Monday, February 19, 2018

வசந்த முல்லை போலே வந்து !!!!!!!!!!!!!!!!!!!

                                              வேர்களைத்தேடி பகுதி: 6 ( ஒரு மீள் பதிவு )


             

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/02/blog-post_12.html

'டேய் முருகா அழுவாதராஎன்று நான் சொல்லி எவ்வளவு தேத்தியும் முருகன் அழுவறத நிறுத்தல. தேம்பி தேம்பி விசும்பி விசும்பி ரொம்ப அழுதுட்டான். பக்கத்துல இருந்த மகேந்திரனும் சொல்லிப் பார்த்தான். ம்ஹீம் முருகன் அழுவறத நிறுத்தவேயில்லை.
ஆனா அவன் பக்கமிருந்து யோசிச்சாஅவன் அழுவறதுல ஒரு நியாயம் இருக்குன்னுதான் சொல்வேன். தன் சொந்த அப்பா வேற ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிச்சா எந்த மகனுக்குத்தான் கோபம்வராது ?. சின்ன வயசுப் பசங்களான எங்களுக்கு கோபம் வந்தா அழறதத்தவிர வேறென்ன செய்ய முடியும். கொஞ்சம் இருங்க என்ன நடந்ததுன்னு சொல்றேன். முப்பது வருஷம் முன்னால நடந்ததுன்னாலும்,இப்ப நினைச்சாலும் அப்படியே ஞாபகத்தில் இருக்குது.

எங்கூர் தேவதானப்பட்டி, கிருஷ்ணஜெயந்தி திருவிழாவுக்கு களை கட்டியிருந்துச்சு. ஏழு நாளுக்கு முன்னால பந்தல் கால் நட்டதிலிருந்து நாங்க அதுக்கு ரெடியாக ஆரம்பிச்சுடுவோம். எங்க பள்ளிக்கூடத்துக்கு  அந்த திருவிழா நடக்குற மூணு நாள் லீவு விட்டுருவாங்க. சனி ஞாயிறு சேர்த்து மொத்தம் அஞ்சு நாள் லீவு வந்துரும். மத்த பள்ளிக்கூடம்லாம் லீவு கிடையாது. எங்களுக்கு மட்டும்தான் லீவு. ஏன்னா எங்க பள்ளிக்கூட முகப்புதான் கோவில் ஆயிரும். கிருஷ்ணருக்கு தனியா கோவில் எதுவுமில்லை. எங்க இந்து நடுநிலைப்பள்ளி, போடி ஜமீந்தார்  மாளிகையிலதான் நடந்து வந்துச்சு. போடி ஜமீந்தார் மாளிகை, எங்க ஊர் பிள்ளைமார் சங்கப் பொறுப்பில இருந்துச்சு. ஒவ்வொரு வருஷமும் பிள்ளைமார் சங்கம்தான் கிருஷ்ணஜெயந்தி விழாவை நடத்துவாங்க.

