Friday, September 11, 2015

நிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு !!!!!!!!!!

படித்ததில் பிடித்தது
அசோகமித்திரனின் 18ஆவது அட்சக் கோடு.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வரும், நவீன தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்ட நாவல் இது.
இந்த நாவல் ஒரு பீரியட் வகையைச் சார்ந்த வரலாற்று நாவல் என்று சொல்லலாம். இரட்டை நகரம் (Twin city) என்று அழைக்கப்படும் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் நிஜாம் மன்னரின் ஆட்சிக்காலம்தான் கதையின் காலம்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய சுதந்திரத்திற்கு சற்றுப்பின்னர், நிஜாமின் சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைவதற்கு முன்னால் ஆரம்பித்து, இணைந்த சமயத்தில் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகளையும் உள்ளிட்ட கதைக்களம்.
ஆனால் இது நிஜாமுக்கும் இந்திய அரசுக்கும் நிகழ்ந்த போராட்டத்தை விளக்கும் கதையல்ல, அந்தச் சூழலில் அங்கு வசித்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான சங்கடங்கள், பாடுகள், ஈடுபாடுகள், தவிப்பு ஆகியவற்றை அருமையாக வெளிப்படுத்தும் கதை இது. இது ஒரு மாறுபட்ட வரலாற்று சிந்தனை.
அசோகமித்திரன்
நாவலை எழுதியவர் தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஒரு உன்னத இடத்தை அடைந்து தக்க வைத்துக் கொண்ட அசோகமித்திரன் அவர்கள். இவர் சுஜாதா, ஆதவன், நாஞ்சில் நாடன் போன்ற பல எழுத்தாளர்களுக்கு முன்னோடி ஆவார்.
அசோகமித்திரன் செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். நாவலின் கால கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால் சந்திரசேகரன் என்ற கதாபாத்திரம்தான் அசோகமித்திரன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
1996ல் “அப்பாவின் சிநேகிதர்” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற அசோகமித்திரன், முதலில் ஜெமினி ஸ்டுடியாவிலும் அதன் பின்னர் கணையாழியின் ஆசிரியராகவும் வெகுகாலம் பணியாற்றினார். சுஜாதா கணையாழியின் ஆசிரியரானது இவருக்குப் பின்னர் என்று நினைக்கிறேன்.

யார் சொன்னது அசோகமித்திரன் எழுத்துக்கள் கடின வகை வரட்டு எழுத்து என்று?.நாவல் முழுதும் ஒரு சிறு நையாண்டி இயல்பாகவே அமைந்துள்ளது. அதில் அசோகமித்திரனின் குறும்பு வெகுவாகவே தெரிகிறது. (குறிப்பாக இதன் நாவல், தேசிய புத்தக டிரஸ்ட்டின் (ன்பட்) ஆதான் பிரதான் திட்டத்தின்கீழ், இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கத் தேர்வு செய்யப்பெற்ற நாவல் இது.
நாவலில் எனக்குப் பிடித்த அம்சங்களை கீழே புல்லட் பாயிண்டில் தருகிறேன்.

