Monday, June 20, 2016

பரதேசியைப் பிடிக்க வந்த சீன ராணுவம் !!!!!!!!!!!!



சீனாவில் பரதேசி -12
Forbidden city Entrance

அவன் என்னவோ சொல்ல, நான் உடனே என்னுடைய அனுமதிச்சீட்டை எடுத்துக் காண்பித்தேன். அந்தக் கையைத் தள்ளிவிட்டு மேலும் ஏதோ சொன்னான். ஒன்றும் புரியாமல் நான் திரு திருவென்று முழிக்க, என் கையைப்பிடித்து இழுத்துச் சென்றான். ஒரு கம்யூனிச நாட்டிலா நம் கதை முடியணும் என்று நொந்தவாறே அவன் இழுத்த இழுவைக்கு பின்னால் சென்றேன். ஒரு ஓரமாய் இழுத்துக் கொண்டு சென்று கையைப் பிடித்துக் கொண்டே வாக்கி டாக்கியில் ஏதோ பேசினான். சிறிது நேரத்தில் வாத்தியங்கள் முழங்க ஒரு சிறு இராணுவப்பிரிவு அணிவகுத்து வந்தது. என்னடா இது இந்தச்சிறு பரதேசியைப் பிடிக்க பெரும் ராணுவமே வருகிறதே என்பதை நினைத்து பயப்படுவதா சந்தோஷப்படுவதா என்று ஸ்தம்பித்து நின்றேன். இந்த தாவரவாதியை தீவிரவாதி என்று நினைத்து விட்டார்களோ என்று அச்சமாய் இருந்தது.

Chinese Army 

   நல்ல குளிரிலும் எனக்கு  வியர்த்து விட்டது. ஆனால் ராணுவ அணிவகுப்பு எங்களைக் கடந்து போனது. சீன ராணுவத்தின் இளம் வீரர்கள் மிடுக்கான யூனிபார்ம் உடுத்தி துடுக்கான நடை நடந்து சென்றனர் .சும்மா சொல்லக்கூடாது நம் எதிரி ராணுவம்தான். ஆனால் அந்த ஒழுக்கம் , கூர்மை , கவனம் என்னை ரொம்பவே ஈர்த்தது . அணிவகுப்புக்கு இடைஞ்சலாக நான் ரோட்டின் நடுவில் வந்ததால் என்னை ஓரமாக இழுத்துசென்றான்   என்று அப்போதுதான் புரிந்தது. அதன் பின்  வீரன் என் கையை விட்டுவிட உடனே கொஞ்சம் தள்ளி நின்று அணிவகுப்பை படமெடுத்தேன்.  திரும்பவும் என்னை நோக்கி ஓடி வந்த மஞ்சள் வீரன், நோநோ என்று சொல்லித் துரத்திவிட்டான்.


வருகின்ற வழியில் ஒரு பெரிய சதுரமான பல அடுக்கு மாளிகை வந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள், அதுதான் சீனப்பேரரசரின் கேளிக்கை மண்டபம். அங்கே பைப் ஆர்கன் போன்ற ஒரு  இசைக்கருவி இருந்தது. ஒருபுறம் இருந்த பெரிய ஹாலில் நாடகங்கள், ஓப்ரா நிகழ்ச்சிகள் நடக்க, அதன் எதிரே மாடியில் பேரரசர் தன் குடும்பத்துடன் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பாராம். நடுவில் கீழே உள்ள இடத்தில் மற்றவர்கள் அமர்ந்து ரசிப்பார்களாம். 

Emperor's Opera Hall


உடனே எனக்கு திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள நாடக சபா ஞாபகம் வந்தது. அதில் மன்னர் உயரத்தில் உள்ள மேடையில் உட்கார்ந்து ரசிக்க, நடனங்கள், நாடகங்கள் ஆகியவை எதிரே இருந்த பள்ளமான இடத்தில் நடக்குமாம்.

இதைத்தான் உடைக்கவேண்டும் என்று சீமான் சொல்கிறார். ஏன் என்று கேட்டால் அது தமிழனை மற்றவன் ஆண்ட அவமானச் சின்னமாம். அப்படிப்பார்த்தால் தமிழ்நாட்டில் ஏன் இந்தியா முழுவதும் ஒரு வரலாற்று நினைவுச்சின்னமும் மிஞ்சாது. மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரம், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் அம்மன் கோவில் என்று ஒன்று கூட மிஞ்சாது. சென்னையிலும் ஏன் டெல்லி ஆக்ராவிலும் ஒன்றும் மிஞ்சாது. இதைப் போல பைத்தியக் காரப்பேச்சுகளை சீமான் நிறுத்த வேண்டும்.

மன்னிக்கவும் எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் விட்டேன். மீண்டும் விலக்கப்பட்ட நகருக்கே போவோம்.

சில பகுதிகள் மராமத்து வேலைக்காக மூடி இருந்தன. அதின் முன்னால் எழுதியிருந்த ஆங்கில அறிவிப்புகள் சிரிப்பை வரவழைத்தன. ஆனால் ஆங்காங்கு மஞ்சள் வீரர்கள் இருந்ததால் சிரிப்பதற்கும் பயமாக இருந்தது.


வெளியே வருவதற்கே ரொம்ப நேரம் ஆனது, உலகத்தின் மிகப்பெரிய வரலாற்று சின்னத்தின், உலகத்தின் மிக மூத்த நாகரிகமான சீன நாகரிகத்தின் பிறப்பிடத்தையும், ஒரு காலத்தில் உலகத்தின் மிகப்பெரிய சீன சாம் ராஜ்யத்தின் மைய இடத்தையும் பார்த்த மகிழ்ச்சியில் வெளியே வந்தேன்.

வரும் வழியில் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் நின்றிருந்தது. அதன் வெள்ளைக்கார வழிகாட்டி சொன்ன சம்மர் சொல்லத்தவறிய சில தகவல்களை கீழே தருகிறேன்.
“தி ஃபர்பிட்டன் சிட்டி” (The Forbidden City) என்ற படம் இங்கே எடுக்கப்பட்டதாம். சீனப் பேரரசரைச் சந்தித்த ஒரு அமெரிக்கனைப் பற்றிய படம் இது. பார்க்கவேண்டும்.