பள்ளிக்கூட முன்னாடி உள்ள மைதானத்துல முழுசா பந்தல் போட்டு ஒரு திடீர் கோவில் உருவாகும். பள்ளிக்கூடம் உள்ளே இருக்கிற ஒரு இருட்டு ரூம்ல ஒரு பெரிய தகர டிரம்மில் நிறைய எண்ணெயை ஊத்திஅதுக்குள்ள கிருஷ்ணரோட ஐம்பொன் விக்கிரகத்தை வச்சிருப்பாங்க. முன்னாடி கோவில் மண்டபம் ரெடியானவுடன்நல்ல நேரம் பார்த்து விக்கிரகத்தை எடுத்து நகையலங்காரம் செஞ்சுபிரதிஸ்டை பண்ணவாங்க கிருஷ்ணன் அலங்காரத்தில் கொள்ளை அழகா இருப்பாரு. அவரு உதட்டோரத்துல ஒரு சின்ன குறும்புப் புன்னகை இருக்கும் பாருங்க அதை எப்படித்தான் வடித்தார்களோன்னு பிரமிப்பா இருக்கும்.
முத நாள் திருவிழாவில தன்னோட மயில் வாகனத்துல உலா வருவாரு. 2வது நாளும் அப்படியே. மூனாவது நாள் டெய்லர் சங்கம் ஜோடிக்கும் பூப்பல்லக்கில் வருவாரு. இதுல அதிசயம் என்னன்னா இந்த டெய்லர் சங்கத்தில நிறைய முஸ்லீம் சகோதரர்களும் இருந்தாங்க. அவங்கள்லாம் வந்து உதிரி செவ்வந்திப் பூவை கிழங்கு மாவில் பசை கிண்டி பல்லக்கு முழுசும் ஒட்டுவாங்க. வெளியே வரும்போது ராத்திரி பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில தங்கப்பல்லக்கு மாறி ஜொலிக்கும். அதைக்காகண்கோடி வேணும். கிருஷ்ணருக்கு மூலவரும் உற்சவரும் ஒரே விக்ரகம்தான்.  
NVS  பட்டணம்பொடி கடைக்காரரும் TAS ரத்தினம் பட்டணம்பொடி கடைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு அலங்காரம் செய்வாங்க. ரெண்டுபேரும் பிள்ளைமார் சமூகம்தான். அதுல திருவிழாவுக்கு ரெண்டு நாள் முன்னால TAS கடைக்காரர் ஒரு பெரிய பொம்மையைக் கொண்டுவந்துருவாரு. ஒரு பெரிய உரலில் பொடியை அரைப்பது போன்ற பெரிய மீசை வச்சபொம்மை. இதில அதிசயம் என்னன்னாபொம்மை மின்சாரத்துல இயங்கும். தலையை ஆட்டும்,கண்களை உருட்டும் கைகளால் உலக்கையை வைத்து ஆட்டும். அந்தக் காலத்தில அது எங்களுக்கெல்லாம் பெரிய அதிசயமாயிருக்கும்.
மண்டபம் மட்டுமில்லாமதெருவெல்லாம் கொட்டகை போட்டு குழல்விளக்கு சீரியல் செட் போட்டு சூப்பரா இருக்கும். காலைல 6 மணியிலிருந்து ராத்திரி 11 வரை குழாய்கள் மூலை மூலைக்கு கட்டப்பட்டு பாட்டுகள் அதிரடியாக இருக்கும். சாஸ்திரத்துக்கு ரெண்டு மூணு சாமி பாட்டு போட்டுட்டு அப்புறம் முச்சூடும் சினிமாப் பாட்டுத்தான்.
2ஆவது நாள் திருவிழாவில நாடகம் நடக்கும். 3ஆவது நாள் வழுக்கு மரம் உரியடியோட திருவிழா முடிஞ்சிடும். ஆரம்பத்துல மதுரையிலிருந்து நாடகக்கம்பெனிகள் வந்து வள்ளிதிருமணம் போன்ற நாடகங்கள் நடக்கும். பள்ளிக்கூடத்து முன்னால ஒரு பெரிய பள்ளம் தோண்டி அந்த மண்ணை வச்சே பெரிய மேடை போட்டுருவாங்க.
எங்க பள்ளிக்கூடத்துல எங்க தமிழ் வாத்தியார் பேரு புலவர் தேவகுரு. எனக்கு தமிழ்ல நல்ல ஆர்வம் வந்ததுக்கு அவர் ஒரு முக்கிய காரணம். 'மானங்காத்த மன்னர்கள்னுஅவர் எழுதிய புத்தகம் ஒண்ணு ரொம்ப சூப்பரா இருக்கும். ஓரங்க நாடகங்களின் தொகுப்பு.
அதுக்கப்புறம் பிள்ளைமார் சங்கத்திலிருந்து ஒரு ஐடியா பண்ணி, தேவகுரு ஐயாட்ட சொன்னாங்கநீங்களே நாடகம் எழுதினா என்னன்னு?. அப்புறம் வருஷாவருஷம் அவர்தான் சமூக நாடகங்கள் எழுதுவாரு. ஊரில நடிப்பு ஆசையோட  இருந்த நிறையபேர் அதுல நடிப்பாங்க. பெண் கதாபாத்திரங்களை மட்டும் மதுரையிலிருந்து வரவழைப்பாங்க. ஒரு மாச முன்னால பயிற்சி ஆரம்பிச்சுரும். ஆனா கதாநாயகி மற்றும் சில பெண் கதாபாத்திரங்கள் மட்டும் ஒரு நாள் முன்னாடி வந்து பயிற்சி பண்ணிட்டு திறமையா நடிப்பாங்க. நாடகத்து சீன் செட்டிங்குகள்லைட்டுகள் இசைக்கருவி வாசிப்பவங்க எல்லாம் ஒரு நாள் முன்னாடி வந்து ஸ்கூல்ல தங்கி பயிற்சி செய்வாங்க.நாங்கெல்லாம் வாத்தியார் புள்ளைங்கனால எப்படியாவது உள்ளே போயிருவோம் .கதாநாயகிகளைப்பாக்க ஜன்னல் பூரா மூஞ்சியாய் தெரியும்.
நாடம் ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிச்சுச்சு.
முதல்ல கோமாளி வந்து பாட்டுப் பாடுனான்.  

