Thursday, September 5, 2019

நியூயார்க்கில் பூரான் !


Image result for பூரான்
இன்று காலையில் அதனைப் பார்த்துவிட்டேன். அதுவும் என் வீட்டில், அதுவும் என் படுக்கையறையில், அதுவும் படுக்கையறையில் உள்ள குளியலறையில்,
டேய் மேலே சொல்லு, அதுவும் அதுவும்னு சொல்லி கழுத்தறுக்கிற, இதுல ஃபிளாஷ்பேக் டெக்னிக் வேற நீயெல்லாம் எழுதோணும்  நாங்கெல்லாம்  படிக்கோணும்னு எங்க தலைவிதி”
 “என்னது இது கோயம்புத்தூரில் எனக்கு பெர்சனலா யாரையும் தெரியாதே. யாரெல்லாம் எங்கிருந்தெல்லாம் அட்டாக் பண்ணுவாய்ங்கன்னு தெரியலையே , சரி தொடருவோம்”
Image result for moth
Moth
நியூயார்க்கில் நாங்கள் வாழும் வாழ்க்கை, ஒன்று அதீத குளிர், 30,40ன்னு போகும் அதுக்கு முன்னால மைனஸ்னு போட மறந்துட்டேன். வெயில் காலத்தில் இந்த ஆண்டு 107, 108ன்னு போய் மண்டை காய்ஞ்சிறுச்சு .
எப்படா இந்த குளிர் முடியும்னு காத்திருந்து காத்திருந்து வெயில் வந்தவுடனே, அய்யய்யோ இதுக்கு குளிரே பரவாயில்லைன்னு  தோணுற மாதிரி இருக்கு. இதுல வெய்யில் காலம் வந்தவுடனே ஊர்ல இருக்குற எல்லா பூச்சிகளும், கொசுவும் படை யெடுத்து வந்துரும். பேர் தெரியாத பல பூச்சிகளும், ஊர்வன பறப்பனவும் இதுல அடக்கம். இத்தனைநாள் எங்கதான் இருந்துச்சுகளோ, வெயில் காலம்தானேன்னு ஒரு காத்தாட  ஜன்னலைத்திறக்க முடியாது, கதவைத்திறக்க முடியாது. எல்லாத்துலயும் கவனமா வலையடிச்சு  வச்சிட்டுத்தான் திறப்போம். அப்படியும் சில பூச்சிகளும், கொசுக்களும் உள்ளே வந்துறும், பழங்கள்ள கருப்பு நிறத்தில் சிறுசிறு பழக்கொசு வந்திரும் .பின்னாடி தோட்டம் வேற இருக்கிறதால சில புழுக்களும் பூச்சிகளும் இருக்கும்.
இதுல என் மகள்கள் இருக்காள்களே அய்யய்யோ சின்ன பூச்சியைப் பாத்தாக்கூட அழுது அமர்க்களப்  படுத்திடுவாள்க. இப்போ சமீபத்தில் நடந்ததைச் சொல்றேன்.
Image result for small fruit fly

