Wednesday, December 10, 2014

கஷ்டம்டா சாமி !!!!!!!!!!!!

Indian-Passport-Renewal-or-Re-issue-Documents-list

சில நாட்களுக்கு முன்னால் எனது இந்திய பாஸ்போர்ட் காலாவதி (சரியாக படிக்கவும் ) ஆவதால், அதனை புதுப்பிப்பதற்காக எடுத்து வைத்தேன்.
பத்து வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். என்னிடம் இப்போது மொத்தம் இரண்டு பாஸ்போர்ட் இருக்கின்றன. முதலில் வாங்கியது. பின்னர் 10 வருட முன்னால் நியூயார்க்கில் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் ஆகியவை.
அதனை எடுத்துப்பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. 90 களில் வாங்கிய முதல் பாஸ்போர்ட்டில் இருந்த என் புகைப்படத்தில் இருந்த என்னை எனக்கே அடையாளம் தெரியவில்லை. அதன் பின்னர் 96ல் சிங்கப்பூர், மலேசியா போகும்போது எடுத்த விசாவில் கண்ணாடி போட்ட என்முகம். பின் US விசாவில் இருக்கும் சூட் அணிந்த சற்றே கனவு காணும் கலவர முகம். நியுயார்க்கில் 2004ல் புதுப்பிக்கும்போது எடுத்த கொஞ்சம் கான்பிடன்ஸ் கூடிய முகம். அதன்பின் இப்போது எடுத்த போட்டோவில் பார்த்தபோது, என்முகம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று நினைத்து ஆச்சரியமாயிருந்தது.
90களில் இருந்த பால்வடியும் முகம் இப்போது தோல்வடியும் முகமாக மாறியிருந்தது. வயதின் கோடுகள் என்றும் சொல்லலாம், அனுபவ ரேகைகள் என்றும் சொல்லலாம்.
சரிவிடுங்க, என்னுடைய முக ஆராய்ச்சியில்லை இந்தப் பதிவு. பாஸ்போர்ட் புதுப்பிக்கப்போன இடத்தில் சந்தித்த சில சுவாரஸ்ய மனிதர்களைப் பற்றிய அக ஆராய்ச்சி இது.
அனுதினம் அதிகரிக்கும் இந்தியர்களின் தேவைகளைச் சந்திக்க முடியாமல் திணறிய நியூயார்க்கில் உள்ள இந்திய கான்சுலேட், விசா வழங்குதல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை அவுட்சோர்ஸ் செய்து, பி.எல்.எஸ் இன்டர்நேஷனல் (BLS International) என்ற கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது. எனவே இப்போது புதுப்பிக்கும் கட்டணத்தோடு, பி.எல்.எஸ் நிறுவன சேவைக்கட்டணமும் கட்ட வேண்டும்.
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு தனியாக ஒரு இடம் இருந்தது. அட்ரஸைப் பார்த்தால் எங்க ஆஃபிசுக்கு அடுத்த தெரு, வெரிகுட்.
ஆன்லைனில் அப்ளை செய்துவிட்டு அப்பாய்ண்ட்மெண்ட் புக் செய்தேன். ஒரு மாதம் கழித்துத்தான் தேதி கிடைத்தது. தேவைப்பட்ட எல்லா டாக்குமென்ஸ்ஸையும் ரெடி பண்ணி போனேன்.