வாங்க இருங்க உட்காருங்க
வந்த காலில நிக்காதீங்க
வம்பு வழக்கு பேசாதீங்க - இப்படிப்போகும் அந்தப் பாடல்.
 நானுமகேந்திரன்முருகன்சிராஜ்னு எங்க கூட்டாளிக எல்லாரும் முன்னாடி உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கதாநாயகி அறிமுகத்தில "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு,தென்றலே உனக்கென்ன சொந்த வீடு" - அப்படின்னு பாட்டுக்கு வாயசைச்சு ஆடிக்கிட்டு வந்த கதாநாயகி ஒல்லியா சிவப்பா ரொம்ப அழகா இருந்துச்சு. பாட்டும் இசையும் நடனமும் சூப்பர்.
அதுல கதாநாயகன் யாருன்னா நம்ம இந்திரன் வாத்தியார்தான். மேக்கப் போட்டு மேடையில வந்தாரு அடையாளமே தெரியல, சும்மா கைதட்டும் விசிலும் பறந்துச்சு. முருகனோட அப்பாதான் அவர். இந்திரன் வாத்தியார் எங்க ஸ்கூல்ல ரொம்ப ஃபேமசு. சிவப்பா, உயரமா பார்க்க ஒரு ஹீரோ மாதிரி இருப்பார். அவர்தான் எங்க ஸ்கூலுக்கு ஸ்கவுட் மாஸ்டர் வேற. அந்த யூனிஃபார்ம்  போட்டு அவர் டிரில் பண்ணும் போது கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்.
முருகனுக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. அவனுக்கு பெருமை தாங்கல. அப்புறம் கதை சுவாரஸ்யமா போச்சு. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் முதலில் வழக்கம் போல் சண்டை வந்து அப்புறம் காதல் வந்துச்சு.  இந்திர வாத்தியார் உள்ளே வந்து கதாநாயகியைக் கையைப்பிடித்து இழுக்ககதாநாயகி வெட்கப்பட பாட்டு ஆரம்பிச்சுச்சு. "வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவேமாயமெல்லாம் நான் அறிவேனேவா வா ஓடிவா", இருவரும் ஓடிப்பிடித்து பாடி ஆடமுருகன் லைட்டாய் அழ ஆரம்பித்தான். எங்களுக்கும் கொஞ்சம் திக்குன்னு இருந்துச்சு. வேகம் கூட கூடஒரு கட்டத்துல ந்திர வாத்தியார் கதாநாயகியை அலேக்கா தூக்கிவிடஎங்க முருகனுக்கும் வேகம் கூடி ஓன்னு அழுதான். எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலசார் உங்க மகன் அழுறான்னு இந்திரன் சாரைக் கூப்பிடலாம்னு ஆயிருச்சு. அப்புறம் அவனைக் கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு நாங்களும் வீட்டுக்குப் போனோம். ஏன்னா   எங்களுக்கும் ரொம்ப கோபம் வந்துரிச்சு. வாத்தியார் அப்படி செஞ்சது தப்புன்னு நினைச்சோம்.

 அதெல்லாம் வெறும் நடிப்புனு அப்ப எங்களுக்குத் தெரியாத வயசு. இப்ப நினைச்சா சிரிப்புதான் வருது . ஆனா இந்திரன் வாத்தியார் மட்டும் சினிமாவில் நடிக்க வந்திருந்தார்னா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுருப்பாரு.


தொடரும் 

Thursday, February 15, 2018

நேதாஜி செய்த தவறு !!!!!

Bosefilm.jpg

பார்த்ததில் பிடித்தது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி ஃபர்காட்டன்  ஹீரோ
            இந்தப் படத்தை ஏற்கனவே நான் பார்த்திருந்தாலும் நெட் ஃபிலிக்சில் மீண்டும் கண்ணில் தட்டுப்பட்டதால் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் உட்கார்ந்து பார்த்து முடித்தேன். சிறிது நீளமான திரைப்படம் என்றாலும் அவசியமாய் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சப் ஹெட்டிங் அல்லது குளோஸ்டு கேப்ஷன் (CC) இருப்பதால் இந்தி தெரியாதவர்களும் பார்க்கலாம்.
          நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய விடுதலைக்காக தான்   வகுத்துக் கொண்ட பாதையில் தளராது நடைபோட்டு இறுதிவரை போராடிய மாவீரர். அவர் பெயரைச் சொன்னாலே பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கியது. இந்திய நாடெங்கும் மட்டுமல்ல, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் என்று பல நாடுகளில் அறியப்பட்டவராக இருந்தார். அவர் பெயர் சிலருக்கு அச்சத்தையும் பலருக்கு மரியாதையையும் ஊட்டியது.  
Image result for netaji subhash chandra bose

