Monday, February 5, 2018

பரதேசியின் சுன்னத் கல்யாணம் !!!!!!!!!!!

வேர்களைத்தேடி பகுதி: 4

Image result for சுன்னத் கல்யாணம்

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/3-httpparadesiatnewyork.html
தமிழ்நாடு முழுதும் அம்மா, சின்னம்மான்னு ஓட்டிக்கிட்டு இருக்கும்போது அது என்னப்பா பவுனம்மா, அது யாரு என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
"பவுனம்மா, வீட்ல இருக்கீகளா", என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன். யாரோ வீட்டில் எப்படி நான் நுழையமுடியும் என நீங்கள் நினைக்கலாம். அது யாரோ வீடு இல்லை, நான் வளர்ந்த வீடு.
என் வீட்டில் சில சமயம் சாப்பாடு செய்வதற்கு நேரமாகிறது, அல்லது செய்த பண்டம் பிடிக்கவில்லை என்றால் நேராக எதிர்வீட்டில் உள்ள பவுனம்மாவைத் தேடிப்போய் விடுவேன். அங்கே கைமணக்க வாய் மணக்க நல்ல கறிசோறு சாப்பிட்டு விட்டுத்தான் திரும்புவேன். அங்கேயே நிறையப் பேர் இருந்தாலும், நானும் அந்த வீட்டில் ஒரு அங்கம்தான். வீட்டினுள்ளே எங்கு வேண்டுமானாலும் போவதற்கு எனக்கு உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அது ஒரு முஸ்லீம் வீடு, நான் ஒரு கிறிஸ்தவன் என்ற எந்தப் பாகுபாடும் எனக்கோ அவர்களுக்கு எப்போதும் வந்ததில்லை. குறிப்பாக அவர்கள் செய்யும் பிரியாணி மற்றும் தால்ச்சா, ஆகா அந்த சுவையை நினைத்தால் இன்றும் வாய் ஊறுகிறது.
அந்த வீட்டில் எல்லோரும் எனக்கு உறவுதான். பவுனம்மாவின் கணவர் முத்தலீப் அத்தா, பவுனம்மாவின் அத்தா நாகூரான் நன்னா, அம்மா அலிமா நன்னி, சகோதரர்கள் அப்பாஸ் மாமா, சேட்டு மாமா, பஷீரா காளா என எல்லோரையும் உறவுமுறை சொல்லியே கூப்பிட்டு வளர்ந்தேன். அவரின் பிள்ளைகள், ஹக்கீம், அப்துல்லா, ரியாஸ், ரமீஜா என எல்லோருமே என நண்பர்கள். இதில் ரமீஜா என் கூடப்படித்த பெண்.
எங்களுக்கு அழைப்பில்லாமல் எந்த ஒரு முக்கிய நிகழ்வும் நடந்ததில்லை. பிள்ளைகள் எல்லாரும் என் அப்பாவிடம் படித்தவர்கள். எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
இதில் பவுனம்மா ரொம்ப விஷேசமானவங்க. ஆரம்பப்பள்ளி கூடப்படிக்காதவங்கதான். ஆனா அவங்க ரொம்ப விவரமானவங்க. தன் பிள்ளைகள் மட்டுமில்லாமல் தன் சகோதர சகோதரிகளையும் படிக்க வைத்து கரையேற்றியவர்கள் அவர்கள்.
பவுனம்மா படிக்காதவர் என்றாலும் அந்தத்தெருவுக்கே ஆலோசனை சொல்பவர். எந்தக் காரியத்துக்கும் அவரைக் கேக்கலாம். குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும், காய்ச்சல் சளி பிடித்தால் என்ன மருந்து சாப்பிடனும்னு தெருவுக்கே ஆலோசனை சொல்வாங்க.

Related image


ஒரு முறை அவர்கள் வீடு விழாக்கோலம் கண்டிருந்தது. என்ன என்று கேட்டால் சுன்னத் கல்யாணம் என்றார்கள். அதற்கு முன்னால் அதனைப்பற்றி கேள்விப் பட்டிராததால் யாருக்கோ கல்யாணம் என்று நினைத்துவிட்டேன். யாருக்குக் கல்யாணம் என்று நன்னாவிடம் கேட்டால் அவர் ரெண்டு மூணு பேரை சொன்னார். என்ன இது அவர்கள் எல்லாம் சின்னவயது ஆட்கள் ஆயிற்றே இப்பவே கல்யாணமா என்று குழப்பமாக இருந்தது. எங்கம்மாவிடம் போய், "சுன்னத் கல்யாணம்னா என்னம்மா" என்று கேட்டதற்கு அவர்களும் சிடுசிடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு, “அதெல்லாம்  உனக்குத் தேவையில்லை, சும்மா எல்லாத்தையும் நோண்டி நோண்டி கேக்காதே", என்று சொல்லிவிட்டார்கள். பவுனம்மாவிடம் கேட்டதற்கு அவர்கள் சிரித்துக் கொண்டே "என்ன சேகரு உனக்கும் பண்ணிரலாமா?"ன்னு கேட்டார்கள். "சரி பவுனம்மா எனக்கும் பண்ணிரலாம்"ன்னு சொன்னேன். உடனே சந்தோஷமாக என் அம்மாவிடம் போய், "அம்மா பவுனம்மா எனக்கும் சுன்னத் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டாங்க"ன்னு உற்சாகமாய் சொன்னேன். எங்க அம்மா தலையில் ஒரு கொட்டு வச்சு "அட லூசுப்பயலே, சும்மாருடா, நீ அன்னைக்கு அந்தப் பக்கம் போகவே கூடாது"ன்னு கண்டிச்சு சொன்னாங்க.
அந்த நாளும் வந்துச்சு, நான் எங்கம்மா அப்பாவுக்குத் தெரியாம, பவுனம்மா வீட்டுக்குள்ளே போய்  ஒரு ஓரமாய் நின்னு கொண்டேன். பள்ளிவாசல்ல இருந்து அஜரத்துகள் சிலபேர் வந்திருந்தாங்க. சேட்டு மாமா, அக்கீம், அப்துல்லா ஆகியோருக்கு தான் கல்யாணம்னு சொன்னாங்க. பொண்ணுங்க யாருன்னு தெரியல. ஒருவேளை மேல இருப்பாங்கன்னு நெனைச்சு எல்லாரு ரூமையும் போய் பார்த்துட்டேன். ஒருத்தரும் இல்லை. ஆனால் அவங்க  சொந்தக் காரங்க நிறையப்பேர் வந்திருந்தாங்க. கீழத்தெருபாய் வந்து வீட்டின் கூடத்துல தேக்சா வச்சு பிரியாணி செய்து கிட்டிருந்தார்.
அந்த நேரமும் வந்தது. கூடத்தின் நடுவில ஒரு பானையை கவிழ்த்து வைத்து சேட்டுமாமாவின் டவுசரைக் கழற்றினாங்க. அவர் திமிறத்திமிற ரெண்டு மூணுபேர் அவரை அழுத்திப் பிடிச்சுக் கிட்டாங்க. இன்னொருவர் வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிட்டார். நான் கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்க்க முயன்றேன். சரியாகவே தெரியல.கண்ணை மூடித்திறக்கிறதுக்குள்ள  கீழே ஆண்குறியை அஜரத் அறுத்துவிட்டார். சேட்டு மாமாவால கத்தக் கூட முடியல, வாயில வாழைப்பழம் இருந்தது. கீழே ரத்தமாகக் கொட்டியது. எனக்கு வேர்த்து விறுவிறுத்து வெலவெலத்து விட்டது. வாழைப் பழத்தை தொடர்ந்து ஊட்டிக்கிட்டே இருந்தாங்க. தொடர்ந்து 2 பேருக்கும் அதையே செஞ்சாங்க, அக்கீமுக்குச் செய்யும்போது நான் பயந்து ஓடியே போய்ட்டேன். ஐயையோ அத அறுத்துப் போட்டுட்டா எப்படிரா ஒண்ணுக்குப் போறதுன்னு ஒரே யோசனையா ஆயிப்போச்சு. பெரியவங்க யார்ட்டயும் கேக்கறதுக்கே பயமாயிருந்துச்சு. எனக்கும் அப்படிப் பண்ணிறப் போறாங்கன்னு ஒரு மாசமா அந்தப்பக்கமே போகல.
அப்புறம் நம்ம மகேந்திரந்தான் தெளிவா விளக்கிச் சொன்னான். மூணு பேரும் 2 நாளுக்கப்புறம் புது கைலியைக் கட்டிக்  கொண்டு முன்புறத்தை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாங்க. உள்ளே பார்க்கிறதுக்கு ஆசையா இருந்துச்சு. ஆனா கேக்க கூச்சப்பட்டுட்டு விட்டுட்டேன்.
பழைய நினைவுகள் எனக்கு சிரிப்பை வரவழைக்க, உள்ளே நுழைந்தேன். பவுனம்மா என்றதும், வெளியே வந்த பவுனம்மா என்னை அடையாளம் கண்டு சேகரு என்று கையைப் பிடித்துக் கொண்டார்கள். சிறிது நேரம் இருந்து பழைய கதைகளை   பேசிவிட்டு வந்தேன் . நன்னா ,நன்னி  அத்தா ஆகியோர் மவுத் ஆகிவிட, பிள்ளைகள் எல்லாம் வேறு இடங்களுக்கு சென்று விட வீடே வெறிச்சோடி இருந்தது . பவுனம்மா மட்டும் எங்கும் போகாமல் அங்கேயே இருக்கிறார்கள் .அவர்கள் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன் .
அவர் வீட்டிற்கு நேர் எதிர்வீட்டில் உள்ள வத்தலக்குண்டு ராவுத்தர் வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். எனக்குத் தெரிந்து ஆறாவது வகுப்பு வரை நாங்கள் அங்கு இருந்தோம். அதன் பின்னர்தான் அதே தெருவில் இருந்த ரைஸ்மில் செட்டியார் வீட்டை விலைக்கு வாங்கி நாங்கள் மாறிப்போனது. நாங்கள் குடியேறியபோது அதற்கு மின்சாரம் கிடையாது. ஹரிக்கேன் விளக்குகள் தான் மாலையில் பொருத்துவோம், அப்புறம் ராவுத்தர் நேரில் வந்து மின்சாரம் பொருத்தியதை மேற்பார்வை செய்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதன் பின் சிறிது நாட்கள் கழித்துத்தான் என் அப்பா UMS ரேடியோவை தேனி சென்று வாங்கி வந்தார். அந்த வீட்டினருகில் நடந்து போன போது எல்லா ஞாபகமும் அலை அலையாக வந்து விழுந்தன.

தொடரும் >>>>

7 comments:

  1. Interesting.Enjoyed in the midst of my hectic work

    ReplyDelete
  2. சுவையான நினைவுகள். இஸ்லாமிய நண்பர்களின் சுண்ணத் சடங்கு பற்றி விவரித்துள்ளமை பிடித்திருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி முத்துச்சாமி

      Delete
  3. வணக்கம்,

    தங்களின் தளத்தை இன்றுதான் கண்டேன்...

    கடந்துவந்த பாதையை காலத்துக்கும் பொக்கிஷமாய் மனதில் காத்து கட்டுரையாய் வடிப்பது அனைவருக்கும் சாத்தியம் ஆகாது. வாழ்க்கையை ரசணையுடன் ஏற்பவர்களுக்கே அது சாத்தியம் ! யதார்த்தமான மொழி நடையில் படிப்பவரை அவரவர் பால்யத்துக்கு அழைத்துச் செல்லும் அற்புதமான பதிவு.

    பவுனம்மா நலமுடன் நீண்ட நாள் வாழ நாங்களும் வேண்டுகிறோம்.

    வேர்களை தேடி பதிவின் முந்தைய பாகங்களையும் அவசியம் படிப்பேன்.

    நன்றியுடன்
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஒரு சாமானியன் மற்றொரு சாமானியனின் பதிவுலகத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி .

      Delete
    2. Interesting. Congratulations for your efforts to recall the old reminisce

      Delete