Monday, November 20, 2017

கடல் ஆமையும் காதல் அழகியும் !!!!!!!!

இலங்கையில் பரதேசி-27


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/800.html

"சார் சுனாமி வரும்னு பயந்துக்கிட்டேயிருந்தா, மீனவர் வாழ்க்கைக்கு என்ன செய்வது? "
"நீ சொல்வது சரிதான், விமான விபத்துகளுக்குப் பயந்து கொண்டு இருந்தால் நான் ஒரு இடத்திற்கும் போயிருக்க முடியாது".
"ஆமாம் சார், அல்லா எப்ப கூப்பிடுறானோ அப்ப போக வேண்டியது தானே".
கொஞ்சம் பொறுமையாய்க்  கூப்பிடச் சொல்லுப்பா, அல்லாவை, நான் ஊர்போய்ச் சேர்ந்திடுகிறேன்".
சரிவிடுங்க சார், உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான். சுனாமின்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது, ஒரு இடத்திற்கு உங்களைக் கூப்பிட்டுப் போகிறேன்.
Related image

போகிற வழியில் கூட்டம் கூட்டமாக வெள்ளைக்காரர்களைப் பார்த்தோம். கண்டியை விட  காலேயில் அதிகமான வெள்ளைக் காரர்களைப் பார்த்தேன். குடும்பம் குடும்பமாக கையில் சர்ஃபிங்  பலகையை வைத்துக் கொண்டு ஆண்கள் ஷார்ட்ஸ்களிலும்  பெண்கள் நீச்சல் உடையிலும் இருந்தார்கள். தெருவில் நடந்து திரிந்து கொண்டு இருந்தார்கள். அம்ரியிடம் கேட்டபோது சொன்னான், இவர்கள் இங்கு வந்து மாதக்கணக்காக தங்கி விடுவார்களாம். குறிப்பாக ஐரோப்பாவில் குளிர் சமய மாதங்களான  டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி காலத்தில் இங்கு வந்து மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் இங்கு தங்கி விடுவார்களாம். அவர்களுக்கென்று இங்கு விடுதிகளும் நிறைய உண்டாம். அவர்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு கடற்கரையில் சன்பாத் எடுப்பது, கடலில் நீந்துவது,ஸ்னார்க்லிங்,சர்ஃபிங்க் போன்றவைதான். “பீச்சில் இவர்களை நிறையப் பார்க்கலாம் சார்”, என்றான். உங்கள் கற்பனைகளை கொஞ்சம் நிறுத்தி விட்டு அம்ரியை பின் தொடர்வோம்.

அம்ரி, கூப்பிட்டுப் போன இடம் கொஞ்சம் வித்தியாசமான இடம் அனாதை யானைகளின் ஆசிரமத்தைப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா, இது அது போலவே ஒரு ஆசிரமம்தான். ஆனால் இது யானைகளுக்கு அல்ல, ஆமைகளுக்கு, என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள் உள்ளே போவோம்.


இதனை நடத்துபவரின் குடும்பத்தில் அப்பா அம்மா ஆகியோர் சுனாமியால் இறந்துவிட அந்தப் பொறுப்பை ஏற்று இப்போது  மகன் இதனை நடத்துகிறார். இது முற்றிலும் பார்க்க வருபவர்களின் நன்கொடையால் நடத்தப்படும் ஒரு தனியார் இடம். உள்ளே பல தொட்டிகளில் உள்ள நீரில் பல விதவிதமான ஆமைகள் இருந்தன. சிறிய குஞ்சுகளிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை இருந்தன. அதோடு ஆமைகள் என்றாலும் வேறுவேறு ஜாதிகள் இருந்தன. ஒவ்வொரு தொட்டியிலும் அவை பிறந்த தேதிகள் வயது ஆகியவை எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொட்டியாக போய்ப் பார்த்தேன். நான் உள்ளே போகும்போது அங்கே ஒருவருமில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு வெள்ளைக் காரக்குழு உள்ளே நுழைந்தது.


Add caption

உள்ளே வந்த ஒரு இளம் தம்பதிகளில் அந்தப் பெண்ணுக்கு ஒரு விபரீத ஆசை வந்தது, ஒரு ஆமைக்குஞ்சை எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று. அவளுடைய ஆசையை தன் காதலன் அல்லது கணவனிடம் சொல்ல அவன் அதை ஒரு வழியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல, நான் என்ன பைத்தியக் காரத்தனம் இது என்று நினைத்த போது சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. அந்த இடத்தை நடத்துபவரின் மகள் வந்து ஒரு ஆமையை அப்படியே நீர் சொட்டச்சொட்ட தொட்டியிலிருந்து எடுத்து அவளுடைய கைகளில் கொடுக்க அவள் பரவசமானாள். அவள் கையில் இருக்கும்போது, ஆமையும் அழகாகத்தான் இருந்தது. அவளால் ஆமைக்கு அழகா, இல்லை ஆமையால் அவளுக்கு அழகா என்று தெரியவில்லை.