1987ல் வந்த “தி.லாஸ்ட் எம்பெரர்” (The Last Emperor) என்ற படம்தான் சீனமக்கள் குடியரசின் அரசால் முதன்முதலில் அனுமதிக்கப்பட்டு, இந்த அரண்மனை வளாகத்தில் எடுக்கப்பட்ட படம். கடைசிப் பேரரசரான 'புயி' அவர்களின் வரலாற்றைக் குறிக்கும் இந்தப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு புகழ் பெற்றது. நான் சென்னையில் இருக்கும்போதே இந்தப்படத்தைப் பார்த்தேன்.

அடுத்தது மார்க்கோ போலோ (Marco polo) என்ற தொலைக்காட்சித் தொடர் இங்கே எடுக்கப்பட்டது. இது NBC  மற்றும் RAI  டெலிவிஷனும் இணைந்து தயாரித்த தொடர். மார்கோ போலோ, சீனாவில்  குப்லாய் கானை சந்திப்பது பற்றிய தொடர் இது. நெட்ப்லிக்சில்    இருக்கிறது.

அது தவிர விலக்கப்பட்ட நகரத்தில் பலவித இசை நிகழ்ச்சிகள், ஓபரா காட்சிகள் நடந்திருக்கின்றன என்று கூகிளில் அறிந்துகொண்டேன்.
Yanni Program in Forbidden city


1997ல் கிரீசைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் யான்னி (yanni) இங்கே மாபெரும் இசைநிகழ்ச்சியை நடத்தினார். அது அங்கேயே லைவ் ஆக ரிக்கார்ட் செய்யப்பட்டு பின்னர் "Tribute Album" - என்ற இசைத் தொகுப்பில் இடம்பெற்றது. இது விலக்கப்பட்ட நகரத்தின் முன்புறத்தில் நடந்தது.

1998ல் 'Turandot' என்ற ஓபரா நிகழ்ச்சி நடந்தது. இது Giacomo Puccini என்ற ஓபரா குழுவினரால் நடத்தப்பட்ட சீன இளவரசியின் கதை.

2001ல் 'The Three Tenors' என்ற இசைக்குழுவின் மூன்று புகழ் வாய்ந்த பாடகர்கள் 'Placido Domingo Jose carreras  மற்றும் Luciano Pavaroti' ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தினார்களாம். முதல் இருவரும் ஸ்பானியர், மூன்றாமவர் இத்தாலி நாட்டுப் பாடகர்.

2004ல் பிரெஞ்சு இசைக் கலைஞர்  Jean Michel Jarre தனது 260 பேர் கொண்ட மிகப்பெரிய இசைக் குழுவுடன் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். 2004; நடந்த  " Year of France in China" என்ற விழாவின் நிமித்தமாக இது நடைபெற்றது.

வெளியே வரும் வழியில் சீன இளவரசர்கள் இளவரசிகள் விளையாடும் பெரிய பூங்காக்களைப் பார்த்தேன். அது தவிர அதனருகில் அவர்கள் பெயரில் வளர்க்கப்பட்ட மாபெரும் மரங்களையும் பார்த்தேன்.

பார்த்துக் களைத்து முடித்து மெதுவாக நடந்து வெளியே வந்தேன். ஓட்டல் வந்து சேர்ந்து அப்பாடா என்று சோபாவில் அமர்ந்தபோது கிரீன் டீயில் தேனைக் கலந்து புன்சிரிப்புடன் நீட்டினாள் ஜோகன்னா. ஆஹா ஆஹா அலைந்து திரிந்து வந்தவனுக்கு அந்த தேநீர் அமிர்தமாக இருந்தது.


- தொடரும்.

Thursday, June 16, 2016

நியூயார்க் ஈழத்தமிழ் விழாவில் சூப்பர் சிங்கர்ஸ் !!!!!!!!!!!

Add caption

'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்', ஜூன் மாதம் 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரதேசி ஆஜர். நியூயார்க்கில் நான் வசிக்கும், குயின்ஸ் போரோவின் ஃபிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்பிள் கலையரங்கத்தில் இது நடைபெற்றது. தமிழீழ சகோதரரும் ,தமிழத்தின் மருமகனுமான (இவர் மனைவி காரைக்குடி) கவிஞர் சிவபாலன் வரவேற்றார். பார்க்கிங் கிடைக்காதுன்னு 5 மணி புரோகிராமுக்கு 3 மணிக்கே என் பார்யாளை எழுப்பிக் கிளப்பி நாலு  மணிக்கெல்லாம் வந்துட்டோம். அதிர்ஷ்டவசமாக கலையரங்கத்திலிருந்து ஒரு பிளாக் தள்ளி ஒரு பள்ளிக்கூடம் முன்னால் பார்க்கிங் கிடைத்தது. காரை விட்டு இறங்கிப் பார்த்தால் 'பிரின்ஸ் ஜூவல்ரி' அங்கே எதிரே இருந்தது. ஆஹா இங்கே பார்க்கிங் கிடைத்தது என் அதிர்ஷ்டமில்லை, துரதிர்ஷ்டம் என்பது அப்போதுதான் விளங்கியது.  
  

"நேரமாச்சு சிக்கிரம் வா", என்று என் மனைவியை எதிர்ப்பக்கம் பார்க்கவிடாமல் விறுவிறுவென்று முன்னே விரைந்து சென்றேன். “5 மணி புரோகிராமுக்கு 3 மணிக்கே கிளம்பி வந்தீட்டிங்களே”,  என்று என் மனைவி சொன்னதை கண்டுகொள்ளாமல் 4:30 மணிக்கெல்லாம் நுழைந்தபோது, அங்கே நாலைந்து பேர்தான் இறந்தனர். சரி உள்ளே போய் உட்காருவோம் என்று நுழையப்போனால், அங்கே காவலுக்கு ஆப்பிரிக்க அமெரிக்க ஆஜானுபாகன், சிரித்துக் கொண்டே சொன்னான் "ஆறு மணிக்குத்தான் உள்ளே விடுவோம்" என்று. என் மனைவி என்னை ஒரு முறை முறைக்க, இல்லையே 5 மணி என்றுதானே போட்டிருக்கிறது" என்றேன் அவனிடம்.  

Sathyaprakash

"ஐந்து மணி என்று போட்டிருந்தால் இந்திய நேரப்படி 6 மணி" என்று சிரித்துக்கொண்டே   சொன்னான். அதுவும் ஒரு அந்நியன் சொன்னது கொஞ்சம் அவமானமாக இருந்தது.

