Tuesday, August 11, 2015

என் பேர்தாண்டா மிரண்டா, உன் தோளை உடைக்க வரேண்டா !!!!!!!!!!

தோள் போராட்டமும் ஆள் மாறாட்டமும்  பகுதி 1

'பாகுன்னாரண்டி?' என்று விஜயலட்சுமியைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் சிரித்தேன். அவள் பதிலுக்கு 'வாட் ?' என்றாள். ஐயையோ தெலுங்கு தெல்லேது போலருக்கு. தமிழருக்குத்தான் தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன் . இப்ப தெலுங்கருக்கும் அதே கதியா ? .
தெரப்பி அலுவலகத்தின் வரவேற்பறையில் அங்கு பணிபுரியும் எல்லா உடற்கூறு பயிற்சியாளர்களின் (Physical Therapist என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை?) பிஸினெஸ் கார்டுகளும் வைக்கப்பட்டிருக்கும். அதில் உடனே கண்ணுக்குப்பட்டது என்னுடைய தெரப்பிஸ்ட் "வித்யாசாகர் பம்முலப்பட்டி". வித்யாசாகர்தான் என் எலும்பை நிமிர்த்துக் கொண்டிருந்தார் என்றும் அவரோடு நடந்த ரசமான உரையாடல்களை ஏற்கனவே கொடுத்திருக்கிறேன் என்றும் உங்களுக்குத் தெரியும்.
Vidya Sagar with his son  in front of my House.
 இதுவரை படிக்கவில்லையென்றால் இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2015/07/blog-post_6.html அதற்கு அடுத்துத் தெரிந்த பெயர் "விஜயலட்சுமி டவுல்லேரி". இந்த இரண்டுபேரும் ஆந்திரா, மன்னிக்க தெலுங்கானாவைச் சேர்ந்த கொல்ட்டிகள். (கொல்ட்டின்னா என்னான்னு யாராவது சொல்லுங்கப்பா? - கெட்டவார்த்தையா இருக்குமோன்னு பயமா இருக்கு.) மற்ற இரு பெயர்களும் அமெரிக்கப் பெயர்கள் என்பதால் நான் கண்டுகொள்ளவில்லை..
ஒரு நாள் சாகர் வந்து, "ஆல்ஃபி நான் ஒரு மூன்று வாரம் இந்தியா செல்கிறேன்", என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. "அப்ப என் கதி? யாரு எனக்கு தெரப்பி தருவார்கள்", என்று கேட்டேன். "விஜயலட்சுமி”, என்று பதில் சொன்னார். “அப்பாடா நல்லவேளை”, என்று சொன்னேன். ஒரு இந்தியப்பெண், நம்மை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் என்ற ஒரு நம்பிக்கை.
  Vijaylakshmi Davuluri
சாகர், ஏற்கனவே மூன்று மாதத்திற்கு முன்னால் ஊருக்குச் சொன்றிருக்கும்  மனைவியையும் மகனையும் கூப்பிட்டு வரவும், குலதெய்வத்திற்கு முடியிறக்கம் செய்யவும் போகிறார். ம்ம் மூன்று மாதம். நமக்கெல்லாம் இப்படி ஒரு கொடுப்பினையும் இல்லை  - தங்கமணி என்ஜாயும் இல்லை.
போவதற்கு ஒரு வாரமுன் மறுபடியும் சாகர் வந்து என்னிடம், "விஜயாவுக்கு முடியாதாம், அதற்குப்பதிலாக கிம்பர்லி உன்னைப்பார்த்துக் கொள்வாள்", என்றார். ஐயையோ அவளைப் பார்த்தது கூட இல்லையே. என்னவாகுமோ என்று எண்ணியிருந்தேன். மூன்று வாரங்கள் சமாளிக்கனுமே என்று ரொம்ப டென்ஷன் இருந்தது. இன்று அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றார், விஜயா வர வாய்ப்பில்லையா என்று வெட்கத்தைவிட்டுக் கேட்டும் பதிலுக்கு புன்னகை மட்டுமே வந்தது.
விஜயாவிடம் அதிகப்பழக்கம்  இல்லை. நான் அவ்வப்போது பார்த்து சிரித்தாலும் அவள் சிரிப்பதில்லை. ஒண்ணும் அவ்வளவு ஃபிரண்ட்லியாகத் தோணவில்லை என்றாலும் இந்தியப் பெண் அதுவும் தென்னிந்தியப் பெண், இந்த மூன்று வாரத்தை சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்த எனக்கு யாரோ அந்தியப் பெண் வருவது பயமாக இருந்தது. வரவேற்பரையில் சென்று பிஸினெஸ் கார்டுகளை மறுபடியும் பார்த்த போது முழுப்பெயர் "கிம்பர்லி மிரண்டா" என்று இருந்தது. பேரை பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் மிரண்டே போனேன். விஜயாவிடம் பார்த்துக்கொள்ளும்படி நானே கேட்டுவிடலாமா என்று நினைத்தேன்  ஆனால் மிகுந்த தயக்கமாய் இருந்தது
ஏற்கனவே வலியில் துடித்துக் கொண்டிருக்கும் எனக்கு என் தோளைப் பற்றி தெரியாத ஒருவரிடம் அதனைக் கொடுக்க தயக்கமாக இருந்தது. கனவில்  வேறு மிரண்டா எனும் முகம் தெரியாத பெண் வந்து, "என் பேர்தாண்டா மிரண்டா,உன் தோளை உடைக்க வரேண்டா "என்று சொல்வது போல் இருந்தது. யார் இந்த கிம்பர்லி மிரண்டா  நான் ஒரு முறை கூட பார்த்ததில்லையே என்று நினைத்தேன்.
சாகர் ஊருக்குப்போவதால் அந்த வெள்ளிக்கிழமை மட்டும் காலையில் வரச் சொல்லியிருந்தார். நான் சென்றபோது அங்கு வேறொரு இந்தியப் பெண்ணைப் பார்த்தேன். என்னைப் பார்த்து சிரித்த போது நானும் தயங்கியபடியே சிரித்து வைத்தேன். யாராயிருக்கும் இது அசல் தென்னிந்திய மூஞ்சி, ஒரு வேளை தமிழாக இருக்குமோ? தெரப்பி யூனிஃபார்மில் இருப்பதால் நிச்சயம் பேஷண்ட் இல்லை. அதற்குள் அங்கு வந்த சாகர், "ஆல்ஃபி, மீட் மிஸ் விஜயலட்சுமி", என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. "விஜயலட்சுமி டவுல்லரி ? ",, என்றேன். “ஆம்”, என்று ஆச்சரியமாய் சிரித்தாள் விஜயா. “அப்ப அந்த இன்னொரு பெண் யார்”,என்று கேட்டேன்? அதுதான்  "கிம்பர்லி" என்றார் சாகர். அட ரெண்டு மாசமா வந்து போறேன். கிம்பர்லியை விஜயலட்சுமின்னு நெனச்சுண்டு இருந்திருக்கிறேன் என்ன ஒரு முட்டாள்த்தனம்.
"கிம்பர்லி இந்தியப்பெண்தானே ?" என்றேன். “ஆமாம் கோவா”, என்றார் சாகர். அதானே பார்த்தேன். வெள்ளை வெளேரென்று ஐரோப்பிய நிறம் கொண்ட பெண் எப்படி தெலுங்குப் பெண்ணாக இருக்க முடியும்.
அந்த கோவா பெண்ணிடம், "பாகுன்னாரண்டி" என்று சொல்லி, அது முழித்தது ஞாபகம் வந்து வாய்விட்டு சிரித்துவிட்டேன்.
அதற்குள் கிம்பர்லியும் அங்கு வந்துவிட, நடந்த ஆள் மாறாட்டத்தைச் சொன்னேன். சாகர், விஜயா, கிம்பர்லி ஆகிய மூவரும் வெகுவாக சிரித்தார்கள். விஜயா சில நாட்களில் மட்டுமே வருவதால் என்னைப் பார்த்துக் கொள்ள முடியாதாம். அதுவும் நான் வராத நாட்களில் வருவதால்தான் நான் அதுவரை விஜயலட்சுமியைப் பார்க்க முடியவில்லை.
இதுவரை என்னிடம் சிரிக்காத கிம் என்ற கிம்பர்லி சிரித்து கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.நல்லவேளை இந்தியப்பெண் தான் என்று நினைத்து நிம்மதியாக இருந்தது.
சாகர் ஊருக்குச் சென்றபின் வந்த முதல் திங்கள்கிழமை மாலை வழக்கம்போல் தெரபிக்குச் சென்றேன். சாகர் வேறு இல்லை, இந்தப் புதுப்பெண் கிம்பர்லி வேறு எப்படி என்று தெரியவில்லை. அதோடு ஒரு பெண் என் பலவீன இடது கையை எப்படி  கையாளப் போகிறாள் என்ற பதட்டமும் இருந்தது.
அப்போது தெரப்பி அறையில் கிம்பர்லி நுழைந்தாள்.

