Monday, July 22, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 4 : கொலையாளி ஆன மலையாளி


        என்ன அழகுராணிகளா? பிச்சை எடுக்கிறார்களா? என்று கேட்டால் எனக்கும் அதாங்க பாஸ் ஆச்சரியம். சிலபேர் நம்மூர் அரிதாரம் பூசிய சினிமா அழகிகளை மிஞ்சிவிடுவார்கள். பெரும்பாலும் விடலைப்பெண்கள், சப்வேயின் உள்ளே உள்ள வராந்தாக்களிலும், படிக்கட்டுகளின் ஓரத்திலும் இவர்களைப் பார்க்கலாம். சிலசமயம் குழந்தைகளை கையில் வைத்திருப்பார்கள் (யார் பெத்த குழந்தையோ, பாவம்). ஒரு சமயம் படிக்கட்டு இறங்கும் இடத்தில், பால் கொடுக்கும் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தேன். இரண்டாம் தடவை அதே பெண்ணைக் குழந்தையுடன், அதே போசில் பார்க்கும்போது, அதே குழந்தையா? இல்லை வேறு குழந்தையா? என்று சந்தேகித்து உற்றுப் பார்க்கும்போது, நான் வேறு எதையோ பார்க்கிறேன் என்று தப்பாக நினைத்துவிட்டு, நன்றாக மூடி, என்னை ஒரு முறை முறைத்தாள். ஐயையோ விடும்மா தாயி என்று சடுதியாக நகர்ந்து மறைந்தேன். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா  அல்லது நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன் .தம்மை தகுதிப்படுத்திக்கொள்ளவில்லை அல்லது இதிலேய நல்ல வசூல் கிடைக்கிறது என்றுதான்  நினைக்கக் தோன்றுகிறது. யோசித்துப்பார்த்தேன். நம்மூரில் மட்டும் இவர்களை ரோட்டில் பார்த்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தால், சரி சரி நினைக்கவில்லை விடுங்கள்.

இசைக்கலைஞர்கள்:


     இவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுவார்கள். தனிமையாக வந்து சிலர் பாடுவது சகிக்காது. காசு கொடுத்து அவர்களை விரைவாக நகர்த்த வேண்டிவரும். சில இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பவர்களின் திறமை ஆச்சரியமூட்டும். குறிப்பாக ஹாலோ கிடாரில் ஒரு வெள்ளைக்காரன் விரல்களால் பிளக்கிங்  பண்ணுவது மிக அருமையாக இருக்கும். ஒரு கொரிய சிறுவன், கேசியோ கீபோர்டில் அநாயசமாக வாசிப்பான். ஒரு ஆப்பிரிக்க இன இளைஞன் டிரம்சில் தனி ஆவர்த்தனம் வாசிப்பான்.
  இன்னொரு ஆப்பிரிக்க முதியவர் சைலபோன் போன்ற எவர்சில்வர் பாத்திரத்தில்  கினிகினி நாதமூட்டி பாடல் இசைப்பார். சில ஆசியப் பெண்கள் பெயர் தெரியாத வாத்தியங்களை இசைப்பார்கள்.
      ஒரு இத்தாலிய முதியவர், கையில் கிடார், வாயில் மௌத் ஆர்கன், காலில் டேம்பரின் ஆகியவையுடன் ஒரு இசை ஃப்யூசன் நடத்திக்காண்பிப்பார். ஒரு வயலின் வாசிப்பவரும் இதையே செய்வார். இந்தியரைப்பார்த்தால் ஜனகனமன வாசிப்பார்.

       ஒரு ஆப்பிரிக்க பாடகர் குழு சப்வேயில், 
ஒவ்வொரு கேரேஜாக சென்று பாடும். சிறப்பு என்னவென்றால் முழுவதுமாக "அக்கபில்லா" என்று சொல்லப்படுகிற இசையின்றி பலவித பார்ட்ஸில் பாடுவது. அதன் செழுமை பல தேர்ச்சிபெற்ற கொயர்களை விட நன்றாகவே இருக்கும். ஒரு மெக்சிகோ 'மரியாச்சி' குழு பல கிடார்களுடன் வந்து அசத்தும்.இவர்கள் எல்லாருமே அனுமதிபெற்றவர்களல்ல. பணம் பெறுவதே குறிக்கோள்.