என் மனைவி மீண்டும் என்னை முறைத்துவிட்டு, “வாருங்கள் பிரின்ஸ் ஜீவல்ரி போவோம்", என்றாள். ஐயையோ மறுபடியும் மாட்டிக் கொண்டோமே என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது கவிஞர் சிவபாலன் வர, "ரூத் நீ போய்ட்டு வா நான் இவர்ட்ட கொஞ்சம் பேசனும் அதோட உள்ளே போய் இடம் போட்டு வைக்கிறேன்னு', சொல்ல ரூத் நகர்ந்தாள். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு சிவபாலனிடம் கதைக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய நியூராலஜிஸ்ட் டாக்டர் நந்தகுமார் (முத்தமிழ் மன்றத்தலைவர்), தமிழ்ச் சங்க பொருளாளர் ரங்காவின் மனைவி புனிதா என்று தெரிந்த முகங்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.
Parvathi

சுமார் 6:10 க்கு உள்ளே விட்டார்கள். என் மனைவி வைத்திருந்த 2 பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், டெம்ப்பிள் கேண்டீனில் வாங்கிய மிக்சர் பாக்கெட் ஆகிய எதையும் உள்ளே விட மறுத்து எடுத்துக் கொண்டார்கள். கடோத்கஜனின் பக்கத்தில் இருந்த டேபிள் முழுவதும் பாட்டில்களும் பண்டங்களும் நிரம்பி வழிந்தன.

உள்ளே போய் உட்கார்ந்தோம், அரங்கு நிறையவில்லை. போனதடவை அதே இடத்தில் தமிழ்ச் சங்க விழா நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம் கிடைக்காது, மேலே பால்கனியில் உட்கார்ந்து டிவி பார்ப்பது போல் இருந்ததால் தான் இன்றைக்கு சீக்கிரம் வந்தேன். ஆனால் கீழேயே பாதிக்கு மேல் காலியாக இருந்தது ஈழத்தமிழரின் மனநிலையைக் காண்பித்தது போல் தெரிந்தது.

ஆரம்பிக்கும் போது மணி 6.40. இந்திய மணிப்படி ஒரு மணி நேரத்தாமதம் என்றால், இலங்கை மணிப்படி  இன்னும் லேட்டாகும் என்று அப்போதுதான் தெரிந்தது. ஒருவேளை ஆட்கள் சேரவில்லை என்பதால் தாமதமாக ஆரம்பித்திருக்கலாம்.

நண்பர் KS. ராஜா புகழ் ரமேஷ் கிருஷ்ணா வந்து வணக்கம் கூறி, ஈழத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தி, பின்னர் ஈழ விடுதலைப் பாடல் ஒன்றும் இசைக்கப்பட்டது.

 சத்யபிரகாஷ், சந்தோஷ், பிரகதி, பார்வதி, பிரியங்கா ஆகியோர் வரவேண்டியது. இதில் சந்தோஷூக்கும் பிரியங்காவுக்கும் விசா கிடைக்கவில்லை என்றார்கள். ஆனால் நியூஜெர்சியில் வாழும் கிருஷ்ணா ஸ்ரீதரன் அதற்குப் பதிலாக வந்திருந்தார். நாங்கள் எலிவேட்டரில் வரும் போதே சத்யபிரகாஷூம் பார்வதியும்அதில்  எங்களோடு வந்தனர் .



இசைக்குழு நியூஜெர்சியில் இருக்கும், வசந்த் வசீகரன் குழு. ஏற்கனவே இவர்களை பலமுறை பார்த்திருக்கிறேன். 2 கீபோர்டு, ஒரு புல்லாங்குழல், ஒரு பேஸ், டிரம்ஸ், மற்றும் ரோட்டர் டிரம்ஸ் தபேலா ஆகியவைதான்  ஆர்க்கெஸ்ட்ரா, 2ஆவது  கீபோர்டு வாசித்த இளைஞன் சில பாடல்களுக்கு ஹாலோ கிட்டாரில் ரிதம் வாசித்தான்.

ஐந்தாறு  பாடல் வரை கீபோர்டும், புல்லாங்குழலும் கேட்கவில்லை. அவர்களும் என்னென்னவோ பண்ணிப் பார்த்தார்கள். அப்புறம் தீடீரென்று வேலை செய்ய ஆரம்பித்தபின் தான் கச்சேரி களைகட்டியது.

சத்யா பிரகாஷின் சீசனில் வந்தவர்களில் இவர்தான் இப்போது மோஸ்ட் வான்ட்டட்  சிங்கர். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் பாடி வருகிறார். சமீபத்தில் தாரை தப்பட்டையில் இளையராஜாவுக்கும் பாடியுள்ளார். அந்தப் பாடலுடன்தான், அவரின் பாடல் வரிசைகள் ஆரம்பித்தது. அதன்பின் அவர் “ ஒரு காதல் கண்மணி”யில் பாடிய “சின்னஞ்சிறு ரகசியமே”, வெள்ளைக்கார துரையில் பாடிய "அம்மாடி உன் அழகு", “காதல் சடுகுடு” போன்ற பாடல்கள் சூப்பராக அமைந்தன. அதுதவிர பிரகதியுடன் இணைந்து பாடிய "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை', “தூங்காத விழிகள் ரெண்டு”, “உதயா உதயா”, ஆகிய பாடல்கள் சத்யபிரகாஷ் எந்த வகைப்பாடல்களையும் பாட வல்லவர் என்பதை நிரூபித்தன. அதோடு பார்வதியுடன் டூயட் பாடி " ஏ மிஸ்டர்” (காவியத்தலைவன்) “வெள்ளைபுறா ஒன்று”, “ஆத்தங்கரை மரமே” ஆகிய பாடல்களும் நன்றாகவே அமைந்தன.

அமெரிக்காவின் டார்லிங் பிரகதி வரும்போது மிகுந்த ஆரவாரம் எழுந்தது. இன்னும் அழகாகி இருந்தாள். இப்போது மாடலாகவும் ஜொலிக்கிறாள். தமிழ்ப் படத்தில் தமிழ்பேசி நடிக்க ஒரு கதாநாயகி ரெடி. "ஒசக்க ஒசக்க " என்று தான் பாடிய பாடலுடன் தன் கணக்கை ஆரம்பித்து நிறைய டூயட் பாடல்கள் பாடினாள். அதில் கிருஷ்ணாவுடன் பாடிய "அழகே சுகமா”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, “டார்லிங் டம்பக்”, ஆகிய பாடல்கள் அருமை.


