Thursday, March 5, 2015

கோஹினூர் வைரம் !!!!!!!!!!!!

கோஹினூர் வைரம்
நான் லண்டன் சென்றிருந்த போது, எதைப் பார்க்கிறேனோ இல்லையோ கோஹினூர் வைரத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நினைத்தேன். அதே போல் லண்டன் "டவர்" கோட்டையில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து அரச வம்சத்தின் நகைகளின் (Crown Jewels) மத்தியில் நடுநாயகனாக ஜொலித்தது நம் கோஹினூர். ஆம் அது நம்முடையதுதான், அநியாயமாக பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். உற்றுப் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணைப் பறிக்கும் ஒளி.
இன்றைக்கும் உலகின் தலைசிறந்த மிகப்பெரிய, பழமையான விலை மதிப்பில்லாத வைரம் என்றால் அது கோஹினூர்தான்.


இந்த கோஹினூரின் வரலாற்றைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான் "Mountain of Light". எழுதியவர் நம்மூரின் பின்னணியில் வரலாற்று நாவல்கள் (Historical Fiction) எழுதிப் புகழ்பெற்ற "இந்து சுந்தரேசன்" அவர்கள். இங்கே சியாடல்லில் ( Seatlle) வசித்து வருகிறார்தமிழ்ப்பெண் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. இவர் ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இவரை நான் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.
Indu Sundaresan
Indu Sundaresan
கோஹினூர் என்பதன் அர்த்தம் தான் “Mountain of Light”, அதாவது"ஒளியின் மலை" என்பது.
இந்த நாவல் மூலம் நான் தெரிந்து கொண்ட சில வரலாற்று உண்மைகளை கீழே தருகிறேன்.
1.    கிருஷ்ண பகவான் தன்னுடைய சீடர் ஒருவருக்கு, ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பரிசாக அளித்ததாக ஒரு ஐதிகம்.
2.    கி.பி.1526ல் முதலாம் முகலாயச் சக்கரவர்த்தி பாபர், அவரால் தோற்கடிக்கப்பட்ட ஒரு இந்திய ராஜாவிடம் பெற்றிருக்கிறார்.
3.    முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களின் புகழ்பெற்ற மயிலாசனத்தில் (Peacock throne) பதிக்கப்பட்டிருந்ததாம்.
 1. Peacock Throne
4.    பெர்ஷியா மற்றும் ஆஃப்கானிஸ்தான்  பகுதிகளுக்கு அரசராக இருந்த நாதிர்ஷா கையில் வந்து சேர்ந்து, அவர் இதற்கு கோஹினூர் (Mountain of Light) என்று பெயர் சூட்டினாராம்
5.    கி.பி. 1809ல் ஆஃப்கன் மன்னர், “ஷா ஷூஜா ” தன் சகோதரரால் பதவியிறக்கம் செய்யப்பட்ட போது, தன் மனைவி பிள்ளைகள் மற்றும் கோஹினூரையும் எடுத்துக் கொண்டு காஷ்மீரில் உள்ள தன் ஆளுநரிடம் தஞ்சம் அடைந்தார். ஆனால் ஆளுநர் அவரை சிறைப்படுத்தினார்.
6.    பஞ்சாப் சிங்கம் (Lion of Punjab) மகாராஜா ரஞ்சித் சிங், காஷ்மீரை வென்று ஷா. ஷூஜாவை சிறை மீட்டு கோகினூரைப் பெற்றுக் கொண்டார். அது முதற்கொண்டு பல ஆண்டுகள் இது அவருடைய புஜத்தை அலங்கரித்தது. முடியில் (கிரீடத்தில்) அணிந்தால் அந்த மன்னனின் ஆட்சி முடிந்துவிடும் என்ற ஒரு (மூட?) நம்பிக்கையும் இருந்தது.
Maharaja Ranjit Singh
Maharaja Ranjit Singh
7.    ரஞ்சித் சிங்கின் இறப்புக்குப்பின்னர் பதவிக்கு வந்த அவருடைய மூன்று மகன்களும் கொல்லப்பட, அவருடைய கடைசி மகனான மகாராஜா திலிப் சிங் பிரித்தானியப் படைகளின் உதவியுடன் பஞ்சாப்புக்கு மன்னராகிறார். அப்போது அவருக்கு வயது 5. இதற்கு பெருமுயற்சி எடுத்தவர் ரஞ்சித் சிங்கின் இளம் மனைவி மகாராணி ஜின்டன் கவுர்.
8.    பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பஞ்சாப்புக்கு "Resident" ஆக வந்த "ஹென்ரி லாரன்ஸ்" மகாராஜா ரஞ்சித் சிங்கின் அளவிட முடியாத பொக்கிஷங்களை கைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ஒப்படைக்கிறார். நாடும் கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டிஷ் வசமாக, பதினாறு வயதில்  மகாராஜா லண்டனுக்கு அனுப்பப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பெனி அவருக்கு வருடாந்திர உதவித்தொகை அளிக்கிறது.
9.    இதற்கிடையில் கி.பி.1850ல் டல்ஹெளசி பிரபு யாருக்கும் தெரியாமல் கோஹினூர் வைரத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி, அப்போது ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அளிக்கிறார்.
10. கோஹினூர் வைரம் ஆரம்பத்தில் 186 கேரட் எடையுள்ளதாய் இருந்தது.
11. விக்டோரியா மகாராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட் வைரத்தை மேலும் செதுக்கி (Rose cut) இப்போதுள்ள வடிவத்தில் கொண்டு வருகிறார்.
Posted Image
Kohinoor in Queens Crown
12. தற்போதைய லாகூர், முல்தான், காஷ்மீர், ஆஃப்கனின் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய  மாபெரும் பஞ்சாப் பேரரசின் ஒரே வாரிசான மகாராஜா தலிப் சிங் தன் வாழ் நாள் முழுவதும், தன் நாட்டிற்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்து, தன் நாடு, சொத்து, பொக்கிஷங்கள் மற்றும் கோஹினூரையும் இழந்து பாரிசில் ஒரு சிறிய லாட்ஜில் அனாதையாக செத்தார்.

