Monday, September 9, 2013

வேர்ல்ட் டிரேட் சென்டர் - ட்வின் டவர் Part 1


            ஆஃபிஸ் மீட்டிங் ஒன்றிற்காக டெளன் டவுனில் உள்ள ஃபுல்டன் தெருவிற்கு போனவாரம் சென்றிருந்தேன். சப்வேயை விட்டு மேலே வந்து, பிராட்வேயில் திரும்பினால், அங்கே கம்பீரமான புதிய வேர்ல்ட் டிரேட் சென்டர் நிமிர்ந்து நின்றது. "ஃப்ரீடம் டவர்" என்று முதலில் அழைக்கப்பட்ட இது, இப்போது “ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்” (One World Trade center) என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மக்களுக்குத் திறந்துவிடப்படும் இது,  முழுதும் கண்ணாடி சுவர்களில் அமைக்கப்பட்டு, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று கண் கூசியது.

புதிய வேர்ல்ட் டிரேட் டவரின் சிறப்பம்சங்கள்:

1.         மொத்தம் 1776 அடி உயரம் கொண்டஇந்தக்கட்டிடம் மேற்கத்திய நாடுகளிலேயே மிகவும் உயரமானது.

2. 18 பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டடத்தின் மொத்த எடை 800 டன்.

3.        104 மாடிகள் கொண்ட இந்த சென்டர்,

நியூயார்க்கின் மிக உயரமான கட்டடமும் கூட.

4.         இங்கு அமைக்கப்படவிருக்கும் “அப்சர்வேஷன் டவர்” கடல் மட்டத்திலிருந்து 1250 அடி உயரத்தில் இருக்கும்.

5.         ஆண்டுக்கு 3.8 மில்லியன் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த சென்டரின் உத்தேச வருமானம் ஆண்டிற்கு 875 மில்லியன் டாலர்கள்.
            கிட்டப்போய்ப்பார்த்தேன். என்னதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும், அதே இடத்தில் இருந்த ட்வின் டவரை கம்பேர் செய்து பார்க்கும்போது, ஒற்றைப்பனைமரமாய் நிற்கின்ற  "ஃப்ரீடம் டவர்" எனக்கு அவ்வளவாகப்பிடிக்கவில்லை. ட்வின் டவருக்கும் எனக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
Twin Tower 

       ஆமாம், ஜுலை மாதம் 2000-ல் நியூயார்க் வந்த எனக்கு முதல் வேலை ட்வின் டவரில்தான். அங்கிருந்த ஒரு ஹியூமன் ரிசோர்சஸ் கன்சல்டிங் நிறுவனத்தை லாஞ்ச் செய்வதற்காக நான் வரவழைக்கப்பட்டிருந்தேன். அதன் அலுவலகம் 45-ஆவது மாடியில் இருந்தது. என்னுடைய கேபின், சுவர் ஓரத்தில் இருந்தது. முழுவதும் கண்ணாடி சுவர். கீழே அதள பாதாளத்தில் பொம்மைகள் போல் வாகனங்களும் எறும்புகள் போல மனிதர்கள் ஊர்வது அதிசயக்காட்சி. சில சமயங்களில் தவழ்ந்து வரும் மேகம் அல்லது ஃபாக் அப்படியே தழுவிக்கொள்ள, நான் லைட்டை போட வேண்டியதிருக்கும். 45-ஆவது மாடிக்கே இப்படியென்றால், மேலே மேலே 110 ஆவது மாடிக்கு மேல் உள்ள அப்சர்வேஷன் டவரிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வேன். அதன் பெயர் "டாப் ஆஃப் தி வேர்ல்ட்" என்பதாகும். பாதி நேரம் அதன்  உச்சி மேகங்களால்   மூடப்பட்டிருக்கும்.

            நான் அங்கு சேர்ந்தது சம்மர் டைம் என்பதால் லஞ்ச் டைமில் கிழிறங்கி வரும்போது, அங்கு அமைக்கப்படும் “சென்ட்டர் ஸ்டேஜில்” ஏதாவது நிகழ்ச்சி நடக்கும். கோடை காலம் முழுவதும், மதியம் 12-2, மாலை 4-6. இந்த நிகழ்ச்சிகள் நடக்கும். பல நாட்டு, பலவகை இசை ,நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கும். ரெண்டு ஸ்லைஸ்  பிரட், ரெண்டு பீச் பழங்களை  கொறித்துக் கொண்டே ஊற்றைச்சுற்றியிருக்கும் சிமென்ட் பெஞ்ச்களில் அமர்ந்து, இசையை ரசித்தபடி, நான் செலவு செய்த நிமிடங்கள் "கோல்டன் மோமென்ட்ஸ் ".
            அன்றைய கருப்பு நாள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. என்றுமே மறக்கமுடியா, செப்டம்பர் 11, 2001 செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் விடிந்தது.



செப்டம்பர் 11, 2013 - ல் அடுத்த பகுதி.

