Monday, December 16, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 7: கறுப்புப்பூனையும் கற்கோட்டையும் !!!!!!!!!!!!!

     அது கவர்னரின் மனைவி வளர்க்கும் பூனையாம் .” மிகவும் பெருமை கொண்டது, யாரையும் மதிக்காது, மிகுந்த கோபம் கொண்டது," என்று  அவள் சொன்னபடியே அது நிமிர்ந்து கழுத்தை உயர்த்தி டம்பமாக யாரையும் சட்டை செய்யாமல் சீறிக்கொண்டே ராஜ நடை  நடந்து கடந்தது. கவர்னர் வீட்டு பூனையல்லவா? நம்மூர் தலைவர்கள் பாதுகாப்புக்காக "பிளாக் கேட்"  வைத்துள்ளது போல, இங்கே நிஜமாகவே கறுப்பு  பூனையை  வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
        கோட்டைக்குள் உள்ள மற்ற பழைய கட்டிடங்கள் அரசாங்க அலுவலகங்களாக செயல்படுகின்றன. உயரமான கம்பி கேட்டுகளை விட்டு வெளியே வந்தால் பழைய சேன் வான்  நகரின் தெருக்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. 
வீடுகள் எல்லாம் நம்மூர் போல் செங்கற்களாலும், காரையாலும் கட்டப்பட்டவை. பெரும்பாலான அமெரிக்க நகரங்கள் போல இல்லை. நம்மூர் போலவே கலர்கலரான பெயின்ட்கள் அடிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை கடைகளாக மாற்றப்பட்டு இருந்தன. ஆனால் தெருக்கள் மிகவும் குறுகலானவை.

        அங்கே தற்செயலாக "ஆயுர்வேதிக்" என்ற கடையைப் பார்த்தோம். உள்ளே சென்றால் நம்மூர்ப் பொருட்கள் எல்லாம் இருந்தன. அரிசி, பருப்பு முதல் எண்ணெய் சோப் என சகலமும் இருந்தன. ஆனால் உரிமையாளரோ அல்லது கடையில் வேலை பார்ப்பவர்களோ நம்மவர்கள் இல்லை.
 மரவள்ளி சிப்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டேன். இன்னும் சில அடிகள் சென்றால், மற்றுமொரு இந்தியக் கடையில் சேலை கட்டிய பூனைக்கண் ஸ்பானிஷ் பெண் ஒருத்தி, கைகளைக் குவித்து “நமஸ்தே”, என்றாள். உள்ளே ஒரு குட்டி "பூம்புகார்" போல கலைப்பொருட்களால் நிரம்பியிருந்தது.சற்றுநேரத்தில் அதன் ஓனர் வந்தார். டெல்லிக்காரராம், நியூயார்க்கில் வாழ்ந்து சமாளிக்க முடியாமல் பல வருடங்களுக்கு முன் இங்கு வந்திருக்கிறார். விலை படுபயங்கரமாய் இருந்தது. ஒரு "மதராசியைப்" பார்த்ததில் மகிழ்ச்சி என்றார்.

        நன்றி கூறிவிட்டு வெளியே வந்து சில தப்படிகள் நடந்தால் "தந்த்ரா " இண்டியன் ரெஸ்டாரன்ட் என்று இருந்ததைப் பார்த்தேன்.       செஃப் ரமேஷ் பிள்ளை என்று மூவர்ணத்தில் போட்டிருந்தது. தமிழ்ப்பெயர் போல தெரிந்தது.   நேற்று தேடியலைந்து "மும்பை"யில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது ஞாபகம் வர, இனிமேல் இப்படி இந்திய உணவுக்காக அலையக் கூடாது என்று எடுத்த சபதம் "தந்த்ரா" வைப் பார்த்ததும் கரைந்து போனது. மணி 11தான் ஆகிறது. இன்னொரு கோட்டையையும் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என நினைத்து மேலேறினோம். கடலோரத்தில் உயரே இருந்த பாறைகளின் பக்கத்தில் இருந்த ரோட்டோரத்தில் நடந்தால் பிரமாண்டமான கோட்டை வந்தது.

கேஸ்டில்லோ சேன் ஃபெலிப்பே  டெல் மோரோ (Castillo San Felipe del Morro)
        இந்த அழகான கற்கோட்டை ரோட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது. முழுவதும் வெட்டவெளி. கீழ்ப்புறத்தில் இருந்தது “ஷட்டில்” ஒன்று வரும் என்றார்கள். என் மனைவி காத்திருக்கலாம் என்றாள். நேரமில்லை நடந்துவிடுவோம் என்று சொல்லி, கிட்டத்தட்ட மூவரையும் இழுக்காத குறையாக அழைத்துச்சென்றேன்.

 நல்ல பெஞ்ச் போட்டிருந்த ஒரு சிறிய அழகிய சேப்பலில் மூன்று பேரும் போய் உட்கார்ந்து கொண்டு, "நீ போய்ப் பார்த்துவிட்டு வா" என்று அனுப்பி விட்டார்கள். உள்ளே போகுமுன் ஒரு ஜில்லிட்ட AC ரூமில் குறும்படம் பார்த்தேன்.
        ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு கடல் வழியாக வந்த வியாபாரக் கப்பல்களுக்கும், போர்க்கப்பல்களுக்கும் சேன் வான் தான் முதல் ஸ்டாப். இப்புதிய உலகத்திலிருந்து தங்கமும் வெள்ளியும் தாராளமாக ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதால், பல நாடுகளுக்கு இத்துறைமுகத்தின்  மேல் ஒரு கண் இருந்தது. இப்படி கரீபியன் கடலில் முக்யத்துவம் வாய்ந்த இந்த கடற்பகுதியினை பாதுகாப்பதற்கு கட்டப்பட்ட பல கோட்டைகளுள் "சேன் ஃபெலிப்பே டெல் மோரா"மிகவும் முக்கியமான ஒன்று.        இன்றும் கம்பீரமாகவும், உறுதியாகவும் நிமிர்ந்து நிற்கும் இந்தக் கோட்டை பல போர்களை சந்தித்த கோட்டையாகும்.

