Monday, February 6, 2017

விடியற்காலையில் ஒரு விடியாமூஞ்சி !!!!!!!!!


இலங்கையில் பரதேசி பகுதி-2
Image result for Immigration counter at colombo, srilanka

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_31.html
குடியுரிமைப் பகுதியில் அந்த அதிகாலையிலும் நாலு கவுன்ட்டர்கள் திறந்திருந்தன. அதில் மூன்றில் நடுத்தர வயது பெண்கள் இனிமையான புன்னகையுடன் உட்கார்ந்திருந்தனர். ஒன்றில் ஒரு கடுகடு மூஞ்சியோடு ஒரு ஆண் உட்கார்ந்திருந்தான். ஒரே வரிசையில் நின்று அவர்களில் ஒருவர் கூப்பிடும்போது செல்ல வேண்டும்.
Image result for Immigration counter at colombo, srilanka

அலாரம் அடிக்காமல் லேட்டாய் எழுந்து, காலையிலேயே மனைவியிடம் காஃப்பி கிடைக்காமல் சண்டை போட்டு, வெளியே வரும்போது கார் டயர் பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து நொந்து, நடந்து பக்கத்தில் தெருவின் ஆரம்பத்தில் காஃபி குடிக்கப் போய் அந்தக் கடை பூட்டியிருப் பதைப் பார்த்து கடுகடுத்து, டாக்சி கிடைக்காமல் காலைப் பனியில் தும்மிக் கொண்டே நின்று, வந்த டாக்சியில் அரை மடங்கு அதிகமாக பணம் செலுத்தி, அலுவலகத்திற்கு   தாமதமாக வந்து, மேல் அதிகாரியிடம் அர்ச்சனை வாங்கிவிட்டு வந்தவனின் மூஞ்சி போலவே அவன் மூஞ்சி இருந்தது. அவனிடத்தில் நான் போகக்கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டே சிறிது நடுக்கத்துடனே நின்று கொண்டிருந்தேன்.
கரெக்டாக அவன் என் முன்னால் இருந்தவரைக் கூப்பிட, அப்பாடா நமக்கு மற்ற மூன்று பேரில் யாராவது கிடைக்கும் என நம்பிக்கையுடன் நின்றேன். என் முன்னால் இருந்தவருக்கும் அவனுக்கும் சண்டை மூள, அங்கு அவசரமாக வந்த நன்கு உடையணிந்த  ஒருவர் அந்தப் பயணியை அழைத்துக் கொண்டு ஒரு ரூமுக்குள் சென்றுவிட்டார். சடுதியாக அடுத்து நின்ற என்னைக் கூப்பிட்டான். நான் எங்கோ பராக்குப் பார்ப்பதுபோல அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்க்க, அவன் கொஞ்சம் சத்தமாகவே என்னைக் கூப்பிட, 'மி ? ' என்று சொல்லி என்னுடைய அதிர்ஷ்டத்தை நொந்த படியே அவனிடம் சென்றேன். இதோ தமிழ்ப்படுத்திய அந்த உரையாடல் உங்களுக்கு.
“உங்கள் பெயர்?”
“ஆல்ஃபிரட் தியாகராஜன்”.
“உங்கள் கடைசிப்பெயர்?” (Last Name)
“தியாகராஜன்”.
“அப்பாவின் பெயர்?”
“அதேதான்”.
“அப்ப ராஜசேகரன் என்பது?”
“அது என் நடுப்பெயர் “(Middle Name )
“இந்தியக் குடிமகனா?”
“ஆம் “
“இந்தியாவில் எந்தப் பகுதி?”
“தமிழ்நாடு”
“ஓ இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?”
“நியூயார்க்கிலிருந்து இல்லை சீனாவிலிருந்து”.
“சரியாகச் சொல்லுங்கள்”.
“நியூயார்க்கிலிருந்து கிளம்பி சீனா சென்று சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு இப்போது இலங்கை வந்திருக்கிறேன்”.
“நியூயார்க்கில் என்ன செய்கிறீர்கள் ?”.
“அங்குதான் வசிக்கிறேன்”
“இந்தியக்குடிமகன் என்று சொன்னீர்கள்?”
“ஆம். ஆனால் நியூயார்க்கில் பர்மனட் ரெசிடண்ட் (PR)”
“ஓ சீனாவுக்கு எதற்கு சென்றீர்கள்?”
 “இலங்கை வந்த காரணம் ?”
“சுற்றிப்பார்க்க”.
“ஓ எங்கெல்லாம் போகப் போகிறீர்கள்”.
“கொழும்பும் அதன் சுற்றுப்புறம் மட்டும்”.
“யாழ்ப் பாணம் போகப்போகிறீர்களா?”
“இல்லை”.
“நீங்கள் ஒரு பத்திரிக்கையாளரா?”
 “இல்லை ஆனால் பதிவர்”.
“பத்திரிக்கையாளர்கள் அல்லது மதத் தலைவர்களை சந்திப்பீர்களா? “
“இல்லை”.
“நியூயார்க்கில் இலங்கைத் தமிழரோடு தொடர்பு உண்டா”.
“உண்டு “
“விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நியூயார்க்கில் உள்ள யாரேனும் தெரியுமா?” –
 “தெரியாது”. (மன்னிக்கவும் மக்களே பொய் சொல்லிவிட்டேன்)
“அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் இங்கு யாரையாவது சந்திக்கச் செல்லியிருக்கிறார்களா?”
“ இல்லை”.
“எங்கே தங்கப் போகிறீர்கள் ?”
 “சமன்கா கெஸ்ட் ஹவுஸ் ?”
“அப்படி ஒன்றை கேள்விப்பட்டதில்லையே எங்கே இருக்கிறது ?”
“லவினியாவில்”
“எத்தனை நாட்கள்?”
 “நான்கு நாட்கள் மட்டும்”.
“இலங்கையிலிருந்து எங்கு செல்கிறீர்கள் ?”.
“சென்னைக்கு அதன்பின் அங்கிருந்து நியுயார்க்கிற்கு நேரடியாகச் செல்லவிருக்கிறேன்”.
“நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் , நீங்கள் எந்தவொரு மதத்தலைவரையோ பத்திரிக்கையாளரையோ சந்திக்க அனுமதியில்லை”