போனவுடன் டோக்கன் பெற்றுக்கொண்டு உட்கார்ந்தேன். கவுன்ட்டரில் மொத்தம் நான்கு பேர். அதில் மூன்றுபேர் இந்தியர் ஒரு ஆப்பிரிக்க இளைஞன். இந்திய பாஸ்போர்ட் ஆபிசில் ஆப்பிரிக்கரா என்று நினைத்து சிரித்துக்கொண்டே உட்கார்ந்தேன்.
ஏற்கனவே ஒரு 20 பேர் காத்திருந்தனர். கவுன்ட்டருக்கும் உட்காருமிடத்திற்கும் அதிக இடைவெளி இல்லாததால் அங்கு நடப்பவற்றை பார்க்க மட்டுமல்லாது கேட்கவும் முடிந்தது.
இதோ உங்களுக்காக அவர்களின் கேஸ் ஸ்டடி.
முதல் அவலம்:
முதல் கேசே நம்ம ஜாதி. ஐ.டி (IT) ஐத்தான் அப்படி சொன்னேன். இளைஞன் H1B யில் இருக்கிறான். என்ன பிரச்சனை என்றால் பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டான் இப்போது நடந்த உரையாடலைக் கவனியுங்கள்.
பாஸ்போர்ட்டை எங்கே தொலைத்தீர்கள்?
"தெரியாது"
எப்போது எடுத்தது, நம்பர் ஏதாவது இருக்கிறதா?
"இல்லை".
"ஏதாவது நகல்கள் இருக்கிறதா?"
"இல்லை"
போலிஸில் கம்ப்ளைன்ட் செய்தீர்களா?
"இல்லை"
"தொலைந்தால் என்ன செய்வது என்று இந்திய கான்சுலேட் வெப் சைட்டில் போட்டிருக்கிறோமே"
"பார்க்கவில்லை"
"முதலில் போலிஸ் கம்பிளைன்ட் செய்துவிட்டு, வெப்சைட்டில் உள்ள விவரங்களை பார்த்துவிட்டு மறுபடியும் வாருங்கள்"
"சரி"
சரி உங்கள் கம்பெனியில் விசா எடுக்கும்போது பாஸ்போர்ட் காப்பி கொடுத்திருப்பிர்கல்லவா?
"அட ஆமாம்"
அதையும் வாங்கிக் கொண்டு, வாருங்கள்"
ஓகே, தேங்க்ஸ். அப்ப இந்தியாவுக்குப் போக முடியாது.
"முடியாது"
என் கல்யாணம்?
 தள்ளிப்போடனும்.


நீதி: ஐயாமார்களே பாஸ்போர்ட்டை லாக்கரில் வையுங்கள், சும்மா கையில் வைத்துக்கொண்டு சுற்றாதீர்கள். சில நகல்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவலம் 2:
           சொல்லுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?.
"பாஸ்போர்ட்  புதுப்பிக்கவேண்டும்"
"இது யாருடைய பாஸ்போர்ட்"
"என் கணவரின் பாஸ்போர்ட்"
"என்ன விசாவில் வந்தார்"
பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் (Performing Arts)
"காட்டுங்கள்"அட விசாவும் எக்ஸ்பயர் ஆகிவிட்டதே"
"ஐயோ, பார்க்கவில்லையே"
"நீங்கள் என்ன விசாவில் இருக்கிறீர்கள்".
"அதே விசாதான்".
"அப்ப உங்களதும்?”
"ஆமா இப்பத்தான் பார்க்கிறேன்."
நீங்கள் நாட்டில் இருக்க முடியாது, பாஸ்போர்ட் இங்கே புதுப்பிக்கவும் முடியாது. அவரை வரச்சொல்லுங்கள், கான்சுரிடம் விண்ணப்பம் செய்தால், தற்காலிக பாஸ்போர்ட் தருவார்கள். அதை வைத்து இந்தியாவிற்குச் செல்லுங்கள். ஓவர் ஸ்டே பண்ணதால் நீங்கள் அமெரிக்காவுக்கு இனிமேல் வரமுடியாது.
நீதி: உங்கள் விசா எக்ஸ்பயர் ஆகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே இங்கு இருந்துவிட முடியாது. மறுபடியும் திரும்பி வரவே முடியாது.

அவலங்கள் தொடரும் >>>>>>>>>>>>


பின்குறிப்பு : இன்று மாலை அலுவல் வேலையாக ஆஸ்டின் , டெக்சஸ் செல்வதால் நாளை வரவேண்டிய பதிவு இன்றே வருகிறது .மறுபடியும் திங்களன்று சந்திக்கலாம் .
நண்பர்களின் கவனத்திற்கு , என்னுடைய பதிவுகள் வாரமிருமுறை , பிரதி திங்கள் மற்றும் வியாழன் தோறும்  வருகிறது .உங்கள் தொடரும்  ஆதரவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

Monday, December 8, 2014

இளையராஜாவின் மாதா பக்தி !!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 12- “மாதா உன் கோவிலில்”

1978ல் வெளிவந்த "அச்சாணி" என்ற படத்தில் வந்த மனதை உருக்கும் பாடலிது. முதலில் பாடலைக் கேட்போம்.


