Tuesday, October 21, 2014

தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!

அன்பு  நண்பர்களே ,

உங்கள் அனைவருக்கும்  என்னுடைய  தீபாவளி நல் வாழ்த்துக்கள் .

தங்களின் தொடரும் ஆதரவுக்கு நன்றி .

இன்று என்னடைய பதிவு ஒன்று "தி இந்து" வின் தமிழ்ப்பதிப்பில் வெளியாகி உள்ளது .அதோடு என்னுடைய வலைத்தளம்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கீழ்க்கண்ட இணைப்பில் அதனை வாசிக்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6502600.ece

அன்புடன்

உங்கள் பரதேசி
ஆல்ஃபிரட் தியாகராஜன்
நியூயார்க்

Monday, October 20, 2014

இளையராஜா சென்டிமென்ட் !!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாட்டு-5 சோளம் வெதைக்கயிலே

'பதினாறு வயதினிலே' என்ற தமிழ் சினிமாவை யதார்த்த உலகத்துக்கு இட்டுச் சென்ற படத்தில் எல்லாமே மிகவும் புதிது. கதைக்களம், சூழல், கேமரா ஆங்கில்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் இசை. பாரதிராஜா, நிவாஸ், இளையராஜா என்ற மேஜிக் காம்பினேஷனில் கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் என்ற அபூர்வ டீம் . இந்தப்படத்தில் மிகவும் பேசப்பட்ட இளையராஜாவை உச்சத்தில் தூக்கி நிறுத்திய பாடல் "செந்தூரப்பூவே" என்ற எவர்கிரீன் மெலடி. கங்கை அமரன் எழுதி, ஜானகி பாடிய இந்தப்பாடல் தேசிய விருது பெற்றது.
அந்தப்பாடலைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் நான் சத்தமில்லாமல் புரட்சி செய்த மற்றொரு பாடலான 'சோளம் வெதைக்கயிலே' என்ற பாடலை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடலை ஒரு தடவை கேட்டுவிடலாமே ?


பாடல் களம்:

கிராமத்தில் எல்லாவற்றுக்கும் பாடல் பாடுவது முற்கால வழக்கம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. நாற்று நடும்போது, களையெடுக்கும் போது, அறுவடை செய்யும் போது நெல்லைத் தூற்றும் போது என கிராமியப் பாடல்கள் பல உண்டு.
அப்படியாக இந்தப்பாடல் அறுவடை சமயத்தில் பாடுவது போல் அப்பட்டமான கிராமியத்தின் எளிய சூழ்நிலையை விவரிக்கிறது. இதிலே நன்செய் நிலங்களுக்கும் புன்செய் நிலங்களுக்கும் உள்ள சூழல் மிகவும் வித்தியாசமாய் இருக்கும். நன்செய் என்பது அதிக நீர் தேவைப்படும், நெல், கரும்பு, பருத்தி ஆகியவை விளையும் நிலங்கள். பெரும்பாலும் பெருந்தனக்காரர்கள் வைத்திருப்பார்கள். புன்செய் என்பது ஏறத்தாழ வானம் பார்த்த பூமி. அதில் சோளம், திணை, சாமை, கேழ்வரகு  ஆகியவை விளையும். சிறுவிவசாயிகள் இதனைப் பெரும்பாலும் சொந்த உபயோகத்திற்காக பயிரிடுவார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலையிலே நல்ல விளைச்சல் கண்ட நாயகன், நாயகியைப் பார்த்து பாடுவது போல் அமைந்த பாடல் இது. விதைவிதைக்கும் போது அறுவடையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னாயே. நல்லா விளைஞ்சிருச்சு, திருமணம் செய்து கொள்ளலாமா என்று நாயகியைப் பார்த்து கேட்கிறான்.
இசைக்கோர்வை:
முற்றிலும் புதிதான ஆரம்ப இசையுடன், பேஸ்  கிடார் மென்மையாக  உறும, பறவைகளின் படபடக்கும் இறக்கைகளின் சத்தம் கேட்க, பாடல் ஆரம்பிக்கிறது. 'சோளம் வெதைக்கையிலே"
முதலாவது BGM-ல் அறுவடைப் பெண்களின் கோரஸும் குலவைச் சத்தமும் ஒலிக்க, உறுமி உரும, “தந்தனதானா தானேதன்னா தந்தனதானா”, என்று இருமுறை பாடி முடிக்க "மானே என் மல்லிகையே மதுரை மரிக்கொழுந்தே" என்று சரணம் ஆரம்பிக்க தவில் போன்ற இசைக் கருவிகள் சந்தோஷமாக இணைந்து கொள்கின்றன.
            2-ஆவது BGM- புல்லாங்குழல் இசையோடு வந்து முடிய இரண்டாவது சரணம் "மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க", என்று ஆரம்பித்து "கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி", என்று முடிந்து அப்படியே Fade -ஆகி நிறைவு பெறுகிறது.
உடனே "ஆத்தா நான் பாஸாய்ட்டேன்" என்று ஸ்ரீதேவியின் குரலோடு படம் ஆரம்பிக்கும். அந்த வரிகளில் பாரதிராஜாவின் குரலும் இணைந்து சொல்கிறது", ஆத்தா நான் பாஸாய்ட்டேன்" என்று. எத்தனை தடவை 'ஒலிச்சித்திரம்' கேட்டிருக்கிறோம்.
குரல்:
திரையிசையில் இளையராஜா பாடிய முதல்பாடல் இதுதான். முற்றிலும் வேறுபட்ட குரல். இதுவரை கேட்ட எந்தக்குரலின் இனிமையோ சாயலோ இல்லை. கிராமத்தில் நிஜமாகவே அறுவடை செய்யும் ஒரு சிறு விவசாயி பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே ஒலிக்கிறது. அவ்வளவு பொருத்தம். பாவமோ ஏக்கமோ, தாபமோ குரலில் தெரியவில்லை. ஆனால் அவை வரிகளில் இருப்பதால் அது பெரிதாக தெரியவில்லை. ஒரு ரஸ்டிக் குரல் அப்படியே 'ரா'வாக ஒலிகிறது. குரலில் ஒரு உற்சாகத் துள்ளல் மட்டும் தெரிகிறது. அதன்பின் இளையராஜா பல பாடல்கள் பாடி அவருடைய குரலுக்கென தனி ரசிகர்கள் உருவானது நமக்கெல்லாம் தெரியும்.
அதுமட்டுமல்லாமல் சினிமாவில் புதிய ஒரு சென்ட்டிமென்டை உருவாக்கியது இந்தக்குரல். சினிமாவில் மூடத்தனமான பல சென்டிமென்ட்ஸ்  இருப்பது நமக்கு தெரியும். 'பதினாறு வயதினிலே'வின் வெற்றிக்குப் பிறகு டைட்டில் சாங் கண்டிப்பாக வைத்து, அதுவும் இளையராஜா பாடினால் கண்டிப்பாக படம் ஹிட் என்ற புதிய சென்ட்டிமென்ட்  துவங்கியது.

பாடல்வரிகள்:

சோளம் வெதைக்கியிலே
சொல்லிப்புட்டுப் போன புள்ளே
சோளம் விளைஞ்சு காத்துக்கிடக்கு
சோடிக்கிளி ங்கே இருக்கு?
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே கட்டழகி, எனக்கு
நல்லதொரு பதிலைச் சொல்லு
குங்குமப் பொட்டழகி.

மானே என் மல்லிகையே மதுரை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே
உன்னை நெனைக்கையிலே என்னை மறந்தேனடி
பொன்னே பொன் மயிலே  
எண்ணம் தவிக்குதடி.  (சோளம் வெதைக்கியிலே)

மாரியம்மன் கோவிலிலே
மாறாம கைப்பிடிக்க
நாளும் ஒன்னு பார்த்து வந்தேன்
நல்ல நேரம் கேட்டுவந்தேன்
அம்மன் மனசுருந்தா
அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி.

பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். வரிகளில் அப்படியே கிராமத்துச் சூழலை படம் பிடித்துக்காட்டுகிறார். இளையராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சந்தத்திற்கு எழுதியவை தான். MSV வேடிக்கையாகச் சொல்வார், “சந்தத்திற்கா இல்லை சொந்தத்திற்கா?”, என்று. மேலும் சொல்வாராம் “மேட்டருக்கு மீட்டரா, மீட்டருக்கு மேட்டரா ?”, என்று. இளையராஜாவின் சந்தத்திற்கு கவியரசரின் வரிகள் சொந்தமாகவே இழைகிறது இந்தப்பாடலில்.
பல்லவியில் நாயகன், பாடுகிறான் – “சோளம் விதைக்கும் போது, அறுவடையில் பார்க்கலாம் என்று  சொன்னாயே, சோளம் விளைஞ்சு காத்துக்கிடக்குது. நீ சொன்ன சொல்லை மறந்துவிடாதே தங்கமே கட்டழகி, சீக்கிரம் நல்ல பதிலைச் சொல்லு குங்குமப் பொட்டழகி”, என்று.
  1. kannadasan
முதல் சரணத்தில் நாயகன் நாயகியை வர்ணித்துப்பாடுகிறான். வர்ணிப்பதற்கு கவிஞர் பயன்படுத்தும் சொற்களில் மண்ணின் மணம் வீசுகிறது. “மல்லிகையே, மதுரை மரிக்கொழுந்தே, தினைக்கருதே, திருநாளில் ஓடும் தேரே”, என்று உருகும் சொற்கள்.
2-ஆம் சரணத்தில் ஒரு புதிய செய்தியை நாயகன் சொல்வது போல் எழுதியிருக்கிறார். “எளிமையான திருமணமாக மாரியம்மன் கோவிலில் உன் கைபிடிக்கிறேன். நாள் கூடப் பார்த்துவிட்டேன் நல்ல நேரமும் கேட்டுவிட்டேன். அம்மன் அருளால் நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது”, என்று சொல்வதோடு யதார்த்தமான உண்மையான கருமை நிறங்கொண்ட நாயகியை, “கண்ணே கருங்குயிலே”, என்று விழித்திருக்கிறார். மின்னும் கருப்பில் அழகைப் பார்த்திருக்கிறார் கவிஞர். அதுதானே இயற்கையான அழகு .
இந்தப் படத்தின் ஒரு தீம் செட்டிங்காக  முன்னோட்டமாக இந்தப்பாடலும், சூழலும் வரிகளும் இசையும் அமைந்திருக்கின்றன.

இன்னொருமுறை பாடலைக்கேட்டு விடுங்கள்.  

அடுத்த வாரம் "தேவன் திருச்சபை மலர்களே"  .



Thursday, October 16, 2014

நியூயார்க், மேன்ஹாட்டன் நம்பர் -1 !!!!!!!!

நியூயார்க் ,மேன்ஹாட்டன் மறுபடியும் நம்பர் 1 என்று நிரூபித்திருக்கிறது. இந்தத்தடவைகமர்ஷியல் ரியல் எஸ்டேட் மதிப்பில்.
மேன்ஹாட்டன் என்பது ஒரு தீவு. பெரும்பாலும் கமெர்சியல் பில்டிங்ஸ் அதிகமுள்ள இங்கு  அபார்ட்மென்ட்களும் இருக்கின்றன. ஆனால் விலையோ அல்லது வாடகையோ நான் வசிக்கும் ,குயின்சை ( Queens) விட குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகம். குயின்சைவிட பிராங்க்ஸ் –லிலும் ( Bronx) புரூக்ளினில் சில பகுதிகளிலும் இன்னும் குறைவாகக் கிடைக்கும். ஆனால் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை.

என்னுடைய அலுவலகம் மிட் டவுன் (Mid Town) மேன்ஹாட்டனில் இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மேன்ஹாட்டனில் அலுவலகம் அமைவது எல்லா பெரிய கம்பெனிகளுக்கும் ஒரு பிரஸ்டீஜ்தான். அதனால் தான் குயின்சில் அல்லது ஜெர்சி சிட்டியில் அலுவலகம் அமைத்தால் இதைவிட பாதி செலவுதான் ஆகும் என்றாலும் என்னுடைய பாஸ் 'முகமது சதக்' மேன்ஹாட்டனில் அலுவலகம் இருப்பதை மாற்ற மறுக்கிறார். ஒருவேளை அது அவருடைய கனவாக இருக்கலாம். ஏனென்றால் அவருடைய அப்பா வைர பிஸினசில் கொடிகட்டிப்பறந்த போது, இவர்களுடைய குடும்பத்துக்கு மேன்ஹாட்டனில் ஒரு 'பென்ட் ஹவுஸ்' இருந்தது. பின்னர் இவர் தலையெடுக்கும் முன்னதாக விற்றுவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். இன்றைக்கெல்லாம் இருந்தால் அதன் மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் இருக்கும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
சமீபத்தில் 'Trans western' என்ற பிஸினஸ் குரூப்பும் 'Real Capital Analytics' என்ற பிராப்பர்ட்டீஸ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய சர்வேயில், மேன்ஹாட்டனில் ஆஃபிஸ் இடம் ஒரு சதுர அடிக்கு $770 டாலருக்கு விலை போகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் இந்தியமதிப்பில் இது 46200 ரூபாய். இது தலைநகர் வாஷிங்டன் DC-ஐ விட 40 சதவீதம் அதிகம். அதோடு மேன்ஹாட்டன் ரியல் எஸ்டேட் மொத்த வால்யூமிலும் 11.2 பில்லியன் டாலர்களுக்கு விற்றிருக்கிறது. அதுவும் இந்த ஆண்டில் ஜூலை  31 வரை உள்ள கணக்கு இது. இது லாஸ் ஏஞ்சலஸ் நகரை விட $6.1 பில்லியன் அதிகம்.
Michael Slattery
நியூயார்க் ரியல் எஸ்டேட் போர்டின் மூத்த துணைத்தலைவர் மைக்கேல் சிலேட்டெரி (Michael Slattery, Senior Vice President) சொல்லுகிறார். மார்க்கெட் நிலவரம் திருப்தியாய் இருப்பதால் மிகப்பெரிய நிறுவனங்கள் மீண்டும் மேன்ஹாட்டனுக்கு வருவதற்கு விரும்புகின்றனவாம். இரட்டைக்கோபுர சோக நிகழ்வுக்குப் பின் விழுந்துபோன பொருளாதாரச் சிக்கலில், சில நிறுவனங்கள் இங்கிருந்து காலி பண்ணி நியூஜெர்சி போனார்கள்.
இப்போது எப்படி நியூயார்க் முன்னிலையில் இருக்கிறது என்ற புள்ளி விவரத்தைக் கீழே தருகிறேன்.

கமர்ஷியல் ரியல் எஸ்டேட்டில் இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரைக்கும் ஆன மொத்த விற்பனை :
நியூயார்க் - $ 11,221 – மில்லியன்கள்
லாஸ் ஏஞ்சலஸ் - $ 5121 - மில்லியன்கள்
சேன் ஃபிரான்சிஸ்கோ - $ 5033 - மில்லியன்கள்
பாஸ்டன் - $ 4106 - மில்லியன்கள்
சிக்காகோ - $ 2903 - மில்லியன்கள்
வாஷிங்டன் DC - $ 2120 - மில்லியன்கள்
டாலஸ் - $ 1726 - மில்லியன்கள்
சேன் யோசே - $ 1593 - மில்லியன்கள்
ஃபிலடெல்பியா -$ 1410 - மில்லியன்கள்

கமர்ஷியல் ரியல் எஸ்டேட் சேல் கணக்கு ஒரு சதுர அடிக்கு
மேன்ஹாட்டன் - $770
வாஷிங்டன் DC - $ 545
சேன் ஃபிரான்சிஸ்கோ - $ 464
சேன் யோசே  - $ 412
பாஸ்டன் - $ 332
சால்ட் லேக் சிட்டி - $ 292
ஆஸ்டின் - $ 262
சியாட்டல் - $ 231
       இதையெல்லாம் படித்தவுடன் இந்தியாவில் இருக்கும் என் பாஸுக்குக்கு ஒரு போன் செய்தேன்.
"ஹலோ முகமட்?”
"சொல்லுங்க ஆல்ஃபி"
"யு ஹேவ் எ மினிட் ?"
"ஸ்யூர் கோ எகட்"
"மார்க்கெட் நிலவரம் நன்றாக இருக்கிறதாம்."
"குட்"
"ரியல் எஸ்டேட் பீக்கில் இருக்கிறதாம்."
"வெரிகுட்"
"நம்ம பிஸினசும் இன்னும் முன்னேற வாய்ப்பிருக்கிறது ".
" சௌண்ட்ஸ்  கிரேட்."
"அதனால?”
"அதனால ?"
"சம்பளம் கொஞ்சம் கூட்டினால்?”
"ஹலோ ஹலோ"
"ஹலோ முகமட் கேக்குதா?”
"ஹலோ ஹலோ".
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்.