பல சோக வரலாற்றை தந்த கோகினூர் இன்றும் கம்பீரமாக இங்கிலாந்தில் உட்கார்ந்திருக்கிறது.
கோஹினூர் கண்ணை மட்டும் பறிக்கவில்லை பல உயிர்களையும் பறித்துள்ளது.
வரலாற்று நாவல்களை விரும்புபவர்கள் இதனை படித்து மகிழலாம் அல்லது வருத்தப்படலாம்.

முற்றும்

6 comments:

 1. என்ன அண்ணே, லண்டனுக்கு போய் இந்த வைரத்தை வாங்கின்னு வந்து அண்ணிக்கு பரிசா அளிப்பீங்கன்னு ஆவலா வந்தேன், இப்படி சும்மா வெறும் கையோடு வந்து இருக்கேளே!

  ReplyDelete
  Replies
  1. என்ன விசு உங்களுக்கு தெரியாதா ?
   இவுங்களுக்கெல்லாம் கோஹினூர் வைரம் மட்டுமல்ல கோல்கொண்டா கோட்டையையும் சேர்த்துக்கொடுத்தா கூட பத்தாது

   Delete
 2. தலைகளை அறுக்கிற வைரமோ...?

  ReplyDelete
  Replies
  1. தலைகளை அறுத்த வைரம் .

   Delete
 3. நம் சொத்து.... வெளி நாட்டில். :(

  தலைகளை அறுக்கும் வைரம் என தனபாலன் சொல்வது சரி தான் போல!

  ReplyDelete
  Replies
  1. நம் சொத்து எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக ஸ்விஸ் வங்கிகளில்தானே
   இருக்கிறது.

   Delete