Monday, May 5, 2014

அட்லாண்டாவில் ஆக்ரோஷம். !!!!!!!!!



முத்துகாமிக்சின் புதிய வெளியீடு கடந்த வாரம் ஏழு காடு, ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வந்து சேர்ந்தது. உடனே பிரித்து இந்திய தபால்தலைகளை கவனமாக வெட்டி பாதுகாத்துவிட்டு படிக்கத்திறந்தால், அட்டகாச வண்ணத்தில் உயர்ரக பேப்பரில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தக்கதை கொடுத்த குதூகலம் எதற்கும் இணையில்லை.
கேப்டன் டைகர் எனக்கு பலமுறை அறிமுகமான ஹீரோதான், என்றாலும் இதில் சிறிது வித்தியாசமான கதைக்களத்தில் ஜொலித்தார். கதாசிரியர் - பிரான்சே கார்டெகியானி.வர்ணம் - ஜேனட் கேல் ,சித்திரம் - காலின் வில்சன்.
ஊரில் இருக்கும்போது படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இப்போது இந்த இடங்களையெல்லாம் பார்த்ததும், இந்த வரலாற்றுப் பின்னனியை அறிந்ததும் கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுத்தன.
அமெரிக்கா முற்றிலும் ஒருங்கிணைக்கப்படாத சமயத்தில் 1864-ல் அமெரிக்காவில் வட மற்றும் தென் பிராந்தியத்திற்கு நடுவே நடந்த 'சிவில் வார்' பின்னனியில் நடந்த சண்டையினூடே நடந்த நிகழ்வாக இந்தக் கதை வருகிறது.
முத்துகாமிக்ஸ் கடந்த 40 வருடங்களில் எப்படியெல்லாம் மாறி இப்போது உலகத்தரமான வடிவம், வர்ணம் மற்றும் அச்சில் வருவது பாராட்டத்தகுந்தது.
இப்போது புதிதாக காமிக்சின் மூலத்தின் கதாசிரியர் மற்றும் ஓவியரையும் அட்டையிலேயே பிரசுரிப்பது, விஜயன் அவர்களை எப்படி நினைவு கூர்ந்து அங்கீகாரம் கொடுக்கிறார் என்பதைக வெளிப்படுத்துகிறது. விஜயன், யு ஆர் சிம்ப்ளி கிரேட். அதோடு அட்டைப் படத்தை வடிவமைத்த உள்ளூர் ஓவியரையும்  குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் தமிழாக்கம் செய்தவரையும் குறிப்பிடலாம்.
Vijayan
விஜயன் உங்களின் தொடர்ந்த ஆர்வத்திற்கும், குறைந்த செலவில் தரமான காமிக்ஸ்களை தொடர்ந்து தருவதற்கும் நன்றி செலுத்தி தலை வணங்குகிறேன்.
அப்படியே நம்ம பழைய ஹீரோக்களையும் இதே மேகஸின் வடிவத்தில், வண்ணத்தில் மறுபதிப்பு செய்தால் உங்களுக்கு புண்ணியம் உண்டாகும். உங்கள் புள்ளை குட்டிகள்  நன்றாக இருப்பார்கள்.

முக்கிய அறிவிப்பு :

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக வருகின்ற மே 10 ஆம் தேதி , நடக்கும் அன்னையர் தின கொண்டாட்டத்தில் திருமதி உமையாள் முத்து அவர்கள் தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் அணித்தலைவராக அடியேன் பேசுகிறேன் . உங்கள் வருகையையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறேன்.

Thursday, May 1, 2014

பைத்தியக்காரர்களும் பரதேசியும் !!!!!!!!!!!!!!