        இதன் சிறப்பம்சம் 'கரிட்டாஸ்' (Garitas) என்று சொல்லக்கூடிய "காவல் கோபுரங்கள் ஆகும்." கோட்டையின் ஒவ்வொரு மூலைகளிலும் சிறியதாக வட்டவடிவில் இருக்கும் இந்த காவல் கோபுரங்களில் சிப்பாய்கள் நின்று கொண்டு இரவும் பகலும் கண்காணிப்பார்கள். துப்பாக்கி வைத்துச்சுட துவாரங்களும் இதில் உண்டு. ஆனால் எதிரிகள் இவர்களை சுடமுடியாது. இதன் சிறப்புத்தன்மையால், 'கரிட்டாஸ்' போர்ட்டோரிக்கோவின் தேசியச் சின்னமாக விளங்குகிறது. தீவிர கண்காணிப்பால் கடற் கொள்ளைக்காரர்கள் கூட நெருங்க முடியவில்லை.
Garita at paseo del morro old san juan
ஆங்கிலேயப் படையெடுப்பு
        பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் மன்னனால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, முதன்முதலாக ஆங்கிலேயர்களால்தான்  தாக்கப்பட்டது. இப்படி ஒரு செல்வம் கொழிக்கும்  பூமி இருப்பதை கேள்விப்பட்டால் ஆங்கிலேயன் சும்மா இருப்பானா?
Sir Francis Drake
 ஆனால் கி.பி.1595-ல் சர் ஃபிரான்சிஸ் டிரேக் (Sir Francis Drake) என்பவரின் தலைமையில் வந்த போர்க்கப்பல்கள், டெல் மோரோ கோட்டையின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றன.
Lord George Clifford
        அவர்கள் மீண்டும் கி.பி.1598ல் அப்போதைய கம்பர்லேண்ட் ஏர்ல், ஜார்ஜ் கிளிஃபோர்டு (Earl of cumber land Lord George Clifford) அவர்கள் தலைமையில் வந்து ஒரு வழியாக எதிர்ப்பை சமாளித்து கரையில் இறங்கி கோட்டையை முற்றுகை இட்டனர். டெல் மோரோ கோட்டை இந்த முற்றுகையை பல மாதங்கள் சமாளித்தது. இதற்கிடையில் ஆங்கிலேயப் படையினர் பலர் நோய் வாய்ப்பட்டு இறக்கத்துவங்க, வேறு வழியின்றி ஜார்ஜ் முற்றுகையைக் கைவிட்டு தாய்நாடு திரும்பினர்.
டச்சுப்படையெடுப்பு
File:Combate de San Juan 1625, Eugenio Caxés.jpg
Seventeenth-century Spanish painting commemorating Enrico's defeat at San Juan de Puerto Rico
        பின்னர் கி.பி.1625-ல் கேப்டன் பல்டுய்னோ என்ரிக்கோ (Captain Balduino Enrico) தலைமையில் டச்சுப்படைகள் வந்து சேர்ந்தன. டெல் மோரோவை அசைக்க முடியவில்லை. பின்ன சும்மாவா, இதன் சுவர்கள் 18 அடி அகலம், உயரம் கடல் மட்டத்திலிருந்து 140 அடியாகும்.
        டச்சுக் கப்பல்களை நோக்கி டெல் மோராவின் ஸ்பானிய பீரங்கிகள் நெருப்பை உமிழ, தரை வழி ஏறி வந்த டச்சுப்படைகளை சேன் வானின் மக்கள் படை துவம்சம் செய்ததில் அறுபது டச்சு வீரர்கள் அங்கேயே மரணமடைந்தனர். ஸ்பானிய படையை வழிநடத்திய கேப்டன் வான் டி அமிஸ்குட்டா (Juan de Amezquita)வுக்கும் டச்சு கேப்டன் என்ரிக்கோவுக்கும் நேரடியாக நடந்த வாள் சண்டையில்,  அமிஸ்குட்டாவின் வாள்முனை என்ரிக்கோவின் கழுத்தைப் பதம் பார்த்தது. அதோடு மக்கள் படை டச்சுக்கப்பல்களுக்கும் சென்று அங்கிருந்த எல்லோரையும் கொன்றோ சிறைபிடித்தோ, டச்சுத்தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தனர். ஆத்திரம் கொண்ட  என்ரிக்கோ வழியில் இருந்த ஃபோர்ட்டோலிசாவை தீக்கிரையாக்கினான். கோபம் கொண்ட அமிஸ்குட்டா தன் அனைத்துப் படைகளையும் திரட்டி என்ரிக்கோவை ஓட ஓட விரட்ட டச்சுப்படையெடுப்பு அத்தோடு முடிந்தது. அவர்கள் மீண்டும் வரவேயில்லை. ஆனால் ஆங்கிலேயர் மீண்டும் வந்தார்கள் .


பயணம் தொடரும் @@@@@@@@@@@@@@@

Thursday, December 12, 2013

காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!!!!!! பகுதி 1


கடுக்கு மிட்டாயும் முதற்காதலும்


   அன்று மாலை மறுபடியும் போன் செய்தாள் என் மனைவி. ஒரு நாளைக்கு மூன்று முறை போன் செய்வது அவள் வழக்கம். காலையில் 9.30 மணிக்கு போன் செய்து, ஒழுங்காக நேரத்திற்கு ஆபிசுக்கு சென்றாயா? 1.30 மணிக்கு போன் செய்து சாப்பிட்டாச்சா? என்றும் மாலை 5 மணிக்கு போன் செய்து எப்போது கிளம்புகிறாய்? என்றும் மூன்று தடவை வரும். அன்று நான்காவது தடவை வந்தது. "வரும் வழியில் ஜாக்சன் ஹெய்ட்சில் கத்தரிக்காய் வாங்கி வந்தால், மொச்சைக்குழம்பு செய்கிறேன்," என்றாள். மொச்சைக்குழம்புன்னா எனக்கு உசுரு. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. சொன்னதும் எச்சில் ஊறியது. என் மனைவி கல்யாணத்திற்குப்பின்னால் கற்றுக்கொண்டாள். நன்றாகவே இருக்கும்.  ஆனாலும் என்னோட அம்மா வைப்பது அதை விட நல்லா  இருக்கும். ப்ளீஸ் அவள்ட்ட சொல்லிராதீங்க. உடனே கிளம்பி, ஜாக்சன் ஹெய்ட்சின் "அப்னா பஜார்" வந்து சேர்ந்தேன். படேலுக்கு போட்டியாக, பஞ்சாப் பையன் (சீக்கியன் அல்ல) இதனை ஆரம்பித்து, குறுகிய காலத்தில் நான்கு பிராஞ்ச் துவங்கி  வளர்ந்து விட்டான். எங்களுக்கு தேவையான, பொன்னி அரிசி, ஆச்சி மசாலா, ருச்சி ஊறுகாய் என இங்கே சகலமும் கிடைக்கும்.