Thursday, September 5, 2013

யாரடி நீ மோகினி ? Part 2 :தென்னை மரத்து ஒயின்




நாங்க ஏற்கனவே திட்டம்போட்டபடி மூனு பேரும் குட்டைத்தோப்புக்குள்ளே போனோம். நிலா இன்னும் வரல, நல்ல இருட்டு. பகல்ல பார்த்து ஏற்கனவே தேர்ந்தெடுத்த அஞ்சு மரத்திலே, மரத்திற்கு ரெண்டு வீதம் பத்து எளனி வெட்டினோம். அப்பதான் வெட்டினது தெரியாதுன்னு நாந்தேன் இந்த யோசனையைச் சொன்னேன். ஆறுமுகம் ஏறி திருகி திருகி போட, ஜோசப் கேட்ச் பிடிச்சு கைலியில் வைத்துக்கட்டினான். நான் ரெண்டு தடவை கேட்ச் பிடிக்க டிரைபண்ணி, ரெண்டு தடவையும் கீழே போட்டதால , ஆறுமுகம் கெட்ட வார்த்தையில் திட்டிட்டான். எனக்குக் கோவம் கோவமாய் வந்தாலும், மாட்டிக்கிட்டா என்னாகும்னு நெனைச்சு கம்முனு இருந்தேன்.
பத்து எளனியையும் கடத்திக்கிட்டு ஓடைக்கரைக்குப் போனோம். அப்பதான் கொஞ்சம் நிலா எட்டிப்பாத்துச்சு. சமையலறையில் களவாண்டு வச்சிருந்த அறுவாளை புதைச்சு வச்ச இடத்தில, நட்டுவச்ச குச்சியைக்காணாததால  கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமாயிருச்சு.

எளம் பச்சை நிறத்தில ஒவ்வொரு எளனியும் குண்டு  குண்டா  அழகா இருந்துச்சு. வெட்ட வெட்ட எனக்கு தாகமெடுத்து, “டேய் ஒரு எளனி எனக்குக்கொடு”ன்னு கேட்டேன். ஜோசப்புக்கு கோபம் வந்துருச்சு. “டேய் சும்மார்ரு கள்ளுக்கே பத்தாது” என்றான். ஆறுமுகம் வெட்ட ஆரம்பிக்கவும், ஜோசப் புதரில் ஒளிச்சி வச்சிருந்த பாட்டிலை எடுத்து வந்து அதில எளநீரைப்பிடித்து வைத்தான். அப்ப தெரியாம   நைட்ஷோ போயிட்டு வந்த நாகப்பட்டினம் ஸ்ரீதர் எங்களைப் பார்த்துட்டு கலவரம் ஆக, அவனைப்பார்த்துட்டு நாங்க கலவரம் ஆக, ஒருவழியா அவனையும் கூட்டுக்களவாணியா சேத்துக்க வேண்டிய கட்டாயம் ஆயிருச்சு. மோகினியை மட்டும் விட்டுட்டு மத்ததை எல்லாம் சொன்னோம். அஞ்சு இளனியிலே ரெண்டு  பாட்டில் நிரம்பிருச்சு இன்னும்  ரெண்டு  பாட்டில் இருந்திருந்தா  நல்லாயிருந்திருக்கும். மிச்ச இளனியை நாங்களே குடிச்சுட்டு, பாட்டிலைப்புதைச்சு வைச்சோம். மூணு  வாரம் கழிச்சுதான் எடுக்கனும்னு முடிவு செஞ்சுட்டு போய்ப்படுத்தோம்.
ஒரு வாரம் கழிச்சு, ஸ்ரீதர் புதுயோசனையோடு வந்தான். கொஞ்சம் கறுப்புத்திராட்சையை பாட்டில்ல போட்டா பக்கா ஒயின் மாதிரியே ஆயிறும்னு சொன்னான். எனக்கென்னவோ அந்த யோசனை பிடிக்கல. ஆனாலும் கூட்டணி தர்மத்துக்காக ஒத்துக்கிட்டேன். அன்னிக்கு ராத்திரிபோய் தோண்டி எடுத்து திராட்சையை ரெண்டு பாட்டில்லயும் போட்டோம்.
இன்னும் ஒருவாரம் கழிச்சு, ஆறுமுகத்துக்கும் ஸ்ரீதருக்கும் பெரிய வாக்குவாதம் ஆயிப்போச்சு. என்னன்னு கேட்டா, இந்த ஸ்ரீதர் “புதைக்க வேண்டிய அவசியமில்லை. ரெண்டு  வாரம் புதைச்சதே போதும். பெட்டிக்குள்ள கொண்டு வந்து ஒளிச்சு வைச்சிட்டு, இன்னொரு வாரத்துல எடுத்துப்பாப்போம்னு" சொன்னான். இது எனக்கு சரியா வரும்னு தோணல. ஆறுமுகம் என்கட்சிதான், ஆனா ஜோசப், " சரிடா அவன் சொல்றபடி செய்வோம்" என்றான். ஸ்ரீதர் பாட்டிலை எடுத்து, துணியில் சுத்தி அவன் பெட்டிக்குள்ள ஓரமா  வைச்சிருந்தான்.
முன் குறித்த நாளும் வந்தது. அன்னிக்கு வெள்ளிக்கிழமை ஹாஸ்டல் பசங்க எல்லாம் சாயந்திரம் பொது வழிபாட்டுக்காக காந்திகிராமம் போயிருந்தாய்ங்க. நானும் ஆறுமுகமும் உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டோம். ஸ்ரீதரும் ஜோசப்பும் ஃபுட்பால் பிராக்டிஸ்னு சொல்லிட்டாய்ங்க.
எல்லோரும் போனபின், கதவை மூடிட்டு, ஸ்ரீதர் மெதுவாக பாட்டிலை எடுத்து, கொஞ்சம் கஷ்டப்பட்டு கார்க்கை இழுத்தான். கொஞ்சம் சிந்தியிருச்சு. பார்த்தா, நாத்தம் குடலைப் புடுங்கியிருச்சு. நான் மூக்கைப்பொத்திட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டேன். ஆறுமுகம் நாத்தம் தாங்காம  அங்கேயே வாந்தி எடுத்திட்டான்.  பாட்டில் பூரா ஒரே புழு. ஸ்ரீதர்தான் திராட்சையைப்போட்டு கெடுத்துட்டான்னு ஒரே சண்டை வேற. எவ்வளவு துடைச்சும் அந்த நாத்தமும், கூட வாந்தி நாத்தமும் ரொம்ப நாளைக்கு போவல.