The American College, Madurai
1975 சி.எஸ்.ஐ ஆலயம்தேவதானப்பட்டி.
அன்றைக்கும் ஜபார் வந்து என் அருகில் உட்கார்ந்தான். சி.எஸ்.ஐ பள்ளிதான் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயமாகிவிடும் அல்லது தேவாலயம் தான் திங்கள் முதல் சனி வரை பள்ளிக்கூடமாகிவிடும். ஆரம்பப்பள்ளியின் தலைமையாசிரியர் என் பெரியப்பா ஜெயராஜ் அவர்கள். அவர்கள் தான் ஆலயத்தையும் நடத்துவார்.
நாங்கள் வந்து என் பெரியப்பாவின் மகன்களுடன் சேர்ந்து, உட்காரும் பலகைகளை வரிசையாகப் போடுவோம்.  போட்டு உட்கார்ந்தவுடன் ஜபார் ஓடிவந்து என்னருகில் உட்கார்ந்தான். ஜபார் ஒரு முஸ்ஸிம். மனநிலை சரியில்லாதவன். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கிருந்தாலும் மணியடித்தவுடன் ஓடிவந்துவிடுவான்.  அதன் பின் என் பெரியப்பா தரும் சில்லறைக்காசுகளை சந்தோஷமாக பெற்றுக் கொண்டு ஓடிவிடுவான். அவன் உடைகள் அழுக்காக ஷேவிங் செய்யாத முகத்துடன் இருப்பான். அவன் பேச மாட்டான். ஆனால் ஆலயம் நடக்கும் போது நாங்கள் பாடும்போது ராகமாக "பிபிபிபிபி" (BBB) என்று கூடவே பாடுவான். என்னவோ தெரியலை, எப்போதும் என் பக்கத்தில்தான் உட்காருவான். நான் எழுந்து வேறு இடம் போனாலும் அங்கேயும் வந்து விடுவான். ஆரம்பத்தில் ரொம்பவும் பயந்த நான் அப்புறம் பழகிவிட்டேன். இப்போது நினைத்தாலும், அந்த பிபிபிபி காதில் ஒலிக்கிறது.

1978  உயர்நிலைப்பள்ளி, தேவதானப்பட்டி
“டே ய் மகேந்திரா மே மாச லீவுக்கு மாமா வீட்டுக்கு மெட்ராசுக்குப் போறோம்".
"உங்க மாமா வீடு எங்கடா இருக்கு?”
'கீழ்ப்பாக்கம்'
"அங்கதாண்டா பைத்தியக்கார ஆஸ்பத்திரி இருக்கு பார்த்துப்போடா".
மாமா வீட்டுக்கு வந்த சமயம், கீழ்ப்பாக்கம் தெருவில் நடக்க ரொம்ப பயமாயிருக்கும், ஒரு வேளை பைத்தியக்காரர்கள் தப்பித்து வந்துவிட்டால் என்னாவது என்று.

1981-அமெரிக்கன் கல்லூரி மதுரை - NSS
Meenakshi Amman Temple
என்னுடைய நண்பர்கள் எல்லோரும் மீனாட்சியம்மன் கோவில் கூட்டத்தை ஒழுங்கு செய்ய மிகுந்த சந்தோஷமாகப் போனார்கள். மீனாட்சியம்மன் கோவில் டூட்டிக்கு எப்பவும் போட்டி இருக்கும். எதுக்குன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா? அம்மன் தரிசனம் அமோகமாய் நடக்கும் இடமல்லவா.ஆனால்  என்னவோ தெரியலை என்னைக்கூப்பிட்ட NSS தலைவர், "ஆல்ஃபி நீ பாலமந்திர் மெண்டலி ரிட்டார்டடு ஹோமுக்குப்போ"என்றார்.