1.    விடலைப்பையன்களின் டீனேஜ் அவஸ்தைகளை மிகச்சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் ஒருங்கே வரும் பயம், கூச்சம், எதிர்பார்ப்பு, திருட்டுத்தனம், வெட்கம், மகிழ்ச்சி கிளர்ச்சி, ஆவல் என்ற பல உணர்ச்சிகளை கதையோடு பிண்னி இருக்கிறார். குறிப்பாக பெண்கள் மேல் வரும் ஒருவித இனக்கவர்ச்சி.
2.    அங்கு வாழ்ந்து வந்த சட்டைக்காரர்கள் (Anglo Indians) கலாச்சாரத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
3.    வேலை தேடிச்சென்ற தமிழர்கள் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் ஒரு அந்நிய நாட்டில் வாழ்வது போலவே இருந்தனர்.பெரும்பாலும் ரயில்வே துறையில் இருந்தனர்.
4.    ஒருவருக்கொருவர் வழக்கம்போல் ஒற்றுமை இல்லாததால் தனித்தனியாகவே இருந்தனர்.
5.    ஆந்திரா மற்றும் தெலுங்கானா  இணைந்த பெரிய நிலப்பரப்பாக நிஜாம் நாடு இருந்தது.
6.    நிஜாம் நாட்டில் மதவெறி கொண்ட ரஜாக்கர்கள் வைத்ததுதான் சட்டம். பிற மதத்தினரை ஏராளமாகக் கொன்று குவித்தனர். ரஜாக்கர்கள் நிஜாமின் கொலைப்படை.
7.    காங்கிரஸ்காரர்கள் தேசத்துரோகிகளாகக் காணப்பட்டனர்.
8.    நிஜாம் பதவியில் இருந்தாலும் பெரும்பாலான ஆட்சி அதிகாரம் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரிகள் கையில்தான் இருந்தன.
9.    நிஜாம் நடத்திய பள்ளி கல்லூரிகளில் தமிழர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். இவர்கள் வெகுகாலம் அங்கு வாழ்வதால் தமிழுணர்வற்று இருந்தனர். பாரதியார் பற்றிக் கூட இவர்களுக்கு தெரியவில்லை.
10. சில தமிழ் முஸ்லிம் சகோதரர்கள், அங்கு வாழ்ந்ததால் நிஜாமுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவும் இந்திய யூனியனுக்கு எதிராகவும் இருந்தனர்.
11. நிஜாமின் ஆட்சி, டெல்லி வரை பரவப்போகிறது என்ற நப்பாசை ரஜாக்கர்களுக்கு இருந்தது.
12. இந்திய விடுதலைக்குப்பின் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிறபகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் மக்கள்  அகதிகளாக வந்து வாழ்ந்து வந்தனர்.
13. இந்திய விடுதலைக்குப் பின் நிஜாம் நாட்டில் வந்த நெருக்கடியால், பெரிய உணவுப்பஞ்சம் வந்தது. தண்ணீர் அரிசி, எண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சோள ரொட்டியைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்.
14. நிஜாம் அரசின் பஸ்கள் கடலை எண்ணெய்  ஊற்றி ஓடியதால், சாலை முழுவதும் பஜ்ஜி சுட்டதுபோல் வாசனை வந்ததாம்.
15. அங்கிருந்த ஒரே ஒரு தியேட்டரில் புதுத்தமிழ்ப்படம் வந்தால் ஒரு வாரம் ஓடுமாம்.
16. பள்ளி கல்லூரிகளில் கிரிக்கெட் தலையாய விளையாட்டாக இருந்தது.
17. ஹைதராபாத்தில், காந்தி இறந்துபோனது வெகுவான பாதிப்பை உண்டுபண்ணியதாம். ஜின்னா இறந்துபோன போது அவ்வளவாக பாதிப்பில்லை.
18. இந்திய அரசுப்படைகள் ஹைதராபாத்தில் நுழையும் போது எதிர்ப்பென்று அவ்வளவாக இல்லை. வரும் வழியில் தான் சில சிறு சண்டைகள். இந்தியப்படையைப் பார்த்ததும் நிஜாம் படைகள் ஒன்று ஓடி ஒழிந்தன அல்லது சரணடைந்தன.
19. இந்தியப்படை ஹைதராபாத்தில் நுழைவதற்கு முன்னமே ரேடியாவில் பேசிய நிஜாம், இந்திய அரசில் இணைய சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பின்னர் நடந்தது தான் கொடுமை.
20. இந்துக்கள் முஸ்லீம்களை தாக்குவதும், வீடுகளை எரிப்பதும், பொருட்களை அழிப்பதும் நாடெங்கிலும் நடக்கிறது. குறிப்பாக ஹைதராபாத் செகந்திராபாத்தில்.
மொத்தத்தில் அந்தக் காலகட்டத்தின் சமூக வரலாற்று நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டும் அசோகமித்திரனின் இந்த நாவல் படிக்க வேண்டிய ஒன்று.

- முற்றும்.  

Tuesday, September 8, 2015

ஆடி அடங்கும் வாழ்க்கையடா மூன்றடி நிலமே சொந்தமடா !!!!!