பாடலின் சூழல்:
சந்தர்ப்ப சூழ்நிலையில்  யாரோ ஒரு குழந்தையைப் பேண வேண்டிய நிலையில்  தாய்மையடையாத ஒரு பெண் திகைத்து, மாதாவிடம் தஞ்சம் அடைந்து அந்தப்பிள்ளைக்கு மாதாவையே தாயாக காண்பிக்க விழைகிறாள்.
இசைக்கோர்வை:
எத்தனை முறை கேட்டாலும் நெஞ்சை உருக்கும் இளையராஜாவின் இசையில் இந்தப்பாடல் ஒரு  மாஸ்டர் பீஸ் எனலாம். கேட்கும் போதெல்லாம் கண்ணில் நீரை வரவழைக்கும் உருக்கம் பாடல் முழுவதிலும் வழிந்தோடுகிறது.
ஆரம்பத்தில்  "மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்" என்று பெண்குரல் பாட ,வெறும் ஆர்கனின் ஓரிரு நோட்கள் பின்னணியில் இசை சேர்க்கிறது. அதே வரிகள் திரும்ப 2-ஆவது முறை வரும் போது தபேலா சேர்ந்து கொண்டு,பாடலை எந்தவிதத்திலும் பாதிக்காது தத்தி தத்தி தொடர்கிறது. பல்லவி முடிந்து முதலாவது BGM-ல் ஷைலபோனின் உதவியில் மணியோசை போல் கேட்க, டிரிப்பிள் காங்கோ சேர்ந்துகொள்கிறது. அதன்பின் வரும் வயலின் குழுமம் ஏறி இறங்க வீணை மிகுந்த பேசில் (Bass) அப்படியே உருக, சோலோ  வயலின் உச்சஸ்தாயிக்கு போக முதல் சரணம், "மேய்ப்பன் இல்லாத மந்தை" என ஆரம்பிக்கிறது.
2-ஆவது BGM-ல் வயலின்கள் மேல் ஸ்தாயிலிருந்து ஆரம்பித்து கீழிறங்கி வர, ஆர்கன் நடுவில் இசைக்க, மறுபடியும் ஷைலபோன் ஒரு கிறிஸ்தவ எஃபக்ட் கொடுத்து நிறுத்த 2-ஆவது சரணம் "காவல் இல்லாத ஜீவன்" என்று ஆரம்பித்து முடிகிறது. தபேலாவின் நடை முதல் சரணத்திலிருந்து வேறுபட்ட நடையில் ஒலிக்கிறது.
மூன்றாவது BGM-ல் பாடும் பெண்ணின் குழப்பமான மனநிலையையும் நிராதரவான நிலையையும் குறிக்கும் வகையில் வயலின்கள் மேலும் கீழும் சரசரவென கிளைமேக்ஸ் போல ஒலித்து முடிகிறது. பின்னர் வீணை வந்து அந்த மூடை சமாதானப்படுத்த, மூன்றாவது சரணம், "பிள்ளை  பெறாத பெண்மை" என்று ஆரம்பித்து பின் சரணம் வருகிறது. இறுதியில் ஒரு தாலாட்டுடன்  ம்ம்ம் - என்று முணுமுணுத்து முடிகிறது. Haunting Melody  என்பார்களே இது அந்த ஜாதி. இளையராஜாவுக்கு மாதாவின் மேல் உள்ள ஒரு கத்தோலிக்க பக்தி இதில் ஒளிந்திருப்பதாகவே நான்  நம்புகிறேன்.
குரல்:
மனக்கிளர்ச்சியுடன் பாடும் காதல் பாடல்களில் மட்டுமல்ல, மனமுருகிப்பாடும் பக்தி/சோகப் பாடல்களிலும் தன்னால் முத்திரை பதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜானகி. இந்தப்பாடலில் எந்த வகையான பாடலையும் பாடும் வெர்சடைல் சிங்கர் என்பதை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார். குரலில் சோகத்தை, பொறுப்புணர்ச்சியை, மற்றும் பக்தியை ஒருங்கே காண்பித்திருக்கிறார். அதுதவிர ஒவ்வொரு வரியிலும் பொடிச்சங்கதிகளால் அலங்கரித்த அழகிய இசை மாலையைத் தொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சரணத்திலும், உள்ள முதல் வரி ரிப்பீட் ஆகும்போது "மந்தை", "ஜீவன்", "பெண்மை" ஆகிய வார்த்தைகளில் உள்ள சங்கதியைக் கவனித்துக் கேளுங்கள். அநாயசமாகப் பாடியிருப்பார். ஜானகி ஜானகிதான்.
பாடல்வரிகள்:
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்

பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.  அந்தக் காலகட்டங்களில் பாடல்கள் படங்களின் ஒரு அங்கமாக இருந்தன. பாடல்கள் கதைச்சுருக்கத்தையும் பாடும் நாயகன் நாயகியர்களின் நிலையினையும்,புலம்பலையும்,கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தின. அதற்கு ஒரு உதாரணம் இந்தப்பாடல்.
பல்லவியின் தாயென்று மாதாவைக்காட்டும் நாயகியிடம் உள்ள குழந்தை அவள் குழந்தையில்லை என்பது விளங்குகிறது. முதல் சரணத்தில், "மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறிவிடும், ஆனால் மேரிமாதாவே உன் ஜோதி கண்டால் எங்கள் விதி மாறிவிடும். உன் கோவிலில் இருக்கும் மெழுகு போல் உருகுகிறோம். எங்கள் கண்ணீரை மாற்றிவிடு என்று ஜெபம் செய்வது போல் வருகிறது.
2-ஆவது சரணத்தில் " கரை பார்க்காத ஓடம் எப்படி தண்ணீரில் அலைக்கழியுமோ அப்படித்தான் நானும் காவல் இல்லாததால் கண்ணீரில் தத்தளிக்கிறேன்.உன் திருச்சபை மணியோசை கேட்டுவிட்டால் எங்களுக்கு அருள் கிடைத்துவிடும்" என்கிறாள்.
3-ஆவது சரணத்தில், "பிள்ளையே பெறாத நான் தாயாகிப் போனேன், அன்னை இல்லாத இந்த மகனை தாலாட்டுகிறேன். நான் என்ன செய்யமுடியும், இது கர்த்தரின் கட்டளை அல்லவா" என்று சொல்லுகிறாள்.
-இந்தப்பாடலை வெளியே கேட்கும்போது, அப்படி என்னதான் சூழ்நிலை நாயகிக்கு அமைகிறது, என்று அந்தப்படத்தைப் பார்க்கத்தூண்டுகிறது. இந்தப் படங்கள் எதையுமே பார்த்திராத என்னைக் கூட பார்க்கத்தூண்டுகிறது.
மொத்தத்தில் இனிமையான அருமையான மனத்தை உருக்கும் பாடல் இது. அதனால்தானோ   என்னவோ இளையராஜா பாலாவின் “நான் கடவுள்” படத்தில் இதனை வேறு வரிகள் போட்டு பயன்படுத்தியிருக்கிறார். அதனைக் கேட்டுப்பாருங்கள்.


