Thursday, July 30, 2015

கலாமுக்கு கண்ணீருடன் ஒரு சலாம் !!!!!!!!!!

      கலாமுக்கு கண்ணீருடன் ஒரு சலாம் !!!!!!!!!!


         உலகத்தமிழர் மனதில் நீங்கா இடம் பிடித்த மாபெரும் தலைவர் Dr.A.P.J அப்துல் கலாம் மறைவுக்கு பரதேசியின் கண்ணீர் அஞ்சலி  .

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் உண்மையான அஞ்சலி  இப்படி எந்த தலைவருக்கும்  சமீபத்தில் கிடைத்ததில்லை  .

இதைப்பார்த்தாவது, நம் அரசியல் வியாதிகள் திருந்தி, போகும்போது கொண்டு போகப்போவது ஒன்றுமில்லை .உண்மையான அன்பும் ,மரியாதையும், புகழும்  மக்களுக்கு நேர்மையான பணி செய்வதில்தான்  கிடைக்கும்  என்று உணரட்டும் .2013 ஜூலை   மாதத்தில்  அடியேன் எழுதிய பதிவின் சில பகுதிகளை  கீழே கொடுத்துள்ளேன்


அப்துல் கலாமின் "திருப்புமுனைகள்" ,வெளியீடு - கண்ணதாசன் பதிப்பகம்.

 

முதலில் புத்தகத்தயாரிப்பைப்பற்றி சொல்ல வேண்டும். மிகவும் நேர்த்தியாக அச்சிடப்பட்டு, கலர்ப்படங்களுடனும் அதிக எடை இல்லாமலும் இருந்தது. மொழி பெயர்ப்பும் நன்றாகவே இருந்தது.
ஆனால் 'அக்னி சிறகுகளில்' இருந்த விறுவிறுப்பும் சுவாரஸ்யமும், சாதனைகளும் இதில் இல்லை. ஏனென்றால் குடியரசுத் தலைவர் ஆனபின் சாதனைகளை விட சமாளிப்புகள் தான் அதிகம் தென்படுகின்றன.
ஆனாலும் அப்துல்கலாம் ஒரு நேர்சிந்தனையுள்ள, நாட்டின் முன்னேற்றத்தையே தன் வாழ்நாள் கனவாகக்கொண்ட  ஒரு அற்புதத்தலைவர் என்பதில் சந்தேகமில்லை. தான் கனவு கண்டதுடன், இந்திய மக்கள் அனைவரும் அதே கனவைக் காண வேண்டும் என முயற்றி செய்து கொண்டிருப்பவர், கலாம்.
இந்தியாவின் தென்கோடிப்பகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் உயர்ந்த (?) பதவியினைப் பெறும் அளவுக்கு உயர்ந்த இவரின் வாழ்க்கை நிச்சயமாக, இளைஞர்களுக்கு ஊக்க சக்தியை அளிக்க வல்லது.
தான்  குடியரசுத்தலைவர் ஆன சூழ்நிலைகளையும், அதன்பின் நாட்டு வளர்ச்சிக்கென அவர் எடுத்த பலவித முயற்சிகளையும் இந்த நூலில் எழுதியுள்ளார்.
வாழ்க்கையின் பெரும்பகுதியை ஏவுகணைத்தொழில் நுட்பம், அணு ஆராய்ச்சி என்று கழித்துவிட்டபின்,  எஞ்சியுள்ள அவர் வாழ்க்கையில், நாட்டின் ஆக்க சக்திகளுக்கு ஊக்கம் தரும்  முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், நாம் அவரை இன்னும் நல்லவிதமாக பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நம்ம அரசியல்வியாதிகள் விட்டுவிடுவார்களா என்ன? பிரதமர் போன்ற பதவிகளுக்கு இவரைப் போன்றவர் வந்தால் அல்லவா நாடு உருப்படும்.
சில வருடங்களுக்கு முன், அப்துல்கலாம் அமெரிக்கப்பயணம் செய்தபோது நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும், நியூயார்க் / நியூஜெர்சி வாழ் இந்திய அமைப்புகளும் இணைந்து, அவருடைய சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தனர். நியூயார்க்கில் நான் வாழும் குயின்ஸ் பகுதியில் உள்ள "கணேஷ் ஆலய”  வளாகத்தில் உள்ள அழகிய அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்வுக்கு, நானும் அழைக்கப்பட்டிருந்தேன். உள்ளே சென்றபோது அரங்கு, நிரம்பி வழிந்தது. சற்று நேரத்தில் NYPD  போலிஸ் பாதுகாப்புடன், அளவான புன்சிரிப்புடன், சற்றே தலை தாழ்ந்த சிறிய உருவம் உள்ளே நுழைந்தபோது, அனைவரும் தன்னிச்சையாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்றனர். அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்கள் பாடப்பட்டன.கலாம் அவர்கள் தன் லேப்டாப் உதவியுடன், இந்திய நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் எப்படி பங்களிக்கலாம்? என்று அருமையாக தன்னுடைய திக் ஆக்சென்ட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
சபையைக் கட்டிப் போட்டது அவர் பேச்சு மட்டுமல்லாது, அதன் பின்னர் நடந்த கேள்வி பதிலும்தான். சிக்கலான கேள்விகளுக்கு சாதுர்யமான பதில்களை கொடுத்து, அன்று அங்கிருந்த எல்லார் மனதிலும் இடம்பிடித்தார்.

குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் சாதனைகள் :
1.    இந்தியா முழுவதிலும் உள்ள எண்ணற்ற இளம் மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தியது.
2.    ஜனாதிபதி மாளிகையை கனிணி மயமாக்கி ஆவணங்களை 'டிஜிட்டல்' வகைப்படுத்தியது.
3.    காணொலிக் காட்சி (Video Conferencing) மூலம் மாநாடுகள் நடத்தியது.
4.    வெளிநாட்டு பயணங்களை நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியது.
5.    நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் பயணம் செய்து பார்வையிட்டது.
6.    340 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டத்தை பராமரித்ததோடு, அதில் புதிதாக Tactical Garden (for the blind), மியூசிக்கல் கார்டன், ஆகியவற்றை புதிதாக அமைத்தது.
7.    நாடெங்கிலும் பரவலாகப் பயணம் செய்த ஒரே ஜனாதிபதி. (முதல் 10 மாதத்திலேயே, 21 மாநிலங்களில் பயணம் சென்றார்.)
அதிகம் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட அவரது நல்ல யோசனைகள்:
1.    விஷன் 2020
2.    நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவுபடுத்தும் வழிவகைகள். (E -Judiciary Initiative)
3.    PURA (Providing Urban Amenities in Rural Areas).
4.    ராஷ்டிரபதி பவன் ,பிரதம மந்திரி, பிற அமைச்சர்கள் மற்றும் மாநில ஆளுநர்களின் அலுவலகங்களை நெட்வொர்க்கில் இணைத்து  டிஜிட்டல் முறையில் கையெழுத்துப்பரிமாற்றம் செய்தல்.
5.    ஸ்திரமான ஆட்சிக்கு இருகட்சி ஆட்சி முறை.
6.    எரிசக்தி தன்னிறைவு பெற “ பயோடீசல் திட்டம்” மற்றும்  “சூரியசக்தி” திட்டங்கள்.
7.    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு Code of Conduct அமைத்தல்.
சர்ச்சைக்குரிய முடிவுகள்:
1.    மாஸ்கோவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும்போது, மன்மோகன் சிங்கின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு தடவை கூட கூடாத பீகார் சட்டமன்றத்தை கலைத்து (மே, 2005) உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானது.
2.    ஆதாயம் தரும் பதவிகளுக்கான சட்டமுன் வரைவை முதலில் திருப்பி அனுப்பினாலும், பின்னர் பாராளுமன்ற தீர்மானத்திற்குப்பின் ஒப்புதல் அளித்தது (ஜெயா பச்சன் மற்றும் சோனியா காந்தி அத்தகைய பதவிகளில் இருந்தனர்).
3.    பதவிக்குப்பின்னர், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கூடங்குளம் அணு உலை ஆகியவற்றுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.
2004 - தேர்தலுக்குப்பின் பெரும்பான்மையை நிரூபித்தபின், காங்கிரஸ் கட்சியின் சார்பாக, சோனியா காந்தியை பல எதிர்ப்புகளின் மத்தியிலும் பிரதமராக்க தயாராய் இருந்தது. ஆனால் சோனியா, மன்மோகன்சிங்கை வழிமொழிந்தது, கலாமுக்கே ஆச்சரியம். சோனியா காந்தி உரிமை கோரியிருந்தால், அரசியல் சாசனப்படி, அவரை அனுமதிப்பதைவிட கலாமுக்கு வேறு வழி இருக்கவில்லை.


2 comments:

  1. கனவுகள் கூட நல்லதாகவே இருக்கட்டும்... நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. இருக்கட்டும்... நடக்கட்டும்..திண்டுக்கல் தனபாலன்.

      Delete