Monday, July 6, 2015

பரதேசியின் சிக்ஸ் பேக் !!!!!!!!!!!!!!!


எனக்கு தெரப்பி செய்பவர் பெயர் வித்யாசாகர். ஆந்திராவைச்சேர்ந்த ப்ரோ (Bro  என்றாலும் Pro  என்றாலும் பொருந்தும். (ஆமா இந்த B-தமிழில் எழுதுவது எப்படி?) என் வீட்டில் குடியிருப்பவர்தான். ஆனால் வேலை செய்வது மேன்ஹாட்டனில். இந்த ஃபிசியோதெரப்பி கிளினிக்கை நடத்துவது ஒரு ரஷ்யனாம். பெரும்பாலான ஃபிசியோதெரப்பி கிளினிக்குகளை நடத்துவது ரஷ்யர்களாம் (ரஷ்யன் மாஃபியா?).
தெரப்பி பண்ணும்போது வலி பின்னி எடுத்துரும். சாகர் வலியோட நம்பரைச் சொல்லிட்டே இருக்கச் சொல்வார். 1 முதல் 10-க்குள் சொல்ல வேண்டும், 10  அதிகபட்சம். 10-க்கு போகும்போது இருமுறை மயக்கமே வந்துவிட்டது. ஒருநாள் பத்து என்று சொல்லியும் அவர் விடாமல் அழுத்திக் கொண்டு இருந்ததால் நான் 15 என்று சொல்லிட்டு கையை வெடுக்கென பிடுங்கிட்டேன். நிதானத்திற்கு வர ஒரு ஐந்து நிமிஷம் ஆனது. அதன்பின் சாகரிடம் சாரி கேட்டேன். "அது பரவாயில்லை, பலபேர் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்", என்றார். (கெட்ட வார்த்தைன்னா என்னங்க? எனக்கு எதுவுமே தெரியாதுங்க).
சாகர் பார்ப்பதற்கு உயரமாய் வாட்டசாட்டமாய் சிவப்பாய் இருப்பார்.  முடி அடர்த்தியாய் இருக்கும். ஒருநாள் முடியை ஒட்ட வெட்டிட்டு வந்திருந்தார். நான் " பழைய முடி பாலிவுட் ஸ்டைலில் இருந்துச்சு" என்றேன். ‘இப்ப?’, என்று கேட்டபோது, "இப்ப ஹாலிவுட் ஸ்டைல்ல இருக்கு", என்றேன். அவர் புன்சிரித்தபோது, சொன்னேன். "ஆனா டோலிவுட் ஸ்டைல்ல என் கையைப் போட்டு முறுக்குறீங்களே " என்றேன்.
இப்படி வலியை மறக்க அப்பப்ப அவரிடம் ஏதாவது உளறிட்டு இருப்பேன். முதல்ல நான் என்ன சொன்னாலும் புன்சிரிப்பையே பதிலா சொன்னவர், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கவுன்ட்டர் கொடுக்க ஆரம்பிச்சாரு.
முதமுதல்ல தெரப்பிக்கு போகும்போது. ஒரு தனி ரூமைக் காண்பித்து சட்டையைக் கழட்டிட்டு ரெடியாகச் சொன்னார். நான் உள்ளே போய் ஏசியைப்  போட்டுட்டு படுக்கையைத் தயார் பண்ணி படுத்தேன். உள்ளே வந்த அவரிடம் இன்னொரு தலையணை வேணும்னு கேட்டேன். "யோவ் இங்க என்ன ஹாயா தூங்க வந்தியா, முதல்ல ஒன்னை புரிஞ்சிக்க, தலையணையே கூடாது" என்று சொல்லிட்டு இருந்த ஒரு சப்பைத் தலையணையையும் எடுத்துட்டார்.
“ஒல்லியா  கில்லி மாதிரி இருந்த என்னை இப்படி பல்லி  மாதிரி படுக்க வச்சிட்டியே ,ஆண்டவனே நான் என்ன பாவம் செஞ்சேன்னு", புலம்பினேன்.
நல்லவேளை ஆண்டவனுக்கு காது கேட்டாலும் பதில் சொல்றதில்லை, இந்த என் கேள்விக்கு பதில் சொல்ல, என் பாவத்தை பட்டியலிட்டா என்னாவும் பாருங்க?.
ஒரு வேளை இந்த தோள்பட்டை விவகாரமும் தண்டனைதானோன்னு  நினைச்சேன். சேச்சே அப்படி அவர் தண்டனை தர ஆரம்பிச்சா, நாமெல்லாம் உயிரோடு இருக்க முடியுமான்னு நெனச்சு மனசைத் தேத்திக்கிட்டேன்.
ஒரு நாள் படுத்துக்கொண்டே கையில் மூனுபவுண்ட் எடையை வைத்துக்கொண்டு மேல் நோக்கி உயர்த்தும்  'பஞ்ச்சிங்' எக்சர்சைஸ் சொல்லிக் கொடுத்தார். மொத்தம் 5 செட். ஒரு செட்டுக்கு 10 முறை. "ஆனால் இது எனக்குத் தேவைப்படாது", என்றேன். ஆச்சரியத்துடன் ஏன்? என்று கேட்டார். “எனக்குத்தான் எதிரிகளே இல்லையே, இந்த பஞ்ச்சிங் எக்சர்சைஸ் செய்து என்ன ஆகப்போவுது”,ன்னேன். அப்ப அவர் சொன்னார் "உங்க தோள்தான்  உங்க எதிரி. ஃபுல் ரேஞ்ச் ஆஃப் மோஷன் கிடைக்கனும்னா, இதெல்லாம் பண்ணித்தான் ஆகனும்", என்று.
ஒருநாள் எக்சர்சைஸ் ஓவரா போய்க்கிட்டு இருந்துச்சு, "போதும் விடுங்க சாகர் நான் என்ன ஒலிம்பிக் போட்டிக்கா போகப்போறேன்”னேன். அவர் சொன்னார்,"ஒலிம்பிக் போகாட்டி பரவாயில்லை, ஆனா வேலைக்கு போகனும்லே”.
ஒரு நாள் கையில் பிரம்பு போன்ற ஒன்றை எடுத்து வந்தார், "சாகர் நான்தான் சொல்றதை முடிஞ்சளவு செய்யறேன்லே, நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் செய்யறேன். அதுக்காக பிரம்பெல்லாம் எடுத்து வராதீங்க, இது ரொம்பவே ஓவர்”,னு சொன்னேன். “இது புதுசா செய்ய வேண்டிய வேண்ட் (Wand) எக்சர்சைஸ் ஆனா தேவைப்பட்டா வேற மாதிரியும் பயன்படுத்துவேன்”,னு பயமுறுத்தினார்.
Wand Excecise
ஒரு தடவை கொஞ்சம் சீக்கிரம் போயிட்டேன், ரிஷப்ஷன்ல யாரையும் காணோம். நேரா போய் என் ரூமைத் திறந்து உள்ளேபோனேன். உள்ளே இருட்டா இருந்துச்சு. உத்துப்பாத்தா, தெரப்பி  டேபிள்ள ஒரு கறுப்பி காலை பரப்பி படுத்திருந்துச்சு. பயந்து போயி பட்டுன்னு வெளியே வந்துட்டேன். ரூம் மாறி வந்துட்டனானு வெளியே வந்து பாத்தா, ஃப்ளோர் மாறி வந்திருக்கேன். 10-ஆவது மாடிக்கு போகாம 9-வது மாடில இறங்கிட்டேன் போலருக்கு. அந்த மாடில Breast Cancer டிரீட்மென்ட் தர்றாங்களாம். நல்லவேளை இருட்டுல நான் எதையும் பாக்கல.

