்ற போது என்னை ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு, "நண்பா இங்கே இலக்கியம் படிக்கும் முக்கால்வாசிப்பேர் இலக்கிய ஆர்வத்தால் வரவில்லை பாதிப்பேர் வேறு எதுவும் கிடைக்காமல் வந்திருக்கிறார்கள். மீதிப்பேர் ஆங்கிலம் வராததால் இங்கு வந்திருக்கிறார்கள். ஒரு வேளை நீங்கள் இங்கு மாறி வந்தால், எனக்கு அந்தக் கணக்கு சீட்டை வாங்கிக் கொடுங்கள்”, என்றார். அவர் போட்ட கணக்கு முற்றிலுமாக வேறகணக்கு. அது ஆனது தப்புக் கணக்கு.

இப்படி விருப்பமில்லாமல் தமிழ் இலக்கியம் படிக்க வருபவர்களால் தமிழ் எப்படி வளரும்? இவர்களே தமிழ் ஆசிரியர்களாகவும் ஆகிவிடுவதால் எப்படிவரும் இலக்கிய வளர்ச்சி, சமூக வளர்ச்சி? தமிழை தமிழ் என்று உச்சரிப்பவர்கள் எத்தனைபேர்? தாய்மொழி என்ன என்று கேட்டால் பாதிபேர் டேமில்  னு சொல்றாங்க. மீதிபேர் தமில்னு சொல்றாங்க.  பின்  தமிழ் தெரியுமா? என்றால் குஞ்சம் குஞ்சம்  தெரியும்னு சொல்றாங்க. அமெரிக்காவில் உள்ள தமிழர்களைச் சொல்லவில்லை, நம்ம தமிழ் நாட்டில் இருப்பவர்களைத்தான் சொல்கிறேன். பின்ன என்னதான் படிச்ச என்று கேட்டால் French, இந்தி, ஜெர்மனி என்று சொல்றாங்க. கேட்டா தமிழ் எடுத்தா Fail  ஆயிருவோம், மதிப்பெண் கிடைக்காதுன்னு சொல்றாங்க.
சென்னையில் காலை உணவு சாப்பிட்டாச்சானு கேட்டா இன்னாபா தமில்ல பேசு ஓ நாஷ்டாவை அல்லாம் துன்னாச்சுனு சொல்றாங்க.
தமிழ் இலக்கியம் எப்படி வளரும் ?.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”னு ஒரு பழமொழி.
நாலு என்றால் நாலடியார், இரண்டு என்றால் திருக்குறள். என்னுடைய பள்ளித் தமிழாசிரியர் இந்த இரண்டு அடி திருக்குறள் வரலைன்னா 2 அடி  போடுவார், இந்த நாலடியார் வாயில் வரலைன்னா நாலு அடிபோடுவார்.  எனவே கொஞ்சமாவது இவற்றைக் கற்றுக் கொண்டோம். இப்ப ஆசிரியர் நாலடி  போட்டால், நாலு சுவத்துக்குள்ள வச்சி பூட்டி ஒரு நாலு கம்பி எண்ணற நிலைமை வந்துரும். தமிழ் மேல் பற்றும் இல்லை பயமும் இல்லை.
காப்பியம் படிப்பானான்னு கேட்டா ஏதோ ஓப்பியம் அடித்த மாதிரி பார்க்கிறாய்ங்க. அதனால் இலக்கியம் பத்ரமாகத்தான் இருக்கிறது.
என் கூடப்படிச்ச ஒரு பயபுள்ள கேக்கிறான்  "ஏண்டா திருக்குறள்ள அறத்துப்பால், பொருட்பால் மட்டும் சொல்லித் தர்றாங்களே இந்த காமத்துப் பால் ஏன் சொல்லித்தர மாட்டேங்கிறாங்கன்னு கேக்கிறான்?" - எப்படி அய்யா இலக்கியம் வளரும்?
அப்புறம் எப்படி இலக்கியத்தால் சமூகம் வளரும்.
இன்னொருத்தன் சொல்றான், எனக்கு காப்பியத்துல விருப்பம் இல்லன்னு. ஏண்டான்னு கேட்டா, இப்ப பாரு சிலப்பதிகாரம் படிச்சவங்களைப் பாரு, கண்ணகியோடு கற்பைப் பாராட்டாம கோவலனையே ஃபாலோ பண்றாங்கன்னு சொன்னான். “கோவலனை follow  பண்றாங்களா எப்படிரான்னு:, கேட்டா, கண்ணுக்கு அழகாக கண்ணகி இருந்தாலும் ஒரு மாதவியை தேடி வச்சிக்கிறாங்களேன்னு சொல்றான்.அட ஆமா அவன் சொல்றது உண்மைதானே.
இன்னும் பெரும்பாலோர்க்கு இலக்கியம் கவிதைன்னா சினிமாப் பாட்டோடு நின்னுபோயிருது. அதனாலதான் பாடலாசிரியர்கள் கவிஞர்களைவிட ஃபேமஸ் ஆயிராங்க.
தமிழ் இனி மெல்லச் சாகிறாப்ல தெரியல, சீக்கிரம் செத்துருமோன்னு பயமா இருக்கு.
இலக்கிய காலத்திலிருந்து இன்னக்கி வரைக்கும் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் தொடர்ந்து வருது. ஒண்ணு சோமபானம். அதுக்குப் பெயர் இப்போ டாஸ்மார்க் 2-ஆவது காமபானம் இது முன்னோக்கிச் செல்லும் சமூகமாகத் தெரியவில்லை. பிற்போக்கு எண்ணங்களால் பின்னோக்கிச் செல்லும் சமூகமாகத்தான் தெரிகிறது.
இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளம் பேசுகிறான். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்தால் தெலுங்கு பேசுகிறான். ஆனால் தமிழன் மட்டும் தமிழ் பேசுவதில்லை. கேட்டால் படித்தவர்கள் தமிழ் பேசமாட்டார்களாம். என்ன கொடுமை இது சரவணா?
சமீபத்தில் இந்தியாவுக்குப் போயிருக்கும்போது என் நண்பன் குழந்தை, திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறது. பாராட்டிவிட்டு இதனை எழுதியவர் யார் என்று கேட்டேன். ஓ தெரியுமே திருவள்ளுவர்தானே என்று சொல்லியதோடு அவரை டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனா இப்ப அவர் தாடி மீசையெல்லாம் shaving செய்துவிட்டார்னு சொல்லுச்சு, அந்த Shaving செஞ்ச திருவள்ளுவர் வேறயாருமில்ல நம்ம சாலமன் பாப்பையாதான்.

