Courtesy Google |
வேர்களைத்தேடி பகுதி –38
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
இருபக்க இளைஞர்களும் பலமாக மோதிக்
கொண்டனர். இருபுறமும் கற்கள் பறக்க சிலம்பம் காற்றைக் கீற, ஆக்ரோஷமான போர் போர் போர்.
நல்லவேளை எனக்குத் தெரிந்து உயிர்ச்சேதம் இல்லை. ஆனால் நிறையப் பேருக்கு பலத்த காயம்.
இறுதியில் தேவர் படை மற்றவரை அடித்துத்துரத்த, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல்
தெற்குத் தெரு மக்கள் தங்கள் தெருக்களுக்கு ஓடி மறைய இவர்கள் உள்ளே புக முயலவில்லை
அங்கிருந்த மற்ற அப்பாவி மக்களும் அவரவர் வீடுகளுக்கு ஓடிவிட அம்மன் மட்டும் அனாதையானது.
எனக்கும் பலத்த காயம் வெளியே தெரியாத உள்க்காயம். ஆங்காங்கே சிறுசிறு
தடிப்புகள், நெல்லிக்காய்கள் முளைத்திருந்தன. நல்லவேளை கொய்யாப்பழம் காய்க்கவில்லை.
ஆனால் இது நான் போரில் பட்ட காயங்கள் இல்லை வீட்டில் என்னுடைய அப்பா, சொல்லச் சொல்லக்
கேட்காமல் வெளியே போனதால், அதுவும் கலவர சமயத்தில் போனதால் கொடுத்த பிரம்பு அர்ச்சனைதான். எப்போதும் வந்து தடுக்கும்
அம்மா அன்று மட்டும் "பயபுள்ளைக்கு நல்லா வேணும் நீசப்பய" என்று பல்லைக்
கடித்துச் சொன்னது என் புண்ணில் சுண்ணாம்பு வைத்தது. "நீசப்பய" என்ற வார்த்தை
வந்ததால் அம்மா மிகவும் கோபமாக இருக்கிறார்கள் எனத்தெரிந்தது. ஏனென்றால் அவர்கள் அதீத
கோபப்பட்டால் மட்டும் பல்லைக்கடித்து நாக்கைதுருத்தி "நீசப்பய " என்ற வார்த்தையை
பயன்படுத்துவார்கள். எப்போதாவது தலையில் குட்டுவதும், காதைத் திருகுவதும், தொடையைக்
கிள்ளுவதும் நடக்கும்.
மதுரையிலிருந்து ரிசர்வ் படை வந்து சேருவதற்குள் இங்கே எல்லாம்
நடந்து முடிந்துவிட்டது. யூனிபார்ம் அணிந்த சட்டிப் போலிஸ் (LOL) ஊரின் முக்கிய வீதியில்
அணிவகுப்பு நடத்தினர்.
ஊருக்குள் மூன்று தினங்களாக கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
பள்ளிகள் மூடப்பட்டன. 144 தடையுத்தரவு போடப்பட்டது. என்னால் எங்கும் போகமுடியவில்லை.
நூலகம் கூட போகமுடியாததால் தவித்துப் போனேன். அப்போது தொலைகாட்சி இல்லை, வெறும் ரேடியோ
மட்டும்தான். தினத்தந்தியில் வந்திருந்த தேவதானப்பட்டி கலவரச் செய்தியை எங்கிருந்தோ
அப்பா கொண்டு வந்து காண்பித்தார். அது எதிர்மறைச் செய்தி என்றாலும், "ஆஹா நம்மூர்
பெயர் பேப்பரில் வந்திருச்சு" என முட்டாள்த் தனமாக மகிழ்ச்சியடைந்தது ஞாபகம் வருகிறது.
மூன்று நாட்கள் எந்தவித சம்பவமும் இல்லாமல் கழிந்தது. தேவதானப்பட்டியின்
காவல் நிலையத்தில், காவல் துறை உதவி ஆய்வாளர், பெரியகுளம் சரக காவல்துறை ஆய்வாளர்,
மாவட்ட உதவி ஆட்சியாளர் ஆகியோர் முன்னிலையில்
சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. ஐந்து நாட்கள்
கழித்து ஊர் பழைய நிலைமைக்கு வர, ரிசர்வ் படை திரும்பிச் சென்றது. பள்ளிகளும் திறக்கப்பட்டன.
ஆனால் அதே இரவில் சில மர்ம நபர்களால், தெற்குத் தெரு கொளுத்தப்பட்டது.
சுமார் 300க்கு மேலான குடிசைகள் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்ட வசமாக இப்போதும் உயிர்
சேதம் எதுவும் நடக்கவில்லை. ரிசர்வ் படை மீண்டும் வந்திறங்கியது.
இந்தச் சமயம் மதுரையிலிருந்து கலெக்டர் பெரியகுளம் MLA ஆகியோரும் வந்து பார்த்தனர். அவர்கள் எடுத்த முயற்சியில்
கருகிப்போன முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசாங்கமே ஓடு வேய்ந்து கொடுக்க திட்டமிடப்பட்டது.