    சப்வே ஸ்டேசன் உள்ளே ஆனால் ரயிலைவிட்டு வெளியே வாசிக்கும் குழுக்கள் அனுமதிபெற வேண்டும். அதாவது வாசிப்பவர்களின்  குழுவின் பெயர் மற்றும் லைசென்ஸ் நம்பர் போட்ட பேனர் அவர்களது பின்னனியில் கட்டப்படும். ஒரு தேர்ந்த குழுவைப்போல், கிடார், டிரம்ஸ், கீபோர்டு போன்ற சகல வாத்தியங்களையும் வைத்து வாசிப்பார்கள். இந்தக்குழுக்கள் தாங்கள் வெளியிட்ட CD களையும் விற்பார்கள். அவர்களை வெளியே ஏதாவது நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வருவார்கள்.இதிலே பலநாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் வித விதமான கருவிகளை பயன்படுத்துவார்கள். குறிப்பாக சிவப்பிந்திய குழுக்களின் இசை மிகநேர்த்தியாக, அரிதாக இருக்கும். நம்ம மதுரைக்கார அண்ணாச்சி கராத்தே புகழ் "ஷிஹான் ஹுசைனி " இங்கு வரும் போது, இப்படித்தான் காசு சேர்த்ததாக  எழுதியிருந்தார் .

         ஆப்பிரிக்கஇளைஞர்குழு,பாத்திரங்கள்,
டிரம்கள், பிளாஸ்டிக் வாளிகளை வைத்து இசையெழுப்பி அதகளம் பண்ணுவர். இவர்களெல்லாம் பிச்சைக்காரர்களா என்று கேட்டால் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்வேன்.
      வெறும் விளம்பரத்திற்காக மட்டும் வாசிப்பவர்களாகத்தெரியவில்லை, பார்த்து ரசிக்கும் மக்கள், மனமுவந்து டாலர் நோட்டையோ இல்லை சில்லறைகளையோ கொடுத்தாலும் நன்றி சொல்லி ஏற்றுக்கொள்வார்கள். பெரும்பாலான குழுக்களின் முன்னே பெட்டிகள் வைக்கப்பட்டு "டொனெஷன் அக்சப்டெட்" என்று எழுதியிருக்கும்.      எனவே இந்தப்பிச்சைக்காரர்களின் உலகம் தனி உலகம். அவர்களது வருமானம் எவ்வளவென்று கணக்கிட்டு சொல்ல முடியாது.
     இது தவிர பார்க்க நன்றாக இருக்கக்கூடிய சில வெள்ளைக்கார இளைஞர்களும் தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுப்பார்கள்.

 மிக ஆரோக்யமாகத்தெரியும் இவர்கள் வேலைக்குச் செல்லக் கூடாதா? என்றும் ஒரு வேளை டிரக் அடிக்டாக இருப்பார்களோ என்றும் தோன்றும். பார்த்தால் அப்படியும் தெரியவில்லை.

     சமீபத்தில் ஒரு தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இளைஞன், ஒருவன் ஒரு சிறிய போர்டு வைத்திருந்தான். ரேன் கண்ணாடி வாங்கவும், ஐஸ் காப்பி வாங்கவும் காசு வேண்டும் என்று எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். ஆனால் அதன் கீழே சிறிய எழுத்தில் " ஜஸ்ட் கிட்டிங், நீட் மணி டு ஈட் " என்று எழுதியிருந்தது.

 ஒரு நாள் மாலை ஆபிஸ் முடிந்து, சப்வேயில் வந்து இறங்கி வீட்டிற்குச் செல்ல Q-40 பஸ்ஸுக்காக சட்பின் புல்வர்டில் காத்திருந்தபோது, ஒருவன் அருகில் வந்து 'மலையாளியோ? ' என்றான். கண்கள் சிவந்திருந்தது. ஏதோ போதை பானம் வாடை வீசியது. “இல்லை” என்றேன். அவன் விடவில்லை, “பின்ன எந்த ஊர்” என்றான். சென்னை என்றதும், “ஓ தமிழா, எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லி “அவசரமாக ஒரு பத்து டாலர் வேண்டும்” என்றான். வாலட்டை எடுத்து ஒரு டாலர் தரலாம் என்று பார்த்தால் 20 டாலர் நோட்டுகள் மட்டும் இருந்தன. குடித்தழிபவனுக்கு 20 டாலர் கொடுக்க மனம் வரவில்லை என்பதால், சில்லறை இல்லை என்றேன்.