1985 சமுகப்பணிக்கல்லூரி, மதுரை  
Madurai Institute of Social work
மெடிக்கல் & சைக்கியாட்டிரிக் (Medical & Psychiatric) சோசியல் வொர்க் என்ற சப்ஜக்ட் படிக்கும் சமயம் மற்ற எல்லோரும் ஹாஸ்பிடலில் வேறு வேறு டிபார்ட்மெண்டுக்குப் போனார்கள். என்னைக் கூப்பிட்ட பேராசிரியர் கண்ணன், "ஆல்ஃபி உனக்கும் ரேகாவுக்கும் ராஜாஜி மருத்துவமனை என்றார்".
"என்ன டிபார்ட்மெண்ட்?," என்றேன்
"மன லப்பிரிவு", என்றார்.
ரேகா ஒன்றும் சொல்லவில்லை. எனக்குத்தான் என்னடாது எங்க போனாலும் இது தொடருது என்றிருந்தது. அங்கு நிறைய கதைகள் தெரிந்து கொண்டோம். பின்னர் சொல்கிறேன்.
1986 - பேராயர் இல்லம் மதுரை.
"ஆல்ஃபி, நீ சோஷியல் வொர்க் முடிச்சுட்டேல்ல", என்றான் ஜேம்ஸ்.
 'ஆமடா ஃபர்ஸ்ட் கிளாஸ்ல"என்றேன்.
"போய் எங்கப்பாவைப்பாரு, ஒரு வேலையிருக்கு".
உற்சாகத்தோடு அப்போதிருந்த மதுரை பிஷப், ஜேம்சின் அப்பா டேவிட் போத்திராஜீலுவைப் போய்ப் பார்த்தேன்.
"வா ஆல்ஃபி உட்காரு".
"பரவாயில்ல இருக்கட்டும் ஐயா"
"ஜேம்ஸ் சொன்னான், சோஷியல் ஒர்க் முடிச்சுட்டாயாம்ல ரொம்ப சந்தோஷம், ஜேம்சைக் கூட சோசியல் ஒர்க்தான் அனுப்பலாம்னு இருக்கேன். சிவகாசி சாட்சியாபுரத்தில் ஒரு சோசியல் ஒர்க்கர் வேலை இருக்கு போறியா.
"நீங்க எங்க சொன்னாலும் போறேன் ஐயா".
ஸ்டெனோவைக் கூப்பிட்டு மடமடவென்று டிக்டேக் செய்ய, 10 நிமிடத்தில் அவரின் தனிப்பட்ட லெட்டர்பேடில் ரெக்கமென்டேஷன் லெட்டர் வந்தது. அழகாக கையெழுத்திட்டு, “ஆல் தி பெஸ்ட்", என்று சொல்லிக் கொடுத்தார்.
என் செட்டிலேயே வேலைகிடைத்த முதல் ஆள் என்று பெருமையுடன் வெளியே வந்து ஆவலாய்த் திறந்து பார்த்தேன்.
பெறுபவர், ஹெட்மாஸ்டர், ஸ்கூல் ஃபார் தி டெஃப் அன்ட் மென்டலி ரிட்டார்டு" என்று போட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தேன்.

1988, கீழ்ப்பாக்கம் சென்னை.
தேவதானப்பட்டி வந்திருந்த என்னைப்பார்த்து, என் மாமா துரைப்பாண்டியன் சொன்னார், "சேகர் நீ மெட்ராசுக்கு வந்துரு, உன் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும்". மெட்றாஸ்னா எனக்கு ரொம்பப் பயம் ஆனாலும் ஏதோ தயக்கத்துடன் சென்னை வந்துவிட்டேன். ஒரு மாதமாகியும் வேலை எதுவும் அமையவில்லை. அன்று மாலை என் மாமா பெண் வசுதா வந்து சொன்னது. "ஷேகர் என் ஃப்ரண்ட் SCARF ல் வேலை செய்கிறான் அங்கே ஒரு வேலையிருக்கு.
SCARF (The Schizophrenia Research Foundation) பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
"வேலை SCARF லயா" என்றேன் தயக்கத்துடன்.
"இல்லை வேறு இத்திலாம், நீ போய்ப்பாறேன்".'
நல்ல வேளை என்று   நினைத்துக்கொண்டு போய்ப்பார்த்தேன்.
வேலை இருந்தது, இண்டர்வியூ இருந்தது, கிடைத்தும் விட்டது. எங்கு தெரியுமா? சென்னை அரசினர் மருத்துவமனை மனலப்பிரிவு பிரபல மனநல மருத்துவர் Dr.சுப்ரமணியம்  (திருமதி. கரியாலி IAS ன் கணவர்) அவர்களின் கீழே ICMR (Indian Council of Medical Research) பிராஜக்டில் ரிசர்ச் ஆஃபிசர் (Research Officer).

நியூயார்க் 
அதன் பின்னர் இன்னும் ரெண்டு டிப்ளமோ முடித்து மனித வள மேம்பாட்டுக்கு மாறி (Human Resources) சில நிறுவனங்களில் வேலை செய்து நியூயார்க் வந்தேன். இனிமேல்  மனநல  நிறுவனங்களில் வேலை செய்ய வாய்ப்பே இருக்காது என்று நிம்மதியாய்  இருந்தேன்.
நியூயார்க்கில் மாலைக்கல்லூரியில் மாஸ்டர் இன் டிவினிட்டி (Master in Divinity)படித்து முடித்து பட்டம் பெற்ற சில நாட்களுக்குள் பாஸ்டர் கிறிஸ்டோபர் பொன்னுராஜ் அவர்கள் போன் செய்தார்.
"ஆல்ஃபி, பிரான்க்ஸில்  (Bronx) சனிக்கிழமை வேலை செய்ய ஒரு சேப்பலின் (Chaplain) வேணுமாம், நீ போறியா".

“ஸ்யூர் பாஸ்டர் அட்ரஸை ஈமெயிலில் அனுப்புங்கள் ரொம்ப தேங்க்ஸ் பாஸ்டர்". 
Bronx Psychiatry Center

சற்று நேரத்தில் ஈமெயில் இன்பாக்ஸில்  வந்து விழுந்தது. சாப்ளின்  அட் பிரான்க்ஸ் சைக்கியாட்ரி  சென்ட்டர் (Bronx Psychiatry Center).

முக்கிய அறிவிப்பு :

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக வருகின்ற மே 10 ஆம் தேதி , நடக்கும் அன்னையர் தின கொண்டாட்டத்தில் திருமதி உமையாள் முத்து அவர்கள் தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் அடியேன் பேசுகிறேன் . உங்கள் வருகையையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறேன்.



Thursday, April 24, 2014

நியூயார்க்கில் மகாநதி ஷோபனா !!!!!!!!!!!!!


தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதத்திலும், சித்திரைத் திருநாளைக் கொண்டாடும் விதத்திலும், நியூயார்க் தமிழ்ச்சங்கம், மகாநதி ஷோபனா அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையின் டிசம்பர் கால இசை சீசனில் "சென்னையில் திருவையாறு" நிகழ்ச்சியில் ஷோபனா அவர்களின் கச்சேரியை கண்டும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன். எனவே ஆவலோடு சென்றேன்.
கடந்த சனியன்று மாலை (ஏப்ரல் 19, 2014) குயின்சில் உள்ள ஃபிளஷிங்கில்  உள்ள ஒரு பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்க பொறுப்பாளர் ஆல்பர்ட் செல்லத்துரை அவர்கள்  வரவேற்று டிக்கெட்டுகள் வழங்கினார். அரங்கத்திற்குள் என்னையும் சேர்த்து ஒரு ஐம்பது பேர்தான் இருந்தனர். கர்நாடக இசை ரசிகர்கள் நியூயார்க்கில் அவ்வளவுதானா என்று ஒரு வருத்தம் வந்தாலும், ஒருவேளை வழக்கம்போல் தாமதமாக வருவார்கள் என நினைத்துக்கொண்டேன்.
அதற்குள் பரதேசி பிளாக்கை படித்த, கேள்விப்பட்ட பலரும் வந்து கைகுலுக்கினார்கள். குறிப்பாக தற்போதைய தலைவர் விஜயகுமார், செயலாளர் ராம்மோகன் ,பொறுப்பாளர்கள் காஞ்சனா பூலா ,வனஜா பார்த்தசாரதி ஆகியோர்.
புதிதாக பொருளாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ரங்கா புருஷோத்தமன் என்னுடைய நெருங்கிய நண்பர்.  CPA முடித்து ஒரு நிதிநிறுவனத்தின் தலைவராக இருப்பவர். சரியான ஆளைத்தான் பொருளாளராகப் போட்டிருக்கிறார்கள்.
Ranga  on my right Bala on the left

மேடை அலங்காரங்கள் மற்றும் செளன்ட் சிஸ்டம் ரெடியாக இருந்தது. பக்கவாத்தியக் கலைஞர்களும் சுருதி சேர்த்து ரெடியாக, தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் புடை சூழ தங்கத்தாரகையாய் வைரங்கள் ஜொலிக்க மேடையேறி, விரிந்த தாமரையாய் அமர்ந்து, மலர்ந்து தகத்தக தகாயமாய் மின்னும்போதே பாதி மக்களின் மனதைக் கவர்ந்துவிட்டார் ஷோபனா.
குரலுக்கு அனுதினம் சாதகம் செய்தால்தான் சாதனை செய்ய முடியும் என்பார்கள். சப்பணமிட்டு மூன்று மணிநேரம் உட்கார்ந்து பாடுவதும் சாதனைதான். நம்மால ஒரு பத்து நிமிஷம் கூட உட்கார முடியாது.
கச்சேரிகளில் இப்போதெல்லாம் தம்புராவைப் பார்க்க முடிவதில்லை, எல்லாமே எலக்ட்ரானிக் ஸ்ருதிப்பெட்டிதான். ஸ்ருதிப்பெட்டியை ஆன் செய்ததும் பக்க வாத்தியங்களான வயலின், மிருதங்கம் மற்றும் தபேலாக்காரர்களும் தட்டிக்கொட்டி சுருதி சேர்த்துக்கொள்ள, ஷோபனா மெதுவாக இதழ் பிரித்து ஆலாபனையை ஆரம்பித்தார்.
பிள்ளையார் சுழியாக நாட்டை ராகத்தில், ஆதிதாளத்தில் "மஹா கணபதிம்" வந்து விழுந்தது. இதே பாடலை பலமுறை பலபேர் பாடியதைக் கேட்டிருக்கிறேன். குறிப்பாக சிந்துபைரவியில் ஜேசுதாஸ் பாடியபின் இந்தப்பாட்டு மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் ஷோபனா இந்தப் பாடலை எளிமையாகவும், அதே சமயம் இனிமையாகவும் கையாண்டார். பாட ஆரம்பித்தபோது பக்க வாத்தியங்களின் இசை, ஷோபனாவின்  குரலை அமிழ்த்த முயல, PA சிஸ்டத்தில் ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்தவுடன்  , கச்சேரி களை கட்டியது.
இரண்டாவதாக ஒரு தமிழ்ப்பாடலாக "மாமயூர மீதிலேறி வா" என்ற முருகன் பாடல். இது பிலஹரி ராகத்தில் தி தாளத்தில் நித்யஸ்ரீ பாடிப் புகழடைந்த ஒரு பாடல்.
அதன்பின்னர் ஊத்துக்காடு வெங்கட்ட சுப்பு ஐயர் இயற்றிய "அலைபாயுதே" வந்தது. ராகம் கானடா என்றாலும் தாளம் அதே ஆதிதான். ஒரு பாடலுக்கு பக்க வாத்தியங்களாக மிருதங்கம், தபேலா இரண்டையும் ஒரே சமயத்தில் வாசிக்கும்போது இருவருக்கும் கோஆர்டினேஷன் மிக முக்கியம். இருவரும் அருமையாக வாசித்தார்கள்.
அடுத்த பாடல் தியாகராயர் கீர்த்தனைகளில் உலகப்புகழ் பெற்ற "மானச சஞ்சரரே" என்ற பாடல் ஷோபாவுடைய மெல்லிய குரலில் தேனாக ஒலித்தது. ஸ்யாமா ராகத்தில் மறுபடியும் தி தாளத்தில் வந்த பாடல்.  
பக்கத்திலிருந்த நண்பரிடம் சொன்னேன், "மிருதங்கத்தையும் தபேலாவையும் மறைத்தாற் போல இந்த மானிட்டரை வைத்துள்ளார்கள்.மானிட்டரை சற்றே நகர்த்தினால் நன்றாக இருக்கும்", என்று. என்ன ஆச்சரியம் நான் சொன்னது காதில் விழுந்ததுபோல் புதிதாக போட்டாகிராபர் அவதாரம் எடுத்துள்ள ஜெர்சி இசைக்குழுவைச் சேர்ந்த கிடாரிஸ்ட் ரமேஷ் ராமநாதன் போய் மானிட்டரை தள்ளி வைத்தார். இப்போது மேடையின் முழு வியூவும் நன்றாகத் தெரிந்தது.