Random Photo from Google search , not the same lady .
நேற்று காலையில் வரும்போது அந்த மூதாட்டியை அங்கு காணோம். அனுதினமும் நான் அலுவலகம் செல்லும் போது ஃபாச் புலவர்டில் (Foch Boulevard) அந்த ஆப்பிரிக்க அமெரிக்க அம்மாவைப்பார்ப்பேன். தன் வீட்டில் உள்ள திண்ணையில் அமர்ந்து என்னைப்பார்த்து புன்னகைத்து “குட் மார்னிங்: என்றும் "இஸின்டிட் எ குளோரியஸ் டே", "வாட் எ பியூட்டிஃபுல் மார்னிங்", இட்ஸ் எ பிரைட் டே" என்று சொல்ல நான் பதிலுக்கு "எஸ் இண்டீட்" என்று சொல்லிவிட்டு, "ஹேவ் எ நைஸ் டே", என்று வாழ்த்திவிட்டுச் செல்வேன். இப்படி என் தெருவெங்கும் ரிடையர்டு மக்கள் உட்கார்ந்திருப்பார்கள். அனைவருக்கும் குறைந்தபட்சம் குட்மார்னிங் சொல்வது என் வழக்கம்.
இந்த மூதாட்டியிடம் மட்டும் சில நிமிடங்கள் பேசி விட்டுச் செல்வேன். சில சமயங்களில் பார்த்திருக்கிறேன், அந்த அம்மாவின் மகன் கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்து, பொத்தினாற்போல் அந்த சேரில் உட்கார வைப்பார். "என்னுடைய பைபிள் ?" என்று ஞாபகமாகக் கேட்டு, கொண்டு வரச் செய்து தன் மடியில் வைத்துக் கொண்டு தன் இடுங்கிய கண்களால் படிக்க ஆரம்பிக்கும் அந்தம்மா இப்படி எத்தனை நேரம் அமர்ந்திருப்பாள் என்று தெரியாது. ஏனென்றால் மாலையில் நான் வீடு திரும்பும்போது ஒரு முறை கூட பார்த்ததில்லையே. அந்த மூதாட்டிக்கு குறைந்த பட்சம் 90 வயது இருக்கும்.
அமெரிக்கர்களுக்கு இரவு உணவு 6 மணிக்குள் முடிந்துவிடும். எனக்கு வீடு வந்து சேரவே எட்டுமணியாகிவிடுகிறது. அப்புறம் எங்கே உடல் நலத்தைப் பேண முடியும்.
நியூயார்க்கின் சராசரி வயது 92 வயது என்று படித்திருக்கிறேன். இது இங்கு வாழும் என்னைப் போன்ற முதல் தலைமுறை இந்தியர்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது. நல்லவேளை சாமி தப்பிச்சேன், எதற்கு அத்தனை வயது உயிர் வாழ்ந்து கஷ்டப்படவேண்டும் . இந்தியனாக பிறந்ததில்  இது ஒரு நல்ல அட்வான்டேஜ்.
இன்றும் மிஸ் காக்ஸை காணவில்லை. எனக்கு மனசு என்னவோ போலிருந்தது, வாரத்தில் வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை அனுதினமும் கோடை மற்றும் இலையுதிர்கால சீசன்களில் பலவருடங்களாகப் பார்த்த மூதாட்டியை இன்று பார்க்க முடியவில்லை.
இன்று மாலை வீடு திரும்பும்போது, தற்செயலாகக் கண்ணில்பட்ட மிஸ் காக்ஸின் மகனிடம் விசாரித்தேன். போன சனிக்கிழமை இறந்துபோனதாகச் சொன்னார். இறந்துபோய் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ஒன்றுமே தெரியவில்லை.
          இங்கு மரணம் கூட அமைதியாகவே நகர்ந்து விடுகிறது. உறவினர் கூட்டம் இல்லை. ஒப்பாரிச்சத்தமும் இல்லை. இறந்து போன உடலும் கூட இல்லை. மைக் செட் இல்லை. சோகப்பாடல் இல்லை. பாடை இல்லை, தேர் இல்லை, அலங்காரம் இல்லை, சங்கு, சிகண்டி, தாரை தப்பட்டை என்று இறப்பின் எந்தச்சுவடும் இல்லை.
பல வயதானவர்கள் இங்கு தனியாகவே வாழ்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போவதற்கு மட்டும் வீல்சேர் ஆக்சஸ் உள்ள வண்டியை புக் செய்து சென்றுவிட்டு வருவார்கள். குளிர் காலங்களில் வெளியே கூட வரமுடியாது. இருக்கிறார்களா செத்து விட்டார்களான்னு   கூட தெரியாது.ஆனால் இறந்து போனால் உடல் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படும். உடல் சோதனைகள் முடித்து, உறுப்புகள் தானம் இருந்தால் அதையும் முடித்துவிட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். அதற்கெல்லாம் செமத்தியாக சார்ஜ் செய்துவிடுவார்கள்.