அன்றைய தினம், நல்ல பிஞ்சாக ரெண்டு பவுண்ட் “எக் பிளான்ட்” அதாங்க கத்தரிக்காய், (பிரிஞ்சால் என்றால் யாருக்கும் தெரியாது) வாங்கிக்கொண்டு, வழக்கம் போல் ஸ்நாக்ஸ் பக்கம் போனேன். “அம்மா கப்பக்கிழங்கு சிப்ஸ்” (இது வேற அம்மா), உடுப்பி சீடை, ஜானகி பட்டர் முறுக்கு, பொறி உருண்டை மற்றும் கடலை மிட்டாயை எடுக்கும்போதுதான் அதைப் பார்த்தேன். கிட்டப்போய் எடுத்துப்பார்த்தால், அதேதான், கடுக்கு மிட்டாயேதான். என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவசர அவசரமாக பிரித்து, ஒரு வில்லையை எடுத்து, இரு விரல்களால் பிடித்து அப்படியே நாவில் இட்டேன். அந்த இனிப்பான சாறு, என் தொண்டையை மட்டுமல்ல, என் இதயத்தையும் நனைக்க, என் மனம்   ரீபூட்  ஆகி பின்னோக்கி விரைந்தது @@@@@@@@@@@@@@@.
            நான் வளர்ந்த ஊராகிய தேவதானப்பட்டியில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளியில்  ஏழாவது படித்துக் கொண்டிருக்கும் காலம். இன்டர்வெல் மணி அடிச்சதும்  எட்டாப்பு வாத்தியார் (அவர்தாங்க என் அப்பா) தன் மேஜையின் ஓரத்தில வச்ச  இரும்புப்பத்துக்காசை நாசூக்காக எடுத்துக்கிட்டு  குருசாமி நாடார் கடைக்கு ஓடினேன். (ஹீம் அந்தப்பத்துக்காசு தந்த பரவசம் இப்ப பத்தாயிரம் டாலரில் கூட இல்லையேயேயே யே). புதிதாக போடப்பட்ட சவ்வு மிட்டாய்கள், கலர் கலராக மின்னி அழைச்சாலும், அதனைப்புறக்கணித்து, ஐந்து பைசாவுக்கு ஐந்து கடுக்கு மிட்டாய்களை, வாங்கி டவுசர் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். யாருக்கும் கொடுக்காமல் நானே சாப்பிடுவேன். மின்னலாய் ஓடி மிச்சமுள்ள ஐந்து பைசாவுக்கு சேமியா ஐஸ் வாங்கி சப்பினேன். உடலெங்கும் ஜில்லிட்டது. உதடும் நாக்கும் ரோஸ் கலரில் ஜொலித்தது. ஆக பத்து பைசாவும்  பத்து நிமிஷத்தில்    காலி. ஆமாங்க, பாஸ் அன்னிலிருந்து இன்னைக்கு   வரைக்கும் கையில காசு தங்குறதில்லை . முழுவதையும், உடனே செலவு செஞ்சிட்டு முழிப்பதில் எனக்கிணை  நானே.
தேவரு வாத்தியார் (தேவகுரு) "உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்" என்று தமிழ்ப்பாடம் ஆரம்பிக்கும்போது, நைசாக பாக்கெட்டுக்குள் கையைவிட்டு, ஒரு கடுக்கு மிட்டாயை எடுத்து உதடைத்துடைப்பது போல வாய்ல போட்டுக்கிட்டேன். கன்னத்தில ஒதுக்கினா காட்டிக்கொடுத்துரும்னுட்டு நாக்கிலேயே வச்சிக்கிட்டேன். தமிழும் இனித்தது.
            “சேகரு அந்த ரெண்டாவது பத்தியை உரக்கப்படி” என்று தேவரு வாத்தியார் ஆணையிட , படக்குனு நான் எழ, லொடெக்குனு கடுக்கு மிட்டாய் வாயிலிருந்து தவறிவிழ, லபக்குனு இஸ்மாயில் அதைஎடுத்து ஊதி தன்வாயில் போட்டுக்கிட்டான்.  அடப்பாவி என்று அவனை முறைச்சபடி  தப்புத்தப்பாய் வாசிச்சதில் , தேவரு வாத்தியாருக்கு   கெட்ட  கோபம் வந்துருச்சு  . வாத்தியார் மகன்ற சலுகையை, எங்கம்மாவிடம் தவிர (1ஆம் வகுப்பு C ஆசிரியை) வேறு யாரும் எனக்கு தந்துவிடாதபடி என் அப்பா கவனமாக பார்த்துக்கொண்டார். கண்ணில் வந்த நீருக்கு காரணம் தேடியதில், வாத்தியார் திட்டியதைவிட, கடுக்கு மிட்டாய் நஷ்டம் ஆனதே காரணம்.
   வகுப்பு முடிஞ்சவுடன், இஸ்மாயிலை முறைச்சு கணக்கு பாடம் காண்பிக்கமாட்டேன் என்று பயமுறுத்தினேன். அவன் பிறகு, ஒரு புதிய கடுக்கு மிட்டாயும், 10 தீப்பெட்டி படமும் கொடுத்தபின் தான், என் கோவம் அடங்கியது. கடுக்கு மிட்டாய் மட்டும் காக்கா கடி கூட யாருக்கும் கொடுக்க மாட்டேன்.
அஞ்சு மிட்டாயும், சாயிந்தரத்துக்குள்ளே தீந்துபோய், வாங்கப்போற கடுக்குமிட்டாய் கனவோடு படுத்தெழுந்து, கணக்கு வீட்டுப்பாடம் செய்ய மறந்துட்டு,அடுத்த நாள் அடி வாங்குனது நெனச்சா இன்னும் வலிக்குது.

