Monday, February 3, 2014

காரைக்குடி பயணம் பகுதி 3: அக்கா மீன் குழம்பு பக்கா !!!!!!!

                நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் இப்பகுதி, செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இவர்கள் இலங்கை மற்றும் பர்மா நாடுகளுக்கு சென்று பெரும் செல்வமீட்டினர். அதன் பின்னர் சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கும் சென்றனர். வியாபாரத்திலும் வங்கிகள் நடத்துவதிலும் பெயர்போனது இந்த சமூகம்.

        அந்த செட்டிநாட்டின் தலைநகரம் என்று காரைக்குடியைச் சொல்லலாம். காரை வீடுகள் அதிகமாக இருப்பதால் ஒருவேளை காரைக்குடி என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் 74 கிராமங்களை உள்ளடக்கியது தான் செட்டிநாடு பகுதி.

        காரைக்குடியில் நுழைந்ததுமே பெரிய பெரிய வீடுகள் வரவேற்றன. "பழைய பொருட்கள் (Antiques) வாங்க விருப்பமா ?”, என்று எட்வின் கேட்டார். "தயவு செய்து கூட்டிப் போங்கள்", என்றேன். செட்டிநாட்டு மக்கள் பல நாடுகளில் பயணம் செய்தவர்கள் என்பதால், பல நாட்டுப் பொருள்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பழைய வெள்ளி, வெங்கலம், ஐம்பொன் மற்றும் மரத்தாலான பல பொருட்கள் அங்கே இருந்தன. 

குறிப்பாக பர்மா தேக்கினாலான கட்டில், பீரோ, மேஜை, நாற்காலிகள் கலை நுணுக்கத்தோடு வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்தக் கடைகள் ஒரு பகுதியில் வரிசையாக இருந்தன. அதிகமாக வெளிநாட்டுப் பயணிகள் இங்கு வருவதால் விலைகள் தாறுமாறாக இருந்தன. சில நாணயங்கள் மற்றும் சில மர சாமான்களை மட்டும் (பல்லாங்குழி பலகை)  வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அடுத்து எங்கே போகிறோம் என்றேன்?

        "ஆயிரம் ஜன்னல் வீடு" என்றார். ஆயிரம் ஜன்னல் வீடா? என்று வாயைப் பிளந்த என்னை, "வந்து பார்," என்று அழைத்துச் சென்றார். ஆயிரம் வாசல் இதயம் என்று கண்ணதாசன் பாடியது ஒருவேளை இதை மனதில் வைத்துத் தானோ?.

        18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஒவ்வொரு வீடும் அரண்மனை அளவு பெரியது. பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பொருட்களால் கட்டப்பட்ட இந்த வீடுகள் இந்தியக் கட்டடக்கலையையும், ஐரோப்பா, குறிப்பாக ஃபிரான்ஸ் கட்டடக் கலையையும் இணைத்து வடிவமைக்கப்பட்டவை. ஆயிரம் ஜன்னல் வீட்டைப்பார்த்து அதிசயத்து விட்டேன். பல மாடிக்கட்டடமான இந்த வீட்டில் எங்கெங்கு நோக்கினும் ஜன்னல்கள் இருந்தன. எல்லாமே பர்மா தேக்கு என்றார்கள். கப்பல் கப்பலாய் இறங்கியிருக்கும் போல. ஆனால் அவ்வளவு பெரிய வீடு பூட்டிக்கிடந்தது. அது மட்டுமல்ல பெரும்பாலான மேன்ஷன் என்று அழைக்கப்படுகிற அரண்மனை வீடுகள் எல்லாமே பூட்டிக்கிடந்தன. வெளிநாடுகளில் குடியேறியவர்கள் கிட்டத்தட்ட இந்த வீடுகளை கைவிட்டு விட்டதால் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. என்ன ஒரு அநியாயம் பாருங்கள். தெருக்களெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. ஏதாவது ஒரு வீட்டில் குடியேறினால் கூட யாரும் கேட்க மாட்டார்கள் போல இருந்தது.
        அதற்குள் சாப்பாட்டு நேரம் வந்துவிட, "அண்ணே பசிக்கிற மாதிரி இருக்கு. ஒரு நல்ல செட்டிநாடு உணவகத்திற்குச் செல்வோம்", என்று சொன்ன போதே, செட்டிநாடு பதார்த்தங்கள் கண்முன் தோன்றி வாயுள் எச்சிலைப் பெருக்கின. "காரைக்குடி", 'அஞ்சப்பா', 'ஆச்சி', 'அம்மா' என் பலவித உணவகங்களும் நினைவில் வலம் வந்தன. "சரி வா போவோம்", என்று எட்வின் சொல்ல காரில் ஏறினோம்.
        “எந்த உணவகத்துக்கு?", என்றேன். "அக்கா உணவகம்" என்றார். அம்மா ஆச்சி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அக்கா உணவகமா? அது எது என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்தேன்.