முற்றும்


Monday, October 13, 2014

இளையராஜாவின் ஒரு நாள்!!

எழுபதுகளில் இளையராஜா,பாட்டு-4 ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்!!
1976-ல் வெளிவந்த "உறவாடும் நெஞ்சம் ", என்ற திரைப்படத்தில் அமைந்த பாடல் இது.முதலில் பாடலைக்கேட்போம்.

இசைக்கோர்வை:
கடிகார சத்தம் டிக் டிக் கென ஆரம்பிக்க,  எந்த இசையும் இல்லாமல் பெண்குரலில் பல்லவி ஆரம்பிக்கிறது.
ஒரு நாள் உன்னோடு நான் 
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
என்று முடியும் போது காங்கோஸ் /பேங்கோஸ் டட்டட் டட்டட்டட் என்று ஆரம்பிக்க, ரிதம் கிடார் உற்சாகத்துடன் கார்டு பிடிக்க, மறுபடியும் பல்லவி, “ஒரு நாள் உன்னோடு நான்”, என்று  பாடல் சூடு பிடிக்கிறது.
பல்லவி முடிந்தவுடன் முதலாவது BGM -ல் வயலின் விளையாட்டு ஆரம்பிக்க, கிடார் ரிதம், கீபோர்டு, பேஸ் கிடார் எனக் கலவையாக துடிக்கிறது இசை. அது வயலின் ஒற்றை லீடோடு இழைந்து முடிய முதல் சரணம் ஆரம்பிக்கிறது. ஆண் குரலில், "மஞ்சளின் மகாராணி, குங்குமப் பெருந்தேவி", என ஆரம்பிக்கும்போது டிரிப்பிள் காங்கோ நல்ல தாளம் அமைக்கிறது. சரணத்தின் கடைசி இரண்டு வரி பெண் குரலில் வருகிறது.  
இரண்டாவது BGM -ல் கீபோர்டு இசை, கிடார் கார்டுடன் வந்து முடிய, 2 ஆவது சரணம் பெண்குரலில் "உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பலவுண்டு”, என்று ஆரம்பிக்க கடைசி இருவரிகள் ஆண்குரலில் முடிகின்றது.
3-ஆவது BGM கீபோர்டு இசையுடன் ஆரம்பித்தாலும் வயலின் விளையாட்டு உச்சஸ்தாயியை எட்டி மீண்டும் தணிய, ஒரு கிடார் கார்டு விழுந்தவுடன், 3ஆவது சரணம் பெண்குரலில் “மங்கல நாண்  வேண்டும்”, என ஆரம்பித்து ஆண்குரலில் முடிகிறது. இறுதியில் ஆண் ஒரு வரி பெண் ஒரு வரியாக மாறி மாறிப்பாட பல்லவியுடன் முடிகிறது பாடல்.  
பாடல் முழுவதும் ஆண்குரல் பெண்குரல் என சரிவிகிதத்தில் அமைக்கப்பட்ட திறமையான டூயட் பாடல் இது.
பாடலின் சூழல்:
காதலில் விழுந்த தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் சிறு பிணக்கம், தலைவனின் கோபத்தையும் பிணக்கையும் மாற்ற விழையும் தலைவி வெற்றியும் காண்கிறாள். பின்னர் எதிர்கால மணவாழ்க்கையின் கனவில் முடிகிறது பாடல்.
பாடல் வரிகள்:
Panju Arunachalam
Panchu Arunachalam
வரிகள் எழுதியவர் கவிஞர் பஞ்சு அருணாசலம். கவித்துவம் அதிகம் இல்லாவிட்டாலும் சூழலுக்கேற்ற எளிய வரிகளைத் தந்துள்ளார். மூன்றாவது சரணத்தில் தலைவி தலைவனிடம் தெளிவான கோரிக்கைகளை வைக்கிறாள். “மங்கல நாண் பூண வேண்டும், மகனொன்றும் மகள் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகள் வேண்டும்”, என்கிறாள். “நீயென்றும் என் காவலாக இருக்க, நான் உன் வாழ்வில் கீதமாக இருப்பேன்”, என்றும் வாக்குறுதி கூறுவதாக பாடல் அமைகிறது. அதற்கு தலைவன், “ஒன்றும் கவலை வேண்டாம், காவியம் போல வாழ்ந்து ஆயிரம் நிலவைப் பார்ப்போம்”, என்று கூறுகிறான். ஆயிரம் நிலவைப் பார்ப்போம் என்றால்  ஆயிரம் மாதங்கள் அதாவது 83 வருடம் இணைந்திருப்போம் என்று அர்த்தம் வருகிறது. அதாவது வாழ்நாள் முழுவதும் என்று அர்த்தம்
குரல்:


இந்த துள்ளலான டூயட் பாடலுக்கு இணைந்த ஆதர்ஷ குரல்கள் SP பாலசுப்ரமணியம் மற்றும் S.ஜானகி. இளையராஜாவின் டியூனை முற்றிலும் புரிந்து கொண்டு அவர் எதிர்பார்ப்பதற்கும் மேலாக கொடுக்க வல்லவர்கள் இருவருமே. அப்புறம் அதன் தரத்தை சொல்லவும் வேண்டுமா? எந்த இடத்தில் இறக்க வேண்டும் எந்த இடத்தில் தாழ்த்தி ஹஸ்கியாக பாடவேண்டும் என்று தெளிவான உச்சரிப்பில் பாடி அசத்தியிருக்கிறார்கள். பாடலின் வெற்றிக்கு இவர்கள் குரலும் முக்கிய காரணம்.

Thursday, October 9, 2014

மோடியுடன் ஒரு நேர்காணல் !!!!!!!!!!!!!!


பரதேசி: வணக்கம் திரு.மோடி அவர்களே!
மோடி         : பாரத் மாதா கி ஜே, நமஸ்தே பல்தேசி,  போலோ
பரதேசி:  நம்முடைய நேர்காணலை, நம் இருவருக்கும் தெரிந்த ஆங்கிலத்தில் வைத்துக் கொள்ளலாமா?
மோடி: நை நகி, மே செர்ஃப் ஹிந்தி மேஹி  பாத் கரூங்கா.
பரதேசி: எனக்கு இந்தி தெரியாதே, இந்தி மாலும் நஹி
மோடி: அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பாளர் வைத்துக் கொள்ளலாம்.
பரதேசி: அப்படியென்றால் நீங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும்.
மோடி: குயூம் ?
பரதேசி: நாம் சில முக்கிய விஷயங்களைப் பேசும் போது, மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டால், பிற்காலத்தில் அவர் இவற்றை வெளிப்படுத்தி புத்தகம் வெளியிட்டுவிடுவார். அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. இதெல்லாம்   உங்களுக்கு தேவையா ?
மோடி : அச்சா ? ( யோசிக்கிறார் )
பரதேசி: யாரையும் நம்ப வேண்டாம். அமித் ஷா உட்பட.
Amith Shah
மோடி: (ஜெர்க் ஆகி) என்ன அமித் ஷா கூடவா ?.
பரதேசி: உங்களுடைய டிசைனர் வேர் நன்றாக இருக்கிறது. நீங்கள் இப்போது ஒரு ஃபேஷன் ஐகான் தெரியுமா? விட்டால் கேட் வாக்கில் வருவீர்கள் போல் இருக்கிறது.
மோடி: எல்லாம் ரிலையன்ஸ் உபயம்  -நோ, நோ நான் இப்போது சொன்னதை மறந்துவிடு.
பரதேசி: பிரதமராகி முதல் நூறு நாட்களில் உள்ளூரைவிட, வெளிநாடுகளில் அதிக சுற்றுப் பயணம் சென்றிருக்கிறீர்கள். பூடானில் ஆரம்பித்து, சீனா, நேபால், இப்போது அமெரிக்கா.
மோடி: உள்ளூரில் இந்த கிழடுகளின் தொல்லை தாங்க முடியவில்லை.
பரதேசி: கிழடுகள் என்று அத்வானி, முரளி மனோகர், கல்யான் சிங் ஆகியோரைத்தானே சொல்கிறீர்கள்?

