Monday, September 18, 2017

இலங்கைக்கு இந்தியா கொடுத்த புத்தர் சிலை !!!!!!

  இலங்கையில் பரதேசி -23
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/09/blog-post_11.html
Related image
Ulpenge Queen's Bathing place
காவல்காரன் என்ற போலீஸ்காரன் என்ற செக்யூரிட்டி, கிட்ட வந்து அங்கிருந்த போர்டைக் காண்பித்தான். (No trespassing) நோ டிரெஸ்பாஸிங், பாதுகாக்கப்பட்ட பகுதி என்று எழுதியிருந்தது. மராமத்து வேலைகள் நடப்பதால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று சொன்னான்.
அதனைப்பற்றி மேலும் தெரிய வந்த விஷயமானது, இந்த வளாகத்தை ஆக்ரமித்த பிரிட்டிஷ்காரர்கள் இந்தப்பகுதியையும் எடுத்துக் கொண்டு அதனை நூலகமாக மாற்றிவிட்டார்களாம். ரசனை கெட்டவர்கள். சுதந்திரம் வாங்கியபின் இந்தப்பகுதி இந்தக் கோவிலின் போலீஸ் அவுட் போஸ்ட்டாக செயல்பட்டதாம். ஆனால் இப்போது சிறிது சிதிலமடைந்து மராமத்துப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனை அமைத்த விக்ரமராஜசிங்கே நல்ல ரசனைக்காரன்தான். இயற்கையையும் செயற்கையையும் இணைத்து பொதுவான ஏரியில் மறைவான குளிக்குமிடத்தை அமைத்த அவனை உளமாற பாராட்டினேன். சில சமயங்களில் ராணிகளுடன் ராஜாக்களும் ஜலக்கிரீடைக்காக வருவார்களோ என்றும் நினைக்கத் தோன்றியது.

Under Repair

மறுபடியும் சளசளவென்று அதே சத்தம் கேட்க, காவல்காரனையும் மீறி ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தேன். அங்கே தெள்ளத் தெளிவான ஏரி நீரில் சிறிதும் பெரிதுமாய் ஒரு மீன் கூட்டம்  தண்ணீரைக் களைந்து கொண்டும் துள்ளிக் கொண்டும் சளக்புளக் என்று நீந்திக்கொண்டிருந்தன. அது என்ன மீன் என்று காவலனைக் கேட்க அவன் முறைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்து விட்டான்.

மீன் கூட்டம்

உடனே விரிந்த என் கற்பனைகள் ராணியும் தோழிகள் புடை சூழ மீன்களுக்குப் போட்டியென நீந்தி விளையாடி நீராடி மகிழ்ந்த காட்சிகள். அப்படியே மறுபுறம் போனால் கலோனியல் பில்டிங் என்பதை பார்த்தவுடனே தெரிந்தது. ஒரு மாபெரும் சிலை ஒன்று இருந்தது. அது ஒரு புத்த பிட்சுவின் சிலை. அவர் பெயர்  அமோகவஜ்ர தேரோ  . 

அமோகவஜ்ர தேரோ

இலங்கை பிரிட்டிஷ்  ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டபோது இங்குதான் அதன் கவர்னர் தங்கியிருந்தாராம். கண்டியின் சீதோஷ்ணம் மலையக குளிரிச்சியினைக் கொண்டதால் வெள்ளைக் காரர்களுக்கு இது மிகவும் பிடித்த இடம். இந்த பில்டிங்  சர்.ஜேம்ஸ் லாங்டன்  என்பவரால் 1880-ல்  ஆண்டு கட்டப்பட்டது. பல கவர்னர்கள் இங்கே தங்கியிருந்தனர். அந்த இடம் இப்போதும் பளபளவென்று இருந்தது. ஒரு புறம் அலுவலகம் இருந்ததால் அனுமதியில்லை. மறுபுறம் ஒரு சிறிய மியூசியமும் விற்பனை இடமும் இருந்தன.


அங்கிருந்து கீழே   படிகளில் இறங்கினால் அங்கு ஒரு மாபெரும் புத்தர்சிலை ஒன்று இருந்தது. கிட்டப்போய்ப் பார்த்தால் அது இந்தியாவிலிருந்து பரிசாக வழங்கப்பட்ட ஒன்று என்பது தெரிந்தது. கீழே இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டு இருந்தது.

அதனைக் கடந்து மறுபுறம் சிறிது கூட்டமாய் இருந்தது. அது என்னவென்று கிட்டப்போய்ப் பார்த்தால் ஒரு பெரிய யானையை பாடம் செய்து வைத்திருந்தார்கள். 