          காங்கிரஸ் கட்சியின் மீதும் காந்தி நேரு ஆகியோரின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களையோ காங்கிரஸ் பெரியக்கத்தையே அவர் ஒருபோதும் தரக்குறைவாகப் பேசியதுமில்லை. விமர்சித்ததும் இல்லை. தன்னுடைய படைப்பிரிவுகளுக்கு காந்தி நேரு எனப் பெயர் சூட்டியதிலிருந்து அதனை அறிந்து கொள்ளலாம் ஆனால் அவர்களின் மிதவாத கொள்கைகளினால் சுதந்திரம் தள்ளிப்போகிறது. அதனை  பிரிட்டிஷார் பலவீனமாக நினைத்துக்கொண்டு சுதந்திரம் தரமறுக்கிறார்கள் என்று நினைத்தார். போர் தொடுத்து  விரட்டினால் மட்டுமே பிரிட்டிஷாரை துரத்த முடியும் என நம்பினார். அதற்கான காரியங்களை தன் உயிரைப்பணயம் வைத்து நிறைவேற்ற முயன்று, அதே முயற்சியில் தன் இன்னுயிரையும் துறந்த உன்னதத்தலைவர் அவர்.     அவர் எடுத்த சில தவறான முடிவுகளாலும், உலகப் போரின் திசை மாறிப்போனதாலும் அவர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை.
Image result for netaji subhash chandra bose

          பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் ஒரு கோல்டு வார் இருந்தது. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பிரிட்டன், பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
          நேதாஜிக்கு  வேறு வழியின்றி ஜெர்மனியிடம் செல்ல வேண்டிய நிலைமை. ஆனால் ஜெர்மனி ஒரு பைத்தியக்கார சர்வாதிகாரியான ஹிட்லர் கையில் இருந்தது. போஸ் அவர்கள் ஹிட்லரைப் பார்த்தும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
          போஸ் சற்றும் எதிர்பாராத விதமாக ஜெர்மனி ரஷ்யாவைத் தாக்கியது. அதற்கு ஜெர்மனியில் இருந்த இந்திய போர்க்கைதிகள் சுபாஷின் தலைமையில் உதவ வேண்டும் என்றும் எதிரிபார்த்தது.  நல்லவேளை அப்படி ஒரு தவறை அவர் செய்யவில்லை.
          ஜெர்மனியின் உதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர் பர்மாவுக்குக் கிளம்பினார். நல்லவேளை ஹிட்லர் அவரைச் சிறைப்படுத்தவில்லை. ஆனால் அங்கிருந்த  இந்திய போர்க்கைதிகள் 5000 பேரை அப்படியே விட்டுவிட்டு வரவேண்டிய  நிலைமை.
          ஆனால் ஜப்பானின் உதவி கிடைத்தது. எனவே இந்தியா தேசிய ராணுவம், பர்மா சிங்கப்பூர் பகுதிகளில் ஜப்பானின் உதவியோடு பல பிரிட்டிஸ் பகுதிகளில் முன்னேறியது.
          இதற்கிடையில் ஜப்பான் முட்டாள்தனமான ஒரு  காரியம் செய்தது. அது அதிகபட்ச திமிர்த்தனத்துடன் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரைத் தாக்கியது. அது சிங்கத்தின் பிடரியை உலுப்பிய கதையாகிவிட்டது. அது வரை நடுநிலை காத்த அமெரிக்காவும் போரில் குதித்தது. அது பிரிட்டனுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
          ஜப்பானில் நாகசாகி, ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் போட்டதோடு ஜப்பானின் பெருமை முற்றிலுமாக அழிந்து  போக அவர்கள் சரண்டர் ஆகி எல்லா நிலைகளிலுமிருந்தும்  பின்வாங்கி தங்கள் நாட்டுக்குள் முடங்கினர். இன்றுவரை அவர்கள் ராணுவத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டு தங்களுடைய உள்நாட்டு வளர்ச்சியில் மட்டுமே கருத்தில் கொண்டு வெகு சீக்கிரம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைலில் உலகத்தில் தலைசிறந்து விளங்குகிறார்கள்.
          திடீரென்று முற்றிலும் மாறிப்போன சூழ்நிலையில் இந்திய தேசிய ராணுவம் வேறுவழியின்றி பின்வாங்கி சரண்டராக, போஸ் அவர்களின் முயற்சி வெறும் கனவாக முடிந்தது.
          ஜப்பானின் விமானத்தில் சென்ற அவர் விபத்தில் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய முடிவு இன்றைய நாள்வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது.
          ஆனாலும் போஸ் அவர்களின் பெருமுயற்சியும் நம் நாட்டின் விடுதலைக்கு ஒரு பெரும் காரணமாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுவும் அவர் மறைந்த  இரண்டு வருடங்களுக்குள் கிடைத்தது.
          இயக்குநர் ஷியாம் பெனகலின் உன்னத வரலாற்றுப் படைப்பு இது. ஆனால் வழக்கம்போல இந்தப் படத்திற்கும் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக தன் தலைவர் ஒரு ஆஸ்திரியப் பெண்ணை மணந்தது போல் காட்டப்பட்டதற்கும், அவர் தைவானில் விமான விபத்தில் இறந்ததுபோல் காட்டப்பட்டதற்கும்  கல்கத்தாவில் செயல்பட்ட  ஃபார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.  எல்லாக் கட்சியினரும்  தங்கள் தலைவரை ஆதர்ஷ தலைவராக ஏற்றுக் கொள்ளும்போது அவரும் எல்லா ஆசாபாசங்களும் உள்ள ரத்தமும் சதையிலுமான மனிதர் என்பதை ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எனவே போஸ் அவர்களின் சொந்த ஊரான கல்கத்தாவில் திரையிடப்படவில்லை.
Image result for shyam benegal
Shyam Benegal
          அதோடு படத்திற்கு இன்னொரு முக்கியமான ஒன்று A.R. ரகுமானின் இசை. படத்தின் தரத்தை  வெகுவாக கூட்டுவதில் இசை பெரிதும் உதவுகிறது.
          2004ல் லண்டன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட இந்தப்படம் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுப் படம் என்ற நர்கிஸ் தத் விருதையும், சிறந்த கலை அமைப்புக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
Image result for Actor sachin khedekar
Sachin Kedetkar
           சச்சின் கெடெக்கர் சுபாஷ் ஆக தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஏதோ ஒன்று குறைவாகவே தெரிந்தது.
          30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட 2 1/2 மில்லியன் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
          இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வரலாறு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு. படத்தின் தலைப்பில் மறந்து போன நாயகன் (Forgotten Hero)  என்று வருகிறது. மறக்கக்கூடிய மனிதரா அவர்?