மோடி: ஆமாம் ஆமாம், இல்லை, இல்லை.
பரதேசி: அவர்களைத்தான் ஓரங்கட்டிவிட்டீர்களே, ஆட்சியை மட்டுமல்ல, கட்சியையும் பிடித்துவிட்டீர்களே, வாழ்த்துக்கள்.
மோடி: நான் என்ன மன்மோகன்சிங்கா ஏமாற ?.
பரதேசி: ராஜ் நாத்சிங்குக்கு உள்துறையைக் கொடுத்திருக்கிறீர்களே? அது முக்கிய பதவியாச்சே.
Rajnath Singh
மோடி: உள்துறை மந்திரி தவிற மற்ற செயலாளர் மற்றும் ஸ்டாஃப் அனைவரும் என் கன்ரோல் தான். எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யமாட்டார்கள்.
பரதேசி: சுஷ்மாவை ஒருவழியாக வெளிவிவகாரத்துறை கொடுத்து அமைதிப்படுத்திவிட்டீர்களே.
Sushma Swaraj
மோடி: என் வெளிநாட்டுப் பயணங்களை திட்டமிட்டு நிர்வகிக்கும் அவர் ஒரு நல்ல செக்ரட்டரி. ஒப்பந்தங்களை நான் முடிவு செய்ய, கையெழுத்து மட்டும் அவர் போடுவார்.
பரதேசி: இதென்ன ஜெயலலிதா மாடலாக இருக்கிறதே.
மோடி: கண்டுபிடித்து விட்டீர்களே, பல்தேசி கில்லாடிதான்.
பரதேசி: ஜெயலலிதா உள்ளே போனதைப் பற்றி ?
மோடி: சட்டம் தன் கடமையச் செய்தது.
பரதேசி: அப்ப அமித்ஷா வெளியே வந்தது?
மோடி: சட்டம் என் கடமையைச் செய்தது.
பரதேசி: அப்ப சதாசிவம்  அவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்தது?
மோடி: சர்வம் சிவமயம் .அபாரச் செயல் செய்பவர்களுக்கு ஒரு சிறு வெகுமதி. இல்லை இல்லை அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை. ஜனாதிபதியைக் கேளுங்கள்.
பரதேசி: வாஜ்பாய் தான் உங்கள் குருவாமே?
மோடி: எந்த வாஜ்பாய்?
பரதேசி: முன்னாள் பிரதமர், அடல் பிஹாரி வாஜ்பாய்.
மோடி: ஓ அவரா! அவரை நாடு மறந்து நாட்களாகிவிட்டது.
Vaipayee 
பரதேசி: அமெரிக்க பயணத்தின் முக்கிய நோக்கம்?
மோடி: அந்நிய முதலீடுகளை  வரவேற்பது.
பரதேசி: ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் BJPஅதனை எதிர்த்ததே?
மோடி: BJP தானே எதிர்த்தது? நான் எதிர்க்கவில்லையே.
பரதேசி: குஜராத் முன்னேற்றம் வெறும் மாயை என்று சொல்கிறார்களே ?.
மோடி: மாய் சாய்( chai), எல்லாவற்றையும்  மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்களே?
பரதேசி: குஜராத் கலவரத்தில் உங்கள் ஈடுபாடு குறித்து?
மோடி: இன்னும் ஏன் தான் அதை ஞாபகம் வைத்திருக்கிறீர்களோ? கலவரம் நடந்ததால் தானே எனக்கு 'பலவரம்' கிடைத்தது.
பரதேசி: அமெரிக்க கோர்ட் கூட சம்மன் அனுப்பியதாமே?
மோடி: வாங்கச் சொல்லி என்னை வலியுறுத்தினால், ஒபாமா டெல்லி வரும்போது ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானில் அவர் செய்த  கொலைகளுக்கு உச்ச நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பும் என்றேன். வாங்கத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
பரதேசி: உங்கள் ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஏழைகள், விவசாயிகளுக்கு திட்டம் ஒன்றுமில்லை என்று சொல்லுகிறார்களே ?.
மோடி: பணக்காரர்களிடம் பணம் பெருகினால்தானே என்னைப்போன்றஏழைகளுக்கு செலவழிக்க முடியும்.