ஒருமுறை மகேந்திரன், “ரெண்டு கடுக்குமிட்டாய் கொடுத்தா பாப்பார பொன் வண்டு (சிகப்புக்கலர்) பிடிச்சுத்தர்றேன்,”னு சொல்லிட்டு ஏமாத்திட்டதால அவன்கூட காய்விட்டு, ஆறு மாசம் கழிச்சுத்தான் பேசுனேன்.
இப்படியிருக்கும்போதுதான், ஸ்கூல் பியூன் ஒரு நாள் தமிழ்ப்பாடம் நடந்திட்டிருக்கும்போது ஒரு பொண்ணை கூப்பிட்டு வந்தான். பொண்ணு பாப்பார பொன்வண்டு மாறியே இருந்துச்சு. வகுப்பே வெளிச்சமாயிருச்சு. அவ கண்ணு துரு துறுன்னு அலைய , முடி கரு கருன்னு உளைய, பாவாடை மொரு மொறுன்னு வளைய, பசங்க எல்லோருக்கும் விறு விறுன்னு ஆயிப்போச்சு. சும்மா ஆளை அசத்துற அழகு.மாயத்தேவர்  மக ராஜலெச்சுமின்னு சொன்னாய்ங்க. முக்குலத்து தமிழச்சிக்கு  ஆரியவண்ணம்  எப்படி வந்துச்சுன்னு ஒரே ஆச்சரியமாய் இருந்துச்சு  ?. ஏழாப்புல எங்கூட படிச்ச, லதா, ரமீஜா, அம்ஜத்து, சாந்தி ஆகியோரைவிட ராஜலெச்சுமி அழகா இருந்ததால எல்லாப்பயலுகளும் அவளையே முறைச்சு முறைச்சு பார்த்தாய்ங்க.அட நானுந்தேன். அவளைப்பாத்துக்கிட்டே  இருக்கணும்போல இருந்துச்சு. அவ மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கும்போது, அவ மூக்கு விடைச்சு விடைச்சு, மூடுரப்போ, அவ மூக்குத்தி மின்னும் பாருங்க. அம்புட்டு அழகாயிருக்கும். சிலசமயம், அவ கண்ணு நவாப்பழம் மாதிரி அந்த மூக்குத்தியை விட ஜொலிக்கும். கூடவே அவ பெரியப்பா மகன் முத்துப்பாண்டியும் வந்து சேர்ந்தான்.இந்த முத்துப்பாண்டியை முதநாளே எனக்குப்பிடிக்கல. ஆனா ராஜலச்சுமி கூட பேசறதுக்காக, அவனை என் "நேரு அணி"யில் சேர்த்துக்கிட்டேன். பொம்பளைப்பிள்ளைகளுக்கு ஏந்தான் தனி அணி போடுறார் இந்த தமிழ் வாத்தியார்னு கோவம் கோவமா வந்துச்சு.

நல்லாப்படிச்சதனால, ராஜியை "ஜான்சி ராணி  அணி"க்கு தலைவியாப் போட்டதும் போட்டாங்க, நேருவுக்கும் ஜான்சி ராணிக்கும் மோதல் ஆரம்பிச்சது. அவ அணி ஒருநாள் கூடுதல் மார்க் எடுத்ததற்கு நான் பரவால்லைன்னு சொன்னேன். அதுக்கு என் அணி பசங்க, என்னை உண்டு இல்லைன்னு பண்ணிட்டாய்ங்க. அடுத்தவாட்டி முத மார்க் எடுக்க நான், கூட நேரம் ஒதுக்கி படிச்சு கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாயிருச்சு. அன்னிக்கு அவ முகமே நல்லால்லே. எனக்கும் பாவமா போயிருச்சு. ஒரு நாள் தடுமம் பிடிச்சதாலே, கடுக்கு மிட்டாயை மட்டும் வாங்கிட்டு ஐஸ்  தின்னாம வகுப்புக்கு வந்தா, அங்க என் ராஜலட்சுமி ஒட்கார்ந்து கணக்குப் போட்டுக்கிட்டிருந்தா. நானும் தயங்கி உள்ளே போய் உட்கார  , என் மனசு சொல்லுச்சு அவளுக்கு ஒரு கடுக்கு மிட்டாயை தரச்சொல்லி. யாருக்கும் தராத கடுக்கு முட்டாய அவளுக்கு தர நினைச்சது ஏன்னு  தெரியல.தயங்கி தயங்கி கையில் எடுத்து வச்ச மிட்டாய், பயத்துல வந்த வேர்வையில ஈரமாயி கையெல்லாம் பிசுபிசுன்னு ஆயிருச்சு. ஆனா கொடுக்க தைரியம் வல்ல.அப்பதான் சேகர்னு ஒரு  குரல் கேட்டுச்சு.

அடுத்த பகுதி வரும் வியாழனன்று



Monday, December 9, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 6: ஆளுநரின் அரண்மனை