ஒரு புன்னகை இல்லை, வாழ்த்தும் இல்லை, ஒருவித சந்தேகத்துடனேயே பாஸ்போர்ட்டில் குத்தி அனுப்பினான்.
வரிசையில் இருந்த எல்லோருமே என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க நான் கம்பீரமாய் (?)நடந்து போனேன்.
போகும் வழியில் வரிசையாக டூட்டி ஃப்ரீ கடைகள் இருந்தன.  அந்தக் காலத்தில் இலங்கை செல்லும் மக்கள் இந்த மாதிரிப் பொருட்களை வாங்கி வருவதைப் பார்த்திருக்கிறேன். டிவி, மியூசிக் சிஸ்டம் போன்ற எலெக்ரானிக் பொருட்கள் தவிர குக்கர், பாத்திரங்கள் மற்றும் சூட்கேஸ்கள், பேக் பைகளும் இருந்தன.
வெளியே போகுமுன் என்னுடைய டாலர்களை இலங்கைப் பணமாக மாற்றிக் கொள்ள எக்சேஞ்ச் இடம் சென்றேன்.
ஐநூறு டாலர்களைக் கொடுத்தேன். பாஸ்போர்ட்டை ஒரு பிரதி எடுத்துவிட்டு கட்டுக் கட்டாக ஏராளமான பணத்தைக் கொடுத்தார்கள். அவ்வளவு பணத்தை மொத்தமாக நான் கையாண்டு வெகு நாளாகிவிட்டது. என்ன இது தவறுதலாக கொடுத்துவிட்டார்களா என்று திரும்பவும் கேட்டேன். “இல்லை சரிதான் ஒரு டாலருக்கு 145 ரூபாய்கள் என்று சொன்னதும் மிகுந்த ஆச்சரியமாகிவிட்டது. அதனால்தான் 500 டாலருக்கு மொத்தம் 72500 ரூபாய் கிடைத்தது. எண்ணக்கூட முடியாமல் அப்படியே நோட்டுக் கற்றைகளை பையில் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.
வெளியே வரும்போது காலை ஏழு மணியிருக்கும். நிறைய வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டு இருந்தன.
எனது துபாய் நண்பன் சையது அபுதாஹிர், சீனாவில் ஒரு நண்பரை ஏற்பாடு பண்ணியது போல கொழும்பிலும் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவன் பெயர் அம்ரி. ஏற்கனவே வாட்ஸ் அப்பில் அறிமுகமாயிருந்தோம்.
Related image

ஒரு ஓரமாக நின்று அம்ரியை எப்படிக்கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வித்தியாசமான கார் பக்கத்தில் நின்றது. அதில் இருந்து புன்னகையுடன் இறங்கிய அம்ரி, “ஹலோ சார்  வெல்கம் to  கொழும்போ”, என்றான்.
“தேங்க்யூ ஃபார் கம்மிங், தேங்க்யூ ஃபார் யுவர் ஹெல்ப்”, என்றேன்.
"பரவாயில்லை சார் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் இதைக்கூட செய்யமாட்டோமோ" என்றான் தமிழில்.
 “அட நீ தமிழா”, என்றேன் மகிழ்ச்சியுடன்.      
தொடரும்
பின் இல்லை இல்லை புண் குறிப்பு :
“ஏலே சேகரு தலைப்பிலே விடியா மூஞ்சின்னு சொன்னது யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.
“அத எல்லாரும் கண்டுபிடிச்சிருப்பாங்களே   இந்நேரம் மகேந்திரா”
“அது நீதானே ?”
“செத்தாண்டா சேகரு”    



Thursday, February 2, 2017

காட்டுப்பன்றி சொல்லும் ஜோசியம் ( ஒரு மீள் பதிவு )

பெப்ரவரி 2  கிரௌண்ட் ஹாக் நாள் பதிவு   




அமெரிக்கா  மெத்தப்படித்த மேதாவிகள் அதிகம் நிறைந்த நாடென்றாலும்,மூடநம்பிக்கைகள் அதிகம் கொண்ட, மூதேவிகள் நிறைந்த நாடும் கூட.
நம்ம ஊரில் எட்டு எப்படி கெட்ட நம்பரோ, அதே போல் 13 இவர்களுக்கு துஷ்ட நம்பர்.  இங்குள்ள பல கட்டடங்களில் , 12க்கு அப்புறம்  14 ஆகவோ, 12 ஏ’ வாகவோ இருக்கும்.

