![]() |
மஞ்சளாறு அணை ( Thanks Dinamalar) |
வேர்களைத்தேடி
பகுதி –32
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/11/blog-post.html
போனவாரம் காமாட்சியம்மன்
கோவிலைப் பற்றிச் சொல்லும்போது மஞ்சளாற்றைப் பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். கோடை மலையில்
உற்பத்தியாகும் தலையாற்றிலிருந்து பிரிந்து கீழே வருகின்ற ஆறுதான் மஞ்சளாறு.
கொடைக்கானல் செல்லும்போது
போகிற வழியில் டம்டம் பாறைக்கருகில் இறங்கி இயற்கை அழகை ரசித்து மலைப்புறத்தில் பார்த்தீர்கள்
என்றால் உருக்கிய வெள்ளியைக் கொட்டுவது போல் தூரத்தில் ஒரு பிரமாண்டமான நீர்வீழ்ச்சி
தெரியும். அதன் பெயர்தான் தலையாற்று அருவி. அதனைப்பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்த
டம்டம் பாறையென்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.
![]() |
தலையாற்று அருவி. |
மதுரையின் கலெக்டர்
மற்றும் வெள்ளைக்கார உயர் அதிகாரிகள் தங்கள் கோடைக்காலத்தை தாங்க முடியாமல் கண்டுபிடித்த
கோடை வாசஸ்தலம்தான் கொடைக்கானல். கோடைக்கானல் தான் கொடைக்கானல் என்றும் ஆங்கிலத்தில்
கொடைக்கனால் என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள்
கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல முடியாது .ஏற்கனவே மலைவாழ் மக்களும் நம் மலையைச் சார்ந்து
வாழும் தமிழ் மக்களும் சிறிய அளவாக இருந்தார்கள். வெள்ளைக்காரன் இந்த இடத்தைப் பார்த்து
அசந்துபோய் இங்கே விடுதிகள் பங்களாக்களை உருவாக்கி கோடைக்காலத்தில் இங்கு. வந்து தங்க
ஆரம்பித்தார்கள் .அதன்பின் இதன் எதிர்காலத்தை உணர்ந்து கொண்ட ஜெயராஜ் நாடார் அவர்கள்
இங்கு பல இடங்களை வாங்கிப்போட்டு பல பெரும் தங்குமிடங்களை கட்டினார். இன்னும் கொடைக்கானலில்
ஜெயராஜ் நாடாரும் அவருடைய குடும்பத்தாரும் அமைத்த பல விடுதிகளைப் பார்க்கலாம். இதன்மூலம்
நல்ல பொருளீட்டினார்கள்.
இந்தக் குடும்பம்தான்
SGJ என்ற பஸ் நிறுவனங்கள் மூலம் கொடைக்கானலுக்கு பல பேருந்துகளை ஆரம்ப காலத்தில்
இயக்க ஆரம்பித்து இன்றுவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான
பஸ்கள் மற்றும் பணிமனைகள் இருக்கின்றன. இவை பெரியகுளம், மதுரை, தேனீ, திண்டுக்கல் என்று
பல பகுதிகளை இணைக்கின்றன. பெரியகுளத்தில் இருந்த ஜெயா தியேட்டர், மதுரையில் இருந்த
ஜெயராஜ் தியேட்டர், பெரியகுளத்தில் இயங்கும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி போன்ற பல நிறுவனங்கள் இவர்களுக்குச் சொந்தமானது.
எங்கேயோ ஆரம்பித்து
எங்கேயோ சென்றுவிட்டேன்.
ஆம் அப்படி அங்கு
தங்கியிருந்த வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும்
வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர்
வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின்
மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம்
மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.
![]() |
மஞ்சளாறு அணை |
அங்கேயிருந்து
புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும்
ஆறே மஞ்சளாறு என்பது.
கொடைக்கானல் மலையில்
ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும்.
அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும். இதுவரை இந்த அழகான காட்சியான
அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம்
தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள். முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து
கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே
மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.
![]() |
அணையின் அருகில்
கும்பலாகத் தெரியும் வீடுகள் தான் தேவதானப்பட்டி.
இந்த அணை பெருந்தலைவர்
காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல்
மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு
மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப்
பகுதியையும் கொண்டுள்ளது .
மஞ்சளாறு அணையின்
நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர்
மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி
மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து
200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
தேவதானப்பட்டி,
செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு,
கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால்
பாசன வசதி பெறுகின்றன.
அணையில் தண்ணீர்
திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக்
காட்சிகள்.
மஞ்சளாறு அணை
தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன்
கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப்
பின்னர் வைகையில் கலக்கிறது.
ஆனால் மஞ்சளாறு
அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி
பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச்
சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.
அந்த வாய்க்காலில்
தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள்,
கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித்
தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.
வாய்க்காலில்
குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும். என்னுடைய பக்கத்துவீட்டுப்
பெண்களுடன் சேர்ந்து என் அம்மா அழுக்குத்துணிகளை எடுத்துக் கொண்டு வாய்க்காலில் துவைத்து
எடுத்துக் கொண்டு வருவார்கள். நானும் பலமுறை துணைக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கே
தண்ணீரில் விளையாடி மகிழ்ந்திருக்கிறேன். வாய்க்காலின் குறுக்கே உள்ள சாலையைக்கடக்க
வாய்க்கால் பாதாள ஸ்லூஸ் மூலமாக அடுத்த பகுதிக்கு செல்லும். இதில் நீர் சுழன்று செல்லும். இதில்
விழுந்து செத்துப் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தண்ணீர் இங்கே அதி
வேகத்துடன் சுழன்று செல்வதால் அதில் மாட்டுபவர்களை இழுத்துச்சென்று உள்ளே போய்ச் செருகிவிடும்.
டாம்டாம் பாறை
வழியே செல்லும் டிரைவர்கள் அங்கு நிறுத்தி பழம், பூ வைத்து கும்பிட்டுச் செல்வார்கள்
ஏனென்றால் அதற்கு ஒரு திகில் கதை இருக்கின்றது.
தொடரும்
விளக்கமான தகவல்கள்... திகில் கதையும் தெரிந்து கொள்கிறேன்...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன் .
Deleteஎங்கள் ஊர் .
ReplyDeleteஉங்கள் ஊர் தேவதானப்பட்டி என்றால் ஈரோடு என்பது யாரோடு ஊர்?
Deleteமஞ்சள் ஆறு? ஏதோ சினிமா பாட்டில் கேட்ட ஞாபகம் சார். அறிமுகத்துக்கு நன்றி!!
ReplyDeleteஎந்தப்பாட்டு என்று ஞாபகம் வரவில்லை பாஸ்கர் .
DeleteHow to go the water falls from vathalagundu busstop
ReplyDeleteThis is my WatsApp & cell No
6380783551
Which Water falls that you are talking about?
Delete