உடலை வீட்டுக்கு எடுத்து
வர அனுமதியில்லை. உடல் அங்கிருந்து நேராக உறவினர் தேர்ந்தெடுக்கும் ஃபியூனரெல் ஹோம்-க்கு (Funeral Home) எடுத்துச் செல்லப்பட்டு, பிணவறையில் வைக்கப்படும். அந்த மணித்துளியிலிருந்து கட்டணம் ஆரம்பிக்கும்.
அதன்பின் அந்த ஹோம் மேனேஜர் உறவினருடன் உட்கார்ந்து இறுதிச்சடங்கை திட்டமிடுவார். ஒரு முறை sorry சொல்லி ஆரம்பித்துவிட்டு விதவிதமான முறைகளையும் கட்டணங்களையும் அடுக்குவார்.
உடனடியாக செய்ய வேண்டியது, உடல் பதப்படுத்தல் (Embalming). ஒரு நல்ல புகைப்படத்தைக் கொடுத்து நிறம் உடையெல்லாம் மேட்ச் செய்ய வேண்டும். மிகக் கவனமாக நல்லதொரு முக அமைப்பு, நிறம் தெரியும் புகைப்படம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் Embalming முடிந்துவரும் உடல் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிடும்.
Viewing Room
அடுத்தது வியூவிங் (Viewing) திட்டமிட வேண்டும். உறவினர் நண்பர் வந்து இறுதி மரியாதை செய்வதற்கு நேரமும் இடமும் ஒதுக்குதல் தான் இது. வரப்போகும் கூட்டத்தைப் பொறுத்து அந்த ஹோமில் உள்ள பல சைஸ் ரூம்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். எவ்வளவு நேரம் வியூவிங் என்பதையும் எந்த மாதிரி ரீத் வைக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். ரூம் சைஸ், எவ்வளவு நேரம் என்பதற்கிணங்க கட்டணம் வசூலிப்பார்கள். வியூவிங் நேரம் தவிர மற்ற நேரங்களில் உறவினர் கூட உடலைப் பார்க்க முடியாது.
அதற்கு முன்பதாக பெட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும். பெட்டி 500 டாலரிலிருந்து 50,000 டாலர் வரை விலையுள்ளதாக இருக்கிறது. அவரவர் வசதி போல தேர்ந்தெடுக்கலாம். பின்னர் புதைப்பதா எரிப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் புதைக்கும் இடத்தை முடிவு செய்ய வேண்டும். அதற்கு அவர் கேட்டும் முதற்கேள்வி, படுக்க வைப்பதா, நிற்க வைப்பதா என்று? ஏனென்றால் படுக்க வைத்தால் ஆறடி வேண்டும், நிற்க வைத்தால் மூன்றடி போதுமே. ஏனென்றால்  ஒவ்வொரு இன்ச்சுக்கும் விலை உண்டே.
அடப்பாவிகளா ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடி நிலமும் இங்கு கிடைக்காது போல. இப்ப புரியுதா , தலைப்பில்  ஏன் ஆறடி நிலம் என்பதற்குப்பதிலாக மூன்றடி என்று குறிப்பிட்டேன் என்று.  அதன் பின்னர் எந்த வாகனத்தில் கொண்டு செல்வது என்று முடிவெடுக்க வேண்டும். உடலுடன் செல்ல ஒருவருக்கும் அனுமதியில்லை தனித்தனி வண்டிகளில் பிண ஊர்தியை தொடர்ந்து செல்லலாம். நெருங்கிய உறவினர்கள் கறுப்பு லிமோசனில் வருவார்கள். வசதிக்கேற்ப அதற்கு ஒரு மணி நேரத்திற்கு 500 டாலர் சார்ஜ் செய்வார்கள்.
The%20funeral%20procession%20for%20former%20First%20Lady%20Betty%20Ford%20probably%20had%20a%20police%20escort%2C%20but%20not%20all%20funeral%20processions%20do.%20Here%20are%20tips%20on%20how%20to%20drive%20in%20one.%20%28Robyn%20Beck/Getty%20Images%29