பல நாடுகளிலிருந்து வந்தவர்கள்,  தமது  மூடநம்பிக்கைகளையும் மூட்டைகட்டிக்கொண்டு வந்து விட்டார்கள் . நம் இந்தியர்களும் . அமெரிக்காவுக்கு பேண்ட்-சர்ட்களை பேக் அப் பண்ணுவதற்கு முன் பில்லி சூன்யங்களை பிக்-அப் பண்ணியவர்கள். ஜோசியர்கள்தான் இங்கு குடியேறிய முதல் இந்தியர்களோ  என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு .இங்கே வெளியாகும் இந்தியப் பத்திரிகைகளில் கல்யாணம் முதல் கட்டையில போற சமாச்சாரம் வரை அத்தனைக்கும் இவர்களிடம் பரிகாரம் இருக்கும்.
இந்த மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் கிரவுண்ட் ஹாக் டே[ground hog day].ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இது கொண்டாடப்படுகிறது.குறிப்பாக பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஜெர்மானிய மக்கள் இதை அதிகம் அனுபவித்து கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம் அதிகாலை அணில் போன்ற தோற்றமுடைய அந்த மிருகம் தன் கூட்டைவிட்டு வெளியே வருவதற்காக பல்லாயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருப்பார்கள். அது வெளியே வந்து தன் நிழலைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே ஓடிவிட்டால், குளிர்காலம் இன்னும் குறைந்த பட்சம் ஆறுவாரங்களுக்காவது நீடிக்கும் என்று அர்த்தமாம். தன் நிழலைப்பார்க்காமலே திரும்பிவிட்டால், விரைவிலேயே வசந்தகாலம் வரப்போகிறது என்று அர்த்தமாம்.
நம்ம ஊர் வானிலை அறிக்கை ரமணனே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு, ’பூவா தலையா’ போட்டு வருடந்தோறும் நடைபெறுகிறது  இந்த காமெடி கலாட்டா நிகழ்ச்சி .
சீதோஷண ஜாதகம் சொல்லப்போகும் அந்த அணிலின் வரவுக்காக கொஞ்சநஞ்சமல்ல சுமார் முப்பதாயிரம் பேர் காத்திருந்தார்கள்.கூட்டத்தினரின் குதூகலத்தை அதிகரிக்கும்  செவிக்கு உணவாக பேண்டு முழக்கங்களும்,வயிற்றுக்கு வாகாக பல்வேறு உணவு அயிட்டங்களும் நிரம்பி வழிந்தன.
கி.பி 1800லிருந்தே நடைபெற்று வருவதாகக் கூறப்படும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுபவர்கள் கண்டிப்பாக ஜெர்மன் மொழியில் மட்டுமே பேசவேண்டுமென்பது ஒரு செல்ல உத்தரவு. அப்படி பேசாமல் ஆங்கிலத்திலோ வேறுமொழியிலோ பேசினால் சின்னதாய் ஒரு அபராதமும் விதிக்கிறார்கள்.
காத்திருந்த கொஞ்ச நேரத்திலேயே சோம்பலாய் அந்த அணில் போன்ற ஒன்று வெளியே வந்துவிட்டு, ‘ஏம்பா ஒங்களுக்கெல்லாம் வேற வேலைவெட்டி இல்லையா?என்பதுபோல் பார்த்துவிட்டு தன் நிழலைப்பார்க்காமல் விடுக்கென உள்ளே சென்றது.அங்கிருந்த அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. அணிலின் ஐதீகப்படி, அவர்களுக்குத்தான் சீக்கிரமே வசந்த காலம் வரப்போகிறதே? நாங்கள் இங்கே அனுபவிக்கும் குளிரை அனுபவிக்காதவர்கள் இதைப்படிக்கும்போது ‘அட மூடர்களே’ என்று கமெண்ட் அடிக்கத்தான் தோன்றும்.ஆனால் உடலில் நுழைந்து, உயிரில் கலந்து உலுக்கி எடுக்கும் குளிரில் ஒருமுறை மாட்டினால், நீங்களும் அணில் ஜோஸியத்துக்கு ஆஜராவீர்கள்.
குளிர்காலத்தில் நாங்கள் எப்படி அவஸ்தைப்படுகிறோம் என்பதை அட்லீஸ்ட் நீங்க படித்தாவது அனுபவிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
காலை எழுந்ததும் கொதிக்கும் தண்ணீரில் குளித்தோ அல்லது குளித்தது போல் நடித்தோ முதலில் உடம்பு முழுக்க பாடி லோஷன் தடவ வேண்டும். அப்படி தடவா விட்டால் தோலெல்லாம் செதில் செதிலாக வெடித்துப் பாம்புத்தோல் போல் ஆகிவிடும்.அதன் பிறகு தெர்மல் என்று சொல்லப்படுகிற உள்ளாடைகளை[பாகிஸ்தானில் தயாரானது - . வேற வழி?] ஜட்டி,  மேல் அணியவேண்டும். ஏறத்தாழ பரிதாபத்துக்குரிய ஸ்பைடர்மேன் எஃபெக்ட்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதுவும் சமீபத்தில் திருப்பூரில் வாங்கி வந்த பனியன்கள் மீது சனியன் பாகிஸ்தானியர்களின் தெர்மல்களை அணியவேண்டிவந்தபோது அவமானமாகத்தான் இருந்தது. அதன்பிறகு எப்போதும் அணியும் சட்டை, பேண்ட், முழங்கால் வரை முரட்டு சாக்ஸ், பூட்ஸ் அணிந்து ஏதோ போருக்குப் புறப்படுவது போல் வீட்டை விட்டு புறப்படுவோம். இதில் பிரஸ்டீஜ் எதுவும் பார்த்து ஸ்டைலுக்காக சாதாரண ஷூ அணிந்து ஐஸ்கட்டிகளில் வழுக்கி விழுந்தால் நம்ம ஊர் தர்ம அடிகளுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத வர்ம அடிகள் கிடைக்கும்.
கெட்டப் இன்னும் முடியவில்லை. இவ்வளவுக்கு அப்புறமும் ஒரு லாங் கோட் அணிந்து, காதுகளுக்கு ஒரு மினி ஹீட்டர், தலைக்கு ஒரு க்ரிப்பான குல்லாய் அணிந்து முடிக்கிறபோது நம்மை நாமே நலம் விசாரிக்கிற பரிதாப நிலைக்கு வந்துவிடுவோம்.
இவ்வளவு பகீரத பிரயத்தனங்களுடன் கிளம்பினாலும் வெளியே வந்தவுடன் ஒரு காற்று அடிக்கும் பாருங்கள். உடுப்புகள் அத்தனைக்குள்ளும் ஊடுருவி, எலும்பைப் பதம் பார்த்து, உயிரை ஒரு கணம் ஊசலாடவிட்டுச்செல்லும். அந்த சமயங்களில் எல்லாம் ‘பேசாம ஊருக்கே ஓடிப்போய் ஊறுகாய் வித்தாவது பொழச்சிக்குவோமா?என்று தோணும். அடுத்த கணமே இந்தப் புலிவால் விளையாட்டைவிட்டுப்போகமுடியாது என்கிற பிராக்டிகல் புத்தி வந்து தொலைக்கும்.
இங்கு பெய்கிற பனி எப்போதும் பார்க்க அழகாக இருக்குமே ஒழிய, அதனால் அடைகிற இம்சைகள் அளவிட முடியாதது. வீட்டுமுன்னால் சேர்கிற பனிக்கட்டிகளை உடனுக்குடன் மெல்டிங் சால்ட் போட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால், நம்ம ஊர்ப்பக்கம் ரோட்டில் குறுக்கேஆட்டுக்குட்டிகளைத்தூக்கிப் போட்டுவிட்டு, அடிபட்டதற்கு நஷ்ட ஈடு கேட்பார்களே,அதுபோலவே, நம் வீட்டுமுன்னால் உள்ள பனியில் வழுக்கி விழுந்துவிட்டு, கேஸ்போடுவார்கள் சில அல்பைகள்.
இந்த குளிர்காலத்தின் உச்சக்கட்ட கோரம் ஷவ்லிங் [shoveling] தள்ளி முடிப்பதற்குள் நாக்கு தள்ளி ,ரெக்கைகள் பிஞ்சுறும்  .உறைந்தும் உறையாமலும் இருக்கிற பனிக்கட்டிகளுக்கு மத்தியில் விழுந்துவிடாமல் வீடு திரும்புவதென்பது ஒரு அட்வென்சருக்கு சமம். சில சமயம் பூட்ஸ் வழியாக சாக்ஸுக்குள் தண்ணீர் புகுந்து கால் எலும்பு சில்லிடுமே,. அந்த வேதனையை சொல்லிட வார்த்தைகள் இல்லை.
இப்போது புரிந்திருக்கும் அந்த அணில் ஐதீகத்தை அவ்வளவு ஆர்வமாக நம்பியதற்கான காரணத்தை.