-முற்றும்.

Monday, February 12, 2018

ரேடியோ பெட்டியும் குள்ள மனிதர்களும்

வேர்களைத்தேடி பகுதி: 5 ( ஒரு மீள் பதிவு )




இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/02/blog-post_5.html
.
       அன்னிக்கு ராத்திரி தூக்கமே வரல. ஏன்னா அடுத்த நாள் எங்கப்பா தேனிக்குப்போய் ரேடியோ வாங்கப்போறார்னு என் அம்மாட்ட சொன்னதை கேட்டுட்டேன். அப்ப எனக்கு வயசு ஏழு இல்லாட்டி எட்டு இருக்கும். நாந்தேன் எங்கப்பாட்ட கேட்டுட்டே இருந்தேன். அப்துல்லா அவிங்க வீட்டுல வாங்கிட்டோம்னு ரொம்ப பீத்திட்டு இருந்தான். எங்க வீட்ல கரண்ட் வந்தே ஆறுமாசந்தேன் ஆச்சு. வீட்டு ஓனர் வத்தலக்குண்டு ராவுத்தர் வந்து ரெண்டு நாள் தங்கி கரண்ட் கனெக்ஷன் கொடுத்துட்டு முப்பது ரூபாய் இருந்த  வாடகையை பத்து ரூபா ஏத்தினார்.
       அது வரை ஹரிக்கேன் லைட்தான். தெனம் சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், எங்கப்பா ஹரிக்கேன் விளக்கை எடுத்து துடைச்சுஅதன் கண்ணாடிக் குமிழில கொஞ்சம் கோலப்பொடியை போட்டு கிழிஞ்ச பனியனை வச்சு துடைச்சா பளிச்சுன்னு ஆயிரும். நானும் அதே மாதிரி துடைக்கனும்னு ஆசையா இருந்தாலும் எங்கப்பா கொடுக்க மாட்டாரு. கொஞ்சம் சீமத்தண்ணியை ஊத்தி திரியை ஏத்திவிட்டா முதல்ல கொஞ்சம் புகை வந்து அப்புறம் சீரா எரியும். கரண்ட் வந்த பெரவு அதுக்கு அவ்வளவா வேலையில்லை. எப்பனாச்சும் கரண்ட் போனா பரண்மேல இருந்து எடுத்துப்பொருத்துவோம். இல்லேனா எனக்கு தடுமன் பிடிச்சுருச்சுன்னாஎங்கம்மா அதை எடுத்து பொருத்திஅது மேலே துண்டை மடிச்சு வெச்சுகொஞ்சம் சூடானவுடன் தலையிலும் நெத்தியிலும் வைப்பாங்க. தடுமனுக்கு ரொம்ப இதம்மா இருக்கும்.
       பள்ளிக்கூடத்துலயும் அன்னிக்கு எனக்கு ஒண்ணும் ஓடலை. எங்கப்பா பள்ளிக்கூடம் முடிச்சுதேனி பொறப்பட்டுப் போனார். என்னையும் கூப்பிட்டுப் போகக்கூடாதான்னு நெனைச்சேன். ஆனா கேட்கத் தைரியம் இல்ல.
       அன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடு வந்து சேர்ந்தார் என் அப்பா. நாளைக்குப் பூட்டலாம்னு சொல்லிட்டு படுத்தார். நான் மெதுவா எந்திரிச்சு அட்டைப் பெட்டியில காது ச்சுப் பார்த்தேன். ஒண்ணும் கேட்கல.
       அடுத்த நாள் எல்லாத்தையும் வெளிய எடுத்தார். பளபளன்னு நல்லா ஜோரா இருந்துச்சு. UMS னு போட்டுருந்துச்சு. பீரோ மேல  வைச்சுபோட்டவுடன் கரகரன்னு ஏதோ கேட்டுச்சு. அதுக்குள்ள பக்கத்து வீடுகளில இருந்து ஆட்கள் வந்து கூட்டம் கூடிருச்சு. "பக்கத்து வீட்டு பினாங்குக்காரரை கூப்பிடவா",ன்னு எங்கப்பாட்ட கேட்டேன். பதிலே சொல்லாம நோண்டி நோண்டி பார்த்த போது,தீடீர்னு பாட்டு வந்துரிச்சு. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபத்தின் தமிழ்ச்சேவை" என்று சொன்னதும்முதல்ல நான் கைதட்ட அப்புறம் எல்லோரும் கைதட்டினாங்க. எங்கப்பாவின் முகத்தில கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நோண்டி 2 நாள்ளதிருச்சி வானொலி நிலையம்சென்னை வானொலி நிலையம் எல்லாம் கண்டுபிடிச்சார் அப்பா. ஆனா முக்காவாசிஇலங்கையும்திருச்சியும்தான் கேப்போம். டெல்லியிலிருந்து தமிழ் நியூசும் வரும். சரோஜ் நாராயணசாமின்னு ஒரு குரல்  பொம்பள குரலா ஆம்பள குரலானு தெரியாது.
       இதுக்கிடையில அடுத்த வாரத்தில ஒரு நாள் எனக்கு காய்ச்சல்னு பள்ளிக்கூடம் போகல. அப்பாவும் அம்மாவும் பள்ளிக்கூடம் போய்ட்டாங்க. வகுப்புல என்னைக் காணாத என் நண்பன் மகேந்திரன் என் வீட்டுக்கு வந்துட்டான். "என்னடா சேகர் என்னாச்சு?", ன்னு கேட்டு நெத்தியை தொட்டெல்லாம் பார்த்தான்.
       எனக்கு உப்புபோட்டு கல்லாமக்கா மாங்காய் ஒரு கீத்து வாங்கிட்டு வந்திருந்தான். தீடீர்னு பீரோ மேல பாத்துட்டு, "ஏலே இதான் நீங்க வாங்கின லேடியோ பொட்டியாரொம்ப நல்லாருக்கு. எலே லேடியோவைப் போடலாமா",ன்னு என்ட்ட கேட்டான். "வேணாண்டா  எங்கப்பா கொன்றுவாருன்னு", சொன்னேன். ஆனா நான் சொன்னதக் கேக்காம ஸ்டூலைப்போட்டு ஏறி, எட்டாம மேசையைப் போட்டு ஏறி திருப்பி திருப்பி நோண்ட ஏதோ இங்கிலிஸ்ல வந்துச்சு. 

