Tuesday, February 28, 2017

இலங்கை சுரண்டப்பட்ட 465 ஆண்டுகள் !!!!!!!!

இலங்கையில் பரதேசி - பகுதி -4

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_21.html

Image result for portuguese in colombo
Portuguese in Colombo
பேரைக் கேள்விப்பட்டதில்லை என அம்ரி சொன்னதும் திடுக்கிட்டுப்போன நான், என்னுடைய டிராவல் ஃபைலைத் தேடி எடுத்து முகவரியைச் சொன்னேன் . “லவினியா தெரியும் அங்கு போய், சரி கண்டுபிடிக்கலாம்”, என்று சொன்னவுடன் தான் எனக்கு உயிர் வந்தது.
கார் லவினியாவுக்கு விரைந்து செல்ல, கொழும்பின் மீதி வரலாற்றைப் பார்ப்போம்.
போர்த்துக்கீசியர் கொழும்பு பகுதி, கோட்டே மற்றும் கடற்கரைப் பகுதிகள் அனைத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் கிபி.1505 முதல் கிபி.1656 வரை, 150 வருடங்கள் கொழும்புவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
Related image
Colombo Fort during Portuguese time
ஆனால் மலைப்பிரதேசமான கண்டி ராஜ்யம் தனியாகவே இருந்தது. போர்த்துக்கீசியர் அதனைப் பிடிக்க முயன்று கைவிட்ட நிலையில், கிபி.1638ல் டச்சுக்காரர் உள்ளே நுழைந்தனர். போர்த்துக்கீசியர் கொழும்பில் ஆதிக்கம் செலுத்தியதால் அவர்கள் கண்டி சென்று அதனை ஆண்ட அரசர் இரண்டாவது ராஜசின்ஹாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி போர்த்துக்கீசியருக்கு எதிரான போரில் டச்சுக்காரர்கள் உதவ வேண்டும். அதற்கு பிரதிபலனாக தீவுகளின் வர்த்தகப் பொருட்களின் ஏகபோக உரிமை டச்சுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டது. டச்சுக்காரர்களோடு இணைந்த கண்டிப்படை போர்த்துக்கீசியரை தொடர்ந்து தாக்கத்துவங்கியது. முதலில் போர்த்துக்கீசியர் அவர்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடினாலும் 1639 முதல் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பகுதிகளை இழக்கத் தொடங்கினார்கள்.
Image result for Dutch in colombo
Dutch Hospital in Colombo
ஆனால் நீண்ட நெடிய முற்றுகைக்குப்பின் கிபி.1656ல் தான் கொழும்பின் கோட்டையை அவர்களால் பிடிக்க முடிந்தது. அதன் உள்ளேயிருந்த கடைசியாக உயிர் பிழைத்திருந்த வெறும் 93 போர்த்துக்கீசியர் கோட்டையைவிட்டு பத்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பகுதிகளை டச்சுக்காரர் முதலில் சிங்கள அரசர்களுக்கு கொடுப்பது போல பாவனை செய்தாலும், இலங்கைத்தீவின் இலவங்கம் விளையும் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதோடு கொழும்புவை தங்கள் தலைநகரமாக மாற்றிக் கொண்டார்கள். இதுவே டச்சுக்காரர்கள் ஆக்கிரமித்த எல்லா இடங்களுக்கும் உரிமை பெற்ற டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை யிடமாகவும் விளங்கியது.  
இந்த கிழக்கிந்திய கம்பெனின்னு கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது.  வணிகம் செய்ய வந்து நம்முடைய ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியால் எத்தனை நாடுகளைப் பிரித்துக் கொண்டனர். ஆங்கிலேயரும் டச்சுக் காரர்களும் ஒரே பெயரை வைத்துக் கொண்டது தற்செயல் நிகழ்வாக இருந்தாலும் அவர்கள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டது தற்செயல் நிகழ்வல்ல.
சுதந்திரம் வாங்கி 68 ஆவது குடியரசு நாளை இப்போது கொண்டாடினாலும் இந்த ஒற்றுமை உணர்வுதான் இன்னும் வரவில்லை. குறிப்பாக தமிழகத்தில். அப்படியே தப்பித்தவறி ஒற்றுமையுடன் ஜல்லிக்கட்டுப்புரட்சி போன்று ஒரு எழுச்சி நடந்தாலும் அதனை அடக்குமுறை கொண்டு லத்தியால் அடித்தே காலி பண்ணிவிடுகிறார்கள். அதற்கு மேல் பொய் வழக்குகள் வேறு.