நாட்டு நிலமை இப்படி இருக்க வீட்டு நிலைமையும் விபரீதம் தான். என் வீட்டுத்தோட்டம் ஒரே பழுப்பு நிறமாக்க் காட்சியளிக்கிறது. ரோஜாச் செடிகளில் வெறும் குச்சிகள் மட்டும் குடியமர்ந்து கொண்டிருக்க,புதினா, ஸ்ட்ராபெர்ரி,அத்தி,மற்றும் ஆப்பிள் செடிகள் அத்தனையும் கதம் கதம் ஹோ கயா தான். ஆனால் வசந்த காலம் வந்ததும் புத்தெழிலுடன் இவர்கள் அனைவருமே ஆஜராகிவிடுவார்கள்.
இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் என் மனைவியின் மல்லிகைச்செடிகள் மட்டும் தோட்டத்திலிருந்து கிச்சனுக்கு இடம் சிஃப்ட் ஆகி சில்லென்று பூத்திருக்கும். கிச்சனில் சமையல் வாசனையை விட, மல்லி வாசனை தூக்கலாக மணக்கும். இதில் ஒவ்வொன்றாக பூக்க பூக்க, அதை ஃபிரிட்ஜில் எடுத்து சேர்த்து வைத்து, ஞாயிறன்று அதைக் கோர்த்து, என் மனைவி தலையில் சூடிக்கொள்வதைப் பார்த்து நாங்கள் ஆச்சர்யம் அடைவோம். [அடடா  ஒரு மல்லிகையே இன்னொரு மல்லிகையை சூடிக்கொள்கிறதே,.. மூனு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறி!]
இவ்வளவையும் நான் எழுதிக்கொண்டிருந்த பிப்-8 அன்றுதான், அணிலின் ஆருடத்தை மீறி, இந்த ஆண்டு பெரும் பனிப்புயல் வீச இருப்பதாக அபாய அறிவிப்பு வெளியிட்டார்கள். பொதுவாக சூறாவளிப் புயலுக்கு மட்டுமே  பெயர் சூட்டி அழைப்பவர்கள், இந்த முறை வரவிருக்கும் பனிப்புயலுக்கு ‘நிமோ’ என்று பெயர் சூட்டி, எல்லா சானல்கள் வழியாகவும் ஏடாகூடமாக எச்சரித்தார்கள். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் நான் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருக்க,சுமார் மூனு மணி அளவில் உறைபனி  கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்க ஆரம்பித்தது. சரி நம்ம பொழப்பு இனி நிமோ நாராயணாதான் என்று முடிவு பண்ணி, நண்பன் ஜூடுக்கு போன் செய்தால், அவன் ஷவ்லிங் செய்வதற்காக ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தான்.
நாமளும் எக்சர்சைஸில் இறங்கி நிமோவுக்கு ஒரு மெமோ கொடுக்கத்தயாரானால் என்ன என்று யோசித்த கணமே ‘வெறும் எலும்புக்கெல்லாம் எதுக்குடா எக்சர்சைஸு?’ என்று அப்பா ஒரு முறை கேட்டது  ஞாபகம் வந்ததும், நேற்றுதான் இந்தியாவிலிருந்து திரும்பியிருந்த டெனண்ட் பின்னி  தந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ டி.வி.டி.யை ஆன் பண்ணிவிட்டு அமர்ந்தேன்.பார்த்தா நடுவில கொஞ்சம் படத்தை காணோம் .திருட்டு DVD போல இருக்கு .