பாடலின் ராகம்:
இந்தப் பாடலின் ராகம் சிந்துபைரவி இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி ராகத்தில் சில பாடல்கள்
1.    நான் ஒரு சிந்து (சிந்து பைரவி)
2.    மணியோசை கேட்டு (பயணங்கள் முடிவதில்லை)
3.    தரிசனம் கிடைக்காதா (அலைகள் ஓய்வதில்லை).
பாடல் பதிவில்  நடந்த  சுவாரஷ்யமான சம்பவம் :
சவுண்டு என்ஜினியர் இந்த படத்தின் பூஜை தினத்தன்றே வேறு ஒரு படத்திற்கும் (இசையமைப்பாளர் உபேந்திரகுமார்) ரெக்கார்டிங் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் யாராவது பாடல் பதிவு முடித்துவிட்டால் மதியம் 1 மணிக்குள் அடுத்த பாடல் பதிவை வைத்துக்கொள்ளலாம் என நினைத்தாரோ என்னமோ. பூஜை தினத்தன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவிற்குள் வர அங்கே வேறு இசைக்குழு இருந்தது. என்ன நிலவரம் என்பதை தெரிந்து கொண்ட இளையராஜா சவுண்டு என்ஜினியர் எஸ்.பி.ராமனாதனிடம் சென்று யார் ரெக்கார்டிங்கை வைத்துக்கொள்வது என கேட்க பதில் சொல்ல முடியாமல் சமாளித்துப்பார்த்திருக்கிறார். ஆனால் உபேந்திரகுமாரோ எது பற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கிவிட்டார்.

சரி இனி இங்கே வேலைக்காகாது என தெரிந்து கொண்ட இளையராஜா வேறு ஸ்டுடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது. இதற்குள் மதியம் 1 மணியை நெருங்கிவிட்டதால் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோவிற்கே சென்றனர். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் எதுவும் இல்லாததால் அங்கேயே பாடல் பதிவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து பாடல் ரிகர்சல் ஆனது.

ஜானகி வந்ததும் பாடல் ஒத்திகை பார்க்கப்பட்டு சரியாக வராததால் இரண்டு மூன்று டேக்குகள் போய்கொண்டிருந்தது. இளையராஜாவிற்கோ நிறைய சங்கதிகள் கற்பனையில் வந்துகொண்டிருக்க அவ்வப்போது ஜானகியிடம் சென்று மாற்றிக்கொண்டே இருந்தார். ஒரு டேக் நன்றாக வந்துகொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்க வேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம் கண்டக்ட் செய்த கோவர்த்தன் சார் கை காட்ட மறந்துவிட்டார்.
இளையராஜாவிற்கோ கோபம். “என்னண்ணே டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது பேக்ரவுண்ட் மியுஸிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?” என்று கேட்க அவரோ கூலாக, “பாட்டில் மெய் மறந்துட்டேன்யா” என்றிருக்கிறார். இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருந்தியிருக்கிறார் இளையராஜா
சரி டேக் போகலாம் என்று சொல்லி அடுத்த டேக்… ஜானகி பாடும் போது மூன்றாவது சரணத்தில்,
“பிள்ளை பெறாத பெண்மை தாயானது
 அன்னை இல்லாத மகனை தாலாட்டுது”
என்ற வரிகளை அழகாகப் பாடியவர் அதற்கு அப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டுவிட்டார். ஆர்க்கெஸ்டிராவிலோ எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். பொதுவாக டேக் கட் ஆனாலே “பேன் போடு” என்று சத்தம் போடுபவர்கள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் இருக்கிறார்களே என்று இளையராஜா கோவர்த்தன் சாரை பார்க்க, அவரோ வாய்ஸ் ரூமை கைகாட்டியிருக்கிறார். ஜானகி கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்க இளையராஜா என்னவென்று கேட்க, “டியூனும் வார்த்தையும் கலந்து ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்திவிட அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்” என்றாராம். ஜானகி இப்படி சொன்னதைக் கேட்ட எல்லோரும் உருகிப்போனார்களாம். (நன்றி http://ilayaraja.forumms.net/)

அடுத்த வாரம் இன்னொரு பாடலில் சந்திக்கிறேன் .வருகைக்கு நன்றி .




Thursday, December 4, 2014

சாம்பாரின் கதை !!!!!!!!!!!!!!!!