பார்வதியின் குரலில் இன்னும் இனிமை கூடியிருக்கிறது. அவர் பாடிய “கள்வரே கள்வரே”, “ஊருசனம்”, “சின்னத்தாயவள்” மற்றும் கிருஷ்ணாவுடன் பாடிய "தென்றல் என்னை முத்தமிடும்", “ஜிங்கனமணி”,  ஆகிய பாடல்கள் மிக இனிமையுடன் ஒலித்தன. பிரகதியை விட பார்வதியின் குரல் மெருகேறி ஒலித்தது. தற்சமயம் சென்னையில் செட்டில் ஆகி எத்திராஜ் கல்லூரியில்  வேறு படிப்பதால் தமிழ் இப்போது தகராறு இல்லை.

Uruthirakumar 
இடையில் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு  உருத்திரகுமார் வந்து, தமிழீழ தாகத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி வேக உரையொன்றை நிகழ்த்தினார். ஆனால் வந்திருந்த ஆடியன்ஸ் மத்தியில் அதே உணர்வு காணப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இப்போது அமைந்துள்ள தமிழ் அரசோடு இணைந்து அரசியல் தீர்வு எட்டுவதுதான் இப்போதுள்ள சிறந்த வழி என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ அதிக மக்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் அன்றைய நாள் இனிய மாலையாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
முற்றும்


Monday, June 13, 2016

சொர்க்கத்தின் பிரதிநிதியான சீனப் பேரரசர் !!!!!!!!!!!!!!



சீனாவில் பரதேசி -11


பேரரசர்களின் அரண்மனை வாழ்வில், மதம் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டிருந்தது. ஸிங் (Qing) டைனாஸ்டியில் மஞ்சூரியன் 'ஷாமனிசம்' கடைப் பிடிக்கப்பட்டது. 'பேலஸ் ஆஃப் எர்த்லி ஹார்மனி யில் '( The palace of Earthly Harmony) இந்த வழிபாடுகள் அடிக்கடி நடந்தனவாம். அது மட்டுமல்லாமல் அரண்மனை வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்ததால் சீனாவின் பழைய மதமான 'டாவோயிசமு'ம்  முக்கிய மதமாக இருந்தது. இரண்டு டாவோயிஸ்ட் ஆலயங்கள் உள்ளே இருக்கின்றன.

இவ்விரண்டு மதங்கள் தவிர இந்தியாவிலிருந்து வந்த புத்த மதமும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தது. இது ஸிங் டைனாஸ்டியிலிருந்துதான் ஆதிக்கம் பெற்றது. இன்னர் கோர்ட்டில் புத்தர் ஆலயங்கள் பல இருந்தன. திபெத்தின் புத்த மதமான "லாமாயிசம்" மும் அங்கே இருந்தன. புத்தரின் சிலைகளையும், ஓவியங்களையும் பல இடங்களில் பார்த்தேன்.
Incense Burner Imperial Garden

அதன்பின் வந்தது, பேரரசின் நந்தவனம் (Imperial Garden). இதுபோன்று மூன்று பகுதிகளில் நந்தவனங்கள் இருக்கின்றன. குளிர் காலமாகையால் அதன் அழகு முழுவதும் தெரியவில்லை.

மேற்குப் பகுதியில் இரண்டு ஏரிகள் இணையும் பகுதியில் ஒரு பெரிய தோட்டம் இருந்ததாம். அதில்தான் சீன கம்யூனிஸ்ட் பார்ட்டியின் தலைமையகமும், சீனக்குடியரசின் ஸ்டேட் கவுன்சில் கூடும் இடமும் இருக்கின்றன.

விலக்கப்பட்ட நகரின் கிழக்குப் பகுதியில் இரண்டு முக்கிய ஆலயங்கள் இருந்தன. ஒன்று பேரரசின் குடும்ப முன்னோர்கள் ஆலயம், இன்னொன்று பேரரசின் முன்னேற்ற ஆலயம். பேரரசர் இங்கு வந்து முன்னோரின் ஆவிகளுக்கு பூஜை போடுவாராம்.


அதோடு சம்மர், அரண்மனைக் கட்டிடங்களின் மேலே காணப்பட்ட உருவங்களையும் அதன் அர்த்தங்களையும் சொன்னதோடு, அதில் காணப்பட்ட வண்ணங்களுக்கு வெவ்வேறு அர்த்தம் இருப்பதாகச் சொன்னபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவள் சொன்னாள், மஞ்சள் என்பது பேரரசரின் வண்ணமாம். எனவே விலக்கப்பட்ட நகரின் பெரும்பாலான கட்டிடங்களிலும் மேற்புறத்தில் மஞ்சள் வண்ண டைல்கள் பதிக்கப்பட்டிருந்தன.

நான் சம்மரைக் கேட்டேன், "மஞ்சள் என்பது ஒருவேளை தங்கத்தையும், அதிகாரத்தையும் குறிக்கிறதோ ?" என்று. அவள் புன்னகைத்தவாறே என்னை ஆச்சரியமாய்ப் பார்த்து, "அப்படித்தான் இருக்க வேண்டும்", என்றாள்.

அப்போது வந்த ஒரு கட்டடத்தின் மேலே கறுப்பு டைல்கள் இருந்தன. அது ஏன் என்று கேட்டபோது சம்மர் சொன்னாள், "இது நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம்", கறுப்பு என்பது நீரோடு சம்மந்தப்பட்ட படியால் நெருப்புக்கு எதிரி. நெருப்பு அண்டக் கூடாதென்றுதான் இந்தக் கறுப்புக் கலர் இங்கு பதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் வெறு என்னென்ன ரகசியங்கள் சீன நாகரிகத்தில் இருக்கிறதோ என்று எண்ணியபடி நகர்ந்தபோது பட்டத்து இளவரசனின் அரண்மனைகள் மேல் பச்சை டைல்களைப் பார்த்தேன். அவள் கேட்காமலேயே சொன்னாள், "பச்சை நிறம் மரத்தோடு தொடர்புடையதால் வளர்ச்சியைக் குறிக்கிறது." பட்டத்து இளவரசன் நன்கு வளர்ந்து ஒரு நாள் பேரரசர் ஆக வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பச்சை வண்ணம் பயன்படுத்தப் பட்டது" என்றாள். ஆனால் நம்மூரில் கருணாநிதியின் மஞ்சள் துண்டுக்கோ , ஜெயலலிதா அணியும் பச்சை வண்ணத்திற்கோதான் அர்த்தம் தெரியவில்லை.