அதை அடுத்து வந்த மூன்று பாடல்களும் தமிழ்ப்பாடல்கள்தான். குறிப்பாக நம்ம ராஜாஜி (ஆம் அவரேதான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்) அவர்கள் எழுதி M.S.சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா சபையில் பாடிப்புகழடைந்த "குறையொன்றும் இல்லை" என்ற பாடல், கொஞ்சம் கூட இமிட்டேட் செய்யாமல் பாடினார். ராகமாலிகையில் அமைந்த இந்தப்பாடலும் ஆதிதாளம்தான். குறையொன்றும் சொல்லமுடியாது.
என்ன இது எல்லாமே ஆதிதாளமாக வருகிறதே, பக்க வாத்தியக்காரர்களுக்கு வேறு தாளம் வராதா என்று சந்தேகப்பட்ட சமயத்தில், அதைப்போக்கும் விதமாக ரூபக தாளத்தில் பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே" ஊற்றாக வந்தது. ராகமாலிகையை அநாயசமாகக் கையாண்டார் ஷோபனா.
Rammohan,Vijaykumar,Kanjana with Shobana 

சிறியதொரு இடைவேளையில், தலைமை விருந்தினராக வந்திருந்த நியூயார்க் வாழ் சாவித்திரி ராமநாதன் (பாம்பே சிஸ்டர்சின் இளைய சகோதரி) வந்து ஷோபனாவை கெளரவித்து, தமிழ்ச்சங்கம் சார்பாக “தமிழ் இசைப்பேரொளி”  என்று விருதை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த கிடார் பிரசன்னாவும் கெளரவிக்கப்பட்டார். இப்போது இவர் நியூயார்க்கில் வாழ்கிறார். வருங்காலத்தில் தமிழ்ச் சங்கத்தில் அவருடைய கச்சேரியை எதிர்பார்க்கலாம்.
Guitar Prasanna 

இடைவேளை முடிந்ததும் ஷோபனா பாடிய பாடல் “நீலகண்ட கருணாகரனே" என்ற பாகவதரின் பாடல். சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும் ஷோபனா இதே பாடலைப் பாடியதை பலபேர் பார்த்திருக்கலாம். இப்போது நேரில் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பின்னர்  "தந்தனானான" என்ற காவடிச்சிந்துப் பாடல் வந்து முடிய, சபையில் யாரோ சினிமாப்பாடல் பாடச்சொல்லிக் கேட்டனர். அப்போது, ஷோபனா அவர்கள் சிறுவயதில் மகாநதியில் பாடிய, இளையராஜா இசையில் வந்த "ஸ்ரீரங்க ரங்கநாதனே" என்ற பாடலைப் பாடினார். வல்லிசையிலிருந்து மெல்லிசைக்குத் தாவிய குரல் இனிமையாகவே ஒலித்தது. திரையிசையில் இவர் ஏன்  அதிகம் சோபிக்கவில்லையென வருத்தமாய் இருந்தது.       இறுதியில் முத்தாய்ப்பாக ஸ்ரீ அருணகிரி சுவாமிகளின் திருப்புகழ் பாடல்களில் TMS பாடி மிகப்பிரபலமடைந்த "முத்தைத்திரு பத்தி திருநகை " என்ற பாடலை கொஞ்சம் கூட மூச்சு வாங்காமல், அநாயச சாதகத்தில் பாடி பின் “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் ” பாடி முடிக்க கச்சேரி இனிதே முடிந்தது.
ஆரம்பத்தில் இருந்ததைவிட நிறையப்பேர் வந்திருந்தாலும் அரங்கம் பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
கச்சேரியின் பெரும் வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் மூன்று பக்க வாத்தியங்கள் தான். வயலின் வாசித்த கெளரி ராமகிருஷ்ணன் மிகுந்த அனுபவசாலி.  வானொலியிலும் தூர்தர்ஷனிலும் டாப் கிரேட் ஆர்டிஸ்ட். பல கர்நாடக விற்பன்னர்களுக்கு வாசித்தது மட்டுமல்லாது, வயலின் தனிக்கச்சேரியும் ஏராளமாகச் செய்திருக்கிறார். இங்கேயே வாழ்பவர். வயலின் தனி ஆவர்தனத்தில் வாசித்து அசத்த, பாராட்டும் வண்ணம் ஷோபனா பலமுறை புன்னகைத்தும், பதில் புன்னகையோ பேச்சோ எதுவுமில்லை. ஆனால் மாறாக அவருடைய வயலின் பேசியது, புன்னகைத்தது, சிரித்தது. 
தபேலா வாசித்த ரவீந்திர குமார்தாஸ், கனெக்டிகட்டிலிருந்து வந்திருந்தார். தமிழரல்ல, ஆனால் ஆடாத  குடுமியுடனும் அசையாத உடம்புடனும் விரல்கள் மட்டும் நர்த்தனமாட அருமையான நாதம் பிறந்தது.
யாழ்ப்பாணம் செந்தூரான்