 முறைத்துப்பார்த்த அவன் வாலட்டை என்னிடம் காண்பி என்றான். என்னுடைய எல்லா எச்சரிக்கை செல்களும் விழித்துக்கொள்ள உடல் பதறி, மறைத்தேன். அதற்குள் பஸ் வந்துவிட விரைந்து ஏறினேன். அவனும் பின்னால் ஏறி, கட்டணம் செலுத்தாமல் என்பின் உட்கார்ந்து கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான். எனக்கு அவமானமாகவும் ஆத்திரமாகவும், இருந்தது. என்னை கொன்று விடுவதாக வேறு சவால் விட்டுக்கொண்டிருந்தான். சகபயணிகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்த ஸ்டாப்பில் சட்டென்று இறங்கி ஒரு கடையில் சென்று மறைந்தேன். அவனும் இறங்கி என்னைத்தேடி காணாமல் திரும்பிப்போய்விட்டான். அவனை அவ்வப்போது, மிகுந்த போதையுடன் சட்பின் புலவர்டு அருகில் உள்ள வைன் ஷாப்பில் பார்ப்பேன். வேறு பாதையில் மறைந்து சென்றுவிடுவேன். அன்றொரு நாள் இரவு சப்வேயை விட்டு வெளிவரும்போது அதே இடத்தில் NYPD போலிஸ் கார் அருகில் நிற்க, ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்த உடலைப்பார்த்து திடுக்கிட்டேன்.அந்த மலையாளிதான்.குடிப்பதற்கு பணமாக கேட்டவன் இப்போது பிணமாக .

முற்றியது 



9 comments:

  1. உங்கள் பதிவுகள் உள்ளதை உள்ளபடியே சொல்லிஸ் செல்லுகின்றன. பாராட்டுக்கள் நண்பரே... உங்கள் வலைதளத்தை நமது இந்திய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறேன். குறிப்பாக அமெரிக்கா பற்றி அதிகம் தெரிய ஆசைபடுபவர்களுக்காக..

    எனது பதிவுகளிலும் உங்களை அறிமுகப்படுத்த எண்ணுகிறேன் பண்ணலாம்தானே?

    ReplyDelete
  2. உங்கள் அன்புக்கு நன்றி .தாராளமாக உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .விமர்சனங்களையும் தயங்காமல் பதிவு செய்யுங்கள்..

    ReplyDelete
  3. வழக்கம் போல..நீ, "துஷ்டனைக் கண்டால் தூர விலகு"

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டு ,கரெக்ட்டு கரெக்ட்டு .

      Delete
  4. அருமை புலவரே. தொடரட்டும் உமது எழுத்துப்பணி!வாழ்த்துக்களுடன் - சையத் அ

    ReplyDelete
    Replies
    1. பணி என்று நினைக்கவில்லை, எப்படியோ

      பிணி போல் என்னை பிடித்துக்கொண்டது;ஆனாலும்

      தனியாக இருக்கும் நேரத்தில் , எழுதுவது

      கனி போல் எப்போதும் இனிக்கின்றது .

      Delete
  5. சென்றவாரம் நியூயார்க்கில்
    நீங்கள் சொல்லிச் சொல்வது போலப்
    பலரைப் பார்த்தேன்

    ஆச்சரியமாகத்தான் இருந்தது

    ஒருவன் ஸேஞ்ச் என்றான்

    நான் சில்லறை கேட்கிறான் என
    நினைத்துப் பர்ஸ் திறக்க பின் உடன் வந்த
    உறவினர் அதற்கான விவரம் சொல்லி
    இழுத்துப் போனார்.

    தொடர்ந்து வாசித்து வருகிறேன்

    அடுத்த வாரம் நியூயார்க்கின் அடுத்த
    பகுதியை பார்க்க இருக்கிறேன்

    இரசித்துப் பார்க்க தங்கள் பதிவுகள்
    நிச்சயம் உதவியாய் இருக்கும் அல்லவா ?

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நியூயார்க்கில் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் ரமணி சந்திக்கலாம். alfred_rajsek@yahoo.com

      Delete