- தொடரும்.

8 comments:

 1. என்ன ஐயா, தொடர் கதையாக எழுதப் போகிறீர்களா?

  அருமை. ஆனால், விரைவில் முடித்து விடுங்கள். சஸ்பென்ஸ் எல்லாம் நமக்கு தாங்காது.

  ReplyDelete
  Replies
  1. பொறுமை பொறுமை இந்த ராஜாக்களுக்கே ( கிங்) பொறுமை இருக்காது போலருக்கு .

   Delete
 2. தோள் வலி அறவே போன பிறகும் கூட நீங்கள் தெரப்பிக்கு தொடர்ந்து போனதாக ஒரு வதந்தி சுற்றியது.. அதை நான் அப்ப நம்பள.. இப்ப... ?

  ReplyDelete
  Replies
  1. யோவ் விஷ் , உஷ் , பிரைவேட் மெசேஜ் அனுப்புறேன்னு
   நினச்சு பப்ளிக் மெசேஜ் அனுப்பிட்ட போலருக்கு .

   Delete
 3. கொடுத்து வைத்தவர் நீங்கள்... ஹா.. ஹா..

  ReplyDelete
  Replies
  1. அது அடுத்த வாரம்தான் தெரியும் திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 4. பகுதி ~1க்குக் கீழேயே
  பகுதி ~2 போடமாட்டீங்களா?

  ReplyDelete
  Replies
  1. பொறுமை பொறுமை.

   Delete