முற்றியது 

Tuesday, September 3, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 4 : பணம் பத்தும் செய்யும் $$$$$$$

     


    வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய நீருற்றுகள், இரும்புச்சிற்பங்கள், கான்கிரீட் மற்றும் டெரக்கோட்டா சிற்பங்கள் என ஒவ்வொன்றும் உலகின் பெரிய கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு, அழகாக இருந்தன.

 ரோமன் கார்டன், ஜப்பானிய கார்டன் என்று அமைக்கப்பட்ட அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்டு இருந்தன. வீடு இருக்கும் இடம் ஒரு குன்றின் மேல் இருப்பதால், தோட்டங்கள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது.

ஒரு ரோஜாத்தோட்டத்தின் சரிவில் அழகான ஒரு நீச்சல் குளம் இருந்தது.

 பழைய ஸ்டைலில் கற்களால் வடிவமைக்கப்பட்டு, சுற்றிலும் சிற்பங்களால் சூழப்பட்டிருந்தது. இங்குதான் ராக்கஃபெல்லரின் பிள்ளைகள் நீச்சல் கற்றுக் கொண்டனராம்.

           வீட்டின் கிழக்குப்பகுதியில்  ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கால்ஃப் மைதானம் இருந்தது. பறந்து விரிந்த அந்த மைதானத்தை இன்றும் அவர்கள் குடும்பம், ஆண்டிற்கு ஒரு மில்லியன் டாலர் செலவில் பராமரித்து வருகிறார்கள். குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒரு பத்து பேர் ஆண்டுக்கொரு முறை, கோடைகாலத்தில் ஒரு பத்து நாள் இங்கு தங்கியிருந்து விளையாடுவார்களாம். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ? வேறு பொதுமக்கள் இங்கு வந்து விளையாட  அனுமதியில்லை.

              அடுத்து, வீட்டிற்குப்பின்புறம்  ஒரு சுரங்கப்பாதை இருந்தது. வீட்டிற்கு பலபொருட்களை சப்ளை செய்யும் வேன்களும், லாரிகளும் வந்து வந்து போவதும், அவைகள் ஏற்படுத்தும் சத்தமும் ,ராக்கஃபெல்லருக்கு எரிச்சலை மூட்டியதால் சத்தம் வராமல் அவைகள் வந்து செல்ல மலையில் சுரங்கம் ஏற்படுத்தப்பட்டதாம். வாகனங்கள் சுரங்க வழியில் அன்டர் கிரவுண்ட் வழியாக நேராக வீட்டின் பேஸ்மண்ட்டில் பொருள்களை இறக்கிவிட்டு திரும்பிவிடுமாம். ம் பெருமூச்சுதான் வந்தது. நம் வீட்டில் என்ன சத்தம்?  என்றால் சத்தம் உடனே அதிகம் ஆகிவிடுகிறது. பேசாமல் காதில் பஞ்சை வைத்துக் கொள்வதுதான்  உத்தமம்.

           இதுபோல ரான் சொன்ன இன்னொரு  சம்பவமும்  ஆச்சரியத்தைக் கொடுத்தது.முதன்முதலாக வீடு கட்டும்போது, அவர்களுடைய பகுதிகளின் குறுக்கே ஒரு ரயில் பாதை இருந்ததாம். அடிக்கடி அந்த வழியாக ரயில்கள் போவதின் சத்தம் தலைவருக்கு இடைஞ்சலாக இருக்க, மிகுந்த பொருட்செலவில் அந்த ரயில் பாதையை அவருடைய எஸ்டேட்டைவிட்டு தள்ளி அமைக்க ஏற்பாடு செய்தாராம். இப்படி நடக்க முடியாத பல காரியங்களை செய்தார் ராக்கஃபெல்லர்.அவருடைய செல்வாக்கையும், பணபலத்தையும் நினைத்தால், அம்மாடியோய்.
              பஸ் எங்களை ஏற்றிச்சென்று  அடுத்த பகுதியில் இறக்கிச் சென்றது. அது அவர்களின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளே ஹவுஸ். மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட அந்த உள் அரங்கில், சிறியவர் முதல் பெரியவர் வரை விளையாடக்கூடிய அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனியே இடம் அமைக்கப்பட்டிருந்தது. உறை பனிக்காலத்திலும் குளிர்காலத்திலும் விளையாடக்கூடிய முறையில் அது இருந்தது. செஸ் போன்ற, சிறிய விளையாட்டு துவங்கி, டென்னிஸ், ஷட்டில் காக் போன்ற பல விளையாட்டு அரங்கங்கள் உள்ளே இருந்தன. வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.


