Monday, February 24, 2014

காரைக்குடி பயணம் பகுதி 6: ராஜாதி ராஜன் ராஜ கம்பீர ராஜ பரதேசி வருகிறார் !!!!!! பராக் !!!!!!!!


       இந்தப்பாம்புகளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் எங்கே போனாலும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதனைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்ப நம்ம சித்தன்னவாசல் "சமண கட்டுவிரியன்" என்ன ஆனது என்று பார்ப்போம்.
       தலையைத்தூக்கி என்னையே பார்த்துக்கொண்டிருந்த 'விரியன் பாம்புக்குட்டி' யைப் பார்த்து என் வீரம் எல்லாம் சோரம் போனது. என் கலவர முகத்தைப் பார்த்த மாவீரன் எட்வின், ஒரு நீண்ட குச்சியை எடுத்து அதனைப்பிடித்து அப்புறமுள்ள புதர்ப்பகுதியில் விட்டார்.
       "அண்ணே போவோம், 'சமண மரணம்' என் உடம்புக்கு ஒத்துக்காது”, என்று சொல்லி மலையிறங்கினோம். விரைவாக கீழே வந்து சேர்ந்தோம். அந்த வழுக்குப்பாறையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஏறுவதுதான் கடினம், இறங்குவது மிக எளிது (பரதேசியின் தத்துவம்-12).
         கார் கிளம்பி மதுரை வழியில் சென்றது."என்னன்னே இன்னிக்கு அவ்வளவுதானா?" என்றேன். "இன்னும் ஒரு இடம் பாக்கி", என்று சொன்னனார். சில நிமிடங்களில் ஒரு கம்பீரமான கோட்டைக்கு முன்னால் காரை நிறுத்தினார். அது என்னவோ தெரியல இந்த அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், மன்னர்கள் வரலாறு இதனை அறிவதிலும் பார்ப்பதிலும் எனக்கு அதீத ஆர்வம். நான் நினைக்கிறேன் என் DNA யில் உள்ள அரச பரம்பரையின் வீர ரத்தம் கொஞ்சம் நஞ்சம் மிச்சம் சொச்சம் இன்னும் இருக்கும் போல.
       "ஆமா நீ ஒரு தொடை நடுங்கின்னு ஊருக்கே தெரியும் இதுல ராஜ பரம்பரையாம்".
       "வந்துட்டான்யா வந்துட்டான்யா, நல்ல குடி நாயகம் தூத்துக்குடி வெங்கலம்".
       "இப்பதான் பாம்பைப் பார்த்து அந்த நடுநடுங்கின. இதில இவர் பரம்பரை பெருமை வேற".
       "மகேந்திரா பாம்பென்றால் படையும் நடுங்கும்னு சொல்வாங்கல்ல, அது அரச பரம்பரைக்கும் விதிவிலக்கல்ல".
திருமயம் கோட்டை
Thirumayam Fort, Tamil Nadu
       புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கும் இது ஒரு அழகான மலைக்கோட்டை. இது நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராமநாதபுர மன்னர் விஜய ரகுநாத சேதுபதியால் (கிழவன் சேதுபதி) 1687-ல் கட்டப்பட்டது. அதன்பின் முதலில் இதன் தலைவராகத்தான் ரகுநாத ராய தொண்டைமான் நியமிக்கப்பட்டார். இவர் படே கில்லாடிதான். தன் கோதரியை திருமணம் செய்து கொடுத்ததால் தொண்டை மண்டலத்திற்கே அரசராகி விட்டாரே. இதுக்குப்பேர்தான் பெண்ணைக்கொடுத்து மண்ணைப்பெறுவதா? 

       ஆரம்பத்தில் 7 அடுக்குகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் (Ring Fort) இப்போது நான்கு பகுதிகள்தான் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Archeological Survey of India)  கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டை, பாளையக்காரர்கள் போரில் ஈடுபட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும்.  

    
        மூன்று வெவ்வேறு நுழைவாயில்களைக் கொண்ட கோட்டையான இதில் ஒவ்வொரு புறமும், அனுமார், சக்தி, கணபதி ஆகியோருக்கான கோயில்கள் உள்ளன. அது தவிர கள்ளர்களின் காவல் தெய்வமான கருப்பருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. மேலே போகிற வழியில் இருபுறமும் வெடி மருந்துக் கிடங்குகள் இருக்கின்றன (Magazine). இன்னும் சில சந்நிதிகளும் உட்புறத்தில் இருக்கின்றன. குறிப்பாக வைணவர்களுக்குத் தனியாக ஸ்ரீ சத்திய மூர்த்தி உய்யவன நாச்சியார் சந்நிதியும், சைவர்களுக்கு சத்யகிரீஸ்வரர் -வேனுவனேஸ்வரி ஆகிய சந்நிதியும் குடைவரைக் கோயில்களாக பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில்களுக்கு செல்வதும் சற்றே கடினம்.

       மேலே இரு பகுதிகளிலும் இயற்கையான குங்கள் இருக்கின்றன. மொட்டைப் பாறையில் நீருற்றினைப் படைத்த இந்தக் கடவுளை புரிந்து கொள்ளவே முடியவில்லை போங்கள்.  