தொடர்ந்து வரும் எல்லா வண்டிகளுக்கும் "Funeral"  என்ற ஸ்டிக்கர் ஓட்டி வரிசையாக ஊர்வலம் செல்லும். அந்தக் கார்கள் எல்லாம் பிளின்ங்கர்ஸ் போட வேண்டும். சாலையில் செல்லும் மற்றக் கார்களுக்கு இது ஃபியூனரெல் என்று தெரிவதற்காக இந்த ஏற்பாடு. இதற்கெல்லாம் குறைந்தபட்சம் 10000 டாலர் ஆகும். அதிகபட்சத்திற்கு கணக்கே இல்லை.

அதன்பின் கல்லறை கட்ட, கட்டடம் கட்ட, நினைவுத்தூண், மார்பிளில் பெயர் வைக்க என்று தனித்தனி செலவுகள் உண்டு. எனக்கு இந்த ஹோமைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு சந்தேகம்  வரும். இதன் ஒனெர்கள் சாமி கும்பிடும்போது என்ன சொல்லி கும்பிவார்கள் என்று? ” சாமி இந்த மாசம் நல்ல பிசினஸ்  கொடுங்க, இந்த ஏரியாவில் , நிறைய சாவு விழனும்னா ?”
மொத்தத்தில் அமெரிக்காவில் நாங்களெல்லாம் யானையை விட மேலே. இருந்தாலும் பத்தாயிரம் பொன், இறந்தாலும் பத்தாயிரம் பொன்.  நம் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் இதுவரை நான் வாழ்ந்தோமா? என்றே தெரியவில்லை.  
இந்தக் குறுகிய வாழ்க்கையில் எத்தனை சண்டைகள், மனஸ்தாபங்கள், வைராக்கியம், வஞ்சம், பழி வாங்குதல், பிரிதல், முறிதல் நினைத்தால் சிரிப்பு வரவில்லை.
அதன் பின் அந்தப்பக்கம் நடந்ததில் அந்த மூதாட்டியின் வீடும் அதனுள்ளே பொருட்களும் விலைக்கென்று போட்டிருந்தது. உள்ளே  சென்றேன். அந்த எளிய மூதாட்டியின் மிச்சங்கள் ஆங்காங்கே இருந்தன. ஒரு மூலையில் குப்பையோடு குப்பையாக அந்த மூதாட்டியின் பைபிள் கிடந்தது. அதனை எடுத்து "என்ன விலை ?" என்று மகனிடம் கேட்டேன். "இஃப் யு வாண்ட், டேக் இட், இட்ஸ் ஃப்ரீ". என்றார்.  
Leather-bound Bible

அந்த பைபிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்த பைபிள் வெகுவாக கனத்தது. என் மனது அதைவிட கனத்தது.

முற்றும்.

Thursday, September 3, 2015

ஆஸ்திரேலிய கூந்தல் அழகி !!!!!!!!!!!!!!!!!!!!