சில மாதங்களுக்கு முன்னால் ரோட் ஐலன்ட் (Rhodh Island) என்ற மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தோம். காலையில் நீண்ட சாலைப்பயணத்தை முடித்து நியூபோர்ட் என்ற ஊரில் அரண்மனைகள் போன்ற மாபெரும் மாளிகைகளில் சுற்றித்திரிந்து களைத்து வெளியே வந்த போது  பகபகவென்று பசியெடுத்தது. நல்ல ஒரு இந்திய உணவகத்தில் ஒரு "தாலி மீல்ஸ்" சாப்பிட்டால் நன்றாக  இருக்கும் என்ற கற்பனையுடன் மைத்துனனின் மனைவி திவ்யாவிடம் அவளுடைய செல்போனில் தேடச் சொன்னேன். சில நிமிடங்களில், "அண்ணா சாம்பார் ரெஸ்டாரண்ட் 10 மைல் தூரத்தில் இருக்கிறது", என்றாள். மணியைப் பார்த்தேன் 1 மணியாகியிருந்தது சரி 1.30க்குள் போய் விடலாம் என்று முடிவு செய்து,” அங்கேயே போகலாம்”, என்றேன்.
எங்கெல்லாம் இந்தியர்கள், அதுவும் தென் இந்தியர்கள் புகுந்துவிட்டார்கள் என பெருமையுடன் நினைத்துக் கொண்டே கிளம்பினோம். சாப்பிடப்போகும் சாம்பார் வேறு  நினைவுக்கு வந்து, எச்சிலை ஊற்றாக எழுப்பிக் கொண்டிருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருந்த அந்த ரெஸ்டாரண்ட்டை கண்டுபிடித்து செல்வதற்குள் மணி 2 ஆகிவிட்டது.
ஆஹா "பசித்துப்பின் புசி" என்று முன்னோர் சொன்ன வார்த்தை அப்போது ஞாபகம் வந்தது. “பசித்துப்பின்புசி” ஆனாலும் “ரசித்துப்பின் புசி” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு அங்கு சென்றால், 'SAMBAR' என்று எழுதிய பலகையின் கீழே ஒரு சிறிய உணவகம் இருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தால் அது ஒரு ஆப்பிரிக்க உணவகம்.  சாம்பர் ஒரு வகை ஆப்பிரிக்க மானின் பெயராம்.
  1. Sambar Deer
எல்லோரும் என்னை முறைத்துப் பார்க்க, நான் திவ்யாவை கை காண்பிக்க, என் மனைவி என்னை கடித்துக் குதறும் ஒரு பார்வை பார்த்தாள்.
அப்புறம் ஒரு வழியாக அதன் பக்கத்தில் இருந்த ஒரு இத்தாலிய உணவகத்தில் பிட்சா, பாஸ்த்தா என்று சாப்பிட்டு முடித்தோம்.
சைவ வகைகளில் சாம்பார் மிகமுக்கியமான ஒன்று. குழம்பு வகைகளில் தலையாயது. நம்மூரில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா என்ற நான்கு மாநிலங்களில் எந்த உணவகம் சென்றாலும் சாம்பார் இல்லாமல் இருக்காது. நம்முடைய தென்னிந்திய வீடுகளிலும் சாம்பார் நிச்சயமாக இருக்கும். 