அதற்கப்புறம் நடந்தது தான் வேடிக்கை, இரவு நேரத்தில் திடீர் திடீரென்று
தெற்குத்தெருவில் இருந்த மற்ற குடிசைகள் கொளுத்தப்பட்டு எரியும். புரளி என்ன வென்றால்
ஓட்டுக் கூரை கிடைக்குமென்பதால் அவர்களே கொளுத்திக் கொள்வதாக பேசினார். அது உண்மையோ
பொய்யோ எரிந்து போன 300 தான்பிறது எரிந்து போன 50ம் சேர்ந்து 350 வீடுகளுக்கு ஓடு வேயப்பட்டு
தெற்குத் தெருவின் தோற்றம் மாறிப்போனது.
வீடு எரிந்துபோனால் வாழ்க்கை ஸ்தம்பிததுவிடுமென நினைத்ததற்கு மாறாக
அதிக நன்மை இந்த கலவரத்தால் விளைந்துவிட்டது வடக்குத் தெருக்காரர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய முடியும்.
தெற்குத்தெரு மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள் அல்லது
பண்ணை வேலை செய்பவர்கள். நாத்து நடுவது, களை பிடுங்குவது, மட்டுமல்லாமல் மற்ற நேரங்களில்
புல்கட்டு விற்பது, விறகு வெட்டிக்கொண்டு வந்து விற்பது போன்ற வேலைகளைப் பெண்கள் செய்வார்கள்.
ஏர் உழுவது, மாடு ஆடு மேய்ப்பது, இரவுக்காவல் போன்ற பல வேலைகளை ஆண்கள் செய்வார்கள்.
கடுமையாக உழைத்துப் பிழைக்கும் சமூகம் இது. ஆனால் எனக்குத்தெரிந்து தீண்டாமையெல்லாம்
எங்கள் ஊரில் இருந்ததில்லை. அந்தச் சமயம் என்று நான் சொல்வது 1970 முதல் 1980 வரை.
அவர்கள் சாப்பாட்டுக்குக் கடைக்குச் செல்லலாம், டீக்கடைகளில் பொதுவான தம்ளர்களில் குடிக்கலாம்.
என்னுடைய தாத்தா செபஸ்டியான் அவர்கள் முயற்சியில் செல்வநாயகம், வீரச்சின்னன், குட்டை
வாத்தியார் போன்ற பலர் ஆசிரியப் பயிற்சி பெற்று பள்ளிகளில் பணியாற்றினர்.
அந்தக் காரணத்திற்காகத்தான் முத்தாளம்மன் திருவிழா நடக்கும்போது மட்டும் மதுரை ரிசர்வ் படை
வந்து குவிந்துவிடும். கலவரம் நடக்காமல் தடுப்பதற்காக. ஆனால் அதன் பின்னரும் முத்தாளம்மன்
தெற்குத் தெருவின் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது எப்படியென்று
தெரியவில்லை
1980களுக்குப்
பின்னர் மறுபடியும் கலவரம் வந்து துப்பாக்கிச் சூடெல்லாம் நடந்தது என்று கேள்விப் பட்டேன்.
1979 லேயே மேல்நிலைப்படிப்பு படிக்க, காந்திகிராமம், மதுரை பின்னர் வேலைக்கு சிவகாசி,
கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் இப்போது நியூயார்க் என்று ஊரைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டேன்.
இருந்தாலும் ஊரின் நினைவுகள் என்னைவிட்டு என்றும் நீங்காது.
சாதி மதப்பாகுபாடுகள் ஏன் வந்தது எப்படி வந்தது, யாரால் வந்தது?
என்று ஆராய்ச்சியை விட்டுவிட்டு இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம்தான் என்று எண்ணிவிட்டோமென்றால்
உயர்வு மனப்பான்மையும் வராது, தாழ்வு மனப்பான்மையும் வராது.
தொடரும்.
மன்னிக்கவும் :
மிகுந்த வேலைப்பளுவின் காரணமாக ஒரு இரண்டு வாரங்கள் தொகுதிப்பக்கம் .மன்னிக்க தேர்தல் நேரமென்பதால் வாய் குளறுகிறது ,வலைப்பக்கம் வரமுடியவில்லை .உங்கள் ஆதரவு இன்னும் இருக்கிறது என்றால் தொடர்ந்து எழுத முயல்கிறேன், நன்றி.
நல்ல கருத்து
ReplyDeleteநன்றி ஆரூரார்.
Deleteநன்றி ஆரூர் பாஸ்கர்.
Delete// சாதி மதப்பாகுபாடுகள் ஏன் வந்தது எப்படி வந்தது, யாரால் வந்தது? என்று ஆராய்ச்சியை விட்டுவிட்டு இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம்தான் என்று எண்ணிவிட்டோமென்றால் உயர்வு மனப்பான்மையும் வராது, தாழ்வு மனப்பான்மையும் வராது. //
ReplyDeleteஇது தான் இன்றைக்கும் என்றைக்கும் தேவை... அதிகம் தேவை...
உண்மைதான் திண்டுக்கல் தனபாலன்.
DeleteHi! I've been following your web site for a while now and finally got the courage
ReplyDeleteto go ahead and give you a shout out from Dallas Texas!
Just wanted to mention keep up the good job!