Image result for groundhogs day
Add caption

Tuesday, January 31, 2017

வானத்தில் வட்டமிட்ட நள்ளிரவு தேவதைகள் !!!!!!!!!!

Image result for Tamil Air hostess in Srilankan airlines
Add caption
இலங்கையில் பரதேசி பகுதி -1
‘வணக்கம்' என்ற சொல் என் காதில் தேனாகப் பாய்ந்தது. நிமிர்ந்து பார்த்தால் அந்த தமிழச்சியின் வரவேற்கும் புன்னகையால் உதடுகள் மட்டுமல்லாது கண்களும் புன்னகையைச் சிந்தின. என் நெற்றியிலும் தமிழன் என்று எழுதியிருக்கிறதை நன்றாக படித்துவிட்டாள் போலும்  அந்தப் பெண். வணக்கம் என்ற சொல் இவ்வளவு இனிப்பாக இருக்குமா? ஒரு வேளை அழகிய தமிழ்ப்பெண் சொன்னதாலோ? என்று யோசித்தேன். அதுமட்டுமல்ல சீனா போன்ற நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவிட்டுத் திரும்பும் போது விமானத்தில் சற்றும் எதிர்பாராத 'வணக்கம்' என்ற செந்தமிழ் ஒலித்ததால் என்றுதான் நினைக்கிறேன். மட்டுமில்லாது கொஞ்ச நாட்களாய் மஞ்சள் நிற சப்பை மூக்கு ஆண்களையும் பெண்களையும் பார்த்துச் சலித்துப் போய் இருந்ததால், மினுமினுக்கும் திராவிட நிற தமிழ்ப்பெண் சொன்ன வணக்கம் இனித்திருக்கலாம்.
 ஏனென்றால் தமிழ்நாட்டில் அதுவும் மதுரைக்குப்போகும் விமானத்தில் இந்தியும் ஆங்கிலமும் தவிர தமிழைக் காணோம். வைகோ உட்பட்ட எல்லா அரசியல் வியாதிகளும் அதில்தான் பயணம் செய்கிறார்கள். அதனைப்பற்றி யாரும் சொல்லக்காணோம். ஆனால் இவர்கள் எதிரியாகக் கருதும் இலங்கையின் சிங்கள அரசாங்கம் நடத்தும் விமான சேவையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ். பாராட்டப் படக்கூடிய ,பெருமைப் படக்கூடிய விடயம்தானே.   

பதிலுக்கு நானும் கையெடுத்து வணக்கம் சொல்ல, சீட் பெல்ட்டை சரிசெய்யச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் அந்தப்பெண். இலங்கையின் விமான சேவையான 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்" போயிங் விமானம் மிகவும் பெரியதாகவே இருந்தது. விமான பணிப்பெண்கள் அனைவரும் சேலைதான் கட்டியிருந்தனர். ஆனால் முந்தானையை இடதுபுறத்தோளில் இழுத்து  பின்னால் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார்கள். எல்லாரும் தமிழ் அல்ல, சிங்களப் பெண்களும் இருந்தனர். ஆனால் நம் தமிழ் பெண்களின் முக லட்சணம் அவர்களிடத்தில் மிஸ்ஸிங். நள்ளிரவிலும் நன்றாக உடுத்தி புன்னகை சிந்திய வானத்துத் தேவதைகள் வளைய வந்து  எங்கள் தேவைகளைக் கேட்டுக் கேட்டு செய்தனர்.


இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் சீட்டின் முன்னால் உள்ள நெறிமுறைகள் தமிழில் எழுதியிருந்தது. அதோடு அறிவிப்பும் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழிலும் வந்தது. அதற்கெனவே தமிழ்ப்பெண்கள் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சுற்றிலும் பார்த்தேன். முக்கால்வாசி சீன மூஞ்சிகள்தான் இருந்தன. இவர்கள் எங்கே இலங்கைக்குப் போகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. பயணிகளில் தமிழ் மூஞ்சிகளில் இந்தப் பரதேசி தவிர வேறு ஒருவரையும் நான் பார்க்கவில்லை. அதுசரி சீனாவிலிருந்து எந்தத் தமிழ் இலங்கைக்கு வரக்கூடும்?.  அது ஒரு அபூர்வ நிகழ்வுதானே.

அந்தப்பக்கம் திரும்பவும் வந்த தமிழச்சியிடம்," சாப்பிட இட்லி தோசை கிடைக்குமா?” என்றேன்.மீண்டும் முகமெங்கும் விரிந்த செயற்கைத்தனம் கொஞ்சம் கூட இல்லாத புன்னகையுடன் , “அதெல்லாம் கிடைக்காது” என்று  அன்புடன் சொன்னதை,அன்புக்கு நான் அடிமை  என்பதால் ஏற்றுக்கொண்டு கொஞ்ச நேரத்தில் கொடுத்த உணவினை சாப்பிட்டேன்.  ஹும் இட்லி தோசை சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று என்று பெருமூச்சுடனும் மெலிதான ஏப்பத்துடனும் வலிதான ஏக்கத்துடனும் அப்படியே தூங்கிவிட்டேன்.
Image result for chinese travellers in Srilankan airlines

முதலில் இந்தியப் பயணத்தைத் திட்டமிடும் போது இலங்கை போக எந்த எண்ணமும் இல்லை. சீனா வழியாக இந்தியா போவதுதான் திட்டம். சீனாவில் கடுங்குளிர் என்பது அதன்பின்தான் தெரிய வந்தது. கேன்சல்  பண்ணினால் நஷ்டமாகும் என்பதால் சரியென்று சொன்னேன். நியூயார் க்கிலிருந்து கத்தார் ஏர்லைன்சின் மூலம் பெய்ஜிங் சென்று அங்கிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் சென்னை என்பது என்னுடைய ஐட்டினரியில் தெரிந்தது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு வழியாகச் செல்கிறது என்பதால் மறுபடியும் ஜானியிடம் கேட்டேன், "கொழும்பில் சிலநாட்கள் தங்கிச் செல்ல முடியுமா" என்று. ஜானி என்பது ஜானகிராமன் என்பதன் சுருக்கம். அவர்தான் என்னுடைய ஆஸ்தான டிராவல்  ஏஜென்ட்.
சில நிமிடங்களில் அவர் திரும்பக் கூப்பிட்டு, "முடியும் சிறிதளவு அதிகமாகும்” என்றார். எவ்வளவு என்று கேட்டபோது 50 டாலர்கள் தான் என்றதும் சிரித்துக் கொண்டே உடனே பயணத்திட்டத்தை மாற்றியமைத்ததில் சேர்ந்து கொண்டதுதான் இலங்கைப் பயணம்.
கடைசி நிமிடத்தில் உருவான திட்ட மென்பதால் முன்னரே நன்கு திட்டமிடவில்லை. அடுத்த தடவை போகும்போது யாழ்ப்பாணம் போய்க் கொள்ளலாம். தற்சமயம் கொழும்பைச் சுற்றிப் பார்த்தால் போதும் என்று நினைத்துக் கொண்டேன். யாழ்ப் பாணம் போகவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்ட இலங்கை நண்பர்களும்  உண்டு. அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் அடுத்தமுறை யாழ்ப்பாணத்திற்கு கண்டிப்பாய் சென்று யாழ் தமிழ்ச் சங்கத்து மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
கொழும்பு வந்து சேர்ந்துவிட்டதாக மறுபடியும் அறிவிப்பு வர திடுக்கென்று எழுந்தேன். திடீரென்று ஒரு கணம் நான் எங்கே இருக்கேனென்று தெரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆயிற்று. சுற்றுப் பயணம் செய்யும்போது இப்படித் தோன்றுவது உண்டு. இது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்கும் தோன்றுமா என்று யாராவது சொன்னால் நலமாயிருக்கும். இல்லையென்றால் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
Related image

நான் இருப்பது நியூயார்க்கிலா, பெய்ஜிங்கிலா, சென்னையிலா அல்லது தேவதானப் பட்டியிலா என்று தெரியாமல் ஒரு கணம் முழிக்கும்போது, சிங்கள அறிவிப்பு முடிந்து மறுபடியும் தமிழ் அறிவிப்பு வரும்போதுதான் தெரிந்தது விமானம் கொழும்புவுக்கு வந்துவிட்டது என்று.
அமெரிக்க வாழ் குடிமக்களும், பச்சை அட்டை தாரர்களும் நியூயார்க்கில் உள்ள இலங்கையின் கான்சுலர் வலைத்தளத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையிலுள்ள மதத்தலைவர்களையோ, பத்திரிக்கைக் காரர்களையோ சந்திக்க முயலக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் விசாவைக்  கொடுத்தார்கள். அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டேன்.
தமிழில் அறிவிப்புகளைப் படித்துக் கொண்டே குடியுரிமை அலுவலரை வரிசையில் நின்று சந்தித்தேன். அவரின் சிங்கள முகம் கடுகடுவென்று இருந்தது.
நியூயார்க்கில் வசிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உன்னை இங்கு அனுப்பினார்களா? என்று கேட்ட கேள்வியில் எனக்கு விதிர் விதித்துவிட்டது.
- தொடரும்.