இதுவரை இந்த மாதிரி விஷயங்களில் யாரும் ஆர்வம் காட்டியதில்லை என்று சொன்ன சம்மர், இன்னொரு விஷயத்தையும் சொன்னாள். முக்கிய கட்டடங்களான வெளிப்புற மற்றும் உட்புற கட்டடங்கள் (Outer & Inner Courts) மூன்று மூன்றாக உள்ளது. இது 'சியன் டிரையகிராம்' (Qian Triagram) வடிவத்தில் இருப்பதால் சொர்க்கத்தைக் குறிக்கிறது. உள்ளே வாழுகின்ற இடங்கள் ஆறு ஆறாய் அமைந்திருப்பது குன் டிரையகிராம் (Kun Triagram) வடிவத்தில் பூமியைக் குறிக்கிறது" என்றாள்.

அதோடு சீனப் பேரரசர் மேலோகம் அல்லது சொர்க்கத்தின் நேரடி வாரிசாகக் கருதப்படுவதால் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்பட்டாராம்.

அங்கிருந்து அந்தப்புர இடங்களுக்குச் சென்று பலவித மாளிகைகளைப் பார்த்தோம். பேரரசரின் மனைவிகள் மற்றும் துணைவிகளுக்கு (Concubine) வேறுவேறு பதவிகள் இருந்தன. உதாரணமாக பட்டத்து ராணி முதலிடம் வகிக்க அவளுக்கு கீழே உள்ளவர்கள் அவர்களுடைய இடத்திற்குத் தகுந்தாற்போல இருப்பிடங்களும், தோழிகளும் வேலைக் காரர்களும் இருந்தனர்.

ஆனால் விலக்கப்பட்ட நகரின் அந்தப்புரத்தில் வசித்த ஒரே ஆண், பேரரசர் மட்டும்தான். மற்ற எல்லோரும் பெண்கள், விதை நீக்கப்பட்ட அலிகள் மற்றும்  திருநங்கைகள்  மட்டுமே.

அப்போது பாதி எரிந்து போன கட்டடம் ஒன்று வந்தது. அது முன்னாள் அரசிகளும், முன்னாள் துணைவிகளும் வாழும் இடம். அழகு அந்தஸ்து என்று அனைத்தையும் இழந்த அவர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் கூட நெருங்கி வாழாமல் அரைப் பைத்தியமாக இருப்பார்களாம். பாவம் முழு நேரமும் முகட்டைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

அதுதவிர எல்லாக் கட்டடங்களிலேயும் பேரரசர் மற்றும் அவர் குடும்பங்கள் பயன்படுத்திய பலவித அரிய பொருட்கள் இருந்தன.

போர்சலின், பீங்கான் பாத்திரங்கள், செராமிக்ஸ் ஓவியங்கள், பலவித கடிகாரங்கள், தந்தங்கள், வெங்கலம், ஜேட் என்று சொல்லக் கூடிய விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றால் ஆன கலை வடிவங்கள் என்று எல்லா இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  

சம்மர் விடை பெற்றுப் போன பின் பல இடங்களில் அலைந்து திரிந்து பார்த்துக் களைத்துவிட்டு, மணியைப் பார்த்தால் 5 மணி ஆகியிருந்தது. கால்களில் வலி பின்ணிப் பெடலெடுத்தது. அப்படியே தள்ளாடி தள்ளாடி நடந்து, வெளியே வரும் வழியில் நுழைந்தேன். ஸ்டென்கன் ஏந்திய ராணுவவீரன் ஒருவன் என்னை நோக்கி ஓடி வந்தான். என்ன செய்வது  என்று அறியாமல் திகைத்து அப்படியே நின்றேன்.  


-தொடரும்.

Thursday, June 9, 2016

கல்லூரி ஹாஸ்டலில் கிருஷ்ண லீலா !!!!!!!!!!

Washburn Hall, a landmark building in American College with historical significance in Madurai. Photo: R. Ashok
Washburn Hall, The American College, Madurai.
'வாஷ்பர்ன் ஹால்' மெஸ்ஸின் தலைவர் நாயர் சுட்டுப்போடும் மொறு மொறு நீள் வட்ட தோசையும், அதனோடு கொடுக்கப்படும் தேங்காய் சட்னியும் சாம்பாரும் நினைவுக்கு வர சடாரென்று எழுந்தேன். காலையில் எழுவதற்கு அது நல்ல ஒரு மோட்டிவேஷன். மணி ஏழு இருக்கும். குளித்து ரெடியாகி, சாப்பிட்டுவிட்டு 8.30க்கு துவங்கும் முதல் கிளாசுக்குப்போக சரியாக இருக்கும். எழுந்து நெட்டி முறித்துக் கொண்டே, கைலியை சரியாகக் கட்டிவிட்டு திசை திரும்பிப்போன, டூத் பிரஸ்ஸின் குச்சங்களில் ரூம்மேட் ரவீந்திரனின் கோல்கேட் பேஸ்ட்டில் சிறிது பிதுக்கி எடுத்து பரப்பிவிட்டு என் ரூமைவிட்டு வெளியே வந்தேன். என் ரூம் மேட் எக்கனாமிக்ஸ் ரவீந்திரன் ஏற்கனவே எழுந்து ஹாஸ்டலின் நடுவிலிருந்த பார்களில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.  அது தினமும் நடப்பதுதான். என்னை பல நாட்கள் கூப்பிட்டு ஒத்து வராததால் இப்போதெல்லாம் கூப்பிடுவதில்லை. (ரவீந்திரன் சேலத்தில் தற்பொழுது உதவிக்கமிஷனர்).

 10வது படிக்கும்போது ஜெய்சங்கர் படத்தைப் பார்த்துட்டு அடுத்த நாள் காலையில் உடற்பயிற்சி செய்ய முயன்றபோது வந்த என் அப்பா, "எலும்புக்கு என்னடா எக்சர்சைஸ் ?" என்று கிண்டலடித்ததால் அன்று விட்டதுதான். இன்று வரை எக்சர்சைஸ் என்பது என் வாழ்கையில் இல்லை.

 At Washburn Hall with Minisam and Vanaraj.

வெளியே வந்து, ரவீந்திரன் கையசைத்துச் சொன்ன குட்மார்னிங்கை ஏற்றுக்கொண்டு, வாயில் நுரையுடன் இருந்ததால் கையைத் தூக்கி சல்யூட் அடித்துவிட்டு பாத்ரூம் நோக்கி நகர்ந்தேன்.

என்னுடைய 2-ஆவது ரூம்மேட் பாலா தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எட்டு மணிக்கு எழுந்தாலும், 8.30-க்குள் கிளம்பி வகுப்புக்குப் போய்விடுவான். பாட்டனி  படித்தான். பிற்காலத்தில் வக்கீலுக்குப்படித்து, தேர்தல் சமயத்தில் சும்மா ஒரு அப்ளிகேஷனை தட்டிவிட, அம்மா சீட் கொடுத்ததில் ஒரு தடவை MLA  ஆனான். அவனைப்பற்றி இன்னும் விவரமாக இன்னொரு முறை சொல்கிறேன்.

'வாஷ்பர்ன் ஹால்' அமெரிக்கன் கல்லூரியில் நடுநாயகமாக இருந்த ஒரு அசைவ ஹாஸ்டல். சதுர வடிவில் இரண்டு அடுக்கில் இருக்கும் கம்பீரமான சிவப்புக் கட்டிடம். முன்புறமும் பின்புறமாக இரும்புக்கிராதிகளால் அமைந்த இரு நுழைவாயில்கள். பின்புறகேட்டைத் திறந்து சென்றால் நீள்வடிவ மெஸ் வரும். வெள்ளிக்கிழமை தவிர தினமும் ஆட்டுக்கறி. சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டுகறிக் குழம்பு அமிர்தமாக இருக்கும். அதோடு அங்கு செய்யும் ரசம் ஆஹா அது அதிரசம் தான். வெள்ளிக்கிழமை மட்டும் வடை பாயாசத்தோடு சைவ உணவு இருக்கும்.
Washburn Hall


மாலையில் வாரமிருமுறை குஸ்கா இருக்கும். அதனை அடித்துக் கொள்ள உலகில் எதுவுமில்லை. அந்த நாள் மட்டும் உடற்பயிற்சி பாரில் அதிக போட்டி இருக்கும். நல்ல உடற்பயிற்சி செய்துவிட்டு ஒருபிடி பிடித்து விடுவார்கள்.

நிச்சயம் சொல்ல வேண்டிய ஒன்று, மாதமொருமுறை நடக்கும் 'Feast' என்று அழைக்கப்படும் விருந்து. பிரியாணி சிக்கன் வகைகள் இருக்கும். அந்த மூன்று வருடங்களில் என்னுடைய ருசிக்கும் நாவுக்கும் சுவையறிவு கூடியது அப்போதுதான்.

வெள்ளிக்கிழமை ரசமும் மற்ற நாள் ரசமும் முழுக்க வேறுவேறு. வெள்ளிக்கிழமை பருப்பு ரசம். ஆனால் மற்ற நாள் ரசம் ஆஹா ஆஹா,  அதன் ருசியை எப்படி விவரிப்பது ?. ஒரு நாள் மாலையில், ஒரு ஓரமாக பீடி பிடித்துக் கொண்டிருந்த நாயரிடம் குசுகுசுன்னு கேட்டபோது கிடைத்த அந்த ரகசியத்தை  உங்களுக்குச்  சொல்கிறேன்.

மட்டன் வேகவைத்த சூப் தண்ணீரில் தயாரிக்கப்படும் ரசமாம் அது. என் மனைவியிடம் சொன்னபோது "உவ்வே" என்று சொல்லிவிட்டாள்.உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நன்றாக அமைந்துவிட்டால் எனக்கும் சொல்லியனுப்புங்கள்.  

வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் பொங்கலும் ஆமை வடையும் இருக்கும். அந்த காம்பினேஷன்  யார் கண்டுபிடித்தார்களோ அவர்கள் நீடூழி  வாழியவே. பொங்கலின் நடுவில் சிறு குழியிட்டு  தளதளவென்று சாம்பார் ஊற்றி, அதோடு சிறிது தேங்காய்ச் சட்னியும் சேர்த்து பொலபொலவென்று பிசைந்து வலதுகையால் ஒரு கவளம் வாயில் வைக்க, இடதுகையில் இருக்கும் ஆமை வடையில் ஒரு கடி கடித்துக் கொண்டே சாப்பிட்டால்மதியம் சாப்பிடவேண்டிய அவசியம் இருக்காது.

அமெரிக்கன் கல்லூரி ஆண்கள் கல்லூரி, முதுகலைப் படிப்பு மட்டும் கோ எஜீகேஷன். முதுகலைப் பெண்கள் தங்கும் ஹாஸ்டல், எங்கள் ஹாஸ்டலுக்கு எதிரில்தான் இருக்கும். முழுவதுமாக வேலி அடைத்து கோட்டை போல இருக்கும் .உள்ளே எப்படி இருக்கும் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. ஒருநாளாவது உள்ளே போய் பார்க்கவேண்டும் என்ற ஆசை இன்றுவரை நிறைவேறவே இல்லை . ஆனா அந்தப்பக்கம் நடந்து போனாலே அந்த மீசைக்கார வாட்ச்மேன் உஷாராகி குறுகுறுன்னு பார்ப்பான் . அட மெஸ்னாலும் ஒன்னா இருந்திருக்கலாம் .