       கோட்டையில் ஆங்காங்கே பீரங்கிகளைக் காண முடிந்தது. நடுவிலே ஒரு   உயரமான பீடத்தில் ஒரு பெரிய பீரங்கி இருந்தது. செங்குத்துப் படிகளில் ஏறி இரண்டு பேரும் பீடத்தின் மேலே சென்று பீரங்கி ஆராய்ச்சி செய்து திரும்பினோம்.
       இந்தக் கோட்டையில் தான், ஊமைத்துரை ஒளிந்திருந்த சமயத்தில் பிரிட்டிஷ் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதனால் இக்கோட்டைக்கு ஊமையன் கோட்டை என்ற மற்றொரு பெயர் சொல்லப்படுகிறது. கோட்டை விஜயம் முடிந்து கீழிறங்க சூரியன் மறையத்துவங்கியது.
       “என்ன ஆல்ஃபி இன்னிக்கு பார்த்த இடங்கள் திருப்திதானே", என்றார் எட்வின்.
       “அண்ணே ஒரே நாளில் இவ்வளவு இடங்கள் பார்த்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி, ரொம்ப நன்றின்னே", என்றேன்.
       "அதுக்குள்ள நன்றி சொல்லாதே, திருமலை நாயக்கர் மஹாலை ராத்திரியில் பார்த்திருக்கிறாயா", என்றார்.
       “இல்லையே "என்று யோசிக்கும் போது, “அதான்பா ஒலி ஒளிக்காட்சி", என்றார்.
       "அண்ணே போலாம்னே, சின்ன வயசில பார்த்தது, டைம் இருக்கா".
       “எட்டுமணிக்குத்தான் நிகழ்ச்சி. குயூரேட்டர் என் நண்பர்தான் நேராப் போயிரலாம்”னு சொன்னார். ஆஹா பிரபாவுக்கும் போன் செய்தேன். அதிசயமாக அவரும் ஃப்ரீயாக இருந்ததால், மனைவியையும், மகளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். எட்வினின் நண்பர்கள் என்பதால் ராஜமரியாதை.  
       திருமலை நாயக்கரின்  வரலாற்று நிகழ்வுகள் கண்ணுக்கு ஒளியாகவும் காதுக்கு ஒலியாகவும் நன்றாக நடந்தது. "ரொம்பப் பழசு, புதிய டெக்னிக்கில் இதனை இன்னும் சிறப்பாக பண்ணலாம்", என்று சொன்னார் பிரபா. விசுவல் கம்யூனிகேஷன் HOD மட்டுமல்லாமல், அவர் ஒரு இசையமைப்பாளர் அல்லவா.
       ஒரே ஒரு குறை என்னவென்றால் “ஈ” என்ற படத்தில், இறந்தவன் ஈயாக மாறி வந்து பழிவாங்குவது போல், மஹாலில் வேலை பார்த்த பழைய படைவீரர்கள் எல்லாம் கொசுக்களாக மாறி ரத்தம் குடிக்க வந்தனர். என்னிடம் மட்டும் பாச்சா பலிக்கவில்லை. என்னிடம் ரத்தமில்லாமல் ஏமாந்ததோடு, எலும்பில் கடி விழுந்து பல் உடைந்து பொக்கை வாயாகிப் போனார்கள், யார்ட்ட ம்ம் யார்ட்ட.
       எட்வினுக்கு நன்றி சொல்லி, டிரைவர் சரவணணையும் அனுப்பிவிட்டு, காரில் திரும்பும் போது, வனராஜிடமிருந்து போன் வந்தது. "டேய் சிவகங்கை போகனும்னு சொன்னியே, நாளைக்குப் போகலாமா?”, என்று. உற்சாகமாக ஓகே  என்று உடனே சொன்னேன் .
என்ன நண்பர்களே , சிவகங்கைக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திராம்ல ?
காரைக்குடி பயணம் முற்றுப்பெற்றது.
விரைவில் எதிர்பாருங்கள்  சிவகங்கை பயணம் .

பின் குறிப்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கு கொண்ட ,  பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுகிறேன்.
 6 comments:

 1. திருமயம் கோட்டை தகவல்கள், படங்கள் அனைத்தும் அருமை... நம்ம ஊர் மலைக் கோட்டை ஞாபகம் வந்தது... 12வது தத்துவத்திற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நன்றிகள் திண்டுக்கல் தனபாலன்.

  ReplyDelete
 3. “ஈ” என்ற படத்தில், இறந்தவன் ஈயாக மாறி வந்து பழிவாங்குவது போல், மஹாலில் வேலை பார்த்த பழைய படைவீரர்கள் எல்லாம் கொசுக்களாக மாறி ரத்தம் குடிக்க வந்தனர். ....நகைச்சுவை உணர்வு superb alfy

  ReplyDelete
 4. இந்த மாதிரி ஒலி-ஒளி காட்சிகள் காட்டும் பல இடங்களில் கொசு, பூச்சிகள் தொல்லை கொஞ்சம் அதிகம் தான். மத்தியப்பிரதேசத்தில் சில இடங்களில் ஒலி-ஒளி காட்சிகள் பார்த்தபோது நானும் அனுபவித்திருக்கிறேன்....

  சிறப்பான பயணக்கட்டுரை - பாராட்டுகள்....

  தொடர்ந்து சிவகங்கைக்கும் பயணிக்கிறேன் - உங்களுடன்!

  ReplyDelete
 5. நன்றி வெங்கட் நாகராஜ் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ஓட்டுக்கும் .

  ReplyDelete