Thursday, January 26, 2017

எம்ஜியாரை மடக்கிய இயக்குனர் மகேந்திரன். !!!!!!

Image result for சினிமாவும் நானும் இயக்குநர் மகேந்திரன்
படித்ததில் பிடித்தது
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்: பகுதி 1
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
இயக்குநர் மகேந்திரன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆனால் அவருக்கு நான் நெருக்கமானவன் அல்ல.
“என்னடா ஒரே குழப்பமா இருக்கு, எப்பவுமே நீ குழப்பவாதிங்கறத திரும்பவும் புரூவ் பண்ணிட்டடா”.
“வாடா மகேந்திரா என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்?”.
“போடா இவனே, `உங் கூட பேசக்கூடாதுன்னு நெனைச்சேன்”.
“ஏண்டா நான் என்ன பண்ணேன் உன்னை ?”.
“போடா இவனே, இவ்வளவு தூரம் ஊருக்கு வந்திருக்கிற, அதுவும் 20 வருஷத்துக்கு அப்புறம், என்ட்ட சொல்லவேயில்லை, பார்க்கவும் வரல”.
“இல்லடா மகேந்திரா திடீர்னுதான் வந்தேன். உன்னைக் கேட்டேன்.  ஊர்ல இல்லன்னு சொல்லிட்டாய்ங்க”.
“ஊர்ல இல்லன்னுதானே சொன்னாய்ங்க, உலகத்தில இல்லைன்னு சொன்னாய்ங்களா?
“சரிடா மகேந்திரனை பத்தி எழுத்திட்டிருக்கேன் அப்புறம் உன்ட்ட பேசறேன்”.
“என்னடா என்னைப்பத்திக் கூட எழுதப்போறியா?”
“நீ இல்லடா இது இயக்குனர் மகேந்திரன் பத்தி”.
“அப்படியா சரிடா குடியரசு  தின வாழ்த்துக்கள், மனசு கேக்கல வாழ்த்தத்தான் வந்தேன்.
“ரொம்ப நன்றிடா, ஆனா  இப்ப நம்ம தமிழர் இருக்கிற மனநிலையில ஒருத்தரும் கொண்டாடுற மாதிரி  தெரியலை.”.
இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அடிக்கடி நம்ம பதிவு நடுவில வந்து தொந்தரவு பண்ற அந்த மகேந்திரன் வேற. நான் எழுத வந்தது , நம்ம எல்லோருக்கும் தெரிந்த இயக்குனர் மகேந்திரன் பத்தி. அவருக்கு நான் நெருக்கமானவன் இல்லையென்று சொன் னேன், ஆனால் எனக்கு அவர் நெருக்கமானவர் என்று ஏன் சொன்னேன் என்றால் அதற்குள்ள காரணங்களைக் கீழே கொடுக்கிறேன்.
எனக்கு தமிழில் மிகவும் பிடித்த படங்களில் சிலவற்றை இயக்கியவர் மகேந்திரன் அவர்கள். அவை, “முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்”, “நெஞ்சத்தைக் கிள்ளாதே” ஆகியவை.
அவரும் என்னைப் போலவே மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்.
என்னைப்போலவே மதுரைக்காரர். இளையான்குடி அவர் சொந்த ஊர்.
புத்தகக் கண்காட்சியில் அவர் எழுதிய மேற்சொன்ன புத்தகத்தைப் பார்த்ததும் உடனே வாங்கினேன். அதில் நமக்கு தெரிந்த விஷயங்களை விட  தெரியாத அநேக தகவல்கள் இருந்தன. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு.
Related image

'நாடோடி மன்னன்' படத்தின் வெற்றி விழாக்  கொண்டாட்டத்திற்காக மதுரை வந்திருந்தார் புரட்சி நடிகர் எம்ஜியார். அப்போது காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவர்கள் தங்கள் இலக்கிய வட்டத்தில் அவரை பேச அழைத்தார்கள். எம்ஜியாருக்கு காரைக்குடி திட்டம் எதுவுமில்லை என்றாலும் இளம் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அழகப்பா கல்லூரிக்கு வர ஒத்துக்க கொண்டார். ஆனால் பேச மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்றும் நிபந்தனை விதித்தார். மேடையில் எம்ஜியார் வீற்றிருக்க, மூன்று மாணவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலிரண்டு மாணவர்கள் நடுக்கத்துடன் பேச ஆரம்பித்து, மாணவர்கள் கூச்சலிட்டதால் ஆரம்பத்திலேயே அகன்று விட மூன்றாவதாக வந்த மாணவன் தான் நம் மகேந்திரன். பயம் கொஞ்சம் இருந்தாலும் தற்கால தமிழ் சினிமா பற்றி விமர்சித்து, டூயட் பாடுவது,மரத்தைச் சுற்றி ஓடி வந்து செயற்கையாக பாடுவது போன்றவற்றை சாடி ஒரு நீண்ட சொற்பொழிவாற்ற, கூடி இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அமைதியாக கேட்டு அசந்து போயினர். அதுவும் எம்ஜியாரை வைத்துக் கொண்டு அப்படி பேசியதற்கு அசாத்திய துணிவு வேண்டும்தான். ஆனால் கோபப்படுவதற்குப் பதில் வாழ்த்துச் சொல்லி எதிர்காலத்தில் சிறந்த விமர்சராக வருவாய் என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார் எம்ஜியார்.
Image result for எம்ஜியார்