பரதேசி: BJP-யின் இந்துத்வா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்று திட்டங்களெல்லாம் என்ன ஆச்சு?
மோடி: அதான் எலக்ஷன் முடிந்தாகிவிட்டதே. அடுத்த எலக்ஷசனுக்கு  பார்த்துக் கொள்ளலாம்.
பரதேசி: அப்ப என்னதான் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் ?.
மோடி: வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கும் "ஜன்தன்  யோஜனா" திட்டம்.
பரதேசி: கையில் காசு இல்லாம வங்கிக்கணக்கு ஓபன் செய்து என்ன பன்றது?
மோடி: "க்ளீன் இந்தியா" திட்டம்
பரதேசி: தெருத்தெருவாய் கூ ட்டுவது பொது நலத் தொண்டு. ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு.
மோடி: கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டம்.
பரதேசி: இதைச்சுத்தப்படுத்தி, மற்ற ஆறுகள் போல வெறும் மணல் மேடாக்கப் போகிறீர்களா?
மோடி: நாடெங்கிலும் கக்கூஸ் கட்டும் திட்டம்.
பரதேசி: ஐயையே ஊரே நாறிப்போகுமே. வீடெங்கிலும் கட்டினாலும் பிரயோஜனமுண்டு .
மோடி: "மேக் இந்தியா" திட்டம்.
பரதேசி: எல்லாமே துக்ளக் திட்டங்களாய் இருக்கிறதே ? முதல்ல சைனாவிலிருந்து இறக்குமதியை கன்ட்ரோல் பண்ணுங்க.
ஆமா நீங்க  ஜெயிச்சதுக்கு அதானியும் அம்பானியும் தான் கோடி கோடியாய்  செலவழிச்சாங்களாம். அவங்க எதையும் எதிர்பார்க்காமலா செய்திருப்பாங்க ?.
மோடி: அதானியும் அம்பானியும்  செலவளித்தால்தானே ராஜதானியில் ராஜ்நீதி   நடக்கும் .ஐயையோ என்னப்பா நீ அதானி அம்பானின்னு ஒரே வம்பா நீ?
பரதேசி :என்ன இது சீன , காஷ்மீர் எல்லைப்பிரச்சனை   பத்தி வாயே திறக்க மட்டேங்கரிங்க .மோடி: எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதுவும் செய்ய முடியாது .
பரதேசி :அப்ப இதே நிலைமையில்தான காங்கிரஸ் இருந்தார்கள்.அவங்களுக்கு ஒரு நீதி உங்களுக்கு ஒரு நீதியா ?
சரி பாகிஸ்தான் தினமும் குண்டை போட்டு கொல்றானே , உங்க வீரப் பேச்சுகள் எல்லாம்  என்ன ஆச்சு ?
மோடி: அருண் ஜேட்லி  வரட்டும் , அவருக்கு உடம்பு சரியில்லை .
பரதேசி :அருண் ஜேட்லி  என்ன ஜெட் லீயா ?
Arun Jaitely
பரதேசி :ஆமா  இந்த கருப்புப்பணத்தை கொண்டு வரும் திட்டம் என்ன ஆச்சு ?
மோடி: ( வேறு யோசனையில்)) இப்பதான் செலவளிக்க நிறைய பேர் இருக்காங்கள, தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம்  
பரதேசி: RSS தொடர்பு என்னாச்சு?
மோடி: அதான் சென்னேன்ல RSS,ஷிவ்சேனா,BJP எல்லாத்தையும் கழட்டிவிட்டாச்சுல்ல.
பரதேசி: BJP கூடவா ? அபாரம் அபாரம்.
மோடி: அட விடுப்பா ஒரு ஃப்ளோவில் வந்துரிச்சு ? சரி சரி சீக்கிரம் பேட்டியை ஆரம்பி.
பரதேசி: பேட்டி முடிஞ்சி போச்சு. பாரத் மாதா கி ஜே.
மோடி: என்னாது?  பேட்டி முடிஞ்சிருச்சா. சொல்லவே இல்லை ,ஐயையோ நான் சொன்னவற்றை எல்லாம் மறுக்கிறேன்.
மகேந்திரன் : போதும்   நிறுத்து .
பரதேசி : அடே மகேந்திரா கற்பனைக்கு   கடிவாளம் ஏது?