blake_lively-dog

சப்வேயில் நான் வந்து இடம்பிடித்து உட்கார்ந்தவுடன் யாரோ என்னைப் பார்ப்பது போல் உள்ளுணர்வு உணர்த்தியது, (டேய் சேகரு எப்பவும் ஏண்டா யாரோ உன்னைப் பார்க்கிறாங்கன்னு நெனக்கிற ?) இருந்தாலும் என் Portal of Prayers எடுத்து அந்த நாளுக்குரிய பகுதியை வாசித்து முடித்தேன். இடையிடையே கவனம் சிதறிக்கொண்டே இருந்ததால் படித்து முடிக்க சிறிது நேரமானது. ஒரு வழியாகப் படித்து முடித்தவுடன் புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டு சடாரென் று நிமிர்ந்து பார்த்தேன்.
அந்தக்குறுகுறு கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆஹா என்ன அழகான கண்கள். சமீபத்தில் அவ்வளவு அம்சமான கண்களை நான் பார்த்ததில்லை. கான்கார்டு திராட்சைகள் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் படத்தில் பார்க்கவும். நன்கு இயற்கை உரம் இட்டு செழிப்பாக வர்ந்து, உருண்டு திரண்ட இரண்டு ஆர்கானிக் கருப்புத் திராட்சைகள் நன்கு காய்ச்சிய திரட்டுப் பாலில் மிதப்பது போல் கண்கள் இருந்தன.அந்தப்பாலினூடே ஒன்றிரண்டு குங்குமப்பூத் துகள்கள் மிதப்பது போல ஓரிரு இடங்களில் வெவ்வரி ஓடியிருந்தது, அழகுக்கு அழகு சேர்த்தது. அந்தப் பாலின் மேல் ஒட்டாத நீர் போல கண்ணில் லேசாக கண்ணீர் இருந்தது. அது குழல் விளக்கு ஒளியில் பளபளத்தது.
அவ்வப்போது படபடவென அடிக்கும் அந்த இமைகள்.  மங்கிய அல்லது தொங்கிய இமைகளை மஸ்காரா விட்டு நிமிர்ந்தும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவளுக்கு இமைகள் வெகு இயற்கையாகவே மஸ்காரா போட்டதைப் போன்றே எடுப்பாக குத்திட்டு இருந்தன. ஆனால் எழுதப்படாத புருவம் இருந்த இடத்தில் புஸீபுஸீ யென்று முடிகள் இருந்ததும் அழகாகத்தான் இருந்தன.
அகலமான அவளுடைய ஏறு நெற்றி விசாலமாக இருந்தாலும் அவளுடைய முடிக்கற்றைகள் ஆங்காங்கே சுருண்டு விழுந்தது, பிறையை மறைக்கும் திரை போல் இருந்தது. சுருண்டு விழுந்திருந்த குழல்கள் செயற்கையா இயற்கையா என்று தெரியாத அளவுக்கு பொன்னிறத்தில் கற்றை கற்றையாக இருந்தன.
நாசிகள் இரண்டும் மிகவும் எடுப்பாகவும், கம்பீரமாகவும் இருந்தன. பெரும்பாலும் எள்ளுப்பூ நாசி என்று கவிஞர்கள் சொல்வார்கள். நான் எள்ளுப்பூவை பார்த்ததில்லை என்பதனால் அப்படிச் சொல்லவில்லை. நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா?  மேலும் இப்படிப்பட்ட கவிஞ்சர்கள் சொன்ன, ஆவாரம்பூ, செந்தாழம்பூ, செந்தூரப்பூ, தேன் மல்லிப்பூ, ஆம்பல்பூ என எதையும் நான் பார்த்ததில்லை. சரி அதை விடுங்க டிராக் மாறிப்போயிட்டிருக்கு.