La Fortaleza

கோட்டைக்குள் செல்வதற்கு முன்பு போர்ட்டரிக்கோ வந்த வரலாற்றை இன்னும் சிறிது விரிவாக  பார்ப்போம் .
        அப்போதிருந்த ஸ்பெயின் நாட்டு அரசரும் அரசியும் பொருளுதவி செய்ய "கொ…லம்பஸ் விட்டாச்சு லீவு" என்று சொல்லி "புது உலகத்திற்கு" இரண்டாம் முறையாக பயணம் செய்தார் கிறிஸ்டோபர் கொலம்பஸ். அப்போது கண்டுபிடித்த தீவுதான் போர்ட்டரிக்கோ. அது கிபி.1493 ஆம் ஆண்டு.  ஆனாலும் கி.பி 1508- ஆம் ஆண்டுக்கு மேல்தான் ஸ்பானியரின் காலனி ஆதிக்கம் ஆரம்பித்தது. கி.பி.1509ல் பான்சே ஒ லியோன் (Ponce De Leon) என்பவர் ஆளுநராக ஸ்பெயின் அரசரால் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆப்பிரிக்காவிலிருந்து ஃபிரெஞ்ச் ஆட்கள் வந்தனர். லூசியானோலிருந்து கறுப்பின மக்கள் வந்தனர். அதன் பின்னர் ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஸ் விவசாயிகள் குடிபெயர்ந்தனர்.
        கிழக்கு மேற்காக 100 மைலும், வடக்கு தெற்காக 35 மைலும் உள்ள இந்த சிறிய தீவில் தற்போது சுமார் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். கி.பி.1898ல் நடந்த ஸ்பானிஷ் அமெரிக்க போருக்குப்பின்னர், இது அமெரிக்காவின் டெரிட்டரி ஆக இயங்கி வருகிறது. அமெரிக்க டாலர்தான் இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இங்கு வாழ்பவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக அங்கீகாரம் பெற்றவர்கள். இதனுடைய பாதுகாப்பு அமெரிக்காவின் கையில். போர்ட்டரிக்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரால் ஆளப்படுகிறார். இவர்களது உள்நாட்டு விவகாரங்களை இவர்களே கவனித்துக் கொள்கிறார்கள் என்பதால் இது அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இதுவரை ஆகவில்லை. இவர்கள் அமெரிக்காவின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். அமெரிக்காவிலிருந்து இங்கு செல்வதற்கும் விசா தேவையில்லை. ஆனால் இவர்கள் அமெரிக்க வரி கட்டுவதில்லை என்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
லா  ஃபோர்ட்டலிசா (La Fortaleza)
        காரை அடிவாரத்தில் பார்க்கிங் செய்துவிட்டு, அழகான ஒரு நீர்வீழ்ச்சி வந்தனம் கூறி வரவேற்றதை ஆமோதித்து, பழைய துறைமுகப்பகுதியின் ஓரமாக நடந்து மேலே சென்றால், வலதுபுறம் இந்தக்கோட்டை அமைந்துள்ளது. கொஞ்சதூரம் மேலே ஏறிச் சென்றால் ஒரு மூலையில் பிரமாண்டமான ஆலமரம் ஒன்று வந்து ஆச்சரிய மூட்டியது.

 அடேயப்பா ஆலமரத்தைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு என்று சொல்லி அருகில் சென்று தொட்டுப் பார்த்தேன். எத்தனை வருடங்களாக இங்கு இருந்து கொண்டு எத்தனை வரலாற்று நிகழ்வுகளையும் அரசர்களையும் பார்த்திருக்கிறேன் என்ற பெருமிதத்தில் கம்பீரமாக விழுது பரப்பி நின்றது.கொஞ்சம்  தள்ளிப்போனால் ஒரு மாபெரும் ஈச்ச மரமொன்று இருந்தது . பழங்கள் எட்டாத உயரத்தில் இருந்தன.
  

சேன் வானின் துறைமுகத்தைப் பாதுகாக்க, கி.பி.1533-40ல் கட்டப்பட்டதுதான் இந்தக் கோட்டை.

        இன்னும் கொஞ்சம் மேலேறிச் சென்றால், ஒரு பிரமாண்டமான நுழைவாயில் வந்தது. இதுதான் சிட்டிகேட் என்று அழைக்கப்படுகிறது.
 இதன் சுவர்கள் 20 அடி அகலமும் 50 அடி உயரமும் கொண்டது. துறைமுகம் வழியே வந்திறங்கும் முக்கிய அரசர்கள் மற்றும் தலைவர்கள் இந்த வழியாகத்தான் அரச மரியாதையுடன் அழைத்துச் செல்வார்களாம்.

 என்ன காரணத்தாலோ என்னை வரவேற்க ஒருவரையும் காணோம் . பாகிஸ்தான் சதி என்று நினைக்கிறேன்.

        சான்டா கேட்டலினா  பேலஸ் (Santa Catalina's  Palace) என்று அழைக்கப்படும் கவர்னர் மாளிகை இதன் உள்ளேதான் இருந்தது.  பதினாறாம் நூற்றாண்டிலிருந்து போர்ட்டரிக்கோவின் ஆளுநர் வாழும் இடமாக இன்று வரை இருப்பதால், ஐரோப்பியர்கள் கண்டுபிடித்த புது உலகில் இதுவே மிகப்பழமையான, இன்றும் உபயோகத்தில் இருக்கும் 'அதிகார மாளிகை' (Oldest Executive Mansion) ஆகும்.
 ஆதலால் தான் 1983-ல் யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்து, இது ஒரு "உலக பாரம்பரிய சின்னமானது" (World Heritage Site).அதன் உள்ளே ஒரு கைடட் டூர் ஒன்றிருந்தது. மாளிகையின் வெளிப்புறம், சிற்றாலயம் (Chapel), தோட்டம், தடாகங்கள் ஆகிய பகுதிகள் சுற்றிக்காட்டப்பட்டன. உட்புறம் செல்ல அனுமதியில்லை.
King Juan carlos
        பதினாறாம் நூற்றாண்டிலிருந்து மொத்தம் 170 ஆளுநர்கள்  இங்கே தங்கியிருக்கிறார்கள். அது தவிர ஸ்பெயின் அரசர் வான் கார்லஸ் (Juan Carlos),

 நெதர்லாந்து அரசி ஜூலியானா, மற்றும் அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடியும் அவர் மனைவி ஜாக்குலின் கென்னடியும் இங்கு தங்கினர். சமீபத்தில் ஜூன் 2011ல் தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா இதனை வந்து பார்வையிட்டாராம்.