        போகும் வழியில், ஒரு கோவிலைக் காண்பித்தார். அதன் அருகில் இருந்த ஊரணி அல்லது தடாகத்தில் தண்ணீர் பச்சை நிறத்தில் இருந்தது . இதுதான் பச்சைத் தண்ணியோ என்று நினைத்து என் ஜோக்குக்கு நானே சிரித்துக்கொண்டேன். "இந்த இடத்தில்தான் "நாதஸ்வரம்" டி.வி. சீரியல் பாட்டு எடுக்கப்பட்டது", என்றார். ஓ நம்ம திருமுருகன் சீரியல், அட காரைக்குடியில் தானே எடுக்கிறார்கள் என்று ஞாபகம் வந்து, அண்ணே அந்த ஷூட்டிங் பார்க்க முடியுமா? என்றும் அந்தக் கோவிலைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னேன்.

        "ஆல்ஃபி, அதற்கெல்லாம் செலவழிக்க நமக்கு நேரமில்லை இன்னொரு முறை அதற்கென தனியாக வருவோம்", என்றார். அதனால் ஒரு படம் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். நானும் கம்மென்று உட்கார்ந்து   , "அக்கா உணவகத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

        கார், ஓரம்கட்டப்பட, ஒரு வீட்டிற்குள் என்னை அழைத்துப்போனார். "இதுதான் என் சிஸ்டர்", என்று ஒருவரை அறிமுகப்படுத்த, அவர்கள், "கைகழுவுங்கள் முதலில் சாப்பிட்டுவிடலாம்", என்றார்கள். நான் எட்வினைப் பார்க்க அவர் சொன்னார், "இதுதான் அக்கா உணவகம்", என்று.
        சில வீடுகளில் அசைவம் சாப்பிட்டு அசெளரியம் நேர்ந்ததால், தெரியாத வீடுகளில் அசைவம் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். அதனை எப்போதோ எட்வினிடம் சொல்லியிருக்கிறேன் போலிருக்கிறது.

        அக்கா அவர்கள், "தம்பி வெஜிடேரியன் என்பதால் வெறும் காய்கள்தான் செய்திருக்கிறேன்", என்று சாட்சாத் என்னைப்பார்த்து தான் சொன்னார். பாவம் எட்வின் எனக்காக அவரும் சைவம் சாப்பிடப்போகிறார் என்று பார்த்தால், அவர் அடுத்தபடியாக,  "எட்வின் உனக்கு தனியாக செய்திருக்கிறேன்", என்று சொன்னார்கள். 

நான் பரிதாபமாக சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கு பொரியலையும் சாப்பிடும்போது, எட்வின் ஒரு வார்த்தை கூட கேட்காமல், அயிரை மீன்குழம்பை ஊற்றி கரகரவென பிசைந்து கவளம் கவளமாக உள்ளே  தள்ளினார். 

