Monday, March 2, 2015

கங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது !!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா -பாடல் எண் 19  நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.

ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல் இது. மகேந்திரனின் உன்னத இயக்கத்தில் அமைந்த படம் இது.பாடலைக்கேட்போம்.


பாடலின் சூழல்:
காதலி தன் காதலனுக்காக ஆசை ஆசையாக பார்த்துப்பார்த்து சமைத்த உணவினை சாப்பிடுவதற்கு அழைக்கும் பாடல் இது. அதோடு தன்னுள்ளே ஒளிந்திருக்கும் ஆசையையும் இப்பாடல் மூலம் வெளிப்படுத்த விழைகிறாள் காதலி.
பாடலின் இசை:
இளையராஜா அலட்டிக் கொள்ளாமல் இசையமைத்த பாடல்களில் இதுவும் ஒன்று. கடம், மோர்சிங் போன்ற வெகு குறைந்த இசைக் கருவிகளை வைத்து முழுப்பாடலையும் இசையமைக்க ஒரு தைரியம் வேணும். இது மகேந்திரனின் ஐடியாவா அல்லது இளையராஜவின் ஐடியாவா  என்று தெரியவில்லை. அப்படி இசையமைத்தாலும் அது ஹிட் ஆகவேண்டுமே. இந்தப் பாடல் சூப்பர்ஹிட் என்றுதான் நமக்கெல்லாருக்கும் தெரியுமே. அதோடு பல இடங்களில் இசை எதுவுமில்லாதும் ஒலிக்கிறது, ஆனால் இனிமை குறையவில்லை.
பாடலின் வரிகள்:

நித்தம் நித்தம் நெல்லு சோறு
 நெய் மணக்கும் கத்திரிக்கா
 நேத்து வெச்ச மீன் கொழம்பு
 என்ன இழுக்குதையா
 நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதையா

 பச்சரிசி சோறு
 உப்பு கருவாடு
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
 குருத்தான மொள கீர வாடாத சிறு கீர
 நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது
 அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது
(நித்தம் நித்தம்)

பாவக்கா கூட்டு பருப்போட சேத்து
 பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
 சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
 கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
 தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெருக்குமையா
(நித்தம் நித்தம்)

பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோரு
பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு
 சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
 அதுக்கு எடம் ஒலகத்துல இல்லவே இல்ல
 அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
 இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
 சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
 சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க
(நித்தம் நித்தம்)


பாடலை எழுதியவர் கங்கை அமரன். சூழலை உள்வாங்கிக் கொண்டு மிக அருமையான வரிகளைக் கொடுத்திருக்கிறார். தனக்குப் பிடித்த, ஆசையாய் ரசித்து, ருசித்து புசித்த அத்தனை பதார்த்தங்களையும் பட்டியலிட்டுவிட்டார் என நினைக்கிறேன். பாட்டைக் கேட்கும்போது உணவுப் பிரியர்களுக்கு எச்சில் ஊறுவதில் வியப்பில்லை. இந்தப் பாடலில் அந்தக் காலகட்ட சமூகத்தின் சாப்பாட்டுக் கலாச்சாரத்தையும் எடுத்து வைக்கிறார். நெல்லுச் சோறு என்பது அந்தக்கால கட்டங்களில் ஏழை மக்கள் தினம் சாப்பிடும் உணவல்ல. எப்போதாவது பண்டிகை காலங்களில் மட்டுமே நெல்லுச்சோறு மற்ற நாட்களில் களி அல்லது கூழ்தான். “இவ்வளவையும் எதுக்கு சமைத்திருக்கிறேன்  என்றால் என் மனதில் உள்ள ஆசையைச் சொல்லத்தான்”, என்று இறுதி வரிகளின் மூலம்
அருமையாகச் சொல்லியிருக்கிறார். பழைய சோறு புளிச்சமோரு இதெல்லாம் யாராவது இப்போது சாப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை. கேழ்வரகுக் கூழ் இப்போதெல்லாம் பணக்காரர்கள் சாப்பிடும் உணவாகிவிட்டது. சின்னமனூர் என்பது இளையராஜா, கங்கை அமரன் பிறந்து வளர்ந்த பண்ணைப்புரம் அருகில் இருக்கிறது. அந்தப்பகுதிகளிலெல்லாம் ஆற்று மற்றும் குளத்து மீன்தான்.  அயிரை, வெரால், கெண்டை, கெளுத்தி, குரவை ஆகியவை அவற்றுள் சில. துவையல், அவியல், மசியல், கூட்டு, பொறியல், தீயல்,பெரட்டல், வறுவல், சுண்டல், முறுவல் என தொட்டுக் கொள்வதற்கு மட்டும் எத்தனை வகை பதார்த்தங்கள். இந்த தென் தமிழ்நாட்டுக் காரனுக்கு நாக்கு கொஞ்சம் வீக்குதான்.
பாடலின் குரல்:


பாடலைப் பாடியவர் வானி ஜெயராம். எனக்குத் தெரிந்து இவர் ஆச்சாரமான பிராமணக்குலத்தைச் சேர்ந்த சுத்த சைவர். இளையராஜா இவரைப்பாட தேர்ந்தெடுத்ததும் ஆச்சரியம்தான். ஏனென்றால் இவர் கர்நாடகப் பாடல்களை அதிகம் பாடிவந்தவர். கிராமியப் பாடலுக்கு L.R. ஈஸ்வரி போன்ற பிற பாடகிகள் இருந்தனர். ஆனால் வாணி ஜெயராம்தானா இதைப்பாடியது என்று வியக்குமளவுக்கு அற்புதமாகப் பாடியிருக்கிறார். அனுபவித்தது போல் பாடியிருக்கிறார். கிராமிய மணம் வீசப்பாடியிருக்கிறார். நாட்டுப்புற உச்சரிப்பை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். குரல் வேறுமாதிரி ஒலிக்கிறது. அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை .பெரிதாக இசையில்லாவிட்டாலும் இந்தப்பாடலின் பெரும் பலம் இவர் பாடிய முறை.

தமிழ்த் திரையிசையின் நாட்டுப்புற பாடல் வரிசையில் 'எலந்தைப் பழ' பாட்டு எப்படி நிலைத்து நிற்குமோ அதுபோலவே இதுவும் எப்போதும் ஒலிக்கும்.

தொடரும் >>>>>>>>

10 comments:

 1. அருமை.. பசித்து ரசித்து ருசித்து முடித்தேன்.. உங்கள் பதிவை..

  ReplyDelete
  Replies
  1. பசி அடங்கியதா ? அதிகமாயிற்றா? நண்பா ?

   Delete
  2. இது அடங்குமா? இப்படி ஒரு தொடர் விருந்து படைக்கும் உங்களுக்கு இந்த கேள்வி அடுக்குமா? :)

   Delete
  3. அப்படிப்போடுங்க அருவாளை !!!!!!!!!

   Delete
 2. மீன் கொழம்பு மட்டுமா இழுக்கும்...?

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல்லார் ரொமாண்டிக் மூடில் இருப்பதாக தெரிகிறது .

   Delete
 3. எப்போதும் ராஜா இசையை தூற்றும் நாற்றம் இதில் அவர் தம்பி பாடல் பாடிய வானிஜெயராம் பிராமனியா என்று தேடல் ஆனால் இந்தப்பாடல் ஹிட்சு என்று பாராட்டாத உங்க மனசு வாழ்க சார்!

  ReplyDelete
  Replies
  1. புரியவில்லை , திட்டுகிறீர்களா பாராட்டுகிறீர்களா?

   Delete
 4. ஆச்சரியம் ...நான் சமீபத்தில்தான் என் பதிவில் இந்தப் பாடலைப் பற்றி எழுதியிருந்தேன் . உங்கள் பதிவை இப்போதுதான் வாசிக்கிறேன். இருவருமே வெவ்வேறு வார்த்தைகளில் ஒரே மாதிரியான கருத்தைச் சொல்லியிருக்கிறோம். இளையராஜாவின் இசை ஒரே மாதியான சிந்தனைகளை கொண்டு வரும் என்பது மிகையல்ல ; உண்மை.

  ReplyDelete
  Replies
  1. ஆச்சரியம் தான் சார்லஸ்.

   Delete