        மாளிகையின் உள் வளாகத்தில் இருந்த சிறிய சேப்பலின் அருகில், குறுகிய சுழல் படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால், அதிலே மிகச்சிறிய “டஞ்சன்” என்று சொல்லப்படும் அறை ஒன்றிருந்தது. அதில்தான் தண்டனை பெற்ற குற்றவாளியை அடைத்து வைப்பார்களாம். ஒரு ஆள் கூட நீட்டிப் படுக்க முடியாத அந்த இடத்தில் பலபேரை அடைத்து வைப்பார்களாம்.
இந்தக் கோட்டை இருமுறை ஆக்ரமிக்கப்பட்டது.
1) கி.பி.1598ல் இங்கிலாந்தச் சேர்ந்த கம்பர்லேண்ட் ஏர்ல் ஜார்ஜ் கிஸிப் ஃபோர்டு (Earl of Cumberland) தாக்கிப் பிடித்துக் கொண்டார்.
2) கி.பி.1625ல் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெனரல் (General Balduina Enrico) இக்கோட்டையைப் பிடித்து இதன் அரண்மனையில் தங்கினர்.
        பின்னர் இங்கிருந்து டச்சுப்படைகள் பின்வாங்கியபோது கோட்டையும் நகரமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
        கி.பி.1898ல் அமெரிக்கா போர்ட்டரிக்கோவை பிடித்துக் கொண்டபோது (Spanish American War), இங்கு தங்கியிருந்த கடைசி ஸ்பானிய கவர்னர், ரிக்கார்டோ டி ஆர்டெகா (Ricardo De Ortega) தன்னுடைய வாளை  உருவி அங்கிருந்த பெரிய கடிகாரத்தில் ஒரு போடுபோட, அது அப்படியே நின்று போனதாம்.
        1950-ல் போர்ட்டோரிக்கோவின் தேசியவாதிகள் இங்கு தங்கியிருந்த கவர்னரை தாக்க உள்ளே நுழைந்தபோது  சுட்டுக்கொல்லப்பட்டனர்.
        இப்போது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னர்கள் இங்கு தங்கி ஆள்கிறார்கள். தற்போதைய கவர்னரின் பெயர் Alejandro García Padilla.
அப்போது அழகிய வைரமொன்று  கழுத்தில் ஜொலிஜொலிக்க, ஒரு பளபளப்பான கறுப்பு நிற பூனை அங்கு வந்தது. டூர் கைடு சொன்னாள், "அதைச்சீண்டாதீர்கள்”, என்று.ஏன் என்று கேட்டேன். 

பயணம் தொடரும் !!!!!!!!!!!!!!!!!!!!

நண்பர்களே வரும் வியாழன் வெளி வர விருப்பது
"பரதேசியின் காதல் கதை". படிக்கத்தவறாதீர்கள்.



Thursday, December 5, 2013

கர்நாட்டிக் ஜாஸ் !!!!!!!!!!!!!!!!!

        வெயிட் எ நிமிட், இது கர்நாடக இசையா? இல்லை ஜாஸ் இசையா என்று தம்பி விஷ் (விசு  கர்னேலியஸ்) கேட்பது காதில் விழுகிறது.
        இது கர்னாடிக் பாதி ஜாஸ் பாதி என்று இரண்டும் கலந்த கலவை. ஆனால் ஒரே மேடையில். இது நடந்தது நியூயார்க், குயின்ஸ் பகுதியில் என்னுடைய பேட்டையான ஜமைக்காவில் இருக்கும் சென்ட்ரல் லைப்ரரியில். நவம்பர் 3, ஞாயிறன்று மாலை 3 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் பரதேசி ஆஜர்.
        'சரணம்' என்ற இசைக்குழுதான் இந்த ஃப்யூசன் இசைச்சங்கமத்தை நிகழ்த்தியது. இந்தக்குழுவின் தலைவர் 'நிவேதிதா ஷிவ்ராஜ்,(www.niveditashivraj.com) ஒரு வீணை வித்வான்.
 இசை ஆசிரியரும் கூட. கர்நாடக இசையில் என்னுடைய குரு. சில காலம் இவர்களிடம் பயில முயன்றபோது, பின்னர் "அதுக்கெல்லாம் ஞானம் வேணும்டோய்", என்று புத்தி தெளிந்து கைவிட்டேன். ஆனால் என்னுடைய இசை முயற்சியிலும், என்னுடைய பாடல்கள் கம்போசிங்கிலும் எனக்கு மிகுந்த உதவி செய்தவர். என்னுடைய கொள்ளுத்தாத்தா இயற்றிய கீர்த்தனைகளின் மூல  ராக ஆராய்ச்சியிலும் பேருதவி புரிந்தவர். எனவே குரு  பக்தியுடன் முன் வரிசையில் அமர்ந்தேன்.