ஒரு நாள் எனக்கு செஞ்ச தெரப்பியில் ஒரு ஆக்ரோஷம் தெரிஞ்சது. என்னடாது யார்மேலேயோ உள்ள கோபத்தை என்ட்ட காண்பிக்கிறாரோன்னு சந்தேகமா இருந்துச்சு. அப்பதான் ஞாபகம் வந்துச்சு. காலைல அவங்க வீட்டில ஒரே சத்தமா இருந்துச்சு. பாத்திரங்கள் கீழ விழுந்த சத்தம் ஒரு வேளை அவர் மனைவியோட ஆத்திரங்களின் வெளிப்பாடான்னு தெரியல.
இனிமே காலையில காதை தீட்டிவச்சு உன்னிப்பா கேட்கனும். கீழே சத்தம் அதிகமாக இருந்துச்சுன்னா, தெரப்பிக்கு எஸ்கேப் ஆயிரணும்.
ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசாய் பயிற்சிகள் கூடிக்கிட்டு இருந்துச்சே தவிர, குறையறைதைக்காணோம். வலியும் தான்.
1. செ.மீ. கிழிசலுக்கே இந்தப்பாடு படவேண்டியதிருக்கும்னு  யாரும் சொல்லவே இல்லை.
உடற்பயிற்சிகள் கடினமாக கடினமாக மனசுக்கும் மிகவும் கஷ்டமாக இருந்துச்சு. அப்ப ஒரு நாள் கேட்டேன், "என்ன சாகர் போற போக்கப்பாத்தா எனக்கு 'சிக்ஸ் பேக்' வந்துரும் போல இருக்குன்னேன். 'சிக்ஸ் பேக்கா' இது வேற கனவு  இருக்கா, ஒரு Pack  கூட  இல்லை ஒரு bag தான் இருக்குன்னு சொன்னார். அது எந்த bag  என்று கேட்டேன்.
இந்த 'Rice bag' தான்னு என் தொப்பையை தொட்டுக் காண்பித்தார்.  
Laser Liposuction to remove stubborn belly fat in men


-முற்றும்.

4 comments:

 1. அதானே எதற்கு பஞ்ச்சிங் எக்சர்சைஸ்... பஞ்ச் கொடுக்காமல் இருந்தாரே... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. என்னாது திண்டுக்கல் தனபாலன்,நான் உயிரோட இருக்கிறது உமக்கு பிடிக்கலையா ?

   Delete
  2. அவரு கொடுத்து இருந்தால் நம்ம நண்பர் சும்மாவா இருப்பார்..
   திரும்பி சாகர் அவர்கள் பஞ்சு பஞ்சா ஆகற வரை பஞ்ச் வசனமா பேசி கலக்கி இருப்பார்.. அதுவும் தெலுங்கு'ல :)

   Delete
  3. நாக்கு தெலுங்கு தெல்லேது நண்பா .

   Delete