                 அடுத்த ஸ்டாப் "கிரீன் ஹவுஸ்". பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகையில், உலகின் பல வித தாவரங்கள், கொடி  வகைகள், பூச்செடிகள், மூலிகைகள் ஒட்டுச் செடிகள், போன்சேக்கள் ஆகியவை வளர்த்து பராமரிக்கப்பட்டன.
with my Daughter Anisha at the Coach house

            கடைசி   ஸ்டாப் "கோச் ஹவுஸ்".மூன்றடுக்கில் உயரமான ஒரு கோட்டை போன்ற கல் கட்டடம். நுழைந்தால் ஒரு பகுதி முழுவதும், குடும்பத்தினர் பயன்படுத்திய சிறிய, பெரிய கோச் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனை யார் யார் பயன்படுத்தினார்கள் என்பதின் சான்றாக, ஒவ்வொரு வண்டியின் முன்னால், அவர்கள் அதே கோச் வண்டியில் உட்கார்ந்து சவாரி செய்யும் புகைப்படங்கள் இருந்தன. வண்டிகள் பளபளவென்று இன்றும், அழகாக மெயின்டெயின்  செய்யப்பட்டு இருந்தன. அதன் அடுத்த பகுதியில் பிரமாண்டமான ஓபன் லிஃப்ட் இருந்தது. ஒரு வேளை கோச்கள் ரிப்பேர் ஆனால், அந்த ஓபன் லிஃப்ட் மூலம் அப்படியே மூன்றாவது தளத்தில் உள்ள பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ரிப்பேர் செய்யப்படுமாம். அந்தப்பகுதியின் இறுதிப்பகுதியில், குதிரை லாடங்கள் இருந்தன. பல குதிரைகள் நின்று ஓய்வெடுக்க தனித்தனியாக தடுக்கப்பட்டு பல அறைகள் இருந்ததன. அதன் பக்கத்தில் அவற்றுக்கான மருத்துவமனையும் இருந்தது. ஆனால் இன்று ஒரு குதிரை கூட இல்லை. அவை தேவையுமில்லை.

         கட்டடத்தின் மறுபகுதியில் ராக்கஃபெல்லர் குடும்பத்தினர் பயன்படுத்திய வித விதமான மோட்டார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மாடலிலிருந்து கார்கள் இருந்தன. 

இருப்பதிலேயே பழைய கார், (Ford) சிறிய டிராக்டர் போல ஓபனாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. நெல்சன், நியூயார்க்கின் கவர்னராக இருந்தபோது பயன்படுத்திய 'NY-1' என்ற பிளேட் பொருத்திய, இரு படகுக்கார்களும் இருந்தன.

 பழைய ஜெர்மானிய, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கார்களும் அங்கிருந்தன. அதன் மேற்பகுதியில் வேலைக்காரர், பணியாளர்களின் தங்குமிடங்கள் இருந்தன. நூற்றுக்கணக்கானோர் இருந்திருப்பார்கள்.

       டூர் முடித்து  பஸ் இறக்கத்தில் செல்லும்போது நானும் என் மனைவியும் சோர்ந்து இருந்தோம். அவள் ஏறி, இறங்கி சுற்றியதாலும், எனக்கு நான் பார்த்த படோடப வாழ்க்கை கொடுத்த மலைப்பினாலும்.

       கைக்கும் வாய்க்கும்  (Hand to Mouth) இருக்கும் என் வாழ்க்கையை நினைத்தபோது "பிறந்தால் பணக்காரனாய் பிறக்க வேண்டும், இல்லையெனில் அட்லீஸ்ட் பணக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்" என்றேன். என்ன? என்று கேட்டுத்திரும்பினாள்  என் மனைவி. அய்யையோ கொஞ்சம் சத்தமாய்ச்சொல்லிவிட்டேன் போலிருக்கு. இருக்கும் வாழ்க்கையின் சமாதானத்தை கெடுக்க இஷ்டமில்லாத நான் அவளைப் பார்த்து சற்று வழிந்து பரிதாபமாய் சிரிக்க முயன்றேன்.

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி,

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

என்று நான் பலமுறை அவளுக்குப் பாடிய,கண்ணதாசனின் வரிகளை அவள் மெலிதாக பாடினாள். கொஞ்சம் சுதி தப்பினாலும், அது எவ்வளவு பெரிய உண்மை.

முற்றியது.

அடுத்த  வாரம் முதல் " மெயின் பயணம்"