        அறிவித்தபடி சரியாக 3 மணிக்கு இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஒவ்வொரு பாடலும் நிவேதிதா அவர்களின் ஒரிஜினல் கம்போசிசன்.
        நிவேதிதா தன்னுடைய தஞ்சாவூர் சரஸ்வதி வீணையுடன் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தது, சாட்சாத் சரஸ்வதியே உட்கார்ந்திருந்தது போல் தெரிந்தது. அவருடைய இடது புறத்தில் தபேலாவில் நரேனும், சற்றே பின்னால் சாக்சபோனுடன் மார்கஸும் அமர்ந்திருந்தனர்.  அவரின் வலதுபுறம் அவருடைய ஒரே மகள் சம்யுக்தா என்ற சாம் இருந்தாள்.
 வாய்ப்பாட்டில் மட்டுமல்ல வாய்ப்பேச்சிலும் வல்லவள். லா டிகிரி படிக்கப்போவதாக சொன்னதில் எனக்கு ஆச்சரியமேயில்லை. டிவி ஆன்கரான சாம் ஏற்கனவே குயின்ஸ் பப்ளிக் டெலிவிஷனில் வரும் "இன்டியா டாக்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, இப்போது ஃபாக்ஸ் டிவி (Fox Tv)யிலும் வேலை செய்கிறாள். அழகும் திறமையும் ஒருங்கே பெற்ற பெண் இவள். வலது புறம் ஓரத்தில் ஜேசன் கிட்டாருடன் உட்கார்ந்திருந்தார்.
        எலக்ரானிக் ஸ்ருதிப்பெட்டியிலிருந்து  சுதியோசை கிளம்ப, எலக்டிரிஃபை செய்யப்பட்ட வீணையிலிருந்து இனிய நாதம் எழுந்தது. குருஜியின் விரல்கள் வீணையில் நர்த்தனமாட, நரேன் தபேலாவை உருட்டினார். உதிரி போல உட்கார்ந்திருந்த மார்கஸ் கதிரி (கதிரி கோபாலகிருஷ்ணன்) போல வாசித்து ஆச்சரியமூட்டினார். ஜேசன் தன் கிடாரில், பேஸ், ரிதம் மற்றும் லீடை தேவைப்படும்போது மாற்றி மாற்றி பயன்படுத்த, சாம் ஜதிகளை உதிர்க்க களைகட்டியது கச்சேரி.
Charnams performing at the Queens Battle of the Boroughs
        குறிப்பாக “ரெயின்” மற்றும் 'ஹட்சன் டிரைவ்' ஆகிய இரு ராகமஞ்சரிகள் தலையாட்டவும் தாளம் போடவும் வைத்தன. இந்த நான்கு இசைக்கருவிகளும், ஜதியும் இனிமையாகவும் இதமாகவும் இணைந்து ஒலித்தது காதில் தேன்பாய்ந்தது போல் இருந்தது.
        பி.ஏ சிஸ்டம் மிகச்சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருந்தது. எந்தெந்த கருவிகள் எவ்வளவு அளவில் ஒலிக்க வேண்டும் என்பதை அமைப்பது மிகச்சிறந்த கலை. தன் சொந்த பி.ஏ சிஸ்டத்தை அவ்வளவு கச்சிதமாக அமைத்தவர் குருஜியின் கணவர் ஷிவ்ராஜ். குடோஸ் ஷிவ். தபேலா தவிர மற்ற எல்லோர் முன்னாலும் இருந்த ஐபேடில் இருந்த நோட்சை எல்லோரும் ஃபாலோ செய்தனர். இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் கர்நாடிக் கச்சேரியானாலும், கர்நாடகம் காணாமல் போய் டெக்னாலஜி மயமாய் ஆகிவிட்டது .
        வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரின் இதயத்தையும் அள்ளிச் சென்றது அந்த இசைச் சங்கமம் என்னால் அது மிகையில்லை. 
        “ஆலிஸ் டல்லி ஹால்” (Alice Tully Hall), “லின்கன் சென்ட்டர்” , “ஃபிளஷிங் டவுன் ஹால்” மற்றும் “சம்மர் ஸ்டேஜ்” ஆகிய நியூயார்க்கின் பெருமை மிகு அரங்குகளில் பலமுறை நிகழ்ச்சிகள் நடத்திய இந்த 'சரணம் பேண்ட்' 2011ல் நடந்த "நியூயார்க் அல்ட்டிமேட் பேட்டில் ஆஃப் தி போரோஸ்" போட்டியில் (NEW YORK ULTIMATE BATTLE OF THE BOROUGHS CONTEST)முதலிடம் பெற்ற இசைக்குழுவாகும்.
        சகோதரி நிவேதிதா ஷிவ்ராஜ் அவர்களின் இசைப்பணி மேன்மேலும் தொடர வளர இந்தப் பரதேசியின் வாழ்த்துக்கள்.