தொட்டுக்கொள்ள வைத்திருந்த வஞ்சிர மீன் வருவலையும் வஞ்சகமில்லாமல் நொறுக்கினார். என் நிலைமை, குழம்பில் கொதிக்கிற கெண்டை மீன் போலானது. காரைக்குடி போய் அசைவம் சாப்பிடாமல் வந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். "அக்கா மீன் குழம்பு பக்கா"என்று சொல்லி வேற கடுப்பைக்கிளப்பினார். "சரி சரி நேரமாச்சு போலாம்", என்றேன். "தம்பி சரியாகவே சாப்பிடலயே", என்று சொன்னது இந்த தடவை என்னைப் பார்த்து அல்ல, ஏப்பம் விட்டு எழுந்த எட்வினைப் பார்த்து சொன்னார்கள். எட்வின் நீங்கெல்லாம் நல்ல வருவீங்க என்று மனதில் நினைத்துக்கொண்டே "அண்ணே அடுத்து எங்கே", என்று கேட்க  "கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை என்றார்".


தொடரும் >>>>>>>>>>>>>

20 comments:

 1. Replies
  1. உங்கள் ஓட்டுக்கு நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 2. ///நாட்டுகோட்டை செட்டியார்கள்////

  இவ்வளவுகாலம் நான் நாட்டுகொட்டை செட்டியார்கள் என்றே நினைத்து வந்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இந்த லொள்ளுதானே வேணாம்கிறது ?

   Delete
 3. ///வஞ்சிர மீன் வருவலையும்///

  பொறிச்ச வஞ்சிர மீனை சாப்பிட கொடுத்து வைக்காத நீர் போன ஜென்மத்தில் பாவம்தானய்ய செய்து இருக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பாவமாக இருக்கும்?

   Delete
 4. ///நான் பரிதாபமாக சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கு பொரியலையும் சாப்பிடும்போது, எட்வின் ஒரு வார்த்தை கூட கேட்காமல்,///

  இங்கு ஒரு திருத்தம் .. நீங்கள் சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கு பொரியலையும் சாப்பிடும்போது, எட்வின் உங்களை பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தார் என்று வந்து இருக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அது பரிதாபத்திலும் பரிதாபம்.

   Delete


 5. ஆயிரம் ஜன்னல் வீடு இருந்தால் என்ன எதிர்த்த வீட்டில் ஒரு நல்ல அழகான பிகர் இல்லையென்றால் எல்லாம் வேஸ்டுதானுங்க

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணும் இல்லை எல்லாம் வெத்து தெருக்கள்.

   Delete
 6. ஆயிரம் ஜன்னல் வீடு - இன்னும் படங்கள் போட்டிருக்கலாம்...

  எட்வின் அவர்கள் மனதில் நினைத்தது சரி தான்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 7. very nice sekar athe areavil chokkanathapuram endra ooril thaan vathiyaaraka nanku varudam velai parthen therukkal maathireye antha oorin makkal manasum visaalam thaan ennai anbaaha paarthu kondaarkal antha oorai vittu vanthaalum antha oor students innum enaku phone pannik kondirukkiraaarkal sekar maraka mudiyaatha oor matrum en pillaikal !!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணன் , வேலை பார்த்த ஊரின் நினைவுகளைப்பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி .

   Delete
 8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சுரேஷ்.. . தகவல் கொடுத்த திண்டுக்கல் தனபாலன் & ரூபனுக்கும் என் நன்றிகள்

   Delete
 9. சோக்கா சொல்லிக்கினபா... இன்னாபா நீ கர்வாட் மீனுலாம் துன்ன மாட்டியாபா...? சர்தாம்போ... பல்லு கீற எட்டுவினு பக்காவா துன்னுகினார் போல...

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
  Replies
  1. ஆமாப்பா முட்டா நைனா கவுச்சி துண்ணாம படா பேஜாராப்போச்சு.
   வந்ததுக்கு டாங்க்ஸ்பா.

   Delete
 10. ஆயிரம் ஜன்னல் வீடு..... அப்பா என்னதொரு கலைநயம் இந்த வீடுகளில்....

  அருமை. தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete