Friday, October 16, 2015

பரதேசியின் சமையல்: நளபாகமும் நழுவுற பாகமும்.


ஹலோ சேகரு ?,
 சொல்லுடா மகேந்திரா,
எப்படிரா இருக்க?
ஏதோ இருக்கேன்,
என்னடா சுரத்தில்லாம பேசுற, என்ன விஷயம் சொல்றா.
இல்லடா என் மனைவி?
மனைவி.. என்ன சொல்லுது ?.
 அவ வேலை?
 அவங்க வேலைக்கு என்ன? வேலை போயிருச்சா?
இல்லடா வேலை இருக்கு, ஆனா அவ வேலை பாக்கறது பிடிக்கல.     
பிடிக்கலைன்னா நிறுத்திரு,
டேய் நீ வேற, அப்புறம் கதை கந்தலாயிறும்,
பிறகு என்னடா?
இந்த வேலை வேணாம்னு நினைக்கிறேன்.
ஏண்டா பாவம் வேலைபளு அதிகமா?
அதெல்லாம் இல்லடா, சும்மா தூங்கி தூங்கி எழுந்து வர்றா,
 அதென்னடா அப்படி ஒரு வேலை.
 அதாண்டா பேபி சிட்டிங்?
அப்படின்னா? கொஞ்சம் விளக்கமா சொல்லு.
அதாண்டா குழந்தை பிறந்ததுல இருந்து, பெரியவளாகும் வரை வளர்த்துக் கொடுக்கிறது. ஸ்கூல்ல சேர்த்து, கொண்டுபோய் விட்டு, பிறகு மீண்டும் பிக்கப் பண்ணி, ஹோம் வொர்க் சொல்லிக்கொடுத்து, நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுத்து இந்த மாதிரி.
அப்புறம் என்ன உன் மனைவிதான் ஊரில டீச்சரா இருந்தவங்கதான, சம்பளம் கிம்பளம் பத்தலையா?
அதெல்லாம் இல்ல நல்ல சம்பளம்டா, கிட்டத்தட்ட எனக்கு சரிசமம். அதோட போனஸ், லீவு, மாசத்தில் சனி ஞாயிறு தவிர இன்னொரு 5 நாளாவது லீவு வந்துருது. ஆனா முழுசம்பளம்,
அப்ப சம்பளம் பிடிக்க மாட்டாங்களா?
இல்ல, இவளா லீவு எடுத்தாதான் பிடிப்பாங்க, அவங்களா லீவு கொடுத்தா பிடிக்க மாட்டாங்க.
அப்ப உன் மனைவிக்கு வெக்கேஷன்?
அவங்க அடிக்கடி வெகேஷன் போறதால, அத முன்னாடியே எங்களுக்கு சொல்லிருவாங்க அதனால எங்க வெகேஷன் அதே தேதியில ஃபிக்ஸ் பண்ணி போயிருவோம்.
அட சூப்பர் வேலயா இருக்குதே.
ஆமாடா இது வரைக்கும் லீவு எடுத்ததே கிடையாது.
சரி பிள்ளைகள் உன் மனைவிக்கு அடங்கறது இல்லையோ?
நோநோ ரெண்டும் என் மனைவி மேல உயிரை வச்சுருக்குதுங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன். பையனை அஞ்சு மாதக் குழந்தையாயிருக்கும் போதிருந்து பாக்கிறா. பொண்ணு மூணு வயசுலயிருந்து.  பொண்ணுதான் முதல்ல கொஞ்சம் தகறாரு பண்ணுச்சு. அப்புறம் அதுவும் வழிக்கு வந்துருச்சு. இப்ப பையனுக்கு மூணுவயசு, பொண்ணுக்கு ஆறு வயசு ஆகிறது.
ஆமா இந்த வேலையில உன் மனைவி தூங்கித்தூங்கி எழுறதா சொன்ன?.
ஆமாடா, பிள்ளைகளை  மதியம் டெய்லி தூங்க வைக்கற நேரத்துல இவளும் கூட சேர்ந்து தூங்கிருவா.
என்னடா இது சூப்பர் வேலையா இருக்கு, சம்பளமும் அதிகம்னு சொல்ற. வேற என்னடா குறை. எதுக்கு உனக்குப் பிடிக்கல ?.
அதுவா, இந்தப்பிள்ளைகளின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள். அப்பா கர்நாடகா அம்மா குஜராத்தி ரெண்டும் ABCD.
அதென்னடா ABCD ?
 டேய் உனக்கு எத்தனைமுறை சொல்றது. இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்தவங்களை நாங்க ABCD னு சொல்வோம். அதாவது American Born Confused Desi என்று. இருவரும் தம்பிள்ளைகளை இந்தியக் கலாச்சாரத்தில வளர்க்கனும்னுதான் என் மனைவியை தேர்ந்தெடுத்தாங்க. அவ டீச்சரா இருந்து சைல்ட் சைக்காலஜி தெரிஞ்சதனால, பிள்ளைகள் பெற்றோரை விட இவள்ட்டதான் ரொம்ப குளோஸ். அதனாலதான் அவங்க பிள்ளைகளோட டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக அடிக்கடி வெக்கேஷன் போவாங்க. அவங்க தாத்தா பாட்டி வந்தாலும் இவளுக்கு லீவு கொடுத்துடுவாங்க. ஏன்னா பிள்ளைக  இவ இருந்தா அவங்கள்ட்ட  போகமாட்டாங்க.
என்னடா இவ்வளவு சொல்ற, அப்புறம் என்னடா பிரச்சனை.
பிரச்சனை என்னன்னா, அந்த டாக்டர் மனைவிக்கு சமைக்கத்தெரியாது
 ஓ அதான் பிரச்சனையா, உன் மனைவி நல்லா சமைக்கிறதால சமைக்கச் சொல்லிறாங்களா?
அதுவும் இல்லடா, அப்படியெல்லாம் சொல்லமாட்டாங்க.
பின்ன என்ன? பின்ன எப்படி சாப்பிடுறாங்க?.
அந்த டாக்டர் பெங்களூர்காரர் அவர்தான் சமைக்கிறார்.
 அதுல உனக்கென்ன பிரச்சனை, உன் மனைவியால அதைச் சாப்பிட முடியலயா? டேய் நீ வேற, இவ சாப்பாடு வீட்டில இருந்து எடுத்துட்டு போயிருவா.
என்னடா ஒரே மர்மக்கதை போல இருக்கு,
என் மனைவி பிள்ளைகள்ட்ட சாயந்திரம் ஆனா, சீக்கிரம் ஹோம்வொர்க்கை செய்து முடிங்க, நான் போய் சமைக்கனும்னு சொல்லியிருக்கா. அந்தப்பையன் ஒண்ணும் சொல்லல ஆனா அந்தப்பொண்ணு சொல்லியிருக்கு ஆண்ட்டி நீ ஏன் சமைக்கணும் ஒன்னோட ஹஸ்பென்ட் தானே சமைக்கணும்னு.
அது ஏன்டா ?
அது ஏன்னா,  சின்ன வயசுலயிருந்து, அவங்க அப்பாதான் காலையில காஃபி போடுறதிலிருந்து பிள்ளைகளுக்கு பிரேக்ஃபாஸ்ட் செஞ்சு கொடுக்கிறது. சாயந்திரம் டூட்டி முடிஞ்சு வந்தவுடனே சமையல் செய்யறதுன்னு கிச்சன் வேலையெல்லாம் அவர்தான் செய்வாராம்.
அது சரி அதுல என்ன தப்பு?
 தப்பில்லடா, அதனால அந்த பொண்ணு, எல்லா வீட்டிலயும் அப்பாதான் சமைப்பாங்க அம்மா ரெஸ்ட் எடுப்பாங்கன்னு நினைச்சுருச்சு.
ஓ அப்படியா?
ஆமாடா, அதனாலதான் என் மனைவிட்ட அப்படிகேட்டிருக்குது.
 ஐயையோ அப்புறம்?
இத வந்து என்மனைவி என்ட்ட சொன்னா, எப்பவும் இல்லாட்டியும் எப்பவாவது சமைக்கலாம்லேன்னு என்ட்ட சொல்லிருச்சு .
ஓ இப்பதாண்டா புரியுது, ஏன் உனக்கு உன் மனைவியோட இந்த வேலை புடிக்கலைன்னு. டேய் நீ என்ன அந்தக் காலத்திலயே இருக்க, இப்பல்லாம் பொண்ணுக எங்க சமைக்குத . பொண்ணுக பெற்றோரும், எங்க மகளை செல்லமாக வளர்த்துட்டோம், அவ சமையல் கட்டுப்பக்கமே போனதில்லை, அதனால நீங்களும் அவள சமையல் பண்ண விட்டுறாதீங்க. மாப்ளனு சொல்லிதான் கல்யாணம் பண்ணாங்க. நம்ம பையன்களும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு, எங்கேஜ்மென்ட் முடிஞ்சவுடனே, சமையல் செய்வது எப்படின்னு புத்தகம் வாங்கி பரீட்சைக்கு படிக்கிறமாதிரி படிக்க ஆரம்பிச்சிர்ராங்க. ஏன் என்னோட வீட்டிலயே இப்பெல்லாம் நான்தான் அடிக்கடி சமைக்கிறேன். ஆமா நீயும் கத்துக்கிட்டு பண்ண வேண்டியதுதானே.  
இல்லடா எனக்குப் பயமா இருக்கு?
 எதுக்குடா பயமா இருக்கு அத எப்படி உன்னால சாப்பிடமுடியும்னா ?.
அதில்லடா,
பின்ன எதுக்குபயமாயிருக்கு, சீக்கிரம் சொல்லு கிச்சன்வேல வேலை போட்டது போட்டபடி இருக்கு.
Chef Todd Mohr

அதாவது, நான் சமையல் பண்ண ஆரம்பிக்கிறதுல பிரச்சனை இல்லை, அது அமிர்தம் மாதிரி இருக்கும்கிறதுல சந்தேகமில்லை. அது நளபாகமா இருக்கும்கிறதுல நம்பிக்கை இருக்கு. ஆனா அதனால என் மனைவி நல்லா சமைப்பாங்கிற  பேரு அவளுக்குப் போயிருமேன்னுதான் ரொம்பக் கவலையாயிருக்கு. அவ மனசு ஒடைஞ்சி போயிருவாளேன்னுதான் வருத்தமா இருக்கு.
டேய் பரதேசி நாயே, வைடா போனை.
பரதேசி: ???????

ஒரு முக்கிய அறிவிப்பு:

வருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.
தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432
நேரம் : மாலை ஆறு மணி 


Wednesday, October 14, 2015

பரதேசியின் முட்டாள்தனம் ?????????????

Edwin Rajkumar
Face book ல்  மெசேஜைப் பார்த்ததும்  அப்படியே ஷாக் ஆயிட்டேன். அருமை மனைவிக்கு 2-ஆவது  ஆண்டு நினைவுநாள் கண்ணீர் அஞ்சலி என்ற எட்வின் அவர்களின் ஸ்டேட்டஸ். எப்படி எனக்கு இது தெரியாமப் போச்சு. யாருமே சொல்லலியே. ஐயோ இது பெரிய சோகமாச்சே, எட்வின் எப்படித்தாங்கினார். மனுஷன், மனைவி பிள்ளைகளுக்காக உயிரை விட்றவர் ஆச்சே. அதோட ரெண்டு வருஷம் ஓடிப்போச்சே எனக்குத் தெரியாமலேயே.
இந்தப்பிரபா கூட என்ட்ட சொல்லவேயில்லையேனு கோபம் வந்து மதுரையிலிருக்கும் பிரபாகர்க்கு போனைப் போட்டேன்.
பிரபா ?,
“ஏய் என்னடா ஆல்ஃபி, ரொம்ப நாளாச்சு கூப்பிட்டு, எப்படி இருக்க? மனைவி பிள்ளைகள் நலமா?”.
“பிரபா, அதெல்லாம் இருக்கட்டும், எட்வின் விஷயம் தெரியுமா?”
“என்ன விஷயம்டா ?
 விளக்கிச் சொன்னேன்.
“அடப்பாவமே, எனக்குத் தெரியாதுரா, எப்படி ஆச்சாம்”?
“எனக்கும் தெரியாது பிரபா, ஒரு வேளை உங்களுக்குத் தெரிஞ்சு, எனக்கு சொல்லாம விட்டுட்டீங்களோன்னு நெனச்சேன்”.  
“டே எட்வின் உனக்குத்தான் சீனியர், எனக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை. இருந்தாலும் உள்ளூர்னா எனக்கு எப்படியும் தெரிஞ்சிருக்குமே, ஆனா எனக்கு எப்படி தெரியாமல் போச்சுன்னு தெரியல, நான் விசாரிக்கிறேன்”.
“சரி பிரபா அவர் நம்பர் கிடைக்குமா? அவருடைய பழைய நம்பர் வேலை செய்யவில்லை”.
“இல்லடா என்ட்ட இல்லையே”
“சரி பிரபா உங்கள்ட்ட பிகு பேசறேன்”
எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல, எட்வின் ராஜ்குமார் மதுரை சமூகப்பணிக்கல்லூரியில எனக்கு ஒரு வருஷம் சீனியர். சீனியரில் பலபேர் எங்களோட நெருங்கிப் பழகுவாங்க. அதில எட்வின் ரொம்ப ஸ்பெஷல். எட்வின் இருக்கின்ற இடம் சிரிப்பும் களிப்புமாக இருக்கும். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் மட்டுமல்ல, பாசிட்டிவ்  எனர்ஜி மிகுந்தவர். எப்பொழுதும் டீக்காய் உடை அணிபவர்.  முகத்தில் எப்பொழுதும் தவளும் புன்சிரிப்பு. சமூகப்பணியில் முதுகலை முடித்து, பின்னர் MPhil-ஐயும் முடித்து மதுரை CSI நர்சிங் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.
சென்னையில் நடந்த என்னுடைய திருமணத்திற்கு  வந்திருந்தார். அதோடு மதுரையில்  நடந்த அவர் திருமணத்திற்கு நான் போனதோடு வரவேற்பு நிகழ்ச்சியில் சிற்றுரையும் ஆற்றினேன். அவருடைய மனைவி எனக்கு நல்ல அறிமுகம், பிள்ளைகளையும் தெரியும்.
With Edwin at Thirumayam Fort.
மதுரைக்கு நான் வரும்போதெல்லாம் , தம்முடைய மாணவிகளுக்கு ஒரு கெஸ்ட் லெக்சர் கொடுக்க என்னை அழைத்துச் செல்வார்.
அதுமட்டுமல்லாமல், காரைக்குடி பயணத்திற்கு ஏற்பாடு செய்து என்னோடு வந்த பயணக்கட்டுரையை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இல்லையென்றால் இங்கே சுட்டவும்.http://paradesiatnewyork.blogspot.com/2014/02/3.html
அப்படி நெருங்கியவர் மனைவி? சேச்சே எப்படி? தாய் நாட்டை விட்டு வெகு வெகு தூரத்தில் இருப்பதன் காரணத்தால் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ? நல்லது கெட்டதுக்கும் சட்டென போக முடிவதில்லை, ஹீம்.
அதன்பின் அவருடைய கல்லூரிக்கே போன் செய்து எப்படியோ நம்பரைக் கண்டுபிடித்துவிட்டேன்.
2 வருடம் கழித்துக் கேட்பதற்கு மிகவும் தயக்கமாயிருந்தாலும், பெட்டர் லேட் தென் நெவர். இல்லாவிட்டால் அவருடைய முகத்தில் எப்படி முழிப்பது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, எண்களை அழுத்தினேன்.
‘ஹலோ’
 ‘ஹலோ’
“எட்வின் அண்ணா, நான் ஆஃல்பி பேசறேன்”.
“ஓ என்னப்பா ஆல்ஃபி எங்கருந்து பேசற?”
“இங்க தான் நியூயார்க்கில இருந்து பேசறேன்”.
“உன்ட்ட பேசி எத்தனை நாளாச்சு, ஒரு மூணு வருஷம் இருக்குமா”?
“ஆமாண்ணா, கரெக்ட்”
“ நீ போனதடவை மதுரை வந்தபோது பேசினது, எப்படி இருக்க, மனைவி பிள்ளைகள் நல்லாயிருக்காங்களா “?
“எல்லாம் இருக்காங்க, நீங்க எப்படி இருக்கீங்க?”
“நான் எப்பவும் போல சூப்பரா இருக்கேன்?” (என்ன சூப்பரா இருக்காரா? என்ன சொல்றார்?)
 “சாரிண்ணே எனக்கு முதல்லயே தெரியாது, மன்னிச்சிக்கிங்க”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, இதெல்லாம் பெரிய விஷயமா? இதுக்குப்போய் சாரியெல்லாம் கேட்கிற (இதுக்கு சாரி கேட்காம எதுக்கு சாரி கேக்கிறது ?)
“ஆமாண்ணே இது எப்படி நடந்துச்சு?”
“என்னப்பா ஒரே சோகமா கேக்கற?” (பின்ன இதை என்ன சந்தோஷமாவா கேட்க முடியும் ?)
“சரி அதுக்கப்புறம் எப்படி இருக்கீங்க?”
“சூப்பரா இருக்கிறேன், ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”. (என்னடா இது, ரொம்ப மோசமானவரா இருக்காரு. ஒரு வேளை ரொம்ப டார்ச்சரோ, இல்லையே அவங்க ரொம்ப நல்ல டைப் ஆச்சே)
“சரி அதவிடு அதெல்லாம் ஒண்ணும் பெரிசில்ல, அந்த காரைக்குடி பயணக்கட்டுரை சூப்பர்டா, அதுவும் அம்மா மெஸ்ஸீம் அக்கா மெஸ்ஸீம்னு எழுதியிருந்தியே, ஹிலேரியஸ் போ”.(என்ன இது இந்த சந்தர்ப்பத்தில இதைப்பத்தி பேசறாரு)
“அண்ணா, பிள்ளைகளை எப்படி சமாளிக்கிறீங்க ?”.
“அதெல்லாம் பிரச்சனையேயில்ல, இப்பெல்லாம் ரொம்ப ஜாலியா இருக்காங்க”.
(என்ன பிள்ளைகள் ஜாலியா இருக்காங்களா?)
“ஆமா சமையல்லாம் எப்படின்ணே?”.
“அது வழக்கம்போல நான் தான். இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால  கத்துவச்சிக்கிட்டது எவ்வளவு நல்லது பாரு”.
“ஆமாண்ணே, நான் கூட கத்துக்கனும். ஏண்ணே ஒரு சம்பளத்தில எப்படின்னே மேனேஜ் பண்ணீங்க ?”.
“அட ஆமாப்பா, எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கமுடியும் ஒண்ணு செலவுக்கு ஒண்ணு சேமிப்புக்கு”.
(எதைச் சொல்றாரு ஒண்ணும் புரியலயே மனைவியோட பென்ஷனை சொல்றாரோ ?).
“இருந்தாலும் உங்க மனைவி எவ்வளவு நல்லவங்க, உங்களுக்கு எவ்வளவு பொருத்தமானவங்க”.
“என்னப்பா திடீர்னு அவளைப்பத்திப் பேசுற?”.
“ஆமான்னே, நேத்துதான் கல்யாணம் நடந்தாப்ல இருக்கு கண்ணுக்குள்ள இருக்காங்க”.
“என்னப்பா இவ்வளவு உருகற, இந்தா நீயே பேசு”.
“ஏம்மா இந்தா, ஆல்ஃபி பேசறான்”.( அய்யய்யோ அதுக்குள்ள மறு கல்யாணம் பண்ணிட்டாரா ?)
மறுமுனையில் பெண்குரல்:
“என்ன ஆல்ஃபி எப்படி இருக்கீங்க?”
ந நா.. நல்லா இருக்கேன், நீ நீ நீங்க எப்படி? (இது எப்படி அதே குரல் ?)
“என்னங்க பேச்சு குழறுது, சிக்னல் சரியில்லை போல, நீங்களே பேசுங்க”.
“சொல்லுப்பா ஆல்ஃபி அப்புறம் வேறென்ன விசேஷம்?. நானே உனக்குச் சொல்லனும்னு தான் நெனைச்சேன். சரி டிக்கெட் புக்பண்ணவுடனே சொல்லலாம்னு. விட்டுட்டேன். நியூயார்க்ல நடக்குற சுற்றுச்சுழல் கான்ஃபிரஸீக்கு, என்னை செலக்ட் பண்ணது ஒரு அதிர்ஷ்டம்தான். உன்னையும் உன் குடும்பத்தையும் சந்திக்கலாம்ல”.
“எட்வின் அண்ணா என்னை மன்னிச்சிருங்க”  
“என்னப்பா, என்னாச்சு, நான் வரும் போது இருக்கமாட்டியா?”
“நோ நோ, அதில்லைன்னா, நீங்க தாராளமா வாங்க, என் கூட வந்து தங்குங்க, சரி நான் அப்புறம் பேசறேன்”
 உடனே ஃபேஸ்புக்ல போய்ப்பார்த்தா, மனைவி பேர் அதேதான். ஆனா அது எட்வின் ராஜ்குமார் இல்ல எட்வின் ராஜ்சுந்தர் . இவரும் என்னோட   கான்டக்ட்ல   இருக்கும் 5000 பேரில் ஒருவர்தான் .ஆனால் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் அல்ல. எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.
எட்வினும் அவர் மனைவியும் இன்னும் நூறு வருஷம் வாழட்டும்.
முற்றும்.



ஒரு முக்கிய அறிவிப்பு:

வருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.

தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432
நேரம் : மாலை ஆறு மணி 



Friday, October 9, 2015

சலாவுதீனை முறியடித்த மாவீரன் !!!!!!!

பார்த்ததில் பிடித்தது
ஆர்ன் தி. நைட் டெம்ப்ளர் (Arn The Knight Templar)

Arn - The Knight Templar poster.jpg

கடந்த வாரத்தில் இந்தப்படத்தை நெட் ஃபிலிக்ஸ் மூலம் பார்த்தேன். கிறிஸ்தவம், இஸ்லாம், வரலாறு, சிலுவைப் போர்கள் ஆகியவை அடங்கிய அருமையான திரைப்படம் இது.
Jan Guillo 
 2007-ல் கிறிஸ்மஸ் தினத்தில் ஸ்வீடனில் வெளியிடப்பட்ட இந்தப்படம் ஜன் கிய்லொ (Jan Guillou) அவர்கள் ஒரே சப்ஜக்டில் எழுதிய மூன்று நாவல்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஸ்வீடனைச் சார்ந்த நைட் டெம்ப்ளர் ஆகிய “ஆர்ன் மேக் நசனைப்” பற்றிய வரலாறு. ஸ்வீடனை உருவாக்கியதில் இவனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. முதல் பகுதி 2007லிலும், 2ஆம் பகுதி 2008லும் இவ்விரண்டையும் அடக்கிய DVD 2010 லும் வெளியிடப்பட்டது.
Knight Templar 
படத்தோட கதையை தெரிந்து கொள்வதற்கு முன், ‘Knight Templar’ என்ற குழுவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். வரலாற்றில் சிலுவைப்போர்கள் பற்றிப் படித்திருப்பீர்கள். ஜெருசலேம் நகர் மேல் யாருக்கு ஆதிக்கம் அதிகம் என்ற போட்டி வந்தபோது, நகரைக்காப்பாற்ற இந்த தற்கொலைப்படையான Knight Templar தான் உதவியது. பாதுகாப்பதோடு மக்களுக்கு பலவிதங்களில் இது உதவி செய்துவந்தது. கிறிஸ்தவ நாடுகளில் மிகவும் வசதியான, சக்தி வாய்ந்த குழு இதுவாகும். இதில் இராணுவப்பிரிவு தவிர சக்திவாய்ந்த பொருளாதாரக் குழுவும் இருந்தது. அது வங்கி போலவும் செயல்பட்டது. கிபி 1129ல் ரோமன் கத்தோலிக்க நிறுவனம் இதை அங்கீகரித்தது. 200 வருடங்களுக்கு மேல் இது புகழ்பெற்று இருந்தது.
King Philip IV
 புனித நிலத்தை பல ஆண்டுகள் பாதுகாத்தாலும், அரபிய படைகளின் தொடர் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அதனை இழந்தபோதிலிருந்து அதன் செல்வாக்கு குறையத் தொடங்கியது. பல நாட்டு மன்னர்களுக்கு இதன் வளர்ச்சி பிடிக்காததால், இதனை ஒழிக்க வகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக பிரெஞ்சு மன்னன் நான்காவது பிலிப்பு இந்தக்குழுவிடம் பெரிதும் கடன்பட்டிருந்ததால், இதனை அழிக்க முற்பட்டான். கிபி 1307ல் இதன் உறுப்பினர்கள் மேல் பொய் வழக்குப்போட்டு பலபேரை அழித்தொழித்தான். போப் ஐந்தாவது கிளமன்ட், 1312ல் பிலிப்புவின் கட்டாயத்துக்குப் பணிந்த இந்தக்குழுவை கலைக்க உத்தரவிட்டார்.
ஆனால் இதன் ஆர்டர் இன்று கூட ரகசியமாக இயங்குவதாக சொல்கிறார்கள்

         இப்போது இந்தப்படத்தின் கதைக்கு வருவோம். 12 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுதான் கதைக்களம். ஆர்ன் மேக்நசன் (Arn Magnussan) என்பவன் ஒரு பெரிய நாடோடிக் கும்பலின் தலைவன் மகன். நம்மூர் குருகுலம் போல கத்தோலிக்க மடத்தில் (Monastery) வளர்ந்தாலும், வில், வாள் வித்தைகள் குதிரையேற்றம் பயின்று சிறந்த வீரணாக உருவெடுக்கிறான்.  நைட் டெம்ப்ளர் குழுவின் உறுப்பினராக இருந்து தற்போது மடத்தில் வாழும் கில்பர்ட் என்பவன்தான் இவனை பயிற்றுவிக்கிறான்.
         மடத்தின் பக்கத்தில் உள்ள காடுகளில் ஒரு நாள் அலைந்து திரிந்த போது ஒரு பெண்ணை மூன்று முரடர்களிடமிருந்து பாதுகாக்க சண்டையிடும் போது, அம்மூவரும் ஆர்னால் கொல்லப்படுகிறார்கள். எனவே அவன் மடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். குடும்பத்திற்கு திரும்பிய ஆர்ன் தன் கண்முன்னால் தன் நண்பன் அவமதிக்கப்படுவதை சகிக்க முடியாமல் சண்டையிட்டு அந்தக்குழுவின் அரசனைக் கொன்றுவிடுகிறான். இதற்கிடையில் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அந்தப்பெண் கர்ப்பமுறுவதால்  கத்தோலிக்க பிஷப் அவனை 20 வருடம் சமூகத்தை விட்டு தள்ளி வைக்கிறார்கள். அந்தப்பெண் கான்வென்ட்டில் வாழ பணிக்கப்பட ஆர்ன் நைட் டெம்ப்ளர் ஆகிறான் .   
Sulthan Salavudeen
அதன்பின் நிகழ்ந்த முக்கியமான சண்டையில் எருசலேமை நோக்கி வந்த சலாவுதீனீன் படையை மான்ட்கிசார்ட்டு என்ற இடத்தில் (Battle of Montigisard) முறியடிக்கிறான். அதனால் வெகுண்டெழுந்த சலாவுதீன் மீண்டும் ஒரு மாபெரும் படையுடன் வருகிறான்.
Poster The Battle of Montgisard
Battle of Montigisard
அதில் என்னவாகிறது, எப்படி அவன் தன் நாட்டிற்கு மீண்டு வருகிறான், தன் காதலியை கைப்பிடிக்கிறனா, எப்படி ஸ்வீடன் நாடு உருவாவதற்கு வழிவகுக்கிறான் என்பதை வெள்ளித்திரை அல்லது சின்னத்திரையில் காண்க.
படப்பிடிப்பு:
பெரும்பாலான படப்பிடிப்பு ஸ்வீடனில் வாஸ்டர்கோட்லாண்டு (Vastergotland) என்ற இடத்திலும் மற்ற சீன்கள் ஸ்காட்லாந்து மற்றும் மொராக்காவிலும் எடுக்கப்பட்டன.
நடிகர்கள்: 
Joakim Nätterqvist

Joakim Nätterqvist ( Arn Magnusson)Sofia Helin  (Cecilia Algotsdotter)m Milind Soman ( Salavudeen) இந்த மூவரும் லீட் ரோல்கள் பண்ணி வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில் மிலிந்த் சோமன் நம்மூரை சேர்ந்த பிரபல மாடல்.

Milind Soman
Peter Flinth என்பவர் திறமையாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக ஒளிப்பதிவு (Eric Kress) பிரமாதம் இங்கு சேர்க்கவும்.
இசை:
இந்தப்படத்திற்கு சீரிய முறையில் இசையமைத்தவர் Tuomas kantelinen. படத்தில் வரும் Sno தீம் சாங், 2009ல் ஸ்வீடன் நாட்டில் டாப் #14 என்ற அளவில் வந்ததாம்.

ஸ்வீடன் நாட்டில் வெளியிட்ட ஸ்கெண்டிநேவியன் திரைப்படங்களில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது. இது ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து & ஜெர்மனி நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு. மொத்த தயாரிப்புத் தொகை US டாலரில் 30 மில்லியன்கள்.
முடிந்தால் பார்த்து மகிழுங்கள்.