“ஏலேய் சேகர் ஒரு பழைய கவிஞன் கொஞ்சம்  எட்டிப்பார்த்து போலத் தெரிகிறதே?”.
“வந்துட்டாண்டா இம்சை அரசன் மகேந்திரவர்மன். ஏண்டா இந்த வரியைப் பாத்தா கவிதை மாதிரியா தெரியுது? சும்மா இரேண்டா. கவிதையெல்லாம் எழுதி 25 வருடம் ஆச்சுடா?”
“ஓ உனக்கு கல்யாணம் ஆகி சமீபத்தில் 25 வருஷம் ஆச்சே அதைச் சொல்றயா? அப்ப இந்த கவிதை கத்திரிக்காய் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலதான் வரும்னு சொல்றியா?”
அடே சாமி ஆள விடுறா நான் அப்படில்லாம் எதுவும் சொல்லலை”
“ பின்ன நீ சொன்னதுக்கு என்னடா அர்த்தம்?”
ஒரு அர்த்தமுமல்ல நேரமாச்சு நீ போய்த்தூங்குடா”
 மகேந்திரன் சொல்றது உண்மைதானோ? ஏன் என்னுடைய கவிதைகள் நின்னு போச்சு?. நான் கவிதை பழகாமல் விட்டு விட்டேனோ?. இப்படி நம்ம திறமைகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அது அப்படியே மறைந்துவிடும் தான். ஆனால் அதற்கேற்ப சந்தர்ப்பம் சூழ்நிலை அமையாவிட்டால் கவிதை எங்கே வரப்போகிறது?. இந்த எழுத்து உரைநடையாவது வருகிறது என்று சந்தோஷப்பட வேண்டியதுதான். என்ன மக்களே என்னுடைய பழைய கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் பின்நூட்டத்தில் தெரிவித்தால் அவ்வப்போது ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறேன்.
இந்த மகேந்திரன் வந்து டிராக்கை மாத்திட்டான். கொஞ்சம் இருங்க செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிடுகிறேன். ஓகே மறுபடியும் காலேக்கு திரும்புவோம்.
நான் அதனை ஆச்சரியத்துடன் பார்க்க, "உங்களுக்கும் கையில் தரட்டுமா?”, என்று கேட்டாள். “இல்லை வேண்டாம்”, என்று அவசரமாக மறுத்துவிட்டேன்.


அதன்பின் அந்த ஆமைக்காப்பகப்  பெண்ணிடம் கேட்டேன், “எதற்காக இப்படி தொட்டியில் வைத்திருக்கிறீர்கள்? அவை சுதந்திரமாக இருப்பது தான் அவைகளுக்குப்  பிடிக்குமல்லவா?. கடல்ல போற ஆமையை எதற்கு இப்படி எடுத்து வந்து வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அப்போது அந்தப் பெண்ணின் அப்பா வந்து விளக்க ஆரம்பித்தார்.




அதற்குள் இன்னும் சில வெள்ளைக்காரர்கள் வர யூரோவோ டாலரோ கிடைக்குமென்று அவர்களிடம் சென்றார். எனக்கு கொஞ்சம் கோவம் வந்தது. நானும் நியூயார்க்கிலிருந்து வருகிறேன். நானும் டாலர் தருவேன் என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஒருவேளை சிங்கள தமிழ் பிரச்சனையாக இருக்குமோ?. நான் தமிழில் அம்ரியிடம் பேசியதை அவர்கள் கேட்டார்கள். அந்தக் குடும்பம் ஒரு சிங்களக்குடும்பம்.


என்னுடைய கற்பனைச் சந்தேகங்கள் எங்கெங்கோ செல்ல அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுக்கு எடுத்துச் சொல்லுமிடத்திற்கு நானும் போய் வாய் பார்க்க ஆரம்பித்தேன்.


“ஆமைகளின் பூர்வீகம் எத்தனை ஆண்டுகள் என்று யாராவது யூகிக்க முடியுமா?” என்று கேட்டார் பெண்ணின் அப்பா.
சிலர் அப்போது ஆயிரம்/ பத்தாயிரம் என்று சொன்னார்கள். அவர் சொன்னார், “ஆமைகள் மிகவும் பழைமை வாய்ந்தது சுமார் 100 மில்லியன் வருடங்களாக இவைகள் பூமியில் இருக்கின்றன. டைனோசர்ஸ் வாழ்ந்த சமயத்தில் இவைகளும் வாழ்ந்து வந்தன”. என்று சொன்னார். ஆமைக் கதை சுவாரஸ்யமாக இருந்தது. மீதியை அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தொடரும்.


No comments:

Post a Comment