  1. Gemini Ganesan
பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இன்னொரு பட்டம் உண்டு அதுதான் 'சாம்பார் கணேசன்". அவர் சைவ உணவு சாப்பிடு பவர் என்பதால் இந்தப்பெயர் வந்ததா என்று தெரியவில்லை. அவர் சைவ உணவு மட்டும்தான் சாப்பிட்டாரா என்றும் தெரியவில்லை. சைவ உணவு சாப்பிடுபவர்களை இப்போதெல்லாம் "தயிர் சாதம்" என்று தானே கிண்டலடிக்கிறார்கள். ஆனால்  'சாம்பார் கணேசன்' என்று ஏன் சொன்னார்கள் என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்.
கல்லூரியில் படிக்கும் போது கையில் காசில்லாத சமயத்தில் இட்லி சாம்பார் என்று ஆர்டர் செய்து, ரெண்டு இட்லியை நிறைய சாம்பாரில் இட்டு ஊறவைத்து, சிறிய துண்டுகளாக்கி கூழாக்கி சாப்பிட்டு (குடித்து) வயிறை நிரப்பிய அனுபவம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கலாம். ஒரு நாள், இரண்டு இட்லிக்கு நிறைய சாம்பார் வாங்கி அதனை மதியம் சாதத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஊற்றி சாப்பிட்டுப்பார்த்தால் வாயிலேயே வைக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது, அது இட்லிக்கும் தோசைக்கும் மட்டுமே நன்றாக இருக்கும், சாதத்திற்கு உணவகத்தில் வேறு சாம்பார் வைப்பார்கள் என்று.
ஆனால் இந்த சாம்பார் தமிழனின் பாரம்பரிய உணவா? எப்படி நான்கு மாநிலங்களில் பிரபலம் ஆனது என்று கேட்கும்போது, நிச்சயமாக இது பழங்கால பாரம்பரிய உணவல்ல. அப்படியென்றால் இதன் கதை என்ன? சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு  காலத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் சாளுக்கியம் போன்ற பிற பகுதிகளையும் ஆண்ட சோழப்பேரரசு வீழ்ந்து பட்ட பின்னர், தஞ்சையில் நாயக்கர் ஆட்சி வந்தது. அதுவும் முடிந்தபின் சிவாஜியின் வாரிசுகளான மராட்டியர் ஆட்சியைப் பிடித்து சுதந்திரம் வாங்கும் வரை நிலைபெற்றனர். இன்றும் தஞ்சை அரண்மனையின் ஒருபகுதியில் அவர்களின் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். மராட்டிய அரசர் பெயரில் மன்னர் சரபோஜி கல்லூரியும் இப்போது இயங்குகிறது.
  1. King Serfoji
ஒரு மராட்டிய மன்னர் தஞ்சையில் அரசாண்ட சமயத்தில் அவருடைய அந்தப்புறத்தில் இருந்த சமையல் கூடத்தில் பணியாற்றிய  மொத்தக்குழுவில் இரு பிரிவுகளை உருவாக்கினார்.
ஒரு ஆறுமாதம் ஒரு குழு சமையல் வேலை செய்யும்போது, மற்றொரு குழு R&D  வேலை செய்து வெளியில் பல இடங்களுக்கு அலைந்து விதவிதமான பண்டங்களைக் கண்டுபிடித்து வந்து மன்னருக்கு செய்து காண்பிக்கும். அதில் மிகவும் பிடிக்கும் வகைகளை மன்னர் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து அறிமுகம் செய்வார்.
இப்படி இந்த குழுக்கள் மாறிமாறி வெளியில் சென்று கண்டுபிடித்த பண்டங்கள் அநேகம். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் சாம்பார். மன்னருக்கு இது மிகவும் பிடித்துவிட அதற்கு தம் மகனான சாம்பாஜியின் பெயரை வைத்தார். சாம்பா என்று முதலில் அழைக்கப்பட்ட இது  , நம் தமிழக வழக்கப்படி நாம்  பெயர்ச்சொல் எழுதும்போது இப்படி முடிவில்லாமல் எழுதுவது இல்லையென்பதால் அதுவே சாம்பார் என்று ஆனது.
இதுதான் சாம்பாரின் கதை. சாம்பார் போலவே அதன் கதையும் சுவையாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

சாம்பாரைப்பற்றி இவ்வளவு நேரமாக எழுதி எச்சில் ஊறிக்கொண்டு இருக்கும்போது, சரவணபவன் சாம்பார் ஞாபகம் வர, மனைவி மதிய உணவு கட்டிக் கொடுத்திருந்தாலும் அதனை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு லெக்சிங்டன் அவென்யுவில் இருக்கும் சரவணபவன் சென்று ஒரு தாலி மீல்ஸ் சாப்பிட்டேன். என் மனைவிட்ட தயவுசெய்து சொல்லிறாதீங்க.
முற்றும்