அந்த நாசி மேல் சிறிது தூசி இருந்தது. அதைத் துடைக்க என் கை பரபரக்க, பொது இடமடா கொஞ்சம் யோசி என்றது என் உள்மனசு.
உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன. லிப்ஸ்டிக் போடாமலேயே எப்படி இந்த வண்ணம் வந்தது? ஆரிய உதடுகள் என்பது இதுதானோ? அந்த சமயத்தில் வெளிவந்த அவளுடைய நீண்ட நாக்கினால் உதடுகளை நக்கிக் கொண்டாள். நாக்கு நீளமாக இருந்ததால் மூக்கு மேலேயும் பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அந்த நாக்கு மிகச்சுத்தமாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது பிரமிக்க வைத்தது.
மிக இலேசான நறுமணம் அவளிடமிருந்து அடித்தது என்னைக் கிறங்கடித்தது.
ஆனால் இவ்வளவு சிறிய உருவத்தை நான் பார்த்ததில்லை. அப்போது இலேசாக முனகினாள். முனகலா அது ? ஏதோ ஒரு ராகத்தின் சாயலில் சங்கீதமாய் காதுகளில் பாய்ந்தது.
அவள் மீது வைத்த கண்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவள் விரல்கள் என்மீது பட்டன. விரல்கள் அவ்வளவு நீளமில்லை. ஆனால் சுத்தமாக மேனிக்கியூர் செய்யப்பட்ட நகங்கள், மதர் ஆஃப் பேர்ல் போல பளபளத்தது. அதன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவள் , சாரி சொன்னாள் .நோ நோ பரவாயில்லை”, என்று சொன்னேன்
மேலும் என்னைப்பார்த்து 'வவ்' என்று உதடுகள் பிரித்து உச்சரிக் வார்த்தையில் நான் நெகிழ்ந்து போனேன்.
திடீரென்று அந்த பொன்னிறக்கற்றை முடிகளைத்தடவி விட எழுந்த என் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல், நான் என் வலதுகையால் அப்படியே தடவிவிட்டேன்.  
அவளும் நெகிழ்ந்துவிட, நான் அப்படியே முடிக்கற்றைக்குள் கையை நுழைத்து ளைந்தேன். அவளும் கண்கள் லேசாக சொருக அதை நன்கு அனுபவித்து முனகினாள். அப்படியே என்மீது தலையைச் சாய்த்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்து சிறுகுரல் எழுப்பினாள். அதனைப் பார்த்த பெரியவள் ஒன்றும் சொல்லவில்லை ,மாறாக புன்னகை புரிந்தாள்
அதற்குள் 7வது அவென்யூ ந்துவிட, 'கம் ஹனி' என்று அதனைக் கவ்விக் கொண்டு அந்த பெரியவள் இறங்க ஆயத்தமானாள். எனக்கு ஏக்கமாய் ஆகிவிட்டது.
என்ன ஜாதி? என்று கேட்டேன் பெரியவளிடம்.   
இது “ஆஸ்டிரேலியன் சில்க்கி டெர்ரியர்”  என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றுவிட்டாள். 
அந்த அழகான குட்டி நாய்க்குட்டியும் என்னைப் பார்த்து முனகியவாறு அவளோடு சென்றுவிட்டது.