ஜூலை 4ஐக் கொண்டாட நியூயார்க்கோட தலைநகரம் ஆல்பனிக்குப் போயிருந்தோம். என்ன குழம்புதா , நியூயார்க் சிட்டி வேற ,நியூயார்க் ஸ்டேட் வேற .நியூயார்க் ஸ்டேட்லதான்  நியூயார்க் சிட்டி  இருக்கு. சில இடங்களுக்கு மட்டும்தான் ஊர் பேரும்  ஸ்டேட் பேரும் ஒரே மாதிரி இருக்கும்.உதாரணத்திற்கு  கலிஃபோர்னியா மாநிலத்தில்  கலிஃபோர்னியா  என்ற பெயரில் ஊர் கிடையாது .நியூயார்க் ஸ்டேட்டோட  தலை நகர்தான் ஆல்பனி .இப்ப புரியுதா மக்களே ? 
ஒரு 3 மணி நேரம் டிரைவ். ராத்திரி ஒரு 10.30 மணிக்குப் போய் சேர்ந்தோம். பொண்ணுங்க பெரியவங்க ஆயிட்டாங்கன்னு அவளுக இரண்டு பேருக்கும் தனிரூம். எனக்கும் என் மனைவிக்கும் தனிரூம். செக் இன் பண்ணும்போது தெரிஞ்சது, எதிர்பார்த்தது போலவே இதுவும் குஜராத்தைச் சேர்ந்த மோடிக்குச் சொந்தக்காரங்க நடத்துற ஓட்டல். அதாங்க பட்டேல் வகையறா. ஒரு விதத்தில் ஒரு இந்தியன் நடத்துற ஓட்டல்னு பெருமையா இருந்துச்சு. ரூமுக்குப்போனா சரியா மெய்ன்டெய்ன் பண்ணாம இருந்துச்சு.  பெருமையா நினைச்ச நெனப்பு உடனே அசிங்க நினைப்பா ஆயிப்போச்சு.
என் மனைவி வேற "ஏங்க இங்க மூட்டைப்பூச்சி இருக்குமா?" என்றாள். ஏற்கனவே கடுப்பில் இருந்த நான் "அதெல்லாம் இருக்காது" என்றேன் மேலும் கடுப்புடன், "இந்த பெட்ஷிட்டெல்லாம் துவைச்சதா?" இது ரெண்டாவது கேள்வி. பேசாம இருந்தேன். "இதுக்குத்தான் பெட்ஷீட்டை எடுத்துட்டு வரலாம்னு சொன்னேன்" என முணு முணுத்தாள் "காரில் தலைகாணி வச்சிருக்கேன். எடுத்துட்டு வாங்க" என்றாள். நானும் கீழே போய் எங்க தலையணைகளை எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.. மணியைப் பார்த்தால் 11.30 ஆயிருச்சு. இதுக்கு மேலே வேற ரூம் போய்த் தேட முடியுமா?
டேய்ஸ் இன் எல்லா இடத்திலயும் நல்லா இருக்குமே. இந்த நாதாரி குஜராத்திக நல்ல ஓட்டலை வாங்கி நாசம் பண்ணிட்டாங்களேன்னு நினைச்சு கோவம் கோவமா வந்துச்சு. ஆனாலும் வெளியே காட்டிக்கல. நேரா என் பொண்ணுங்க ரூமுக்குப் போய் கதவைத்தட்டிக் கேட்டேன். வேற ரூமுக்கு போயிரலாமான்னு. “பரவாயில்ல டாடி இது ஓக்கே தான்”னு சொன்னாங்க. திரும்ப என் ரூமுக்கு வந்து ஒரு குளியில போட்டுட்டு  வந்து படுத்தேன். பெட்ஷீட் மேல ஒரு மாத் இருந்தது. என் மனைவுக்குத் தெரியாம அதை நசுக்கித்தள்ளிவிட்டேன். என் மனைவி ராத்திரி பூராத் தூங்கல. அது எனக்கு எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா? ஏன்னா நானும் தூங்கல.   ஆனா இரண்டு பேருமே வெளியே காட்டிக்கல, இப்ப தெரியுதுங்களா ஏன் என் மனைவி எங்கேயுமே பயணம் வர்றதில்லன்னு. அவளுக்கு விடுதி பெட்ல படுக்கிறது, பாத்ரூம் போறதெல்லாம் வேற யாரோ ஒருவர் பயன்படுத்தியத யூஸ் பன்ற மாதிரி ஒரு அருவெறுப்பு. பிறகு எப்படி பயணம் போக முடியும். காலைல அவளுக்கு நல்ல ஜுரம். அவளை ரூமில் விட்டுட்டு நாங்க மூணு பெரும் குளிச்சி ரெடியாகி வெளியே கிளம்பினோம். அன்னைக்குத்தான் ஜூலை 4, சுதந்திர தினம். இரவு வாண வேடிக்கையெல்லாம் அமர்க்களமா இருக்கும். நான் வண்டியை ஓட்ட, என் சின்னப்பெண் வழக்கம்போல என் பக்கத்திலயும், பெரிய பெண் பின்னாலையும் உட்கார்ந்திருந்தாங்க. திடிர்னு பின்னாலிருந்த பெரிய பெண் அலற ,நான் திரும்பிப் பார்க்க கார் சிறிது தடுமாறியது. அலறல் அதிகமாக நான் அவசரமாக காரை ஓரங்கட்டி குதித்துப்பின்னால் சென்று காரை சடக்கென்று திறந்தேன். வெளியே பாய்ந்து வந்த பெரியவள் மேலேயும் கீழேயும் குதிக்க, நானும் என் சின்னப்பொண்ணும் என்ன என்ன ஆச்சுன்னு நெனைச்சு திகைச்சுப் போனோம். அதற்குள் பெரியவள் கண்களிலிருந்து கண்ணீர் தண்ணீராய் வடிய உதடுகள் துடித்து அழுதாள்.
வேற ஒண்ணுமில்லங்க, காரின் பின்புறத்தில் ஒரு சிறிய  மிகச்சிறிய வண்டு வந்துருச்சு, அதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். பின்புறத்தில் அந்த வண்டு மயங்கி இருந்தது. அதனை எடுத்து வெளியே விட்டபின் தான் அவளுடைய ஆர்ப்பாட்டம் அடங்குச்சு. இந்தக் கொடுமையை நான் எங்க போய்ச் சொல்ல. நல்லவேளை அவ காரை ஓட்டலை இல்லேன்னா நாங்க மூணுபேரும் ஆக்சிடெண்ட்ல பரலோகம் போயிருப்போம். அதுக்கப்புறம், பெரியவ அவ முடி, முதுகு எல்லாத்தையும் செக்கப் செய்யச்சொல்லி அப்புறம்தான் காரில் ஏறினாள்.
இதுல நான் வீட்டுக்குள்ள பூரானைப் பார்த்தேன்னு தெரிஞ்சது, இவ வீட்டைக் காலி பண்ணிட்டு போயிடுவா. பூரானை பத்தி கூகுள் பண்ணேன். அவை ரொம்பவும் சாதுவானவை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் பிரச்சனையே இல்லை. அப்படியே கடிச்சாலும் ஒரு 48 மணிநேரத்திற்கு சிவப்புத்தடிப்பு இருந்து அப்புறம் சரியாப்போயிரும் உயிருக்கு ஆபத்து கிடையாது . பூரான் வீட்டுத்தோட்டத்தில் இருந்தாலும் நல்லதுதான்.  பூச்சிகள், மாத்களை அது பிடிச்சுச் சாப்பிடும்னு போட்டிருந்துச்சு.
ஆனாலும் அதப்பாத்ததிலிருந்து எனக்கு உடம்புல ஏதோ ஊர்றமாதிரியே இருந்துச்சு, அதோட எனக்கு கொசு கடிச்சாலே பசு கடிச்சமாதிரி வீங்கிறும்.
பல்லு விளக்கின கையோடு, பாத்ரூமை லேசா திறந்துவச்சிட்டு, லைட்டை ஆஃப் செய்திட்டு கொட்ட கொட்ட முளிச்சிருந்தேன். நல்லவேளை வீட்டில எல்லாரும் ஏற்கனவே வேலைகளுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அரை மணி நேரத்துல ஒரு தடவை வெளியே வந்துச்சு, நான் ஓடிப்போய் அடிக்கறதுக்குள்ள ஓடிப்போய் பதுங்கிருச்சு. இங்கதான் உட்கார்ந்திருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல. எப்ப வெளியே வரும்னு தெரியல ஆஃபிசில் ஏகப்பட்ட வேலையிருக்கு . ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்களேன்.
- முற்றும்.