Thursday, August 29, 2013

யாரடி நீ மோகினி? Part 1: மோகினிப்பிசாசு


மோகினிப்பிசாசு சுத்துதுன்னு ஹாஸ்டல் பூரா ஒரே புரளி. நள்ளிரவில் வெள்ளை உருவமொன்று சலங்கை சத்தத்தோடு ஹாஸ்டலைச்சுத்தி உலவுவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். தென்னந்தோப்புக்கு மறுபக்கமிருந்த பெண்கள் ஹாஸ்டல் வரை இது பரவிவிட்டது. பசங்களுக்கு ஒரே பயம். ஏனென்றால் கிட்டத்தட்ட அனைவருமே சலங்கை சத்தத்தை கேட்டதோடு சிலபேர் மோகினியைப்பார்த்தும் பலபேர் பார்க்காமலும் பார்த்த மாதிரி கதைகட்டி கூடிக் கூடி அதைப் பற்றி பேசினர். மாலை வந்தால் ரூமைவிட்டு வெளியே வரவே பயந்தனர். இரவில் பாத்ரூம் வந்தா என்ன செய்யறதுன்னு, நைட் சாப்பாட்டைக்கூட குறைச்சிட்டாய்ங்க. ராத்திரி வந்தா போர்வையை போத்திக்கிட்டு நெருக்க நெருக்கமா படுத்தாய்ங்க.
ஆனா எனக்கு மட்டும் பயமேயில்லைங்க. ஏன்னு கேக்கறீங்களா ? ஒங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒன்னும் வீரதீரனுமில்லை, வஸ்தாது ஒடம்புமில்லை. அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அதே என்புதோல் போர்த்திய ஒடுங்கிய உடம்பு. அப்ப சதை? ம்ஹும் அதை மட்டும் கேக்காதீங்க. எனக்கு அழுவாச்சி வந்துறும். பின்ன எப்படி எனக்குப் பயமில்லைன்னு கேக்குறீங்களா? நாங்கதாங்க  அந்த மோகினிப் பிசாசு. ஒன்னும் ஆச்சரியப்படாதீங்க, கொஞ்சம் பொறுமையாக்கேளுங்க.
"டேய் நாமளே ஒயின் தயாரித்தால் 
என்ன?" திடீரென்று ஒரு நாள் ஆறுமுகம் கேட்டான். சும்மார்றா  அதெல்லாம் வேலைக்காவாது" இது நான். நான் காந்திகிராமத்தில் பிளஸ்-2 படிக்கும்போது ஹாஸ்டலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் உண்டு. ஒரு புறம் முதிர்ந்த நீண்ட தென்னை மரங்கள், மறுபுறம் ஹைபிரிட் குட்டை மரங்கள். சிறிது ஏறினாலே பறித்துவிடலாம். சுற்றிலும் தோட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலோ என்னவோ என் பள்ளியின் பெயர் “தம்பித்தோட்டம்”. 
இரவு நேரங்களில் சைலன்ட் ஸ்டடி நடக்கும் போது நழுவி, வாட்ச்மேன் கண்களுக்குத்தப்பி, சாப்பிடும் எளனியும், வழுக்கையும் ஆஹா இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று இளநீராவது சாப்பிட்டால்தான் திருப்தி. இந்த ஆறுமுகம் பய ரொம்ப மோசம். திருட்டு எளனி சாப்பிட்டதோடு வாட்ச்மேன் தாத்தாட்ட போய் சாதுவாக "தாத்தா எவனோ களவாணிப்பயக நேத்து எளனி சாப்பிட்டுட்டு மட்டையைப் பரப்பி வச்சிருக்காய்ங்க" என்று கம்பிளைன்ட் செய்வான். நான் ஆறுமுகம் மற்றும் ஜோசப்தான் கூட்டாளிங்க. எல்லா திருட்டு வேலைக்கும் ஆறுமுகம் ஐடியா கொடுப்பான். ஜோசப் நடைமுறைப்படுத்துவான். நான் சைலன்ட் பார்ட்னர்.
அப்பதான் இந்த ஐடியாவை ஆறுமுகம் சொன்னான். "சரிடா செஞ்சு பார்த்திரலாம்ன்ட்டு"  ஜோசப் சொன்னான். நாங்க மூனுபேரும் ஒரு வாரமா பிளான் செஞ்சு, தென்னந்தோப்புல மோகினி சுத்தறதா வதந்தியைக் கிளப்பினோம். அதை உண்மையாக்க சனிக்கிழமை ஃப்ரீ டைம் விடும்போது, சின்னாளபட்டி சந்தையிலே மாட்டுச்சலங்கையை வாங்கிவந்தான் ஜோசப். எல்லாரும் தூங்கினப்புறம், ஆறுமுகம் கைலியைப்  போர்த்திக்கிட்டு சலங்கையை ஆட்டிக்கிட்டே ஹாஸ்டலைச் சுத்தி வந்ததோடு வாட்ச்மேன் தாத்தா குடிசையையும் சுத்தி வந்தான். ஹாஸ்டல் மொத்தமும் பயத்துல நடுங்கிட்டு இருந்துச்சு. தெரியாம நைட்ஷோ போவதுகூட நின்னுபோச்சு. வாட்ச்மேன் தாத்தா முதல்ல தைரியமா இருந்தாலும், அவர் பொண்டாட்டி ரொம்ப பயந்து, அவரையும் வெளியே விடல.

 தொடரும் >>>>>>>>>>

Monday, August 26, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 3 : மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி $$$$$$$$$$

John D Rockefeller .

நுழைவதற்கு முன் ராக்கஃபெல்லர் குறித்த சில அதிசயமான உண்மைகளை கீழே புல்லட் பாயிண்ட்டில் தருகிறேன்.
1) ஜான் டேவிசன் ராக்கஃபெல்லர் ஜூலை 8, 1839ல் ரிச்ஃபோர்டு, நியூயார்க் என்ற டத்தில் பிறந்தார்.
Eliza Davison Rockefeller


2) அப்பா பெயர் வில்லியம் ஏலி ராக்கஃபெல்லர், ஒரு சாதாரண சேல்ஸ் ரெப் . அதனை சாக்காக வைத்து குடும்பத்தினரைக் கவனிக்காது, பல நாட்கள் பல பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டதால், குடும்பப்பொறுப்பு மற்றும் ஆறு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தது அம்மா எலிசா.