மிருதங்கம் வாசித்த “யாழ்ப்பாணம் செந்தூரான்” இலங்கைத் தமிழன். சிறுவயதிலிருந்தே எனக்குத் தெரியும். இப்போது வளர்ந்த அழகிய இளைஞன். அவனுடைய வாசிப்பைப் பார்த்து நான் மட்டுமல்ல வந்திருந்த அனைவரும் அசந்துபோயினர். விரல்கள் புரோகிராம் செய்யப்பட்டு தானியங்கும் ரோபோ போல் வாசிக்க வாசிக்க, விரலசைவில் பெரும் வித்வத்வம் தெரிந்தது. உமையாள்புரம் சிவராமனின் சீடனல்லவா, சொல்லவா வேண்டும்.
முழுவதுமாகவே பக்திப்பாடல்கள் பாடாமல் பாரதியார், கவிமணி என்று சிலரின் தேசபக்திப் பாடல்களையும் பாடியிருக்கலாம் என்று நினைத்தேன். அதோடு மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பொதுவான ஓரிரு கிருதிகளை பாடியிருக்கலாம். தமிழ்ச்சங்கத்தில் மற்ற மதத்தினரும் இருக்கிறார்களே.
எல்லோருக்கும் பெரும்பாலும் தெரிந்த பாடல்களே என்றாலும், வந்த அனைவருமே கர்நாடக சங்கீத ரசிகர்கள் என்று சொல்லமுடியாது. எனவே வழக்கமில்லை என்றாலும், யாருடைய பாடல் என்றும் ராகம் தாளத்தையும் சொல்லியிருந்தால் என்னைப்போல குறைந்த அறிவுள்ள பரதேசிகளுக்கு பிரயோஜனமாயிருந்திருக்கும். நன்கு அறிமுகமான பாடல்கள் என்பதும் அதிகம் தமிழ்ப் பாடல்கள் என்பதும் பிக் பிளஸ்.
மந்திர ஸ்தாயிலும் சரி, மத்திய ஸ்தாயி, தரஸ்தாயிலும் ஒரே கனத்துடன் இனிமையாக ஒலித்தது ஷோபனா குரல். குறிப்பாக மேல் பஞ்சமத்தில் மேலும் இனிமை சேர்ந்தது. பிர்காக்கள் பனியில் சறுக்கும் இக்லூ வண்டிபோல் அனாசயமாக வழுக்கி வழுக்கி விழ, ஸ்வரப்பிரஸ்தாரங்கள் துல்லியமாக ஒலித்தன. மொத்தத்தில்  காதில் தேன் பாய்ந்த கச்சேரி என்றே சொல்லலாம்.

மகாநதி ஷோபனா சிறுவயதிலிருந்து, 1500 பாடல்கள் அடங்கிய 130 ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறாராம். அவர் மேன்மேலும் வளர்ந்து புகழ்பெற பரதேசியின் வாழ்த்துக்கள். நல்ல ஒரு  மாலைப்பொழுதினை வழங்கிய நியூயார்க் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் .


பின்குறிப்பு : பரதேசி, துருக்கி நாட்டுக்கு  பரதேசம் போவதால் வரும் திங்கள்கிழமை பதிவு  வராது. மறுபடியும் உங்களை வரும் வியாழனன்று சந்திக்கிறேன்.நன்றி