Image result for Dutch rule in colombo
Admiral Joris van Spilbergen meeting King Vimala Dharma Suriya ~ 1602.
கி.பி.1633-ல் உள்ளே நுழைந்த டச்சுக்காரர்கள் இலங்கையை பிச்சுப்பிச்சு ஆக்ரமித்து, 1796 வரை ஏகபோக உரிமையுடன் 168 ஆண்டுகள் சுரண்டினார்கள் . வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு என்ற கூற்றுப்படி, கி.பி.1796-ல் டச்சுக் காரரை  ஆங்கிலேயர் தோற்கடித்து கொழும்புவை கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேய அரசின் ராணுவத் தலைமையிடமாக அது இருந்தது.  
வெகுண்டெழுந்த கண்டி ராஜ்யம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி, நவீன ஆயுதங்கள் முன் ஒன்றும் செல்லுபடியாகாமல் கி.பி.1815ல் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆங்கிலேயருக்கு வழிவிட்டது.  கண்டி கொழும்புவினை இணைத்து கொழும்பைத் தலைநகரமாகக் கொண்டு அமைந்தது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம். இப்போதிருக்கிற பெரும்பாலான பழைய கட்டிடங்கள் ஆங்கிலேயர் கட்டியது. 1948-ல் சுதந்திரம் கொடுக்கும் வரை சுமார் 150 ஆண்டுகள் ஆங்கிலேயே ஆதிக்கம் நீடித்தது. போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் அதன்பின் ஆங்கிலேயர் என்று ஐரோப்பியர்களின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் கிட்டத்தட்ட 465 ஆண்டுகள் இருந்தது என்று நினைக்கும் போது அது எவ்வளவு பெரிய அவலம் என்று ஆச்சரியமாக இருந்தது.
Image result for British rule in colombo
British Victory in Colombo
சுதந்திரத்திற்குப்பின் இலங்கையில் தன்னாட்சி வந்தவுடன் மடமடவென்று நாட்டில் கலாச்சார புரட்சி ஏற்பட்டு நாடு திருத்தியமைக்கப்பட்டது. சட்டம், பாரம்பரியம், வழக்கம், உடை, மதம், பெயர்கள் என்று முற்றிலும் மாறிப்போன ஒரு சமுதாயம் மெதுவாக தன்னிலைக்கு திரும்பினாலும் அந்த மூன்று அந்நிய சக்திகளின் தாக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது கொழும்பில் பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மக்கள் சதவீதம் என்று பார்த்தால் சிங்களர் 42 சதவீதமும், இலங்கை பூர்விகத் தமிழர் 29 சதவீதமும், மூர் சமுதாயம் 24 சதவீதமும் இருக்கின்றனர். அது தவிர இந்தியத் தமிழர், மலாய், இலங்கை செட்டி, பரதர்கள் ஆகியோரும் இங்கு வசிக்கின்றனர்.
          குறுகிய மலைப்பாதையில் மேடு பள்ளங்களைத் தாண்டி, பயணித்தது அம்ரியின் கார் அல்லது வேன். மிகவும் குறுகிய தெருக்களைத் தாண்டி அடிக்கடி நிறுத்தி கேட்டுக்கேட்டு அந்த அட்ரஸைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம்.
அதில் உள்ள போன் நம்பரை எடுத்து அம்ரியின் செல்போனில் கூப்பிட்டுப் பார்த்தாலும் யாரும் எடுக்கவில்லை.
யாரிடம் கேட்டாலும் சமன்கா  கெஸ்ட் ஹவுஸ் கேள்விப்பட்டதில்லை என்றே சொன்னார்கள். ஒருவழியாக 7 மணியிலிருந்து 10 மணிவரை தேடி அந்த முகவரிக்கு வந்து சேர்ந்தோம்.
ஆனால் அந்த முகவரியில் எந்த கெஸ்ட் ஹவுசும் இல்லை. ஒரு வீடுதான் இருந்தது. வீட்டில் ஆட்கள் நடமாட்டமும் ஒன்றுமில்லை. காலிங் பெல் இருந்தாலும் அதுவும் வேலை செய்யவில்லை. பலமுறை உரத்துக் கூப்பிட்டபின் ஒரு வயதான அம்மா வெளியே வந்தார்கள். யார் வேனும் என்று கேட்டதற்கு “சமன்கா கெஸ்ட் ஹவுஸ் இதுதானே”, என்றேன்.  “நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை” என்றாள் மூதாட்டி.
தொடரும்>>>>>>>>


2 comments:

  1. சுரண்டல் மட்டும் தொடர்கிறது....?!@!

    ReplyDelete
    Replies
    1. எங்கே என்று கேட்கக்கூடாது , எங்கெங்கும் என்பதே பதில், நன்றி திண்டுக்கல்லார் அவர்களே.

      Delete