Monday, December 2, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 5: பச்சை பச்சையாக!!!!!!!!!!!!

ஜாலியாக ஒன்வேயில் நுழைந்து விட்டேனாம். எங்களுக்கு எஸ்கார்ட் கொடுத்து, டிராபிக்கை நிறுத்தி, திருப்பிவிட்டார்கள் அந்தப் போலிஸ்காரர்கள். ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது. இதுவே நியூயார்க் என்றால், நிற்க வைத்து கேள்வி கேட்டு, $115 டாலருக்கு டிக்கட் கொடுப்பதோடு, 2 பாயின்ட்களும் கொடுத்திருப்பான். 8 பாயின்ட் சேர்ந்துவிட்டால், ஒரு வருடத்திற்கு லைசென்சை சஸ்பெண்ட் பண்ணிவிடுவான். நியூயார்க்கின் முக்கிய வருமானம் இந்த ஃபைன் தான் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது.
        புன்சிரிப்புடன் தலையாட்டி, " என்ஜாய் யுவர் ஸ்டே" என்றார் ஒரு காப். இத மட்டும் ஆங்கிலத்தில் கற்று வைத்திருக்கிறார்கள். மத்தபடி இங்கிலிஷ் ம்ஹீம் சுத்தம்.
        "மும்பை”க்கு வந்து சேர்ந்தோம். இருட்டில் உள்ளே பெரிய பார் போல இருந்தது, பலவித சைஸில் நிறங்களில் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "அனிஷா இது உணவகமா இல்லை வெறும் பாரா", என்று கேட்டுவிட்டு, உள்ளே போனேன். உள்ளே ஒருபுறம் ஒளி நிறைந்த கண்ணாடி அறையில் தொப்பி அணிந்த ஆட்கள் ரொட்டியைத் தட்டிக் கொண்டிருக்க, வெளியே இருட்டு டைனிங் ஹாலில் தாவணி போன்று ஒன்றை அணிந்திருந்த இரு அப்சரஸ் வெள்ளைக்காரிகள், “பியன் வெனிஸ்டா” என்றார்கள். ஆ இது ரெஸ்டாரண்ட் கம் பார் என்று நினைத்து, குடும்பத்தை உள்ளே கூப்பிட்டேன். இருட்டில் தட்டித்தடவி உள்ளே வந்து உட்கார்ந்தோம். இருட்டில் கண்கள் பழக ஒரு பிரமாண்ட மாடர்ன் பிள்ளையார் பாருக்குப் பக்கத்து சுவற்றில் தொங்கினார்.
        ஒரு குட்டை அப்சரஸ் வந்து, எங்கள் டேபிளில் சிறுசிறு சுட்டிகளில் இருந்த மெழுகுவர்த்திகளைப் பொறுத்தினாள். அப்பாடா கொஞ்சம் வெளிச்சம் வந்தது. பளிச்சென்ற வெளிச்சம் நிறைந்த கண்ணாடி அறையில் ரொட்டி தட்டிக் கொண்டிருந்த சமையல் அறை மிகச்சுத்தமாக இருந்தது. அந்த கண்ணாடி அறை ஐடியா சூப்பர். ஆனால் நம்மூர் சமையலறையை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்ட முடியுமா? காட்டினால் ஒருவராவது சாப்பிட வருவார்களா?. ஆனால் உள்ளே இருந்த ஆட்களைப் பார்த்தால் நம்மவர் மாதிரி தெரியவில்லை. அவர்கள் வெள்ளை உடையும் தொப்பியும் பார்த்தால் ஏதோ வெள்ளைக்கார நேவி ஆஃபிசர்கள் மாதிரி தெரிந்தது. வெளியேயும் வெள்ளையர் தவிர வேறு யாரும் இந்தியர் இல்லை. நான் சைகை செய்ய மிதந்து வந்த அப்சரஸிடம் கேட்டேன். "இது இந்திய உணவகம்தானே". அவள் சொன்னாள், இது இன்டியன் இன்ஃபுளுயன்சுடு  (Indian Influenced) என்று. சரிவிடு சாப்பிட்டுத்தான் பார்ப்போம் என்று மெனு கார்டை புரட்டினேன். என்ன முயன்றும் படிக்கவில்லை. வர்த்திச்சுட்டியை எடுத்து சாய்த்து படிக்க முயல, உருகிய மெழுகு கையைப்பதம் பார்த்தது. என்னடாது, நம்மூர் சாப்பாடு சாப்பிட இவ்வளவு கஷ்டமா? குட்டைப்பெண் பாவாடை சரசரக்க வந்து ஒரு சிறிய ஃப்ளாஸ் லைட் (டார்ச் லைட்) கொண்டு வந்தாள். ஒரு வழியாக அப்படைசர், காலிஃபிளவர் பக்கோடாவும், பிண்டி (வெண்டைக்காய்) வறுவலும் ஆர்டர் செய்தோம். விலை படுபயங்கரமாக இருந்தது. கடலை மாவில் முக்கிப் பொரித்து கொண்டுவந்தனர். காலிஃபிளவர் வேகவில்லை, வெண்டைக்காய் முற்றல். நுனியை ஒடித்து வாங்கத் தெரியவில்லை போலிருக்கிறது.
        அடுத்து மெயின் கோர்சும்  பச்சையாக இருந்தது. நாலு சிறிய பாதிவெந்த சிக்கன் பீஸ்களை எடுத்து வந்து "சிக்கன் தந்தூரி” என்று $20 டாலர் சார்ஜ் வேறு. பச்சையாக இருந்ததை சாப்பிடமுடியாமல் வாயில் பச்சை பச்சையாக வந்தாலும், கட்டுப்படுத்திக் கொண்டு, "மும்பை" வந்து வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என நினைத்து, வெளியே வந்துவிட்டோம். என் மனைவி கேட்டால் 20 டாலருக்கு குறைந்தது 15 பவுண்ட் சிக்கன் கிடைக்கும் என்று.      வீடுவந்து பழங்களை சாப்பிட்டுவிட்டு, படுக்கை எறினோம்.
ஆகஸ்ட் 6, 2013 செவ்வாய்க்கிழமை
எச்சரிக்கை: இன்று பழைய (Old San Juan) சேன் ஹுவான் செல்லவிருப்பதால், அதன் பின்னனியை வரலாற்று ஆராய்ச்சியோடு அணுகப்போவதால், வழக்கம்போல் வரலாற்று அலர்ஜி உள்ளவர்கள், சற்றே விலகிச் செல்லவும்.
        போர்ட்டோரிக்கோவின் பூர்வ குடிகள் காட்டுமிராண்டிகளாக நிர்வாணிகளாக வாழ்ந்து வந்த சமயத்தில் படகுகள் மூலம் இடம்பெயர்ந்த செவ்விந்தியர் (TAINO INDIANS) திரளாக வந்து, அங்கிருந்த மக்களுக்கு உடுத்தவும், உறைவிடம் அமைக்க மற்றும் உணவு பயிரிடவும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் போதுதான் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தத் தீவைக்கண்டுபிடித்தார்.
        இயற்கை வளங்கள் கொட்டிக்கிடந்ததால், ஸ்பானியர் மெதுவாக வந்து ஆக்கிரமிக்க இது ஸ்பானிய காலனி ஆதிக்க தீவாக மாறியது. அவர்கள் இட்ட பெயர்தான் போர்ட்டோரிக்கோ. "வளமான துறைமுக நகர்" என்பது அதன் அர்த்தம்.
        இதன் தலைநகரம்தான் சேன் வான் (San Juan). செயின்ட் ஜான் தி பேப்டிஸ்ட் (St. John the Baptist) அவர்களின் பெயர்தான் இது. டொமினிக்கன் ரிபப்ளிக்கில் உள்ள சான்ட்டா டோமிங்கோ (Santa Domingo) என்ற நகரத்திற்கு அடுத்தபடியாக, ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாவது பழமையான நகரம்தான் சேன் வான்.
        சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரம் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்திய பெருமை பெற்றது. அவற்றுள் சிலவற்றை கீழே தருகிறேன்.
1.  1966 - சென்ட்ரல் அமெரிக்கன் & கரீபியன் கேம்ஸ்.
2.  1979 - பான் அமெரிக்கன் கேம்ஸ்.
3.  2006, 2009 & 2013 - வேர்ல்ட் பேஸ்பால் கிளாசிக்ஸ், கரீபியன் சீரிஸ் & ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்.
4.  2010 - MLB சான் வான் சீரிஸ்.
Ponce de Leon
Juan Ponce de Leon
        போர்ட்டரிக்கோ தீவுக்கு முதன்முதலாக கி.பி.1508-ல் வான் பான்சே டி லியன் (Juan Ponce de Leon) தலைமையில் கப்பாரா (Caparra) என்ற இடத்திற்கு ஸ்பானியர் வந்து சேர்ந்தனர். ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்கள் இடம் பெயர்ந்து வந்து சான் வானுக்கு வந்தனர். அந்த இடத்தை போர்ட்டரிக்கோ என்று முதலில் அழைத்தனர். கி.பி.1521-ல் தான் சேன் வான் என்று பெயரிடப்பட்டு, பின்னர் போர்ட்டோரிக்கோ என்ற பெயர் அந்த முழுப் பகுதிக்கும் சூட்டப்பட்டது.

வாருங்கள் சேன்  வானின் கோட்டைக்குள் போவோம் .


பயணம் தொடரும் !!!!!!!!!!!!!