3) இரண்டாவதாக  பிறந்த, ஜான் டி ராக்கஃபெல்லர் தன் அம்மாவுக்குத் துணையாக வான்கோழி வளர்த்தும், உருளைக்கிழங்குகள் மற்றும் தின்பண்டங்கள் விற்றும் உதவினார்.

4) சிறு வயதிலேயே ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கடைப்பற்றிய ராக்கபெல்லர் ஓகாயோவில் பள்ளிப்படிப்பு முடித்து, அதன்பின் புக் கீப்பிங் முடித்தார்.

5) கடைசி வரை மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் அவரை அண்டவே இல்லை. அவர் மகனும் அப்படித்தான்.

6) 1855-ல் தனது 16-ஆவது வயதில் உதவிக்கணக்காளராக, தனது முதல் வேலையை ஆரம்பித்து நாள் முழுவதும் உழைத்தார். முதல் சம்பளம் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் மட்டுமே.

7) 1859-ல் சிறிது சிறிதாக தொழில் செய்ய ஆரம்பித்தார். பின்னர் 1866-ல் தன் சகோதரர் வில்லியம் ராக்கஃபெல்லரோடு இணைந்து, 
கிளீவ்லண்டில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை  உருவாக்கினார்.

8) ஜூன் மாதம் 1870-ல் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சில வருடங்களில் அது அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.

9) போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் வாங்கி, தன்  நிறுவனத்தோடு சேர்த்ததால், இது தனிப்பெரும் (Monopoly) நிறுவனமாக உயர்ந்தது.

10) ஆலயத்திற்கு தன்  வருமானத்தில் 10 சதவீதத்தை கொடுத்ததோடு, பல சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டு வாரிக்கொடுத்த வள்ளல் இவர்.


அவர் ஆரம்பித்த பொது நிறுவனங்கள்:

v  சிகாகோ பல்கலைக்கழகம்
v  ராக்கஃபெல்லர் பல்கலைக்கழகம்
v  சென்ட்ரல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம்
v  ஜெனரல் எடுகேஷன் போர்டு
v  ராக்கஃபெல்லர் ஃபெளண்டேஷன்

11) ராக்கஃபெல்லர் குடும்பத்தின் மொத்த மதிப்பு $663.4 பில்லியன் டாலர்கள் (2007 மதிப்பின்படி) பில் கேட்ஸின் மதிப்பு $46 பில்லியன் மட்டுமே (2007 டாலர் மதிப்பின்படி)உலகின் முதல் பணக்காரரை விட இவர்கள் சொத்து ,எத்தனை மடங்கு அதிகம் பாருங்க

12) 1937ல் தன்னுடைய 97-வது வயதில் ராக்கஃபெல்லர் மரித்தார்.

13) ராக்கஃபெல்லர் குடும்பம் சமுதாயப்பணிக்காக வருடத்திற்கு 50 மில்லியனும் அவர்கள் ஃபெளண்டேஷன் மூலமாக வருடத்திற்கு சுமார் 170 மில்லியனும் செலவழிக்கிறார்கள்.

மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி .

இன்னும் வரும் !!!!!!!!!!!!

Thursday, August 22, 2013

இருபதாவது இல்லத்தரசி


            வரலாற்றுப்புதினங்களில் என்னுடைய விருப்பம் அதிகமாக வளரத்துவங்கிய போது, தற்செயலாக நம்மூர் "ஐயங்கார் வீட்டு அழகு" பொண்ணு ஒருவர் மொகலாய வரலாற்றை நாவலாக எழுதி பிரபலமடைந்ததை அறிந்து தொடர்பு கொண்டேன். அப்பொழுது நான் பகுதிநேர VJவாக பணியாற்றிய, நியூயார்க்கில் இயங்கிய "திராவிடியன் தொலைக்காட்சி"யில் ஒரு நேர்முகம் நடத்தலாம் என்று அவர்களிடம் சொன்னேன். உடனே அப்போது எழுதி வெளியிடப்பட்டிருந்த தன்  இரண்டு புத்தகங்களை தன் பப்ளிஷர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார்.
Indu Sudaresan

            அவர் பெயர் இந்து சுந்தரேசன்.(
http://www.indusundaresan.com) இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்து பின்னர் இங்கேயே 'சியாட்டில்' நகரில் தன குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