10 comments:

 1. இதெல்லாம் ஒரு பிரச்சனையா? பூரான் வூட்டுக்குள்ள வந்தாநமக்கு நல்ல காலம் வர போது, நிறைய தங்க நகை வாங்க போறோம், ஸ்டாக் மார்க்கெட்டில் கொள்ளை லாபம் வரும்னு அம்மணியிடம்ஏதாவது அடிச்சி விடுங்க.

  ReplyDelete
  Replies
  1. இது மனைவி பிரச்சனை இல்லை தம்பி. மனைவின்னா அப்படியே விட்டிருப்பேன் .இது மகள் பிரச்னை.

   Delete
  2. அப்ப நல்ல மருமகன் வருவார் என்று சொல்லி பாருங்க.......ஹீஹீ

   Delete
  3. ஏற்கனவே நம்மை வியர்ட் கய் னு சொல்றாளுக .இதை சொன்னா கன்பார்ம் பண்ணிருவாளுக .நல்ல யோசனை சொல்லுவீங்கன்னு பார்த்தா ?

   Delete
 2. உங்க வூட்டு பொண்ணுக மாதிரிதான் எங்க வீட்டு பொண்ணுங்களும்.... இந்த பூச்சிகள் இருக்கிறவரைதான் நாம ஹீரோவாக வீட்டில் இருக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. நூத்துக்கு நூறு உண்மை , டாடி இங்க பூச்சின்னு கூப்பிடும்போது , வர்ற கெத்தே தனி .

   Delete
 3. அப்புறம் இந்த குஜராத்திகளை குறை சொல்லுகிறமாதிரி மோடியை இடிச்சுகாட்டுற மாதிரி இருக்கிறதே... பார்த்து அடிக்கடி ஊர் பக்கம் போறவங்க் நீங்க பார்த்து ஜாக்கிரதையாக எழுதுங்க....

  ReplyDelete
  Replies
  1. அட இது உங்க கண்ணுல படலேனாதான் ஆச்சரியம் மதுரைத்தமிழன்

   Delete
 4. பூரான் அதுவும் குட்டிப் பூரான் காதுக்குள்ள போயிட்டா?  அந்த பயம் உண்டு எனக்கு!

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ காதுக்குள்ளே வேற போகுமா ?என் தூக்கத்தை கெடுத்தீட்டீங்களே ஸ்ரீராம்

   Delete