இலக்கியங்களை நாம் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். அதனால் அவை நமக்கு எட்டுவதில்லை. இலக்கியங்களை பத்திரமான இடத்தில் வைத்துப் பூட்டி விட்டு சாவிகளைத் தொலைத்து விட்டோம். அதனை படிக்கவோ, அனுபவிக்கவோ நமக்கு ஆற்றலும் இல்லை, ஆர்வமும் இல்லை. எனவே தற்கால இலக்கியங்களால் நம் தமிழ்ச் சமூகத்திற்கு வளர்ச்சி எதுவுமில்லை என்று கூறி எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன் நன்றி வணக்கம்.
முற்றும் 

8 comments:

  1. Thanks for submitting your blog posts on http://www.chudachuda.com

    ReplyDelete
  2. நகைச்சுவை ததும்ப
    கருத்துகள் வழங்கினீர்கள்...!
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  3. //தமிழ் இனி மெல்லச் சாகும்னு பாரதி சொன்னான், அது மெல்லச் சாகிறாப்ல தெரியல, சீக்கிரம் செத்துருமோன்னு பயமா இருக்கு.//

    உண்மை தான்.

    உங்கள் தரப்பு வாதத்தை திறம்பட எடுத்துரைத்தீர் நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ் .

      Delete
  4. மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
    என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ?
    சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    என்றுதான் பாரதியார் சொல்லி இருக்கிறார். அவரெப்போது தமிழ் இனி மெல்லச் சாகுமென்று சொன்னார்?

    ReplyDelete
    Replies
    1. கருத்து கந்தசாமியின் கருத்து முற்றிலும் உண்மை .தவறுக்கு மன்னிக்கவும் .
      பாரதி சொன்ன அந்தப்பேதை இந்தப்பரதேசிதான் போலருக்கு .

      Delete