 
       மேசையியிருந்து குதிச்ச அவன் சொன்னான்,
எலே சேகருஉனக்கு குட்டி மனுசன்களை பாக்க ஆசையா?
"எங்கடா இருக்காய்ங்கன்னு?
 "சேகரு நீ சொன்னா நம்பமாட்டேஎன் கண்ணால பார்த்தேண்டா,மேட்டுவளவு ஜமிந்தார் வீட்டிலேஇதவிட பெரிய பெட்டி ஒண்ணு இருக்கு. அதுல அன்னிக்கு துடைச்சு சுத்தம் பண்ண தெறக்கும்போதுநான் எட்டிப்பாத்தேன். குட்டி குட்டியாய் 4 பேர் நல்லா உடுத்தி உள்ளே உட்காந்திருந்தாய்ங்க. அவய்ங்கதான் பேசறதுபாடறது. எல்லாம்".
"எனக்கு நம்ப முடியல". போடா லூசு கரண்ட்ல வேலை செய்யுதுடா இந்த ரேடியா".
"நான் காமிச்சிட்டாஎன்னா பந்தயம்".
"சரி வாடா ஜமீந்தார் வீட்டுக்குப் போவோம்".
"எங்கடா போறதுலேடியோ இங்கயே இருக்கே. உள்ளுக்குள்ள குட்டை மனுசங்க இல்லாட்டி உனக்கு என் பொன்வண்டைக் கொடுத்திர்றேன்."
 லேசா திறந்து காண்பிச்சான்.அது தீப்பெட்டிக்குள்ள கையையும் காலையும் ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.
 "ஐயையோ சும்மார்ரா வம்பா", என்றேன். நீ பேசாம இருநான் காமிக்கிறேன்னு, திரும்ப மேல ஏறினான்.  
       வட்ட ஒரு பைசா காசை எடுத்து, ஸ்குரூவை நோண்டி மேலே உள்ள கூடை அப்படியே டோப்பா எடுத்திட்டான். பார்ரா,இவனுக்கு எவ்வளவு திறமைன்னு திகைச்சுப் போயிட்டேன். பயமாயிருந்தாலும் உள்ள பார்க்க ஆசையா இருந்துச்சு. உள்ள ஒண்ணுமில்லாட்டி பந்தயத்துல ஜெயிச்சு  பொன்வண்டு கிடைக்கும்லன்னு நெனச்சு ஒரு தெம்பு வந்துச்சு.
       ரேடியோ உள்ள பாத்தா கண்ணாடில குமிழ் குமிழா இருந்துச்சு. அது உள்ள என்னா இருக்குன்னு வெளியே தெரியல. அது எடுக்க முயற்சி செஞ்சப்பபடீர்ன்னு ஒடைஞ்சு போச்சு. ஐயையோன்னு நான் போட்ட கூச்சல்லஅந்த குச்சிக்காலன் குதிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். பயபுள்ள பொன் வண்டையும் கொடுக்காம போயிட்டான்.