            தோசை ஞாபகம் வர பசி வயிற்றைக் கிள்ளியது.  பாத்ரூம் போகும் வழியில் கிருஷ்ணன் வந்தான். அவன் ஒரு வித்யாசமான பேர்வழி. அவன் எப்ப எந்திரிக்கிறான்னு  யாருக்கும் தெரியாது. அவ்வளவு காலையிலே எங்க போறான்னு எங்க யாருக்குமே தெரியாது .நாங்க எந்திரிக்கும்போது அவன் வெளியே இருந்து வருவான். எங்கடா போயிட்டு வரேன்னு கேட்டா கோயிலுக்குன்னு சொல்வான்.ஆமா கோயிலுக்கு போயிட்டு வந்தா பல்லு விளக்குவான் , ஒண்ணுமே புரியலயே.  நான் பார்த்த போது வேப்பங்குச்சியை வச்சு பல்லு விளக்கிட்டிருந்தான். கறுப்பு நெற்றியில் துல்லியமாக இட்ட திரு நீறு  எடுப்பாக இருந்தது. “ஏண்டா வேப்பங்குச்சி”ன்னு கேட்டா , “ஆலும்  வேலும் பல்லுக்குறுதி”ன்னு சொல்லிட்டு, என்னைப்பார்த்துப்  புன்னகைத்தான். அவன் முகம் முழுக்க பருக்களால் நிறைந்திருக்கும். பசங்க சொல்வாங்க, அதிகமாக சைட் அடிக்கிறவங்களுக்கு பரு வரும்னு. அது உண்மையான்னு தெரியல. ஆனா எனக்கு மூணாவது ஆண்டு படிக்கும்போதுதான் பரு வந்தது. அதுவும் வலதுபுறத்தில் மட்டும். “டேய் ஆல்ஃபிக்கு ஒரு தலைக்காதல்ரா அதான் ஒருபுறம் மட்டும் வருது”ன்னு சொல்வாய்ங்க.

ஆனா இவன் காலைல எந்திரிச்சு குளித்து முடித்து தினமும் வெளியே கோயிலுக்குப் போய்ட்டு சாமி கும்பிட்டு வர்றவனாச்சே. ஏன் இவனுக்கு இவ்வளவு பரு என்று எனக்கு விளங்கவில்லை. நெத்தியிலே எப்பவும் திருநீறு இருக்கும். ஒரு நாள் கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன் போல. எழுந்து பாத்தா ஹாஸ்டலே கொஞ்சம் பரபரன்னு இருந்தது. காலை வேளையிலயே,  ஹாஸ்டல் வார்டன் ஜான் சகாயம் வந்திருந்தார். மனுஷன் சஃபாரி போட்டு டக்டக்குனு நடந்து வந்தா ஹாஸ்டலே நடுங்கும். ரொம்ப கண்டிப்பானவர் அவரு. சிறு பிழைக்குக் கூட என்கொயரி ஸ்லிப் வந்துரும். காலையில எங்க ரூம் பக்கம் வாட்ச்மேன் குருசாமி வந்தா, ஐயையோ என்கொயரி வந்துருச்சோன்னு பயப்படுவோம். எதிரே எக்சர்சைஸ் முடித்து வேர்வை வழிய வந்த ரவீந்திரனைக் கேட்டேன்.

 "என்னா ரவி, இன்னக்கி யார் மாட்னான்னு"  
“நம்ப கிருஷ்ணன்தான்”
கிருஷ்ணனா,  என்னாச்ச?”'

"அவன் டெய்லி வேப்பங்குச்சில பல்விளக்கிறேன்னு சொல்லிட்டு, லேடீஸ் ஹாஸ்டல் பின்புறம் வேப்பமரத்தில் ஏறி பாத்ரூம்ல எட்டிப்பார்த்தானாம். டெய்லி  இது நடந்திருக்கு.  இன்னிக்கு வாட்ச்மேன் கையும் களவும பிடிச்சிட்டாரு. யாரை நம்புறதுன்னே தெரியல”,ன்னு சொன்னான்.

 அடப்பாவி காலையிலே கோயிலுக்குபோய் அம்மன்  தரிசனம் செய்றானு  நினைச்சா, இவன் அம்ம , சரி விடுங்க . என்ன பாத்துறுப்பான்னு நினைத்துக் கொண்டேநான் ரெடியாகி கிளாசுக்குப் போனபோது, எதிரே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே கிருஷ்ணன் வந்தான். “என்னடா என்னாச்சு?’ன்னு கேட்டேன். பதில் சொல்லாம விறு விறுன்னு நடந்து அவனோடு ரூமுக்குள்ளே போனான். அது தான் அவனை கடைசியா நான் பாத்தது. கிருஷ்ணா எங்கடா இருக்க , அப்படி என்னதாண்டா பார்த்த , சொல்லாமலேயே  போயிட்டியே? .


முற்றும் .

Tuesday, June 7, 2016

மேலோகமும் பூலோகமும் இணையும் இடம் !!!!!!!!!!

சீனாவில் பரதேசி -10



முதல் மண்பத்திலிருந்து பின்புறம் இறங்கும் போதும் சரி, அடுத்த வந்த இரண்டு சிறிய மண்பத்திலிருந்து முன்புறம் ஏறும் போதும், படிகளுக்கு நடுவே கீழிருந்து மேல் வரை ஒரு பெரிய பளிங்குப்பலகை இருந்தது. மிகவும் நுண்ணிய வேலைப்பாடுடைய அந்தப் பளிங்கு கிட்டத்தட்ட 200 டன் எடை என்று சம்மர் சொன்னாள். ஏறக்குறைய 55 அடி உயரம் 10 அடி அகலம், 6 அடி திக்னெஸ் உள்ள இந்தக்கல்தான் சீனாவிலேயே மிகப்பெரியதாம். ஒரே கல்லில் இருந்த சிற்ப வேலைப்பாடுகள் ஆச்சரியமூட்டின. அது எப்படி உடையாமல் புதைக்கப்பட்டதோ தெரியவில்லை.
The carved Marble stone 


"ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனி"க்குப்பின் வந்த மண்டபத்தின் பெயர் "ஹால் ஆஃப் சென்ட்ரல்  ஹார்மனி". முன் மண்டபத்துக்குப் போகும்முன் பேரரசர் இங்கு சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர்தான் முன் ஹாலுக்குப் போவாராம். இதிலும் நடுவாந்திரமாக ஒரு சிம்மாசனம் இருந்தது.


இதன் பின் வந்த மண்டபத்தின் பெயர் 'ஹால் ஆஃப்' பிரசர்விங் (Preserving) ஹார்மனி" என்பது. இந்த மண்டபத்தில் தான் முன் ஹாலில் நடக்கப்போகும் சடங்குகளுக்கு ஒத்திகை நடக்குமாம். இங்கும் ஒரு சிம்மாசனம் இருந்தது. ஆனால் இந்த மூன்றில் மிகப்பெரியது முன் மண்டபமான "ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனியில்” இருப்பதுதான்.   
Add caption


மண்டபத்தின் ஒருபுறம் சீன மொழியிலும் மறுபுறம்  ஆங்கில மொழியிலும் அந்த இடத்தின் விவரங்களை எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் முழுதும் படிக்கவிடாமல் சம்மர் அவசரப்படுத்தியதால், அதனை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு நகர்ந்தேன்.