பட்டப்படிப்பு முடித்தபின் தஞ்சாவூரில் உள்ள அத்தை உதவி செய்கிறேன் என்று கூறியதினிமித்தம் சட்டம் பயில சென்னை வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அத்தையின் உதவி நின்றுபோனதால் சட்டக் கல்லூரிப் படிப்பை தொடர முடியாத நிலை. ஊருக்குத்திரும்புவதற்கு ஆயத்தப்படுகையில் திமுக பத்திரிகைகளுள் ஒன்றான 'இன முழக்கம்' என்ற பத்திரிகையில் வேலை கிடைத்தது. வேலை என்னவென்றால் அவருக்கு மிகவும் பிடித்த சினிமா விமர்சனம். அது கொஞ்ச நாள் போய்க் கொண்டிருக்கும்போது அங்கு வந்த எம்ஜியார் அவரைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு அவருக்கு வேறு வேலை தருவதாக அழைத்துச்சென்று தன்னுடைய T நகர் வீட்டிலேயே மாடியில் தங்க வைத்தார். எம்ஜியாருக்கு கல்கி  எழுதிய பொன்னியின் செல்வன் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காகத்தான் மகேந்திரனை அழைத்துச் சென்றவர், பொன்னியின் செல்வன் நாவலைக் கையில் கொடுத்து, அதனை திரைக்கதை வசனமாக எழுதப்பணித்தார். அந்த வேலையை மூன்று மாதத்திற்குள் முடித்துக் கொடுத்தார் மகேந்திரன்.
Related image

பொன்னியின் செல்வனை படமாக எடுக்க எத்தனைபேர்தான்  ஆசைப்பட்டனரோ. ஆனால் இதுவரை ஒருவருக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மகேந்திரன் எழுதிய திரைக்கதை வசனமும் யாரிடம் இருக்கிறதென்று தெரியவில்லை.
அப்போது சாப்பாட்டுக்கு கூட இல்லாது மகேந்திரன் கஷ்டப்படுவதை அறிந்த எம்ஜியார் தன்னிடம் அதனைப்பற்றி சொல்லாததை கடிந்து கொண்டு முழுதாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தாராம். அது அந்தக் காலத்தில் பெரிய தொகை என்பதில் சந்தேகமில்லை.
அதன்பின் துக்ளக் பத்திரிக்கையில் வேலை கிடைக்க அங்கும் சினிமா விமர்சனம் எழுதும் வேலைதான். எம்ஜியார் உதவி செய்தவர், தன்னை பாராட்டியவர் என்று எதையும் நினைக்காமல் அவருடைய படத்தை கடுமையாக விமரிசனம் செய்து எழுதினார் மகேந்திரன். விமர்சனத்துக்கு  பதிலாக அல்லது எதிர்வினையாக அந்தப்படத்தில் நடித்த நடிகர் அல்லது இயக்குநரிடம் அவர்கள் கேட்டு அதற்கு அடுத்த வாரம் வெளியிடுவது அப்போது துக்ளக்கின் பழக்கம். அது போல எம்ஜியாரை அணுகியபோது ஏற்கனவே விமர்சனத்தை படித்திருந்த அவர் பெரிதும் கோபப்பட்டு பதில் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். ஆனால் மகேந்திரன் அதற்கெல்லாம் பெரிதாகக் கவலைப் படவில்லை.
இவ்வாறு இருமுறை எம்ஜியாருக்கு எதிராக மகேந்திரன்  நடந்து கொண்டாலும் எம்ஜியார் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது, “முள்ளும் மலரும்” வெற்றிக்கு பாராட்டியதோடு “உதிரிப்பூக்கள்” வெள்ளி விழாவிலும் கலந்து கொண்டு பாராட்டியிருக்கிறார்.
தற்செயலாக எழுத்தாளர் மற்றும் டைரக்டராக ஆனது முதற்கொண்டு மகேந்திரன் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்ததை விவரிக்கும் மகேந்திரன் திரைத்துறைக்கு தான் வர காரணமானவர் எம்ஜியார் என்று சொல்லி இப்புத்தகத்தையும் அவருக்கே சமர்ப்பித்திருக்கிறார்.
தொடரும்

Image result for குடியரசு தின  நாள்


நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின  நாள் நல்  வாழ்த்துக்கள் .இந்தியாவுக்குள் நமக்கு இருக்கும் உரிமைகளை போராடிப்பெறும் நிலைமைதான் இப்போதும் இருக்கிறதென்றாலும், போராடுவதற்கு நாம் நமது அரசியல் வியாதிகளை நம்பாமல் நம் இளைஞர்களை நம்புவோம் . அவர்கள் முன்னெடுக்கும் எல்லா போராட்டங்களுக்கும் உலகத்தமிழரின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன் . நாம் இந்தியர் , என்பதும் நாம் தமிழர் என்பதும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்பதை நினைவில்கொள்வோம் .