       இன்னும் கொஞ்ச நேரத்திலபள்ளிக்கூடம் இன்டர்வல்ல எங்கம்மா வரும்காலைல நேரம் இருக்காதுன்னு இன்டர்வல்லதான் எங்கம்மா வீட்டுக்கு வந்து டிபன் சாப்புடும். அது கூட எனக்கு பயமில்லஎங்கப்பாரு மதியம் வந்தா என்ன நடக்கும்னு நெனைச்சு,எனக்கு ஜூரம் கூடிப்போச்சு. கதவை திறக்கற சத்தம் கேட்டு,அம்மான்னேன்ஆனா நுழைஞ்சது எங்கப்பா.அப்புறம்   என்ன நடந்ததுன்னு நான் சொல்லனுமா என்ன ?  
தொடரும் 

Thursday, February 8, 2018

பொங்கலும் செங்கலும் !!!!!


நியூயார்க்   தமிழ்ச்  சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா கடந்த பெப்ரவரி 3ஆம் தேதி  சிறப்பாக நடந்தேறியது .அதில் கவிஞர் சிவபாலன் தலைமையில்   நடந்த “கவிதை பாடு குயிலே” என்ற நிகழ்ச்சியில் அடியேன் தந்த கவிதையை(?) இங்கே உங்களுக்கு படிக்கத்தருகிறேன்

                                 Video Courtesy :  Mr Chinna Periasamy, NY
                                 Video Editing : Mr.Vish Cornelius , CA

பொங்கலும் செங்கலும் !!!!!
வணக்கம்
மூச்சுக் கொடுத்த ஆண்டவனுக்கும்
பேச்சுக்கொடுத்த தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும்
வணக்கங்கள் பலப்பல.

தலைவர் வணக்கம் (கவிஞர் சிவபாலன்)
தேசம் கட்டுவதில் இவர்  ராசபரம்பரை ;ஆனால்
நேசம் காட்டுவதில்  இவர் பாசப்பரம்பரை
நியூயார்க்கின் கவிமகன்
பெயரில் சிவமகன் ( சிவபாலன் )
தமிழ்ச்சங்கத்தில் எனக்கு தலைமகன்
(அவர் செயலாளர் நான் இணைச்செயலாளர்)
இலங்கையின் திருமகன், அதற்கும் மேல்
இவர் தமிழ்நாட்டின் மருமகன்!
வணக்கம்

இந்தியாவில்,
பட்டங்கள் பல பெற்றிருந்தும்; உயர்
பதவியில் நிலைத்திருந்தும்
பஞ்சம் பிழைக்க அமெரிக்கா வந்த
பரதேசி நான்!

கேட்டைத் திறக்கும் வாட்ச்மேன்
காரைத் திறக்கும் டிரைவர்
சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி
டிக்டேட் செய்ய செக்ரட்டரி  
அனைத்தையும் விட்டுவிட்டு
அமெரிக்கா வந்து என்னதான் கண்டேன்?

பண்டிகை வந்தால் ஒரு
பரவசம் இல்லை !




இந்தியாவில்
எந்த விழாவையும் என்
சொந்த விழாவாக கொண்டாடிய எனக்கு 
எந்த விழாவும் இங்கு
நொந்த விழாவாகத்தான் கழிந்தது.

தீபாவளிக்குப் பட்டாசில்லை
பட்சணமில்லை, பலகாரமுமில்லை
கொண்டாடுவதற்கு  லீவுமில்லை   

பட்சணமும் பட்டாசும் கேட்டால்  
வாட்சப்பில் அனுப்புகிறாள்  என்
வாழ்க்கைத்துணைவி
என்ன செய்ய?

தசராவுக்குக் கொலுவில்லை
தமிழுக்கும் மதிப்பில்லை
விஜயதசமியும் விட்டுப்போனது
சரஸ்வதி பூஜையும்
சடுதியில் மறந்தது.

அடுத்து வந்த
கிறிஸ்மசுக்கும் பலகாரமில்லை,
எங்கேடா அதிரசம்?
என்று கேட்டான்
என் நண்பன்

கொதிரசம் கூட கிடைக்காத இடத்தில்
அதிரசத்திற்கு எங்கே போவது  ?
என்றேன்
புத்தாடை கூட
புதைந்துபோனது
கொத்தாடைகளுக்குள் !!!! ( Layer dress due to cold weather)




நெய்முறுக்கு இல்லையென்றால்
கைமுறுக்காவது கொடு என்றால்
கையை முறுக்குகிறாள் என்
காதல் மனைவி !! 

அவள் கையை அல்ல
என் கையை
நெய்முருக்கும்
பொய்முருக்காய் போன
நிலைமை  என் தலைமை.

பொங்கலும் வந்தது
கரும்பு தேடி
கடையெல்லாம் அலைந்தும்
கடிக்க ஒரு துண்டு கூட
கண்ணில் படவில்லை.

என்னடா கொடுமை என்று
வெறும் கையுடன்
வீட்டுக்கு வந்து
சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமா? என்று
சன்னமாகக் கேட்டேன்

மெல்லிய குரலில் கேட்டாலே, கோபத்தில்
துள்ளி எழுவாள்  என்
துணைவி
இதில்
வல்லிய குரலில் கேட்டால் என்
வாழ்க்கை முடிந்துவிடாதோ?
அதனால் தான்
சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமா? என்று
சன்னமாகக் கேட்டேன்

வெல்லம் இல்லை என்றாள்  
செய்வதற்கு உனக்கு
உள்ளம் இல்லை என்று சொல் என்று
சத்தமாக ஆனால்
உள்ளத்திற்குள் மறுகினேன்
இல்லத்திற்குள் குறுகினேன்

பின்ன வெளிப்படையாகவா சொல்ல முடியும் ?
பொங்கல் தராவிட்டால்
பரவாயில்லை கோபத்தில்
பொங்கி எழுந்து
செங்கல்லோ
கருங்கல்லோ
எடுத்துவிட்டால்?
என் செய்வான் இந்தப் பரதேசி. 

அதன் பின்
லேட்டாய் வந்தாலும்
லேட்டஸ்ட்டாய் வந்தது
தமிழ்ச்சங்கம் நடத்துகிற
தைப்பொங்கல் விழா.

ஆஹா
வீட்டுக்குள் வந்தபோதே தமிழ்
நாட்டுக்குள் வந்ததுபோல் ஒரு ஜொலிப்பு
அரங்கத்துள் வந்தபோதே
அருந்தமிழ்த் தேன் பாய்ந்த ஒரு களிப்பு

பட்டுகள் அணிந்த
சிட்டுகள் எங்கும் !
சிறகுகள் முளைக்காத
சிறு தேவதைகள் தங்கும்!
ஓடியும் ஆடியும் பாடியும்
இங்கு மகிழ்ச்சி பொங்கும்

எல்லாவற்றிக்கும் மேல்
சர்க்கரைப் பொங்கலும் கிடைத்தது புதுச்
சக்தியும் எனக்கிங்கு கிடைத்தது. 

ஓரமாய் கரும்பையும் பார்த்தேன் அதில்
ஒரு சிறு பகுதி கிடைக்குமா என வேர்த்தேன்.


கரும்பைக்
கண்டு மகிழ்ந்தேன், ஒரு
துண்டு கிடைத்தால் அதை
உண்டு மகிழ்வேன்

திருவிழாக்கள் கொண்டாட ஆசையா? நியூயார்க்
தமிழ்ச் சங்க விழாக்களுக்கு வாருங்கள்
தரமான நிகழ்ச்சிகளைப் பாருங்கள்
உடனே உறுப்பினராய்ச் சேருங்கள்

உங்கள்
உள்ளக்கிடக்கைகளை
ஆண்டவனிடம் சொல்லவேண்டாம்
அரங்க நாதனிடம் சொல்லுங்கள்
ஏனெனில்
ஆண்டவனுக்கு முந்தி
அருள் பாலிப்பார் எம் தலைவன்
அரங்க நாதன். ஏனெனில்
அவர் புருஷர்களின் உத்தமன் ( அரங்கநாதன் புருஷோத்தமன் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்)
  
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
ஆயிரம் மைல்கள்கடந்து வந்தாலும்  
அன்னைத்தமிழ் நம்மில் குறைவதில்லை.

தமிழால் இணைவோம்
தமிழால் மகிழ்வோம்.
பொங்கல் வாழ்த்துக்கள்
மீண்டும்
முத்தமிழ் விழாவாக  
முத்திரை பதிக்கும்
சித்திரை விழாவில் மீண்டும்
சந்திப்போம்
நன்றி
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய  பாரத மணித்திரு நாடு
வாழிய புகுந்த அமெரிக்க நாடும்

நன்றி வணக்கம் .