இந்த மூன்று மண்டபங்களின் இடதுபுறமும் வலது புறமும் சிறிது இடைவெளிவிட்டு இரண்டு பெரிய மண்டபங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ராணுவத்தலைவர்களின் பயன்பாட்டுக்கும் மற்றொன்று கலை நிகழ்வுகளுக்கும் பயன்பட்டனவாம். ராணுவ மண்டபத்தில்தான் பேரரசர் தமது அமைச்சர்களையும் மற்ற அதிகாரிகளையும் சந்தித்து  நாட்டு நடப்புகளைக் கவனிக்கும் நிகழ்வுகள் நடக்கும். மற்றொன்றில் அரண்மனையின் அச்சகம் செயல்பட்டது. அதோடு “கன்பியூசிஸ்” போன்ற தத்துவ மேதைகளின் சீடர்களும் படித்தவர்களும் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்களாம். அதன் பின்னர் அதுவே தலைமைச் செயலகம் ஆனதாம். உலகின் மூத்த மிகச் சிறந்த நாகரிகத்தை உடையவர்கள் சீனர்கள்.


அங்கிருந்து வடகிழக்குப் பகுதியில் மூன்று அரண்மனைகள் இருக்கின்றன. அங்குதான் பட்டத்து இளவரசன் தங்கியிருப்பானாம்.  அவனுக்கு தனிப்பட்ட முறையில் பலவித வசதிகள், மரியாதைகள் உண்டு. அதோடு அவுட்டர் கோர்ட் என்று சொல்லப்படும் வெளி மண்டபங்கள்  முடிந்துபோக, இன்னும் உள்ளே போனால் இன்னர் கோர்ட் என்று சொல்லக் கூடிய உள் மண்டபங்கள் வந்தன. இந்த இரண்டையும் பிரிக்க மிகப்பெரிய வெட்ட வெளி இருந்தது. இன்னர் கோர்ட்டில்தான் பேரரசரும் அவருடைய குடும்பங்களும் தங்கிய பலவித மாளிகைகள் இருந்தன. ஷிங்  (Qing) பரம்பரையின் பேரரசர்கள் இங்கு தங்கிஇருந்ததோடு எல்லா அரசாங்க அலுவல்களையும் இன்னர் கோர்ட்டிலிருந்தே கவனித்துக் கொண்டார்களாம்.  அவுட்டர் கோர்ட் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.

இன்னர் கோர்ட்டின் நடுவில் மூன்று அரண்மனை மண்டபங்கள் இருந்தன. அவை “பேலஸ் ஆஃப் ஹெவன்லி பியூரிட்டி” (Palace of Heavenly Purity), “ஹால் ஆஃப் யூனியன்”, பேலஸ் ஆஃப் எர்த்லி டிரான்குல்ட்டி” (Palace of Earthly Tranquility). இதில் யான்  ( Yan) மற்றும் சொர்க்கத்தின் பிரதிநிதியான பேரரசர் 'ஹெவன்லி பியூரிட்டி' என்ற அரண்மனையில் தான் தங்குவார். யின் ( Yin) மற்றும் உலகத்தின் பிரதிநிதியான பேரரசி தங்குவது 'எர்த்லி டிரான்குல்ட்டி' என்ற அரண்மனையில். பின்னர் மூன்றாவது அரண்மனையான 'ஹால் ஆஃப் யூனியன்" எதற்கென்று நீங்களே ஊசித்திருப்பீர்கள். அதுசரிதான். இருவரும் இணைந்து தாம்பத்யம் நடத்த இந்த ஹால் பயன்பட்டது. யின்னும் யானும் அதாவது மேலோகமும் பூலோகமும் இணையும் நிகழ்வு என்று அதனைச் சொல்கிறார்கள்.    

தற்சமயம் ஹால் ஆஃப் யூனியனில், ஸிங் டைனாஸ்டியைச் சேர்ந்த 25 பேரரசரின் முத்திரைச் சின்னங்கள் (Imperial seal) மற்றும் பலவித புனிதப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
Crown of Empress Cixi


இந்த மூன்று அரண்மணைகளின் பின்புறம், பேரரசின் நந்தவனம் இருக்கிறது (Imperial Garden). இது பலவித பழைய மரங்கள், ஓய்வெடுக்க  சிறுசிறு மண்டபங்கள், செடி கொடிகள், சிறுசிறு செயற்கைக் குன்றுகள் என்று சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் குளிர் காலம் என்பதால் அதன்  அழகு அவ்வளவாய்த் தெரியவில்லை.

அதன் பின்புறமும் பலவித அரண்மனைகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் வந்த ஒரு முக்கிய அரண்மனை "ஹால் ஆஃப் மென்ட்டல் கல்ட்டிவேஷன்" என்பது. ஒரு காலத்தில் இது பேரரசர் தங்குவதற்கும் மற்றும் அலுவலகமாகவும் பயன்பட்டது. பேரரசி சிஸி (Cixi) யின் காலத்தில் இதுவே அரசாங்க அத்தானி மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டதாம். இதனைச் சுற்றிலும் பேரரசின் கிராண்ட் கவுன்சிலின்  பல்வேறு அலுவலகங்கள் இருந்தன.

இதற்கப்புறம் வந்த முக்கியமான இடம் "பேலஸ் ஆஃப் டிரான்குயில் லாஞ்சிவிட்டி( Palace of Longivitty)என்பது. இது சிஸ்லாங் பேரரசர் தனது ஓய்வுக்குப்பின்னர் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது. அதன் உள்ளே தோட்டங்கள் ஆலயங்கள் என்று அமைக்கப்பட்டிருந்தன. அதன் நுழைவாயிலில் பளபளப்பான டைல்களால் ஒன்பது டிராகன்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Nine Dragon 


அதன் உள்ளே போக அனுமதியில்லை. ஏனென்றால் பேலஸ் மியூசியத்துடன் வேர்ல்ட் மானுமன்ஸ் பண்ட் (World Monuments Fund) என்ற நிறுவனம் இணைந்து மராமத்துப் பணிகள் உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நீண்ட கால புராஜக்ட் 2017ல் தான் முடியுமாம். ஒரு படத்தை எடுத்துவிட்டு உள்ளே மேலும் நகர்ந்தோம்.


- தொடரும்.