taylor-momsen
Add caption
மகேந்திரன் : அட நாய் சேகர், ஒரு நாய்க்குட்டியைத்தான் இவ்வளவு வர்ணிச்சயா.
பரதேசி : டேய் நீ பாட்டுக்கு   எதையாவது நினைச்சா நான் என்ன பண்றது ? மறுபடியும் ஒரு தடவை படிச்சுப் பாரு உனக்கே புரியும்
மகேந்திரன் : அட ஆமடா,அதான பார்த்தேன்,  இவ்வளவு கிளுகிளுப்பு உன் உடம்புக்கு ஆகாதே . அது சரி அது பெண்குட்டின்னு உனக்கு எப்புடிரா தெரியும்?
பரதேசி : டேய் அப்படியே ஓடிப்போயிரு,இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்க வந்துட்டான்.

முற்றும்

Tuesday, September 1, 2015

இளையராஜாவின் வீணை மீட்டும் கைகள்!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் 25
வீணை மீட்டும் கைகளே 

1978ல் வெளிவந்த “வாழ நினைத்தால் வாழலாம்”, என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில் வெளிவந்த எனக்குப் பிடித்த பாடல் இது. பாடலைக் கேட்போமா?

பாடலின் சூழல்:
“இல்லறமே நல்லறம்”, என்று காத்துக்கொண்டிருக்கும் பெண் தன் மண வாழ்க்கையின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் பாடல் இது. அந்தக்காலத்தில் பெண்களுக்கு எவ்வளவு எளிமையான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கின்றன பாருங்கள்.
பாடலின் இசை:  
'வீணை மீட்டும் கைகளே', என்று பாடல் ஆரம்பிப்பதால், பாடல் முழுவதும் வீணையின் நாதம் ஆக்ரமிக்கிறது. ஒரு கார்டில் (Chord) அதிக ப்ரீலூட் (Prelude) இல்லாமல் சட்டென பாடல் ஆரம்பிக்கிறது. குரலும் வீணையும் போட்டி போட்டுக் கொண்டு நாதத்தை கொட்டுகின்றன. இளையராஜாவின் மெலடி பாடல்களுக்கேற்ப தபேலா சேர்ந்து கொள்ள வழக்கமான வயலின் பின்னணிகள் பாடலுக்கு மெருகூட்டி, BGMகள் அமைந்த ஒரு நல்ல மெல்லிசைப்பாடல்.  குறிப்பாக 2-ஆவது BGM ஒரு Climax -க்கு உரிய வேகமெடுத்து, தீவிரமான இசையில் ஆரம்பித்து அப்புறம் வேகம் குறைந்தபின் -2ஆவது சரணம் ஆரம்பித்து முடிகிறது.
பாடலின் குரல்:

இளையராஜாவின் ஆஸ்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவருக்கு அதிக பாடல்கள் பாடிய ஜானகிதான் இதனையும் பாடியது. அவருடைய மெல்லிய குரல் வீணையோடு குழைந்தும் இழைந்தும் போட்டிபோடுகிறது. கேட்கும் நமக்கு ஜானகியின் குரல் இனிதா வீணையின் நாதம் இனிதா என்று அதிசயப்படும் அளவுக்கு இனிமையான பாடல். ஜானகியின் உயிருட்டமுள்ள குரலே வென்றது என்றும் சொல்லலாம். குறிப்பாக அவருடைய குரல் சரணங்களில் உச்சஸ்தாயி எடுத்துச் செல்லும்போது, வீணை தோற்றுவிடுகிறது. ஜானகியின் குரலுக்கு வீணை, இனிமைக்கு இனிமை சேர்க்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.  
பாடலின் வரிகள்:
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,
உலகமே புகழ்ந்ததே, அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே,

கண்ணனோடு ராதை என்றார்,
ராமனோடு சீதை என்றார்,
அருகு போல வேர்கள் கண்டோம்,
மூங்கில் போல சொந்தம் கொண்டோம்,
எனை உனக்கென ஈசன் வைத்தான்,
இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம்,
உலகம் எங்கும் பாட்டு ( வீணை மீட்டும் கைகளே)

ஆறு ஒன்று ஓடும்போது
கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்
நம்மை போல வாழ வேண்டும்
இது இறைவனின் காதல் கட்டில்,
ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை,
தலைவி என்னும் வீணை

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,
திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்
பஞ்சு அருணாச்சலம்


பாடலின் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள். அவருடைய வரிகள் எப்போதுமே, இசைக்குள் அடங்கி, இசையினை மிஞ்சாமல் வருகின்ற எளிய வரிகள். இந்தப்பாடலிலும் அதே தன்மைதான் தெரிகிறது. 2-ஆவது சரணத்தில் “ஆறு ஒன்று ஓடும்போது கங்கை போல ஓட வேண்டும்” என்று பாடும்போது அது எவ்வளவு உண்மை. தண்ணீரில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு பாலைவனம் போல் ஆகிவரும்போது, நமது நாட்டில் ஒரு ஜீவ நதி கூட இல்லாததால் தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை அண்டிப்பிழைக்கும் அவலம் கண்முன்னால் வந்து கண்ணில் கங்கை வந்தது.
ஆறு ஒன்று ஓடும்போது கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மைப்போல வாழ வேண்டும்
-என்ற வரிகள் மிகவும் பிடித்தது.
எனை உனக்கென ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வைத்தான்.
-காதலை வெளிப்படுத்தும் நம் சமூகத்தில் பாசத்தை மட்டும் சரியாக வெளிப்படுத்துவதில்லை (என்னையும் சேர்த்துத்தான்) என்பது ஏன் என்று தெரியவில்லை. அதனைத்தான் கவிஞர் 'இலை மறைவினில் பாசம் வைத்தான்' என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்.
மறந்து போன இந்த வீணைப்பாடலை உங்களுக்கு ஞாபகப்படுத்தியதில் எனக்கு மொத்த மகிழ்ச்சி.
அடுத்த பாடலில் விரைவில் சந்திக்கிறேன்.

-தொடரும்.