            அவர் எழுதிய முதல் புத்தகம் "The Twentieth Wife". "அட்ரியாபுக்ஸ்" நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இப்புத்தகம் இங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மெஹ்ருன்னிஷாவின் குடும்பம் ஒரு நாடோடியாக இந்தியாவில் நுழைவதில் ஆரம்பிக்கும் இந்த நாவலில், மொகலாயச் சக்ரவர்த்தியான அக்பரின் கடைசிகாலம், அவரின் மூத்தமகன் ஜஹாங்கீர் பொறுமையில்லாது அரியணையைக்கைப்பற்ற எடுத்த தோல்வியுற்ற முயற்சிகள், பின்னர் மெஹ்ருன்னிஷாவின் மேல் காதல், மொகலாய அந்தப்புரத்தின் அழகிகள், அதன் கடுமையான சட்டதிட்டங்கள் என அழகிய தடையில்லாத ஆங்கிலத்தில் அருமையாக எழுதப்பட்டதைப்படித்து அசந்துவிட்டேன். மிகவும் பெருமையாக உணர்ந்தேன். ஆங்கில எழுத்தாளர்களுக்கு சற்றும் குறையாத நடை, விவரணைகள், குழப்பமில்லாத தெள்ளிய நீரோடை போன்ற கதையமைப்பு, வரலாற்று நிகழ்வுகள், என அதிக ஆராய்ச்சியுடன் எழுதப்பட்ட இந்த நாவல் உலகத்தின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் இந்து இந்த நூல்களுக்கு பல அவார்டுகளை அள்ளியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டது,"The Feast of Roses", என்பது. இந்த நாவலில் பேரரசராக முடிசூட்டப்பட்ட ஜஹாங்கீர் எப்படி தடைகளை மீறி மெஹ்ருன்னிஷாவை திருமணம் செய்கிறார், மெஹ்ருன்னிஷா எப்படி "நூர்ஜஹான்" என்ற பட்டத்துடன் செல்வாக்குப் பெற்றார், ஜஹாங்கீரின் மகன் நூர்ஜஹானின் மருமகளை திருமணம் செய்தது. பின்னர் அவன் ஷாஜஹான்  என்ற பட்டத்துடன் பேரரசரானது, அவன் மனைவி அர்ஜுமன்ட், மும்தாஜ் என்ற பெயரில் பிரபலமடைந்தது, ஆகியவை வருகின்றன.

            தன் மூன்றாம் நாவலில் ( Shadow Princess) தாஜ்மஹால் கட்டப்பட்ட கதை, ஷாஜஹானின் மகன்களுக்குள் நடந்த வாரிசுப் போட்டி, அதன்பின் அவுரங்கசீப் பட்டத்துக்கு வருதல் ஆகியவை வருகின்றன.
            உலகின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த மூன்று நாவல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பலரின் ஆசைக்கிணங்க (நான் கூட மொழிபெயர்க்க ஆசைப்பட்டேன்) இப்போது வானதி பதிப்பகத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.
            மொழிபெயர்த்தவர் வேறு யாரும் இல்லை. இந்துவின் அன்னை, 'மதுரம் சுந்தரேசன்' அவர்கள். மொழி பெயர்ப்பில் எந்த அனுபவமுமில்லாத இவருக்கு "இருபதாவது இல்லத்தரசி" முதல் முயற்சி. இந்த முயற்சி பாராட்டப்படக்கூடியது என்றாலும், பல இடங்களில் திக்கித்திணறிச் செய்த நேரடி மொழி பெயர்ப்பில் (Literal Translation) குழப்பியடித்திருக்கிறார். ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்க்காமல், அதன் சாரத்தை உணர்ந்து அதனைத் தன்னுடைய மொழியில் கொடுத்திருந்தால், மூலநூலின் அழகு கெடாதிருந்திருக்கும். அவரது அனுபவமின்மை பல இடங்களில் வெளிப்படுகிறது. அதனை எடிட் செய்தவர்கள், எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது ஆச்சரிய மூட்டுகிறது.

            ஆனால் அவரது இரண்டாவது மொழிபெயர்ப்பான "இதய ரோஜா" வில் அந்தப்பிரச்சனை வெகுவாக குறைந்துள்ளது. இப்பொழுது மூன்றாவது நாவலும் “நிழல் இளவரசி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி வந்திருக்கிறது. வாங்கிப்படிக்க வேண்டும். 

நம் வாசகர்கள் முடிந்தால் மூலநூலான ஆங்கிலத்தில் வந்தவற்றைப் படிக்கலாம். அல்லது தமிழில் வெளிவந்த நூல்களைப் படிக்கலாம்.
            இதில் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், இந்துவின் இந்த நாவல்களைத்தழுவி “மல்லிகா”   என்ற தலைப்பில் எபிக் டிவியில் ஒரு தொலைக்காட்சி சீரியல் வரவிருக்கிறது.
Indu-Sundaresan-author-of-the-book-The-Twentieth-wife-along-with-the-cast-of-the-show
           
 இந்து சுந்தரேசன் மேலும் பல புத்தகங்கள் எழுதி அழியாப் புகழ் பெற பரதேசியின் வாழ்த்துக்கள்.
Indu Sundresan


Monday, August 19, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 2 : கலை மாளிகையா? கனவு மாளிகையா ?


       வீட்டுக்குள் ஒரு அமானுஷ்ய அமைதி இருந்தது. உலகெங்கிலும் இருந்து, பலவிதமான கலைப்பொருள்களை கண்ணை மூடிக்கொண்டு , கரன்சிகளைக்கொட்டி வாங்கி ,வீட்டின் பல இடங்களில் வைத்திருந்ததனர். அவற்றில் குறிப்பாக சீனாவின் "டங் டைனாஸ்டி" (13 ம் நூற்றாண்டு ) யைச் சேர்ந்த கலைப்பொருட்கள். உலகின் தலை சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் ,சிலைகள் ,சிற்பங்கள், 2000 வருட பழைய கலைப்பொருட்கள்அழகாக வைக்கப்பட்டிருந்தன . 
Rockefeller Junior

வீட்டைக்கட்டுவதற்கே ஜான் டி ராக்கஃபெல்லர் கொஞ்சமே செலவு செய்திருந்தாலும், அவர் மகன், வீட்டை அழகுபடுத்துவதற்கு அதைவிட பலமடங்கு அதிகம் செலவு செய்தாராம் .
       அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வெள்ளி, பீங்கான் தட்டுகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பீங்கான் பாத்திரங்கள், இங்கிலாந்திலிருந்தும், மேற்கு ஜெர்மனியில் இருந்தும் பிரத்யேக ஆர்டராக செய்யப்பட்டு அவற்றில் JDR என்ற இனிஷியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன .
       ராக்கஃபெல்லரின் அழகான அலுவலக அறையைப் பார்த்தோம் . அவர் ஓய்வு பெற்ற பிறகு, சுமார் 40 வருடங்கள் பல்வேறு சாரிட்டிகளுக்கு உதவுவதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார். அலங்காரமான கூடத்தில் ஒரு மிகப்பெரிய பிக்காசோ ஓவியம் இருந்தது .வீட்டுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் ஒன்றையும் படம் எடுக்க முடியவில்லை. தரையை மெத்து மெத்தென்ற பெர்சியன் கார்ப்பட்டுகள் அலங்கரித்தன. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறைஇருந்தது ."என்ன கிச்சன் இவ்வளவு சிறிதாக இருக்கிறதே "என்று நினைத்த போது, நினைவை அறிந்தவர் போல ரான் சொன்னார், “இது கிச்சன்  இல்லை, இது பட்லர்களின் ஓய்வு அறை”, என்று.வேலையில்லாத சமயத்தில் அங்குமிங்கும் நடமாட அனுமதியில்லை என்பதால், இந்த காத்திருப்பு அறையில் இருப்பார்களாம். அங்கே ஒரு சிறிய கேபினட்டில் பல எண்கள் இருந்தன .ஒவ்வொரு எண்ணும் வீட்டின் பல பகுதிகளை மற்றும் ரூம்களைக்குறிக்கும். அதில் லைட் எரியும் போது, உதவி தேவைப்படுவதை அறிந்து பட்லர்கள் அங்கு செல்லவேண்டும். அந்த அறையில் ஏகப்பட்ட கப் சாஸர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன.  பெரிய விருந்துகள் நடக்கும்போது பயன்படுத்தப்படுமாம். அதோடு நிறைய அவன்கள் இருந்தன. உணவுப்பண்டங்கள் சிறிய லிப்ட் மூலம், டைனிங் ஹாலுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். குடும்ப டைனிங் ஹாலை கடந்து வந்தால் ,

 பின்புறமுள்ள பகுதி, கூரை முதற்கொண்டு கண்ணாடியில் செய்யப்பட்டு லெளஞ் போல இருந்தது . அதன் பின்னால் மாபெரும் ஹட்சன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .
Nelson Rockefeller

     ஜுனியரின் மகன் நெல்சன் ராக்கஃபெல்லர், மூன்றாவது பிள்ளையாக இருந்தாலும், மிகுந்த சூட்டிகையாக இருந்ததால், அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவர் பல பேரின் கோரிக்கைக்கு இணங்க அரசியலில் இறங்கி, மாபெரும் நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக இருமுறையும், அமெரிக்க நாட்டின் துணை அதிபர் (Vice President) ஆக ஒருமுறையும் இருந்தபடியால், இந்த வீடு அவருக்கு தன்னுடைய சகோதர சகோதரிகளால் ஒருமனதாக அளிக்கப்பட்டது. அவர் தன்  பங்குக்கு, தன் அம்மா போல் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களில் கவரப்பட்டு, வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதுமாக, ஓவியங்களாலும் பிகாசோ டேப்பஸ்டிரியாலும் அலங்காரம் பண்ணியுள்ளார்.
 அவருடைய அம்மாவைப்பற்றிச்சொல்ல வேண்டும், அவர் பெயர் ஆபி ஆல்ட்ரிச் ராக்கஃபெல்லர். 

ஜுனியரின் மனைவியான இவர் அவரைத் திருமணம் செய்யும் போது, அப்போதிருந்த ஒரு செனட்டராக இருந்த தந்தையின் ஒரே வாரிசாக இருந்ததால், ஜுனியரைக் காட்டிலும் அதிகமான சொத்தோடு, இக்குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இனம், இனத்தோடும், பணம் பணத்தோடும் தான் சேரும் என்பது எவ்வளவு உண்மை. ஜுனியர், பழம் கலைப்பொருட்களை (Antiques) சேகரித்துக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி  ஆபி, மாடர்ன் ஆர்ட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். நியூயார்க்கில் உள்ள MOMA என்று அழைக்கப்படுகிற (Museum of Modern Art) மிகப்பெரிய மியூசியத்தை நிறுவி தன்னுடைய விலையுயர்ந்த, மிகப்பிரபலமான ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்களை நன்கொடையாகவும் அளித்தார். தாயின் வழியில் தனயன் நெல்சனும் மாடர்ன் ஆர்ட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
    மேலே உள்ள பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால். கீழ்ப்பகுதியின் ஓவியங்களை பார்த்து முடித்து வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். தோட்டமா அது?

தொடரும்>>>>>>>>>>>>>>