Thursday, August 29, 2019

கண்ணதாசனின் மோசமான வரிகள் !


Image result for வான் மேகங்களே

வான் மேகங்களே !
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 43

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்

1979ல் வெளிவந்த பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த புகழ்பெற்ற டூயட் பாடல் “வான் மேகங்களே”.
முதலில் பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னணி:

காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் ஒரே சமயத்தில் காதல் தோன்றி, இருவருக்கும் பூரண சம்மதம் என்ற நிலையில் காதலர்களுக்கு வரும் காதல் கனவில் தேவதைகள் புடை சூழ பாடப்படும் பாடலிது.

இசையமைப்பு:

எந்த சந்தேகமில்லாமல் இளையராஜாவின் பாடல் என்று சொல்லக்கூடிய  மெலடியுள்ள பாடல் இது. அவருடைய சிக்நேச்சர் இசையமைப்பை பாடல் முழுதும் பார்க்கலாம். கிட்டார், வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, வீணை, நாதஸ்வரம், டிரம்ஸ், தவில் மற்றும் தபேலா ஆகிய இசைக்கருவிகள்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாடலின் ப்ரிலூடாக பிசிக்காட்டோ இசையுடன் துவங்கி புல்லாங்குழல், வீணையோடும் அதன்பின் மணியோசையோடும் இசைத்து முடிக்க "வான் மேகங்களே" என்று பெண் குரலுடன் பாடல் ஆரம்பிக்கிறது. குரலுடனும், இசையுடனும் தாளம் சேர்க்க தபேலா இணைந்து கொள்ள பாடல் நம்மை ஆட்கொள்கிறது. பெண் குரல் முடிந்தவுடன் தாளத்தோடு கைகள் இரண்டு முறை தட்டப்பட, "வான் மேகங்களே" என்று ஆண் குரலில் பாடலின் பல்லவி ஆரம்பிக்கிறது. BGM இன்ட்டர்லூடாக மீண்டும் வீணை வயலின் குழுமம், புல்லாங்குழல், தபேலா மூலம் மெல்லிசை இன்னிசையாக ஒலித்து முடிக்க "பாலிலே பழம் விழுந்து" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. இடையில் குயில்  கூவ குயிலோடு இணைந்து பெண் கூவ இந்த முழுச்சரணமும் பெண்குரலில் பாடி முடிகிறது. வயலின் குழுமம், வீணை, பிசிக்காட்டோ இசையுடன் இரண்டாவது BGM  முடிய இப்போது ஆண் குரலில் "தென்றலே ஆசை கொண்டு" என்று இரண்டாவது சரணம் ஆரம்பித்து முழுவதும் ஆண்குரலில் வந்து முடிகிறது. பாட்டு முடியப்போகிறதே என்ற கவலை வரும் போது வழக்கத்திற்கு மாறாக மூன்றாவது சரணமொன்றும் இருக்கிறது. 
மூன்றாவது BGM ல் மணியோசை, நாதஸ்வரம், தவில் போன்ற கல்யாண மங்கல இசை முழங்க "பள்ளியில் பாடம் சொல்லி" என்று மறுபடியும் பெண்குரலில் மூன்றாவது  சரணம் ஆரம்பிக்க, இப்போது இரண்டாவது வரியில் ஆண்குரலும் மாற்றி மாற்றி ஒலிக்க பாடல் இனிதே நிறைவடைகிறது. 

பாடலின் வரிகள்:

வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
வான மேகங்களே

பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா (2)
பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும்  நேரம் கண்டேன்
வான் மேகங்களே ...

தென்றலே  ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா (2)
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்
வான் மேகங்களே ....

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசையை நீ கண்ணே
தா தன்னன்னா
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ?
வான் மேகங்களே ....

பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். மிகவும் சாதாரண வரிகள்தான். கண்ணதாசனின் கவிதை வரிகள் என்று சொல்லுமளவிற்கு சிறப்பில்லை. ஆனால் மெட்டுக்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றன. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் எந்த கனெசஷனும் இல்லை உதாரணத்திற்கு, “தென்றலே ஆசை கொண்டு, “தோகையை கலந்ததம்மா”, என்ற வரிகளுக்கும் அதன் அடுத்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . பாடல் முழுவதுமே இப்படித்தான் அடுத்தடுத்த வரிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. கடைசி வரியில் "பள்ளியின் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்" என்ற வரியில் கண்ணதாசன் லேசாக எட்டிப்பார்க்கிறார். ஏனென்றால் நாயகன் ஒரு பள்ளிக் கூட ஆசிரியர். நாயகி இப்படிச் சொல்லும்போது அதில் இரண்டு அர்த்தங்கள் வருகின்றன. பள்ளி என்றால் படுக்கையறையென்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்கடுத்த வரியும் சம்பந்தமில்லை. அதோடு டான் டன்  டன்  டான் என்ற மணியோசைக்குப்பின் "சங்கின் ஓசை கேட்கும் நேரம்" என்று எந்தச் சங்கைச் சொல்கிறார் என்றும் விளங்கவில்லை. ஒரு வேளை இந்த வரிகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமென்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பாடியவர்கள்:
Ilayaraja with Malaysia Vasudevan


பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி என்ற ஈடில்லாத இரு அற்புதக் குரல்கள். இருவர் குரல்களிலும் சாந்தமும், மகிழ்ச்சியும், பாசமும், காதலும் ஒருங்கே ஒலிக்கின்றன. ஒவ்வொரு சரணத்தின் முதல் வரியும் திரும்ப வரும்போது வரும் அனுக்கங்கள் அத்தனை  அழகு, அத்தனை நளினம். இருவரும் மிக இளமையாக  இருந்தபோது பாடிய குரல்கள் என்பதால் தேன் சொட்டுகிறது.
Image result for malaysia vasudevan with Janaki  old photo

- இளையராஜாவின் ஆகச்சிறந்த எழுபதுகளின் பாடல்களில் இந்தப் பாடல் மிக முக்கியமான ஒன்று. இசையும் குரலும் வரிகளை கடந்து ஒலிக்கின்றது.

தொடரும்


5 comments:

  1. பாடல் முடியப் போகிறதே என்கிற கவலை வரும்போது...

    ஆமாம்.. சில பாடல்கள் அப்படி இனிமையாக இருக்கும். இதுவும் அந்த ரகம்தான். இந்தப் படத்தில் குங்குமம், இதயம் என்று வாராந்திர புத்தகங்களை வைத்து வரும் வசனம் அந்தக் காலத்தில் பிரபலம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம், இந்தப்படத்திற்கு அப்புறம் இதயம் குங்குமம் ஆகிய இதழ்கள் அதிகம் விற்க ஆரம்பித்தன .

      Delete
  2. என்ன இப்படி பிய்த்து பிய்த்து போடுகிறீர்கள் - வரிகளை...! யம்மாடி...!!!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ எனக்குத்தெரிந்த வகையில் -------, நன்றி தனபாலன்.

      Delete
  3. சங்கின் ஓசைக்குப் பதிலாக நெஞ்சின் ஓசை என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete