Monday, September 11, 2017

அந்தப்புர ராணிகளின் அழகிய குளிக்கும் இடம் !!!!!!

இலங்கையில் பரதேசி -22
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/09/blog-post.html

Image result for royal palace of kandy
கண்டி அரண்மனை 
இந்தத் தாக்குதலில் நன்மையும் பிறந்தது என்று சொன்னேன் அல்லவா.  அதனை இங்கே முதலில் சொல்லி விடுகிறேன். இலங்கையில் சிற்பத்தொழில் கிட்டத்தட்ட அழிவு நிலையில் இருந்தது, கிராமங்களில் உள்ள ஒரு சில குடும்பங்களே இந்தத் தொழிலில் இருந்தனர்.  அவர்களும்  வறுமையில் வாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் இந்தத் தாக்குதலால் பல சிற்பங்கள் அழிந்து போனதால் அவர்களுக்கும் மீண்டும் வேலை கிடைத்தது.  அழிந்தும் மறந்தும்போன அவர்கள் தொழில் அவர்களுக்கு மீண்டும் கிடைத்தது அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டானது.
அதோடு கோவிலின் உட்சுவரில் சில விரிசல்களைச் சரி செய்யும்போது உள்ளே மறைந்திருந்த கீர்த்திஸ்ரீ ராஜசின்ஹா காலத்து ஓவியங்கள் கிடைக்கப்பெற்றன.
இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. தாங்கள் செய்யவில்லை என்று மறுத்தது.ஆனால் மக்கென்சி என்ற ஆய்வு நிறுவனம் தன்னுடைய சர்வே மூலம் இது விடுதலைப்புலிகளின்  திட்டம்தான் என்பதை நிரூபித்ததோடு, தமிழ்ச் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக கலவரங்களைத் தூண்டுவதே இதன் நோக்கம் என்று நிரூபித்தது. நல்ல காலமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
ராஜீவ் கொலை, தலதா மாளிகை தாக்குதல் ஆகியவற்றால் விடுதலைப்புலிகளுக்கு அப்போதிருந்து இறங்குமுகம் ஆரம்பித்தது என்று சொல்லலாம். அதோடு இந்திய மற்றும் வெளிநாட்டு ஆதரவுகளையும் அவர்கள் இழந்து போனார்கள்.
             சரி வாருங்கள் வளாகத்திற்குள் இருக்கும் மற்ற கட்டடங்களைப் பார்த்துவிடலாம்.
மண்டபம் முன் பரதேசி 

அந்த வளாகம் மாலை மஞ்சள் வெயிலில் தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. முதலில் நான் பார்த்த கட்டிடம் கண்டிராஜாக்கள் தங்கியிருந்த அரண்மனை. இதுவரை நான் பார்த்த அரண்மனைகளிலேயே மிகவும் சுமாரான அரண்மனை இதுதான். எளிய நீளமான கட்டிடம், சில அறைகளுக்குச் சென்று பார்த்தேன். பிரமாத வேலைப்பாடுகள்  ஒன்றுமில்லை.  ஒருவேளை கோவிலுக்கு அதிகப்பணத்தை செலவழித்துவிட்டு தாங்கள் எளிய முறையில் வாழ நினைத்திருக்கலாம். அல்லது எல்லாப் பணமும் பெரும்பாலும் போருக்கே  செலவு செய்யப்பட்டிருக்கலாம். அல்லது அவர்கள் வாழ்ந்த காலத்தில் சிறப்பாக இருந்திருக்கலாம். கம்போலாவைச் சேர்ந்த மன்னன் மூன்றாம் விக்ரமபாகு முதன்முதலில் (1356-1374) இங்கு அரண்மனையைக் கட்டினானாம். அதன்பின் கண்டி மன்னன் (1469 முதல் 1511 வரை ஆண்ட) சேனா சம்மத விக்கிரமபாகு இங்கு விஸ்தாரமாய் அரண்மனையைக் கட்டி பல வேலைப்பாடுகளைச் செய்தானாம்.
அரண்மனை


இந்த அரண்மனை மஹா வசாலா என்றழைக்கப்படுகிறது. இந்தப்பெயர் பொலனருவா காலத்திலிருந்தே இப்படித்தான் அழைக்கப்பட்டிருக்கிறது. "மாளிகவா" அல்லது மாளிகை என்றும் சொல்லுகிறார்கள். இப்போதிருக்கிற கட்டிடம் முதலாவது விமலதர்மசூர்யாவால் கட்டப்பட்டது.
 பிரிட்டிஷார் கைப்பற்றியபின் இது அவர்களின் அலுவலமாக செயல்படத்துவங்கியது. கண்டியின் முதல் பேரனட் சர் ஜான் டோய்லி  முதன்முதலில் இதனைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தப் பதவி வகித்த பலர் இங்கு தங்கியிருந்தார்கள். இப்போது இது மியூசியமாகி இருக்கிறது.   
Related image
கண்டி தர்பார் மண்டபம்
அதன்பிறகு என் கண்ணில்  பட்டது ஒரு பெரிய கூரைக்கட்டிடம். நான்கு புறமும் திறந்த வெளியாக இருந்த அந்த மாபெரும் மண்டபத்தின் அருகில் சென்றேன். அதுதான் தர்பார் மண்டபம் என்று சொன்னார்கள். இப்படியா வெட்டவெளியில் பாதுகாப்பில்லாமல் இருக்குமென ஆச்சரியமாய் இருந்தது. மேற்கூரை உட்பட முழுவதும் மரத்தால் அமைக்கப்பட்ட மண்டபம். “மகுல் மடுவா” என்றழைக்கப்படும் இந்த மண்டபத்தை மன்னன் விக்ரம ராஜசின்ஹா கட்டியிருக்கிறான். ஸ்ரீ ராஜாதி ராஜசின்ஹா 1783ல் இதைக் கட்டிய போது 58 அடி நீளமும் 36அடி அகலமும் கொண்டதாக இது இருந்ததாம். வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்டு 1872ல் வரும்போது இது புதுப்பிக்கப்பட்டு 36 அடி என்பது 67 அடியாக நீட்டப்பட்டிருக்கிறது.  இந்த தர்பார் மண்டபத்தின் மரத்தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன.
Related image

பின்னர் அது பிராதுகளை தீர்த்துவைக்கும் கச்சேரியாகவும், அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டாகவும் செயல்பட்டிருக்கிறது. இப்போது அரசு விழாக்கள் இங்கு நடைபெறுகிறதாம்.
மறுபுறம் ஒரு பழைய கட்டிடம் தனியாக இருந்தது. சதுர வடிவில் கண்டியின்  கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட இந்த இடம் தங்கக்கூடமாம். கண்டி மன்னர்கள் காலத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்த இடத்தில்தான் தங்க ஆசாரிகள் தங்கி இருந்தார்களாம். செங்கடகலா அரசு ஆட்சியைப் பிடித்ததில்  இருந்தே  இந்த இடம் கட்டப்பட்டு வழிவழியாக வந்த மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு வந்ததாம். இந்த தங்க ஆசாரிகள் மன்னருக்கு மட்டுமே வேலை செய்வார்களாம். அரசுப்பணியாளர்கள் போல அரசரின் பணியாளர்கள். இவர்களுடைய முக்கிய வேலை தங்கக் கிரீடம் செய்வது, மன்னருக்குத் தேவையான வாள், குறுங்கத்தி போன்ற தங்க பாதுகாப்புக்கருவிகள் செய்வது ஆகியவை.  பட்டத்து வாள் என்று சொல்வார்கள். வழிவழியாக வந்த கிரீடங்கள் தவிர, ஒவ்வொரு மன்னருக்கென்றும் தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட அளவில் தனிப்பட்ட டிசைனில் கிரீடம் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த தங்க ஆசாரிகளின் பணிக்கூடத்தின் பின்னே அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தங்குமிடங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. நான் போன சமயம் பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்தக் கிரீடத்தை நான் கொழும்பு மியூசியத்தில் பார்த்தேன். அதனைப் பின்னர் சொல்கிறேன். ஒவ்வொரு இடம் செல்லும் போதும், அந்தக் காலத்தில் அது எப்படி இருந்திருக்கும் எனக்கற்பனை செய்து பார்த்தது.
அதற்கு மறுபுறம் ராணிகள் குளிக்குமிடம் இருக்கிறது என்று சொன்னதை ஒட்டி அதனை நோக்கி நகர்ந்தேன்.
"டேய் பரதேசி அதைச் சொல்றா முதல, ஏதாவது ராணி குளிக்கிறதா பாத்தியா"
"வந்திட்டியா மகேந்திரன், இந்த மாதிரி விஷயம்னா சம்மன் இல்லாம ஆஜராயிருவியே".
"அத விடு பாத்தியா பாக்கலியா"
"ராணிகள் குளிக்கிறத பாத்தா, வெட்டிரு வாய்ங்கடா?
நாயக்கர் ராணிகளை ஏய்க்கற வேலை செஞ்சா மாடுகளை மேய்க்கிற வேலைக்கு அனுப்பிடுவாய்ங்க"
"சர்றா பொறுமையை சோதிக்காத பாத்தியா இல்லியா"


"அந்த இடத்தின் பெயர் 'உல்பங்கே'. கோயிலை ஒட்டி இருக்கிற ஏரியின் ஒரு பகுதியில் இது அமைந்திருக்கிறது. இரு பகுதியா பிரிச்சு, மேற்பகுதியில் உடை மற்றும் அறைகளும் கீழ் பகுதியில் ஏரித்தண்ணீருக்குள் சுற்றுச்சுவர்களை  உடைய இடமும் இருக்கிறது. இது அந்தப்பரந்த ஏரியின் ஒருபகுதியை நீச்சல் குளம் போல் ஆக்கியிருக்கிறது. இங்கு ராணிகள் தங்கள் தோழிகள் புடை சூழ வந்து குளிப்பார்களாம்."
"சரி அதை விடு ராணிகள் இல்லாட்டி தோழிகளாவது குளிச்சதைப் பாத்தியா?"
இருங்க இந்த மகேந்திரனை வெட்டிவிட்டு  வருகிறேன். நான் அருகே சென்றபோது ஏரியின் நீச்சல் குளப்பகுதியில் சளசள வென்று சுத்தம் கேட்டது. யாரோ குளிக்கிறார்கள் இன்னும் அரச குடும்பத்தின் மிச்சம் சொச்சம் இருக்கிறார்களா என எட்டிப் பார்த்த போது எங்கிருந்தோ விரைந்து வந்தான் காவல்காரன். 

-தொடரும்.

2 comments: