Monday, June 30, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி - பகுதி 7 சுல்தானின் கண்கள் !!!!!!!!!!

Topkapi palace 
வேன் ஒரு சுற்று சுற்றி டொப்கப்பி அரண்மனை முன்பு வந்து நின்றது. உயர்ந்த மதில் சுவர்களுடன் இருந்த நுழை வாயிலின் முன் இரண்டு கம்பீரமான துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த ஜவான்கள் கையில் ஸ்டென் கன்னுடன் நின்றிருந்தனர். எல்லோரும் அவர்களைப் பார்த்து ஒதுங்கிச் செல்ல, நான் கிட்டப்போய், "படம் எடுத்துக் கொள்ளலாமா ?", என்று கேட்டேன். அவன் நோ என்று சொல்லி மேலும் விரைப்பானான். அந்த அரண்மனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தத்தான் ராணுவ வீரர்கள் நின்றிருந்தனர்.
வழக்கம்போல் சிறு சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். துருக்கி சுல்தான்களின் அதிகாரபூர்வ இருப்பிடமாக சுமார் 400 வருடங்கள் விளங்கிய (1465-1856) அரண்மனை இது.
Sultan Receiving Dignitaries 
சுல்தான்கள் தங்குவதற்கு மட்டுமின்றி, இங்குதான் பேரரசின் முக்கிய நிகழ்வுகள் அரசு விழாக்கள், பிறநாட்டு தூதுவர்கள் மற்றும் மன்னர்களை கெளரவித்தல் ஆகியவை நடந்தனவாம். 1985ல் யுனெஸ்கோ இதனை “வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்டாக அங்கீகரித்தது.  
சுல்தான் மெஹ்மது  II என்பவரால் கி.பி. 1459ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1465ல்  கட்டி முடிக்கப்பட்டது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த அரண்மனை 4 பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது (courtyards). அதன் உள்ளே பல சிறிய பகுதிகளில் பேரரசின் பொக்கிஷ அறை, சுல்தானின் நூலகம், காசுகள் அச்சடிக்கும் இடம் (Mint) மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் ஆகியவை இருந்தனவாம்.  
முதல் கோர்ட் யார்டில் ஒரு அழகான தேவாலயம் இருந்தது. சுல்தானின் காலத்தில் மாஸ்க்காக மாற்றப்பட்ட இந்த ரோமரின் ஆலயம், இப்போது மீண்டும் ஆலயமாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. முதல் கோர்ட் யார்டில் சில ரோமப்பேரரசின் மிச்சங்களும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டாவது கோர்ட் யார்டின் நுழைவாயிலில்தான் பேரரசர், பொதுமக்களையோ அல்லது விருந்தினரையோ சந்திப்பாராம். அதன் பக்கத்தில் பேரரசின் பிரதம மந்திரியின்  (Grand Vizier) அலுவலகம் இருந்தது. அவர் மற்ற இலாகாவின் அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தூதர்களை சந்தித்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொண்டு சுல்தானிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும். அவர் உட்காரும் ஆசனத்தின் மேல் குறுகலான வலை பின்னப்பட்ட ஒரு ஜன்னல் இருந்தது. உர்ஸ் சொன்னான் அது சுல்தானின் கண்கள் என்று அழைக்கப்பட்டதாம். இதற்கு நேர் மேலே சுல்தான் வந்து உட்காரக் கூடிய வகையில் ஒரு ரகசிய அறை இருக்கிறதாம்.
Eyes of  the Sultan 

ஆனால் கீழே இருக்கிற யாருக்கும் அவர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று தெரியாதலால் உண்மை விளம்பிகளாகத்தான் இருக்க முடியும். அதோடு பிரதம மந்திரியும், பின்னர் சுல்தானை சந்தித்து அறிக்கை அளிக்கும்போது எதையும் மாற்றிச் சொல்லிவிடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.ஆனால் சுல்தானுக்கு இருமலோ தும்மலோ வந்துவிட்டால் என்ன செய்வாராம் என்று தோன்றியது. இப்படி வந்து உளவு பார்ப்பதற்கு பதிலாக அவரே கூட்டத்திற்கு வந்துவிட வேண்டியதுதானே எனக்கேட்டதற்கு உர்ஸ் சொன்னான், இல்லை இல்லை அது புரோட்டோ கால் கிடையாது என்றான்.
Throne Room
அதன் இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், சுல்தான் பிரதம மந்திரியைச் சந்திக்கும் அறை வந்தது. அதில் மேலே விதானம் வைத்த ஒரு சிம்மாசனம் இருந்தது. அதனைத் தாண்டி இடது புறம் அந்தப்புரம் இருந்தது. 
Audience Chamber
அந்த அறையின் மறுபுறம் சென்று ஒரு போட்டோ எடுக்கும்போது, தற்செயலாக அங்கு நின்றிருந்த துருக்கியப் பெண்களும் போட்டோவில் வந்து விட்டனர். அவர்களைப் பார்க்கும்போது தெரிந்தது, சுல்தானின் அந்தப்புரத்தில் எத்தகைய பேரழகிகள் இருந்திருப்பார்கள் என்று.

Turkish Girls 

மூன்றாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அங்குள்ள பல அறைகளில் சுல்தான் மற்றும் அவர் குடும்பத்தினர் பயன்படுத்திய நகைகள், அணிகலன்கள், அலங்கரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பெருமளவில் இருந்தது. அங்கு இருந்த இரண்டு குத்து விளக்குகள் சொக்கத் தங்கத்தில் ஒவ்வொன்னும் 35 கிலோ என்று சொன்னார்கள். பெருமூச்சு விடுவதைவிட வேறென்ன செய்ய முடியும்.
Sofa Pavilion 
அதனைக் கடந்து உள்ளே சென்றால், சுல்தானின் பிரதான மனைவி ஆட்சி செலுத்திய இடமும், நடன அரங்கமும், நீச்சல் குளமும் வந்தன. அங்கிருந்து பாஸ்பரஸ் ஆற்றுப்பகுதியும் இஸ்தான்புல் நகரமும் அழகாகத் தெரிந்தன.
அதன் ஒரு பகுதியில் முகமது நபி அவர்கள் பயன்படுத்திய மேலாடையும் வாளும் வைக்கப்பட்டிருந்தன.
வரும் வழியில் வலதுபுறத்தில் இருந்த பிரமாண்ட அறையில் ஆட்டமன் பேரரசை ஆண்ட பல சுல்தான்களின் ஓவியங்களும், குடும்ப மரமும் (Family  Tree) ஓவியங்களாக வரையப்பட்டு இருந்தன.
நான்காவது வாயிலின் மறுபுறம் இம்பீரியல் சமையலறை இருந்ததாம். தினமும் குறைந்தது 4000 பேருக்கு சமையல் நடக்குமாம்.
Harem Entrance 

அந்தப்புறத்தில் இன்னும் அழகிகள் இருப்பது போல, அதற்கு தனிக்கட்டணம் வசூலித்தார்கள்.குறுகிய நடைபாதை வழியே உள்ளே சென்றால் சுல்தான் தங்குமிடம், சுல்தானின் மனைவிகள், சுல்தானின் அம்மா, சுல்தானின் வைப்பாட்டிகள், பாதுகாவலரான அலிகள் ஆகியோர் வசிக்கும் இடங்கள் தனித்தனியே இருந்தன. ஹமாம் என்று அழைக்கப்படும் துருக்கிய பாத்ரூம்களும் அங்கு இருந்ததைப் பார்த்தேன். அவரவர் தகுதிக்கேற்ப அறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பட்டத்து இளவரசனுக்கு தனியிடம் இருந்தது. சகல வசதிகளும் உள்ளே   இருந்தாலும் , இளவரசன் வெளியே  செல்லவோ  யாரையும் சந்திக்கவோ முடியாது. ஏன் என்பதையும் இன்னும் பல அந்தப்புர ரகசியங்களையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

-தொடரும்.


6 comments:

 1. சுல்தானின் அந்தப்புரத்தில் எத்தகைய பேரழகிகள் இருந்திருப்பார்கள் என்று. ''

  Therinju enna panna?
  Unga writing semaya irukku anna.

  ReplyDelete
  Replies
  1. கனவாவது காணலாம்ல கலீல் பாய் .
   தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

   Delete
 2. படங்கள் மிக அருமை......

  தொடர்ந்து பயணிக்கிறேன் உங்களுடன்!

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete
 4. சுல்தான்லாம் செமய்யா வாழ்ந்துருக்காங்கய்யா...!

  ReplyDelete
 5. இஸ்தான்புல் கேர்ல்ஸ் போட்டோ சூப்பர்ண்ணே... எப்புடியோ தம்பியோட ஆசையை 50% நிறைவேத்திட்டிங்க .. நன்றி

  ReplyDelete