அது எல்லோருக்கும் பிரியமான கோயில் யானையாம் . அதன் பெயர் மற்றும் வரலாறையும் அங்கே எழுதி வைத்திருந்தார்கள்.
British Governor's palace 

கோவிலின் மறுபுறம் கண்டி பிராவின்சின் கவர்னர் மாளிகை இருக்கிறது. உள்ளே செல்ல அனுமதியில்லை. மறுபுறம் கோவில் வளாகத்தை ஒட்டி ஒரு பழைய பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும் இருந்தது. இப்படி பல அதிசய அற்புதங்களைக் கொண்ட 'தலதா மாளிகை' பலவேறு வரலாறையும், கால மாற்றங்களையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

Kandy Governor's Residense

ஒவ்வொரு வருடமும் ஜூலை ஆகஸ்ட்டில் பெரிய திருவிழா ஒன்று நடக்குமாம். அதன் பெயர் "கண்டி ஈசலா பிரஹரா (The Kandy Esala Perahera). இந்த விழாவின் சிறப்பாக ஒரு பெரிய ஊர்வலம் நடக்குமாம். பிரஹரா என்றால் ஊர்வலம் என்று அர்த்தம். இது புனிதப்பல்லுக்கு  மரியாதை செய்யும் விதமாக நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் இலங்கையின் பாரம்பரிய நடனங்களான தீ நாட்டியம், சாட்டை நாட்டியம் போன்ற பல்வேறு கலாச்சார நடனங்கள் நடத்தப்படும். இவ்வூர்வலத்தில் யானைகள் அழகான உடைகளால் அலங்கரிக்கப்பட்டு மகாவெளி ஆற்றங்கரை வரை போகுமாம்.


கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட (நன்றாக கவனிக்கவும் கி.பி. அல்ல கி.மு) முதலில் மழை வரம் வேண்டி நடத்தப்பட்டது. ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து புனிதப்பல் இலங்கைக்கு வந்த போது இதே  ஊர்வலம் புனிதப்பல் ஊர்வலமாக மாறிவிட்டதாம்.இப்போது நடக்கும் ஊர்வலத்தை 1747 முதல் 1781 வரை அரசாண்ட கண்டியின் அரசன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே ஆரம்பித்து வைத்திருக்கிறான். 1815ல் பிரிட்டிஷாரின் பிடிக்கு வந்த பின், அவர்கள் புனிதப்பல்லையும், விழாவையும் புத்த மகா சங்கத்திடம் ஒப்படைத்து விட்டனர். இந்த ஊர்வலத்தில் கோயில் யானையின் அம்பாரியில் புனிதப்பல் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
போதும் போதுமென பார்த்து முடித்து, வெளியே வந்து அம்ரியைத் தேடிக் கண்டுபிடித்தேன். “சார் இவ்வளவு நேரமா என்ன செய்தீங்க உள்ளே”, என்று கேட்டான். ஹிஹி என்று சிரித்துவிட்டு "கொழுப்பிற்குத் திரும்பலாம்' என்றேன்.
மலைப்பயணத்தை இனிதே முடித்து கீழிறங்கினோம். சீரான வேகத்தில் காரை செலுத்தச் சொன்னேன். போகிற வழியில் ஒரு ஊரில் அங்கேயே விளைந்த முந்திரிப்பருப்புகள் கிடைத்தன. சென்னைக்கும் மதுரைக்கும் செல்லப் போவதால் சில பாக்கெட்டுகளை வாங்கி வைத்துவிட்டு ஒன்றைப்பிரித்து சாப்பிட்டோம். நல்ல விளைந்த பெரிய சைசில் இருந்த  முந்திரிப் பருப்புகள் பதமாக வறுக்கப்பட்டு சிறிதே உப்புத்தூவி இருந்தது. அந்த மாதிரி ஒரு மொறுமொறுப்பான முந்திரிப் பருப்புகளை நான் அதற்கு முன்பு சாப்பிட்டதே இல்லை.
ஒரு மூன்று மணி நேரப்பயணத்தில் கொழும்பு வந்து சேர்ந்தோம். மணி பத்தாகியிருந்தது. நாளை எங்கே என்றேன். நாளை காலேவுக்குப் போகிறோம் என்றான்.
அங்கே என்ன இருக்கிறது?
அங்குதான் டச்சுக்காரர்களின் கோட்டை இருக்கிறது. அது தவிர கடலில் சென்று கோரல்களைப் பார்க்கலாம் என்றான். அதனைப்பற்றி நினைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப்போனேன்.

தொடரும்

4 comments:

 1. Dear Pardeshi Sir,
  Only three photos are getting downloaded and other photos are not downloading. I am collecting the entire series of articles. Can you do something?
  Yours faithfully,
  P.Kandaswamy

  ReplyDelete
  Replies
  1. Dear Kanthasamy,
   All these photographs except the first one were taken by me.I am able to open all of them.
   Pls change your browser settings or give some more time to download.
   It could be your slower internet as well.

   Delete
  2. I am having internet speed of 60 mbps. Settings are OK. The problem is not with your blog alone. It is with all blogs. Who is to be blamed? Google!

   Delete
  3. Its working perfect for me.I do not know the issue.

   Delete